Advertisement

“ஹேய்…கூல்…பவானி! எதுக்கு இப்போ பதறுற? சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன் மா… இதுக்கு போய் இப்படி பதறுற?” என்று கணவன் அவளை அமைதிப்படுத்த
“எதுல விளையாடுறதுன்னு இல்லையாங்க? அத்த என்னல்ல தப்பா எடுத்துப்பாங்க” என்றாள் சின்னதாகிப்போன குரலில்…  
ஒரு ஏழு மணி வாக்கில் இரவு சமையலுக்கு கோதை நாயகி வேலைகளை ஆரம்பிக்க, ஹாலில் நந்தினியுடன் உட்கார்ந்து அவ்வப்போது ஏதோ சொல்லி கலகலத்தபடியே, படித்துக்கொண்டிருந்த பவித்ரா விடம்,”பவித்ரா! அத்தைக்கு போய்  கொஞ்சம் ஹெல்ப் பண்ணு” என்று பவானி சொல்ல
அக்காவின் வார்த்தைக்கு  மறுவார்த்தை சொல்லாமல் மடியிலிருந்த புத்தகத்தை கீழே வைத்துவிட்டு  எழும்பி சென்ற பவித்ராவை பார்க்கும் போதே பரணிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது பவானி மீது.
“பவித்ரா…நீ போய் படிமா. நான் ஹெல்ப் பண்ணுறேன் உன் அத்தம்மாவுக்கு” என்று சொல்லி அவளை அனுப்பி வைத்தவன், சமையலறைக்குள் நுழைய, அண்ணன் பின்னாடியே தம்பியும் போய் நின்றான்.
“நீ எங்கடா இங்க? நீயும் போய் படிக்குற வேலையை கவனி போ…” என்று அண்ணனாய் தம்பியை விரட்ட, அவனோ “இல்லண்ணா… இன்னைக்கு கோதை ம்மாக்கு ரெஸ்ட் குடுத்துடுவோம். அதோட நாம சமைச்சு அண்ணி சாப்பிட்டதே இல்லல்ல… இன்னைக்கு அந்த குறையையும் தீர்த்துடுவோம்” என்று சொல்லி சூழ்நிலையை சற்றே கலகலப்பாக்கினான்.
அண்ணன் தம்பியின் கைபக்குவத்தில் அன்று சப்பாத்தி, வெஜ்குருமா இரவுணவாக, சிறிசுகள் கலகலப்போடு வழக்கத்துக்கு மாறாக அதிகமாகவே உண்டனர் என்றால் பவானியோ தவறு செய்து விட்டு முழிக்கும் சிறுகுழந்தை போல்  உட்கார்ந்து இருந்தாள்.
அன்றிரவு தனிமையில் தங்களது அறையில் ,”ஏன் பவானி இப்படியெல்லாம் நடந்துக்குற?” என்று கணவன் ஆற்றாமையில் கேட்கும் போது,”தெரியலையே…ஏன்னு எனக்கேத் தெரியலையே…” என்று உதடுபிதுங்க தன்னைக் கட்டிக்கொண்டு அழும் மனைவியை  குழப்பத்தோடு பார்த்தான் பரணிதரன்.
மறுநாள் காலை வழக்கம் போல் அனைவரும் கிளம்பி சென்றிருக்க ஒரு பதினோரு மணி வாக்கில் பவானி ஓய்வெடுக்கும் அறைக்குள் நுழைந்தார் கோதை நாயகி.
தூங்காது விட்டத்தையே பார்த்தபடி படுத்திருந்த மருமகளை எழுப்பி, கொண்டு வந்திருந்த ஜுஸை அவள் கையில் கொடுத்தபடி கட்டிலில் பவானிக்கு எதிர்ப்புறமாக அமர்ந்தார் கோதை.
மெதுவாக ஜுஸை குடித்து முடித்தவள் தம்ளரை தன் கைகளுக்கிடையே வைத்து உருட்டியபடியே இருந்தாள். கண்களோ கோதை நாயகியின் கண்களை சந்திக்க மறுத்து தன் கையிலிருந்த காலி தம்ளரிலேயே பதிந்திருந்தது.
லேசாக தொண்டையைச் செருமிக்கொண்ட கோதை நாயகி,”எங்க கூட ஒரே வீட்ல இருக்கப் பிடிக்காமல் பரணியைக் கூட்டிட்டு தனிக்குடித்தனம் ஏதும் போகலாம்னு நினைக்குறியா பவானி?” சுற்றிவளைக்காமல் நேரடியாக கேள்வி வந்தது கோதை நாயகியிடமிருந்து.
கைகளிடையே தம்ளரை உருட்டுவதை சட்டென்று  நிறுத்திய பவானி,”ஐயையோ! அப்படி எல்லாம் இல்லத்த” என்றாள் சட்டென்று கோதைநாயகியை நிமிர்ந்து பார்த்து. குரலில் இருந்த மிதமிஞ்சிய பதட்டமே அவளுக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை என்பதை அப்பட்டமாகச் சொன்னது.
“அப்போ என்ன தான் உன் பிரச்சினை? சொன்னா தானே தெரியும் பவானி” என்றார் கோதை மென்மையாக. குரல் ஒரு சிறு குழந்தையை கையாளும் லாவகத்துடன் வந்தது.
பதில் ஏதும் சொல்லாமல் தன் கைவிரல் நகங்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தவளின் கையிலிருந்த தம்ளரை வாங்கி அருகிலிருந்த சிறிய டேபிளில் வைத்தவர்,
“மூடிய கதவுக்கு பின்னே என்ன  இருக்குதுன்னு திறந்து பார்க்காமல் பயந்து பயந்து வாழுறதைவிட, தைரியமா அதுக்குள்ள என்னதான் இருக்குதுன்னு திறந்து பார்த்துடறது நல்லது இல்லியா பவானி… அப்படி தான் உன்னோட குழப்பத்தை உனக்குள்ளே மறைத்து வைத்து தேவையில்லாமல் நீ வருத்தப்படுறதை விட, எங்கிட்ட மனசுவிட்டுச் சொல்லு…என்னால ஏதும் பண்ணமுடியுமான்னு நான் பார்க்குறேன்” என்றார் உண்மையான அக்கறையோடு.
யோசித்து பார்க்கும் போது பவானிக்கும் கோதை நாயகி சொல்வது சரியென்று பட, தன் மனகுழப்பங்களையும் அவரிடம் சொன்னால்தான் என்ன என்று தோன்றியது.
“இல்லத்த… நான் வேலை ஏதும் செய்யாமல் சும்மா உக்கார்ந்திருக்கிறேன். ஆனால் நீங்க இந்த வயசான காலத்துல எனக்கும் சேர்த்து வேலை செய்யுறதை பார்க்கும் போது ரொம்பவே மனசுக்கு உறுத்தலா இருக்கு. காணாதகுறைக்கு பவித்ராவுக்கும் எல்லாம் பண்ணுறீங்க…என்னால் தானே உங்களுக்கு இந்த அதிகப்படியான வேலையெல்லாம் ன்னு நினைக்கும் போது கஷ்டமா இருக்கு… உங்க வேலையை நான் கொஞ்சமாவது ஷேர் பண்ணிக்கலாம்னா என்னால முடியவே இல்லை…” மெதுவாக சொல்லிமுடித்தவளின் குரலில் இயலாமையின் வலி தெரிந்தது.
‘இப்படி ஒரு குழப்பமா இந்த பெண்ணுக்குள்?’ என்று அதிர்ந்து போனார் கோதை நாயகி. இதை இப்படியே வளரவிடுவது அவளது மனநிலைக்கும், தங்களது குடும்ப அமைதிக்கும் நல்லதல்ல என்று எண்ணியது அவரது அனுபவமிக்க அறிவு. 
பவானியின் மன குழப்பத்திற்கு இந்த இடத்திலேயே மூடுவிழா நடத்திவிட வேண்டும் என்ற முடிவோடு சற்றே பவானியிடம் நெருங்கி அமர்ந்து தோழமையுடன் அவள் கைகளை பற்றியபடி,”பவானி! நாம எல்லாரும் ஒரு குடும்பம். எல்லாரும்னா பவித்ராவும் சேர்ந்தது தான். இதுல உனக்கு எதுவும் சந்தேகம் இருக்கா?” புரியாத பாடத்தை எளிதாக புரியவைக்க முயற்சிக்கும் ஆசிரியரின் இலாவகம் இப்போது கோதை நாயகியிடம்.
“சந்தேகம் இல்லை” என்னும் விதமாக இடவலமாக ஆடியது பவானியின் தலை. அதை பார்த்து புன்னகைத்தபடியே கோதை நாயகி மேலும் தொடர்ந்தார் 
“குடும்பத்துல உறவுகள்னு சொல்லிட்டு ஆளாளுக்கு எதுக்கு இருக்கிறோம்னு நினைக்கிற? மனுஷன் சோர்ந்து போற நேரத்துல ஒருத்தொருக்கொருத்தர்,அன்பாகவும், அனுசரணையாகவும் இருக்கத்தான். இன்னைக்கு உனக்கு முடியலைன்னா நான் பார்த்துக்குவேன். நாளைக்கே எனக்கு ஒன்னுன்னா நீ என்னை கவனிச்சுக்குவ…” 
சற்றே நிறுத்தியவர் மெலிதாக சிரித்தபடியே,”ஒருவேளை இந்த கிழவியை நான் எதுக்கு பாத்துக்கணும்னு நினைத்து முடியாதுன்னு நீ சொல்லிடுவியோ?” கேட்டவரின் குரலில் குறும்பு கூத்தாடியது.
விழி மூடாமல் கோதையின் கீதையைக் கேட்டுக்கொண்டிருந்த பவானி,”ஹையோ! உங்களைப் பாத்துக்குறது என்னோட கடமை அத்த” என்றாள் வேகவேகமாக
அவள் பதிலில் மெலிதாக சிரித்தவர், “பாத்தியா…அப்பக்கூட கடமைக்கு தான் என்னைப் பார்ப்பேன் ங்குற, பாசத்தால இல்லைல. அந்த பாசத்தை என்மேல உனக்கு வரவைக்கத் தான் நான் இப்போ உன்னை விழுந்து விழுந்து கவனிச்சுக்கறேன்னு  வேணும்னா வச்சுக்கோயேன்” என்றவர், இல்லன்னா
“என்னோட வயசுபோன காலத்துல நீ என்னை கவனிச்சுக்குறதுக்காக, இன்னைக்கே நான் உன்னை காக்கா புடிக்கிறேன்னு கூட வச்சிக்கிடலாம் பவானி” என்றார் வாய்கொள்ளா சிரிப்போடு. 
ஒருவருக்கொருவர் உதவி செய்யத்தான் உறவு. உறவுகளிடமிருந்து உதவிகளை ஏற்றுக்கொள்ள எந்தவித குழப்பமோ தயக்கமோ வேண்டாம் என்பதை மிக எளிதாக சிரிக்கச் சிரிக்கப் பேசியே பவானியின் மனதில் பதிய வைத்தார் கோதை நாயகி.
தன் பேச்சால் மருமகளின் முகத்தில் ஒரு தெளிவு தோன்றவும்,”பவானி குமரன் மேல இன்னும் உனக்கு கோபம் இருக்கா? என்றார் மெல்லிய குரலில். 
ஒரு அன்னையாக, இந்த குடும்பத்தின் தலைவியாக அவருக்கு எல்லா பிரச்சினைகளையும் இத்தோடு தீர்த்து விட வேண்டும் என்ற ஆவல் உந்தித்தள்ளவே, தயங்காது பவானியிடம் கேட்டுவிட்டார்.
ஆனால் இந்த கேள்விக்கு ஏனோ உடனடியாக பவானியால் பதில் சொல்லமுடியவில்லை. சிறிது நேரம் யோசித்தபடியே இருந்தவள்,”உண்மையை சொல்லணும்னா நீங்க உள்ள வந்த நிமிஷம் கூட எனக்கு குமரன் மேல கோபம் இருந்தது நிஜம் தான் அத்த… ஆனால் இப்போ…” என்று சற்றே வார்த்தையை இழுக்க
“இப்போ…” என்று எடுத்துக் கொடுத்தார் பரபரப்பாக கோதை நாயகி.
“இப்போ…பசங்களுக்குள்ள வர்ற பிரச்சினையை பூதக்கண்ணாடி கொண்டு பெரியவங்க பார்க்க ஆரம்பிச்சா வீட்டோட நிம்மதி போய்டும்னு எனக்கு தெளிவா புரியுது. அதனால எனக்கு இப்போ குமரன் மேல  எந்த கோபமும் இல்லை.” என்றவள்
“ஆனால்… இனி எதாவது பிரச்சினையை இரண்டு பேரும் இழுத்துட்டு வந்து நின்னா இரண்டு பேரையும் உங்களை மாதிரி கொஞ்சிகிட்டெல்லாம் இருக்கமாட்டேன், அதையும் சொல்லிட்டேன்” என்றவள் தன் கையை அடிப்பது போல் பாவனைகாட்ட
பவானியின் பாவனையில் வாய்விட்டு சிரித்தார் கோதை நாயகி.
***********
மேலும் இரண்டு நாட்கள் போயிருக்க, வேலை முடிந்து வந்த பரணிதரன் இரண்டு நாட்களாக மலர்ந்த முகமாக இருக்கும் மனைவியை காண்பதற்காக  பவானியின் ஓய்வறையை நாடிச் சென்றான்.  அங்கு பெண்ணவளோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரம் அப்படியே பார்த்து கொண்டு நின்றவன் தானே விழித்துக்கொள்ளட்டும் என்று எண்ணி கதவை மெதுவாக இழுத்து சாத்த, சரியாக அந்நேரம் சர்ரென்று வீட்டு முன்வந்து நின்றது ஒரு டொயோட்டா ஃபார்ஜுனர்.
அதிலிருந்து நான்கைந்து பேர் பொலபொலவென்று உதிர்ந்தார்கள். அவர்களுக்கு தலைவன் போல இருந்த வாலிபன் ஒருவன்,”யாருடா அது? அந்த அப்ப்பா…டக்கர் ஆப்பீஸர்…பரணீதரன்…” என்று நக்கலாக இறைந்தான்.
வீட்டின் முன் கார் வந்து நிற்கவுமே யாரென்று உற்றுப்  பார்த்த பரணி, வந்தவன் தன் பெயரைச் சொல்லி ஏலம் போடவும் முன் வாசலை நோக்கி நகர்ந்தான். போகும் முன் கண்கள் மனைவி படுத்திருக்கும் அறையை எச்சரிக்கையோடு ஒருபார்வை பார்த்தது.
வந்தது வேறுயாருமல்ல பரணிதரனால் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் பிடித்து கொடுக்கப்பட்ட பேருந்து உரிமையாளரின் மகன் தான்.
பக்காவாக சாட்சி இருந்தபடியால் தலைகீழாக நின்றும் அவனால் தன் தந்தையை ஜாமீனில் எடுக்க முடியவில்லை. அந்த கோபத்தை தான்  இங்கு வந்து இப்படி காண்பிக்கிறான்.
 விறுவிறுவென்று தன் வேகமான நடையால் பரணிதரன்   வீட்டுக்கு வெளியே வந்து நிற்க, இவன் தான் பரணிதரன் என்று கைகாட்டியது ஒரு கைத்தடி.
“ஓ…நீ தான் அந்த அப்பாடக்கரா?” கிண்டலாகச் சிரித்தபடியே,” நீ ஒருத்தன் லஞ்சம் வாங்கலைன்ன உடனே அப்ப்டியே…நம்ம நாடு திருந்திடப் போகுது பாரு!” என்று நக்கலடித்தவன்,
“எங்கப்பாவையே வசமா ஏமாத்தி மாட்டிவச்சிட்டல்ல, உன்னை என்ன பண்ணுறேன் பாரு… என்று மிரட்டியபடியே கையை ஓங்கியபடி வர,
ஓங்கிய கையை அனாயசமாக பிடித்து வளைத்த பரணிதரன்,”இப்பவும் ஒரு ஃபோன் போதும் எனக்கு. உங்களை எல்லாம் அப்படியே அள்ளி உள்ள வைக்க என்னால முடியும். ஆனால் வேணாம்னு பாக்குறேன். மரியாதையா இடத்தை காலி பண்ணுங்க” அமர்த்தலான குரலில்  சொல்லி முடிக்க 
கல்லூரி விட்டு வந்து தன் அறையில் நின்றிருந்த குமரன் சத்தம் கேட்டு  வாசலுக்கு ஓடிவந்தவன் தன் அண்ணனை பார்த்து கை ஓங்கியவனின் முகத்திலேயே நச்சென்று ஒரு குத்துவிட்டிருந்தான். விட்ட குத்தில் மூக்கு உடைந்து இரத்தம் வந்தது.
குமரனுக்கு பின்னாலேயே வாசலுக்கு ஓடிவந்திருந்த பவித்ரா  நிஜசண்டையைப் பார்க்கும் ஆர்வக்கோளாறில் வாசலில் நின்று உற்று உற்று பார்க்க அவளோடு நந்தினியும் சேர்ந்து கொண்டாள்.
தன்னிடம் அடிவாங்கியவனின் பார்வை தன்னைத் தாண்டி பின்னே செல்வதைக் கண்ட குமரன் திரும்பி பார்க்க, குமரன் எப்போது அடுத்த குத்து குத்துவான் என்ற எதிர்பார்ப்பில் சுற்றுப்புறம் மறந்து ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.
சூழ்நிலை தெரியாமல் கண்ணை விரித்து கொண்டு நின்றவளைப் பார்த்து,”கொஞ்சம் உள்ளப்போறியா…” என்று பல்லைக்கடித்துக் கொண்டு அடிக்குரலில் குமரன் சொல்ல…
அவன் சொன்ன தொனியில் கொஞ்சம் பயம் ஏற்பட்டிருக்க அதைக் காட்டிக்கொள்ளாமல் அவனைப் பார்த்து உதட்டை அப்படியும் இப்படியும் கோணியபடியே நந்தினியை இழுத்துக்கொண்டு உள்ளே சென்றது அந்த ஆர்வக்கோளாறு.
அடிவாங்கியவன் நிமிடத்தில் தன் திட்டத்தை வகுத்தபடியே,”ஏய் ஆஃபீஸர்! உன் தம்பியை வச்சு என்னை அடிச்சிட்டல்ல…உங்கள கதறவைக்கல…கதறவைக்கிறேன் டா” என்று கத்தியபடியே  நிமிடத்தில் காரில் ஏறி பறந்திருந்தான்.
மிகவிரைவிலேயே பகைவனுக்கு மட்டும் பச்சாதாபம் காட்டவேக் கூடாது என்ற பாடத்தை பரணிதரனுக்கு படிப்பித்திருந்தான் அந்த பேருந்து உரிமையாளரின் மகன்…
  

Advertisement