Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு : 

மாலை வரும்போதே உற்சாகமாக வந்தான் விக்ரம்…… அவன் பெல் அடித்ததும் கதவை திறந்த அன்னகிளியின் கன்னத்தில் செல்லமாக தட்டி, “ஹாய் பேபி”, என்றான்.

விக்ரமின் பின்னேயே அவனின் லேப் டேப் பேகை தூக்கி கொண்டு வந்த பன்னீர் இதை பார்த்துவிட்டாரோ என்று அவசரமாக அங்கே பார்வை செலுத்திய அன்னகிளி பன்னீர் கவனிக்கவில்லை என்றதும்…  

பார்வையை விக்ரம் மீது திருப்பி அவனை முறைக்க…….

விக்ரமிற்கு பன்னீர் பார்த்துவிட்டானோ என்று தான் அன்னகிளி கோபப்படுகிறாள் என்று புரிந்தது… இருந்தாலும் அவளை சீண்டும் விதமாக……

“இப்போ எதுக்கு முறைக்கிற? அவர் பார்க்கிற மாதிரி நான் தட்டலைன்னா!”, என்றான்.. 

அன்னகிளி தன் தலையில் தானே அடித்துக்கொள்ள கையை கொண்டு போக….. வேகமாக அதை பற்றி, அவளின் கை கொண்டு  விக்ரம் தன் தலையில் தானே தட்டிக் கொண்டவன்……. “இப்படி தான் அடிக்கணும்! உன்னை அடிச்சிக்க கூடாது!”, என்றான்.

அன்னகிளியின் முகத்தில் தானாக புன்னகை மலர…… மிகவும் சிரமப்பட்டு அதை அடக்கி…. உள்ளே சென்றாள்…

வாயிலில் நின்று பன்னீரிடம் லேப் பேகை வாங்கி உள்ளே சென்றான் விக்ரம்…. அதற்குள் அன்னகிளி எங்கே என்று தெரியவில்லை…..    

“பேபி! டீஈஈஈஈஈ!”, என்று கத்திக்கொண்டே நேரே குளிக்க போனான்….

அவன் கத்திய கத்தலுக்கு…… “டீ கேட்கறாரா? இல்லை டீ ல ஈ கேட்கறாரா?”, என்று தனக்கு தானே கேட்டு சிரித்துக் கொண்டாள் அன்னகிளி……

அன்னகிளி அவனுக்கு டீ போட தான் சமையலைறையில் இருந்தாள்…..

அவள் டீ போட்டு எடுத்து வந்த போது…… விக்ரம் குளித்து முடித்து பூஜையறையில் கடவுள் முன் கண்மூடி நின்றிருந்தான்….

விக்ரம் கடவுளை வணங்கும் நேரம் என்று தெரிந்தும் விளக்கு பொருத்தாதது அன்னகிளிக்கு தவறாக தோன்ற….. அவசரமாக ஓடி விளக்கை பொருத்தினாள்….

விக்ரம் கண் திறந்த போது தீபம் ஒளி வீச… “ஜெட் பாஸ்ட் தான் போ….!”, என்று சொல்லியபடி பூஜையறையை விட்டு வெளியே வந்தான்…

குளித்து வெறும் துண்டுடன் இருந்தான்….. விக்ரமின் இந்த தோற்றத்திற்கு அன்னகிளி பழகியிருந்தாள்…. அவன் தான் காலையும் மாலையும் குளித்தவுடன் இப்படி தானே சுற்றுகிறான்…. அவனறியாமல் அவனின் நெஞ்சுரத்தை ரசித்தாள்……  

விக்ரம் அவளை பார்க்கும் போது பார்வையை மாற்றிக் கொண்டாள்… 

“என்ன டிரஸ் பண்ணட்டும், எங்கயாவது வெளில போகலாமா!”, என்றான் விக்ரம்…..

“வேண்டாம்!”, என்பது போல தலையசைத்தாள்…..

“ஏன் அனு? எங்கயாவது போகலாம்!”,

“இல்லை! நான் வரலை! நீங்க போறதுன்னா போயிட்டு வாங்க…….!”,

“நான் தனியா போகவா உன்கிட்ட கேட்கறேன்! நம்ம சேர்ந்து போகலாம்!”, என்றான்.

“இல்லை! வேண்டாம்! நான் எங்கயும் வரலை!”, என்றாள் பிடிவாதமாக…..

“ப்ச்! சரி! அவுட்டிங் மாதிரி வேண்டாம்! கோவிலுக்கு போகலாமா!”, என்றான்……

அவள் பதில் சொல்லும்முன்னே, “நம்ம போறோம்! நான் ரெடியாகிறேன்!”, என்று சொல்லி ரூமினுள் சென்று விட……

மறுபடியும் டீ காலை போல ஆறிப்போனது….. “இந்த ஆறிப்போன டீஈஈ க்கு தான் அந்த கத்தல்! வரட்டும்!”, என்று அவனுக்காக காத்திருக்க….

அவன் ஒரு ப்ளூ ஜீன்ஸ், லெமன் யெல்லோ டீ ஷர்ட்டில் வந்த போது……….. அவனுடைய தோற்றம் கண்ணை கவர்ந்தது……. எப்போதையும் விட விக்ரம் அவளின் பார்வைக்கு ஹேண்ட் சம்மாக தெரிந்தான்…… அது அவளின் பார்வை மாற்றமா இல்லை விக்ரமின் தோற்ற மாற்றமா என்று ஆராய்ந்தாள்…. 

எதுவாகினும் அவளின் மனம் மயங்குகிறது என்று அவள் ஒப்புக் கொண்டு தான் ஆகவேண்டும்…. இத்தனையும் மனதில் ஓடினாலும்….. முகத்தில் எதுவும் தெரியவிடவில்லை. 

நன்றாக ஆசை தீர அவனை ரசித்த அன்னகிளி, அவன் பார்க்கும் போது இடுப்பில் கை வைத்து அவனை முறைத்தாள்.

“ஏன்? என் டிரஸ் நல்லா இல்லையா? சேஞ் பண்ணவா?”, என்று கேட்டவன்…. அவள் பதில் சொல்லும்முன்பே வேகமாக உள்ளே சென்று….. ஒரு ரெட் டீ ஷர்ட்டில் வந்தான்…

“இப்போ ஓகே வா!”, என்று கேட்டவனை ஆராய்ந்தாள் அன்னகிளி… அவனுக்கு நன்றாக தான் இருந்தது….. ஆனால் கலர் கண்ணை பறித்தது…….

அன்னகிளியின் கை அவளின் தலையில், “அச்சோ!”, என்பது போல தட்ட போக…… வேகமாக வந்து அவளின் கையை பிடித்து தன் தலையில் தட்டி கொண்டான் விக்ரம்…..

 இந்த முறை என்ன முயன்றும் அன்னகிளியால் சிரிப்பை அடக்க முடியவில்லை…… சிரித்து விட..

“ஏய், எரும மாடு! வாயை தொறந்து பேசாம என்னை காமெடி பீஸ் ஆக்கிட்டு இருக்கியா நீ!”, என்றான் கடுப்பாக……..

“பின்ன, அங்க பாருங்க!”, என்று டைனிங் டேபிளை காட்ட அங்கே டீ இருந்தது….

“தோ, குடிக்கறேன்!”, என்று அதை கையில் எடுக்க அது ஆறி இருந்தது…..

“ஒஹ்! இதுக்கு தான் முறைச்சியா….. சூடு செஞ்சு குடு! நானே சாப்பிடறேன்!”, என்றான் நல்ல பிள்ளையாக……..

பதில் பேசமால் அதை எடுத்து போய் சமையலைறையில் வைத்து விட்டு புதிதாக அவனுக்கு டீ போட்டுக் கொடுத்தாள்..

“இல்லை! நான் அதே குடிக்கறேன்!”, என்றவனை விடவில்லை …. விக்ரம் டீ யை மிகவும் விரும்பி ரசித்துக் குடிப்பான் என்று தெரியும்….. அன்னகிளிக்கு அப்படியெல்லாம் எதுவுமில்லை, ஏதோ ஒன்று…. அதனால் அவனுக்கு புதிதாக கொடுத்துவிட்டு…. காலையில் செய்தது போல அவளே சூடு செய்து குடித்தாள்……

“மதியம் நீ குடுத்தது ரொம்ப டேஸ்டியா இருந்தது…. ஆனா அது என்னன்னு தான் கண்டுபிடிக்க முடியலை… அது என்ன சாதம்?”, என்றான் வேண்டுமென்றே…..

“நீ என்னவோ பேசிக்கொள்! எனக்கு ஒன்றுமில்லை!”, என்பது போல அவள் வேலையை பார்க்க……

“ஒஹ்! உனக்கே தெரியலையா சரி……….. மிச்சம் இருக்கா அது…. நோ! நோ! நான் சாப்பிடறதுக்காக கேட்கலை….. ஒரு நாலு பேர்கிட்ட குடுத்து அது என்னன்னு கண்டு பிடிக்க சொல்றேன்”, என்றவனை விழியகற்றாமல் பார்த்தாள்….

விக்ரமிற்கு அந்த உணவு பிடித்திருந்தது அவனின் பாவனையில் தெரிய…. அவளால் இதற்கு மேல் முடியாது என்பது போல புன்னகைத்துக் கொண்டே தோளில் ஒரு அடி கொடுக்க……

“சரி! பரவாயில்லை! நீ சிரிச்சதுனால உண்மையை ஒத்துக்கறேன்! டீ குடிச்சாலும் இப்போ பசிக்குது….. மதியம் குடுத்தது நல்லா இருந்தது… இன்னும் இருக்கா?”, என்றான்…..

அன்னகிளியின் முகத்தில் புன்னகை விரிந்து பரவி நின்றது..  

மதியம் அவனுக்கு சாம்பார் சாதமும், கத்தரிக்காய் பொறியலும் தான் செய்து கொடுத்திருந்தாள்…

அளவாக தான் செய்திருந்தாள்…… கொஞ்சமே மீதம் இருந்தது…… இருந்ததை அவனுக்கு அவசரமாக போட்டுக் கொடுக்கவும்…..

வாங்கிக் கொண்டவன்….. “யூ நோ ஒன் திங்….. நீ எங்க அம்மா மாதிரியே டேஸ்டியா சமைக்கிற…… லதா அக்காக்கு சௌமிக்கு எல்லாம் சமைக்கவே வராது…… சௌமியாவது ஹாஸ்டல்ல இருந்தா….. லதா அக்காக்கு எங்க அம்மா தான் கத்து குடுத்தாங்க! ஆனாலும் சுத்தம், வரவே வராது!”, என்று அவன் பேசி முடிக்கும் போதே உணவும் காலியாயிருந்தது……

 ஒரு புன்னகையோடே விக்ரமின் பேச்சை கேட்டிருந்தாள்…

“எங்கம்மா உனக்கு ஞாகபகமிருக்கா?”, என்றான்……

அவளுக்கு நேரில் பார்த்த ஞாபகங்களில்லை….. அப்போது அவள் பத்து வயது சிறுமியல்லவா… ஆனால் அண்ணன் திருமண போட்டோவில் வீடியோவில் இப்போது சமீபமாக போட்டு பார்த்திருக்கிறாள்….

“ம்! போட்டோல பார்த்திருக்கறனுங்க…..”, என்றாள்….

சிறு பெண் போல தான் விக்ரமின் அம்மா லதாவின் திருமணத்தில் தோற்றமளித்தார்….. மணப் பெண்ணின் அம்மா போல தோன்றாமல் அக்கா வா என்று கேட்க வைக்கும் தோற்றம் தான்.. அதனால் தான் தன்னுடைய தோற்றம் விக்ரமை கவரவில்லையோ என்று கூட அன்னகிளி நினைத்திருக்கிறாள்…. 

“அம்மா எப்பவும் எங்க மூணு பேர் பின்னாடியே சுத்துவாங்க, அதுவும் சௌமி ரொம்ப செல்லம்…… என்னால அவங்களை பத்தி லதா அக்காகிட்டயோ சௌமிகிட்டயோ பேச முடியாது! அவங்க ரொம்ப மிஸ் பண்ணுவாங்க…..”, என்றான்.

“சௌமி அடிக்கடி இப்போல்லாம் போன் பண்றா…… நானும் பேசறேன்! இருந்தாலும் நீ அவளை மன்னிக்காத போது என்னால அவளோட சகஜமா பேச முடியலை…..  ஏதோ தப்பு பண்ற மாதிரி ஒரு ஃபீலிங்….”, 

“அவ தெரியாம செஞ்சிட்டா! எனக்காக அவளை மன்னிச்சிடேன்….. நிஜமா அந்த வினோத் அப்படி பண்ணுவான்னு அவளுக்கு தெரியாது”, என்றான் விக்ரம்…… அவன் குரல் நிஜமாக கெஞ்சியது…..     

அந்த குரலில் விக்ரம் கேட்கும் போது அவளால் பதில் பேசாமல் இருக்க முடியவில்லை…… மீண்டும் அவனின் தங்கையா என்ற நினைவு எழுந்த போதும்… அவனின் அக்காவும் தங்கையும் அவனின் உணர்வோடு கலந்து இருக்கிறார்கள் என்பது உண்மையாக தெரிய…. அது உண்மை அதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும் என்று மனதை தேற்றி…….

“நானே அதை மறந்துட்டேனுங்க! நீங்க ஏன் அதை ஞாபகப்படுதறீங்க!”, என்றாள்….

“நிஜமா!”, என்றான்…

“நிஜமா…… பட் என்னால அவங்க கிட்ட சகஜமா இருக்க முடியாதுங்க…. ஆனா அப்படியே இருக்கும்னு சொல்ல முடியாது காலப் போக்குல மாறலாமுங்க…….”,

“தேங்க்ஸ்!”, என்றான் அவளின் கையை பற்றி….. அன்னகிளியின் முகம் சுருங்கியது…

“இல்லைல்ல…… தேங்க்ஸ் வாபஸ்!”, என்றான் அவசரமாக……

“இவ்வளவு பாசம் வெச்சிருக்குறவர் எப்படி அண்ணியையும் சௌமிக்காவையும் இந்த நாலு வருஷமா பார்க்காம இருந்தீங்க”, என்றாள்… மறந்தும் கூட அவளை அதில் சேர்க்கவில்லை… அது அபத்தம் என்று அவளுக்கே தெரியும்….

விக்ரமின் இந்த உணர்வு உரிமை எல்லாம் இப்போது அவளை பார்த்த பிறகு தான் என்பதில் அவளுக்கு எந்த சந்தேகமும் இல்லை… மனைவி என்ற முறையில் நினைத்து பார்த்திருக்க வாய்ப்புகள் இருந்தாலும்…… காதலால்…. பாசத்தால் அவன் நினைத்திருக்க மாட்டான்….    

விக்ரமின் பார்வை வேறு மாதிரி இருந்தது……    

“நிஜமாவே எனக்கு அக்கா மேலயும் சௌமி மேலயும் அக்கறை இருந்தாலும்…. அவங்க நினைப்பு எப்பவும் மனசுல இருந்தாலும்…… நான் ஒரு நிலைமையில இல்லாத போது காட்டப்படுற பாசம் மதிக்க படாது… இது உலக நியதி……”,

“நான் ஏதோ என்னோட தேவைகளுக்காக அவங்க மேல அக்கறை காட்டற மாதிரி ஒரு சமயம் இல்லைனாலும் இன்னொரு சமயம் பார்க்கப்படும்… அந்த மாதிரி சில காரணங்கள்….. அப்புறம் எனக்கு ரெண்டு பேர் மேலயும் கொஞ்சம் கோபம்…. அதுவும் ஒரு காரணம்…..  அதனால நான் யாரோடயும் போன்ல கூட பேச விரும்பலை”,  

“கல்யாணம் முடிஞ்சவுடனே நான் கூப்பிட்டேன் நீயும் வரலை….   அது எனக்கு ரொம்ப கோவம் வந்தது…. கொஞ்சம் அவமானமா கூட ஃபீல் பண்ணினேன்…. எல்லோர் முன்னாடியும் நீ என்கூட வரலை…..”,

“உங்க அண்ணன் நான் என்னவோ சாப்பாட்டுக்கு கூட வழியில்லாதவன் போல பேசினான்…. அப்படி என்ன நீ பெரிய இவ! எனக்கு நீ தேவையில்லைன்னும் ஒரு எண்ணம் மனசுல ஆழமா இருந்துச்சு!”, என்று உண்மையை ஒத்துக் கொண்டான். 

“அப்புறம் எப்படி நான் இங்க வருவேன்……?”,     

“அதுவுமில்லாம சரியான வேலையுமில்லாம கைல காசுமில்லாம யாரை நான் வந்து பார்க்க…. இப்போ எப்படியோ அப்போ எனக்கு அப்படி ஒன்னும் பெருசா உன் மேல ஆர்வமில்லை…. மறுபடியும் ஊருக்கு வந்தா நீ கூட வர்றேன்னு சொன்னா? எப்படி கூட்டிட்டு வருவேன்? எங்க கூட்டிட்டு வருவேன்…….?”,

“நான் செய்யறது தப்புன்னு மனசு ஒரு பக்கம் சொல்லிக்கிட்டே இருக்கும்!, அப்போல்லாம் நாம கொஞ்சம் ஸ்டெடி ஆனதும் உன்னோட என் வாழ்க்கையை பத்தி முடிவெடுத்துக்கலாம்னு தள்ளி போடுவேன்”,  

“நாம தங்க, சாப்பிட வேலை செஞ்சு சம்பாதிக்கறது பெரிய விஷயம் கிடையாது… செய்யலாம் தான்…. ஆனா அது என்னோட லட்சியம் கிடையாது….. இந்த மாதிரி ஒரு பெரிய பதவில உட்காரணும் அதுக்கு நான் படிக்கணும்…. வேலை செஞ்சிட்டு குடும்பத்தை காப்பாத்திக்கிட்டு படிக்கறதுக்கு எனக்கு பயமா இருந்தது…..”,

“அதான் எதை பத்தியும் யோசிக்காம, பேய் மாதிரி….. உன்னை கல்யாணம் பண்ணி விட்டுட்டு வந்த நாள்ல இருந்து இதுல மட்டும் தான் என் கவனம் இருந்தது…”,      

“என்னோட இந்த பதவி ஒன்னும் அதிர்ஷ்டம் கிடையாது…. வேற எந்த வேலை வெட்டியும் பார்க்காம இதுக்கு மட்டுமே இந்த நாலு வருஷமா படிச்சிட்டு இருந்தேன்…”,

“இந்த மாதிரியான எக்ஸாம்க்கு நான் படிப்பை முடிச்சவுடனே படிக்க ஆரம்பிச்சிட்டேன்…. இது என்னோட எட்டு வருஷ உழைப்பு…..”,    

“எனக்கு லா அவ்வளவு பிடிக்கும்……. ஆனா வக்கீலா ப்ராக்டிஸ் பண்ண முடியலை…. என்னோட கட்சிகாரன்னு வந்துட்டா அவன் நல்லவனோ கெட்டவனோ அவனுக்காக வாதடணும்…. அவனுக்காக நான் ஜெயிச்சு குடுக்கணும்…….”,

“மனசாட்சி ரொம்ப உதைச்சிக்கும்.. தப்பான ஒருதனுக்காக நாம சட்டத்தை ஏமாத்தறோம்னு…. அதே மாதிரி நல்லவனுக்காக வாதிட்டு தோத்து போகும் போதும் நம்மளால ஒன்னும் செய்ய முடியலையேன்னு இருக்கும்….. ரொம்ப ஒரு மாதிரி போராட்டத்துல இருந்தேன்…… அதான் உன்னை கல்யாணம் பண்ண நாள்ல இருந்து ப்ராக்டிஸ தூக்கி தூரமா வெச்சிட்டு…. சும்மா பெட்டி கேஸ் மட்டும் பார்த்துக்கிட்டு, சாப்பாட்டுக்கு மட்டும் வழியை பார்த்துக்கிட்டேன்”,      

அவன் பேசிக்கொண்டு இருக்கும் போதே …..     

பன்னீர் வாயிலில் நின்று, “சார்! உங்களை பார்க்க, டீ எஸ் பீ வந்திருக்கார்!”, என்று சொல்ல……

விக்ரமின் முக பாவனைகள் முற்றும் மாறியது…… சஞ்சல பாவனைகள் ஓடி ஒரு கம்பீரம் தானாக வந்தமர்ந்தது….. “பெர்சனலா என்னை பார்க்க வந்திருக்கிற மாதிரியா இருக்கு…..”,

“இல்லைங்க சார்! யாரையோ ரிமாண்ட் பண்ணனும் போல, கூட நிறைய போலீஸ்காரங்க…. அப்புறம் அக்யுஸ்ட் போலீஸ் வேன்ல இருக்கான்!”, என்றான் தயக்கமாக பன்னீர்….

“நான் வர்றேன்னு சொல்லுங்க!”, என்றவன் வேகமாக உள்ளே சென்று டீ ஷர்ட் களைந்து ஒரு வைட் ஷர்ட் அணிந்து சென்றான்.

மீண்டும் அவன் உள்ளே வரும் போது அரை மணிநேரம் கடந்து இருந்தது……

“வீட்டுக்கு கூட வருவாங்களா?”, என்று அன்னகிளி கேட்க…..

“ரொம்ப எமெர்ஜென்சின்னா வருவாங்க….. நாளைக்கு சனி ,அப்புறம் ஞாயிறு…. இப்போ கோர்ட் டைம் முடிஞ்சிடுச்சு! அதான் இங்க வந்துட்டாங்க!”,

“ரொம்ப நாளா தேடிட்டு இருக்குறவன்….. அதான் கொண்டு வந்துட்டாங்க……”,

“என்ன கேஸ்?”, என்றாள்…..

“சிட்ஃபண்ட்ஸ்………!”,

“அதிக ஆசைப்பட்டு மக்களா போய் ஏமாற்றது தான்…. அதே சமயம் இவனுங்களும் சும்மா மக்களை கவர்றதுக்காக அது இதுன்னு நிறைய ஸ்கீம் அறிவிச்சு… அதை நிறைவேத்த முடியாம…. நியாயமா நடத்தனும்னு நினைச்சும் முடியாம……. தானா போய் பணத்தை திரும்ப குடுக்க முடியாம சிக்கல்ல மாட்டிக்குவாங்க….”,

“விடு! இந்த மாதிரி நிறைய பார்க்க வேண்டி வரும்…. நம்ம கோவிலுக்கு போகலாமா!”, என்றான்….

அன்னகிளி மீண்டும் யோசிக்கவும்……. “கிளம்பு! கிளம்பு!”, என்றான்….

போய் வேறு சேலை உடுத்தி வந்தவளை அழைத்துக் கொண்டு கோவில் சென்றான்.

பன்னீர் தான் காரை ஓட்டினார்….. அவனுடன் செக்யூரிட்டிக்காக இருக்கும் போலீஸ் காரரை… “நீங்க கிளம்புங்க!”, என்று வீட்டிற்கு அனுப்பி விட்டான்.  

கோவில் வந்ததும், “ஓரமா நிறுத்திக்குங்க!”, என்று சொல்லி அவனும் அன்னகிளியும் இறங்கிக் கொண்டனர்…..

அவர்கள் வந்தது கோவையின் பெருமையாக மக்கள் நினைக்கும் ஈச்சனாரி விநாயகர் கோவில்……

உள்ளே நுழையும் போது “இந்த கோவில்ல வழிபட்டா நாம இழந்ததை திரும்ப பெறலாம்னு ஐதீகம்!”, என்றான்…. அன்னகிளிக்கு தெரியாததல்ல ஆனால் விக்ரம் ஆர்வமாக விவரிக்கும் போது தெரியாத மாதிரியே காட்டி கொண்டாள்.   

ஆனால் மெதுவாக, “என்ன இழந்தீங்க!”, என்று கேட்டவளை திரும்பி பார்த்தவன்….. “என் குடும்பம்!”, என்றான்.

அன்னகிளி விழி விரித்து பார்க்க…. “லதாக்காவும் சௌமியும் என் கூட பிறந்தவங்க தான்…. ஆனா என் குடும்பம் கிடையாது, நீதானே என் குடும்பம்”, என்றான்.  

அன்னகிளியின் மனதை அழுத்திக் கொண்டிருந்த ஏதோ மாயமாய் மறைந்தது….. 

அவனின் இஷ்ட தெய்வமான விநாயகப் பெருமானை வழிப்பட்டான்…. கோவிலில் இருந்த ஊழியர் அவனுக்கு ராஜ மரியாதை கொடுக்க….. 

விக்ரமே வழியில் நிறுத்தி வாங்கி வந்திருந்த… தேங்காய் பழத்தை அர்ச்சனைக்கு கொடுத்து… அர்ச்சகரிடம் “சாமி பேருக்கே பண்ணிடுங்க!”, என்றான்.

அன்னகிளி அவனுடன் இருந்தாள் அவ்வளவே….. விக்ரம் இப்படி பக்தியோடு கடவுளை சரணடையும் போது அவளுக்கு எதுவும் வேண்டுதல் இருப்பது போல தோன்றவில்லை…. அதுவும் இப்போது விக்ரம் என் குடும்பம் நீ மட்டும் தான் என்று கொடுத்த விளக்கத்தில்…. முற்றிலும் அவனை சரணடைந்திருந்தாள்.

அமைதியாக அவனை பார்த்து இருந்தாள்…….

அவன் வணங்கி முடித்து….. அங்கேயே வெளியில் இருந்த படியில் அமர்ந்தான்… வழியில் போகிறவர் வருகிறவர் எல்லோரும் பார்ப்பார்கள் என்று அன்னகிளி அமர தயங்க….. “உட்காரு”, என்று கை பிடித்து இழுத்து சற்று இடைவெளி விட்டு அருகமார்த்திக் கொண்டான்.

இந்த கோவில் ஸ்தல புராணம் தெரியுமா என்றான்….. அன்னகிளிக்கு நன்கு தெரியும் ஆனால், “இல்லை”, என்று தலையசைத்தாள்…

“மதுரையில இருந்து இந்த விநாயகர் சிலையை செஞ்சு பேரூர்ல இருக்குற பட்டீஸ்வரர்  கோவிலுக்கு மாட்டு வண்டில கொண்டு போனாங்களாம்…. இந்த இடம் வந்தவுடனே வண்டி குடை சாஞ்சிடிச்சாம்.. சிலையை எடுத்து கீழ வெச்சிட்டு வண்டியை சரி செஞ்சிட்டு மறுபடியும் சிலையை வண்டில எடுத்து வைக்க பார்த்தா முடியவே இல்லையாம…….”,

“அப்போ ஒரு அசரீரி, நான் இங்க தான் இருப்பேன்னு சொல்ல….. இங்கயே கோயில் கட்டிட்டாங்களாம்….”, என்று விக்ரம் ஆர்வமாக சொல்ல….. அன்னகிளியின் முகத்தில் புன்னகை……

அதை பார்த்தவன் “உனக்கு தெரியும் தானே!”, என்றான்….

“கொஞ்சம் தெரியும், ஆனா இவ்வளவு தெரியாதுங்க!”, என்றாள்.      

விக்ரமின் பதவியை முன்னிட்டு அவனை யாரும் எதுவும் சொல்லவில்லை….. 

சில நிமிடங்கள்…. அமர்ந்திருந்தவன்….. பன்னீரின் மொபைலுக்கு காரை எடுத்து வர சொல்லி அழைக்க அது ஸ்விச் ஆப் என்று வந்தது….. “இரு! கார் கொண்டு வர சொல்றேன்!”, என்று  எழுந்து சற்று தள்ளி பார்க் செய்திருந்த காரை போய் அழைத்து வர வேண்டி போனான்…..       

அவன் போன நிமிடம்….. இந்த பக்கம் வினோத் சாதனாவுடன் அவனின் குழந்தையையும், கூட  சௌமியின் குழந்தை ஜனனியையும் அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வந்திருந்தான்….

படியில் அமர்ந்திருந்த அன்னகிளியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை…. அன்னகிளியும் அவர்களை எதிர்பார்க்கவில்லை…

இங்கே எங்கே தனியாக அமர்ந்திருக்கிறாள் என்பது போல சாதனாவும் வினோத்தும் தயங்க… அன்னகிளி முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டாள்.

அப்போதும் வினோத் சாதனாவிடம், “எங்க இங்க தனியா உட்கார்ந்திருக்கா…. கேளு!”, என்று உந்த…

“ம்கூம்! நான் மாட்டேன்! எனக்கு அவங்களை பார்த்தா பயமாயிருக்கு!”, என்றாள் சாதனா….

“நான் போய் கேட்கட்டுமா!”, என்று வினோத் சொல்ல….

“ஒன்னும் வேண்டாம்! ஏதாவது ப்ரச்சனையாகிட போகுது.. கொஞ்ச நேரம் பார்க்கலாம் இருங்க!”, என்று வினோத்தை தடுத்து நிறுத்தினாள்….

அன்னகிளி அமைதியாக தான் அமர்ந்திருந்தாள்…… அவளுக்கு அப்படி ஒன்றும் கோபம் ஆத்திரம் போல எல்லாம் தோன்றவில்லை… அவர்களை பார்க்க பிடிக்காமல் அவர்கள் இருக்கும் புறம் திரும்பாமல் இருந்தாள். 

சாதனா, ஜனனியிடம்…… “உங்க அத்தை தனியா உட்கார்ந்து இருக்காங்க! என்னனு போய் கேளு?”, என்று அன்னகிளியை காட்டி சொல்ல…. அந்த மூன்று வயது பெண் குழந்தைக்கு அன்னகிளியை அத்தை என்றெல்லாம் தெரியவில்லை…..  

அதற்குள் வினோத்தின் கைகளில் இருந்து இறங்கிய அவனின் குழந்தை….. அன்னகிளியை காட்டி அதன் அம்மா அக்காவிடம் ஏதோ சொல்வதை பார்த்து…… தளிர் நடை போட்டு அன்னகிளியின் அருகில் போய் அமர்ந்தது கொண்டது.    

அந்த குழந்தை அமரவும்…. ஜனனியும் போய் அருகில் அமர்ந்து கொண்டாள்…

“இதேதடா வம்பு!”, என்று அன்னகிளிக்கு தர்மசங்கடம் ஆகிவிட்டது…  அன்னகிளியின் பொறுமை பறக்க…. விக்ரமிற்கு போன் அடித்தாள்….. “எங்க இருக்கீங்க?”, என்று அடிக்குரலில் வினவ….

“தோ! வந்துட்டே இருக்கேன்! அதுக்குள்ள ஒரு போன்!”, என்று அவன் சொல்லி முடித்த நேரம்…. வினோத்தின் குழந்தை இன்னும் அருகே வந்து அவளை தொட்டு பார்த்தது….

அதற்கு மேல் முடியாது என்பது போல அவள் எழுந்து கொள்ள……. சாதனா ஜனனியிடம், “கூப்பிடு! கூப்பிடு!”, என்று சைகை செய்ய…

“அத்தை!”, என்றாள் மழலையாக ஜனனி அவளின் புடவையை பிடித்து…..

அதற்குள் கார் வந்திருக்க…. குழந்தைகளை கவனிக்காத விக்ரம், “வா!”, என்பது போல கையை ஆட்டினான்…

விக்ரமின் ஆசை தங்கையின் குழந்தை அவளின் புடவையை வேறு பிடித்திருக்க…. அதை உருவவும் மனம் வரவில்லை… இருக்கவும் பிடிக்கவில்லை…. “நீங்க வாங்க!”, என்பது போல விக்ரமை பார்த்து கை காட்டினாள் அன்னகிளி….

“எதுக்கு இவ திரும்பவும் கூப்பிடறா!”, என்று புரியாத போதும் விக்ரம் இறங்கி வந்தான்….. அருகில் வந்த பிறகு தான் ஜனனி கண்ணில் பட…. வேகமாக வந்தான்…

“ஹாய், ஜனனி குட்டி! அம்மாவோட வா வந்தீங்க…”, என்று அவளை தூக்கி கேட்டு கொண்டே கண்களை சுழற்றினான், அருகில் இருந்த வினோத்தின் குழந்தையை பார்த்துக் கொண்டு..

அதற்குள் ஜனனி விட்ட அன்னகிளியின் புடவையையை வினோத்தின் குழந்தை பற்றியிருக்க…. ஒரு ஓரமாக இருந்த சாதனா வெளியில் வந்தாள்… வினோத்தும் விக்ரமின் பார்வை வட்டத்திற்குள் வந்தான்..

“அய்யயோ! என்னை இவங்க நிம்மதியா இருக்க விடமட்டாங்களா……. எங்க இருந்துடா இவங்க வந்தாங்க!”, என்று விக்ரம் நினைத்து ஒரு பயத்தோடு அன்னகிளியை பார்க்க…

அவள் வினோத்தின் குழந்தை பற்றியிருந்த புடவை தலைப்பை அதன் கையில் இருந்து விடுவித்தவள்….. காரில் போய் அமர்ந்து கொண்டாள்.

அந்த குழந்தை சிணுங்க ஆரம்பித்தது…. “அப்பனுக்கு தப்பாம பொறந்திருக்கான் போல, எனக்கு வில்லனுங்க!”, என்று விக்ரமால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..

அதற்குள் சாதனா குழந்தையை தூக்கி இருந்தாள்….. விக்ரமிடம் அவளாக, “சௌமி அக்கா வரலை…. நாங்க தான் ஜனனியை கூட்டிகிட்டு வந்தோம்!”, என்று சாதனா சொல்ல….

“ம்!”, என்று சொன்ன விக்ரம்….. “ஓகே ஜனனி குட்டி, பை!”, என்று அவளின் கன்னத்தில் ஒரு முத்தம் வைத்து இறக்கி விட்டான்…..    

பிறகு விட மனமில்லாமல் ஜனனியை தூக்கி கொண்டு, “ஜஸ்ட் பைவ் மினிட்ஸ் இங்கயே இருங்க வந்துடறேன்…..”, என்று காரை நோக்கி போனான்….    

“சாக்லேட்ஸ் ஏதாவது வாங்கி குடுக்கலாமா?”, என்று அன்னகிளியிடம் கேட்க……

“ப்ச்! சும்மா இதெல்லாம் என்னை கேட்க கூடாது! என்ன வேணுமோ செய்ங்க! என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாது! அவ்வளவு தான்!”, என்றாள் கறாராக……

விக்ரமின் முகம் சுருங்கி விட்டது… ஜனனியை திரும்ப கொண்டு விட போக….

பன்னீர் இருக்கிறார் என்று கூட பார்க்கவில்லை… “என்ன சொன்னனுங்க நான் இப்போ உங்களை….. முகத்தை தூக்கி வெச்சிட்டு போறீங்க! ஏறுங்க!”, என்றாள் அதட்டலாக……

விக்ரம் காரிடம் போனதும், பின்பு திரும்புவதும், பின்பு போவதும் ,வினோத்தும் சாதனாவும் பார்த்து தான் இருந்தனர்….

“தேறிட்டடி……. அநியாயத்துக்கு என்னை மிரட்ற!”, என்று முணுமுணுத்து காரில் ஏறினான்  விக்ரம்…..

“ரொம்ப தான் பயம், என்னை பார்த்து… நான் நம்பிட்டேன்….”, என்றாள் இப்போதும் தெளிவாக கேட்கும்படியாக..

“ஒன்னு பேசாத! இல்லை பேசினா இந்த பேச்சு தான்……”, என்று விக்ரம் பார்க்க..

வெளியில் பார்வையை திருப்பிக் கொண்டாள்…..   

பக்கத்தில் இருக்கும் க்ரோசரி ஷாபிற்கு போய் சாக்லேட்ஸ் தூக்க..

“சும்மா குழந்தைங்களுக்கு சாக்லேட்ஸ் வாங்க கூடாது…. ஒன்னு போதும்!”, என்று சொன்னவள் ஜனனியின் கையில்….. “உனக்கொன்னு, உன் தம்பிக்கு ஒன்னு”, என்று கொடுத்து….

ஜனனியை அழைத்து போய்  சில விளையாட்டு பொருட்கள்….. அவள் கிறுக்குவதற்கு ஏதுவாக டிராயிங் நோட்…… கலர்ஸ் என்று வாங்கி கொடுத்தாள்…

“இதெல்லாம் மூணு வயசு பொண்ணு யூஸ் பண்ணுவாளா”, என்று விக்ரம் புத்திசாலித்தனத்தை காட்ட…..

“தூக்கி போட்டா போட்டுட்டு போறாங்க! என்ன இப்போங்க?”, என்றாள்……

அதற்கு மேல் விக்ரம் வாயே திறக்கவில்லை……. 

விக்ரம் ஜனனியை கொண்டு போய் விட்டவுடன்…..   வினோத் அவனிடம்….. “அண்ணா! நான் வந்து சாரி கேட்கட்டுமா!”, என்றான்….

“டேய்! நீ அடங்கமாட்டாயா!”, என்பது போல ஒரு பார்வை பார்க்க….. “ப்ளீஸ் ணா!”, என்றான்.

“நீ சாரி கேட்க போனா….. அடி பின்னிருவாடா!”, என்றான் விக்ரம்.

“பரவாயில்லை! நான் வாங்கிக்கறேன்!”, என்று வினோத் சொல்ல…..

“லூசாடா நீ!”, என்பது போல வினோத்தை பார்த்தவன்…… “உன்னை சொல்லலைடா! என்னை சொன்னேன்!”, என்றான் விக்ரம்…

வினோத் விக்ரம் அவனை மீண்டும் அடிக்க போகிறானா, என்று ஒரு பயப் பார்வை பார்க்க… 

“உன்னை அடிக்க மாட்டாடா…… என்னை அடி பின்னி எடுத்துடுவா!”, என்று வினோத்திற்கு விளக்கி விட்டு காரில் வந்து ஏறிக்கொண்டான் விக்ரம்…

பக்கத்தில் நின்ற சாதனாவுக்கு விக்ரம் சொன்ன விதத்தில் சிரிப்பு பொங்கியது…. ஆனாலும் வினோத்தை புரிந்தவளாக குழந்தையை அவனின் கையில் கொடுத்து இவள் ஜனனியை தூக்கி கொண்டு சாமி சன்னதியை நோக்கி சென்றாள்……      

காரில் ஆழ்ந்த மௌனம்….. இப்போது தான் இந்த வினோத்தை பார்க்க வேண்டுமா என்று விக்ரமிற்கு வருத்தமாக இருந்தது……

விக்ரம் பிடிவாதம் பிடித்து அன்னகிளியை கோவிலுக்கு அழைத்து வந்ததே அவளுடன் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு முன்னேற வேண்டும் என்று தான்……

இப்போது மனதளவில் அவனுக்கே ஒரு பயம் ஒரு தயக்கம் வந்துவிட்டது….. வினோத்தை பார்த்து வைத்திருக்கிறாள், எப்படி அதன் பிரதிபலிப்பு இருக்குமோ என்று…..

“ஹோட்டல் போகலாமா?”, என்று விக்ரம் கேட்க…….

“இல்லை! வேண்டாம்! வீட்ல சாப்பிட்டுக்கலாம்!”, என்றாள்….

சென்றதுமே விக்ரமின் பசி அறிந்தவளாக பதினைந்து நிமிடங்களில் இட்லியும் கார சட்னியும் செய்து விட….

விக்ரம் சற்று அளவில்லாமல் உண்டு தான் விட்டான்…… வீட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி ஒரு பத்து நிமிடத்துக்கு மேல் நடந்தான்…… அன்னகிளிக்கு அவனின் அவஸ்தையை பார்த்து சிரிப்பு பொங்கியது…

அவள் சிரிப்பதை பார்த்து கடுப்பானவன்….

“இனிமே நாளையில இருந்து கொஞ்சம் சுமாரா சமை போதும்…… இவ்வளவு டேஸ்டியா வேண்டாம்!”, என்றான்….    

“சரி!”, என்பது போல தலையை அன்னகிளி ஆட்ட…..

“காலையில இருந்து இன்னைக்கு என்னை நீ காமெடி பீஸ் ஆக்கிட்டு இருக்க!”, என்றான்….. இன்னும் ஆகப் போவது தெரியாமல்….. 

பிறகு அன்னகிளி உறங்க சென்று விட….

மெதுவாக அவளருகில் வந்தான் விக்ரம்….

“என்ன?”, என்பது போல அன்னகிளி பார்க்க….. தயங்கி, தயங்கி, “ஒரு ரெண்டு பெக் மட்டும் குடிக்கட்டுமா….? திடீர்ன்னு நிறுத்தறது கஷ்டம்…..!”,

“நீங்க மாலை போட்டப்போ குடிக்கவே இல்லையே!”,

“அது அப்போ! எனக்கு தோணவேயில்லை……!”,

“இப்போவும் தோணக் கூடாது!”, என்றாள் பிடிவாதமாக…

விக்ரம் பாவமாக ஒரு லுக் விட்டுக் கொண்டு போக…..

“இதற்கெல்லாம் நான் அசரமாட்டேன்!”, என்பது போல அன்னகிளி படுத்துக் கொண்டாள்…. சிறிது நேரத்தில் உறங்கியும் விட்டாள்…..

விக்ரமிற்கு தான் உறக்கம் வருவேனா என்றது……. அவ்வளவு அதட்டி உருட்டி அன்னகிளியை மிரட்டுகிறவன் தான் விக்ரம்……. ஆனால் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்கும் போது அன்னகிளிக்கு இதில் சம்மதம் இருக்குமா… அவள் இதற்கு தயாரா….. முகத்தில் அடித்தார் போல விலகி படுப்பாளோ என்று அதையும் இதையும் நினைத்தான்……

என்னதான் இப்போது அவளிடம் உரிமை எடுத்து பழகினாலும்…. நான்கு வருடங்கள் திரும்பியும் பார்க்காமல் இருந்துவிட்டு…. இப்போதும் அவள் வருத்தப்படும்படியும் பேசிவிட்டு… படுக்கையில் உரிமை எடுக்க முடியாமல் ஒரு குற்ற உணர்ச்சி  இருந்தது…. அன்னகிளி இதற்கு மனதளவில் தயாரா என்று அன்னகிளியை அணுகவும் தயக்கமாக இருந்தது…..   

ஓரளவு அவளை அணுக மனதை தயார்படுத்தி வைத்திருந்தால், இந்த வினோத் வேறு இன்று பார்த்து கண்ணில் படவேண்டுமா????

சலிப்பாக இருந்தது…. 

குடிக்காமல் உறக்கமும் வரும் போல தெரியவில்லை…..

டீ வீ பார்த்துக் கொண்டு ஹாலிலேயே அமர்ந்திருந்தான்…. நேரம் ஒன்றை கடந்து விட்ட போதும் அதன் முன்னேயே அமர்ந்திருந்தான்……  

நடுவில் விழிப்பு வந்த அன்னகிளி விக்ரமை காணாமல் வந்து பார்த்தாள்….. அவன் டீ வீ முன் அமர்ந்திருக்க… நேராக வந்து அதை ஆஃப் செய்தவள்… “வந்து படுங்க!”, என்று சொல்லி உள்ளே போக…..

அப்போதும் விக்ரம் அசையாமல் அமர்ந்திருந்தான்….

குடிப்பதற்கு தான் இப்படி கலாட்டா செய்கிறான் என்று நினைத்தவள்… “படுங்க! தூக்கம் வருமுங்க…..!”, என்று அவனருகில் வந்து சொல்ல……

“ம்”, என்று எழுந்தான்……

“குடிக்காம தூக்கம் வரலையா?”, என்று கேட்டாள்……

“அதுவும் ஒரு காரணம்….. ஆனா அது மட்டும் காரணமில்லை!”, என்றான்.

“பின்ன?”, 

“நீயில்லாம தூக்கம் வரலை!”, என்றான் சீரியசாக…..

முதலில் அவன் சொல்வது புரியவில்லை…. புரிந்த போது அவனை இடைவிடாது பார்த்தாள்…… விக்ரமும் சளைக்காமல் பார்த்தான்…..

“நான் எப்போ உங்களை வேண்டாமுன்னு சொன்னேனுங்க!”, என்று சொல்லி அவனை இன்னமும் விழி எடுக்காமல் பார்த்தாள்…

விக்ரம் தான் பேச்சிழந்து நின்றான்…  

பிறகு சுதாரித்து, “நீதானே….. மயக்கறேன்! அது இதுன்னு பேசின..”, என்றான் சிறு பிள்ளை போல…..  

“ஆமாம்! பேசினேன்! இப்போ அதுக்கு என்ன? நீங்க மயக்கிட்டா போச்சுன்னீங்க….. மயங்கறேன்னீங்க…. எதுவுமே காணோமே… இப்படி ஹால்ல உட்கார்ந்துகிட்டு தூக்கம் வரலைன்னா????”, என்று கையை கட்டி ஒற்றை புருவம் உயர்த்தி அன்னகிளி குறும்பாக கேட்கவும்…….

அவளின் பாவனையில் “ஊப்ஸ்…..”, என்றவன்…… “இதுக்கா நான் நாலு மணிநேரமா மண்டையை உடைச்சிட்டு இருந்தேன்!”, என்பது போல அன்னகிளியை பார்க்க….

அலட்சியமாக உதடு பிதுக்கி…….. அதோடு சேர்த்து தோளையும் குலுக்கி…… அன்னகிளி திரும்பி ரூமினுள் போகப் போக…. அவள் முன் ஓடி நின்றான் என்னிடம் இருந்து நீ எப்படி தப்புகிறாய் பார்க்கலாம் என்பது போல ஒரு தீர்க்கமான பார்வை பார்க்க…

விக்ரமின் பார்வை வீச்சு தாங்காமல்…… பார்வையை தாழ்த்தியவள்…. அவன் தொட வரும்போது அவனின் கையில் அகப்படாமல் திரும்பி ஓடப் போக….. அவளால் முடியவில்லை….     

அவள் கால்கள் தான் தரையிலேயே இல்லையே…..

விக்ரம் தான் அவளின் இடுப்பில் கையை கொடுத்து தூக்கி இருந்தானே…. அப்படியே சிறிது நேரம் அவளின் முகத்தை ஆசை தீர பார்த்தான்….. அன்னகிளி வெட்கத்தில் அவன் மார்பிலேயே முகம் புதைக்க போக…..

“ம்கூம்!”, என்றவன்….. அவளை அப்படியே தூக்கி தோள் மேல் போட்டு நடந்தான்……  அப்போதும், “எரும மாடு! என்னை ஆனாலும் ரொம்ப பயமுறுத்தறடி நீ……. உன்னை இன்னைக்கு விடறதில்லைடி…..”, என்று காதலாக திட்டிக் கொண்டே படுக்கையறைக்குள் நுழைந்தான்……   

 

Advertisement