Advertisement

வாகனம் வாங்கவேண்டும் என்று ஏற்கனவே மனைவியிடம் சொல்லியிருந்தான் தான். ஆனால் நேற்று நடந்த களேபரத்தில்  இன்று வண்டி வருகிறது என்று அவனால் மனைவியிடம்  சொல்லமுடியவில்லை.
தன்னருகே வந்து நின்ற மனைவியைப் பார்த்தான் நேற்றைவிட கொஞ்சம் முகம் தெளிந்தார் போல் தான் இருந்தது. 
ஆனால் எல்லாரும் இருக்கும் போது தன்னிடம் காட்டும் இந்த நெருக்கம் அவனுக்கு புதிது. எப்போதுமே வீட்டு மனிதர்கள் அருகில் இருக்கும்  போது கணவனிடத்தில் ஒரு சின்ன நாகரீகமான இடைவெளி விட்டே பழகுவாள் பவானி. 
ஆனால் இன்றோ அது எதுவும் எனக்கில்லை என்பது போல் இருந்தது பவானியின் நடவடிக்கை.
மனைவியின் மனநிலையை முற்றும் உணர்ந்தவனாய் அவள் கைகளைப் பற்றி தட்டிக்கொடுத்தவன் காரைக் காட்டி, “நம்மோடது தான் டா. நல்லாயிருக்கா” என்று கேட்க… ஆமாம் என்னும் விதமாக தலையசைத்தாள் மனைவி.
பவானியை கண்டதும் எல்லாருக்கும் கார் மறந்து நேற்றைய பவானியின் மனநிலையே ஞாபகத்திற்கு வர  ஆளாளுக்கு நலம் விசாரித்தனர் அவளிடம். எல்லாருக்கும் புன்னகையையே பதிலாக்கியவள் கணவனை விட்டு அக்கம்பக்கம் நகர்ந்தாளில்லை.
வீட்டில் சரஸ்வதி பூஜை க்கான ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏற்கனவே பால் விற்பனை செய்யும் கடையில் அங்கு வேலை செய்யும் நபர்களோடு சேர்ந்து பூஜையை முடித்திருந்தார் மதியழகன்.   
மாவிலை தோரணத்தாலும், பூ மாலைகளாலும் வீட்டு தலைவாசல் நிலைப்படியை அலங்கரித்திருந்தனர் பவித்ராவும், நந்தினியும்.
 வீட்டு பூஜையறையில் இருந்த ஸ்வாமி படங்களுக்கு மாலையிட்டு  அவல்,பொரி, கடலை, பாயாசம், வடை என்று நைவேத்தியம் படையலிட்டிருந்தார் கோதை நாயகி. 
முதல் ஆளாக தன்னுடைய புத்தகங்கள் எல்லாவற்றையும்  ஸ்வாமி படங்களுக்கு முன் கொண்டு வந்து அடுக்கியிருந்தாள் பவித்ரா. 
அதைப் பார்த்து நந்தினி லேசாக சிரிக்க,”ஏன் சிரிக்கிற நண்டு? சாமி கும்புடுறது தப்பா?” என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கிசுகிசுப்பான குரலில் கேட்க
“உன் பக்தியோட அளவு எனக்கு தெரியும் டி… இன்னைக்கு புக்ஸ்ஸ இங்க கொண்டு வச்சா நாளைக்கு தான் எடுக்க முடியும்…. அப்போ இன்னைக்கு முழுக்க படிப்பு க்கு பட்டநாமம் போட்டுடலாம்னு தானே எல்லாத்தையும் வாரிவளைச்சு கொண்டு வந்து பூஜைல வச்சிருக்க…” நந்தினியிடமிருந்து சிரித்தபடியே அதே குரலில் கேள்வி வந்தது.
நந்தினியும் புத்தகங்களை கொண்டு வந்து பூஜையில் அடுக்கியிருக்கிறாள் தான். ஆனால் பவித்ரா அளவிற்கு இல்லை.
தன் திட்டம் அம்பலமாகிவிட்டதே என்று லேசாக அசட்டு சிரிப்பு ஒன்றை சிரித்த பவித்ரா, நந்தினியின் கிண்டலைக் கண்டு கொள்ளாமல்,”ஏன் நந்தினி இந்த வீட்ல நாம ரெண்டு பேரு மட்டும் தான் படிக்குறமா என்ன? நம்ம புக்ஸ் மட்டும் தான் இங்க இருக்கு என்று கேட்க…
அவள் யாரைப் பற்றி கேட்கிறாள் என்று புரிந்த நந்தினி,”இதோ அம்மா கிட்டயே கேட்டு சொல்லுறேன்” என்றவாறே,”அம்…” என்று கோதை நாயகி யை கூப்பிடுவதற்கு வாயைத் திறந்தாற்போல் நடிக்க…
“ஆத்தாடி! உன் திருவாயை மூடுடி…” என்று பவித்ரா கத்தினாள்.
“நீ முதல்ல ஷட்அப் பண்ணு மா… நாங்களும் பண்ணுறோம்” என்றாள் நந்தினி
இருவரும் தொடர்ந்து கிசுகிசுவென பேசிக் கொண்டிருப்பதை பார்த்த கோதை நாயகி, ” கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க மாட்டீங்களா? சாமி கும்பிட வந்து நின்னுட்டு என்ன கிசுகிசுப்பு” என்று அதட்டியபடியே
“குமரா! உன்னோட புத்தகம் எங்கடா காணோம்? போ…போய் எடுத்துட்டு வா…” என்று அனுப்பி வைத்தார்.
குமரன் தன் புத்தகங்களோடு வண்டிசாவிகளையும் கொண்டு வைக்க… அனைத்திற்கும் கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்தார் கோதை நாயகி.
காலை உணவோடு சேர்த்து நைவேத்தியம் செய்த பதார்த்தங்களையும் எல்லோருக்கும் பரிமாறினார் கோதை நாயகி. 
சாப்பாட்டினூடே,”எங்களை எப்போ ண்ணா நம்ம கார்ல வெளியே கூட்டிட்டு போவீங்க…” என்று நந்தினி கேட்க
“போலாம்மா…” என்றவன் சிறிது நேரம் கழித்து தியேட்டரில் நன்றாக ஓடிக்கொண்டிருந்த பிரபல காமெடி நடிகரின் படத்தின் பெயரைச் சொல்லி, “அம்மா! எல்லாரையும்  மேட்னி ஷோ சினிமாவுக்கு கூட்டிட்டு போயிட்டு வர்றீங்களா?” என்று கேட்டான்.
“சினிமாவுக்கா? என்னால ஆகாது பரணி…தியேட்டர்குள்ள
போனாலே எனக்கு தலைவலிக்க ஆரம்பித்து விடும்” என்று கோதை சொல்லிவிட 
மதியழகனும் தனக்கும் ஒத்துக்கொள்வதில்லை என்று சொல்லி விடவே, இளையவர்களின் முகங்கள் வாடிப்போயின.
குமரனை மட்டுமே நம்பி இரு பெண்பிள்ளைகளையும் விடத்தயங்கிய பரணி அக்காவிற்கு ஃபோன் பண்ணி விஷயத்தைச் சொல்ல, அதே படத்தை பார்ப்பதற்காக அங்கு சந்தோஷும் பெற்றோரை நச்சரித்துகொண்டு இருக்கவே திவ்யா அவர்களோடு செல்ல ஒத்துக்கொண்டார்.
மதிய சாப்பாட்டிற்கு பிறகு இளையவர்கள் திவ்யாவின் தலைமையில் படத்துக்கு சென்றுவிட…  எஞ்சியவர்கள் சற்றே ஓய்வெடுக்க அவரவர் அறைகளில் தஞ்சமடைந்தனர்.
*******
ஆன்லைன் மூலமாக டிக்கட்ஸ் முன்பதிவு செய்திருந்தபடியால் காட்சி தொடங்கும் சரியான நேரத்திற்கே வந்திருந்தார்கள் குமரன் கோஷ்டியினர்.
அவர்கள் வரும்போதே படத்தில் வேலைசெய்த கலைஞர்களின் பெயர்களை அறிமுகப்படுத்தும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. விடுமுறை தினமாதலால் கூட்டமும்  அதிகமாகவே இருந்தது. 
ஏற்கனவே உட்கார்ந்து இருப்பவர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில், முதலில் திவ்யா, கடைசியாக குமரன் இடைப்பட்ட இடத்தில் பிள்ளைகள் என்ற கணக்கில் திவ்யா முதலில் போய் தங்களுக்கான இருக்கையில் அமர, உட்கார்ந்து முடிக்கும் போது பார்த்தால் குமரனுக்கு பக்கத்தில் பவித்ரா உட்கார்ந்து இருக்கிறாள்.
அதைப் பார்த்த குமரனுக்கு தான் திகைப்பேயொழிய வேறு யாருக்கும் அது வித்தியாசமாக இருந்தது போல் தெரியவில்லை அவனுக்கு…
படம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நந்தினியும் பவித்ராவும் தங்களுக்கிடையே இருந்த சந்தோஷோடு சேர்ந்து கலகலத்தபடியே தனி உலகில் இருக்க, இவனுக்கு தான் எப்போதடா படம் முடியும் என்ற நிலைமை.
இடைவேளையில் ஸ்னாக்ஸ் வாங்கச் செல்லும் போது கூட வந்த  சந்தோஷிடம் மெதுவாக,”என் பக்கத்தில் வந்து உட்காரேன்டா, நம்ம இரண்டு பேரும் சேர்ந்து ஜாலியா என்ஜாய் பண்ணலாம்” என்று ஏதோ சந்தோஷ் இல்லாமல் போரடித்து கிடப்பவன் போல் குமரன் கேட்க, பொடியனோ,”எனக்கு இது தான் மாமா கம்ஃபர்ட்டபிள்ளா இருக்கு” என்று நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டது மாமனின் விண்ணப்பத்தை.
வேறு வழியின்றி திரும்பவும் பவித்ரா பக்கத்தில் உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்த சிறிது நேரத்தில் தன் கையிலிருந்த பாப்கார்ன் பாக்கெட்டை ‘எடுத்துக்கொள்’ என்னும் விதமாக குமரனை நோக்கி நீட்டினாள் பவித்ரா. 
இவன் வேண்டாம் என்னும் விதமாக தன் கையால் பாப்கார்ன் பாக்கெட்டை தள்ளிவிட அந்த மெல்லிய வெளிச்சத்தில் நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் லேசாக உதடுசுளித்து தன் தோள்களை குலுங்கி கொண்டு மீண்டும் படத்தோடு ஐக்கியமாகிவிட்டாள்…
படம் இப்போது காமெடியிலிருந்து லேசாக சோகத்திற்கு தடம் மாற இவ்வளவு நேரமும் கலகலத்திருந்த அந்த பெரிய ஹாலே அமைதியை தத்தெடுத்தாற் போல் இருந்தது.
தன் பக்கத்தில் இருந்த பவித்ராவின் கைகள் அடிக்கடி கர்சீப்பால் கண்களை துடைத்தபடி இருந்தது குமரனுக்கு தெரிய,’அழுகிறாளா என்ன?’ என்று சந்தேகத்தோடு லேசாக கவனிக்க
அவளோ கண்களில் வழியும் கண்ணீரை அடிக்கடி துடைத்து விட்டுக் கொண்டே படத்தை பார்த்துக்கொண்டிருப்பது அவனுக்கு தெரிந்தது.
‘எதற்காக இந்த அழுகை?’ என்று குழம்பியவனுக்கு சட்டென்று பொறிதட்டியது,’ஓ…நிழலில் நடக்கும் சோக காட்சியைப் பார்த்து நிஜம் இங்கே அழுகிறது…’
புரிந்து கொண்டவனுக்கு வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் இருக்க… நல்ல காலம் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டான். இல்லையென்றால் சோக காட்சி நடக்கும் போது சிரிக்கும் இவன் அல்லவா பைத்தியம் ஆகிப்போயிருப்பான்!
காலையில் தன் அல்டரை டம்பிபீஸு என்று கோதை அம்மா சொன்னபோது பெரிதாக சிரித்த பவித்ரா இப்போது குமரன் கண்களுக்கு மிகப்பெரிய டம்மிபீஸாகத் தெரிய குமரனவன் உதடுகளோ சிரிப்பில் காதுவரை நீண்டது.
படம் முடிந்து எல்லோரும் வீட்டுக்கு வர, நந்தினியும் பவித்ராவும் திரைபடத்தில் வந்த நகைச்சுவை காட்சிகளை பவானியின் அருகில் உட்கார்ந்து அவளுக்கு சொல்ல, அவர்கள் அதை சொன்ன விதத்தில் கலகலவென்று சிரித்துக்கொண்டிருந்தாள் பவானி.
இன்று முழுவதும் கணவனுடனே இருந்தபடியாலோ என்னவோ பவானியின் முகத்தில் புன்னகை பூ  வாடவேயில்லை.
****************
அறுபது நாளில்  ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும் என்று ஏற்கனவே டாக்டர் சொல்லியிருந்தபடியால் மறுநாள் பவானியை ஹாஸ்பிடலுக்கு தங்களது காரிலேயே அழைத்து வந்திருந்தான் பரணிதரன்.
இம்முறை தம்பதியர் மட்டுமே வந்திருந்தனர். டியூட்டி டாக்டர் பரிந்துரை செய்தபடி ஸ்கேன் எடுத்தவர்கள் அதன் ரிசல்டை வாங்கிக் கொண்டு தங்களின் முறை வந்ததும்  டாக்டர்.ஜானகியின் அறைக்குள் சென்று அவரை வணங்கி அமர்ந்தனர்.
புன்னகை முகத்தோடு  ஸ்கேன் முடிவுகளை ஆராய்ந்தபடியே மருத்துவர் பவானியின் நலனை விசாரிக்க, எல்லாம் சொன்னாள் பவானி. அதாவது… தன் உடல்நிலை, பயம், டென்ஷன், குழப்பம்… எல்லாம் ஒளிவுமறைவின்றி சொன்னாள். 
தன் மனைவி சொல்லி முடிக்கும் வரை அவள் முகத்தையே பார்த்திருந்த கணவன் இப்போது மருத்துவரின் முகத்தை   பார்க்கலானான் அவரின் பதிலுக்காக…
பவானி கூறிய அத்தனையும் உன்னிப்பாக செவிமடுத்த மருத்துவர் மெல்லிய சிரிப்போடு பக்கத்தில் இருந்த டேபிள் வெயிட்டை தன்கைகளால் மெதுவாக உருட்டியவாரே,”இதுல பயப்படுறதுக்கு ஒன்னுமே இல்லம்மா…ஒரு சிலருக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படுற ஹார்மோன் மாறுதல்களால இந்த மாதிரி வர்றதுண்டு. பிரசவத்திற்கு அப்புறம் இதெல்லாம் நார்மலாகிடும்” என்று சொல்லியவர்
“இந்த காலத்தில் தாய்மையடைதல் என்கிறதே ஒரு பெரிய வரம் பவானி…அது உனக்கு எளிதா கிடைத்திருக்கு. உன்குழந்தையை நீ சுமக்குற ஒவ்வொரு நிமிஷத்தையும் நீ அனுபவிக்கனும்… அதை விட்டுட்டு வீணான சிந்தனைகளில் மனசை போட்டு குழப்பிக்காதே” என்று மருத்துவராய் அறிவுரை சொல்லியே அனுப்பினார்.
அவர்கள் அறையை விட்டு வெளியே செல்லவும்,”மிஸ்டர். பரணிதரன்…” என்று அழைக்க, திரும்ப உள்ளே வந்தவனிடம் ஸ்கேன் ரிப்போட்டை கொடுத்து,”உங்க மனைவியோட இந்த மனநிலை சிலநேரங்களில் அவங்களுக்கு மன அழுத்தத்தை கொண்டு வரவும் வாய்ப்பிருக்கு. அதனால அவங்களை கொஞ்சம் கவனமாக பாத்துக்கோங்க” என்றவர்,
“இந்த விஷயம் அவங்களுக்கு தெரியவேண்டாம். தெரிந்தால் அதுவே அவங்களுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்தாலும் கொடுக்கலாம்” என்றும் சொல்லி அனுப்பினார்.
வெளியே வந்த கணவனிடம்,”எதற்காக திரும்பவும் டாக்டர் உங்களை மட்டும் உள்ளே கூப்பிட்டாங்க” என்று கேட்ட மனைவியிடம் ஸ்கேன் ரிப்போர்ட் டை காட்டியபடியே,”இதை வாங்கத்தான் மா” என்றான் பரணிதரன்.
 டாக்டர் கூறியவற்றை தனியே தன் அன்னையிடம் பகிர்ந்திருந்தான் பரணி. அவரும் “இதெல்லாம் ஒன்னுமே இல்லடா…நாம பவானியை பாத்துக்கலாம்” என்று ஆறுதல் சொல்லவே கொஞ்சம் தெளிந்திருந்தான் அந்த கணவன்.
பூஜை விடுமுறை இரண்டு நாட்களோடு சனி,ஞாயிறுமாக சேர்த்து மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறை யை மனைவியோடே கழித்திருந்தான் பரணிதரன். 
நான்கு நாட்கள் விடுமுறை க்கு பிறகு பரணி ஆஃபிஸுக்கு கிளம்ப, பவானி லேசாக முகம் சுருக்கினாலும் பெரிதாக வேறு எதுவும் சொல்லவில்லை.
டாக்டர் சொன்னபடி ஒரு பத்து நாட்கள் கழித்து தானும் அலுவலகம் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்திருந்தாள் பவானி.
கணவனுடைய அனுசரணை யான பேச்சோ, இல்லை மருத்துவரின் அறிவுரையோ எதுவோ ஒன்று அவளை இவ்வாறு முடிவு செய்ய தூண்டியிருந்தது.
மேலும் ஒரு வாரம் காலக்கணக்கிலிருந்து கழிந்து போயிருந்தது. இந்த ஒரு வாரகாலமாக கணவன் வேலைக்கு சென்றபிறகு பவானி ரூமிற்குள்ளே அடைந்தே கிடைப்பதில்லை. வெளியே வந்து கோதை நாயகி யுடன் தயக்கமின்றி கதைகள் பேச ஆரம்பித்து இருக்கிறாள்.
கோதை நாயகியும் மருமகளின் இந்த முயற்சி க்கு தோள்கொடுக்கும் விதமாக அவளுடனேயே முடிந்த வரையில் நேரத்தை செலவிடுகிறார்.
சுப்பையாவின் மனைவி பூவம்மாவை வீட்டில் சுற்றுவேலைகளுக்காக இப்போது வரச்சொல்லி இருப்பதால் அவருக்கும் மருமகளுடனே இருப்பது எளிதாகிற்று..
இன்று, இந்த கொஞ்ச நாள் பழக்கத்தின்படி மாமியாரும் மருமகளும் சாயங்காலம் சிட்அவுட் ல் உட்கார்ந்து கொண்டு பேசியபடியே வெளியே சென்றவர்களின் வருகைக்காக காத்திருக்க… பவித்ராவைத் தவிர வேறு யாருமே வீடு திரும்பவில்லை. 
பரணிதரனும், குமரனும் சிலநேரங்களில் லேட்டாக வருவது வழக்கம் தான் என்பதால் யாருக்கும் எதுவும் தோன்றவில்லை. 
ஆனால் நந்தினி சாயங்கால வகுப்புகள் முடிந்து வரும் நேரம் தாண்டியும் வரவில்லை என்றதும்,
ஒரு வேளை வகுப்புகள் ஏதும் நீண்டதால் வரத்தாமதம் ஆகிவிட்டதோ என்று எண்ணி மகளை கூட்டிவர மதியழகன் தன் சைக்கிளில் பள்ளிக்குச் சென்றார்.
சென்றவர் சிறிது நேரத்தில் திரும்பி வர, வந்தவரோடு நந்தினியின் புத்தகப்பையும் சைக்கிளும் தான் வந்ததேயொழிய, நந்தினி வரவில்லை…
 
 

Advertisement