Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 15.
வீட்டின் முற்றத்தில் அலுங்காமல் குலுங்காமல் கணவன் கொண்டு வந்து நிறுத்திய ஸ்கார்பியோவிலிருந்து இறங்கினாள் பவானி.
இறங்கியவள் தனது அலுவலக பைகளோடு சேர்த்து கணவனுடையதையும்  எடுக்க முயல,”உன்னோட பேக்ஸ்ஸையே விட்டுட்டு போன்னு நான் சொன்னா நீ என்னோடதையும் சேர்த்து அள்ளிக்கட்டுறியா? ஓடு…” என்று அவன் செல்லமாய் விரட்ட
“தாராளமா… கொண்டுவாங்க எனக்கென்ன வந்துச்சு?” என்று சிரித்தபடியே தன் கைகளில் எடுத்திருந்த தன்னுடைய பைகளையும் சேர்த்து அங்கேயே வைத்து விட்டு நடந்தாள் பவானி.
எட்டுமாத பிள்ளை வயிறு அவளை பேரழகியாய் காட்டினாலும் நாள் முழுவதும் உட்கார்ந்தே வேலை செய்த சோர்வு முகத்தில் தெரிந்தது.
வீட்டினுள் வந்த மருமகளை எதிர்கொண்டழைத்த கோதை நாயகி அவளின் சோர்ந்து போன முகத்தைப் பார்த்து,”வேலைக்கு போனது போதும். இதோட லீவ் போட்டுக்கன்னு சொன்னா கேக்குறியா பவானி” என்று அலுத்துக்கொள்ள
“இந்த மாசம் முடியுற வரைக்கும் போறேன் த்த..” என்று சொல்லியவள்,”பவித்ராவும் நந்தினியும் ஸ்கூல்ல இருந்து வந்துட்டாங்களா?” என்று கேட்டவாறே தங்கள் அறைக்குள் நுழைந்தாள்.
 பவானி ஓய்வெடுப்பதற்கு பயன்படுத்திய அறையைத் தான் தற்போது கணவனும் மனைவியும் தங்களது அறையாக பயன்படுத்துகிறார்கள்.
பவானி ஒவ்வொரு தடவையும் மாடிப்படிகளில் மேலேயும் கீழேயும் ஏறி இறங்கும் போது கோதை நாயகியின் டென்ஷன் அதிகமாகவே கீழ் அறையிலேயே தங்கசொல்லிவிட்டார் அவர்களை.
அவர் சொல்லியதும் நியாயமானதாக இருக்க அவரது முடிவை ஏற்றுக் கொண்டனர் கணவனும் மனைவியும்.
“ம்ம்… அவங்க ரெண்டு பேரும் அப்பவே வந்துட்டாங்க…” என்றவர்,”பவானி! டீயா? ஜுஸா? என்ன குடிக்கிற?” என்று கேட்க
“டீ யேக் குடுங்க அத்த… இன்னைக்கு டீ குடிக்கணும் போலத்தான் இருக்கு…” என்றாள் தங்களது அறையில் இருந்தபடியே.
இப்போதெல்லாம் இது என் வீடு…இங்கிருப்பவர்கள் அனைவரும் என் மனிதர்கள் என்ற எண்ணம் நெஞ்சில் ஆழமாக வேரூன்றி இருப்பதாலோ என்னவோ அனைவரிடமும் ஒரு உரிமையுணர்வு தோன்றியிருக்கிறது பவானிக்கு. அதனால் அவளுக்கு முன்போல எந்தவிதமான மனச்சஞ்சலமும் கிடையாது. 
அன்று நாளையிலிருந்து வேலைக்கு போகப் போகிறேன் என்று சொன்னதோடல்லாமல் மறுநாள் காலையிலேயே எழும்பி தயாராகி நின்ற பவானியைக் கண்டு அந்த வீடே சந்தோஷத்தில் மிதந்தது என்றே சொல்லலாம்.
அவள் வேலைக்கு போகப் போகிறாள் என்பதால் வந்த சந்தோசம் இல்லை அது. அவளுடைய முடிவிலிருந்து ஓரளவிற்கு அவள் தன்னுடைய பய உணர்ச்சியிலிருந்து வெளியே வந்து விட்டாள் என்று வீட்டினர் உணர்ந்து கொண்டதால் வந்த சந்தோசம்.
காலையில் சமையலறையில்  உதவிக்கு வந்து நின்றவளிடம்,”நீ இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத பவானி. நான் பூவம்மாவை கூட வச்சி சமாளிச்சுக்குவேன். நீ எந்த டென்ஷனும் இல்லாமல் ஃப்ரீயா இரு, அதே எனக்கு போதும்”  என்று விட்டார் கோதை நாயகி.
கணவனோ தங்களது ஸ்கார்பியோவில் தன்னுடனே மனைவியை அலுவலகத்திற்கு கூட்டிச் சென்று விட்டு தன்னுடனே திரும்ப அழைத்தும் வருகிறான். 
ஒருவேளை தனக்கு வேலை முடிய லேட்டாகும் என்று தெரிந்தால் மனைவி வீடு திரும்ப கண்டிப்பாக பாதுகாப்பான வேறு ஏற்பாடு செய்து விடுவான்.
காலையில் நிதானமாக எழும்பும் பவானி, மருத்துவர் சொல்லிக் கொடுத்திருந்த ஒருசில மூச்சுப்பயிற்சிகளை
செய்து முடித்து கணவனோடு தோட்டத்து பாதையில்  சின்னதாக ஒரு நடைபயிற்சியும் முடித்தாளானால் அதன் பிறகு குளித்து முடித்து மாமியார் தரும் காலை உணவை சாப்பிட்டு  அலுவலகம் செல்ல அவளுக்கு  சரியாக இருக்கும்.
மருமகளின் உணவு விஷயத்தில் கோதை நாயகி எந்த சமரசமுமே செய்து கொள்வதில்லை. பருப்பு,கீரை, காய்கறிகள், பழங்கள் என்று எல்லாவற்றையும்  சரிவிகிதத்தில்  உணவில் சேர்த்துக் கொண்டே இருப்பார். விடுமுறை நாட்களில் நான்வெஜ் அயிட்டங்கள் கண்டிப்பாக உணவில் உண்டு.
அதிலும் வேலைக்கு செல்லும் மருமகளுக்குக்காக அவர் லஞ்ச் பேக் ரெடி பண்ணும் விதமே அலாதியாக இருக்கும். 
தேநீர் இடைவேளையில் சாப்பிட ஒன்று, மதிய சாப்பாட்டிற்கு ஒன்று என இரண்டு டப்பாக்களில் உணவை அடைத்து வைப்பவர் கூடவே ஒரு சிறிய ஃப்ளாஸ்கில் சூடான பால் ஏதாவது ஒரு பழம் என்று பவானியின் சாப்பாட்டு பையை நிறைத்திருப்பார்.  
மனைவியின் சாப்பாட்டு பையின் அளவைப் பார்த்து,”ம்மா…உங்க மருமக வேலைக்கு போறாளா? இல்லை பிக்னிக் எதுவும் போறாளா?” என்று மகன் கிண்டலடித்தால்
“தம்பி! அவ இப்போ  இரண்டு பேருக்கு சாப்பிடணும்பா.  கண்ணுவைக்காத” என்று படுசீரியசாக பதில் வரும் அன்னையிடமிருந்து.
அதேபோல வீடு திரும்பவும் பவானி உடல்கழுவி தன்னை சுத்தப்படுத்தி கொண்டு கோதை நாயகி தரும் ஏதாவது ஒரு பானத்தை குடித்து விட்டு, தூங்குகிறாளோ இல்லையோ ஒருமணி நேரம் படுத்தெழும்பி விட்டு தான் அறையை விட்டு வெளியே வரவேண்டும். இது கோதை நாயகியின் ஆர்டர் என்றே சொல்லலாம்.
மொத்தத்தில் அந்த வீட்டில் உள்ள அனைவருமே பவானியை உள்ளங்கையில் வைத்து தாங்கினார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
வண்டியை ஷெட்டில் விட்டுவிட்டு தங்களது அலுவலகப் பைகளோடு சாப்பாட்டு பைகளையும் அள்ளிக்கொண்டு வந்த பரணிதரன் சாப்பாட்டு பைகளை எதிரே வந்த நந்தினியிடம் கொடுத்து விட்டு தங்களது அறைக்குள் நுழைந்தான்.
எப்பொழுதுமே அவன் அறையில் நுழையும் போது  குளியலறையில் இருக்கும் மனைவி இன்று முதுகுக்கு தலையணையைக் கொடுத்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருக்கவே…
கொஞ்சம் பதட்டமான கணவன் அவள் அருகில் அமர்ந்து,”ஏதும் அன்ஈசியா ஃபீல் பண்ணுறியா பவானி?” என்று கேட்க
இல்லை என்று தலையசைத்தவள், அவனின் தெளிவில்லாத முகத்தைத் கண்டு,”இன்னைக்கு என்னவோ கொஞ்சம் டயர்டா இருக்கு ப்பா… அவ்வளவுதான். இதுக்கு போய் எதுக்கு டென்ஷன் ஆகுறீங்க?” என்று கூறியபடியே அவன் தலைமுடிக்குள் தன்கையை விட்டு அதனை செல்லமாக கலைத்துவிட்டாள்.
அவள் பதிலில் சமாதானம் ஆகாத பரணிதரன்,”வேலைக்கு போனது போதும் இதோட லீவு போடுன்னு சொன்னா கேக்குறியா நீ?” என்று தன் அன்னை கூறியதையே இவனும் கூற
“அத்தை இப்பத்தான் இதே பாட்டை பாடிமுடிச்சிட்டு போனாங்க? இப்ப நீங்களா? என்று அலுத்தபடியே சொன்னவள்,
“ஏதோ ஊர் உலகத்துல அவரோட பொண்டாட்டி மட்டும் தான் வயித்துல குழந்தையோட வேலைக்கு போற மாதிரி என்னா பில்டப்பு ஆஃபிஸருக்கு” என்று கிளுக்கிச் சிரித்த மனைவியின்  பூரித்த கன்னத்தை பிடித்து லேசாக கிள்ளியவன்
“வரவர குசும்பு அதிகமாகிப்போச்சு செல்லக்குட்டி உங்க அம்மாவுக்கு…” என்று மனைவியின் வயிற்றில் இருக்கும் தங்களின் குழந்தையிடம் முறையிட்டவாறே அந்த மணிவயிற்றில் ஒரு முத்தம் வைக்க, “என் அம்மாவையா குறைசொல்லுகிறாய்?” என்னும் விதமாக முகத்திலேயே கிடைத்தது ஒரு உதை…
கிடைத்த உதையில் உல்லாசமாகச் சிரித்தபடியே,”ஆஹா! கூட்டணி இப்பவே ரொம்ப பலமா இருக்கு போலயே…” என்றவன்,
“இப்பவே இப்படி ன்னா வெளியே வந்த பிறகு என்பாடு திண்டாட்டம் ன்னு தான் நினைக்கிறேன்” என்று சிரித்தபடியே இன்னொரு முத்தத்தை மனைவியின் வயிற்றில் வைக்க,”ஆமாம்…” என்பது போல் இன்னொரு உதையும் கிடைத்தது அந்த தகப்பனுக்கு.
இதைவிட வேறு என்ன வேண்டும் ஒரு தகப்பனுக்கு? ஏதோ அந்த வானத்தையே வில்லாக வளைத்து விட்டது போல மனம் ஆனந்த கூத்தாடியது பரணிதரனுக்கு. 
“பிள்ளையை இப்பவே நல்லா ட்ரைன் பண்ணி வச்சிருக்க பவானி…” என்று மனைவியை கலாய்ந்தபடியே ,”போ…போய் கொஞ்சம் சூடு தண்ணில மேல் கழுவு, உடம்புக்கு நல்லா இருக்கும்” என்றவன் ஹீட்டரை போட்டுவிட்டு மனைவியை குளியலறைக்குள் அனுப்பிவைத்தான்.
 உடம்பு அசதிபோக இளஞ்சூடான வெந்நீரில் குளித்தவள் கோதை நாயகி தந்த டீயைக் குடித்து எப்போதும் போல  ஒரு மணிநேரம் படுத்து ஓய்வு எடுத்துவிட்டு கையில் புத்தகத்தை எடுத்து கொண்டு ஹாலுக்கு வந்து வசதியாக அமர்ந்து கொண்டு வாசிக்க ஆரம்பித்தாள். 
அது அன்று ஸ்வேதா பரிசாக அளித்த புத்தகம். ‘அமரர் கல்கி அவர்களின் வரலாற்று புதினங்களான பார்த்திபன் கனவும், சிவகாமியின் சபதத்தின் நான்கு பாகங்களும்’ ஒரே புத்தகமாக  இணைத்து பதிப்பிக்கப்பட்டிருந்தது.
அதுவரையில் வாசித்தல் என்ற ஒன்றுக்கே பழகியிராத பவானிக்கு  முதலில் புத்தகத்தின் அளவைக் கண்டு மலைப்பு தான் ஏற்பட்டது. ‘எப்படி தான் இவ்வளவு பெரிய புக்ஸ் எல்லாம் வாசிக்கிறாங்களோ!’  என்று அதிசயப்பட்டவள் அதை அப்படியே மூடியும் வைத்து விட்டாள்.
‘ஆனால் அதை வாசித்து விட்டு என்னுடன் அதைப்பற்றி பேசவேண்டும் என்று நினைத்தால் எந்த நேரம் வேண்டுமென்றாலும் பேசு என்று ஒரு நபர் சொல்கிறார் என்றால், அப்படி என்னத்தான் இருக்கிறது அந்த புத்தகத்தில்? அதையும் வாசித்து தான் பார்ப்போமே’ என்று இரண்டு நாவலிலும் அளவில் சிறியதாக இருந்த பார்த்திபன் கனவை வாசிக்க ஆரம்பித்தாள் பவானி.
அவ்வளவு தான்… அந்த கதையின் கதாபாத்திரங்களான பொன்னனும், வள்ளியும், பார்த்திப சோழனும், நரசிம்மவர்ம பல்லவரும், மகேந்திர சோழனும், குந்தவியும் அந்த அமரகலைஞர் கல்கியின் எழுத்து வழியே அவளை அப்படியே தங்களுக்குள் வாரிசுருட்டிக் கொண்டனர். 
தனக்குள்ளே வந்த அந்த கதாபாத்திரங்களைப் பற்றி அடிக்கடி ஸ்வேதாவிடம் ஃபோன் வழியாக பேசி மகிழவும் தவறவில்லை பவானி. இந்த பழக்கம் பெண்கள் இருவருக்குளும் ஒரு அழகான நட்பை பூக்கச் செய்திருந்தது.

Advertisement