Advertisement

களைத்து போயிருந்த மனைவியை தன் கையணைவில்  மேலே தங்கள் அறைக்கு அழைத்து வந்திருந்தான் பரணிதரன்.
அறைக்குள் வந்து மனைவியை கட்டிலில் அமர்த்தி, அந்த சோர்ந்து போன பூமுகத்தை தன் இருகைகளிலும் தாங்கி தன் ஒட்டுமொத்த சந்தோஷத்தையும் ஒற்றை முத்தமாக்கி மனைவியின் பிறைநுதலில் இட்டு மகிழ்ந்தவன்,”ரொம்ப… ரொம்ப…நன்றி… பவானி” என்றான் காதலாக.
குரல் தந்தையாகப் போகும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது…
பவானியின் மனதிலும் சந்தோஷத்தின் ஊற்றுக்களே. ஆனால் அதையும் தாண்டி சோர்வு தின்றது அவளை.
கணவனின் மார்பில் லேசாக சாய்ந்து கண்மூடி,”ரொம்ப டயர்ட்டா இருக்குங்க” என்றாள் சோர்வாக
“பெட்ல படுத்துக்கிறியா?” என்றான் அவள் நன்றாக கால்நீட்டி படுத்துக்கொள்வாளே என்ற எண்ணத்தில்
அவளோ,”வேண்டாம்…” என்று தன் தலையை அவன் மார்பிலேயே உருட்டி, அந்த வலிய மார்புக்கு ஒரு முத்தமும் வைத்தாள் தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக.  
வார்த்தைகள் சொல்லாத அவளின் உணர்வுகளை அந்த இதழொற்றல் சொல்லியது கணவனுக்கு.   
  கட்டிலில் வாகாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு தன் மீது சாய்த்துக்கொண்டான் தன்மனைவியை.
கண்களோ மனைவியின் முகத்தை அளவெடுத்தது. முகத்தில் சோர்வையும் தாண்டி லேசான யோசனை இழையோடியதை அவனால் கண்டுகொள்ள முடிந்தது.
பேச்சற்ற மௌனங்களில் நிமிடங்கள் கழிய, கணவனின் கரங்களோ மனைவியின் எழில்கூந்தலை தடவியபடியே இருந்தது.
அவன் வீட்டுக்குள் நுழையும் போது கண்டது உணர்ச்சிப் பிழம்பாக நின்ற பவானியையும் குமரனையும் தான். ஆனால் இன்னது தான் பிரச்சினை என்று அவனால் அறுதியிட முடியவில்லை. மனைவியிடமே கேட்டு விடலாம் என்ற யோசனையில்
“பவானி…என்னடா பிரச்சினை?” என்றான் மெதுவாக
“ப்ச்ச்… ஒன்னுமில்லங்க” சுரத்தில்லாமல் வந்தது பதில். அதற்கு மேல் எதையும் வற்புறுத்தாமல் பரணியும் விட்டு விட, கணவனின் அருகாமை தந்த பலத்தில் கண்ணயர்ந்து விட்டாள் பவானி.
சீராக வந்துகொண்டிருந்த மூச்சு அவள் உறங்கிவிட்டதை கணவனுக்கு உணர்த்த, மெதுவாக தன்னிடமிருந்து அவளை விலக்கி மெத்தையில் படுக்க வைத்து மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் தான் இருக்கிறாள் என்று உறுதி செய்தபிறகே கீழே இறங்கிச் சென்றான்.
 புதுவரவு வரப்போகிறது என்ற உற்சாகத்தையும் தாண்டி வீடு ஒரு விதமான நிசப்தத்தில் இருந்தது.
கோதை நாயகி ஹாலையும் சுத்தப்படுத்தி தன்னையும் சுத்தப்படுத்தி இருந்தார். ஹாலில் ஒருவரையும் காணவுமில்லை… ‘எல்லாரும் அவரவர் ரூமில் போலும்’ எண்ணமிட்டபடியே சமயலறையில் நின்ற அன்னையிடம் வந்து
அவர் கொடுத்த டீயை வாங்கி குடித்தபடியே,”ம்மா… என்ன நடந்திச்சி? கேட்டால் பவானியும் ஒன்னும் சொல்லமாட்டேங்குறா” என்று மனைவியிடமிருந்து தனக்கு விஷயம் எதுவும் வரவில்லை என்பதைச் சொல்ல
கோதை நாயகியோ ஆதியோடு அந்தமாக குமரனுக்கும், பவித்ராவிற்குமிடையே நடந்த விஷயங்களைக் கூறினார்.
எல்லா விஷயங்களையும் கேட்ட பரணிதரனுக்குமே அதிர்ச்சி தான். பவித்ராவின் செயல்களில் எல்லாம் குறும்பு மட்டுமே தெரிந்தது. ஆனால் குமரனிலோ குறும்போடு சேர்ந்து கொஞ்சம் கோபமும் இருந்ததை பரணிதரனால் உணரமுடிந்தது.
‘இந்த கோபம் என்றைக்குமே ஆகாதே…’ ஒரு அண்ணனாக தம்பியின் நலனில் அக்கறை இயல்பாகவே எழுந்தது பரணிதரனுக்கு.
 ‘இதைப்பற்றி குமரனிடம் கண்டிப்பாக பேசவேண்டும். ஆனால் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசிவிட முடியாது. பொறுமையாகத் தான் அவனை கையாளவேண்டும்’  என்று யோசித்தவன்,’இப்போதே பேசிவிடலாம்’ என்ற எண்ணத்தோடு குமரனின் அறைக்குள் நுழைந்தான்.
அறைக்குள்ளிருந்த குமரனின் முகத்திலும் சிந்தனை ரேகைகள். 
கட்டிலில் அமர்ந்து தலையை பின்பக்கமாகச் சாய்த்து கால்நீட்டி அமர்ந்திருந்தவனின் மனக்கண் முன்னே கண்களில் கண்ணீரோடு கைகூப்பியபடியே ‘எங்களுக்கு பெத்தவங்க இல்ல’ என்று தழுதழுத்தக் குரலில் சொன்ன அண்ணியின் முகமே வந்து வந்து போனது.
‘என்னுடையச் செயல் என் அண்ணியைக் கண்ணீர் சிந்த வைக்குமளவிற்கு காயப்படுத்தி விட்டதா?’ ஆற்றாமையால் தவித்தது அவன் இளமனது.
அதிலும்,’எங்களுக்கு பெற்றவர்கள் இல்லை’ என்ற பவானியின் வார்த்தையில்,’ஒருவேளை கோதை அம்மாவும், மதி அப்பாவும் தன்னையும்,நந்தினியையும் அவர்கள் பொறுப்பில் எடுத்துக்கொண்டிராவிட்டால் தங்கள் நிலை என்னவாயிருக்கும்?’ என்ற எண்ணம் மனதில் தோன்றி அவனை அலைக்கழித்தது.
‘அண்ணிக்காகவாவது இனிமேல் அந்த பவித்ரா விடம் வம்பு வளக்கக்கூடாது. ஒதுங்கிப் போய்விடவேண்டும்’ என்று தீர்மானம் எடுத்தவனது மனது ஓரளவிற்கு சமாதானம் ஆகியிருந்தது.
‘அதற்கு முன்னால் அண்ணியைப் பார்த்து தன் செயலுக்கு மன்னிப்பும் கேட்டுவிட வேண்டும்’ என்றும் நினைத்துக் கொண்டான் குமரன்.
ஏனென்றால் இந்த இரண்டு மாதங்களாக கோதை அம்மாவைப் போலவே பாசம் காட்டும் பவானியையும் அவனுக்கு பிடித்திருந்து.
கண்மூடி உட்கார்ந்திருந்தவன் கதவு திறக்கும் சத்தத்தில் கலைந்து வாசலை நோக்கித் திரும்பிப் பார்க்க புன்னகையோடு வந்து கொண்டிருந்தான் பரணிதரன்.
அண்ணனைக் கண்டதும் தலையை அழுந்தக் கோதியபடி கட்டிலிலிருந்து இறங்கியவன்,”வாங்கண்ணா…” என்றான் மரியாதையாக…
அவனின் பரபரப்பைக் கண்டு சிரித்த அண்ணன்காரன், “மரியாதை மனசுல இருந்தாப்போதும் டா…” என்று சிரித்தவாறே அவன் முதுகில் தன்கையால் ஒரு தட்டுதட்டியவன்,”வா… அப்படியே வெளியே போய்ட்டு வரலாம்…” என்று அழைக்க
மேய்ப்பனைத் தொடரும் ஆட்டுக்குட்டியாய் தமையனைத் தொடர்ந்தான் அந்த இளவல்…
முன்வாசல் வழியே வெளியே வந்து தோட்டத்தை நோக்கி நடந்தார்கள். எப்படி பேச்சை தொடங்குவது என்று மனதிற்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டு வந்த பரணிதரன்
“குமரா! நான் சொல்லப்போற விஷயத்தை நீ சரியான விதத்தில் புரிஞ்சுக்கணும்…” என்ற பீடிகையோடு பேசத் தொடங்கினான் 
அண்ணன் பேசப்போவது எதைப்பற்றி என்று புரிந்து கொண்ட குமரனோ அவனுக்கு அந்த சிரமத்தைக் கொடுக்காமல், மெல்லிய ஆனால் உறுதியான குரலில்
“அண்ணா…இன்னைக்கு காலைல நடந்த விஷயத்துக்கு முதல்ல என்னை மன்னிச்சிடுங்க. இனிமேல் இந்த மாதிரியான பிரச்சினைகள் என்னால நம்ம வீட்ல நடக்காது” என்றான்
தம்பியின் பேச்சில் முகத்தில் மென்னகை விரிய,”நீ புரிஞ்சிக்குவன்னு எனக்குத் தெரியும்டா…” என்றவன் மிருதுவானக் குரலில் சிரித்தவாறே
“மூக்கு மேல நிக்குற உன் கோபத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுட்டா எல்லோரும் இன்னும் ரொம்ப சந்தோசப் படுவோம் டா” என்றான்.
அண்ணனின் குரலில் தன்மீது வழிந்த வாஞ்சையை புரிந்து கொண்ட குமரன்,”கண்டிப்பா ண்ணா” என்றான். குரலில் கொஞ்சம் வெட்கம் இழையோடியது. 
   அதன்பிறகு பரணியின் பேச்சு குமரனுடைய படிப்பு, அது முடிந்த பிறகு அடுத்து என்ன செய்வதாக உத்தேசித்திருக்கிறான் என்பது பற்றியதாய் இருக்க, தன்னுடைய எதிர்காலம் பற்றி தம்பியின் திட்டமிடல் குறித்து அசந்து போனான் பரணி.
இந்த விளையாட்டு பையனுக்குள்ளே இப்படி ஒரு திட்டமிடலை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை போலும்.
நம் பெற்றோருடைய வளர்ப்பும், வழிகாட்டலும் தவறாகப் போய்விடவில்லை என்ற நிம்மதி அவன் நெஞ்சில் பரவியது. குமரனைப் பற்றி இருந்த கொஞ்சநஞ்ச கவலையும் அப்போது அகன்றது பரணிதரனுக்கு.
இருவரும் திரும்ப வீட்டுக்குள் நுழையும்போது அக்காவின் ஆர்ப்பாட்டமான குரல் தான் அவர்களை வரவேற்றது.
“வாழ்த்துகள் தம்பியாரே!” என்று பரணிதரனின் கையைப் பிடித்து குலுக்கியவர்,”ஓவர் கோபம் உடம்புக்கு ஆகாது தம்பி…” என்று குமரனின் வயிற்றில் தன் விரல்களை மடக்கி கை முஷ்டியால் விளையாட்டாக ஒரு குத்து குத்தினார்.
“பவானி உண்டாகியிருக்கிறாள்னு நினைக்கிறேன் திவ்யா, எதுக்கும்  நீ இங்க கொஞ்சம் வந்துட்டுப் போயேன்” என்று அம்மா ஃபோன் செய்து சொல்லவும் வழக்கம் போல அடுத்த அரைமணி நேரத்துக்குள் மகன் சந்தோஷோடு, சந்தோசமாக ஆஜராகி விட்டாள் இங்கே.
அதன் பிறகு அன்று வீட்டில் நடந்த யாவையும் தாய் மகளிடம் சொல்ல அதனாலேயே இந்த வரவேற்பு தம்பியர் இருவருக்கும்.
*********************
பரணிதரன், பவானி, திவ்யா மூன்று பேரும் அந்த பிரபல மகப்பேறு மருத்துவரின் முன்னே அமர்ந்திருந்தனர்.
அவர் முன்னால் இருந்த சிறிய பெயர்ப் பலகை மருத்துவரின் பெயர் மிஸர்ஸ்.ஜானகி என்றது.
வெள்ளை கோட் அணிந்து, கழுத்தில் டெதஸ்கோப் மாலையெனத் தொங்க, முகத்தில் அனுபவம் மிளிற  அமர்ந்திருந்தார் அந்த ஐம்பதுகளின் மத்தியில் இருந்த பெண் மருத்துவர். 
அவரது முன் நெற்றியில் இழையோடிய வெள்ளிக்கம்பிகள் அவருக்கு இன்னும் கம்பீரத்தையேக் கொடுத்தது.
திவ்யா சந்தோஷை இங்கே தான் பிரசவித்திருந்தாள்.
கைராசிக்காரர், அதுமட்டுமின்றி அவர்களின் குடும்ப மருத்துவர் போன்றவர். அதனாலேயே தன் தம்பி மனைவியையும் இங்கேயே அழைத்து வந்திருந்தாள்.
தன் முன்னால் இருந்த பவானியின் பரிசோதனை முடிவுகளை பார்வையிட்ட மருத்துவர்,”வாழ்த்துகள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் பரணிதரன், நாம நினைத்த ரிசல்ட் தான். தட் மீன்ஸ் அப்பா அம்மா ஆகப்போறீங்க நீங்க இரண்டு பேரும்” என்றார் புன்னகை முகமாக.
ஏற்கனவே யூகித்திருந்தது தான் என்றாலும் ஒரு மருத்துவரின் வாய்மொழியாக கேட்கும் போது இன்னும் மகிழ்ச்சியாக இருந்தது மூவருக்குமே.
இனி கணவன் மனைவிக்கேயான பிரத்யேக அறிவுரைகள் ஏதும் ஒரு மருத்துவராக வழங்குவார் என்று தெரிந்திருந்த திவ்யா அனுமதி கேட்டுக்கொண்டு அறையை விட்டு வெளியே செல்ல
மருத்துவரும் தன் பணியைச் செவ்வனே தொடங்கினார்.
“ம்ம்…குட்… இனிமேல் தான் உங்க பொறுப்பு அதிகமாகுது மிஸ்டர்.பரணிதரன். குழந்தையை மனைவி சுமப்பா நமக்கென்ன ன்னு இல்லாமல், உங்க மனைவி கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுங்க”  அதுவுமில்லாமல், சற்றே நிறுத்தியவர்
“உங்க மனைவி கொஞ்சம் அனீமிக்கா இருக்காங்க. சோ ஒரு மூனு மாதம் வரைக்கும் ரொம்ப கேர்ஃபுல்லா… பாத்துக்கோங்க அவங்களை’ என்று எப்படி கேர்ஃபுல்லாக பார்த்துக்கொள்ள வேண்டுமென்று சிலப்பல அறிவுரைகளை அவனுக்கு அள்ளிவழங்க,’ஆத்தி!’ என்றானது பரணிதரனுக்கு.
ஒருவழியாக மருத்துவர் பரிந்துரை  செய்த சத்து மாத்திரை, மருந்துகளோடும் அவரின் அறிவுரைகளையும் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தனர் மூவரும்.
 கிளம்பும் போது உள்ளே டாக்டரிடம் விடைபெற வந்த திவ்யாவைப் பார்த்து,”என்ன? ஒரு பையனோடு இருந்திடலாம்னு பாக்குறியா? அடுத்த டெலிவரிக்கு எப்போ வரப்போற?” என்று கேட்டு அவளையும் வெட்கப்படவைத்தே அனுப்பினார் மருத்துவர்.
கால் டாக்சி யில் தான் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தான் பரணிதரன். மனைவியை செக்கப்பிற்கு அழைத்து செல்வதற்காகவாவது சீக்கிரம் ஒரு கார் வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் பரணிதரன்.
வீடு வந்து சேர்ந்தவுடன், வரும் வழியில் காரை நிறுத்தி   வாங்கி வந்திருந்த இனிப்புகளை வீட்டிலுள்ள எல்லாருக்கும் கொடுத்து தனது சந்தோஷத்தை  பகிர்ந்து கொண்டான்.
வீட்டில் தரைதளத்தில் இருந்த நான்கு அறைகளில் காலியாக இருந்த ஒரு அறையை நந்தினி, பவித்ரா வின் உதவியோடு சுத்தம் செய்து மெத்தைக்கு புது விரிப்பு, தலையணை சகிதமாக ரெடியாக்கி வைத்திருந்தார் கோதை நாயகி.
“உனக்கு மேலேயும், கீழேயும் ஏறி இறங்குறது ரொம்ப கஷ்டமாக இருக்கும். இந்த ரூம்லயே படுத்து ரெஸ்ட் எடுத்துக்கோ பவானி” என்று  தான் தயார் செய்து வைத்திருந்த  அறையை கோதை நாயகி கைகாட்ட 
பரணிதரனுக்கும் அதுவே சரியென்று படவே, அந்த அறைக்குள் மனைவியை அழைத்துக்கொண்டு நுழைந்தான்.
“பாவம்… ஒரேநாளில் இவ்வளவு சோர்ந்து போயிட்டாளே… இன்னும் கடக்க வேண்டிய நாள் எவ்வளவு இருக்கு?” என்று கோதை நாயகி ஆதங்கப்பட
“அதெல்லாம் மூனு மாசத்தில் சரியாகிடுவா. நீங்க கவலைப்படாதீங்க ம்மா” என்று அன்னையை ஆறுதல் படுத்திய திவ்யா, “அப்போ நான் கிளம்பட்டுமா ம்மா?” என்று கேட்க
“இருந்து சாப்பிட்டு விட்டு போ திவ்யா. எல்லாம் ரெடியாகிடிச்சி”என்ற அன்னையின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு ஹாலில் அமர்ந்தாள்.
கோதை நாயகி,நந்தினி, திவ்யா, பவித்ரா, சந்தோஷ் எல்லோரும் ஹாலில் இருக்க பரணிதரன் உடைமாற்றி வருகிறேன் என்று அப்போது தான் மாடிக்குச் சென்றிருந்தான்.
காலையில் நடந்த நிகழ்விற்குப் பின் பவித்ரா கொஞ்சம் மௌனியாக இருக்க, அவளைப் அப்படி காணப்பிடிக்காத திவ்யா,
“ஏன்டி நந்து! நீங்க இரண்டு பேரும் சேர்ந்தே தான சுத்துறீங்க. அப்படி இருந்தும் நடந்த விஷயம் எல்லாம் உனக்குத் தெரியலைன்னா என்னால நம்ப முடியலையே…” என்று வேண்டுமென்றே சந்தேகமாக இழுக்க

Advertisement