Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 13.
ஹாலில் குழுமியிருந்த வீட்டு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தது.
நேரம் இரவு ஏழு மணி…
ஹாலில் கிடந்த அந்த பெரிய சோஃபாவில் தன் அக்காவின் மடியில் தலைசாய்ந்திருந்த நந்தினியின் கண்களோ சுவரில் பளிச்சிட்டு கொண்டிருந்த டியூப் லைட்டையே வெறித்தபடி இருந்தது.
திவ்யா தன் கைகளால் தங்கையின் முதுகைத் தடவி அவளை ஆசுவாசப்படுத்திக் கொண்டு இருந்தாள். தனக்கு இன்று மாலை நடந்த நிகழ்விலிருந்து அந்த சிறுபெண்ணால் வெளியே வரவேமுடியவில்லை.
இன்று எப்பொழுதும் போல மாலை ஐந்து மணிக்கு பன்னிரெண்டாம் வகுப்பிற்கான மாலை நேர வகுப்புகள் முடிந்திருக்க வகுப்பறையை விட்டு வெளியே வந்தாள் நந்தினி.
அவர்கள் ஊரிலிருந்து பள்ளி ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரமே… அதனால் எப்போதுமே சைக்கிளில் வருவது தான் அவள் வழக்கம். 
இன்று தன்வகுப்பில் படிக்கும் தனது ஊரைச் சேர்ந்த தோழி மலர்மதி விடுமுறையாதலால் தனியாகத்தான் செல்லவேண்டும் என்று எண்ணியபடியே தன் வகுப்புத் தோழிகளுடன் சேர்ந்து சைக்கிளில் பள்ளியை விட்டு வெளியே வந்தாள்.
கலகலத்தபடியே வந்த இளையவர்கள் பட்டாளம் ஒரு திருப்பத்தில் விடைபெற்று சென்று விட சைக்கிளை கொஞ்சம் வேகமாக மிதிக்க ஆரம்பித்தாள் நந்தினி.
ஆளரவமற்ற சாலையில் தனியாக சென்று கொண்டிருந்தது கொஞ்சம் பயத்தை கொடுத்தாலும் இதோ இந்த திருப்பத்தை தாண்டிவிட்டால் அதன்பிறகு ஆள்நடமாட்டம் வந்துவிடும் என்று சைக்கிளை வேகமாக விட
திடீரென்று அவளை ஒட்டினார் போல வந்த ஒரு டாட்டா சஃபாரிக்கு பயந்து சாலையை விட்டு கீழே இறங்க முயன்ற நந்தினி, தடுமாறி சைக்கிளில் இருந்து கீழே விழுந்திருந்தாள்.
அவ்வளவு தான் சடசடவென்று வண்டியிலிருந்து இறங்கிய இரண்டு தடியன்கள் பூனைக்குட்டியை தூக்குவது போல தூக்கி இந்த சிறு பெண்ணை வண்டியில் போட்டுக்கொண்டு பறந்துவிட்டார்கள். 
வந்தவர்கள் வேறுயாருமல்ல அந்த பேருந்து உரிமையாளரின் மகனுடைய எடுபிடிகளே. அவனும் இவர்களோடு வருவதாகக் தான் இருந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் அவன் சார்ந்திருந்த கட்சியின் ஆட்கள்  அவனைத் தேடி வீட்டுக்கு வந்துவிட, “நீங்க போய் பொண்ணை தூக்கி நான் ஏற்கனவே சொன்ன இடத்துக்கு கொண்டு போய்டுங்க. நான் இவனுங்களை அனுப்பிட்டு ஒரு பத்து நிமிஷத்துல அங்கேயே வந்துடுறேன்” என்று ரகசியமாக இவர்களை அனுப்பி வைத்திருந்தான்.
 இந்த நேரத்தை தவற விட்டால் அதன்பிறகு நாளை தான் பெண்ணை பிடிக்க  முடியுமாதலால் அவன் இன்று செய்து வைத்திருக்கும் ஏற்பாடுகளை கைவிட மனமின்றியே தன் அடிபொடிகளை அனுப்பி வைத்திருந்தான். 
  
நடந்த நிகழ்ச்சியின் அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்திருந்த நந்தினி தன்னை காப்பாற்றிக் கொள்ள அவர்களிடம் போராட…பாவம் அந்த இரண்டு இடிதடியன்களிடம் அவள் முயற்சி பலிக்கவேயில்லை…
இவள் கத்த ஆரம்பிக்க கையில் வைத்திருந்த பிளாஸ்டர் கொண்டு வாயை மூடிவிட்டு அவள் இரண்டு கைகளையும் தன் ஒற்றை கையால் ஒருவன் அழுத்தமாக பிடித்துக்கொண்டான்.
காரின் ஜன்னல் கண்ணாடிகளை ஏற்றிவிட்டு தங்கள் இருவருக்கும் நடுவில் நந்தினியை உட்காரவைத்து லேசாக அவர்கள் சீட்டில் முன்னால் நகர்ந்து உட்கார்ந்து அவளை மறைத்தாற்போல்  அமர்ந்து கொண்டார்கள்.
ஒன்றும் செய்ய இயலவில்லை அந்த சிறுபெண்ணால். வேடன்களிடம் மாட்டிய மான் குட்டியாய் மருண்டுபோயிருந்தாள். வண்டியோ தன் இலக்கை நோக்கி ஓடியபடி இருந்தது.
ஓரிடத்தில் மூடுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த ரெயில்வே கேட்டை கடந்து விடும் அவசரத்தில் அருகிலிருந்த வேகத்தடையில் வண்டியின் வேகத்தை குறைக்காமல் ட்ரைவர் வண்டியை விட அப்போது வண்டியில் ஏற்பட்ட அதிகப்படியான குலுக்கலில் நந்தினியின் கையை பிடித்திருந்தவனின் பிடி தளர்ந்தது.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நந்தினி சட்டென்று தன் கையை விடுவித்து வாயிலிருந்த  பிளாஸ்டரை பிய்த்தெறிந்தபடி,”காப்பாத்துங்க…” என்று கத்தினாள்.
ஆபத்திலிருப்பவனுக்கு கடைசி நேரத்தில் கிடைக்கும் ஓரு வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தில் போட்ட சத்தம்… அடைக்கப்பட்டிருந்த கண்ணாடி ஜன்னலையும் தாண்டி வேகத்தடையில் தன் பைக்கின் வேகத்தை குறைத்து மெதுவாக கடந்து கொண்டிருந்த ஒரு இளைஞனை சரியாகவே சென்றடைந்தது. 
அவன் மனோஜ்… குமரனின் நண்பன்…
சத்தம் வந்த திசையை இளைஞன் பார்க்க, காரிலிருந்த ஒரு பெண்ணை பக்கத்தில் இருப்பவன் பளாரென்று ஓங்கி அறைவது காரின் கண்ணாடி வழியே தெரிந்தது.
ஆனால் ‘அந்த பெண்… அந்த பெண்…அது குமரனுடைய தங்கை நந்தினியல்லவா?’ 
அவர்கள் அவளிடம் நடந்து கொண்டவிதத்திலேயே  நந்தினி அவளின் விருப்பமின்றி அவர்களுடன் போய்க்கொண்டு இருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன் காரின் நம்பரை மனதில் நிறுத்திக் கொண்டு அந்த வாகனத்தை தொடர்ந்தபடியே தங்கள் நண்பர்கள் வட்டத்திற்கு மின்னல் வேகத்தில்  மெசேஜ்களை அனுப்பி வைத்தான். அதில் குமரனும் அடக்கம்.
கொஞ்ச தூரம் வேகமாக சென்று கொண்டிருந்த கார் இப்போது மெயின் ரோட்டிலிருந்து  இடப்பக்கமாக பிரிந்து செல்லும் மரங்களடர்ந்த ஒரு கிளைச்சாலையில் திரும்ப, இப்போது காரை தொடர்ந்து சென்றால் தான் மாட்டிக்கொள்ள சந்தர்ப்பம் உண்டு என்பதால்  அதே சாலையில் நேராக சென்று பின் திரும்பி வந்து அந்த கிளைசாலையின் முகப்பில் நின்றிருந்தான் மனோஜ். 
 இந்த முட்டுச்சந்து என்று சொல்வார்களே அதைப்போலத்தான் இந்த ரோடு என்பது மனோஜ் க்கு தெரியும். இங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு கோயில் வரும். அதற்குப்பின் மரங்களடர்ந்த மலைதான், வேறு எங்கும் இந்த பாதை வழியே செல்ல முடியாது என்பது அவனுக்கு தெரியும்.
எப்படி தெரியும் என்றால், விடுமுறை நாட்களில் இயற்கை, இயற்கை என்று காடுமேடாக அலைந்து திரியும் இளைஞர் கூட்டத்தை சேர்ந்தவன் அவன். சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து இயற்கை சார்ந்த இடங்களும் அவர்களுக்கு அத்துப்படி. 
இப்போது தான் நிற்கும் லேண்ட் மார்க்கை மிகச்சரியாக தன் நண்பர்கள் வட்டத்திற்கு அனுப்பி விட்டு, செல்பேசியை சைலண்ட் மோட் க்கு மாற்றி பத்திரபடுத்தினான்.
பின்  கொஞ்ச தூரம் வண்டியில்  சென்றவன் கோயிலுக்கு சற்று முன்பாகவே வண்டியை ஓரிடத்தில் விட்டுவிட்டு  அந்த கோவிலை குறிவைத்து ஓடினான். 
ஏனென்றால் வண்டியின் பின்பக்க கண்ணாடி வழியாக தெரிந்த பூக்கள் அவனுக்கு எதையோ உணர்த்த ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடும் முன் சென்று விடவேண்டும் என்று வில்லில் இருந்து கிளம்பிய அம்பாக பறந்து சென்றான்.
அவர்கள் வந்த வாகனம் கோயில் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை கண்டவன், மறைந்தபடியே நகர்ந்து கோயிலின் பக்கவாட்டில்  நின்ற பெரிய மரங்களின் கூட்டத்திற்கு பின்னே சென்று நின்றுகொண்டு கோயில் மண்டபத்தை உற்றுப்பார்க்க, 
அங்கே நந்தினியை ஒரு தூணில் கட்டி வைத்தபடி ஒரு மூன்று பேர் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தனர். இப்போது சத்தம் போடமுடியாதபடி மறுபடியும் அவளின் வாய் மூடப்பட்டிருந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த பூமாலைகள் ஓர் ஓரத்தில் வைக்கப்பட்டிருந்ததை பார்த்தவனுக்கு லேசான நிம்மதி முகத்தில் பரவியது. 
அவர்களை உற்று நோக்கிக் கொண்டு இருந்தவனுக்கு, அந்த கைத்தடிகளின் முகத்தில் கொஞ்சம் பதட்டம் குடிகொண்டிருந்தது போலவேத் தோன்றியது. ஒருவன் யாருக்கோ ஃபோன் செய்யச்செய்ய அதற்கு பதில் இல்லை போலும், கோபமாக அலுத்துக்கொள்வது அப்பட்டமாக அவன் முகத்தில் தெரிந்தது.
இங்கிருப்பவர்களில் எவனோ ஒருவன் நந்தினியை கட்டாயத்திருமணம் செய்யப்போகிறான் என்றே மனோஜ் நம்பினான். ஆனால் அப்படியில்லை வேறு யாரோ ஒருவனுக்காக இவர்கள் காத்திருக்கிறார்கள் என்பது சிறிது நேரத்திலேயே அவனுக்கு புரிந்து விட்டது.
நண்பர்கள் வரும் வரை அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்ற பிரார்தனையோடே
 மறைவிடத்தில் இருந்தபடியே நடக்கும் அனைத்தையும் நண்பர்களுக்கு மெசேஜாக அனுப்பியபடி இருக்க அடுத்த முப்பதாவது  நிமிடத்தில் குமரனோடு சேர்த்து அவன் நண்பர்கள் ஆறு பேர் மனோஜ் இருக்குமிடத்தை சரியாக கண்டுபிடித்து வந்து சேர்ந்திருந்தார்கள்.
கல்லூரி விட்டு கல்லூரி வாகனத்தில் குமரன் வந்து கொண்டிருக்கும் போது தான் மனோஜ் மெசேஜ் செய்திருந்தது. அதிர்ந்து போன குமரனுக்கு அது யாருடைய வேலையாக இருக்கலாம் என்றும்  கொஞ்சம் கணிக்க முடிந்திருந்தது. 
மனோஜ் சொன்ன இடத்துக்கு அருகில் தான் அந்த நேரம் குமரனின் கல்லூரி வாகனம் வந்து கொண்டிருந்தது. அதனால் அவசர வேலை என்று சொல்லி கல்லூரி வாகனத்தில் இருந்து இறங்கி, அங்கு நின்ற  நண்பர்களுடன் சேர்ந்து இங்கே வந்து விட்டான்.
மனோஜிடமிருந்து தகவல் வந்த உடனேயே குமரன் அதை அண்ணனுக்கு அனுப்ப வீடு நோக்கி வந்து கொண்டிருந்த அவனும் தனது நண்பனும்  ஈரோடு எஸ்பி யுமான சந்தீப் பிடம் உதவி கேட்க அவர் இங்குள்ள போலீஸாருக்கு தகவல் சொல்லி இடத்தையும் சொல்லி நடவடிக்கை எடுக்கச் சொல்ல என்று நந்தினியை காப்பாற்ற அடுக்கடுக்காக கரங்கள் கைகோர்த்து கொண்டு மிகவிரைவாக களத்தில் குதித்தது. 
ஒருவன் ஏழுபேராக,.. உள்ளே சென்று, அங்கு நிற்கும் மூன்று பேரையும் தாக்கிவிட்டு நந்தினி யை அழைத்து சென்று விடலாம் என்று இளைஞர்கள் பட்டாளம் முடிவெடுத்து ரெடியாக அப்போது பரணியோடு காவல் துறையும் சேர்ந்து வந்தது.
போலீஸாரோடு சேர்ந்து எல்லோரும் அதிரடியாக கோயில் மண்டபத்திற்குள் நுழைந்து அங்கு நின்றிருந்த மூவரையும் வளைத்து பிடிக்க
பரணியோ தங்கையிடம் பாய்ந்து சென்றிருந்தான். இதுவரையில் தன் நிலை என்ன ஆகுமோ என்று நடுங்கிக் கொண்டிருந்த நந்தினி தன் அண்ணனைக் கண்டதும்  பிரமை பிடித்தவள் போல நின்றாள். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
கைக்கட்டையும் அவிழ்த்து, வாயை மூடி இருந்த பிளாஸ்டரையும்  எடுத்து விட்டவனின் பார்வை அடித்ததனால் சிவந்து கைதடம் பதிந்திருந்த தங்கையின் கன்னத்தில் விழ…
 
பரணியின் இரத்தம் சூடேறியது. தங்கையின் கன்னத்தை தடவியபடியே யாரென்று கேட்க அடித்தவன் மீது தன் பார்வையைத் திருப்பினாள் நந்தினி
அவ்வளவு தான்…ருத்ரமூர்த்தியாக மாறி தன் ஆத்திரம் தீர  அந்த கைத்தடியை வெளுத்து வாங்கி விட்டான் பரணிதரன்  
போலீஸ் அதிகாரி, பரணியிடமிருந்து அவனை மீட்டு விசாரணையை மேற்கொள்ள,”பரணிதரனை பழிவாங்குவதற்காகவே அவனது தங்கையை கடத்தி வந்து திருமணம் செய்து கொள்ள சதீஷ் போட்ட திட்டம் இது” என்றது அந்த கைத்தடி. அவனது முகமோ பரணிதரனின் கைவண்ணத்தால் வீங்கி போய் கிடந்தது.
சதீஷ் என்பது அந்த பேருந்து உரிமையாளரின் மகனின் பெயராம். 
அவன் கூறியதை கேட்டவர்களுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. ஒருவனை பழிவாங்குவதற்கு இப்படி எல்லாமா திட்டம் போடுவார்கள்?
ஆமாம் என்றான் அந்த கைத்தடி… ‘கல்யாணம் முடித்து தங்கையைப் படுத்துகிறபாட்டில் தன்னால் வழிக்கு வருவானாம் அந்த திமிர் பிடித்த ஆஃபிஸர்.’ இப்படி சொல்லி தான் இந்த திட்டத்தை போட்டிருக்கிறான் அந்த வீணாய் போன சதீஷ். 
இப்போது சிலப்பல அடிகள் அவனுக்கு குமரனிடமிருந்து கிடைக்க அவனின் நண்பர்கள் அவனை தடுத்திருந்தார்கள்,”செத்து கித்து தொலையப்போறான்டா” என்ற டயலாக்கோடு…
“இப்போ அந்த சதீஷ் எங்கடா இருக்கான். உங்களை ஏவி விட்டுட்டு ஒளிச்சிகிட்டானா அந்த பொட்டப்பய?” கேள்வி கொஞ்சம் சீற்றமாகவே வந்தது போலீஸ் ஆஃபிஸரிடமிருந்து.
‘பழிவாங்குவதற்காக பெண் பிள்ளை மீது கைவைப்பானாமா?’ என்ற சீற்றம் அவருக்குள். தன் அண்ணனின் கைக்குள் கோழிக்குஞ்சாய் பயந்து ஒடுங்கி நிற்கும் சிறுபெண்ணை பார்க்கும் போது அவருள் கனன்ற கோபத்தீ இன்னும் பெருகியது.
“சொல்லுடா…” என்று வேகமாக அவன் பின்தலையை தன் கையால் ஒரு தட்டு தட்ட,”இங்க தான் வந்துட்டு இருக்கிறேன் னு ஒருதடவை ஃபோன் வந்தது. அப்புறம் ஃபோனே வரலை. நான் ஃபோன் பண்ணுனாலும் கால் போகமாட்டேங்குது” என்றான் மெதுவாக
அதிகாரி நம்பாமல் அவன் ஃபோனை வாங்கி பார்க்க அது அவன் சொல்லுவது உண்மைதான் என்றது. அப்போது சதீஷ் காலிங்… என்ற தகவலைச் சொன்னபடியே அந்த ஃபோன் அலற அவன் கையில் கொடுத்து,”பேசு” என்று அதிகாரி கட்டளையிட்டார்.
ஃபோனை வாங்கியவன்,” சதீஷு…” என்றான் வேகமாக. ஆனால் எதிர்புறமோ, தன்னை ஒரு காவல் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு ‘அந்த சதீஷின் கார் ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரைச் சொல்லி அந்த காரில் வந்த நபர் விபத்துக்குள்ளானதாகவும், தற்போது அவரை ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதாகவும்’ சொல்ல ஒன்றுமே சொல்லாமல் ஃபோனை அப்படியே அதிகாரியிடம் திருப்பிக்கொடுத்தான் அவன்
ஃபோனை கையில் வாங்கிய நேரத்திலிருந்து அந்த அடியாளின் முகத்தை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த எல்லோருக்குமே புரிந்தது ஏதோ சரியில்லை என்று…
அவன் நீட்டிய கைபேசியை  வாங்கி அதிகாரி தன் காதுக்கு கொடுக்க எதிர்புறமோ,”ஹலோ…ஹலோ…” என்று அழைத்துக்கொண்டிருந்தது.
இப்போது இவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள எதிர்புறத்திலிருந்தவர் ஒரு வணக்கத்தோடு தன்னையும் அறிமுகப்படுத்திக் கொண்டு அனைத்தையும் சொல்லி முடித்திருந்தார்.
வேறொன்றுமில்லை… இவர்கள் கிளம்பி ஒரு பதினைந்து நிமிடத்திற்குள்ளாகவே வந்தவர்களை அனுப்பி விட்டு அந்த சதீஷ் கிளம்பியிருந்தான். தான் கிளம்பி விட்டதாக  இவர்களுக்கு ஃபோனும் கூட செய்திருந்தான்.
காரில் வந்து கொண்டிருந்தவனது அழுக்கு மனம் அகங்காரத்தால் துள்ளிக்கொண்டிருந்தது. பரணிதரனையும், குமரனையும் நினைத்துக்கொண்டவன் ‘அன்னைக்கு எவ்வளவு திமிரா எங்கிட்ட பேசுனீங்கடா… இனிமேல் உங்களால பேசமுடியுமா? வைக்கிறேன்டா உங்களுக்கு ஆப்பு’ என்று கறுவிக்கொண்டான் கடவுள் இன்னும் சிறிது நேரத்தில் தனக்கு வைக்கப்போகும் ஆப்பு தெரியாமலேயே…
உண்மையிலேயே அவன் தூக்க நினைத்தது பவித்ராவைத்தான். ஆனால் வீட்டுக்கு பக்கத்தில் இருந்து பள்ளிப் பேருந்தில் சென்று வீட்டுக்கு பக்கத்திலேயே வந்து இறங்கும் பவித்ராவை அவனால் நெருங்க முடியவில்லை.
நந்தினி தனியாகச் செல்லவே அவளுக்கு கட்டம் கட்டி தூக்கி விட்டான். அவனது பழிஉணர்ச்சிக்குத் தேவை பரணிதரன் வீட்டு பெண். அது பவித்ராவாக இருந்தால் என்ன? நந்தினியாக இருந்தால் என்ன? 
ஆனாலும் இந்த பெண்ணை திருமணம் செய்து அந்த குடும்பத்திற்குள் போன பிறகு அந்த பெண்ணிற்கும் ஒரு வழிபண்ணிக் கொள்ளலாம் என்றே கணக்கு போட்டது அவனது சாக்கடை புத்தி.
‘நினைவு நல்லது வேண்டும்’ என்று அவனில் பதியாது போயிருந்தது யார் தவறோ தெரியவில்லை?  எண்ணம் தந்த உற்சாகத்தில் வானத்தில் மிதந்தது போன்ற பாவனையில் அவன் வண்டி ஓட்ட ஒரு திருப்பத்தில் வந்த லாரியோடு நேருக்கு நேராக மோதியது  அந்த சதீஷின் வண்டி…
அவ்வளவு தான்…. அப்பளமாக நொறுங்கிப் போயிற்று அவன் வாகனம். வாகனத்திற்கே அப்படி என்றால் அதன் உள்ளே இருந்தவன் நிலைமை இன்னும் மோசம். 
தகவல் தெரிந்து ஆம்புலன்ஸ் வந்து ஹாஸ்பிடலில் சேர்த்து அவன் சம்மந்தப்பட்டவர்களுக்கு தகவல் தெரிவிக்க அவன் ஃபோனை எடுத்தால் அது உபயோகிக்க முடியாத அளவிற்கு இருக்க,
 

Advertisement