Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 12.
திறந்திருந்த ஜன்னல் வழியே இரவு நேரக் காற்று சிலுசிலுவென்று வீசிக்கொண்டிருந்தது. அந்த காற்றின் குளுமையை அனுபவிக்கும் மனநிலை மாடி அறையில் தங்களது படுக்கையில் இருந்த தம்பதியருக்கு இல்லை. 
 ஜன்னல் வழியே வானில் தெரிந்த நிலவு கூட, ஏனோ கொஞ்சம் சோம்பலாக வானில் ஊர்வலம் போய்க்கொண்டிருந்தது போல் இருந்தது பரணிதரனின் கண்களுக்கு… 
கணவனின் மார்பில் தஞ்சம் புகுந்திருந்தாள் பவானி. கைகளோ அவனை ஆரத்தழுவியபடியே இருந்தது. ஏதோ தன் கணவனுக்கு வரும் ஆபத்தை தன் கை என்னும் ஆயுதம் கொண்டு தடுத்து விடுவது போல இருந்தது அவளின் செய்கை.
தன்னோடு ஒன்றிக்கிடந்த அந்த மெல்லிடையாளின் தளிர்மேனி அவ்வப்போது நடுங்குவதையும் கூட அந்த தலைவனால் உணரமுடிந்தது.
தன்னவளின் நடுக்கத்தைக் குறைக்கும் பொருட்டு தனது வலது கரத்தின் ஆட்காட்டி விரலையும் பெரு விரலையும் கொண்டு அவளின் நெற்றியை மெதுவாக நீவிவிட்டுக் கொண்டிருந்தான் பரணிதரன்.
‘இருநாட்களுக்கு முன்னால் இதேஇடத்தில் தன்னோடு முகம் முழுவதும் சந்தோஷக் கீற்று மின்ன அளவளாவிய பவானிக்கும்  இதோ இப்போது உடம்பில் ஓடும் பய உணர்ச்சியோடு தன்னை கட்டியணைத்தபடி இருக்கும் இந்த பவானிக்கும்  தான் எவ்வளவு வேறுபாடு’ என்று எண்ணியது பரணிதனின் மனது.
ஆமாம்… அன்று கோதை நாயகியிடம் தன் மனக்குழப்பங்களை எல்லாம் தான் சொல்லியதையும் அவர் அவற்றையெல்லாம் ஒன்றுமில்லை என்று ஆக்கியிருந்ததையும் தன் கணவனிடம் எல்லையில்லா சந்தோஷத்தோடே பகிர்ந்திருந்தாள் பவானி.
‘ஆஹா! நான் ஒன்றை நினைத்திருக்க இவளோ தன் மனகுழப்பத்திற்கு வேறொரு காரணம் சொல்கிறாளே’ என்று அலமலர்ந்து போனான் கணவன்.
இதைத்தான்’ ஆழ்கடல் ஆழத்தைக் கூட கண்டாலும் காணலாம், ஆனால் பெண்ணின் மன ஆழத்தை காணமுடியாது’ என்று அனுபவஸ்தர்கள் சொல்லியிருக்கிறார்களோ!’ நினைத்ததோடல்லாமல் மனைவியிடமும் அதை பகிர்ந்து கொள்ள
“அப்போ நீங்க அப்ரண்டிஸ் தான் என்கிறதை உங்க வாயாலே ஒத்துக்கிட்டீங்க…ஒகே ஆபீஸர்…”  கிடைத்த சந்தர்பத்தில் கணவன் காலை வாரினாள் மனைவி.
“ஹேய்…எங்க…உன் மனசைத் தொட்டு சொல்லு நான்
 அப்ரண்டிஸ் தான் னு”  கிறக்கமான குரலில் அவன் கேட்க, 
அவன் மார்பில் முகம் புதைத்துக் கொண்டவளின் முகத்தில் வெட்கம் அழையா விருந்தாளியாக வந்து ஒட்டிக்கொண்டது.
கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக தன் சுயத்தை தொலைத்திருந்த மனைவி திரும்பவும் கிடைத்திருக்க, மிதமிஞ்சிய சந்தோஷத்தில்,, அவளிடம் வார்த்தைகளில் வம்பு வளர்த்திருந்தான் பரணிதரன்.
ஆனால் இன்றோ அவன் சந்தோஷம் அத்தனையிலும் அந்த பேருந்து உரிமையாளரின் மகன் ஒருகூடை மண்ணை இல்லையில்லை ஒருலாரி மண்ணையே அள்ளித்தட்டியிருந்தான்.
 ஏற்கனவே மனைவியிடம் தலைதூக்கியிருந்த பயத்தை அதன் தலையைத் தட்டி ஒருவாறாக அடக்கி வைத்திருந்தான் பரணி. அதனால் கொஞ்சம் அவளிடம் மட்டுப்பட்டிருந்த பயம் இன்று தண்ணீருக்குள் அமுக்கிவைத்த காற்றடைத்த பந்தைப்போல நிமிடத்தில் வெளியே வந்து தன் முகம் காட்டியது.
காரணம் வேறொன்றுமில்லை… தமிழ் பட கிளைமாக்ஸில் எல்லாம் முடிந்த பிறகு கடைசி நேரத்தில் வரும் போலீஸார் போல அந்த பேருந்து உரிமையாளரின் மகன் பிரச்சினை செய்து கொண்டிருந்த போது கடைசி நேரத்தில் அறையை விட்டு வெளியே வந்து விட்டிருந்தாள் பவானி.
வந்ததே வந்தாள், எல்லாம் முடிந்த பிறகு வந்தாளா என்றால் அதுவும் இல்லை. சரியாக உங்களை ‘கதறவைக்குறேன் டா…’ என்று அவன் வீரவசனம் பேசிய அந்த தவறான நேரத்தில் அறையை விட்டு வெளியே வந்திருந்தாள்.
அவனின் பேச்சைக் கேட்டவளுக்கு ஏதோ பிரச்சினை என்று மட்டும் புரிந்தது. ஆனால் பேச்சின் சாராம்சம்  புரியவில்லை. அதிலும் கணவனின் எதிரில் நின்றுகொண்டிந்தவனின் முகத்தில் இரத்தம் வேறு.
வயிற்றில் பயப்பந்துகள் உருள,”என்னடி நடக்குது இங்க?” என்று வீட்டுக்குள்ளே வந்து கொண்டிருந்த தன் தங்கையைப் பார்த்து கேட்க 
நம் ஆர்வக்கோளாறோ நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் ஒப்புவித்தது தன் அக்காவிடம்…
அவ்வளவுதான்… பயம் என்னும் அரக்கன் தன் ராட்சஷக் கரங்கொண்டு பவானியை கண்சிமிட்டும் நேரத்துக்குள் வளைத்து விட்டான்.
வந்தவர்கள்  சென்றுவிட, பரணிதரன் அருகில் நின்ற தம்பியைப் பார்த்து,”பேசிட்டு இருக்கும்போதே ஏன்டா சட்டுன்னு கையை நீட்டுற” என்று கடிந்து கொள்ள
“அவன் உங்களைப் பார்த்து கையை நீட்டுவான், நான் பாத்துட்டு நிக்கணுமா ண்ணா” கோபத்தோடு வந்தது பதில்
இருவரும் பேசியபடியே உள்ளே வர, பாய்ந்து வந்து தன் கணவனை கட்டியணைத்திருந்தாள் பவானி. திகைத்துப் போனான் பரணிதரன்.
‘ஹையோ! பசங்களுக்கு முன்னால் என்ன இது?’ என்று கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும், நடந்ததை எல்லாம் பார்த்திருப்பாளோ என்ற எண்ணம் தோன்றி ஒருவித பயத்தையே தந்தது அவனுக்கு.
அவளோ கணவனின் இருகைகளுக்கிடையே தன்கைகளைவிட்டு பின்பக்கமாக தோளோடு அணைத்துக் கொண்டு அவன் இடது தோளில் தன் முகத்தை வைத்து,”நான் அப்பவே நான் சொன்னேன்ல…” என்று மெதுவாக அழுகையில் விசும்ப ஆரம்பித்தாள்.
நாளை சரஸ்வதி பூஜை என்பதால் பண்ணையில் வேலை செய்யும் சுப்பையாவின் மனைவி பூவம்மாவோடு சேர்ந்து பால் விற்பனை செய்யும் கடை, வீடு எல்லாம் துப்புரவு செய்து முடித்திருந்த கோதை நாயகி, தோட்டத்தின் பின்னே உள்ள நீரோடையில் குளித்து முடித்து  உள்ளே வர  கணவனின் தோளில் முகம் வைத்து விசும்பும் மருமகள் தான் முதலில் கண்ணில் பட்டாள்.
பரபரப்பாக மகனின் அருகில் வந்தவரின்,” என்னாச்சு ப்பா?” என்ற கேள்விக்கு மறுபடியும் அங்கு நடந்தவை இன்னொரு தடவை சொல்லப்பட்டது.
சொல்லப்பட்ட விஷயம் கொஞ்சம் மனச்சஞ்சலம் தரக்கூடியதாக இருந்தாலும் இப்போது மருமகளின் மனநிலையே முக்கியம் என்று கருதியவர், 
“ப்ச்ச்… பவானி இதுக்கு போயா இந்த அழுகை?” என்று லேசாக அலுத்துக் கொண்டதோடு, “குலைக்கிற நாய் கடிக்காது தெரியுமா உனக்கு?” என்று மருமகளிடம் கேள்வியும் கேட்டார். பின் அவரே
“அதுக்கு எடுத்துக்காட்டு கூட நம்ம அல்டர் தான்” என்றபடியே குமரனை நோக்கி லேசாக சிரித்தவர்,”நம்ம அல்டரையே எடுத்துக்கோ, பாக்குறதுக்கு டெரர் பீஸாட்டம் இருக்கும். ஆனால் யாரையுமே கடிக்காத டம்மிபீஸு அது. அதுபோலத்தான் அந்த பசங்களும்” என்று சொல்லி முடிக்க கொல்லென்ற சிரிப்பு சத்தம் அறையில் எழுந்தது.
பவானி கூட மாமியாரின் பேச்சில் லேசாக சிரிக்கத்தான் செய்தாள். நம் ஆர்வக்கோளாறோ அல்டரை ‘டம்மி பீஸு’ என்றதும் கொஞ்சம் அதிகமாகவே சிரித்தது.
அந்நேரம் நிலைமையை சகஜமாக்கிய அன்னை, மகனிடம் தனியாக கவனம் கூறவும் தவறவில்லை.
எல்லோருடனும் இருக்கும் வரை கொஞ்சம் தைரியமாக இருந்தது போலத் தோன்றியவள் இதோ அவர்களுக்கான
தனியிடத்தில் மீண்டும் பயத்தில் தவிக்கிறாள்.
மனைவியின் தவிப்பை கண்கொண்டு காண முடியாதவனாய்,”பவானி…” என்று மயிலிறகிலும் மென்மையான குரலில் அழைத்தான். கைகள் மனைவியின் நெற்றியை நீவி விட்டபடியே இருந்தது.
“ம்ம்…” சோர்வாக வந்தது பதில்.
“இது என் பவானி தானான்னு எனக்கே சந்தேகமா இருக்கு டா” என்றான் மெதுவாக
 ‘ஏன்?’ என்பது போல அவன் மார்பிலிருந்து தன் தலையைத் லேசாக நிமிர்த்தி அவள் பார்க்க…
“இல்ல… ரொம்ப சின்னவயசிலேயே தாய், தகப்பன் இரண்டு பேருமே  இல்லாமல், கையில இத்துணூன்டு தங்கச்சி யையும் வச்சிட்டு,  வயசான பாட்டித் துணையோட வாழ்க்கையை பார்த்து பயப்படாமல் சும்மா அசால்டா எதிர்நீச்சல் போட்டு இன்னைக்கு வாழ்க்கையில ஒரு நல்ல பொஸிஸனுக்கு வந்தவ நீ…” நிறுத்தி தன் மனைவியின் மன உறுதிக்கு பாராட்டுபத்திரம் அளிப்பது போல் அவள் முன் நெற்றியில் ஒரு முத்தம் வைத்தவன்
“ஆனால்… இன்னைக்கு எதைஎதையெல்லாமோ பார்த்து நீ பயப்படுறதைப் பார்த்தா என்னால நம்பமுடியலை டா… சமயத்துக்கு இது நம்ம பவானி தானான்னு சந்தேகம் கூட வருது எனக்கு” என்றவனின் பேச்சில் தன் சிறுவயது வாழ்க்கை மனக்கண் முன்னே உலாப்போக, கம்மியக் குரலில்
“அதனால தான் நான் பயப்படுறேன் பா… எங்களை மாதிரி நம்ம பிள்ளைக்கும்…நம்ம பிள்ளைக்கும்…” என்றவள் அதற்கு மேல் பேசமுடியாமல்  தழுதழுக்க…
 அவள் சொல்ல வருவது புரிந்தவனாய் அவளை தன்னோடு சேர்த்தணைத்தவன்,” வாழ்க்கைல பயம் இருக்கலாம். ஆனால் பயமே வாழ்க்கையா இருக்கக்கூடாது கண்ணம்மா…” என்றவன்
“நாம ரெண்டு பேரும் நூறு வருஷம் ஒன்னா இருந்து நம்ம பிள்ளைங்க, பேரன், பேத்தி, பூட்டன், பூட்டி எல்லாம் பாத்துட்டு தான் போவோம்…” என்றான் அவள் மனக்கலக்கத்தை போக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு 
“நடக்குமா…? அது நடக்குமா…? ஏன்னா எங்கம்மா கூட பவி பொறந்த ஒன்றரை வயசுல போய்சேர்ந்துட்டாங்க பரணி…” என்றவள்,”அதுபோல நானும்…” என்று கூறி முடிக்காமல் கதறியழ…
பதறிப்போய் விட்டான் பரணிதரன்.”ஹேய்…என்ன பேசுற நீ…ஹாங்” என்று அதட்டியவன்,”நல்லதையே நினை…நல்லதே நடக்கும்…அதைவிட்டுட்டு கண்டதையும் பேசாதே” என்று கணவனாக அதட்டியவனின் குரலும் பதட்டத்தில் குளித்திருந்தது.
அம்மாடி! என்ன மாதிரியான வார்த்தைகள் அவை…கேட்டவனுக்கு உலகமே ஒரு வினாடி நின்று அதன் பிறகே சுழன்றது. “எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் ஆண்டவா…” என்று ஆண்டவனிடம் அவசரமாக ஒரு வேண்டுதலையும்  வைத்தான்.
அன்னை மறைந்த அன்று அவளுக்கு அழத்தெரியாத வயதோ என்னவோ? அதன் பிறகு குருவி தலையில் பனங்காயாய் பொறுப்புகள். 
இன்றோ தன்னை ஆதரவாக அணைக்க தன் கணவனின் அன்புக்கரங்கள் இருக்க என்றைக்கோ நடந்த பெற்றோரின் இழப்புக்காக இன்று கதறினாள் அந்த பேதை.
மனப்பாரம் தீர கொஞ்ச நேரம் அழட்டும் என்று விட்டவனின் கைகள் ஆதரவாக மனைவியின் முதுகை தடவிக் கொடுத்தது. சிறிது நேரத்தில்அழுகை கொஞ்சம் மட்டுப்பட்டு விசும்பலாக மாற,
” பவானி! நீ இப்படி அழுகுனியா இருந்தால் பிறக்கப்போற நம்ம பிள்ளையும் எதுக்கெடுத்தாலும் உன்னை மாதிரியே அழத்தான் செய்யும். அதற்காகவாவது கொஞ்சம் சிரிம்மா…” என்று அவளை கிண்டலடிக்க
அழுததால் தன் மனபாரம்  குறைந்ததாலோ என்னவோ, “அதெல்லாம் நல்லா சிரிச்சாப்ல தான் நம்ம புள்ள பிறக்கும், பயப்படாதீங்க…” என்று பதில் சொல்ல முடிந்தது பவானியால்…
சிறிது நேரத்தில் நிம்மதியாக பவானி உறங்கிவிட …
அவள் இறக்கி வைத்த பாரத்தின் கனம் தாங்கமுடியாமல் மனைவியின் முகத்தையே பார்த்திருந்தான் பரணிதரன்.
***************
காலையில் பவானி கண்விழிக்கையில் பக்கத்தில் கணவன் இல்லை. கண்கள் தன்னிச்சையாக கட்டிலுக்கு எதிரே சுவரில் கிடந்த கடிகாரத்தை பார்க்க அதுவோ மணி எட்டு என்றது.
‘இவ்வளவு நேரமா தூங்கியிருக்கோம்!’ நினைத்தபடியே கட்டிலை விட்டு  இறங்க முயல, தலை கிர்ரென்று சுற்றியது.
ஆனால் மனமோ கணவனை உடனே காணவேண்டும் என்று அவளை உந்திதள்ள தலைசுற்றலை பின்னுக்குத் தள்ளியவள் மெதுவாக எழுந்து குளியலறை சென்று குளித்து முடித்து வெளியே வந்தாள்.
காற்றில்  கலந்து வந்த சாம்பிராணி வாசனை இன்று சரஸ்வதி பூஜை என்பதை ஞாபகப்படுத்த, நல்லதாக புடவை ஒன்றை எடுத்து உடுத்தி கொண்டு கீழே இறங்கினாள்.
கீழே வந்தவளின் கண்களோ நலாபுறமும் கணவனைத் தேடியே வட்டமிட்டது. கணவன் உட்பட அனைவருமே வீட்டின் சிட்அவுட்டில் நின்று கொண்டிருப்பது தெரிய ‘தாயைக் கண்ட கன்று போல மனம் துள்ள’ கால்களை சற்றே எட்டிப்போட்டு அவனருகில் சென்று அவன் கைகளோடு தன் கைகளை கோர்த்தபடி முற்றத்தைப் பார்க்க  
அங்கே ‘மிஸ்ட் வயிட் கலர் மகேந்திரா ஸ்கார்பியோ’ ஒன்று சந்தனம் குங்குமத்தோடு மாலையணிவித்து ஜம்மென்று வீட்டு முற்றத்தை நிறைத்தபடி நின்றது. அதைத்தான் எல்லோரும் பார்வையிட்டபடி நின்றிருந்தார்கள்.
செகண்ட்ஹேண்ட் வண்டிதான். ஆனால் சமீபத்திய மாடல், நியாயமான விலையில் கிடைக்கவே வாங்கியிருந்தான் பரணிதரன். 
புதுவண்டி வாங்குவதற்கான நேரம் இதுவல்ல என்று பரணிக்கு தோன்றியதாலேயே வாங்கவில்லையேத் தவிர, வாங்க முடியாமல் இல்லை. 
ட்ரைவர் வேலுவிற்கு தெரிந்தவர்களின் வண்டி தான். அதனால் அவரே காலையில் கொண்டு வந்து விட்டுச் சென்றிருக்க, குமரனும், மதியழகனும் வண்டியை கோயிலுக்கு கொண்டு சென்று  பூஜை முடித்து கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள்.
குமரன் கல்லூரி விடுமுறை நாட்களில் ட்ரைவிங் ஸ்கூலில் சேர்ந்து முறையாக ஓட்டுநர் பயிற்சி எடுத்திருந்ததோடு அக்கா வீட்டின் சின்னக்காரை அடிக்கடி எடுத்து ஓட்டியும் பழக்கமாதலால்  அவனை நம்பி வண்டியை எடுக்கச் சொன்னான் பரணி. அதில் அந்த தம்பிக்கு அவ்வளவு சந்தோஷம்.

Advertisement