Advertisement

அத்தியாயம் இருபத்தி மூன்று :   

வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது விக்ரமிற்கும் அன்னகிளிக்கும்…. எத்தனைகெத்தனை விக்ரம் பேசினானோ அத்தனைக்கத்தனைஅன்னகிளி அமைதியாக அவன் பேசுவதை கேட்டுக் கொள்வாள்……

“நான் பாட்டுக்கு லொட லொடன்னு பேசறதையெல்லாம் கேட்டுட்டு ஒரே வார்த்தையில  எல்லாத்தையும் மாத்திடற நீ”, என்பான்…..

உண்மையும் அதுதான்…… விக்ரம் ப்ளானாக போட்டு தள்ளினாலும்… அன்னகிளி ஒரு சிறு கண்ணசைவில் அதிருப்தியை காட்டினாலும் மாற்றி விடுவான்…

விக்ரமிற்கு எப்படியோ அன்னகிளிக்கு அந்த வகையில் மிகுந்த ஆச்சர்யம்….. சிறு வேலை என்றாலும் அவளிடம் கேட்டோ சொல்லியோ செய்வான்….. அவள் இது சரியில்லை வேண்டாம் என்று சொல்லும்போது அவன் மனதிற்கு அது சரி என்று பட்டால் பொறுமையாக அவளுக்கு விளக்கி…. அன்னகிளியின் வாயால் அதை சரியென்று சொல்ல வைத்து செய்வான்……

இவருக்கு என்னை அவ்வளவு பிடித்திருக்கிறதா? இதெல்லாம் காதலின் வெளிப்பாடா! இல்லை மனைவி என்பதால் இப்படி நடந்து கொள்கிறாரா என்ற சந்தேகம் எப்போதும் மனதின் மூலையில் ஓடிக்கொண்டிருக்கும்…..

எது எப்படியோ அவர்களின் காதல் வாழ்க்கை இருவருக்கும் தெவிட்டவேயில்லை….. காலையில் எழுந்து விக்ரம் வாக்கிங் போகும் போது அன்னகிளி உறங்கிக்கொண்டு தானிருப்பாள்……

அந்த நேரம் மட்டுமே வீட்டிலிருக்கும் போது விக்ரம் அவளை தனியாக விடும் நேரம்……. மற்ற நேரம் எல்லாம் விக்ரம் அன்னகிளியின் பின் சுற்றுவான் இல்லை அவளை சுற்ற வைப்பான்……

ஆம்! அன்னகிளியையும் சுற்ற வைத்தான்……

அவள் களைத்துறங்கும் நேரம், “உன்னை இந்த பாடு படுத்தறனே, உனக்கு அலுப்பா இல்லை….”, என்று விக்ரம் விஷமமாக ஆளை விழுங்கும் பார்வையோடு கேட்கும் போது…

“உங்களுக்கு இருக்குங்களா? இல்லையில்லை! அப்புறம் எனக்கு மட்டும் எப்படி இருக்குமுங்க!”, என்று சற்றும் குறையாத பார்வையோடு பதில் கேள்வி கேட்பாள்….

“சான்சே இல்லடி! நீ விக்ரம் பொண்டாட்டியா மாறிட்ட!”,

“நீங்க மாத்திடீங்கன்னு சொல்லுங்க..”,  

அன்னகிளிக்கு விக்ரமை தவிர வேறு எந்த ஞாபகங்களும் இல்லை…… அவளுக்கு வாழ்க்கையில் இருந்த ஒரே குறை… “நான் இவ்வளவு அவரை தேடுகிறேனே…… அவரும் என்னை தேட வேண்டுமே…”, 

விக்ரமும் இதே அளவு தன்னை மனதளவில் தேடுகிறானா என்பது தான்….

உடலளவில் அவளுக்கு சற்றும் சந்தேகம் இல்லை… அனுதினமும் புது புது தேடல்கள் அன்னகிளியிடம் விக்ரமிற்கு இருக்கும்…..

அதுவும், “உனக்கு திருப்தியா இருந்ததா”, என்று கேட்டு தினமும் அன்னகிளியிடம் வாய் மேல் ஒரு அடி வாங்காமல் உறங்க மாட்டான்…

“ஐயோ! இப்படி கேட்காதீங்க! இப்படி பேசாதீங்க!”, என்று அவள் கூச்சத்தில் நெளியும் போதும்… சற்றும் லஜ்ஜையின்றி அவளிடம் அந்த நாள் இல்லாவிட்டால் மறுநாள் பதில் வாங்காமல் விட மாட்டான்…….

“என்கிட்டே இந்த மாதிரி கேட்டீங்கன்னா…… இனிமே இந்த பெட் ரூமுக்குள்ள நான் வரமாட்டேனுங்க”, என்று அவள் முரண்டு பிடித்தாள்…

“ஆமாமில்ல! வாழ்க்கை முழுசுக்கும் இதுக்கு நீ தான்னு கமிட் ஆகிட்ட…… அட்லீஸ்ட் லொகேஷன்னாவது மாத்துவோம்….. ஹால், ஓகே வா!”, என்று சொல்லி….. அதற்கு மேலும் சொல்லி…… அன்னகிளி அவனை விரட்டி விரட்டி அடிக்கும் வரை ஓய மாட்டான்…..     

அன்னகிளியின் ஆழ்மனதில் விக்ரமை பற்றிய சஞ்சலங்கள் அவளுக்கு சற்றும் நினைவுக்கு வராதபடி அவளை மயக்கி தான் வைத்திருந்தான் விக்ரம்…. அப்படி ஒரு எண்ணம் அன்னகிளிக்கு இருந்தது.

வாழ்க்கை இப்படி வண்ண மயமாக சென்றது……. லதாவின் குழந்தைக்கு ஐந்து மாதம் ஆகியது…. கந்தசாமியின் மனைவி கலைவாணியும் மூன்று மாத கர்ப்பமாக இருந்தாள்….. 

அன்னகிளியின் தந்தை ஒரு மாலை நேரத்தில் விக்ரமை பார்க்க வந்திருந்தார்….. அவர் மட்டுமே வந்தார் மரகதத்தை கூட அழைத்து வரவில்லை..

அவருடைய பிள்ளைகளுக்கான கடமை முடிந்துவிட்டதாக நினைத்து சொத்துகளை பிரிக்க நினைத்து விக்ரமை பார்க்க வந்திருந்தார்… 

அவருக்கு என்ன தெரியும் ?????

அன்னகிளி அவருக்கு காபி கொடுத்து உபசரித்த போது…… “நான் மாப்பிள்ளை கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்மா”, என்று அவளையும் அந்த இடத்தை விட்டு அனுப்பி வைத்தார்… 

எதற்கு இவர் மட்டும் சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறார் என்று விக்ரம் யோசிக்கும் போதே…… விஷயத்திற்கும் வந்தார் முத்துசாமி…..

“என்னோட மூணு பிள்ளைகளுக்கும் கல்யாணம் ஆகிடுச்சு.. நான் நல்லா இருக்கும் போதே அவங்கவங்களுக்கு என்ன சொத்துன்னு பிரிச்சு குடுத்துட்டா…. பின்னாடி அவங்களுக்குள்ள பிரச்சனையை வராதில்லீங்களா தம்பி”,  என்றார்….

“ம்! நீங்க சொல்றதும் சரிதானுங்க!”, என்றான்……     

“நீங்க தான் எனக்கு யோசனை சொல்லணும்”, என்றார்.

“நான் இதுல யோசனை சொல்றதுக்கு என்ன இருக்குங்க…..?”,

“என் பொண்ணுக்கும் நான் கண்டிப்பா சொத்து கொடுக்கணும்…. நீங்க வேண்டாம்னு சொல்றீங்க…… அது எப்படி… நீங்க ஒரு ஜட்ஜ்…. உங்களுக்கு தெரியாததில்லை பொண்ணுங்களுக்கும் சொத்துல பங்கு இருக்குன்னு தீர்ப்பு சொல்றவர் நீங்க……. அன்னகிளிக்கு அவளோட பங்கு கண்டிப்பா கிடைக்கணும்”, என்றார்…..

“ஒரு மூணாவது மனுஷனோட பார்வையில இருந்து இதை பாருங்க….. என்ன பண்ணலாம் நீங்க சொல்லுங்க”, என்று முடிவை அவனிடமே விட்டார்….

கண்டிப்பாக விக்ரமிற்கு வரதட்சணை போல எதுவும் வாங்கும் எண்ணம் கிடையாது என்றாலும்…… “சொத்தில் நீ பங்கு வாங்கக் கூடாது”, என்று மனைவியானாலும் சொல்லும் உரிமை அவனுக்கு கிடையாது அல்லவா… அது அவளின் பிறப்புரிமை…..

தன்னுடனான திருமணம் அதை தடை செய்ய கூடாது….. 

“யோசிக்கலாம் மாமா! இப்போதைக்கு நீங்க யார் கிட்டையும் இதை பத்தி கலந்து ஆலோசிக்காதீங்க!”, என்றான்…

கொள்கைகள், கோட்பாடுகள் என்று இருக்கும் மனிதன் தான் விக்ரம்…… ஆனால் அதே சமயம் யதார்த்தமான மனிதன்…….

அவன் இருக்கும் வரை அன்னகிளிக்கு எந்த பிரச்சனையுமில்லை….. அவன் சம்பளம்.. அவன் குடும்பம் நடத்துவதற்கு, அவன் பிள்ளைகளின் படிப்பிற்கு, இப்படி எல்லாவற்றிற்கும் எதேஷ்டம்…….

ஆனால் அவன் ஒரு நேர்மையான வாழ்வை வாழ முற்படுகிறான்…… அவன் வருமானம் வாழ்கையின் தேவைகளுக்கு வசதி வாய்புகளுக்கு பயன்படும்….. ஆனால் சொத்து என்ற பெரிதாக அவனால் எதுவும் வாங்க முடியாது…..

இரண்டு இழப்புகளை எதிர்பாராத நேரத்தில் சந்தித்தவன் விக்ரம்… நாளை அது போல அவனுக்கு ஏதாவது ஆகிவிட்டால் அன்னகிளியின் நிலைமை….. அண்ணன்கள் ஆதரித்தாலும்… அவளுக்கு உரிமையானதை இப்போது வேண்டாம் என்று சொல்லிவிட்டு…. பிறகு அடுத்தவர் கையினை அவள் எதிர்பார்க்கும் நிலைமைக்கு தான் வைத்து விடக் கூடாதல்லவா….

நன்றாக யோசித்தவன்….. முத்துசாமியிடம் தொலைபேசியில் திரும்ப பேசினான்…… “நீங்க என்ன பண்ணலாம்னு இருக்கீங்க”, என்று….

முத்துசாமி மிகவும் தெளிவாக, சரியாக பிரித்திருந்தார்….. 

“இப்போ பசங்க நிறைய தொழில் புதுசா தொடங்கி வளர்ந்திருக்காங்க…. அது இதுல சேராது…. நான் சம்பாரிச்சதும் என் பூர்வீக சொத்தும் தான் இதுல சேரும்…..   சொத்தை நாலு பங்கா போடறேன்….”,

“மூணு பங்கு, மூணு பசங்களுக்கு…… நாலாவது பங்கு எனக்கும் என்ற சம்சாரத்துக்கும்… எங்களுக்கு அப்புறம் எங்க ரெண்டு மருமகளுங்களுக்கு அது”,

“என் சம்சாரத்து நகை என் மகளுக்கும் மருமகள்களுக்கும் மூணு பேருக்கும் சமமா”, என்றார்……     

“உங்களுக்கு ஏதாவது யோசனை இருந்தாலும் சொல்லுங்க”, என்றார்…..

அவர் சொல்வதே மிகவும் நியாயமான ஒன்றாக தான் பட்டது….     

“அதே மாதிரி சீர்வரிசை நீங்க வாங்கலை சரி….. ஆனா நான் என் பொண்ணுக்கு பண்ணி வெச்ச நகையை நீங்க வாங்கிக்கணும்… என் பொண்ணுக்கு நானும் மரகதமும் ஆசை ஆசையாய் வாங்கினது, அதை வேண்டாம்னு சொல்லக் கூடாது….”,

“அவ என் பொண்ணு! என் ரத்தம்….! நான் அவளுக்கு குடுக்க கூடாதுன்னா எப்படி…. நாளைக்கு உங்களுக்கு ஒரு பொண்ணு இருக்கும் போது தான் என் உணர்வுகள் உங்களுக்கு சரியா புரியும்”, என்றார் உணர்ச்சி மேலிட….

“என் பையன் அவன் பேசுன பேச்சுக்கு நடந்துகிட்ட முறைக்கு நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்… அதை காரணமா வெச்சு நீங்க மறுக்காதீங்க”, என்றார்…

“இப்பவும் சொல்றேன்! எனக்கு எதுவும் வேண்டாம்! நான் அந்த முடிவுல ஸ்திரமா இருக்கேன்…. அதே சமயம் நீங்க சொல்றதும் நியாயம் தான்! மனைவின்னாலும் அவளோட உரிமையை மறுக்க எனக்கு உரிமை கிடையாது…”,

“எதுக்கும் அன்னகிளிகிட்ட பேசறேன் அப்புறம் சொல்றேன்!”, என்று சொல்லி தொலைபேசியை வைத்தான்…. ஒரு நீண்ட தொலைபேசி உரையாடல். 

மிகவும் சீரியசான மனநிலையில் இருந்தான் விக்ரம்…… அதற்கு அப்படியே எதிர்மாறான மனநிலையில் இருந்தாள் அன்னகிளி…

மிகவும் உற்சாகமாக, “நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி!”, என்றாள்….

“ம்கூம்! இது பதில் கிடையாது..!”,

“இல்லை! நீங்க சொல்றது தான்!”, என்றாள் பிடிவாதமாக……

“இல்லை அனு! அவங்க உன் அப்பா அம்மா… உன்னை அருமை பெருமையா வளர்த்தாங்க! நான் பார்த்திருக்கேன்! எனக்கு தெரியும்….. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டதால உன் உரிமைகள் மறுக்க படக் கூடாது! இல்லையா!”, என்றான்…..

“நீங்க முதல்லயே சொன்னது தானே எதுவும் வேண்டாம்னு…..”, என்றாள் விளையாட்டுத்தனமாக….

“பீ சீரியஸ்……”, என்று அவளை அதட்டியவன்……   

“சொன்னேன் தான்!  ஆனா யோசிச்சு பார்த்தேன்….. நாளைக்கே எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா உனக்கு செக்யூரிட்டி வேணும் இல்லையா! உன்னை நடுத்தெருவுல நான் விட முடியாது இல்லையா! உனக்கு  உரிமையானது என்னால உனக்கு மறுக்கப்படக்கூடாது”,

“என்னை கல்யாணம் பண்ணிகிட்டதுக்காக நீ நிராதரவா நிற்க கூடாது! பணம் வாழ்க்கைக்கு அவசியமான் ஒன்னு… நான் இருக்குறவரைக்கும் கண்டிப்பா உனக்கு அந்த தேவையிருக்காது! ஆனா நான் இல்லாத பட்சத்துல….”, என்று சொல்லிவிட…..

அவள் இருந்த மனநிலையில் அன்னகிளியால் அந்த வார்த்தைகளை தாங்கவே முடியவில்லை……    அவளுக்கு என்ன பேசுவது என்றும் தெரியவில்லை….

அவளால் விக்ரம் இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது…..

“நீங்க இல்லைனா நானும் இருக்க மாட்டேன்!”, என்று உணர்வு பூர்வமாக சொல்ல..

“ப்ச்! உளறக் கூடாது….! யாருக்காகவும் யாரோட வாழ்க்கையும் நிற்காது…. யார் இருந்தாலும் இல்லாட்டாலும் அவங்கவங்க வாழ்கையை அவங்கவங்க வாழணும்”, என்றான்…….

அது உண்மையான பதில் தான்….. ஆனால் அதை விக்ரம் சொன்ன நேரமும் சொன்ன விதமும் தவறு…. “அப்போ நான் இல்லைனாலும் நீங்க வாழுவீங்க…. என்னோட மறைவோ பிரிவோ உங்களை எந்த வகையிலும் பாதிக்காது…..”,

“அப்போ உங்களுக்கு என் மேல லவ் இல்லை வைஃப்ன்றதுக்காக என்கூட வாழறீங்க!”, என்று அவளின் நீண்ட நாள் சந்தேகத்தை சொன்னாள்.

“உன் கேள்வியே அபத்தமானது…. எங்க அக்கா வீடு அது… எங்க அப்பா அம்மா போனதுக்கு அப்புறம் எனக்கும் என் தங்கச்சிக்கும் அடைக்கலம் கொடுத்த வீடு….. அந்த வீட்டு பொண்ணை நான் மரியாதையா தான் பார்க்கணும்… காதல்ன்ற உணர்வோட எப்படி பார்த்திருப்பேன்…..”,

“உன்னோட எனக்கு கல்யாணமே என்னோட சம்மதமில்லாம நடந்தது…… நானும் போயிட்டேன்…… போனதுக்கப்புறம் நீ எப்படி என் ஞாபகத்துல நிப்ப….. மனைவின்னு தானே நிப்ப….”,

“இப்போ சேர்ந்து வாழ ஆரம்பிச்சதுக்கு அப்புறமும் நீ என் மனைவி உனக்கு என்கிட்டே எல்லா உரிமையும் இருக்கு! எனக்கும் உன்கிட்ட இருக்குன்னு தான் நினைக்கிறேன்! இதுல என்ன தப்பு!”, என்றான்…

“காதல் சட்டபூர்வமா செல்லாது! மனைவி தான் சட்டபூர்வமா செல்லும்!”, என்று ஜட்ஜாக பேசினான்.

“அப்போ மனைவி அந்த உணர்வு மட்டும் தானா….. வேற எதுவும் இல்லையா…..?”,

“வேற என்ன இருக்கும்”, என்றான் விக்ரம்….

அன்னகிளி தோற்று போனதாகவே உணர்ந்தாள்….. ஒரு கோபம் கனன்றது..

“அப்போ உங்க மனைவி தான் நிக்கறா? நான் நிக்கலையா உங்க மனசுல?”, என்றாள்…

விக்ரமிற்கு அவளை புரியவில்லை….. “ப்ச்! திரும்ப, திரும்ப உளறக் கூடாது…. நீ தானேடி என் மனைவி…”,

“ஆனா….. நீங்க என்னை மனைவின்னு தானே நினைக்கிறீங்க… என்னை விரும்பலையே….”,

“வாழ்க்கைன்றது இந்த மாதிரி உளறல்களுக்கு அப்பாற்பட்டது…. இதுல இருந்து நான் வெளில வந்ததுனால தான் நீ என் மனைவியான…..”, என்றான் கோபத்தோடு…..

“எனக்கு இந்த உளறல் தான் வாழ்க்கை!”, என்றாள்……      

“பொய்யாவாவது நீங்க என்கிட்டே நீ இல்லாம என்னால இருக்க முடியாதுன்னு சொல்லணும் தானுங்களே….. அதைவிட்டு நீ இல்லைனாலும் நான் இருப்பேன்னு உண்மை பேசினா அது என்ன வாழ்க்கைங்க?”,

“நான் இல்லைனாலும் என் கணவன் நல்லா திவ்யமா சௌக்யமா இருப்பார்ன்னு நினைச்சா….. அப்புறம் கணவன்களுக்காக எததனையோ விட்டு குடுத்து வாழற மனைவிகளுக்கு என்ன இருக்கு”,

இருவருமே புத்திசாலிகளாக இருந்தனர்….. அதுவே அங்கே மிகபெரிய பிரச்சனையாகிற்று…..    

“நீ இதுல எல்லாரையும் ஏன் இழுக்கற? நம்மை பத்தி மட்டும் பேசு!”,

“நாம மட்டும் என்ன? கல்யாணமானவுடனே என்னை விட்டு போனவர் நீங்க…..”,

“நான் கூப்பிட்டேன் நீ வரலை….”,

“எங்க வரலைன்னு என் வாயல சொன்னனுங்களா….. எங்காப்பவை பார்த்து நான் திரும்பறதுக்குள்ள நீங்க போயிட்டீங்க….. அது தான் உண்மை…. அந்த உண்மை தெரிஞ்சும்…. இப்பவும் நான் உங்க மேல உயிரா, பைய்த்தியமா இருக்கேன்…. நீங்க இல்லாம நான் இருக்க மாட்டேன்னு சொன்னா…. உங்களுக்கு அது உளரலா தெரியுதுங்க…”,   

“நீ வாழ்க்கையோட உண்மைகள் புரியாம பேசற!”,

“என்ன புரியலீங்க”, என்றாள் அன்னகிளி…….

“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி லவ் பண்ணினேன்…… இப்பவும் அதையே பிடிச்சு தொங்கிட்டு இருந்தா உன்கூட குடும்பம் நடத்த முடியுமா… நீ என் மனைவின்னு நினைக்கறதுனால தான் முடியுது…. இது தான் உண்மை!”, என்றான்.  

அன்னகிளி எப்போதும் கேட்க விரும்பியிராத உண்மையை விக்ரம் சொல்ல….. அன்னகிளி முற்றிலும் தொலைந்தாள்…. கட்டுப்பாட்டை இழந்தாள்….. 

“எனக்கு இந்த உண்மை வேண்டாமுங்க….. உங்களுக்கும் என்னோட உளறல் வேண்டாமுங்க!”, என்றாள்.

“விளக்கம் குடுத்து…… விளக்கம் குடுத்து…… தக்க வைக்கிற உறவுகள் நிலைக்காது அனு…….”, என்றான் தீர்க்கமான குரலில்.  

“யாரும், யாருக்கும் விளக்கம் குடுக்க வேண்டாமுங்க… என்னை மனைவின்னு நினைச்சு, நினைச்சு, அதை ஞாபகத்துல கொண்டு வந்து நீங்க என் கூட குடும்பம் நடத்த வேண்டாமுங்க….. என்னை வசியப் படுத்தற மாதிரி நீங்க ஒன்னும் நடந்துக்க வேண்டாமுங்க…..”,

அந்த வார்த்தை விக்ரமிற்கு அதீத கோபத்தை கொடுத்தது…… 

“சீ! சீ! கணவன் மனைவிக்கான உணர்வுகளை கொச்சை படுத்துவியா நீ? எப்பவும் நான் மயக்கறேன்ங்கற…. வசியப்படுதறேன்ங்கற……  நான் வேண்டாம்னா என்ன பண்ணுவ? நீ போயிடுவியா என்னை விட்டு?”, என்று அவனாக வார்த்தையை விட……   

“ஏன் போகமாட்டனா? நீங்க தான் யார் இருந்தாலும் இல்லைன்னாலும் வாழ முடியும்னு சொன்னீங்க…… நீங்க வாழுங்க!”, என்று அன்னகிளி பதிலுக்கு பேச…….  

“ஏன்? உன் பின்னாடி வந்து போகாதன்னு கெஞ்சுவேன்னு நினைச்சியா…..? நீ இல்லாம என்னால வாழ முடியலை? நீ இல்லாம என்னால சாப்பிட முடியலை? நீ இல்லாம என்னால தூங்க முடியலைன்னு சொல்வேன்னு நினைச்சியா? நெவெர்……. இதெல்லாம் நான் பொறந்ததுல இருந்து செஞ்சிட்டு தான் இருக்கேன்…..”,

“அப்போ செய்ங்க… நான் உங்களுக்கு தேவையில்லை….”, என்று சொல்லி வேகமாக  வெளியில் வந்து செருப்பை போட்டு கொண்டு வேகமாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்…

“என்ன பழக்கம் இது…… வீட்டை விட்டு போவது!”, என்று கண்மண் தெரியாத கோபம் விக்ரமிற்கும் வர…. “போடி!!!!!!!!”, என்று வாய்விட்டு சொல்லியவன்…..

அடுத்த நிமிடம் லதாவிற்கு போன் செய்து……. “உன் நாத்தனார் என் கிட்ட சண்டை போட்டுக்கிட்டு வீட்டை விட்டு போறா….. அங்க வந்தா எனக்கொரு போன் பண்ணு…..”,

“இல்லைனா சொல்லு! எங்க போயிருக்கான்னு தேடி உங்க வீட்ல கொண்டு வந்து விட்டுடறேன்”, என்று சொல்லி போனை வைத்தான்……

லதாவிடம் போனை பேசி வைத்து விட்டான்….. ஆனால் அதன் பிறகு ஒன்றும் ஓடவேயில்லை….. கால்கள் தொய்வுற அப்படியே அமர்ந்து விட்டான்… 

“ஏன் என்னை இவள் நம்பவே மாட்டேன் என்கிறாள்….. எங்கு தவறிவிட்டேன் நான்”, நெஞ்சை அடைத்தது அவனுக்கு……

அன்னகிளி கோபமாக போவதை பார்த்த பன்னீர் வேகமாக வந்து, “ஆட்டோ கூப்பிடட்டுமுங்களா அம்மணி!”, என்று கேட்கவும்….

கையில் காசில்லாததை உணர்ந்தவள்…. “ஒரு நூறு ரூபா குடுங்க!”, என்று வாங்கி ஆட்டோ பிடித்து….. பஸ் ஸ்டான்ட் சென்று…… அங்கிருந்து பஸ் பிடித்து… அவளின் அப்பா வீட்டிற்கு சென்றே விட்டாள்……

நடந்த பேச்சுக்களை…….. உப்பு பெறாத ஊறுகாய்க்கு ஆகாத விஷயமாகவும் எடுக்கலாம்…..   வாழ்வின் ஆதாரமாகவும் எடுக்கலாம்…… 

ஏதோ ஒன்று ????

மீண்டும் பிரிந்தனர்……                      

             

 

                                                        

                

 

Advertisement