Advertisement

அதிலிருந்து சிம்கார்டை வேறு ஒரு ஃபோனில் போட்டு ஆக்டிவேட் செய்து பார்க்கும் போது கடைசியாக அவன் பேசிய எண் இந்த கைத்தடியுடையதாக  இருக்கவே இவனுக்கு ஃபோன் செய்திருக்கிறார் அந்த காவல் துறை அதிகாரி.
ஆக்ஸிடென்ட் ஆனவனின் நிலையைக் குறித்து  இங்கே இருந்த அதிகாரி கேட்க,”உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் கைகால் எல்லாம் பயங்கர முறிவு இருக்கும் போல” என்று சொன்னவரிடம் இங்கிருந்தவர் மேலும் சில விபரங்களை பேசிவிட்டு வைத்து விட்டார்.
அதிகாரி ஃபோனில் பேசிக்கொண்டிருந்தது அனைவருக்கும் புரியத் தான் செய்திருந்தது. ஆனாலும் விஷயத்தை பரணிதரனிடம் சொன்ன அதிகாரி,” நீங்க உங்க தங்கச்சியை கூட்டிட்டு கிளம்புங்க சார். நாங்க இவனுங்களை பாத்துக்குறோம்” என்றவர்
மனோஜையும் அவன் நண்பர்களையும் பாராட்டி கைக்குலுக்கியபடி குற்றவாளிகளை அழைத்துக் கொண்டு  சென்று விட்டார்.
இனி அந்த கைதடிகளின் வாழ்வு சூனியம் தான். “இங்கு நடந்த விஷயம் வெளியே வரக்கூடாது. அதே நேரம் பெண்ணை கடத்தியவர்களுக்கு பலத்த தண்டனையும் கிடைக்க வேண்டும், என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள்” என்று எஸ்பி யே சொல்லி விட ஒத்துக்கொண்டு கிளம்பி விட்டார்கள் காவல்துறையினர்.
பரணிதரனும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் மனோஜ் மற்றும் அவன் நண்பர்களிடம் தன் நன்றியைத் தெரிவிக்க,”ண்ணா… நந்தினி நம்ம தங்கச்சி ண்ணா… அவளுக்கு செய்ததுக்கு எங்களுக்கு நன்றி சொல்லுவீங்களா ண்ணா…” என்று ஒருசேர எதிர்ப்பு குரலை எழுப்பியபடியே கலைந்து சென்றன நாளைய பாரதத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். 
போகும் போது,”மச்சி…பிறகு பாக்கலாம் டா” என்று குமரனின் முதுகில் தட்டியவர்கள்,”டேக் இட் ஈஸி ம்மா” என்று நந்தினியிடமும் சொல்லத் தவறவில்லை.
இன்று ட்ரைவர் வேலு  உடல்நலம் சரியில்லாத காரணத்தால் விடுமுறை எடுத்திருக்க பரணிதரன் தன்னுடைய ஸ்கார்பியோ வில் அலுவலகம் சென்றிருந்தான்.
வண்டி சாவியை தம்பி கையில் கொடுத்தவன் பின் சீட்டில் தங்கையை தன் கைவளைவில் ஆதரவாக வைத்து கொண்டு உட்கார்ந்து கொண்டான். தங்கையும் தன் அண்ணன் தோளில் சாய்ந்து தன் பயத்தை விரட்ட முயன்று கொண்டிருந்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் வீட்டில் இருந்தார்கள். காரிலிருந்து இறங்கிய நந்தினி தன் தாயைக்கண்டதும் கட்டியணைத்து கதற
ஏதும் புரியாதவராக மகளை வீட்டுக்குள் அழைத்து சென்றிருந்தார் கோதை.
நந்தினியின் சைக்கிள், புத்தப்பையோடு மதியழகன் வரவுமே பதறியடித்து,  பவானி பரணிதரனின் பேசிக்கு அழைத்து விஷயத்தைச் சொல்ல,”நந்தினி எங்கூட தான் இருக்கா…என்ன ஏதுன்னு வந்து சொல்லுறேன். அதுவரைக்கும் ஃபோன் பண்ணாதே” என்று கொஞ்சம் கண்டிப்பாக சொல்லி வைத்துவிட்டான்.
அந்த நேரம் நந்தினி இருக்குமிடத்துக்கு கூட அவன் போய்சேர்ந்திருக்கவில்லை. மனைவியின் பயம் தெரியும், கூடவே தன்னுடன் தான் தங்கை இருக்கிறாள் என்று சொன்னால் வீட்டில் எல்லாரும் கொஞ்சம் பயமின்றி இருப்பார்கள் என்று எண்ணியே அவ்வாறு சொல்லி இருந்தான்.
இதோ…நடந்தது எல்லாம் தெரிந்த பிறகு மௌனமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது அந்த வீட்டை. ‘ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று’ என்றே அனைவரது உள்ளங்களிலும் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்… ஏனென்றால் எல்லாருடைய முகங்களிலும் முதலில் இருந்த இறுக்கம் சற்றே தளர்ந்திருந்தது.
பவித்ரா  தன் தோழியின் அருகில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டு அவள் தலையைத் தடவி கொடுத்தபடியே இருந்தாள்.
வரும் வழியில் டாக்டர் ஜானகியிடம் சென்று விஷயம் சொல்லி நந்தினிக்கு ஒரு இன்ஜெக்ஷனும் போட்டே அழைத்து வந்திருந்தான் அந்த அண்ணன்.
அதன் பயனோ இல்லை தான் பாதுகாப்பான கரங்களில் இருக்கிறோம் என்ற நம்பிக்கையோ ஏதோ ஒன்று நந்தினியை அக்காவின் மடியிலேயே தூங்க வைத்திருந்தது. 
“ஏன் அத்த! குலைக்கிற நாய் கடிக்காதுன்னு ஏதோ அன்னைக்கு சொன்னீங்களே? ஆனால் இன்னைக்கு அந்த நாய் கடிச்சிடிச்சே…!” பவானி தான் கேட்டிருந்தாள். 
ஹாலே அமைதியாக இருந்தபடியால் பவானி மெதுவாக கேட்டது கூட எல்லாருடைய காதுகளிலும் தெளிவாகவே விழுந்தது. 
” இப்பவும் அந்த நாய் கடிச்சிடிச்சின்னு யார் சொன்னா பவானி? கடிக்க முயற்சி பண்ணியிருக்கு அவ்வளவு தான். ஆனால் அதுக்கு முன்னாடியே கடவுள் அதன் விஷப்பல்லை பிடிங்கிட்டான்…தெரியும்ல” என்றவர்
“வீட்டை விட்டு இறங்குனாலே எத்தனையோ வெறிநாய்களையும், கடிநாய்களையும் நம்ம வாழ்க்கையில் நாம சந்திச்சு தான் ஆகணும் பவானி.  ஐயையோ! வெளியே போனால் நாய் கடிச்சிடுமேன்னு  பயந்துட்டு நாம வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கமுடியாது… நம்ம வாழ்க்கையை நாம வாழ்ந்து தான் ஆகணும்”என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னவர் அந்த இடத்திலிருந்து விருட்டென்று எழுந்து சென்று விட்டார்.
 கோபம் எல்லாம் இல்லை கோதை நாயகி க்கு, ஒரு விதமான இயலாமை அவ்வளவு தான். ‘தான் என்ன சொன்னாலும் இந்த பெண் பயம் என்ற ஒன்றிலேயே வந்து நிற்கிறதே’ என்ற இயலாமை 
அதுவும் ‘தன் பெண் இன்று என்ன பாடெல்லாம் பட்டாளோ?’ என்று நினைக்கையிலே வந்திருந்த ஒருவிதமான உணர்வு அவரை இதற்கு மேல் அங்கு இருக்கவிடாமல் எழும்பி போக வைத்திருந்தது.
திரும்பவும் ஒரு கனத்த மௌனம் அந்த ஹாலில் நிலவ…
இதற்கு மேல் இருந்தால் வேறு ஏதும் வேண்டத்தகாத நிகழ்வுகள் நடந்து விடக்கூடாது என்று நினைத்த மதியழகன்,”எல்லாரும் சாப்டுட்டு போய் தூங்குங்குங்கப்பா எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம்” என்று சொல்லவே மெதுவாக எல்லாரும் கலைய ஆரம்பித்தார்கள்.
திவ்யாவின் மடியில் தங்கை தூங்கவே அவள் எழும்ப முடியாமல் இருக்க தன் அக்காவின் மடியிலிருந்து தங்கையை தன் கைகளால் பூப்போல தூக்கிய பரணி,”போய் நந்துவோட பெட்டை ரெடி பண்ணு பவித்ரா” என்று சொல்லவும் சிட்டென பறந்தாள்.
 தங்கள் இருவருடைய கட்டிலையும் நெருங்கி போட்டு பெட்சீட்டை சரியாக விரித்து என நொடிக்குள் எல்லாவற்றையும் நேராக்கி விட்டு நின்றிருந்தவளைப் பார்த்து புன்னகைத்தபடியே தங்கையை மெதுவாக படுக்க வைத்தவன், வாஞ்சையாக பவித்ராவின் தலையை தடவி விட்டபடியே
“பவித்ரா! உன்னோட ஸ்கூலுக்கு  நம்ம வீட்ல உள்ளவங்களைத் தவிர வேறு யார் வந்து உன்னை கூப்பிட்டாலும் ஸ்கூலை விட்டு வெளியே வரவேக்கூடாது. கூப்பிட வர்றவங்க சொல்லுற காரணம் எப்பேர்ப்பட்ட காரணமாக இருந்தாலும் வரக்கூடாது. சரியா?” என்று சொல்ல ‘சரியென்னும்’ விதமாக தலையசைத்தாள் சின்னவள்.
குமரன் தன் அக்காவை அண்ணனின் பைக்கில் கொண்டு வீட்டில் விட்டுவர, உடம்பும் மனதும் களைத்துப் போயிருந்த அனைவரும் உண்டேன் என்று பெயர் செய்து கலைந்து போயினர்.
கோதை நாயகி இன்று மகளுடனே தூங்குவதாகச் சொல்லி பெண்களுடைய ரூமிற்குள் நுழைந்து கொள்ள, அங்கு பவித்ரா செய்து வைத்திருந்த ஏற்பாடு கண்டு புன்னகை விரிந்தது அவர் இதழ்களில்.
தோழியும் தன் அன்னையும் தன்னை இருபுறமும் ஆதரவாய்த் தாங்க தன்னை மறந்து தூங்கினாள் நந்தினி…
பரணிதரனோ அதிகபட்ச எதிர்வினைகளை இன்று மனைவியிடம் எதிர்பார்த்தபடியே தங்கள் அறைக்கு வர, கோதை நாயகியின் பேச்சு பவானியை யோசிக்க வைத்ததனாலோ என்னவோ அம்மணி யோசனையின் பிடியில் இருந்தாள்.
அவளின் யோசனையை கலைக்க மனமில்லாதவனாய் எப்போதும் போல் மனைவிக்கு தன் நெஞ்சில் இடமளித்து தூக்கம் கொண்டான் பரணிதரன்.
மறுநாள் காலை குளித்து முடித்து கீழே வர, எப்போதுமே வீட்டை விட்டு முதலில் கிளம்பி வெளியே போகும் நந்தினி புறப்படாமல் இருக்க,”ஸ்கூலுக்கு கிளம்பலையாடா” என்று கேட்டான் பரணி.
“இல்லண்ணா” என்ற தங்கையின் பதிலில், இன்று ஒருநாள் விடுமுறை எடுத்து ஃப்ரஸ் ஆகிக்கொள்ளட்டுமே என்று நினைத்தபடி அவன் நகர, 
டைனிங் செயரில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்து கொண்டிருந்த குமரன் அண்ணனுக்கு செய்தித்தாளில் ஒரு இடத்தை விரல் வைத்து சுட்டிக்காட்டினான்.
 அங்கு,”பிபரல பேருந்து நிறுவன உரிமையாளரின் மகன் கஞ்சா கடந்த முற்பட்டபோது விபத்தில் சிக்கிக் கொண்டார்…” என்று கொட்டை எழுத்தில்  செய்தி பளிச்சிட்டது.
செய்தியை படித்த பரணிதரன் லேசாக சிரித்தபடியே நகர்ந்து விட்டான். இது அவன் தோழன் சந்தீப் செய்தது. விபத்தில் சிக்கியதால் அந்த சதீஷ் அன்று போலீஸாரின் கைகளில் சிக்கவில்லை. ‘ஆனால் அப்படியே விட்டு விடமுடியுமா அவனை?’ என்று சந்தீப் முன்னெடுத்து செய்த வேலை இது.
மறுநாளும் இதே போல நந்தினி பள்ளிக்கு கிளம்பாமல் உட்கார்ந்திருக்க கேட்ட அண்ணனிடம்,”போகப் பிடிக்கலை ண்ணா…” என்றாள் ஒரு மாதிரியான பிடிவாதமானக் குரலில்…
ஒழுகுகிற கூரையில் ஓட்டையை அடைக்கமுடியாதாம். அது போல இப்போது எது சொன்னாலும் அவள் அதை ஏற்றுக்கொள்ள போவதில்லை என்பதை அவளின் முகபாவமேக் காட்ட, விட்டுப் பிடிக்கலாம் என்று சொல்லி அலுவலகத்திற்கு சென்றான் பரணி.
சாயங்காலம் வீட்டிற்கு திரும்பி வரும் போது சந்தோஷும் நந்தினியும் சோஃபாவில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருந்தனர். 
இங்கே வீட்டுக்கு பக்கத்தில் பவித்ரா கூடவே பேருந்தில் இருந்து திவ்யா சந்தோஷையும் இறக்கியிருப்பாள் போலும்,  பள்ளிச் சீருடையிலேயே இருந்தான் பையன்.
மருமகனை தூக்கி தன் மடியில் வைத்து கொண்டு தங்கையின் அருகில் அமர்ந்தவன் கிச்சு கிச்சு மூட்டி சந்தோஷை சிரிக்க வைத்தபடியே ,”நாம ஒரு கேம் விளையாடலாமா சந்தோஷ்” என்று கேட்க 
“என்ன கேம்? என்றான் சந்தோஷ் மாமனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு
“நான் ஒரு கேள்வி கேட்ப்பனாம்…அதுக்கு நீ பதில் சொல்லுவியாம்…” 
“நான் ஜெயித்தால் என்ன தருவீங்க மாமா?” பரிசில்லாத போட்டியா? அதனால் பரிசென்ன? என்று கேட்டது அந்த வாண்டு
” ம்ம்…நீங்க கேக்குறதை வாங்கித் தரேன்” 
“ஐஸ்கிரீம் வாங்கிக் குடுப்பீங்களா?” கண்களில் ஆசை மின்ன கேட்டவனுக்கு சரி சொல்லியபடியே, தன் அன்னை சந்தோஷுக்கு சொல்லும் கதைகளிலிருந்து சின்னச்சின்ன கேள்விகளைக் கேட்க சந்தோஷும் அழகாக பதில் சொல்லியபடி வந்தான். பிறகு மெதுவாக
“ஒரு கிரௌண்ட்ல ஓட்டப்பந்தயம் ஒன்னு வச்சாங்களாம்” என்று இவன் தொடங்கவும்,”மாமா! இந்த கதை பாட்டி சொல்லித்தரலை” என்றான் சந்தோஷ்
“இது அவுட் ஆஃப் செலபஸ். இதுக்கு பதில் சொன்னால் இரண்டு ஃபேமிலி பேக் ஐஸ்கிரீம் கிடைக்கும்” என்று ஆசைகாட்டியபடியே கதையைத் தொடர்ந்தான் பரணி
“அதுல நிறைய பேரு கலந்து ஓடினாங்களாம்.  ரொம்ப வேகமா ஓடிக்கிட்டிருந்த ஒருத்தன் வெற்றிக்கோட்டுக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு சின்ன கல் தட்டி கீழ விழுந்துட்டானாம்” சற்றே நிறுத்தியவன்
“இப்போ, அந்த வீரன் முயன்று எழும்பி வேகமா ஓடி வெற்றிக்கோட்டை தொடணுமா? இல்ல…” என்றபடியே கொஞ்சம் இடைவெளி விட்டவன், “என்னால முடியாதுன்னு அந்த இடத்தில அப்படியே உக்கார்ந்துடணுமா? பதில் சொல்லுங்க பார்க்கலாம். கேட்டவனின் விழிகள் தங்கையே மொய்த்தன
நடக்கும் நாடகத்தை ஹாலில் உட்கார்ந்திருந்த கோதை நாயகி யும் திவ்யாவும் சுவாரஸ்யத்துடன் பார்க்க கையில் செய்தித்தாளோடு  இருந்த பவானி கவனிக்காதது போல் கவனித்து கொண்டிருந்தாள். பவித்ரா பள்ளி விட்டு வந்து ஃப்ரஸ் ஆகச் சென்றிருந்ததால் இங்கு இல்லை
“முட்டாள் மாதிரி அப்படியே உக்கார்ந்து இருக்காமல், சட்டுன்னு எழும்பி வேகமா ஓடி வெற்றிக்கோட்டை தொட்டுடணும் ண்ணா…” அண்ணன் கதை சொன்ன அழகில் மயங்கி தங்கை பளீரென பதிலைச் சொல்லிவிட்டாள்…
அதைத்தானே அந்த அண்ணன்காரனும் எதிர்பார்த்தது.,”அப்படி தான் செல்லம்…நாமும் வாழ்க்கை  ஓட்டத்தில் வரக்கூடிய சின்னச்சின்ன தடைகளை கண்டு பயப்படாமல் அதை காலால் எத்திதள்ளிட்டு என்கடன் பணி செய்து கிடப்பதேன்னு  நம்ம ஓட்டத்தை  தொடர்ந்துட்டே இருக்கணும்” என்றான் ஆழ்ந்த குரலில் 
அண்ணன் கதை மூலம்  தனக்கு சொல்ல வந்த விஷயம்,”புரிந்தது…” என்னும் விதமாக நந்தினி சிரிக்க,”அப்போ ஐஸ்கிரீம்…” என்றான் சிறுவன். “எனக்கும்…” என்றபடி பவித்ராவும் வந்து சேர்ந்து கொள்ள
“இதோ பத்து நிமிஷத்துல ஃபிரஸ்ஸப் ஆகி வந்துடுறேன்டா” என்றவன் ஓரக்கண்ணால் தன் மனைவியைப் பார்த்தவாறே உற்சாகமாக மாடிப்படிகளில் ஏறினான்…
” பூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே…
இருக்குமிடம் எதுவோ நினைக்குமிடம் பெரிது…
போய்வரும் உயரமும் புதுப்புது உலகமும்
அவரவர் உள்ளங்களே…
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய்வரலாம்…”
 

Advertisement