Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 11.
“சிட்அவுட்ல சிட்டுக் குருவி கூடு கட்டியிருக்கு பார்த்தியா கோத…” 
பால் விற்பனை முடிந்து ஒரு பத்து மணிக்கு போல் வந்த மதியழகன், வீட்டுக்கு முன்பக்கத்தில் நின்ற மரங்களிலிருந்து விழுந்து கிடந்த இலைச்சருகுகளை பெருக்கிக் கொண்டிருந்த தன் மனைவியைப் பார்த்து கேட்டார். 
“ம்ம்…பார்த்தேன் ங்க…இப்ப இரண்டுமூனு நாளைக்கு முன்னாடி பாக்கும் போது கூட இல்லீங்களே! அதற்கிடையில் எவ்வளவு வேகமா கட்டியிருக்கு பாருங்களேன்…” என்று குருவியின் சுறுசுறுப்பை சிலாகித்தார் கோதை.
முகத்தில் மெல்லிய சிரிப்போடு”ஆமாம்… நானும் இன்னைக்கு தான் கவனிச்சேன்”  என்றவர், “அது இடத்தை அழுக்காக்கி போடுதுன்னு கூட்டை பிரிச்சிடாத கோத, இருந்துட்டு போகட்டும்” என்றார் தன் மனைவியிடம்.
“நான் ஏங்க கலைக்கப்போறேன்? இவ்வளவு மரம்,செடி, கொடி ன்னு வீட்டை சுத்தி நிக்கயில இந்த இடம் தான் அதுக்கு பாதுகாப்பா இருக்கும்னு நினைச்சு தானே இங்க வந்து கூடு கட்டியிருக்கு. அதோட நம்பிக்கையை நான் ஏங்க குலைக்க போறேன்” என்றார் கோதை தன் கையிலிருந்த பெருக்குமாறின் முடிச்சை இறுக்கியபடியே.
“அதுவுமில்லாமல், நம்ம பவானி வேற வாயும் வயுறுமா இருக்குறா, இந்த நேரத்தில் போய் நான் அப்படி செய்வனா?” என்ற கோதை நாயகி,”பவானி! நீ பார்த்தியா அந்த குருவிக்கூட்டை?” என்று சற்றே தலையை சாய்த்து சத்தமாகக் கேட்க, 
கோதை நாயகியின் கேள்வியில் சிறிது தள்ளி அடர்ந்த செம்பருத்தி செடிக்கு மறுபுறமாக நின்று கொண்டிருந்த பவானி இங்கு எட்டிபார்த்தவாறே,”இல்ல த்த” என்றாள். அவள் வலது கையில் இருந்த சிறிய ஹோஸ் பைப்பிலிருந்து தண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.
பவானிக்கு காலை நேரத்தில் வாந்தியும், தலைசுற்றலும் அதிகமாக இருந்ததால் மருத்துவரின் ஆலோசனைப்படி கடந்த பதினைந்து நாட்களாக விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் தான் இருக்கிறாள்.
காலையில் படுபயங்கரமாக அவளை வாட்டியெடுக்கும் வாந்தியும் தலைசுற்றலும் நேரமாக ஆக கொஞ்சம் மட்டுப் படும்.
சோர்ந்து போய் வீட்டுக்குள்ளே அடைந்து கிடந்த பவானியை திவ்யா தான்,”கொஞ்சம் காத்தாட வெளிய வா பவானி. அப்பதான் உடம்புக்கும்,மனசுக்கும் நல்லாயிருக்கும்” என்று சொல்லி நாலைந்து நாட்களுக்கு முன்னால் கைப்பிடியாக வீட்டுக்கு வெளியே அழைத்து வந்திருந்தாள்.
வீட்டினுள் இருந்து கொண்டு எதையெதையோ எண்ணி மனதைக் குழப்பிக் கொள்வதை விட இப்படி கொஞ்ச நேரம் வந்து செடிகளுக்கு தண்ணீர் விட்டபடியே இயற்கை காற்றை சுவாசித்தபடி நிற்பது மனதிற்கு இதமளிக்கவே அதையே தினமும் வழக்கமாக்கியும் கொண்டாள் பவானி.
பவானியை இங்கு எதிர்பாராத மதியழகன்,”ஓ…மருமகப்பிள்ளையும் இங்க தான் நிக்குதா!” என்றவர்,”அம்மணி! ரெஸ்ட் எடுக்காமல் இங்க என்ன பண்ணுறீங்க”என்று கேட்க
“கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு தான் செடிக்கு தண்ணி பாய்ச்சிகிட்டு இருக்கேன் மாமா,” என்றவளின் முகம் சோர்வில் வெளிறிப்போய் கிடந்தது. 
“சரிம்மா… சரிம்மா… பூச்சிபொட்டு எதுவும் கடிச்சிடக் கூடாது. கொஞ்சம் பார்த்து  நிக்கணும்” என்று மருமகளுக்கு கவனம் சொல்லியவர், 
“கோத! நம்ம செவல இன்னைக்கு கன்னு போடும்னு நினைக்கிறேன். சுப்பையாவை அங்க காவலுக்கு விட்டுட்டு தான் நான் இங்கயே வந்தேன். சீக்கிரம் ஒரு கப் காஃபி குடுத்தியனா குடிச்சிட்டு வெரசா பண்ணைக்கு போவேன்” என்று அவரின் தேவையைச் மனைவியிடம் சொல்லியபடியே வீட்டுக்குள் போனார்.
“இதோ வந்துட்டேன்ங்க…” என்றவாறே அவசர அவசரமாக பவானியின் கையிலிருந்த ஹோஸ்பைப்பில் தன் கைகளைக் கழுவிய கோதை,”நீயும் வர்றியா பவானி, ஜுஸ் குடிக்கலாம்” என்று கேட்க
“இன்னும் இரண்டு செடிதான் பாக்கி. தண்ணி விட்டுட்டே வர்றேன். நீங்க போய் மாமாவுக்கு காஃபி குடுங்க அத்த” என்றாள் பவானி.
சொன்னபடி தண்ணீர் பாய்த்து முடித்து, கை,கால் முகம் கழுவி வீட்டின் சிட் அவுட் ற்க்கு வந்தவள், சிட்அவுட் ன் மேற்கூரையில் இருந்து  இரும்பு சங்கிலியால் கட்டி தொங்கவிடப் பட்டிருக்கும் கூடை போன்ற அமைப்பில் இருந்த பிரம்பு ஊஞ்சலில் உட்கார்ந்தாள். 
கண்கள் சிட்டுக்குருவியின் கூட்டைத் தேடி சிட்அவுட்டின் மேற்பரப்பை உற்றுநோக்கின
பரணிதரன் வீட்டை மாற்றியமைத்து கட்டும்போது,  கேரளபாணியில்  மரவேலைப்பாடோடு கண்ணைக் கவரும் வண்ணம் சிட்அவுட்டை அமைத்திருந்தான்.
அந்த மரவேலைப்பாடுகளுக்கு இடையே இருந்த இடைவெளியில் துரும்புகளையும்
இலைக் காம்புகளையும் கொண்டு நேர்த்தியாக கட்டியிருந்தது குருவி தன் கூட்டை.
ஊஞ்சலில் சாய்ந்து அமர்ந்தவள் ஆர்வமாக கூட்டை பார்த்துக் கொண்டிருக்கும் போதே கீச்கீச் என்ற சத்தத்தோடு விருட்டென்று குருவி ஒன்று தன்அலகில் சிறு துரும்போடு பறந்து வந்தது.
இப்போது இன்னும் ஆர்வமாக பார்க்கத் தொடங்கினாள் பவானி. வந்த குருவி பரபரப்பாக கூட்டினுள் உட்கார்வதும், பின் படபடவென்று ரெக்கையை அடித்து கொண்டு வெளியே வந்து உட்காருவதுமாக இருந்தது. 
சற்று நேரத்துக்கெல்லாம் விர்ரென்று இன்னொரு குருவி பறந்து வந்து ஏற்கனவே அங்கு இருந்த குருவியின் அருகில் உட்கார்ந்தது. அதன் அலகில் ஏதோ ஒரு பறவையின் மென்மையான இறகு இருந்தது. அதைப் பார்த்த பவானி
“ஓ…ஐயா தான் ஹீரோவோ? தன்னோட ஹீரோயினுக்காக என்ன சொகுசெல்லாம் செய்துகுடுக்குறார் ப்பா” என்று எண்ணமிட்டவளின் மனதிற்குள், கதகதப்பான தன் மார்பில் தன்னைத் தாங்கிக்கொள்ளும்  கணவனின் நினைவு தானாகவே  வந்து போனது. 
இப்போது இறகை கொண்டு கூட்டினுள் வைத்து வந்த குருவி தன் இணையின் மூக்கை தன் மூக்கால் உரசியபடி கீச்கீச் என்று சிறகைத்தட்டி சத்தமிட…
பவானியின் மனமோ,’ஆஹா! சரியான காரியக்காரன் தான் டா நீ’ என்று பாராட்டுபத்திரம் வழங்கியது அந்த குருவிக்கு.
தங்களின் காதல் லீலைகளை கண்ணெடுக்காமல் ஒருத்தி  பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று அந்த புள்ளினங்களுக்கு புரிந்து வெட்கம் வந்ததுவோ என்னவோ! கண்சிமிட்டும் நேரத்தில் இரண்டும் விர்ரென்று பறந்து காற்று வெளியில் மறைந்து போயின.
மேலும் சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தவள், கொஞ்சம் சோர்வாகத் தோன்றவே எழும்ப நினைக்க,”பவானி!
இதக் குடிச்சிக்கோ” என்று ஜுஸ் தம்ளரை நீட்டினார் கோதை.
 
“ஐயோ! கூப்பிட்டிருந்தால் நானே வந்திருப்பனே? நீங்க ஏன் வீணா அலையுறீங்க அத்த” என்றவள் அவசரமாக ஊஞ்சலில் இருந்து எழும்பி ஜுஸை வாங்க முற்பட
“என்னமோ… நான் வாத்தியார் மாதிரியும் நீ என்கிட்ட படிக்கிற புள்ள மாதிரியும் எதுக்கு உனக்கு இந்த டென்ஷன்” என்றவாறே பவானியின் தோளைப்பிடித்து ஊஞ்சலில் அமரவைத்து ஜுஸை கொடுத்து குடிக்கச் சொன்னவர், தன் கைகளை சேலை முந்தானையில் துடைத்தபடியே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தார்.
தான் வேலை ஏதும் செய்யாமல் சும்மா இருக்க அவர் தனக்கு பார்த்துப் பார்த்து செய்யும் யாவையும் ஏற்றுக்கொள்ள சங்கோஜமாக இருந்தது பெண்ணிற்கு.
ஒருவேலையும் செய்யாமல் சட்டமாக உட்கார்ந்து அம்மா கையால் வாங்கி சாப்பிடுவதற்கும் மாமியாரிடம் வாங்கிச் சாப்பிடுவதற்கும் வித்தியாசம் உண்டு தானே!
அதிலும் தனக்கு மட்டுமல்லாமல் தன் தங்கைக்கும் சேர்த்து எல்லாம் செய்கிறாரே…என்ற எண்ணம் எழுந்து ஒருவிதமான அலைப்புறுதலை உண்டாக்கியது அவளுக்கு.
ஒருவேளை குமரனுக்கும் பவித்ராவிற்குமிடையே நடந்த விஷயங்கள் பவானிக்கு தெரியாமல் இருந்திருந்தால் இந்த குழப்பங்கள் பவானிக்கு வந்திருக்குமோ? என்னவோ? தெரியவில்லை
அந்த அலைப்புறுதலால் அவள் கோதை நாயகி க்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து விடவேண்டும் என்று நினைத்தாலும் அவள் உடல்நிலை அவளுக்கு ஒத்துழைக்க மறுத்தது.
சமையலறைக்குள் நுழைந்தாலே அந்த தாளிப்பு வாசனை, சோறு கொதிக்கும் வாசனை எல்லாம் அவளுக்கு ஒத்துக்கொள்ளுவதே இல்லை.
ஜுஸை குடித்து முடித்து, தம்ளரைக்
கையிலெடுத்துக் கொண்டு,”அத்த! கொஞ்சம் டயர்ட்டா இருக்கு, நான் போய் படுத்துக்கறேன்” என்று சொல்லியபடியே செல்லும் பவானியை யோசனையோடு பார்த்துக் கொண்டிருந்தார் கோதை நாயகி. 
பகல் பொழுதெல்லாம் பவானி ஓய்வெடுப்பது தரைதளத்தில் கோதை நாயகி அன்று கைகாட்டிய அறையிலேத் தான்.
காலையில் கணவன் வேலைக்கு போகும் போது அவன்கூடவே தங்கள் அறையிலிருந்து கீழே இறக்கி வருவாள். அதன்பின் கீழே இருக்கும் அறையிலேயே ஓய்வெடுத்து கொள்வாள்.
அன்று சாயங்காலம்  வேலைக்காக,படிப்பிற்காக என்று வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த  எல்லோரும்  வீடு திரும்பியிருந்தார்கள். கோதை நாயகி தரும் தேனீருக்காக எல்லோரும் ஹாலில் குழுமியிருக்க
குமரன் மட்டும் டைனிங் ஹாலில் உட்கார்ந்து அன்றைய ஹிந்து நாளிதழைப் புரட்டிக்கொண்டு இருந்தான்.
சிட்அவுட்டில் சிட்டுக்குருவி கூடுகட்டியிருப்பதைப் பற்றி பவானி சொன்னதும் நந்தினியும், பவித்ராவும் போட்டி போட்டுக் கொண்டு ஆர்வத்தோடு அதைப்பார்க்க சென்றுவிட, 
பரணிதரனும் பவானியும் ஹாலில் அமர்ந்திருந்தார்கள். அன்று பவித்ரா ஹாஸ்டலுக்கு போனால் குமரனும் போவான் என்று பரணி சொன்னதோடு சரி, அதன் பிறகு  பரணி உட்பட யாருமே அங்கு அதைப் பற்றி பேசவேவில்லை. யாரும் ஹாஸ்டலுக்கு போகவும் இல்லை. 
அதன்பிறகான நாட்களில் சிலநேரங்களில் மகிழ்ச்சியாகவும் பலநேரங்களில் குழப்பமாகவும் இருக்கும் மனைவியின் முகத்தை பரணிதரனும் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறான்.
பலவீடுகளில் திருமணமான புதிதில் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஏற்படும் உறவுச்சிக்கல்களை அறிந்தவன் தான் பரணி.
இங்கே தம்பி குமரனின் செயலால் பவானியின் மனதில் அவன் மேல் மனஸ்தாபம் இருப்பது பரணிதரனுக்கு புரியத்தான் செய்கிறது.
நாளடைவில் ஒருவருக்கொருவர் புரிதல் ஏற்படும் போது அந்த மனஸ்தாபங்கள் எல்லாம் மறைந்து போய்விடும் என்று நம்பினான் பரணி.
எனவே இதை ஒரு பெரிய விஷயமாக்கி மனைவியிடம் தூண்டித்துருவாமல் எப்பொழுதும் போல இயல்பாகவே நடந்து கொண்டான் பரணிதரன்.
சிட்டுக்குருவி செய்த மாயமோ என்னவோ, இன்று பவானியின் முகம் கொஞ்சம் மலர்ந்தாற் போல் தான் இருந்தது. 
மனைவியின் மலர்ந்த முகம் கண்டு பரணிதரனின் மனமோ ‘மனைவியின் மனகிலேசங்கள் விடைபெறும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்று எண்ணத்தொடங்கியது.
ஆனால் இந்த பிரச்சினையை விடுத்து இன்னொற்றை பிடித்துக்கொண்டு மனைவி தன்னை ஆட்டுவிக்கப் போகிறாள் என்று பாவம் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை.
   இன்று வழக்கத்திற்கு மாறாக சமையலறையில் மதியழகன் நின்று ஏதோ செய்து கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சமையலறையிலிருந்து இருந்து ஒரு நல்ல நறுமணம் வர
டைனிங் ஹாலில் இருந்த குமரன்,”திரட்டுபாலா கோதை ம்மா! மதி ப்பா செய்யுறாங்களா என்ன? என்று கேட்டவாறே சமையலறைக்குள் சென்றான்.
குமரனின் ‘மதி ப்பா செய்யுறாங்களா என்ன?’ என்ற கேள்வியில், பவானி ,”மாமா சமையல் எல்லாம் கூட நல்லா பண்ணுவாங்களா பரணி…” என்று கணவனிடம் கேட்க…
“அப்பா மட்டும்ல இரண்டு அண்ணாவுமே நல்லா சமையல் பண்ணுவாங்க அண்ணி” என்றாள் உள்ளே வந்து கொண்டிருந்த நந்தினி.
“அப்படியா!” கேட்டவளின் குரலில் ஆச்சர்யம்.
” பரணி ண்ணா நான்வெஜ் எல்லாம் சும்மா அசத்தலா பண்ணுவாங்க தெரியுமா ண்ணி?” அண்ணிக்கு தெரியாத அண்ணனின் ரகசியத்தைச் தான் சொன்ன சந்தோஷம் நந்தினியின் குரலில்.
‘எனக்குத் தெரியாத ரகசியம் இன்னும் ஏதும் உன்னிடம்  உண்டா?’ என்று பரணிதரனைப் பார்த்து பவானி முறைத்தாற் போல் பார்க்க… 
அவள் முறைப்பில் பயந்தவன் போல் பரணி கைகள் இரண்டையும் லேசாக உயர்த்தி, கண்களைச் சுருக்கி பாவனைகாட்ட கிளுக்கிச் சிரித்தாள் பவானி. மனைவியின் சந்தோஷம் கணவனையும் தொற்றிக்கொள்ள அங்கு ஒரு சந்தோஷமான சூழல் நிலவியது.
சின்னச் சின்ன கிண்ணங்களில் திரட்டுபாலை நிரப்பி,அதில் ஸ்பூனும் இட்டு எல்லோர் கைகளிலும் ஆளுக்கொன்றாய் குடுத்திருந்தார் கோதை.
இன்று கன்று போட்டிருந்த பசுவிலிருந்து கறந்த பாலில் சுத்தமான கருப்பட்டி, பொடிதாகத் துருவிய தேங்காய் பூ , வாசனைக்கு ஏலம் தட்டிப்போட்டு சுண்டக்காய்ச்சிய பால் தான் அது.
மற்ற பதார்த்தங்கள் போலில்லாமல் அதன் வாசனையே  பவானிக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவள் கிண்ணத்தில் தீர்ந்த வேகத்தை பார்த்து கோதை நாயகியே திரும்பவும் நிரப்பினார் பவானியின் கிண்ணத்தை.
இதை பார்த்துக் கொண்டிருந்த பரணிதரன் சும்மா இராமல்,”அம்மா! உங்க கை பக்குவத்தை விட அப்பா கைபக்குவம் தான் என் பிள்ளைக்கு பிடிச்சிருக்கு” என்று தாயாரை கலாய்க்க
“அப்படியா! அப்படின்னா நாளைல இருந்து உங்க அப்பாவையே பவானிக்கு சமைச்சு குடுக்க சொல்லுடா. நானும் கொஞ்சம் ஃபீரியா இருப்பேன்…” என்றார் கோதை நாயகி கிண்டலாக
ஆனால் பவானியோ கணவனின் பேச்சில் வெலவெலத்துப் போனாள். ‘ தன்னை இவர்கள் கவனித்துக்கொள்வதே பெரிய விஷயம். இதில் தான் இவர்கள் சமையலைக் குறைசொல்வதா?’ என்ற எண்ணம் மனதினுள் ஓட
“அப்படி எல்லாம் ஒன்னுமில்லத்த… அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல” என்று பதட்டமாக கணவனின் கூற்றை மறுக்க, பரணிக்கே ஏதோ போலானது.

Advertisement