Advertisement

அத்தியாயம் இருபத்தி ஐந்து :

அடுத்த நாள் காலை விக்ரம், தனக்கு ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறேன் என்று கூறியும்… பிடிவாதம் பிடித்து ஹாஸ்பிடல் கூட்டிச் சென்று டாக்டர் சொன்ன டெஸ்ட்களையெல்லாம் செய்து அவர், “ஒன்றுமில்லை”, என்று சொன்ன பிறகே… விட்டாள் அன்னகிளி.

அன்று விக்ரமினால் கோர்ட் போக முடியவில்லை….. அவர்கள் வீடு வந்த போதே மதியம் மணி மூன்று…..

விக்ரம் சாய்வாக அமர்ந்திருக்க, அவனருகில் போய் அமர்ந்தவள், “சொல்லுங்க!”, என்றாள்…..

“என்ன சொல்றது…..!”,

“உங்க காதலை பத்தி….!”,

“அதான் நேத்தே உன்னை பத்தி சொல்லிட்டனே…..”,

“ப்ச்! நான் அதை கேட்கலைங்க! என்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி இருந்த லவ் பத்தி கேட்டேனுங்க…..”,

“கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமா!”,

“எஸ், கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமுங்க”, என்றாள் பிடிவாதமான குரலில்…

“அவ பேர் சாஷா!”, என்று விக்ரம் சொன்ன போதே…. விக்ரம் குரலில் அவள் பெயரை சொல்லும்போது இருந்த மென்மை நிச்சயம் இன்னும் விக்ரம் மனதில் அந்த பெண் இருக்கிறாள் என்று சொல்லாமல் சொன்னது….

அதை உணர்ந்த போதும் அன்னகிளிக்கு ஏனோ கோபம், பொறாமை என்பது போன்ற உணர்வுகள் எதுவும் தோன்றவில்லை……

“ஆனா அவளுக்கு அப்படி கூப்பிட்டா பிடிக்காது, அவளுக்கு தமிழச்சின்னு கூப்பிட்டா தான் பிடிக்கும்…. அவ ஒரு ஈழத் தமிழச்சி”, என்றான்…. “அந்த வார்த்தை சொன்னா அவளுக்கு அவ்வளவு இஷ்டம்”,

“நான் லா காலேஜ் படிச்சபோ ஃபர்ஸ்ட் இயர்ல இருந்தே பார்ட் டைமா ஈவினிங் அண்ட் மார்னிங்…. ஒரு ப்ரைவேட் மெடிக்கல் காலேஜ் கேண்டீன்ல வேலை பார்த்தேன்…..”,

“அவளும் அப்போ தான் காலேஜ் முதல் வருஷம் சேர்ந்திருந்தா….. 1990ல இந்தியாக்கு அகதியா வந்தவங்க… சென்னையில இருக்குற கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்ல தான் இருந்தாங்க….”,

“இருந்தாங்கன்னா……. யாரு யாரு?”, என்று அன்னகிளி இடை புக..

“அவளும் அவங்க அம்மாவும், ஒரு அண்ணனும்….. இன்னும் ரெண்டு அண்ணனுங்க அவளுக்கு இருந்தாங்க….. ஒருத்தர் நார்வேலயும்…… ஒருத்தர் லண்டன்லையும் இருந்தாங்க…..”,   

“மொத்தம் நாலு பேரா…….”,

“ம்!”, என்று தலையாட்டினான்…..

“ரெண்டு அண்ணனுங்க வெளிநாட்ல இருந்ததுனால அவளை பிரைவட் மெடிக்கல் காலேஜ்ல சேர்த்து விட்டிருந்தாங்க…”,   

“அங்க மெஸ்க்கு சாப்பிட வரும் போது எனக்கும் அவளுக்கும் பழக்கம்…… நல்ல ஃபிரண்ட் அவளுக்கு நான்…. அப்படி தான் நான் நினைக்கிறேன்…. ஏன்னா எல்லோரோடையும் நல்லா பழகினாலும் அதிகமா என்கிட்டே தான் பேசுவா”,

“பார்க்க எப்படி இருப்பாங்க?”,

“ரொம்ப உயரம், ரொம்ப அழகு, இப்படியெல்லாம் எதுவும் கிடையாது… சராசரி உயரம், சராசரி அப்பியரன்ஸ்… ஆனா ஒரு குட்டி பொம்மை மாதிரி அழகா இருப்பா….. டால் தான் அவ……”,

“ஆனா தமிழச்சி பேச்சு…… ஷ்! எப்பவும் அவ நாடு, அவ மக்கள், அவங்க கஷ்டங்கள் இப்படி தான் இருக்கும்…… எல்லோர்கிட்டயும் இதை பத்தி பேசுவாளா தெரியாது! ஆனா என்கிட்டே ரொம்ப பேசுவா”,           

“தமிழச்சி அவ நாட்டை விட்டு இங்க வந்தப்போ, அவளுக்கு அஞ்சு வயசோ ஆறு வயசோ அவ்வளவு தான் இருக்கும்… அவ நாட்டை அவ எந்த பார்வையில பார்த்திருப்பா அந்த வயசுலன்னு கூட தெரியாது….. ஆனா எப்பவும் அவளுக்கு அவ நாட்டோட நினைவு தான்….”, 

“ஐஞ்சு வருஷம் அவளோட பேச்சை நான் கேட்டிருக்கேன்….. தினமும் ஒரு மணிநேரமாவது என்னோட பேசாம போக மாட்டா…. அதுவும் தலைவர் தலைவர்ன்னு எப்பவும் அவரை பத்திய பேச்சு தான்….”,

“அவளோட பேச்சுல தலைவர் மேல எனக்கு ஒரு அபிமானமே ஏற்பட்டு போச்சு… அதான் லதா அக்காக்கு குழந்தை பொறந்தவுடனே குழந்தைக்கு பிரபாகரன்னு பேர் வெச்சேன்…..”,

“தலைவரோட இயக்கம் மேல அவ்வளவு ஈடுபாடு அவளுக்கு…. மெடிசின் படிச்சு அவளோட மக்களுக்காக உழைக்கணும்….. அது தான் மெடிசின் சேர்ந்தேன்னு சொல்லுவா….”,

“தமிழச்சிக்கு அகதின்ற வார்த்தையே பிடிக்காது… 83 வரைக்கும் வந்தவங்களுக்கு எல்லாம் ரேஷன் கார்ட் கொடுத்து இங்க இந்திய குடியுரிமையையும் கொடுத்தாங்க…. அன்னைக்கு இருந்த சூழ்நிலை அவங்களுக்கு நிறைய சலுகைகள் கொடுத்தது…..”,

“அவங்க நாட்ல இருந்து இங்க வர்றது போறது எதுக்கும் கெடு பிடி கிடையாது… ஆனா அந்த சூழ்நிலைகள் மாறிச்சு… ரொம்ப கெடு பிடி ஆகிடுச்சு..”,   

“அதுக்கு பின்ன வந்தவங்க அகதிகள்… அவங்களுக்கு ரொம்பவும் கட்டுபாடுகள் இங்க… முகாம்குள்ள போற வர்ற நேரம் கூட குறிக்கணும்… வெளில எங்கயாவது போகணும்னா Q பிரிவுக்கு தகவல் சொல்லணும், அவங்க பெர்மிஷன் வாங்கணும்…. சொந்தமா எதுவும் வாங்க முடியாது…..  எப்பவும் அவங்க மேல ஒரு கண்காணிப்பு இருக்கும்….”,   

“இப்படி நிறைய நிறைய…… இதெல்லாம் அவளுக்கு  பிடிக்காம தான் ஹாஸ்டல்ல சேர்ந்தா…..”, 

“அவங்க நாடு…. அங்க என்ன நடக்குது….. இந்த சிந்தனை தான் சதா சர்வ காலமும்… அவ தான் எனக்கு இப்படி சாமி கும்பிட கத்துக் கொடுத்தா… இரு வர்றேன்”, என்று வேகமாக உள்ளே சென்றவன்….. ஒரு பைலோடு வந்தான்….

“இது அவளோட கவிதை…. நிறைய கவிதை எழுதுவா……. நான் பேசும்போது நிறைய இங்கிலீஷ் வொர்ட்ஸ் யூஸ் பண்ணி அவ கிட்ட திட்டு வாங்குவேன்….”,

“இங்கிலீஷ் காரங்க கூட கிராமர்லாம் பார்க்க மாட்டங்க…… ஆனா நீங்க ஏன் அதை பிடிச்சிட்டு இவ்வளவு தொங்கறீங்கம்பா…… அவளோட தமிழ் அற்புதமான தமிழ்… அவகிட்ட கெஞ்சி கூத்தாடி ஒரு ரெண்டு மூணு கவிதையை மட்டும் வாங்கி வெச்சிருக்கேன்…. அவ நாட்ல இருக்குற மாதிரி தான் அவ எண்ணங்கள், சொல்கள், செயல்கள் எல்லாம் இருக்கும்….”,

“அதுல ஒன்னு தான் இது”, என்று அவன் ஒரு லேமினேட் செய்திருந்த பேப்பரை கொடுத்தான்…..

அன்னகிளி அதை படித்தாள்…..

குருவிகளின் ஷ்ருங்கார சத்தத்தில் கண்விழித்தோம் அன்று,

குண்டுகளின் சத்தத்தில் தூங்கா விழிகளானோம் இன்று, 

உறக்கம் தழுவுமா எங்கள் விழிகளில், மீண்டும் பறவைகள் வருமோ எங்கள் கூட்டுற்கு . 

 

சொந்த நாட்டில் அனாதைகள்  ஆனோம், தூர தேசத்தில் அகதிகள் ஆகிறோம்,

எங்கள்  முகவரி என்ன, எங்கள் சுயம் என்ன, சொல்ல வாராயோ காலமே,

ஆனால் காலன் வருகிறான் முந்திக்கொண்டு, 

இப்படியே எங்கள் சரித்திரம் முடிந்திவிடுமோ…….. 

கார்த்திகேயா, வருவாயோ வேலவா 

அசுரர்களை வதம் செய்ய இன்னொரு சூரசம்மாஹார அவதாரம் எடுப்பாயோ…..

                                                            

 

 ( கவிதை எழுதியது தோழி ஜாஸ் )

 

. படித்தாள்….. திரும்ப திரும்ப படித்தாள்…….

“அவளுக்கு கண்டி கதிர் காமர்ன்னா அவ்வளவு இஷ்டம்…..”,

“இது அவளோட இன்னொரு கவிதை”,

குருதியின் வாடையில்லாத காற்றை சுவாசிக்க வேண்டும்

சுதந்திர தென்றல் எங்களை சுகமாக உறங்க வைக்க வேண்டும்

தமிழ் எங்களின் மூச்சாக இருக்க வேண்டும் 

உரிமை எங்கள் வாழ்வாக இருக்க வேண்டும் 


தீபாவளிக்கு மட்டும் வேட்டு சத்தம் கேட்க வேண்டும்

குண்டு சத்தமில்லாத குயிலோசையின் கீதம் கேட்க வேண்டும் 

பிறக்கும் குழந்தைகள் அன்னையின் தாலாட்டு மட்டும் கேட்க வேண்டும்
வேலைக்கு சென்ற கணவன் உயிருடன் வீடு திரும்ப வேண்டும்
பிள்ளைகள் பாடசாலையில் உரிமையின் குரல் படிக்க வேண்டும் 

நடுநிசியில் நாய்களின் தொல்லையில்லாத  இரவுகள் வேண்டும்

என் பெண்டிர்களின் கற்புக்கு பங்கம் வராத எங்களின் நாடு வேண்டும் 

வெள்ளி நிலா வெளிச்சத்தில் சுதந்திர உலா செல்ல வேண்டும் 

இரவு  நட்சத்திரங்களின் வெப்பத்தில் குளிர் காய வேண்டும் 

வயல்களில் நாற்று மட்டும் நட்டுயிருக்க வேண்டும், கண்ணிவெடிகள் அல்ல 

எல்லாமும் இருந்து ஒன்றுமில்லாத நிலை மாற வேண்டும் 

கனவு காண உரிமை வேண்டும் 

 

( கவிதை எழுதியது தோழி ஜாஸ் )

 

அன்னகிளி அந்த பெண்ணின் உணர்வுகளை படிக்க முற்பட்டாள்….

நாம் தினமும் செய்திகளில் கேட்கும் ஒரு செய்தி அவ்வளவே, நம் அண்டை நாட்டு தமிழ் மக்களின் நிலை….. அதை மீறி நமக்கொன்றும் தோன்றாது……

ஆனால் அவர்களுக்கு அது அப்படி அல்லவே…. அனுபவிப்பவர்களுக்கு தானே புரியும் அதன் வலியும் வேதனையும்… மொத்த உலகமும் வேடிக்கை பார்த்துக் கொண்டு தானிருந்தது….. இருக்கிறது…..

எதுவும் செய்ய விழையவில்லையே….. அவ்வபோது ஐ நா சபையில் இருந்து பொறுப்பில் இருப்பவர்கள் போய் பார்வையிட்டு வருவதை தவிர….

நாம் என்ன செய்கிறோம்.. நம் நாட்டின் நிலை என்ன இதில்…. அமைதி படை, அதிரடி படை என்று சினிமாவின் பெயர்கள் போல தான் நம் செயல்பாடுகள்…..

நமக்கும் அவர்களுக்கும் வாய்கால் வரப்பு தகராறுகள் போல தான் பிரச்சனைகள்….

நாம் இதில் தலையிட முடியாதா……. தலையிட்டு எதுவும் செய்ய முடியாதா…

விடை காண முடியாத கேள்விகள்…….. விடை காண விரும்பாத கேள்விகள்….

அன்று இன்னும் நிலைமை மோசம் அல்லவா…

அன்னகிளியின் சிந்தனைகள் இப்படி ஓடும் போதே….. 

“எஸ்! அவ போராளி….”, என்று ஒப்புக்கொடுத்தான் விக்ரம்….   

“ஆமாம்! என்னை பொருத்தவரை அவங்க போராளிங்க…… யாரோ பயங்கரவாத அமைப்புன்னு சொல்லிட்டு போறாங்க…… எனக்கு அதுல உடன் பாடு கிடையாது”,

“இங்க இருந்தாலும் அவ நாட்ல நடக்கறதை முடிஞ்ச வரை தெரிஞ்சி வெச்சிருப்பா…… சில இயக்கங்களோட அவளுக்கு நெருங்கிய தொடர்பு கூட…..”,

“அப்பப்போ பிட் பிட் ஆ சொல்லுவா… அவங்க இனக் கலவரங்கள் பத்தி….. மனித உரிமை அத்து மீறல்கள் எல்லாம் பத்தி சொல்லுவா…..”,

“அவளோட தலைவரை பத்தி… அவர் இயக்கம் பத்தி….. அதன் செயல்பாடுகள் பத்தி…… அவங்க கோரிக்கைகள் பற்றி…..  அவங்க போர் முறைகள் பத்தி…..”,    

“எனக்கே அந்த வயசுல நிறைய விஷயம் புரியாது…… சாஷாக்கு எப்படி இதெல்லாம் தெரிய வருது… எனக்கு வியப்பா இருக்கும்….. அவளுமே கடைசி வரைக்கும் புரியாத புதிர் தான்…..”,

“நீங்க விரும்பினது அவங்களுக்கு தெரியுமா……”,

“ஏன் தெரியாம….? நான் வாய் திறந்து அவகிட்ட சொன்னது இல்லை! ஆனா அவளுக்கு நிச்சயம் தெரியும்….!”,

“நீங்க ஏன் சொல்லலை…..”,

“எல்லா பெண்கள் மாதிரி தமிழச்சி கிடையாது.. அவ எண்ணம், சொல், செயல் எல்லாம் வேற…… அவ கிட்ட போய் ஐ லவ் யூ சொல்றது….. நிஜமான உளறல் தான்….”,

“காதல்ன்றது சொல்ல முடியும்… ஆனா சொல்லி புரிய வைக்க முடியாது…… தானா தான் புரியும்…. நான் சொல்லலைன்னாலும் அவளுக்கு புரிஞ்சிருக்கும்… எனக்கு அது ரொம்பவும் நிச்சயம்……”,

“காதல்ன்றது வாழ்க்கை கிடையாது…. ஆனா வாழ்க்கையில கண்டிப்பா காதல் வேணும்….”,

“அவளை பொருத்தவரை ஒரு இம்மியளவு கூட நினைவுகள் பிறழாது… எப்பவும் அவளோட மக்கள்… அவள் இயக்கம்… அதுல அவ எந்த வகையில இருந்தான்னு எனக்கு தெரியாது…… ஆனா இருந்தா…”,

“அவ நாட்ல நடந்த தமிழ் மக்களுக்கு எதிரான கோர முகங்கள்… சாஷா சொல்லும்போது ரத்தம் கொதிக்க தான் செய்யும்….”,

“இப்படி ஒரு சூழல்ல நான் போய் காதலை பத்தி எங்கே சொல்லுவேன்…”,   

“நிறைய விஷயம் என்கிட்டே சொல்ல மாட்டா… ஒரு பக்கம் மருத்துவ படிப்பு… இன்னொரு பக்கம் இயக்க சிந்தனைகள்…… அவளுக்கு இருந்த ஒரே ரிலாக்சேஷன் என்னோட பேசறது தான்…….”,

“சாஷாகிட்ட எனக்கு காதல் இருந்தது…. இப்பவும் இருக்கு… இல்லைன்னு நான் பொய் சொல்ல மாட்டேன்….. ஆனா அதையும் விட ஒரு hero workship எனக்கு அவ மேல…”,

“பட்! நீ தான் என்னோட நிஜம் இனிமே… அவ என்னோட நினைவுகள் மட்டும் தான்…”, 

“என் அப்பா அம்மா எப்படி என் வாழ்க்கையில இருந்தாங்களோ, அப்படி சாஷாவும்  என் வாழ்க்கையில இருந்தா.. என்னோட எல்லா செயல்பாடுகள்ளையும் அவ இருந்தா…..”,

“நானும் அவங்களோட இணைஞ்சிக்கறேன்னு கூட சொல்லியிருக்கேன்…”,

“நீ இதுக்கு செட் ஆக மாட்ட விக்ரம்ன்னு சொல்லிட்டா.. நீ தமிழன் தான்! ஆனா நீ அதைவிட இந்தியன்னு ஒரே வார்த்தையில என் வாயை அடைச்சிட்டா….. ஏன்னா நான் indian goverment service க்கு அப்போ இருந்தே சைட் பை சைட் படிச்சிட்டு இருந்தது அவளுக்கு தெரியும்…

“அதுவுமில்லாம உன்னால உன் அக்கா தங்கையை விட முடியாது விக்ரம் பா! நிஜம் தான்…… அப்போ சௌமிக்கு கல்யாணம் கூட ஆகலை….”,   

“ஒரு வகையில உண்மை தான்…. நான் மனசளவுல இந்தியன் தான்…. எனக்கு என் நாடு முக்கியம்…. என் நாட்டுக்கு எதிரா என்னால எப்பவுமே செயல் பட முடியாது… என் சிந்தனைகள் என் நாட்டை ஒட்டியே இருக்கும்….”,  

“அதனால என்கிட்டே சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லுவா…. மத்ததை சொல்ல மாட்டா…”,     

“எனக்கு அந்த கேண்டீன் வேலை பெருசா அவசியமில்லாத போது… பார்ட் டைமா அதை விட வேற நல்ல வேலை கிடைக்கும்னு இருந்த போதும் அவளுக்காக போனேன்….”,  

“2007 ல அவ நாட்ல போர் மும்முரமா இருந்த நேரம்…. இவ படிப்பை முடிக்கும் சமயம்… அங்க அடிபட்ட மக்களுக்கு போய் சேவை செய்யணும்னு துடியா துடிச்சா…”,

“ஒரு நாள் சொல்லாம கொள்ளாம காணாம போயிட்டா……. சாஷா இப்போ இருக்காளா இல்லையான்னு கூட எனக்கு தெரியாது…. ஆனா அவ திரும்ப வரணும், கல்யாணம் குழந்தைகள்ன்னு தமிழச்சியோட எண்ணம் போனா….. அதுல நான் தான் இருப்பேன்னு எனக்கு ரொம்ப நிச்சயம்….. அதனால அவளுக்காக காத்திருக்கணும்னு நினைச்சேன்…..”,

“இது லதா அக்காவுக்கு நல்லா தெரியும்…. தெரிஞ்சும் உன்னை எனக்கு கல்யாணம் செஞ்சி வெச்சாங்க…… எனக்கு அவங்க மேல அதுல ரொம்ப கோபம்…..”,

“உன்னோட எனக்கு கல்யாணம் நடந்தது 2010 ல…. அதுவரைக்கும் நான் அவளுக்காக காத்திருக்கணும்னு தான் நினைச்சிருந்தேன் …. ஒரு வேளை அவ திரும்ப வந்துட்டா…”,

“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்ச கொஞ்ச எண்ணங்களை மாத்திக்க ஆரம்பிச்சேன்….. அவ வரமாட்டான்னு மனசுல பதிய வைக்க ஆரம்பிச்சேன்…. எங்க இருந்தாலும் அவ உயிரோட இருக்கணும், நல்லா இருக்கணும்ன்னு தினமும் கடவுளை கும்பிட ஆரம்பிச்சேன்……”,   

“இது தமிழச்சி கடைசியா என்கிட்டே எழுதி கொடுத்த கவிதை….”,     

குருதியோடு கூக்குரல் எழுப்புகிறோம்

அது கூப்பாடாக தெரிகிறது…

கூக்குரலோ கூப்பாடோ அது ஓலங்களாக மாற்றபடுகிறது

என் வீடு எனக்கில்லை என் நாடு எனக்கில்லை

என் வீடும் என் நாடும் வேண்டும்

எங்களுக்கு நிம்மதி வேண்டும்

உறக்கத்தை கூட உரிமையோடு உறங்க முடிவதில்லை.

எடுத்துக் கொண்டவை பறி கொடுத்தவை என்பதை விட

இது பிடுங்கப் பட்டவை

இதுவரை போனது போனதென்று நினைத்தாலும்

இருப்பதும் இன்னும் போய்க்கொண்டிருக்கிறது

கிட்டுமா இவை…. நிலைக்குமா எங்கள் நிம்மதி  

இது கனவான ஒன்றா

கனவே கை சேருமா?  

( மல்லிகா )

“நம்ம மேக்சிமம் என்ன பண்ணுவோம்? அவங்க நிலை குறிச்சு வருத்தப்படுவோம்….   வேற ஒன்னும் பண்ண முடியாது…. எத்தனை எத்தனை பேர் போர்ல உயிர் நீத்தாங்கன்னு வரும்போது என் மனசு துடிச்சு தான் போகும்…. போர்ல யாவது தெரிஞ்சு உயிர் போகும்…. இனப் படுகொலை….. அந்த வார்த்தைக்கு பலியானவங்க எத்தனை பேர்……”,  

“நம்ம வருத்தபடறதை தவிர ஒன்னும் செய்ய முடியாது இல்லையா….”,

“பார்ப்போம்….. எத்தனையோ அரசியல் மாற்றங்கள்…. அவங்க வாழ்வில் நிம்மதி வருதான்னு பார்ப்போம்……”,

“என் தமிழச்சியோட கனவு…. அவங்க மக்களோட நிம்மதி….. அது கை கூடணும்… அது தான் என்னோட கனவும் கூட…….. ஏன் பலரோட கனவும் கூட”,

“ஆனா இது ஒரு விடை தெரியாத கேள்வி.. இதை நினைச்சு வாழ்க்கையில நான் எதையும் நிறுத்த முடியாத சூழ்நிலை…….. உன்னால….. என்னோட வேலைனால…”,

“இங்க என்னால எப்படி சிறப்பா நியாமா செயல்பட முடியும்னு நினைச்சு என் மனசை தேத்திக்குவேன் என்றான்…..

“ஆனா இன்னொன்னும் சத்தியமான உண்மை…. தமிழச்சி போனப்போ எனக்கு அதை ஏத்துக்கற மனப்பக்குவம் இருந்திச்சு! ஆனா உன்னை விட்டு…….. ம்கூம்! என்னால ரெண்டு நாள் கூட நிம்மதியா இருக்க முடியலை…. மனசு நீ வேணும்னு தவிச்சு தான் போச்சு…..”,

“அதுவும் காதல் தான், இதுவும் காதல் தான்.. காதல் ரெண்டு தடவை வராதுன்னு யார் சொன்னா?”, என்றான்…  

“நான் சொல்லலை போதுமா!”, என்றாள் அன்னகிளி விக்ரமின் கையை ஆதரவாக பற்றி அவன் மனது புரிந்தவளாக…… 

“நிச்சயமா தமிழச்சி நல்லா இருப்பாங்க…. நம்புவோம்! நம்பிக்கை தான் வாழ்க்கை… அதே மாதிரி மாற்றம் ஒன்று தான் மாற்றமில்லாதது….. அந்த மக்களோட நிலை மாறும்னு நம்புவோம்…. இத்தனை பேர் அதுக்காக உயிரை தியாகம் செஞ்சிருக்காங்க… அவங்க தியாகங்கள் வீண்போகாது! போகாது! நம்புவோம்!”, என்றாள்.

“சாஷா மாதிரி இன்னும் எத்தனையோ பேர் அவங்க வாழ்க்கையை அர்ப்பணிச்சு இருப்பாங்க….. கண்டிப்பா அவங்க கனவு கை சேரும்!”,

“தேங்க்ஸ்”, என்ற வார்த்தையை ஆரம்பித்தவன், அன்னகிளியின் முறைப்பிற்கு பயந்து… அப்படியே வார்த்தையை நிறுத்த…

“அது, அந்த பயம் இருக்கணுமுங்க!”, என்று விக்ரமின் தோள் சாய்ந்தாள் அன்னகிளி….  

“உனக்கு பொறாமையாவோ? கஷ்டமாவோ இல்லையே?”,

“சேச்சே! நிச்சயமா இல்லை…. என்னை மாதிரி ஆளை உங்க தமிழச்சி சந்திக்கலை…. நான் நிச்சயம் அவங்க பின்னாடி போயிருப்பேன்.. எனிவே அவங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டுமுங்க…”,     

அன்னகிளி அதை செய்வாளோ இல்லையோ அவள் சொன்னது விக்ரமிற்கு ஒரு சந்தோசம்…

“வர, வர, நீ ரொம்ப தேறிட்ட பேபி!”, என்றான்.  

“பின்ன திருவாளர் விக்ரம் அவர்களின் மனைவியாக்கும்…..”, என்று சொன்னவளின் தோள் சுற்றி கை போட்டவன்….

மெதுவாக அவள் காதில், “எனக்கு அது நேத்தே தெரிஞ்சிடுச்சு!”, என்று சொல்ல…

“ஷ்! அதெல்லாம் ரகசியம்!”, என்று சொல்லி….. இன்னும் வாகாக அவன் மீது சாய்ந்து கொண்டாள்.    

கனவு……

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கனவு……

அது கை சேர…..

கனவு காண்வோம்………                  

      

Advertisement