Advertisement

அத்தியாயம் ஒன்பது :

அன்னகிளி கனவுலகில் பறந்தாள்… மிதந்தாள்…. என்று சொல்லமுடியாவிட்டாலும்…. ஒரு புதிய உணர்வு…. ஒரு இனிய கனவு……. விக்ரம்.

அன்னகிளியின் முகம் ஒரு தௌசன்ட்ஸ் வாட்ஸ் பல்ப் போல ஒளிர்ந்தது…… அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல அவளின் உள்ளத்தின் சந்தோஷம்… முகத்தில் நன்கு தெரிந்தது.

மதியம் பன்னீர் வந்து என்ன சாப்பிட உணவு வாங்கிவருவது என்று கேட்ட போது…. “சார் சொல்றதே வாங்கிடுங்க, இல்லை சார்கிட்டயே கேட்டுக்க சொன்னேன்னு சொல்லுங்க…..”, என்றாள்.

பன்னீர் சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் தொலைபேசி ஒலித்தது…. “நேத்து தானே சொன்னேன், என்ன வேணும்னு நீதான் சொல்லணும்னு”, என்று அதட்டலாக விக்ரம் கேட்க……

“நான் தான் உங்களை கேட்டுக்க சொன்னனுங்களே”,

“எனக்கு பிடிச்சதை நீ ஏண்டி சாப்பிடணும்? உனக்கு என்ன வேணுமோ சொல்ல வேண்டியது தானே……”, என்றான்.

“உனக்கு பிடிச்சதை நான் ஏன் சாப்பிடணும்…… ஏன்னா உன்னை எனக்கு பிடிச்சதுனால……”, என்று மனதிற்குள் நினைத்தவள்… சிறிது கேப் கிடைத்தாலும் “என்ன நினைச்ச சொல்லு”, என்று ஆரம்பித்து விடுவான் என்பதால்…. 

“ம், சரி! இனிமே சொல்லிக்கறனுங்க…… இப்போ நீங்க சொல்லிடுங்க”, என்றாள்.

“ம், தேறிட்டடி!”, என்று சொல்லியபடியே போனை விக்ரம் வைத்தான்.

“தேறிட்டியா அன்னகிளி நீ……..”, என்று அங்கிருந்த ஒரு சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியில் அவளை பார்த்து அவளே கேட்டுகொண்டாள்.

சிறிது நேரத்தில் பன்னீர் உணவை வாங்கி வந்து இருக்க…. அதில் சிறிய பாக்ஸ்களில் ஒன்றில் தக்காளி சாதமும், இன்னொன்றில் தயிர் சாதமும் ஊறுகாயும் இருந்தது. 

நேற்றும் சாம்பார் சாதம் மட்டுமே இருந்தது….. அவளுக்கு அவளின் ஹாஸ்டலின் உணவை ஞாபகப்படுத்தியது.

“டெய்லி, இப்படி தான் அவரு சாப்பாடு வகை வாங்க சொல்வாங்களா பன்னீர் அண்ணா”, என்று அன்னகிளி கேட்க…..

“அட, ஆமுங்க அம்மணி! ஏதாவது ஒரு வகை சாதம், அதோட முடிச்சுக்குவாருங்க….. நானும் ஃபுல் மீல்ஸ் வாங்கிட்டு வரட்டுமான்னு ஒரு தடவை கேட்டுட்டனுங்க…… அப்போ ஒரு பார்வை பார்த்தார் பாருங்க…. அதுக்கப்புறம் நான் எதுவுமே கேட்கறது இல்லீங்க…..”,

“அதுவும் இன்னைக்கு இந்த தக்காளி சாதமும், தயிர் சாதமும் ஒன் பை டூ வாங்க சொன்னாருங்க…. ரெண்டு பாக்ஸ் அவர்கிட்ட குடுத்துட்டு, ரெண்டு பாக்ஸ் உங்ககிட்ட குடுக்கறனுங்க……”,   

மேலே அன்னகிளி பேச்சை வளர்க்கவில்லை, “சரிங்கண்ணா”, என்று பேச்சை முடித்து அனுப்பி விட்டாள்.   

நன்றாக சாப்பிடக் கூடியவன், அளவாக சாப்பிடுகிறான் போல தான் தோன்றியது. நேற்று இரவு பார்த்தாளே…… பத்து சப்பாத்தியை ஐந்தே நிமிடங்களை காலி செய்தான். அதுவும் காய்கறி இந்த இரண்டு நாட்களிலும் அவள் பார்க்கவில்லை….. அசைவ உணவு என்பது போலவும் இல்லை….. ஏன் ஒரு முட்டை கூட இல்லை.  

உணவை சரியாக கவனிக்க மாட்டேன் என்கிறானா……. இல்லை உணவு ஹோட்டலில் என்பதால் அதிகம் செலவாகாமல் பார்த்துக் கொள்கிறானா தெரியவில்லை.   

எதுவாகினும் விரைவில் தான் சமைக்க ஆரம்பிக்க வேண்டும் போல தோன்றியது. விக்ரம் குறைவாக சாப்பிடுகிறான் என்ற நினைப்பே அவளின் பசியை மந்திக்க செய்தது.

கணவன்….. கணவனோடு போக வேண்டும் என்று இந்த நான்கு ஆண்டுகளாக கூட விக்ரமை அவளின் மனது தேடியது தான்……    

என்னவோ இப்போது மனது ஒரே நாளில் விக்ரமை விக்ரமிற்காகவே தேடுவது போல உணர்ந்தாள்.  

பிறகு விக்ரம் சொல்லியிருந்தபடி உட்கார்ந்து சேரை இழுத்து போட்டு….. அதில் காலை வைத்து சாய்ந்தவாறு அமர்ந்து கொண்டாள். அதிகம் டீ வீ யில் மனது செல்லாது…..

ஆனாலும் தனிமை காரணமாக அதில் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு சேனலை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள் எப்போது உறங்கினாள் என்றே தெரியாது.

மாலையில் விக்ரம் வந்து விடாமல் பெல்லை அழுத்தும் போது தான்….. கண்களை திறந்தவள் மெதுவாக சுவற்றை பற்றிக்கொண்டு நடந்து வந்து கதவை திறந்தாள்.

“ஏன் இவ்வளவு நேரம்…”, என்றபடியே விக்ரம் உள்ளே நுழைய….. “தூங்கிட்டனுங்க”, என்றாள்.

“இவ்வளவு பெரிய கும்பகர்ணியாடி நீ”, என்று பேசிக்கொண்டே…….. மறுபடியும் சுவரை பிடித்து உள்ளே போக ஆரம்பித்தவளை கையை பிடித்துக் கொண்டு வந்து சேர் அருகே விட்டவன்…….

“இதுக்கு தான் நைட் நல்லா தூங்கனும்கறது…. என்னை பார்த்து சைட் அடிச்சிட்டே இருக்க கூடாது”, என்று சொல்லி ஷூவை கழட்ட ஆரம்பித்தான்.

அங்கே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அன்னகிளி விக்ரமிடம் அவளாக கொடுக்கவும்… “எஸ், தண்ணி குடிக்கணும் போல இருக்கு”, என்று அதை வாங்க முற்பட்டவன்…

“நோ, நோ, ஷூல கை வெச்சிட்டேன்….. கை கழுவாம பாட்டில் தொட முடியாது”, என்றான்.

அவள் சிறிதாய் புன்னகைக்கவும்…. “என்ன என்ன நினைச்ச….”,

“ஷூ தொட்டுட்டு பாட்டில் தொட முடியாது……. ஆனா ஷூ போட்டுட்டு இப்படி உள்ள ஹால் வரைக்கும் வரலாமா….”,

“ஒஹ், ஆமாமில்ல! நான் கவனிக்கலை…… இனிமே பார்த்துக்கறேன்…. இப்போ என்னை நீயே குடிக்க வை!”, என்று வாயை திறக்க…… அன்னகிளி அருகில் வந்து ஊற்றவும்… குடித்து…… போதும் என்பது போல சைகை செய்யவும் அவள் நிறுத்தினாள்….

ஆனால் அன்னகிளி ஊற்றியதால்…. சற்று வாயின் ஓரம் எல்லாம் தண்ணீர் வடிந்து ஈரமாக இருக்கவும்….. “ஒரு தண்ணியை குடிக்க வைக்க தெரியாதா”, என்று அன்னகிளியை அதட்டியவன்…..

“இன்னும் கிட்ட வா!”, என்று அதட்டல்  த்வனி சற்றும் குறையாமல் கூப்பிட்டு…. அவள் நெருங்கவும்… அமர்ந்திருந்தவன் அவளின் வயிற்றை மறைத்திருந்த சேலையில் அப்படியே முகம் வைத்து வாயை துடைத்து…. “இப்போ போ!”, என்றான்.

அவனின் செய்கை……. அன்னகிளியை, “அச்சோ”, என்று மனதிற்குள் ஒரு உணர்வுகளின் பிடியில் சொல்ல வைத்தது. இவன் தெரிந்து செய்கிறானா இல்லை தெரியாமல் செய்கிறானா…. குழம்பினாள்.

அவளுக்கு இது வேண்டும் போலவும் இருந்தது…. ஆனால் அவன் மனது என்னவென்றே தெரியாமல் இருப்பதால் வேண்டாம் போலவும் இருந்தது….

அவள் இந்த மாதிரி எண்ணத்தில் இருந்தவள், விக்ரமை பார்க்க வேண்டும் என்று பார்க்காமல்…….. மீண்டும் அவனையே பார்த்து யோசனையில் உளழ…..

“திரும்பவும் என்னை சைட் அடிக்கறியா?”, என்றான்.

அன்னகிளி பார்வையை விலக்கவும்…. “சரி, சரி, கிளம்பு, உங்கப்பா வீட்டுக்கு போவியாம்!”, என்றான்.

அன்னகிளிக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியவில்லை…

தன் காதுகள் சரியாக தான் கேட்டதா என்பது போல விக்ரமை பார்க்க…. அவன் காலை மடியில் தூக்கி வைத்து சாக்சை கழட்டிக் கொண்டிருந்தான்.

“என்ன சொன்னீங்க?”, என்றாள் படபடக்கும் இதயத்தோடு……..

“உங்க அப்பா வீட்டுக்கு போக சொன்னேன்!”, என்று சொல்லி அவன் இரு கால்களிலும் சாக்சை கழட்டி நிமிர்ந்த போது……. கண்களில் கண்ணீர் கரகரவென்று வடிய…. தன்னையே பார்த்துக் கொண்டு அன்னகிளி நிற்கவும்…..

“ஏய், என்னடி ஆச்சு?”, என்று விக்ரம் கேட்டபடி எழுந்து அவளை நெருங்கினான்.

“வீட்டுக்கு போ!”, என்று சொல்பவனிடம்……. “இல்லை நான் போகமாட்டேன்”, என்று கெஞ்சி கொண்டா நிற்க முடியும்…..

பதில் பேசாமல் திரும்பி அவள் போக முற்பட…. “நில்லுடி!”, என்று அவளை அதட்டியவன்… “முதல்ல என்னை திரும்பி பார்”, என்று சொல்லியபடி அசையாமல் நின்றான்.

விக்ரம் குரல் பணிந்து அன்னகிளி திரும்பி பார்க்கவும்……. “எதுக்கு இப்போ கண்ணை கசக்குற…….”,

அழுகை வந்த போதும்….. வீட்டுக்கு போக சொல்லிவிட்டான் என்ற கோபத்தில் அன்னகிளி அசையாமல் நின்றாள்………. வாயே திறக்கவில்லை.

“இப்போ சொல்ல போறியா இல்லையா?”, என்று விக்ரம் மறுபடியும் அதட்டினான். அப்போதும் வாயை திறக்கவில்லை.

இரண்டு மூன்று முறை விக்ரம் கேட்டும் வாயை திறக்கவில்லை…… “இவ்வளவு பிடிவாதமா உனக்கு! இப்படியே நில்லுடி!”, என்று சொல்லியபடி கோபமாக விக்ரம் ரூமினுள் சென்று விட்டான்.                

நிறைய நாட்களாக அன்னகிளி தன் பிடிவாதத்தை காட்டவேயில்லை….. ஏனென்றால் யாரிடமும் காட்ட தோன்றவில்லை….. பேச்சுக்கள், சத்தங்கள் அதிகம் இல்லாவிட்டாலும் மிகுந்த பிடிவாதம் அன்னகிளியிடம்…. அமைதியாக இருந்தே காரியத்தை சாதித்து கொள்ளும் பிடிவாதம்.

இப்போது அந்த பிடிவாதம் விக்ரமிடம் வெளிப்பட துவங்கியது. ஒரு பக்கம் அழுகையும் வந்தது…. ஒரு பக்கம் கோபமும் வந்தது.

இரண்டு நாட்களாக ஒரு தேடவைக்கும் அருகாமையை கொடுத்து விட்டு….. இப்போது கூட அவ்வளவு உரிமையாக தன் வயிற்றின் மேல் முகம் துடைத்து விட்டு…… “உங்கப்பா வீட்டிற்கு போ!”, என்கிறான்.

திரும்பவும் பழைய வாழ்க்கையா……. அப்படியே நின்றிருந்தாள்.      

விக்ரமும் உள்ளே சென்றவன்…. குளித்து முடித்து தேவையானவைகளை எடுத்து வைக்க துவங்கினான். அவனுடைய யோசனைகள் எல்லாம் செய்ய போகும் காரியத்தில் இருந்தது……. அன்று சாமி கும்பிட கூட வெளியில் வரவில்லை.

அவன் வெளியே வந்த போது கிட்ட தட்ட முக்கால் மணி நேரம் ஆகியிருந்தது.

அன்னகிளி இன்னும் இருந்த இடத்தில் அசையாமல் நின்றிருப்பதை பார்த்தவன்…… “ஐயோ! கால் வலிக்க போகுது! என்ன பண்ற?”, என்று பதறி அருகில் வந்தவன்……. அவளை பிடித்து இழுத்து சேரில் உட்கார வைத்தான்.

“என்னடி? எதுக்கு இப்போ இப்படி பண்ற…… நான் முதல்லயே சொல்லியிருக்கேன்….. என்னோடது ரொம்ப பொறுப்பான வேலை…… இப்படி சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் என்னை டென்ஷன் பண்ண கூடாது”, என்று கோபமாக பேசினான்.

“மனசுல இருக்கறதை சொல்லணும்னு சொல்லியிருக்கேன்! சொல்லு!”, என்று அதட்டவும்….

“எது சின்ன விஷயம்? என்னை நீங்க போக சொல்லீடீங்க!”, என்று கண்களில் கண்ணீரோடு ஒரு ரோஷமான குழந்தையின் பாவனையில் சொல்லவும்……

விக்ரம் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு… “லூசுடி நீ… வீட்டுக்கு போக சொன்னா ஏன்னு கேட்கணும்”, என்றவன்…..

“தூத்துக்குடில ஒரு விசாரணைக் கமிஷன்…… என்னை பார்க்க அப்பாயின்ட் பண்ணியிருக்காங்க….. அதுக்கு எத்தனை நாள்னு தெரியாது…… அடுத்த வாரம் சென்னையில ஒரு அஃபிசியல் மீட்டிங்…. இவ்வளவு நாள் நான் இங்க இல்லாம நீ தனியா இருக்க முடியாது”,

“இங்க வீட்ல எந்த பொருளும் இல்லை….. அதனால உங்க வீட்ல இருந்து யாரையும் இங்க வந்து இருங்கன்னு சொல்ல முடியாது…… அதனால உன்னை அங்க கொண்டு போய் விடலாம்னு நினைச்சேன்”, என்று அவன் சொல்ல சொல்ல……

மனதிற்குள் எழுந்த ஆசுவாசத்தில் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டாள். கண்களில் கண்ணீரும் பெருகியது.

“யாரோ என்னை சகிக்க முடியலைன்னா என்னை திரும்ப அனுப்பிச்சுடுங்கன்னு சொன்னாங்க…. எங்கண்ணனுக்கு கல்யாணம் ஆகற வரைக்கும் இருக்கேன்னு சொன்னாங்க….. அப்புறம் எனக்கு விவாகரத்து கொடுக்கறேன்னு சொன்னாங்க… அது யாருன்னு தெரியுமா?”, என்று விளையாட்டு போல அன்னகிளியிடம் கேட்க……

அன்னகிளியின் தேம்பல் அதிகம் ஆகியது.

“திட்டக் கூடாதுன்னு நினைச்சாலும்….. நீ என்னை திட்ட வைக்கிற…. எருமை மாடு தாண்டி நீ”, என்று சொல்லியவன்…. அவள் முன் நின்று கைகளில் முகத்தை புதைத்து தேம்பிக் கொண்டிருந்த அவளின் கைகளை பிரித்து….. தன்னை சுற்றி கைகளை போட வைத்து அவள் முகத்தை தன் வயிற்றோடு அணைத்துக் கொள்ள…….என்னவோ அன்னகிளிக்கு இன்னும் அழுகை பொங்கியது.

அவனை அணைத்தவாறே என்ன வென்று சொல்ல தெரியாமல், வெகு நேரம் அழுதாள்…….. அவள் அழுதுவிடட்டும் என்பது போல விக்ரமும் ஒன்றும் சொல்லவில்லை.

அழுது முடித்தாலும் தேம்பல் இருக்க….. “அனு டைம் ஆகுது!”, என்றான் முதல் முறையாக அவளின் பேரை சுருக்கி சொல்லி……

அணைத்தவாறே அன்னகிளி முகம் நிமிர்த்தி அவனை பார்க்க……. அவளின் நெற்றியில் மென்மையாக தன் இதழை ஒற்றி எடுத்தவன்……. “நாளைக்கு காலையில நான் தூத்துக்குடில இருக்கணும்….. அதுக்கு முன்னாடி கொஞ்சம் ஷாப்பிங் பண்ணனும்……. அப்புறம் உன்னை உங்க வீட்ல விடணும் திரும்ப வந்து நான் கிளம்பணும்…”, என்றான்.

“பெரிய ஜட்ஜ், சொல்றதை ஒழுங்கா சொல்ல தெரியாம….. என்னை அழ வெச்சிட்டு”, என்பது போல ஒரு பார்வை பார்த்து அவனை சுற்றியிருந்த கையை விலக்க……

அவளின் பார்வையை படித்தவன்….. “என்னடி என்னை திட்ற மனசுக்குள்ள?”, என்று அதட்டினான்.

“சொல்ல முடியாது போ!”, என்பது போல மறுபடியும் ஒரு பார்வை பார்த்தவள், எழுந்து செல்ல முற்பட்டாள்.

“சரியான பிடிவாதம்டி நீ……. இப்போ உன்கூட பேசிகிட்டு நின்னேன், மறுபடியும் எனக்கு டைம் போறதே தெரியாது….. கிளம்பு கிளம்பு…. அழுது அழுது முகமே ஒரு மாதிரி இருக்கு…….”,

“கொண்டு போய் விடும்போது உங்கண்ணன் கந்தசாமி பார்த்தான், என்னை நொந்தசாமி ஆக்கிடுவான்”, என்று விக்ரம் சொல்லவும்….. அன்னகிளியின் முகத்தில் ஒரு புன்னகை தானாக மலர்ந்தது.

“போ! போ! பைவ் மினிட்ஸ்ல வா!”, என்றான்.

ரூமினுள் சென்றவள்…. அவன் எடுத்து வைத்திருந்த பொருட்களை ஆராய்ந்தாள்…. இரண்டு செட் டிரஸ் மட்டுமே இருந்தது….

“இதை எடுத்து வைக்கவா இவ்வளவு நேரம்?”, என்பது போல மனதிற்குள் நினைத்தவள்… வெளியே வந்து…… “அங்க ரெண்டு செட் துணி தானுங்க இருக்கு, வேற ஒன்னுமே இல்லீங்களே”, என்றாள்.

“அதை தான் நானும் சொல்றேன்….. நான் ஷாப்பிங் போகணும்னு…… மத்த டிரஸ் எல்லாம் ரொம்ப டல்லா இருக்கு…… கிளம்பிட்டியா…. நான் ஷாப்பிங் பண்ணிட்டு உன்னை அப்படியே உங்க ஊருக்கு கொண்டு போய் விட்டுடறேன்…… நான் இல்லாம இந்த கார்ல உன்னை தனியா அனுப்ப கூடாது… இது என்னோட யூஸ்க்கு குடுத்தது”.  

தலையை மட்டும் சற்று திருத்தியவள்…. “போகலாம்”, என்பது போல வந்து நிற்கவும்….

“அப்பவும் ஃபேஷ் வாஷ் பண்ணலை!”, என்று கடிந்து கொண்டே கிளம்பி…… பன்னீர் வண்டியை ஓட்ட…… நகரின் மையத்தில் இருந்த ஒரு புகழ் பெற்ற ஷாப்பிங் மாலுக்கு சென்றனர்.

விக்ரமின் கையை பிடித்துக் கொண்டு மெதுவாக நடந்து வந்தாள். காலில் செருப்பு இல்லை….. காரணம் சிறு பேண்டேஜ் இன்னும் காலில் இருந்தது…… அதுவுமில்லாமல் செருப்பும் இல்லை…… ஏனென்றால் விக்ரம் தான் ஆக்சிடென்ட் நடந்த போது அவளின் ஹை ஹீல்ஸ் செருப்பை தூக்கி எறிந்து இருந்தானே.

“முதல்ல எனக்கு மூணு செட், வைட் பேன்ட், வைட் ஷர்ட் எடுக்கணும்….”, என்று அங்கிருந்த ஆண்களுக்கான உடைகள் இருந்த ஒரு ஷோ ரூமிற்கு சென்றான்.

பன்னீர் விக்ரமிற்கு முன் சென்று, விக்ரம் யார் என்பது போல சொல்லியிருக்க….. அவனை கடையின் ஓனரே வந்து வரவேற்கவும்….

ஒரு சேர் போட்டு அன்னகிளியை சௌகர்யமாக அமர வைத்து….. உடைகள் பார்க்க அதன் பிரிவிற்கு சென்றான்.

சென்றவன், சென்றவன் தான்… அரை மணிநேரம் ஆகிவிட்டது… ஆளையே காணோம். ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர்.. இவளுக்கு ஒரு காஃபி வந்தது. குடிக்கலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.

“உங்க சார் தான் மேடம் உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க….”, என்று சொன்ன பிறகே அதை கையில் எடுத்தாள்.       

 பிறகு அன்னகிளி அங்கிருந்தவற்றை பார்வையால் அளந்து கொண்டிருந்தாள்……. யாரோ தன்னை விடாமல் பார்ப்பது போல ஒரு உணர்வு உந்தவும்…… கவனமாக தன்னை சுற்றி பார்த்தாள்….

இதற்கு அங்கே அதிகம் பேர் இல்லை…. ஆங்காங்கே ஒன்றிரண்டு பேர் இருந்தனர். பார்வை அங்கிருந்த ஒருவன் மேல் நிலைத்தது, ஏனென்றால் அவன் அன்னகிளியை பார்த்துக் நொடியும் பார்வை விலக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் வினோத்……. அன்னகிளியின் மேல் பைத்தியமாக இருந்தவன்.

நான்கு வருடங்களுக்கு பிறகு பார்ப்பதால் விடாமல் பார்த்துக் கொண்டிருந்தான். மிகவும் தீவிரமான பார்வை……. மனதிற்குள் ஒரு குளிர் பிறந்தது அன்னகிளிக்கு…

முகத்தில் ஒன்றும் காட்டவில்லை…. யாரோ போல ஒரு பார்வை பார்த்து திரும்பிக்கொண்டாள்…….

அன்னக்கிளி தன்னை பார்த்துவிட்டதில்….. அருகில் வந்தான்.

“எப்படியிருக்க அன்னம்? கால்ல என்ன கட்டு?”, என்றான்……

யாரோ ஒருவன் அன்னகிளியிடம் வந்து பேசுவதை பார்த்த பன்னீர், யார் இவன் என்பது போல பார்த்துக் கொண்டே அருகில் வரவும்…… “சாரை வரச்சொல்லுங்க”, என்றாள் அன்னகிளி.

சாதாரணம் போல தான் சொன்னாள்….. அதனால் பன்னீருக்கு வித்யாசமாக எதுவும் தோன்றவில்லை யாரோ தெரிந்தவர் போல என்று விக்ரமை அழைக்க சென்றான்.  

பன்னீர் அந்த புறம் சென்றதும்…. “யாரது சாரு?”, என்றான்.

அன்னகிளி பேசாமல் அமர்ந்திருக்கவும்….. “நான் கட்டின தாலியை தூக்கி வீசிட்டு அந்த ஒன்னுமில்லாத விக்ரமை கல்யாணம் பண்ணிகிட்ட…….   அவன் என்னடான்னா உன்னை அப்போவே விட்டுட்டு போயிட்டான்”,

அழுததில் அவள் முகம் வேறு ஒரு மாதிரி இருந்தது.

“இப்படி பரிதாபமா உட்கார்ந்து இருக்க….. இப்போ யாரு இந்த சாரு புதுசா, உங்கண்ணன்னா அண்ணன் தான் சொல்லியிருப்ப”, என்றான்.

அப்போது பன்னீர் வந்து….. “சாரு டிரெஸ் எடுத்துட்டாராம் அம்மணி…..  போட்டு சரி பார்த்துட்டு உடனே வர்றாராம்”,

“நான் உடனே வர சொன்னேன்னு சொல்லுங்க”, என்றாள் சற்று கட்டளை போலவே. ஏதோ சரியில்லை என்று பன்னீரின் மனதிற்கு பட்டது.

பன்னீர் உடனே செல்லவும்…. அன்னகிளியை ஆராய்ந்து பார்த்தான் வினோத்…. அவனை பித்தாக்கிய அன்னகிளியின் செய்கைகள் இப்படி இருக்காது… ஏன் பார்வையே இப்படி இருக்காது…… தோற்றத்தில் அதிக வித்தியாசமில்லை…. ஒரு பருவப் பெண்ணிலிருந்து… பெண்ணின் தோற்றத்திற்கு மாறியிருந்தாள்……

மற்றபடி அப்படியே இருந்தாள், அழகும் அப்படியே இருந்தது…. ஆனால் வினோத்தை அதிகம் கவர்ந்த அவளின் மருண்ட பயப்பார்வை எல்லாம் இல்லை….. ஒரு நிமிர்வு இருந்தது.

இனி தாங்கள் வாழ்கையில் சேர முடியாது என்றாலும் வினோத்தை இழந்து விட்டோம் என்ற உணர்வாவது அன்னகிளிக்கு எழ வேண்டும் என்று அவ்வளவு ஆசை வினோத்திற்கு…..

அதுவும் திருமணமானதும் விக்ரம் அவளை விட்டு சென்று விட்டான்….. என்றதை விட அவனுக்கு சந்தோஷமான விஷயம் இதுவரை உலகில் கிடையாது. அவளுக்கு வேண்டும்.. நான் கட்டின தாலியை என்னுடைய முகத்தில் தூக்கி எறிந்தாள் அல்லவா என்று தான் தோன்றியது.

தான் அன்னகிளிக்கு கட்டாய தாலி கட்டினோம் என்பதே அவனுக்கு மறந்து போனது…. அன்னகிளியின் மேல் மட்டில்லா காதல் அவனுக்கு……. அன்னகிளி அவன் பால் மனம் சாய்வதாக இல்லை என்று தெரிந்தவுடன்…. காதல் என்ற பெயரில் கட்டாய தாலி கட்டிவிட்டால் தாலிக்காக அன்னகிளி தன்னுடன் சேர்ந்து வாழ்ந்து விடுவாள் என்று தப்புக் கணக்கு போட்டு விட்டான். 

ஆனால் நடந்ததே வேறு…… அவன் கட்டிமுடித்த சிறிது நேரத்திற்கெல்லாம்… தாலியை கழற்றி அவன் முகத்திலேயே விட்டெறிந்தாள் அன்னக்கிளி.  

இப்போதும் கண்டிப்பாக அன்னகிளி கஷ்டப்பட வேண்டுமென்றெல்லாம் எண்ணம் இல்லை வினோத்திற்கு….. ஆனால் தன்னை இழந்துவிட்டோம்….. ஒருவன் பின்னாலேயே சுற்றி காதலை யாசித்தானே அவனை இழந்துவிட்டோம் என்று அவள் ஒரு நிமிஷமாவது வருத்தப்பட வேண்டும் என்று நினைத்தான்.   

விக்ரம் என்று ஒருவன் அன்னகிளியின் வாழ்க்கையில் வந்த பிறகு… விக்ரம் கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்பொழுதும் அந்த எண்ணம் அன்னகிளிக்கு அவள் இந்த உலகில் வாழும்வரை வராது என்று வினோத்திற்கு புரியவில்லை.

அதற்குள் வினோத்தின் போன் அடிக்க… அதை எடுத்து கட் செய்தான் வினோத் ……

அவன் செல்லை பார்த்துக் கொண்டிருக்கவும்….. அங்கே வந்த விக்ரம் வினோத்தை கவனிக்கவில்லை.

விக்ரமின் பார்வை முழுக்க அன்னகிளியின் மேல் இருக்க… அன்னகிளியின் அருகில் வந்தவன்….. “ஏண்டி அவ்வளவு அவசரமா வர சொன்ன…..? அப்போதான் பேன்ட் கழட்டினேன். புதுசு சரியா இருக்கான்னு போட்டு பார்க்கறதுகுள்ள…. இந்த பன்னீர் வந்து அம்மணி உடனே வரச்சொன்னாங்கன்னு ட்ரையல் ரூம் கதவை தட்டிட்டே நிக்கறார்…. நீங்க போங்க நான் வர்ரேன்னாலும் நீங்க வாங்கன்றார்……”,

“அவர் பண்ணின டென்ஷன்ல அப்படியே ஓடி வந்து….. உன் மானத்தை வாங்கியிருப்பேன்…..”, விக்ரமின் பேச்சுக்களால் எப்பொழுதும் போல அன்னகிளி அவனை பார்க்கவும்….

“ஹேய்! ஐ அம் யுவர் ப்ராபர்ட்டி….. இனிமே நான் அப்படில்லாம் வர கூடாது……”,

“அப்போ இதுக்கு முன்னாடி வந்தீங்களா”, என்றாள்.

“பார்றா….. என் வீட்டம்மா பேச கூட கத்துக்கிட்டா”, என்று சத்தமாக சிரித்தவன்…… “நான் அவ்வளவு டென்சனா ஓடி இங்க வந்து பார்த்தா அம்மணி ஹாயா உட்கார்ந்து இருக்கீங்க….”,   

“நீ மட்டுமிருந்தா அப்படியே ஓடி கூட வருவேன்…… இது கடைடீ அவசரமா மாட்டிகிட்டு வந்தேன்… ஷப்பா என்ன?”, என்றான்.

வினோத் விக்ரமையும் எதிர் பார்க்கவில்லை….. இந்த மாதிரி  ஒரு பேச்சையும் எதிர்பார்க்கவில்லை…. இப்படி ஒரு அன்னியோனியத்தையும் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.

அடிக்கடி யாருக்கும் தெரியாமல் எப்படியும் அன்னகிளியின் சௌக்கியத்தை எப்படியாவது தெரிந்து கொண்டு விடுவான்.

எப்போது திரும்ப விக்ரம் அன்னகிளியின் வாழ்க்கையில் வந்தான் என்று வினோத்திற்கு தெரியவில்லை.  அதுவும் சார் என்று சொன்னவுடனே ஒருவன் பயபக்தியோடு ஓடுகின்றான். விக்ரமின் பதவியும் தெரியவில்லை.

அன்னகிளியின் முகத்தில் விக்ரமை பார்த்து ஒரு புன்னகை வந்து ஒட்டியது….  ஒரு மாதிரி அழுது சோர்வாக இருந்த முகத்தில் புன்னகை தோன்றவும்….. அன்னகிளியை அது அழகாக காட்டியது.

“மறுபடியும் என்னை சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டியா….. எதுக்கு அவ்வளவு அவசரமா வர சொன்னே”, என்றான்.

“நான் சைட் அடிக்கலீங்க………. நீங்க தான் என்னை மட்டுமே பார்க்கறீங்க… சுத்தி பாருங்க…. இவருக்கு உங்களை பார்க்கணுமாங்க”, என்று என்றுமில்லாமல் உரிமையாக விக்ரமிடம் பேசியபடி வினோத்தின் பக்கம் பார்வையை திருப்பினாள் அன்னகிளி.

“எவன் அவன்? என்னை பேன்ட் கூட போட விடாம ஓடி வரவைக்க ட்ரை பண்ணுனவன்”, என்று குறும்பாக பேசிக்கொண்டே பார்த்தவன்…… அங்கே வினோத்தை எதிர்பார்க்கவில்லை….

விக்ரமின் முகம் கடுமையாக மாற…..

வினோத்தின் முகத்தில் ஒரு பதட்டம் ஏறிக்கொண்டது. எத்தனை வருடமானாலும் விக்ரம் அடித்த அடி வினோத்திற்கு மறக்காது. 

“நீ காதலிச்சா அந்த பொண்ணு திரும்ப காதலிக்கணும்னு கட்டாயமாடா…. தாலியாடா கட்டுவ நீ……..”, என்று அவன் அடித்த அடிகள்….????

Advertisement