Advertisement

கனவு கைசேர்ந்தது.
அத்தியாயம் 01
கோபிச்செட்டிப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தமான அந்த பெரிய மைதானம் காலை ஒன்பது மணிக்கே பரபரப்பாக இருந்தது.
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஓட்டுனர் உரிமம் பெறுவதற்காக வந்த மக்களின் கூட்டம் ஒருபக்கம், தங்களின் புது வாகனங்களை பதிவு செய்து பதிவு இலக்க எண்களை பெற்றுவிட வேண்டி முகத்தில் மலர்ச்சியோடு தங்களின் புத்தம்புது வாகனங்களோடு வந்திருந்த மக்களின் கூட்டம் ஒருபக்கம், தங்களின் பழைய வாகனங்களுக்கு அவற்றின் சாலையில் ஓடும் திறனை  நிரூபித்து எப்படியாவது தகுதி சான்றிதழ் பெற்றுச் சென்றுவிட வேண்டும் என்ற படபடப்புடன்  நின்ற மக்கள் கூட்டம் ஒருபக்கம் என்று கலவையான மனநிலைமை உடைய மக்களால் நிரம்பி வழிந்தது அந்த மைதானம்.
அந்த மைதானத்தில் நின்ற அத்தனைபேரும்  வழிமேல் விழிவைத்து எதிர்பார்த்து நின்றது வட்டார போக்குவரத்து கழக அலுவரைத்தான்.
அன்று திங்கள்கிழமை வேறு. மற்ற வார நாட்களில் வரும் கூட்டத்தை விட இன்று சற்று அதிகமாகவே இருக்கும் மக்களின் வருகை.
“பிளீஸ்…  அந்தந்த இடத்தில் வண்டியைக் கொண்டு போய் எல்லாரும் ப்ராப்பரா நிறுத்துங்க, அப்பத்தான் எல்லாருக்குமே வேலை சீக்கிரமா முடியும்” என்று  கூடி இருந்த மக்களை   இரண்டு  அலுவலக ஊழியர்கள்  ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்தார்கள்.
ஓட்டுனர் உரிமம் புதிதாக எடுக்க வந்திருந்த இளவட்டம் ஒன்று தன்னுடைய அலைபேசியில் நேரத்தை    பார்த்துக்கொண்டே தனது பயிற்சிபள்ளியைச் சேர்ந்த முகவரிடம், “எப்போன்ணா வருவாரு ஆர் டி ஓ” என்றது .
“ஒன்பதரைக்கே  ஆஃபிஸுக்கு வந்துருவாருப்பா. வந்த உடனே அங்கே கொஞ்சம் பேப்பர் வர்க்ஸ் முடிச்சுட்டு டாண்னு பத்தரைக்கு இங்க வந்து இறங்கிடுவாரு” என்றார் அந்த முகவர்.
திரும்பவும் அதே இளவட்டம் ஆர்வம் தாளாமல் “இன்னைக்கு  கண்டிப்பாக லைசன்ஸ் கிடைச்சுரும்ல ண்ணா” என்றது.
“ம்ம்…  உங்களோட டெஸ்ட் டிரையல் சரியா இருந்தால்… கண்டிப்பா கிடைச்சுடும் தம்பி. எல்லாம் உங்க கையில் தான் இருக்குது” என்றார் அந்த முகவர். ஏனென்றால் அவருக்கு தெரியும் இந்த ஆஃபிஸரிடம் எந்த கொம்பனின் சிபாரிசும் செல்லாதென்பது.
அவர்கள் எல்லாரும் எதிர்பார்த்த நபர் அவர்களின் நம்பிக்கையை பொய்யாக்காமல் சரியாக பத்தரை மணிக்கு ‘வட்டார போக்குவரத்து அலுவவர்’ என்று பெயர் பொறித்த அரசு வாகனத்தில் வந்து கம்பீரமாக இறங்கினான்.
அவன் ‘பரணீதரன்’. 30 வயது முழுமையான ஆண்மகன்.  திராவிட நிறம், அந்த நிறமே  அவனுக்கு கூடுதல் தேஜஸைக் கொடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆறடி இரண்டு அங்குலத்திற்கு குறையாத உயரம், அடர்ந்த கேசம், நான் உழைக்கும் வர்க்கம் என்று சொல்லாமல் சொல்லும் உடல் உறுதி இத்தனையும் அவனை ஆண்மை ததும்பும் ஆண்மகனாய் எடுத்துக்காட்டியது என்றால்,
அனைத்தையும் கூர்மையுடன் உற்றுநோக்கும் அவன் விழிகளும்,  நிமிர்வான அவனின் உடல்மொழியுமே அவனின் நேர்மையின் திறத்தை சொல்லாமல் சொல்லியது.
பெண்களைப் பெற்ற எத்தனையோ தகப்பன்மார்கள் இந்த அக்மார்க் நல்லவனை தங்கள் வீட்டு மாப்பிள்ளையாக  கொத்திக்கொண்டு போக முயற்சி செய்தும் இன்றுவரை ஏனோ யாருக்கும் அந்த அதிஷ்டம் அடிக்கவில்லை.
நகரின் நடுவே இருக்கும் அலுவலகத்திற்கு அருகே  இவ்வளவு விசாலமான மைதானம் இல்லாத காரணத்தினால், அலுவலகத்தில் இருந்து சற்றே தள்ளி இருக்கும் மைதானத்திற்கு வர அலுவலக வாகனத்தில்  தன் உதவியாளர் ‘வரதன்’ உடன் தினமும் சின்னதாக ஒரு பயணம் பரணீதரனுக்கு.
காரிலிருந்து இறங்கியவன் நேரடியாக ஓட்டுனர் உரிமம் பெற வண்டிகளை ஒட்டிக் காட்டவேண்டிய டிராக்கின் அருகே விறுவிறு என்று சென்று நின்றான்.
பின் “வரதா!” என்று உதவியாளரின் பக்கம் கையை நீட்ட, நீட்டிய கைகளில் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் மற்றும் இன்னபிற தகவல்கள் அடங்கிய கோப்பை வைத்தார் மனிதர்.
அதன் பிறகு அங்கு வேலைகள் எண்ணெய் இட்ட சக்கரம் தங்குதடையின்றி ஒரு தாளலயத்துடன் சுற்றுமே அதுபோல விறுவிறுப்பாக நடைபெற்றது.
எல்லா வேலைகளையும் முடித்து அவன் நிமிரும் போது மணி ஒன்றை நெருங்கியிருந்தது..
“அவ்வளவு தானே வேறேதும் இருக்கிறதா?” என்று ஒரு சினேக பாவத்தோடு அங்கு நின்றிருந்த தனது அலுவலக ஊழியர்களைப் பார்த்து கேட்க
“ அவ்வளவு தான் சார். நீங்க ஆஃபீஸுக்கு கிளம்புங்க. நாங்க இதோ வந்துடுறோம்” என்றவர்களின் வார்த்தையில் ஒரு நேர்மையான, தகுதியான துறைத்தலைவருக்குக் கீழ் பணிபுரியும் கர்வம் தெரிந்தது.
அவர்களிடம் அடுத்து என்னென்ன அலுவலக நடைமுறைகள் என்று விபரம் கேட்டுக்கொண்டிருந்த விண்ணப்பதாரர்களை பார்த்துக்கொண்டே “ஓகே. எல்லாத்தையும் கிளீயர் பண்ணிட்டு சீக்கிரம் நீங்களும் ஆஃபீஸுக்கு வந்து சேருங்க” என்று சொல்லிக்கொண்டு புன்னகை முகமாகவே திரும்பியவனை
இவ்வளவு நேரமும்  கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த ஒரு  பெரியவரின் “வாழ்த்துகள் தம்பி. இப்போ நம்ம நாட்டுக்கு உங்களை மாதிரியான இளைஞர்கள் தான் தேவை” என்ற குரல் சற்றே தேக்கியது.
யோசனையுடனே அவரை சற்று உற்றுநோக்கியவன் “ நன்றி ஐயா” என்றவாறே அவரின் நீட்டிய கரத்தைப் பற்றி  குலுக்கிவிட்டு  நகர்ந்தான். முகத்தில் புன்னகையோடு  பெரியவரின் கண்கள் அவனை தொடர்ந்தன.
   மரநிழலில் நின்ற காரை நோக்கி நகர்ந்தவனை ஓட்டமும் நடையுமாய்  பின்தொடர்ந்த வரதன் “சார் இன்னைக்கு நீங்க டீயே குடிக்கலை. அம்மா குடுத்து விட்டது அப்படியே இருக்குது “ என்றார்.
தினமும் அம்மா ‘கோதை நாயகி’ அலுவலக  வாகனத்தில் சின்னதாக ஒரு ஃப்ளாஸ்கில்  வைத்து விடும் இஞ்சி, ஏலக்காயோடு   தங்கள் வீட்டு   தோட்டத்தில் நிற்கும் எலுமிச்சையில் பறித்த இரண்டு இலையையும்  போட்டு கொதிக்க வைத்த  ஃபளாக் டீ க்கு பரணீதரன் மிகப் பெரிய ரசிகன். 
பெரும்பாலான நாட்களில் அப்படியே மைதானத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டே ஒரு கப் ஃபளாக் டீயை சுமார் 11.30 மணிவாக்கில் குடித்து தன் புத்துணர்ச்சியை மீட்டுக் கொள்வான். 
“இன்னைக்கு கொஞ்சம் கூட்டம் அதிகமா இருந்துல்ல, அதான் ஞாபகமே வரலை வரதன்”, என்றவன்  புறப்படுவதற்கு தயாராக இருந்த வாகனத்தின் முன்பக்க கதவை திறந்து கொண்டு அமர, பின்புற சீட்டில் வரதனையும் ஏற்றிக்கொண்டு அந்த அரசு வாகனம் சர்ரென்று கிளம்பியது. 
அலுவலகத்திற்கு வந்த பரணீதரனை மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அலுவலக வேலைகள் தன்னைப்போல உள்ளே இழுத்துக் கொள்ள, பொழுது இறக்கை கட்டிப் பறந்தது அவனுக்கு.
ஒருவழியாக அன்றைய வேலைகளை முடித்து, அடுத்த நாளுக்கான அலுவலக அட்டவணைகளை போட்டு முடித்து நிமிர்ந்து பார்க்கையில், அவன் முன்னே சுவரில் இருந்த கடிகாரம் ஆறு மணியடித்து ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டது என்று கட்டியம் கூறியது.
கிட்டத்தட்ட அலுவலகமே காலியாகியிருந்தது. எஞ்சியிருந்த ஒருசிலருக்கு, “மீதி வேலைகளை நாளைப்பார்க்கலாம் கிளம்ப சொல்லுங்கள்” என்று வரதன் மூலம் தகவல் 
அனுப்பிவிட்டு உட்கார்ந்திருந்த இருக்கையில் பின்னே சாய்ந்து கைகளை முன்நீட்டி வளைத்து நெட்டிமுறித்து  கழுத்தை இடவலமாக திருப்பி சோம்பல் முறித்துக் கொண்டான்.  
பிறகு மேஜைமேல் கிடந்த ஃபைல்களை சேமித்து மேஜை டிராயரில் உள்ளே வைத்து மூடியவன்,  சாவியை எடுத்து தனது பேஃன்ட் பாக்கட்டில் போட்டுக்கொண்டு அலுவலகத்தை பூட்ட சொல்லிவிட்டு தனக்கு என்று ஒதுக்கப்பட்ட அரசு வாகனத்தை நோக்கி நடந்தான்…
இப்போது அந்த வாகனம் பரணீதரனின் சொந்த ஊரான இரவிபுரத்தை நோக்கிச் சென்றது…
கோபிசெட்டிபாளையத்துக்கு மேற்கே  சுமார் 28 தி.மீ தொலைவில் அமைந்திருக்கும்  எல்லா அடிப்படை வசதிகளும் நிறைந்த   கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத  சிற்றூர் அது.
மேற்கு தொடர்ச்சி மலையால் சூழப்பட்டு தென்னந்தோப்புகளும்,  கரும்பு கொல்லைகளும், மஞ்சள் வயல்களும் நிறைந்து இயற்கை அழகோடு மிளிரும் அந்த கிராமத்தில் விவசாயம் தான் முதன்மைத்தொழில்.
பரணீதரனின் அப்பா மதியழகன் மூன்று ஏக்கர் விளைநிலத்திற்கு சொந்தக்காரரான  ஒரு சிறு விவசாயி. உழைக்கத் தயங்காத மனிதர். மனைவி கோதை நாயகியும் கணவனின் உழைப்புக்கு உதவி செய்யத் சேற்றில் இறங்கத் தயங்காத பெண்மணி.
அதற்கேற்றாற் போல் விளைநிலத்தோடு சேர்ந்தாற் போல வீடு. சுற்றி வேலிப்படலோடு அந்த சிறுவீட்டை பசுமையின் பிண்ணனி யில் பார்ப்பதற்கே கவிதையாகத்தான் இருக்கும்.
பரணீதரனுக்கு ஒரு வயதே மூத்தவளான ஒரு பெண் குழந்தையும் உண்டு அந்த தம்பதியருக்கு.பெயர்  ‘திவ்யா.’ பையன் படிப்பில் சக்கரக்கட்டி என்றால் மகளை மல்லுக்கட்டி தான் பள்ளிக்கு அனுப்புவார் கோதை நாயகி.
ஆனால்  அளவில்லாத ஆர்வம் மகளுக்கு விவசாயத்தில் உண்டு. பள்ளி விட்டு வந்ததும் புத்தகப் பையை தூர எறிந்து விட்டு அவள் செல்லும் இடம் வீட்டுக்கு பின்புறமாய் இருக்கும் தோட்டத்திற்குத் தான்.
அங்கு தன் அப்பா பயிரிட்டிருக்கும் மஞ்சளும், காய்கறிகளும், பூவகைகளும், பழவகைகளும் தன்னுடன் ஆயிரம் கதை பேசுவது போல் இருக்கும் அப்பெண்ணிற்கு.
அவர்கள் தோட்டத்தின் முடிவு எல்லையைத் தொட்டவாறு ஓடும் ஒரு சிற்றோடையில் வற்றாது எப்போதும் நீர் போய்க்கொண்டு இருப்பதால் தோட்டத்திற்குள் கிடக்கும் அந்த பெரிய ஆழ்துளைக் கிணற்றின் நீர்மட்டம் எப்போதும் குறைவதே இல்லை.
பெரும்பாலும் வீட்டில் உள்ளவர்களே தோட்டத்தில் சின்னச்சின்ன வேலைகளை மதியழகனோடு இணைந்து செய்து விடுவதால் ஏதோ ஒரளவுக்கு வருமானம் பார்க்க முடிந்தது மனிதரால்.
அப்படியே அவர்கள் வாழ்க்கை சென்றுகொண்டிருந்த
காலத்தில் தான், சரியாகச் சொல்லப்போனால் பரணி
‌12ம் வகுப்பு படிக்கும்  காலத்தில், ஒருமலைப்பிரதேசத்தில்  கோதை நாயகி யின் தங்கையும் அவரது கணவரும் வேலை செய்த எஸ்டேட்டில் நடந்த நிலச்சரிவு அவர்கள் இருவரின் இன்னுயிரையும் காவு வாங்கியிருந்தது. 
தகவல் தெரிந்து அடித்துப் பிடித்துப் போன கோதை நாயகி, மதியழகன் தம்பதியினர், திரும்ப வரும் போது தன் பெற்றோருக்கு என்ன நடந்தது என்று புரிந்து கொள்ள முடியாமல் மலங்க மலங்க முழித்தபடி நின்ற  ஏழு வயது ஆண்குழந்தை குமரனையும் மூன்று வயது பெண்குழந்தை  நந்தினியையும் தங்கள் குழந்தைகளாய் மடிதாங்கி கொண்டு வந்து இறங்கினார்கள்…
‘இன்னும் இரண்டு பிள்ளைகளின் பொறுப்பா?’ என்று முகம் சுளிக்காமல் அந்த குழந்தைகளின் பொறுப்பையும் அழகாகவே ஏற்றுக்கொண்டார் மதியழகன்.
சிறுவனுக்கு ஏதோ கொஞ்சம் புரிய, விடுமுறையில்  தான் அவ்வப்போது கண்ட தன் அண்ணா அக்காவுடன் பொருந்திக் கொண்டு சூழ்நிலையை ஏற்றுக்கொள்ள பழகினான்.

Advertisement