Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 14.
மறுநாள் காலை வழக்கம் போல நந்தினி பள்ளிக்கு கிளம்பி நின்றாள். அதைக் கண்ட கோதை நாயகிக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
மகள் பள்ளிக்கு இனி செல்லப் போவதில்லை என்று சொன்ன போது அதிர்ந்து தான் போனார். ஆனால் அவளை கண்டிப்பதற்கான சூழ்நிலை அப்போது இல்லாத காரணத்தினால் அமைதியாக இருந்தார்.
ஆனால் தன் மகனோ விளையாட்டு போக்கிலேயே  தங்கையின் மனதில் நம்பிக்கையை ஊட்டிவிட்டான் என்னும் போது அவ்வளவு பெருமையாக இருந்தது மகனை நினைத்து.
‘இதைப்போல பவானியும் புரிந்து கொண்டால் நன்றாக இருக்குமே…’ என்று எண்ணியது அவரது மனது.
வழக்கம் போல கீழே வந்த பரணிக்கு கூட தங்கையின் இந்த உடனடி மாற்றம் நிம்மதியைத் தந்தது. “இரும்மா…நானே உன்னைக் கொண்டு ஸ்கூல்ல விட வர்றேன்” என்று பரபரப்பாக பைக்சாவியை எடுக்க
“இல்லை… வேண்டாம் ண்ணா… சைக்கிள் இல்லைன்னா நான் ஈவ்னிங் வர்றது கஷ்டம்” என்று மறுத்தாள் நந்தினி
“நான் இன்னைக்கு மதியமே வந்துடுவேன் நந்து.. அதனால நான் ஈவ்னிங் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்குறேன்” என்று அங்கு வந்த குமரன் சொல்ல, அண்ணனுடன் சென்றாள் நந்தினி.
போகும் போது தங்கையிடம்,”நம்முடைய எல்லா விஷயமும் எல்லாருக்கும் தெரியணும்னு அவசியம் கிடையாது மா. அதனால நடந்த எந்த விஷயத்தையும் யாரிடமும் சொல்ல வேண்டாம்” என்று சொல்லியே அழைத்து சென்றிருந்தான் பரணி.
ஆசிரியரிடமும் “உடல்நலம் சரியில்லாததால் நந்தினியால் பள்ளிக்கு வரமுடியவில்லை” என்று சொல்லி தான் வகுப்பில் விட்டு வந்திருந்தான். 
இப்போதெல்லாம் பவானியின் முகத்தில் பழையபடி சிந்தனை ரேகைகள் ஓட ஆரம்பித்து விட்டது. அதற்காக கோதை நாயகியிடமிருந்து ஒதுங்கினாள் என்றில்லை.
 ஆனால் ஒரு அதிகப்படியான சிந்தனை… நடக்காத ஒன்றை நினைத்து நடந்துவிடுமோ…நடந்துவிடுமோ என்று ஒரு பயம்.
குழந்தையை மடிதாங்கிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் இந்த மாதிரியான எண்ணங்கள் தங்கள் இருவருக்குமே நல்லதில்லை என்று தெரிந்திருந்தாலும் அவள் சிந்தனை செல்லும் இடத்தை அவளால் தடுக்கமுடியவில்லை.
தன் கணவனும், அவன் அன்னையும்  சொல்லும் வார்த்தைகளிலுள்ள நியாயம் அவள் புத்திக்கு புரிந்தாலும் மனம் அதை ஏற்றுக்கொள்ளாமல்  அவளுடன் மல்லுக்கு நின்றது.
அதன் பயன், தினமும் கணவனின் நெஞ்சத்தையே மஞ்சமாக்கி நிம்மதியாகத்  தூங்குபவளுக்கு ஏனோ இரண்டு நாட்களாக தூக்கம் வர மறுத்தது.
அவளது அலைப்புறுதலைக் கண்டு கொண்ட கணவன் மறுபடியும் அவளை மருத்துவமனை அழைத்து சென்றான்.
பவானியுடன் பேசிப்பார்த்த டாக்டர் ஜானகி “இது மன அழுத்தத்தின் ஆரம்பநிலை” என்றார்.
அதிர்ந்து போய் பார்த்தவர்களிடம்,”இந்த உடம்புக்கெல்லாம் நோய் வரும்ல அதுபோல இது மனசுக்கு வர்ற நோய் அவ்வளவு தான்”  என்று அதை எளிதுபடுத்திச் சொன்னவர்
“இந்த காலகட்டத்தில் நிறைய கர்ப்பிணி பொண்ணுங்க இதால கஷ்டப்படுறதை நான் கண்கூடாக பாத்துட்டு தான் இருக்கிறேன்” என்றார்
“அவங்களுக்கெல்லாம் கர்ப்பகாலம் என்பது ஏதோ தேவையில்லாத விஷயங்களையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்கிற காலம்னு யாரோ தவறுதலா சொல்லிக் குடுக்குறாங்க போலிருக்கு” என்று சிரித்தவர்
“இவ்வளவு ஏன்க! தங்களோட பிரசவத்தை நினைத்து பயந்து, அந்த பயத்துல கூட ஒருசிலர் மன அழுத்தத்தில் விழுந்துடுறாங்கன்னா பாத்துக்கோங்களேன்” என்று சொல்லியபடியே
“இதுல அவங்களை சொல்லவும் குறையில்லை…எல்லாம் ஹார்மோன் சேன்ஜ்ஜஸ் பண்ணுற வேலை” என்று ஒரு மருத்துவராக தன் அனுபவங்களை சொல்லிக்கொண்டு போனவர்,”ஹாங்…இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம்  என்று சொல்ல
எல்லாவற்றையும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்த பரணிதரன் மலைத்தே போனான்,” பிள்ளைப்பேறு என்பது பெண்களுக்கு இத்தனை சவாலான விஷயமா?” நினைத்துப் பார்க்கும் போதே கண்ணைக் கட்டியது அவனுக்கு…
இந்த பிரச்சினையில் இருந்து தன் மனைவி மீண்டுவர தானும்  உதவி செய்தே ஆகவேண்டும் என்று அந்த நிமிடம் முடிவெடுத்தது பரணிதரனின் காதல் கொண்ட மனது.
“இங்க பாரும்மா பவானி! இதுல உன்னோட முழு ஒத்துழைப்பு தான்  ரொம்ப அவசியம்.  நீ எந்த அளவுக்கு என்னோட கோவாப்பரேட் பண்ணுறியோ அந்தளவுக்கு சீக்கிரம் இதுல இருந்து வெளியே வந்துடலாம்… என்ன சொல்லுற?” என்று மருத்துவர் கேட்க
தன் குழந்தைக்காகவாவது இந்த பிரச்சினையில் இருந்து வெளியே வந்து விடவேண்டும் என்ற உத்வேகத்தில் இருந்த பவானியும்,”ஓகே மேம்…” என்றாள்  உறுதியாக
“குட்…” என்று அவள் குரலில் தெரிந்த உறுதியை மெச்சியவர், சிறிது நேரத்திலேயே ஒரு தேர்ந்த மருத்துவ அதிகாரியாய் பவானியின் ஆழ்மனதில் இருந்த அத்துனை பயங்களையும், பாரங்களையும், சந்தேகங்களையும் இறக்கிவைக்கச் செய்து அதற்கு சரியான தீர்வுகளையும் தன் பேச்சால் கொடுத்தார். 
“இப்படி தேவையில்லாத விஷயங்களை மனசுல சுமப்பதற்கு பதிலா உன்னோட மனத்தை வேறு விஷயத்தில திருப்பு. லைக்… புக் வாசிக்கிறது, பாட்டு கேக்குறது, சமையல் பண்ணுறது, கைவேலை பண்ணுறது இப்படி உனக்கு பிடித்த ஏதாவது…” என்றவர் பரணிதரனின் பக்கம் திரும்பி
“நீங்க அதுக்கு உங்க மனைவிக்கு சப்போர்ட்டா இருங்க மிஸ்டர் பரணிதரன்…” என்றவர், “அடுத்த தடவை செக்கப்க்கு வரும் போது தெளிவான  புது பவானியை தான் நான் பார்க்கணும் ஓகே…” என்று பவானியிடம் சொல்லியவர் தம்பதியரை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.
போன தடவை போல் இல்லாமல் இம்முறை ஹாஸ்பிடலில் இருந்து வீடு வருவதற்கு கொஞ்சம் கூடுதல் நேரம் ஆகிவிட்டது. 
இவர்களுக்காக ஹாலில் காத்திருந்த கோதை நாயகியைக் கண்டதும் அவர் அருகில் உட்கார்ந்து தானே ஹாஸ்பிடலில் நடந்த அனைத்தையும் சொன்னாள் பவானி.
அதுவே தன்னுடைய முயற்சியில் முதலடியை தன் மனைவி எடுத்து வைத்து விட்டாள் என்று சொல்லாமல் சொல்லியது பரணிதரனுக்கு.
அன்று இரவு வெகுநாட்களுக்கு பிறகு சமையலறையில்  கோதை நாயகிக்கு  சின்னச்சின்ன சமையல் வேலைகளை செய்து கொடுத்தாள் பவானி. 
கோதையும் தடுக்கவில்லை, முடிந்தால் செய்யட்டும் என்று விட்டுவிட்டார்.
பிறகு படித்து கொண்டிருந்த பெண்களுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டு,”மேத்ஸ் ல டவுட் ஏதும் இருந்தால் கேட்டுக்கோங்க” என்று சொல்ல, கேட்பதற்கு அவர்களுக்கு ஆயிரம் இருந்தது. 
அவர்களின் எல்லா சந்தேகங்களையும்  தீர்த்து நிமிர மனது லேசானது போல உணர்ந்தாள் பவானி. ‘சும்மாயிருக்கும் மனது சாத்தானின் உலைக்களம்னு சும்மாவா சொல்லியிருக்காங்க… முதல்ல சீக்கிரம் வேலைக்கு போகணும்பா…’ என்று அவள் நினைக்க அவள் கணவனோ வேறு சொன்னான்.
அன்று இரவு பவானி தங்கள் அறைக்குள் நுழைய பரணிதரன் அறையில் இல்லை. பால்கனி திறந்திருக்கவே அங்கு சென்றாள்.
அங்கே நாற்காலியில் சாய்ந்தமர்ந்து கண்மூடி ஏதோ யோசனையில் இருந்தான் பரணிதரன். வானில் பௌர்ணமி நிலவு காய்ந்து கொண்டிருந்தது.
அவன் எதிரில் கிடந்த நாற்காலியில் இவளும் உட்கார, சத்தம் கேட்டு கண்விழித்து பார்த்தவன்,”வா…பவானி!” என்றான்.
மனைவி உட்காரவும், நிமிர்ந்து அமர்ந்தவன் அவள் கைகளை தன் கைகளால் பற்றியபடி மெதுவாக,”பவானி! நான் ஒரு லாங் லீவ் போடலாம்னு இருக்கேன்” என்றான்
“லீவா… அதுவும் லாங் லீவா? எதுக்குப்பா?” என்று குழப்பமாக கணவனைக் கேட்க
“எல்லாம் உனக்காகத்தான்” என்றான் கணவன்
“எனக்காகவா?”
“ம்ம்… நான் உங்கூடவே இருந்தால் உன் டென்ஷன் கொஞ்சம் குறையுமில்லடா, அதுக்கு தான்…”
பார்க்கும் வேலையை பணம் சம்பாதிப்பதற்கான ஒருவழியாக மட்டும் நினைக்காமல் ஒரு அர்ப்பணிப்போடு செய்யும் அவனைப்போன்ற அலுவலர்களுக்கு இந்த பேருந்து உரிமையாளரைப் போல கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் எத்தனையோ எதிரிகள் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அவர்களுக்காக எல்லாம் பயந்து வீட்டில் அடைந்துகிடந்து உயிர் வாழ முடியாது என்பது அவனுக்கு தெரியும். 
இருந்தும், அவனுடைய இந்த முடிவால் தன் மனைவியின் பயம் கட்டுக்குள் வரும் என்று அவனுக்கு தோன்றியதாலேயே  இந்த முடிவுக்கு வந்தது. 
சிறு வயதிலிருந்தே, தான் ஒரு கலெக்டர் ஆகவேண்டும் என்பது தன் கணவனின் ‘கனவு’ என்பதும், அந்த கனவை தன் குடும்பத்திற்காக ஒதுக்கி வைத்துவிட்டு கிடைத்த இந்த வேலையில் சேர்ந்திருந்தாலும், இதையும் அவன் எவ்வளவு அர்ப்பணிப்போடு செய்கிறான் என்று ஒரு மனைவியாக பவானிக்கும் தெரியும் தானே!
‘இப்போது அதையே ஒதுக்கி வைத்து உன் நலனுக்காக, உன்னோடு கைகோர்த்து, உன் அருகில் நான் இருக்கிறேன் என்கிறானே! இவன் எப்பேர்ப்பட்ட மனிதன், என்று உருகியது அவள் மனது.’
“ஹையையோ… இல்லீங்க…நானே சீக்கிரம் வேலைக்கு போகணும்னு முடிவெடுத்துட்டேன்…அதனால நீங்க லீவெல்லாம் போட வேணாம்…” என்று சொன்னவள் இப்போது செயரிலிருந்து கணவனின் மடிக்கு இடம் பெயர்ந்திருந்தாள்.
“நீ வேலைக்கு போகும் போது நானும் போறேன். அதுவரைக்கும் உங்கூட வீட்ல தான்” உறுதியாகச் சொன்னவன்
“ஓய் பொண்டாட்டி… நான் வீட்ல இருந்தா உன்னை தொந்தரவு பண்ணுவேன்னு பயப்படுறியா?” நாற்காலியில் சாய்ந்தவன் வாகாக மனைவியை தன் மார்பிலே சாய்த்துக் கொண்டே கிசுகிசுத்தான்.
“ஹாங்… அதான் டாக்டர் மூனு மாசம் என்னை கேர்ர்…ஃபுல்லா பாத்துக்கணும்னு உங்ககிட்ட சொல்லிருக்காங்கல்ல” ராகமிழுத்தாள் மனைவி. மனம் லேசாக இருந்ததாலோ என்னவோ பேச்சு தயக்கமின்றி வந்தது பவானிக்கு.
“அதெல்லாம் மூனு மாசம் நேத்தோட முடிஞ்சி போச்சு, தெரியுமா உனக்கு?” வெட்கமே இல்லாமல் கேள்வி கேட்டு மனைவியை வெட்கப்படவைத்தான் கணவன்.
“ஹையோ! என்ன பேசறீங்க” என்று சொல்லிக்கொண்டே தன் விரல் கொண்டு அவன் வாயை மூட, மூடிய விரல்களின் மீது முத்தம் வைத்தவனின் மார்பிலேயே முகம் புதைத்துக் கொண்டாள் பெண்.
 அதன் பிறகு ஏதேதோ கதைகள் பேசியபடி இருவரும் ஏகாந்தமாய் இருக்க… சிறிது நேரத்தில் பவானியின் கண்கள் தூக்கத்தில் சொக்கியது.
அதைக்கண்ட கணவன் லேசாக மனைவியின் கன்னம் தட்டி,”எழும்பு பவானி! உள்ள போய் தூங்கலாம்” என்று சொல்ல
அவன் மார்பில் இன்னும்  நன்றாக ஒட்டிக்கொண்டு,”ஏன்? உங்க தங்கச்சியை மட்டும் தான் தூக்குவீங்களா? எங்களையெல்லாம் தூக்கமாட்டீங்ளா?” என்றாள் கேலியாக
“பொறாம…” சிரித்தபடியே கேட்ட கணவனுக்கு
“லைட்டா…” என்று இதழ் குவித்து மனைவி சொன்ன அழகில் அந்த பட்டிதழுக்கு முத்தம் ஒன்று வைத்தவன் அந்த அல்லி மலர்க்குவியலை அலுங்காமல் குலுங்காமல் அள்ளிக்கொண்டான் தன் கைகளில்.
*********
 ஒரு மரத்தாலான முக்காலியை ஆளுக்கொரு பக்கமாக பிடித்து தூக்கிக்கொண்டு வந்தனர் பவித்ராவும் நந்தினியும்.
 கொண்டு வந்து சிட்டுக்குருவி கூட்டுக்கு நேர் கீழே போட்டு முதல் ஆளாக நந்தினி அதில் ஏறி குருவிக்கூட்டை உற்றுப் பார்க்க அதில் குருவியின் முட்டை கிடப்பது தெரிந்தது. அந்நேரம் குருவி கூட்டில் இல்லை
உற்சாக மிகுதியில்,”பவி…மூனு முட்டை இருக்குடி!” என்றாள் கிசுகிசுப்பாக… ஏனென்றால் ஒரு தடவை குருவியின் கூட்டை இப்படி பக்கத்தில் பார்க்க வேண்டும் என்று இவர்கள் கேட்ட போது,”நாம பக்கத்தில் பார்த்தால் பயந்து போய் குருவி கூடு தங்காது” என்று சொல்லி அருகில் சென்று பார்க்க அனுமதி மறுத்திருந்தார் கோதை நாயகி.
ஆனால் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆசையில்
 அவருக்கு தெரியாமல் இந்த முயற்சியில் இருவரும் இறங்கியிருப்பதாலேயே இந்த கிசுகிசுப்பு.
“நீ இறங்கு…நானும் பார்க்குறேன்…” என்று கீழே நின்று பவித்ரா பரபரக்க, நின்று நிதானமாக பார்த்துவிட்டே கீழே இறங்கினாள் நந்தினி. 

Advertisement