Advertisement

“ஐயோ! அக்கா… இந்த அமுக்கிணி எங்கிட்ட ஒன்னுகூட சொல்லலைக்கா… நான் அசந்த நேரம் பாத்து எனக்குத்  தெரியாமல் எல்லாம் செய்துருக்கு க்கா…” என்றாள் நந்தினி வேகவேகமாக.
“எனக்கென்னவோ நம்ப முடியலடியம்மா! நீயும் கூட்டுக்களவாணி தானோன்னு  எனக்கு சந்தேகமா… இருக்கு!” என்ற திவ்யாவின் வார்த்தையில் நந்தினி பதற பவித்ராவோ அழகாகச் சிரித்தாள்.
“எரும…எரும…செய்யுறதையும் செய்துட்டு என்னையும் கோர்த்து விட்டுட்டு சிரிக்குது பாரு…” என்று நந்தினி பவித்ராவின் மேல் பாய…
“இனி ஒருதரம் இப்படி குசும்பு செய்யட்டும், அப்படியே கட்டித்தூக்கி கொண்டு போய் ஹாஸ்டல்ல போட்டுட்டு வந்துடறேன்” என்று சிரித்தபடியே பவித்ராவை மிரட்டினார் கோதை நாயகி.
கோதை நாயகியின் பேச்சுக்கு பெண்களிருவரும் வெடித்துச் சிரிக்க, பவித்ராவோ,
“உங்க முடிவை சொல்லிட்டீங்கல்ல அத்தம்மா, இனிமேல் இந்த பவித்ராவோட பெர்ஃபார்மென்ஸ் எப்பவுமே சைலண்ட் பெர்ஃபார்மென்ஸ் தான்” ‌முகத்தை சுருக்கி தன் கோணங்கி சேஷ்டையோடு பவித்ரா சொல்ல அங்கே சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் போயிற்று.
அன்று சாயங்காலம் ஒரு நான்கு மணிக்கு போல் மதியழகன் உட்பட வீட்டில் உள்ள அனைவரும் ஹாலில் இருந்தார்கள். திவ்யா மதிய உணவிற்கு பிறகு சந்தோஷோடு வீட்டுக்கு கிளம்பி சென்றிருந்தாள்.
மதியழகனுக்கு வீட்டில் நடந்தது அனைத்தும் கோதை நாயகி மூலம் தெரியவந்திருந்தது. அவரும் குமரனைத் தனியாக அழைத்து அறிவுரைகள் சொல்ல, அத்தனையையும் முகச்சுணக்கமின்றி கேட்டிருந்தான் குமரன்.
டீக்கப்புகளோடு வந்த கோதை நாயகி அவற்றை அங்கிருந்த டீபாயில் வைத்து விட்டு பவானி படுத்திருந்த அறை வாசலின் கர்ட்டனை விலக்கியவாரே,”வா பவானி! ஒருகப் டீ குடிச்சிடலாம்” என்று அழைக்க
அவர் வருவதற்கு முன்னரே கட்டிலில் எழும்பி உட்கார்ந்திருந்தவளோ,”இல்லத்த…வாமிட் வந்திடுமோன்னு பயமாயிருக்கு. எனக்கு வேண்டாம்” என்றாள் பதட்டத்தோடு
“ப்ச்ச்…வாமிட் வந்தா பாத்துக்கலாம்… அதுக்குன்னு பயந்துட்டு ஒன்னுமே சாப்பிடாமல் இருக்கமுடியுமா? வா…வா…” என்று அழைக்க, அவளுக்கும் சூடாக ஏதாவது குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. 
கூடவே தான் எடுத்த முடிவையும் எல்லாரிடமும் இப்பொழுதே சொல்லியும் விடலாம் என்பதால்,”நீங்க போங்க அத்த, இதோ வந்துடறேன்” என்று சொன்னவள் முகம் கழுவி வெளியே வந்தாள். 
கண்கள் கணவனைத் தேடியது. இரண்டு பேர் அமரும் சோஃபாவில் உட்கார்ந்திருந்த பரணிதரன் தலையசைத்து அருகே அழைக்க, கணவனருகே சென்று அமர்ந்து கொண்டவள், கோதை நாயகி தந்த டீயை பயந்து பயந்தே குடித்து முடித்தாள். ஏனோ சமத்தாக, உள்ளே போன டீ அமைதியாக இருந்து கொண்டது.
மனம் லேசாக ஆசுவாசப்பட ஹாலை சுற்றிப் பார்த்தாள்.
மதியழகனும், கோதை நாயகியும் நாற்காலிகளில் அமர்ந்திருக்க, குமரன் ஹாலில் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தான்.
அவன் கண்களோ தவிப்போடு அண்ணியைப் பார்ப்பதுவும், பின்பு நிலம் பார்ப்பதுவுமாக இருந்தது.
இன்னொரு சோஃபாவில் அமர்ந்து நந்தினியும் பவித்ராவும் பேசிக்கொண்டிருந்தாலும் பவித்ராவின் கண்கள் பாசத்தோடு தன் அக்காவை நொடிக்கொரு தடவை தடவி மீண்டுகொண்டிருந்தது.
 விட்டால் ஓடிவந்து தன்னைக் கட்டிக்கொண்டு முத்தமழையே பொழிந்து விடுவாள் போன்றதொரு தவிப்பை தங்கையின் விழிகளில் கண்ட பவானிக்கு ஏதேதோ எண்ணங்கள் எழுந்து உள்ளத்தைக் குழப்பியது.
‘என் தங்கை நினைத்ததை உடனேயேச் செய்யமுடியாமல் தடுப்பது எது? என்னுடைய இந்த திருமண வாழ்க்கையா? இல்லையெனில் புதிதாக அமைந்திருக்கும் இந்த குடும்பமா?’
இதே குடும்பம் புடைசூழ தன் தங்கை பருவத்தின் அடுத்த கட்டத்தை எய்தியிருந்த போது, தான் புளகாங்கிதம் அடைந்தது வசதியாக மறந்து போனது பெண்ணுக்கு.
‘இந்த திருமணம் எனக்கும் என் தங்கைக்குமிடையே கண்ணுக்குத் தெரியாத ஒரு மாயச்சுவரை எழுப்பி விட்டதா? முன் போல நானோ இல்லை என் தங்கையோ எங்களின் பாசத்தை ஒருவருக்கொருவர் உடனே வெளிக்காட்ட முடியாதா?’
‘இங்கே எல்லாம் சரியாகிவிட்டது என்று நான் நினைத்தது எல்லாம் உண்மையிலேயே சரியாகி விட்டாதா? இல்லையா?’  கேள்விகள்… கேள்விகள்… மனதிற்குள் விடையில்லா ஆயிரம் கேள்விகள் ஏனோ புதிது புதிதாக முளைத்தது பவானிக்கு.
அதிலும் மத்தியானம் ‘கட்டித்தூக்கி ஹாஸ்டலில் போட்டுட்டு வந்துடுவேன்’ என்று கோதை நாயகி பவித்ராவைச் சொன்ன வார்த்தைகள் பவானிக்கும் கேட்டிருந்தது.
அதுவும் சொன்னவரின் குரலைத்தான் கேட்டாளேத் தவிர அவரின் முகபாவத்தை பார்க்கவில்லையே! அதனால் தன் தங்கை அங்கே இருப்பதில் அவருக்கு இஷ்டமில்லையோ? என்ற சந்தேக விதை மனதினுள் விழுந்தது.
ஏற்கனவே சோர்ந்து கிடந்த உடம்பும், குழம்பிக் கிடந்த மனதும் பவானியை, நிழலை பார்த்து பூதம் என்று மருளச்சொன்னது, கயிறைப் பார்த்து பாம்பு என்று பதறச்சொல்லியது. 
 கண்களை மூடி ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்தவள் நிதானமாக கணவனைப் பார்த்து,”நான் பவித்ராவை ஹாஸ்டல்ல விடலாம்னு முடிவெடுத்துருக்கேன் பரணி” என்றாள்.
வீட்டில் இருந்த அத்தனை பேரும் அதிர்ச்சியாக பவானியைப் பார்த்தார்கள்.
ஹாலை தன் நடையால் அளந்து கொண்டிருந்த குமரன் கூட அதே இடத்தில் நின்று போனான்.
“என்ன சொன்ன பவானி?” தான் சரியாகத் தான் கேட்டோமா? என்னும் சந்தேகத்தில் திரும்பவும் பரணி கேட்க, தான் சொன்னதை திரும்பவும் சொன்னாள் பவானி. 
அவளை நோக்கி வசதியாக திரும்பி அமர்ந்தவனிடமிருந்து “ஏன்?” என்று ஒற்றை வார்த்தையில் கேள்வி வந்தது. 
“ப்ச்ச்… சும்மா”
‘குமரன்,பவித்ராவிற்கிடையே நடந்ததை எல்லாம் இன்று காலையில் தெரிந்து கொண்டதன் விளைவு தான் இந்த முடிவு’ என்று பரணிதரனுக்கு  நன்றாகவே புரிந்தது.
“இதுக்கு தான் காலையிலிருந்தே அம்மணி ஒரே யோசனையா இருந்தாங்களோ!’ மனதுக்குள் நினைத்துக்கொண்டவன்
“சும்மாவா… அதுக்கெல்லாம்மா பிள்ளைய ஹாஸ்டல்ல கொண்டு விடுவாங்க! ம்ம்…” என்றான் நக்கல் குரலில்.
மனைவியிடம் பரணிதரன் பேசிக்கொண்டிருந்ததால் மதியழகனும், கோதை நாயகியும் அதில் குறுக்கிடாமல் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதிலும் கோதை நாயகிக்கு பவானியின் மனநிலை கொஞ்சம் பிடிபட்டாற்போல் இருந்தது. பவானியிடமிருந்து என்ன தான் வருகிறது என்று பார்ப்போமே என்று அமைதியாக உட்கார்ந்திருந்தார்.
பவித்ராவோ அக்காவின் வார்த்தையில் கண்களில் நீர் வழிய பவானியையே பார்த்துக் கொண்டிருந்தாள். நந்தினியின் முகமும் கூட அண்ணியின் இந்த முடிவில் அதிருப்தியையேக் காட்டின.
“இல்ல… இங்க குமரனுக்கும் பவித்ராவுக்கும் ஒத்து போகமாட்டேங்குது.  பவித்ராவை ஹாஸ்டலுக்கு அனுப்பிட்டோம்னா வீட்ல பிரச்சினை  இல்லாமல் இருக்கும்ல… அதான்” கண்கள் கலங்க, வார்த்தைகள் துண்டு துண்டாகச் சிதறிச் சிதறி வந்தன பவானியிடமிருந்து.
 கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து விடக்கூடாது என்பதற்காக கண்களை உருட்டி, விழித்து  அவள்   செய்யும் பிரயத்தனம் தெளிவாகத் தெரிந்தது கணவனுக்கு.
“ஓஹ்… இதுக்கு தானா?” என்றவன்,”இரண்டு பேர்ல ஒருத்தங்க வீட்ல இல்லைன்னா பிரச்சினை இருக்காதுன்னு நீ  நினைக்கிற, அப்படித்தானே? அப்போ குமரனை ஹாஸ்டலுக்கு அனுப்பிடலாம். பவித்ரா வீட்லயே இருக்கட்டும்” எளிதாக தீர்வு சொன்னான் கணவன்.
“ஐயையோ! அவனோட சொந்த வீட்டை விட்டுட்டு, அவன் ஏன் ஹாஸ்டலுக்கு போகணும்?” அடுத்த வினாடியே பதில் வந்தது பவானியிடமிருந்து.
“அப்போ இந்த வீட்ல பவித்ராவுக்கு எந்த உரிமையும் இல்லை ன்னு நீ சொல்லுறியா?” சற்று உறுமலாகவே கேள்வி வந்தது  பரணிதரனிடமிருந்து.
இப்படி ஒரு கேள்வியை கணவனிடமிருந்து  எதிர்பார்க்காதவள்,”நான் அப்படி சொல்லலையே” என்றாள் மெதுவாக
“அப்போ, நீ சொன்னதோட அர்த்தம் என்ன? அதையும் நீயேச் சொல்லிடு…” 
அவனுக்கு கோபம்… ‘அன்று என்னடாவென்றால் என்னை நம்பாமல் தங்கையோடு இந்த ஊரைவிட்டே போனாள். இன்று தன் தங்கையை தனியே அனுப்பப் பார்க்கிறாள். அப்படியானால் இந்த இரண்டு மாதகால மணவாழ்வில் என்மீது இவளுக்கு நம்பிக்கையே வரவில்லையா?’
 ‘நம்பிக்கை இருந்திருந்தால் இதைப் பற்றி என்னிடம் பேசியிருப்பாளே? அப்படி பேசியிருந்தால் நான் அவள் கலக்கத்தை போக்கியிருப்பேனே.’ மனம் தன்னிடமேக் கேள்வியைக் கேட்டு, தானே பதிலையும் சொல்லிக்கொண்டது.
‘இப்படி தனியளாக அதைப்பற்றி எண்ணி எண்ணி தானும் கலங்கி அடுத்தவரையும் கலங்கடிக்கிறாளே!’ என்ற ஆற்றாமையில் தான் கொஞ்சம் குரலை உயர்த்தி இருந்தான் பரணிதரன்.
சூழ்நிலை கொஞ்சம் கடினமாவதை உணர்ந்த கோதை நாயகி,”விடுடா… பவானிக்கு ஏதோ ஒரு குழப்பம். அதை போக்குறதை விட்டுட்டு சத்தம் போட்டுட்டு இருக்குற” என்று பரணிதரனைச் சத்தம் போட
“அம்மா! பவித்ராவை ஹாஸ்டலுக்கு அனுப்புறதா இருந்தால் குமரனும் கண்டிப்பா ஹாஸ்டலுக்கு போவான். இதை உங்க மருமக கிட்ட சொல்லிவையுங்க” என்றவன் சட்டென்று எழும்பி மேலே தங்கள் அறைக்குச் சென்று விட்டான்.
தங்கையை விட்டுக் கொடுக்காமல் பேசிய கணவனின்  பேச்சு உள்ளுக்குள் இதம் பரப்பினாலும், சட்டென்று அவன் எழும்பி சென்றது முகத்தில் அறைந்தாற்போல் இருக்க கண்களில் காவேரியை திறந்து விட்டாள் பவானி.
பரணி அகன்ற அடுத்த நிமிடமே பறந்து வந்து தன் சகோதரியைக் கட்டிக்கொண்ட பவித்ரா,”சாரிக்கா…சாரிக்கா…  இனிமேல் வம்பே பண்ணாமல் சமத்தா இருக்கிறேன் க்கா… பிளீஸ்…என்னை ஹாஸ்டலுக்கு மட்டும் அனுப்பிடாத க்கா” என்று கெஞ்சியது, அங்கிருந்த அனைவரையும் கலங்க வைக்க குமரனும், மதியழகனும் வெளியே சென்றுவிட்டார்கள். 
தன்னை கட்டிக் கொண்டிருந்த தங்கையை தானும் கட்டிக்கொண்டவளின் மனதிற்குள் தங்கை எப்போதும் சொல்லும்,”நமக்கு அம்மா,அப்பா இருந்திருக்கலாம் இல்லக்கா…” என்ற வார்த்தை உலாப்போக
‘ஆமாம்… நமக்கு அம்மா,அப்பா இருந்திருக்கலாம் செல்லம்’ என்று மனதோடு தங்கையிடம் சொல்லிக்கொண்டாள் பவானி.
அன்றிரவு உணவை முடித்து விட்டு பரணிதரன் மேலே தங்கள் அறைக்குச் சென்றுவிட, மருத்துவர் தந்திருந்த மாத்திரையின் உபயத்தால் கொஞ்சம் வாந்தி மட்டுப்பட்டிருக்க ஏதோ கொஞ்சம் உண்ண முடிந்தது பவானியால்.
உண்டு முடித்தவள் தங்கள் அறைக்குச் செல்ல, அங்கே அவள் கணவனோ கட்டிலில் கால் நீட்டி,வலது கையை மடக்கி நெற்றியில் வைத்தவாரே கண்மூடி படுத்திருந்தான்.
மூடிய விழிகளுக்குள் உருண்ட கண்மணிகள் அவன் இன்னும் தூங்கவில்லை என்பதைச் சொல்லியது. மெதுவாக கட்டிலின் மறுபுறம் படுத்து கணவனைப் பார்க்க அவனோ அதே நிலையில் தான் இருந்தான்.
‘பேசமாட்டானாமா என்னிடம்?’ உள்ளுக்குள் கலங்கியவள், கணவனை நெருங்கிப் படுத்து  அவன் மீது தன் கைகளைப் போட்டாள்.
 எவ்வளவோ அவள் மீது கோபம் இருந்தாலும், இப்போது அவள் இருக்கும் நிலையில் அதை அவளிடம் இதற்கு மேல் காட்ட விரும்பாதவனாய்,”ப்ச்ச்…போடி…”என்று அலுத்துக் கொண்டாலும், அதற்கு நேர்மாறாக அவன் கைகள் தன் இணையை அணைத்துக் கொண்டன… 

Advertisement