Advertisement

“சீக்கிரம் இறங்குனாத் தான் என்னவாம்?” என்று முணுமுணுத்தபடியே  தோழியை ஒரு முறைமுறைத்தபடி முக்காலியில் ஏறியவளுக்கு கூட்டின் உள்பக்கம் தெளிவாக தெரியவில்லை. ஆதலால் முட்டையும் தெரியவில்லை.
காரணம் வேறொன்றுமில்லை… பவித்ரா நந்தினியை விட கொஞ்சம் வளர்த்தி கம்மி. நந்தினியே கொஞ்சம் உற்றுத் தான் பார்த்திருந்தாளென்றால் இவளுக்கு எப்படி தெரியும்?
“தெரியமாட்டேங்குது டி” என்று பவித்ரா கிசுகிசுக்க
“என்னமோ என்னை சீக்கிரம் இறங்குன்னு அவசரப்படுத்துன… இதுக்கு தானா?” என்று வாய்பொத்தி சிரித்தபடி கிண்டலடித்தவள்,”இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணு” என்று சொல்லிக் கொண்டிருந்த நேரம்,”நந்து…” என்று கோதை நாயகி கூப்பிடும் சத்தம் கேட்க பவித்ராவை தனியே விட்டு விட்டு அன்னையிடம் ஓடிவிட்டாள் நந்தினி.
 பவித்ராவோ குருவியின் முட்டையை பார்த்துவிடும் முயற்சியில் முக்காலியின் ஓரத்திற்கு வந்து உற்றுப்பார்க்க… முக்காலியோ அவளின் காலை வாரி விட்டது.
அந்நேரம் அங்கே வந்த குமரன் சட்டென்று பவித்ரா கீழே விழாமல் தன்கைகளில் தாங்கிக்கொள்ள, அது பவித்ரா என்று தன் புத்திக்கு உறைத்த  அடுத்த நொடி தன் கைகளிலிருந்து அவளை சட்டென்று உதறினான். இப்போதும் கீழே தான் விழுந்திருந்தாள் அவள். 
கீழே விழுந்துகிடந்தவளின் பார்வை,’ அடப்பாவி! நீ பிடிக்காமல் இருந்திருந்தால் கூட இதைவிட கம்மியாகத் தான் எனக்கு அடிபட்டிருக்கும்’ என்னும் விதமாக அவனைக் குற்றம் சாட்ட, தோள்களை குலுக்கிக் கொண்டு நகர்ந்தான் குமரன்.
********
அன்று வீடே தடபுடல் பட்டுக்கொண்டிருந்தது. சுத்தம் செய்யப்பட்டிருந்த தரை கண்ணாடியாய் பளபளத்தது. வீட்டிலிருந்த ஜன்னல் கர்ட்டன், டோர் கர்ட்டன் எல்லாம் கூட புதிதாக மாற்றப்பட்டிருக்க அடித்த காற்றில் அவை ஆனந்தமாக அசைந்தாடிக் கொண்டிருந்தது.
சமையலறையிலிருந்து வந்த பிரியாணி வாசம் இப்போதே மதியசாப்பாட்டிற்கு இலைபோட்டு விடலாமா? என்று ஒரு டிஸ்கஷனை பவித்ராவிற்கும், நந்தினிக்குமிடையே ஓடவிட்டது.
கோதை நாயகி உதவி செய்ய, திவ்யா தான் சமைத்துக் கொண்டிருந்தாள். சிக்கன் பிரியாணி, சிக்கன் ஃப்ரை, மட்டன் க்ரேவி, தயிர் பச்சடி கூடவே வைட் ரைஸும், ரசமும் செய்திருந்தாள்.
எல்லாம் தயார் செய்து அதற்குரிய பாத்திரங்களில் வைத்து விட்டால் வரும் விருந்தாளிகளிடமிருந்து பேசிக்கொண்டிருக்கலாம் என்று வேகமாக சமையலை முடித்திருந்தாள் திவ்யா.
விருந்தாளி வேறு யாருமில்லை… ஈரோடு எஸ்பி யும் பரணிதரனின் நண்பனுமான சந்தீப் தான் மனைவி ஸ்வேதா, ஒன்றரை வயது மகன் சூரஜ் கரணோடும் வருகிறான்.
 பதினோரு மணிக்கு மேல் சந்தீப் குடும்பம் ஒரு பொலிரோவில் வந்து இறங்கியது. சந்தீப் ஏற்கனவே பரணியின் திருமணத்திற்கு வந்திருந்த நான்கு நண்பர்களில் ஒருவன் தான். எனவே வீட்டில் உள்ளவர்களை அவனுக்கு நன்றாகவே அடையாளம் தெரிந்தது.
ஆனால் தன் மனைவி ஸ்வேதாவிற்கு அனைவரும் புதிது என்பதால் அவளுக்கு எல்லோரையும் அறிமுகப்படுத்தினான் அவள் கணவன்.  
அவள் இடுப்பில் கொழுகொழுவென்று குட்டி பொம்மை போலிருந்த அவர்கள் மகனோ இவர்கள் எல்லோரையும் பார்ப்பதுவும் பின் அன்னையின் தோளில் முகத்தை புதைத்துக் கொள்வதுமாக இருந்தான்.  
 ஆரம்பகட்ட தயக்கத்திற்கு பிறகு சிறிது நேரத்திலேயே எல்லாருடனும் கலகலப்பாக பேச ஆரம்பித்து விட்டாள் ஸ்வேதா.
சிறிது நேரத்தில் ஞாபகம் வந்தவள் போல் தன் கைப்பையைத் திறந்து கிஃப்ட் ரேப்பரால் பொதியப்பட்டிருந்த ஒரு பார்சலை பவானியிடம் கொடுக்க, ஒரு சின்ன தயக்கம் வந்தது பவானியிடம்.
கண்கள் தானாகவே கணவனைப் பார்க்க, அதைக்கண்ட ஸ்வேதா,”அட! புக் தான் அண்ணி…வேற ஒன்னும் இல்லை. இதுக்கு போய் அண்ணனை பார்க்கணுமா?” என்று கேலி செய்தவாறே பவானியின் கைகளைப் பற்றி அதில் பார்சலை வைத்தவள்
“உங்களுக்கு வாசிக்கிற பழக்கம் இருக்கா இல்லையான்னு எனக்கு தெரியாது. வாசிக்கிற பழக்கம் இல்லைன்னாலும் இந்த புக்ல இருந்து வாசிக்க ஆரம்பிங்க அண்ணி… வாசிப்பு உங்களை ரொம்ப ஃப்ரெஷ்ஸாக உணரவைக்கும்” என்றவள்
“என்ன புக் என்பது சஸ்பென்ஸ். அதனால நான் போனபிறகு பிரிச்சு பாருங்க அண்ணி…அதேபோல இந்த புக்கை வாசித்த பிறகு அதை பற்றி டிஸ்கஸ் பண்ணனும்னு தோணிச்சுன்னா… எந்த நேரம் என்றாலும் என்னை தாராளமா கான்டாக்ட் பண்ணலாம், ஐ அம் ஆல்வேய்ஸ் அட் யுவர் சர்வீஸ்” என்று சிரித்தவாறே தன்னுடைய ஃபோன் நம்பரையும் பவானியிடம் கொடுத்தாள்.
இதற்கிடையில் குட்டி பையன் நந்தினி, பவித்ரா, சந்தோஷ் மூவரிடமும்  சகஜமாகி அவர்களோடு விளையாடிக் கொண்டிருந்தான். 
தன்னுடைய பிஞ்சுக் கால்களால் தளிர் நடைபோட்டு தன் மழலை பேச்சால் அனைவருடைய மனதையும் கொள்ளையடித்துக் கொண்டிருந்தது அந்த வாண்டு.
ஸ்வேதா சிங்காரச் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தப் பெண். ஆகையால் அவளுக்கு இந்த கிராமம், அதுவும் தோட்டம் சூழ இயற்கை பிண்ணனியில் இருந்த பரணிதரனின் வீடு அவ்வளவு பிடித்திருந்தது.
மதிய சாப்பாட்டிற்கு பிறகு தோட்டம், பண்ணை எல்லாம் பார்ப்பதற்கு ஸ்வேதா பிரியப்பட எல்லோரும் வீட்டுக்கு பின்னால் போனார்கள்.
பரணிதரன் மனைவியிடம்,”உன்னால தோட்டத்துக்கு வர முடியுமா டா” என்று கேட்க பவானியும் உற்சாகமாக முடியும் என்று தலையசைத்தாள்.
வரும்போது அம்மாவின் இடுப்பில் இருந்து வந்த பொடியனோ இப்போது பாதிநேரம் பவித்ராவின் இடுப்பிலும் மீதிநேரம் நந்தினியின் இடுப்பிலுமாக உலா வந்தான். 
பச்சை பசேலேன்று பரந்து விரிந்திருந்த தோட்டத்தையும், மாட்டுப்பண்ணையில் நின்ற பசுக்களையும் அவற்றின் கன்றுகளையும்  பார்க்கும் போது ஸ்வேதாவின் கண்கள் பரவசத்தால் விரிந்து தான் போனது. 
 தோட்டத்தில் நின்ற செவ்வாழை மரத்தில் கிடந்த வாழைத்தாரில்  தன்பழமாகவே பழுத்திருந்த பழத்தை பிய்த்து நண்பனுக்கும் அவனின் மனைவிக்கும் பரணிதரன் கொடுக்க அவ்வளவு ஆவலாக உண்டாள் ஸ்வேதா. ஏதோ அதை கிடைப்பதற்கரிய பொருள் போல் பாவித்து மகனுக்கு ஊட்டிவிடவும் தவறவில்லை.
” என் லைஃப்லயே ஃபர்ஸ்ட் டைம்  இப்பதான் டைரக்ட்டா மரத்திலிருந்தே எடுத்து சாப்பிடுறேன்ணா…” என்று சொல்லி சொல்லி மகிழ்ந்தது அந்த பெண்…
அவள் சொல்லுவதையும், அப்போது அவளின் முகம் காட்டிய பாவத்தையும் பார்க்கும் போது நந்தினி க்கும் பவித்ராவிற்கும் சிரிப்பு தான் வந்தது. 
அவர்களுக்கு தெரியவில்லை இயற்கையோடு இயைந்து வாழக்கிடைப்பது ஒரு பெறும் பேறு. இந்த பேறுக்காக இப்போது நகரத்து மாந்தர்கள் பலர் ஏங்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
அதனாலேயே அவர்களுக்கு அத்துணை சிரிப்பு வந்தது. ஆனால் அவர்களின் சிரிப்பையும் குற்றம் சொல்வதற்கில்லை. ஏனென்றால் ‘எப்போதுமே முற்றத்து மல்லிகை மணப்பதில்லை தானே!’
எல்லோரும் நின்றிருந்த இடத்துக்கு பக்கத்திலேயே நாலைந்து கோழிகள் தங்கள் குஞ்சுகளோடு மேய்ந்து கொண்டிருந்தன.
 அந்த கோழிக்குஞ்சுகள் நகரும் வெல்வெட் பந்துகளாய் பார்ப்பதற்கு அழகாய் இருக்க, பவித்ராவிடமிருந்த  சிறுவன் அதைக்கண்டு உற்சாக மிகுதியில் அவளது இடுப்பிலிருந்து வேகமாக நழுவ ஆரம்பித்தான்.
மகனின் ஆர்வத்தைக் கண்ட சந்தீப் அவனுக்கு கைகளில் வைத்து காட்டுவதற்காக கோழிக்குஞ்சுகளை பிடிக்க குனிய, ஒரு தாய்க்கோழி உடம்பை சிலிர்த்துக் கொண்டு வேகமாக அவனை கொத்தவந்தது. 
சட்டென்று சுதாரித்துக் கொண்டு சந்தீப் நிமிர்ந்து விட அங்கே வந்த சுப்பையா,”அது குஞ்சிட்டான் கோழி சார். குஞ்சு பக்கத்துல போனாலே ஏதோ நம்மால குஞ்சுக்கு  ஆபத்து ங்குற மாதிரி கோபத்துல கொத்தவரும். அதுக்கிட்ட கொஞ்சம் கவனமாகத் தான் இருக்கணும் என்றபடியே லாவகமாக இரண்டு குஞ்சுகளை பிடித்து கைகளில் கொடுத்தார்.
 அதை சந்தீப் மகனிடம் கொண்டு காண்பிக்க கோழியின் கோபமுகத்தை கண்டிருந்த சிறுவனோ “நானா…” என்றான் முகத்தை சுருக்கியபடியே
நடந்தது அத்தனையையும் பார்த்தும் கேட்டும் கொண்டிருந்த பவானிக்கு அந்த நிமிடம் மனதிற்குள் ஏதோ ஒரு தெளிவு பிறந்தது
‘ஒரு கோழி கூட தன் குஞ்சுகளுக்கு ஆபத்து என்றவுடன் தன் எதிரில் நிற்பது யார் என்று சற்றும் யோசிக்காமல் அதை காப்பாற்றுவதற்காக வீராவேசமாக விஸ்வரூபம் எடுக்கும் போது, என் கருவில் வளரும் என் குழந்தையின் நலனுக்காக, என்னைத் திங்கும் இந்த பய உணர்ச்சியிலிருந்து நான் ஏன் வெளிவர முடியாது?” என்ற கேள்வி பிறக்கவும், அந்த நேரம் தன் மனதின் பயத்தை சட்டென்று உதறி புத்தம்புது பிறப்பொன்று எடுத்தாள் பவானி.
பேசியபடியே அனைவரும் ஓடைக்கு பக்கத்தில் வந்திருந்தார்கள். கோழியின் செயலால் கொஞ்சம் பயந்தாற்போல இருந்த சிறுவனுக்கு தண்ணீரைக் கண்டதும் இழந்த உற்சாகம் மீண்டிருந்தது.
தண்ணீருக்குள் போகவேண்டும் என்று ஆர்ப்பரித்த மகனை கைகளில் வாங்கி கொண்டு தண்ணீருக்குள் இறங்கிய சந்தீப், மகனை தன் கைகளில் வைத்துக் கொண்டு நீச்சல் அடிப்பது போல் சொல்லிக் கொடுக்க, ஏதோ பெரிய வித்தகன் போல அந்த பொடியன் கைகளையும் கால்களையும் தத்தக்கா பித்தக்கா என்று ஆட்டியதைக் காணவே கவிதையாக இருந்தது.
அத்தனையையும் தன் பேசியில் காணொளியாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து தள்ளினாள் ஸ்வேதா…
ஒருவழியாக ஆடிக்களித்து நீரிலிருந்து இருவரும் வெளியே வர, குமரனிடம் அப்போது தான் தயார் செய்திருந்த பால்கோவாவை கொடுத்து விட்டிருந்தார் மதியழகன். 
அதை வாழைஇலையில் பரிமாறியவன் ஸ்பூனுக்கு பதிலாக பனைஓலைகளை ஒரு அளவாக நறுக்கி  கொடுக்க ரசித்து உண்டனர் அனைவரும்.
மாலையில் விருந்தினர் கிளம்ப ஆரம்பிக்க சந்தீப் தடுக்கத் தடுக்க  காய்கறிகள் பழங்கள் என வண்டியை நிரப்பிய கோதை நாயகி
ஸ்வேதாவிடம்,”அடிக்கடி வந்துட்டு போங்கம்மா…”என்று சொல்லவும் தவறவில்லை.
அவர்களை பொலிரோ வரை குடும்பமே வந்து வழியனுப்ப, பரணிதரனின் கைபற்றி குலுக்கிய சந்தீப்,”சீக்கிரம் உங்கிட்ட இருந்து நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன் பரணி” என்று சொல்லியபடியே டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்தான்.
போட்ட ஆட்டத்தில் களைத்துப்போய் தூங்கும் மகனை மடியில் சுமந்தபடி ஸ்வேதா ஏற்கனவே முன்சீட்டில் ஏறிஅமர்ந்திருக்க மனம் முழுவதும் சந்தோஷமான நிகழ்வுகளை சுமந்து கொண்டு  பிரியாவிடைபெற்றனர் அந்த தம்பதியினர்.
அன்று இரவு அனைவரும் சிட்அவுட்டிலும் முற்றத்திலுமாக  உட்கார்ந்து வந்து சென்ற விருந்தினரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது,  நாளையிலிருந்து தான் வேலைக்குப் போகப்போவதாகச் பவானி சொல்ல அந்த வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் கொஞ்சம் ஆச்சர்யமாகத் தான் பார்த்தார்கள் பவானியை…

Advertisement