Advertisement

ஆனால் பெற்றோரின் முகம் தேடி அழும் பெண்குழந்தையின் அழுகையை சமாளிக்கத் தான் கோதை தடுமாறினார்.
குழந்தை அழும் நேரத்தில் திவ்யா குழந்தையை தூக்கிக்கொண்டு அப்படியே தோட்டத்திற்குள் நுழைந்து விடுவாள். பட்டாம்பூச்சி, கிளி,குருவி, மைனா என்று காட்டி, பாட்டுப்பாடி கூடவே சிரித்து என்று கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையை தன்வசப் படுத்த தொடங்கியிருந்தாள் திவ்யா.
‘குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் தானே’ மெல்ல மெல்ல அவர்களின் அன்பு உலகத்திற்குள் நுழைந்து கொண்டது அந்த சின்னச் சிட்டு.
அப்போது  பன்னிரண்டாம் வகுப்பு முடித்திருந்தாள் திவ்யா. “எனக்கு மேல படிப்பதில் ஆர்வமில்லை ப்பா. விவசாயம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு, உங்களுக்கு விவசாயத்தில் உதவியாக இருக்கிறேனே” என்று தகப்பனிடம் போராடி வீட்டில் நின்ற திவ்யா, நந்தினியின் பொறுப்பை முழுவதுமாக தன்வசம் எடுத்துக்  கொண்டாள்.
“அம்மா! பாப்பாவுக்கு  அம்மா, அப்பா இல்லை என்ற குறையே தெரியக்கூடாது. அதனால உங்க இரண்டு பேரையும் அம்மா, அப்பா என்றே சொல்லிக்குடுங்க” என்று  பெற்றோரிடம் பரணீதரன் சொல்ல, அவர்களின்  எண்ணமும் அதுவாகவே இருக்க, அவர்கள் நந்தினிக்கு அம்மா, அப்பாவாகவே அடையாளம் காட்டப்பட்டனர். சின்னவளும் மெதுமெதுவாக அவர்களை ஏற்றுக்கொண்டாள்.
ஆனால் குமரனுக்கு யாரும் சொல்லிக்கொடுக்காமலேயே அவர்கள் மதி ‘ப்பா’ ஆகவும் கோதை ‘ம்மா’ வாகவும் மாறிப்போனார்கள். அதையும் அந்த தம்பதியர் மகிழ்வோடவே ஏற்றுக்கொண்டார்கள்.
குமரனை அருகிலேயே இருந்த தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்துவிட அவனும் உற்சாகமாகவே சென்று வந்தான் பள்ளிக்கு.
நடந்து முடிந்த சோகத்திலிருந்து வீடும் மெல்ல மெல்ல மீண்டு இயல்புக்கு வந்தது. நான்கு பேர் கொண்ட குடும்பம் ஆறு பேர் ஆக, மதியழகனின் பொருளாதார தேவையும் உயர்ந்தது.
அதைப்பற்றி சாதாரணமாக அவர் தன் மனையாளிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது அவர் பெண்ணரசி இடைபுகுந்து, “அப்பா! நாம ஏன் இயற்கை விவசாய முறையில் காய்கறிகளை விளையவைத்து விற்ககூடாது?  இப்போதெல்லாம் அந்த மாதிரியான விளைபொருட்களுக்கு தேவையும் அதிகம், விலையும் அதிகம்” என்று சொன்னாள்.
சொன்னதோடல்லாமல் அதற்கான முயற்சியில் தகப்பனுக்கு தோளோடு தோள் நின்று களப்பணியும் செய்தாள்.
அந்த வீட்டு நண்டு முதல் சிண்டு வரை தங்களால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு செய்ய, தங்களின் முதல் விளைச்சலை “இங்கு இயற்கை முறையில் விளைவித்த காய்கறிகள் கிடைக்கும்” என்ற தகவல் பலகையுடன் அவர்கள் வீட்டுக்கு முன்னால் இருந்த இடத்தில் சிறு குடில் அமைத்து கடைபரப்பினார்கள்.
அவர்கள் வீடும் சற்றே போக்குவரத்து அதிகமான இடத்தில் இருந்ததால் வியாபாரம் விரைவாகவே சூடுபிடித்தது. நாளடைவில் அவர்களுக்கென்று தனி வாடிக்கையாளர் வட்டமும் வளர்ந்தது.
இதற்கிடையில் பரணீதரனும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். மெரிட்டில் அவனுக்கு “கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில்” இடம் கிடைக்க மெக்கானிக்கல் இன்ஜினியரிங் தேர்வு செய்து சேர்ந்து கொண்டான். 
எடுத்ததென்னவோ மெக்கானிக்கல் இன்ஜினியரிங். ஆனால் அவன் கனவு முழுவதும் தான் ஒரு கலெக்டர் ஆக வேண்டும் என்பதே. கனவை நனவாக்க கல்லூரி படிப்புடன் சேர்ந்து அதற்காக கடுமையாக உழைத்தான்.
அதிக விழுக்காடு மதிப்பெண்களோடு இன்ஜினீயரிங் தேர்ச்சி பெற்ற கையோடு சென்னையில் நல்ல பெயர்பெற்ற ஐஏஎஸ் அகாடமியில் சேர்ந்து  யூபிஎஸ் தேர்விற்காக பயிற்சி பெற்றுகொண்டிருந்த காலத்தில், கிட்டத்தட்ட தேர்வுகள் நெருங்கிய காலகட்டத்தில் அப்பா மதியழகனுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு அவனை நிலைகுலையச் செய்தது.
அது அவன் தேர்வுகளிலும் எதிரொலித்ததோ என்னவோ  அவன் நினைத்த அளவு மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. அதே நேரம் ஒரு அனுபவத்திற்காக என்று எழுதியிருந்த ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்’ நடத்திய தேர்வில் தகுதி பெற்று வேலைக்கான அழைப்பிதழும் வந்தது. இப்போது அவனுக்கு என்ன செய்வது என்று குழப்பம்.
ஆனால் திவ்யா ” நீ ஆசைப்பட்ட படிப்பை இன்னொரு தடவை முயற்சி செய்து பார் பரணி. உன்னால் முடியும். பணத்தைப் பற்றி கவலைப்படாதே அக்கா பார்த்துக்கொள்கிறேன்” என்று நம்பிக்கை ஊட்டினாள்.
அப்பா சிறு பக்கவாத தாக்குதலால் தற்காலிகமாக முடங்கியிருக்க ‘சம்பாதிக்க வேண்டிய வயதில் இருக்கும் நான் இன்னும் இன்னும் தன் சகோதரிக்கு சுமையைக் கூட்டுவதா?’ என்று தன் ஆசை, கனவு எல்லாவற்றையும் தள்ளிவைத்து ஆர்டிஓ பணியில் சேர்ந்தான் பரணீதரன்.
முதல் நான்கு வருடங்கள் சென்னையில் தான் பணி. அதன் பிறகு தெய்வாதீனமாக சொந்த ஊருக்கே வந்து சேர்ந்து விட்டான்.
&&&&&&&&&&&&&&&&&&&&
வீட்டு வளாகத்திற்குள்  கார் நுழைவதற்கு ஏதுவாக கேட்டை திறந்து வைத்து போர்டிகோவில் நடைபயின்று கொண்டிருந்தார் மதியழகன்.
ஆமாம்,.. சரியான மருத்துவ சிகிச்சை யும், அவருடைய உத்வேகமும் சேர்ந்து பூரணமாக குணமாகி இருந்தார் மனிதர்.
கார் வீட்டின் முன் சிறு குலுங்கலோடு நிற்க, தன் அலுவலக பையை எடுத்துக்கொண்டே தன் தந்தையைப் பார்த்து,”ஏம்பா, நாங்க  கேட்டை திறந்துட்டு வரமாட்டோமா? ஏன் இதெல்லாம் நீங்க பண்ணுறீங்க” என்று கேட்டுக் கொண்டே இறங்கினான் அவரின் மகன். 
அவனும் தினம் இந்த கேள்வியை கேட்கத்தான் செய்கிறான். ஆனால் பலன் என்னவோ பூஜ்யம் தான். ஒரு புன்னகையோடே கடந்து விடுவார் மனிதர்.
அவன் இறங்கியது தான் தாமதம் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல ஒரே பாய்ச்சலில் ஓடி வந்து அவனை உரசிக்கொண்டு வந்து நின்றது நல்ல பிரௌன் நிறத்தில் சிறு கன்றுக்குட்டி சைஸில் இருந்த ‘டாபர்மேன்’ வகை நாய்.
“டேய்! டேய்! நடிக்காதடா. உன் ஆளைக்கண்டா எப்படி உடம்பை வளைச்சு நெளிப்ப ன்னு எனக்கு தெரியும். சும்மா எங்கிட்ட நடிக்காதடா” என்று அதன் தலையைத் தடவியப்படியே பரணி சொல்லவும்’ நீ சொன்னது எனக்கு புரிந்தது’ எனும் பாணியில் லேசாக உறுமியபடியே தன் இல்லாத வாலை ஆட்டிக் கொண்டு சென்றது அந்த ஐந்தறிவு ஜீவன்.
குமரனும், நந்தினியும் தான் அதன் ஆல்டைம் ஃபேவரிட். அவர்கள் இருவரையும் கண்டுவிட்டால் அதன் ஆர்ப்பாட்டமே தனிதான்.
டிரைவர் வேலு காரைபூட்டி சாவியை கொடுத்து விட்டு” நாளைக்கு வரேன் சார்” என்று பௌவ்யமாக சொல்லிவிட்டு அங்கு நின்ற அவரது இருசக்கர வாகனத்தில் தன் வீடு நோக்கி சென்றார்.
வண்டிச் சாவியோடு தன் ஆஃபீஸ் பையையும் தூக்கிக்கொண்டு போர்ட்டிகோவில் இருந்த ஷு ரேக்கில்  ஷுவை கழட்டி வைத்து கொண்டே “என்னப்பா! வீடே வெறிச்சோடி கிடக்குது, நந்துவும், குமரனும் வீட்டில் இல்லையா?” என்றவனுக்கு,
“எங்கப்பா ? இந்த செமஸ்டர் முடிஞ்சதுல இருந்தே அவனை கைல பிடிக்க முடியலை.   விளையாட்டு விளையாட்டு ன்னு எப்ப பார்த்தாலும் கிரௌண்டே கதி ன்னு கிடக்குறான்” என்றார்.
“நந்து இன்னையில் இருந்து நம்ம பக்கத்து தெருவுல சுகந்தி அம்மா பொண்ணு கிட்ட 12 thக்கு டியூஷன் போறாப்பா, இப்ப வர்ற டைம் தான்” என்றவர், “அம்மா உன்னை எதிர்பார்த்துட்டே இருந்தா. இப்பதான் வீட்டுக்கு பின்பக்கமாப் போனா.
நீ போய் துணி மாத்திட்டு வாப்பா அம்மாவை டீ கொண்டு வரச் சொல்லுறேன் என்று வீட்டின் பின்பக்கமாக நகர, மகனோ ஹாலில் உள்ள மாடிப்படி வழியாக மாடியில் இருந்த தனதறைக்குச் சென்றான்.
வேலையில் சேர்ந்த மறுவருடமே தாயுமானவளாய்,  தந்தையுமானவளாய் தங்களைத் தாங்கிய தமக்கையின் திருமணத்தை சீரும் சிறப்புமாக செய்து முடித்திருந்தான்.
சமீபத்தில் வீட்டையும் தந்தையின் அனுமதியுடன் புதிப்பித்திருந்தான்.
முன்னால் இடித்து முகப்புத்தோற்றத்தை மாற்றி ஹாலையும் கொஞ்சம் பெரிதாக்கி மாடிக்குப் படி உள்ளேயே வைத்து மாடியில் ஒரு ரூம் எடுத்து, கீழே அம்மாவிற்கு கிச்சனை கொஞ்சம் நவீன வசதிகளுடன் பெரியதாக்கி, அப்படியே பாத்ரூம் வசதியுடன் புதிதாக இரண்டு ரூம்களை இணைத்து, பழைய இரண்டு பெட்ரூமிற்கு பாத்ரூம்களை இணைத்து என்று அழகான விரும்பத்தக்க மாற்றங்களை வீட்டில் செய்திருந்தான் பரணி.
அலுப்பு தீர குளித்து ஒரு டிராக் பேண்டும், டிசர்ட்டுமாய் வந்தவனுக்கு அம்மா கொடுத்த டீயும் சுண்டலும் உற்சாகத்தை அளித்தது.
கடலையைக் கொரித்துக்கொண்டே  டீ குடித்தவனிடம், “பரணி இன்னைக்கு உன்னை ஒருத்தங்க ஆஃபீஸ்ல பாத்தாங்களாம். அவங்க பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணித் தர ரொம்ப ஆர்வமாயிருக்காங்க. ஜாதகம் கூட தந்துட்டு போயிருக்காங்க, பொண்ணும் நல்லா படிச்சிருக்கு. என்னப்பா சொல்ல?” என்று ஆர்வமுடன் கேட்டார் மதியழகன்.
தன் மகனிடம் கல்யாணப் பேச்சை  கணவன் எடுத்த உடன் முகம் மலர  மகனின் மனதறிய விளைந்து தாயாரும் நகராமல் அங்கேயே நிற்க,
அப்படியே ஒரு முறை ஆழ மூச்செடுத்து தன்னை சமன்படுத்திக்கொண்டவனின் கண்முன்னே காலையில் தன்னிடம் கைகுலுக்கிய மனிதரின் முகம் வந்து போனது. ‘
‘ஓ…அப்போ சோழியன் குடுமி சும்மா ஆடலை” என்று நினைத்துக்கொண்டே,” இல்லப்பா… நான் இப்போ பண்ணிக்கறதா இல்லை” என்றான் நிதானமாக.
அவனின் நிதானமான பதிலில் தன் நிதானத்தை தொலைத்தவர் “அப்போ எப்ப தான் பண்ணுவ பரணி, நானும் இரண்டு வருஷமா கொண்டு வர்ற வரனையெல்லாம் நீ இப்படி தட்டிகழிச்சிட்டே வந்தா என்ன அர்த்தம்? எப்போ தான் நீ சம்மதம் சொல்லுவ?” என்று ஆதங்கத்தில் குரலுயர்த்த,
“நான் சம்மதம் சொல்ல பொண்ணு அவ இல்லையேப்பா” என்று நிறுத்தி நிதானமாகச் சொன்னான் பரணீதரன். அதைக்கேட்டு மதியழகன் அதிர்ந்து போனார் என்றால் கோதைநாயகியோ அதிர்ச்சியின் உச்சத்தில் உறைந்தே போனார்…

Advertisement