Advertisement

அத்தியாயம் இருபது :

மலைக்கு சென்ற விக்ரம் வர ஐந்து நாட்கள் ஆகின……. ஒன்றிரண்டு முறை அன்னகிளிக்கு அழைத்தான் தான்…

என்னவோ பேச விஷயமேயில்லை அன்னகிளிக்கு……. விக்ரம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னாள்……

அவனின் கேள்விகளும், “அக்கா நல்லாயிருக்காளா…..? நீ போய் பார்த்தியா…..? நீ கூட இருக்கியா….? குழந்தை எப்படி இருக்கு……? பிரபா யார் கூட இருக்கான்….?”, என்பது மாதிரியான கேள்விகள்.

திருமண வேலைகள் அவளை பென்ட் எடுத்து இருந்தது….. இப்போது எல்லோருக்கும் ஒரு சமையல்…… கூட குழந்தை பிறந்தவளுக்கு ஹாஸ்பிடலுக்கு கொடுத்து விட பத்திய  சமையல்… அதுவும் திருமண வீடு என்பதால் யாராவது வர போக இருக்க விருந்தும் சற்று தட புடலே…. உதவிக்கு ஆட்கள் இருந்தாலும்….. சலிப்பாக இருந்தது அன்னகிளிக்கு.

அதுவும் பொருட்களை ஒழுங்கு படுத்துவது…. எல்லோர் வீட்டிற்கும் திருமண பலகாரங்கள் கொடுத்தனுப்புவது…. அவளுடைய வயதிற்கும் அனுபவத்திற்கும் அதிகப்படியான வேலைகள்…..

அம்மா அண்ணியுடன் குழந்தை பிறந்த இடத்தில் இருப்பதால் தடுமாறினாள்… உறவுகள் ஆளுக்கொரு யோசனை சொன்னர்….. போனில் மரகதத்திடம் கேட்டாலும் இவள் கேட்பது அவருக்கு புரியவில்லை…. அவர் ஒன்று சொல்ல….. இவள் ஒன்று கேட்க…     

மனதின் உற்சாகமின்மை மடு வேலையை கூட மலையளவு காட்டியது….. ஒரு வார்த்தை, “எப்படி இருக்க நீ, அதிக வேலையா?”, என்று விக்ரம் கேட்டிருந்தால் மலையும் கூட மடுவாகியிருக்கும்…. இப்போது அத்தனை வேலைகளும் அலைச்சலும் சோர்ந்து போனாள். 

விக்ரம் இந்த மாதிரி அன்னகிளியை கவனிக்க தவறி விட்டான்…..

ஐந்து நாட்கள் கழித்து வந்தவன்…. வீட்டிற்கு சென்று குளித்து பூஜை செய்து….. கோர்ட் சென்று….. மாலை அக்காவை சென்று ஹாஸ்பிடலில் பார்த்தான்….. நார்மல் டெலிவரி எப்போதும் ஒன்றிரண்டு நாட்களில் அனுப்பி விடுவார்கள்….. குழந்தையின் நலத்தை நன்கு அறிய ஆறு நாட்கள் ஹாஸ்பிடலில் வைத்திருந்து அன்று தான் டிஸ்சார்ஜ் செய்ய இருந்தார்கள்…..  

ஹாஸ்பிடலில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி விட்டு.. “நான் இன்னொரு நாள் வர்றேன் அக்கா!”, என்று லதாவிடம் சொல்லி……. வீடு வந்தவன்…. பிறகே அன்னகிளியை தொலைபேசியில் அழைத்தான்.

ஆனால் அன்னக்கிளி எடுக்கவில்லை….. அன்னகிளி எடுக்கவில்லை என்றதும் ஏதாவது வேலையாக இருப்பாள் கவனித்து இருக்கமாட்டாள் அவளாக அழைப்பாள் என்று விக்ரம் இருக்க……

அன்னகிளி அழைக்கவேயில்லை…..

காலையில் ஊரிலிருந்து வந்துவிட்டான் என்று தெரியும்…… அதன் பிறகு அவன் அழைக்கவேயில்லை… என்பதில் கோபத்தில் இருந்தாள்…. “அவ்வளவு அலட்சியமா என்னிடம்…..”, மனம் கனன்று கொண்டிருந்தது.  

“பெருசா பேசுவான், ரொம்ப அவசியம்னா தான் போன் பண்ணனும்னு….. எனக்கு அவசியமேயில்லை…….”, விக்ரம் போனில் அழைத்த போது அன்னகிளி போனை கையில் தான் வைத்திருந்தாள், ஆனால் எடுக்கவில்லை.

அவளின் புது அண்ணி கலைவாணி கூட போன் அடிப்பதையும், அன்னகிளி எடுக்காமல் இருப்பதையும் பார்த்து விட்டு…. “யாருங்க, எடுங்க அண்ணி”, என்று  சொல்ல…

“போன் கம்பனில இருந்துங்க, சும்மா ஏதாவது ஆஃபர்க்கு கூப்பிடுவாங்க அண்ணி!”, என்று விட்டாள்….

புது அண்ணிக்கு அவளின் முக வாட்டம் தெரியாது, ஆனால் பழைய அண்ணிக்கு கூடவா தெரியாது……

குழந்தையுடன் வீட்டினுள் நுழைந்த லதாவின் கண்ணில் பட்டது அன்னகிளியின் முக வாட்டம் தான்…..   

“என்ன அன்னம்?”, என்ற லதாவின் கேள்விக்கு சுதாரித்த அன்னகிளி….. “ஒன்னுமில்லீங்கலே அண்ணி! எங்க? எங்க வீட்டு பட்டுக் குட்டி!”, என்று சொல்லியபடி குழந்தையை வாங்கிக்கொண்டு அதை கொஞ்ச ஆரம்பித்தாள்.

லதாவிற்கு திருமணமாகி வந்த போது பத்து வயது அன்னகிளிக்கு… அப்போதிருந்து பார்க்கிறாள்….. அவளுக்கா அன்னகிளியின் முக வாட்டம் தெரியாது….. முன்பும் இப்படி இருந்திருக்கிறாள்! ஆனால் அப்போது விக்ரம் அன்னிகிளியுடன் இல்லை…..

இப்போது சேர்ந்து இருக்கிறார்களே…… இப்போது எதற்கு முக வாட்டம்..

உடனே ரூமிற்கு போய் விக்ரமிற்கு அழைத்தாள் லதா…… “ஏண்டா அன்னம் ஒரு மாதிரி இருக்கா….?”.

“என்ன ஒரு மாதிரி இருக்காளா….. இப்போ கூட போன் பண்ணினேன் எடுக்கலை…… நீ அவ கிட்ட குடு…..”,

“நான் குடுக்கலை…… நான் போன் வைக்கிறேன்! நீ அவளை கூப்பிடு….”, என்றாள்.

விக்ரமும் லதா சொன்ன மாதிரி செய்ய.. அன்னகிளியின் அருகில் தான் போன் இருந்தது… அது ஒலித்த உடனே அதை எடுத்து, ரிங் டோன் கட் செய்து மீண்டும் அதே இடத்தில் வைத்து விட்டாள்.

அன்னகிளி எடுக்கவில்லை என்றதும் மீண்டும் அக்காவிற்கு அழைத்தான் விக்ரம்….

“அவ தான் போன் பக்கத்துல இல்லை போல….. நீ குடுக்கறதுக்கு என்ன?”, என்று லதாவிடம் சண்டைக்கு வரவும்…..

“யார் சொன்னா போன் பக்கத்துல இல்லைன்னு….. போன் அவ பக்கத்துல தான் இருக்கு…… நீ போன் பண்ணினதும் ரிங் டோன் சைலன்ட்ல போட்டுட்டு அவ வேலையை பார்க்கிறா…..”,

“என்ன வேலை….?”,

“குழந்தைக்கு தொட்டில் ரெடி பண்ணிட்டு இருக்காங்க……”,

“ஒஹ்! அதுக்காக எடுக்காம இருப்பா! அப்புறம் கூப்பிடுவா……!”,

“டேய்! மரமண்டையாடா நீ…… அங்க உங்க மாமா இருக்காங்க…… அவர் தம்பி இருக்காங்க…. அத்தை இருக்காங்க…. அவளுக்கு பெருசா வேலையில்லை….. அவ வேணும்னே உன் போனை எடுக்கலை! அவ முகமும் சரியில்லை…. முன்ன தான் எப்படியோ? இப்ப கூட என்னடா உங்க ரெண்டு பேருக்கும்”, என்று சலிப்பாக லதா சொல்ல…….

“நான் அனுவை இங்க கூப்பிட்டுக்கட்டா….. நீ அங்க சமாளிப்பியா…”,

“இங்க நிறைய பேர் இருக்கோம்…… சமாளிப்போம்…. கை குழந்தை இருக்குற வீட்டுல சொல்ல போனா எத்தனை பேர் இருந்தாலும் வேலை கட்டும்……. முதல்ல உன் பொண்டாட்டியை கவனி… அவளை உன்கூட கூப்பிடு…..”,       

“எங்க அவ பாசக்கார அண்ணன் ஒருத்தன் இருப்பானே! அவன் கிட்ட போனை குடு….”, 

கந்தசாமியை அழைத்த லதா…. “விக்ரம் பேசறான்!”, என்று சொல்ல…..

கந்தசாமி என்னவோ ஏதோவென்று போனை வாங்கினான்……

“என்னங்க மச்சான்?”, எனவும்….

“நீங்க எப்பவும் போல என்னை விக்ரம்ன்னு கூப்பிட்டா பரவாயில்லை…….”,

கந்தசாமி தயங்கவும்… “உங்களை விட சின்னவன் தான்! அப்படியே கூப்பிடுங்க!”, என்று சொன்னவன்…..

“எனக்கு ஊருக்கு போய்ட்டு வந்தது ஒரே அலைச்சலா இருக்கு……. அனுவை இங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விடறீங்களா, உங்களுக்கு வேற ஏதாவது வேலை இருக்கா….?”,

அதை விட ஒரு வேலை கந்தசாமிக்கு இருக்குமா என்ன? “இதோ உடனே கிளம்பறோம்!”, என்று போனை வைத்தவன்…..  

“பாப்பா! கிளம்புங்க பாப்பா! போகலாமுங்க!”,

“எங்கிங்கண்ணா….?”,

“உன்ற வீட்டுக்காரர் கொண்டு வந்து விட சொன்னாங்கம்மா உங்க வீட்டுக்கு….”,

“இல்லீங்கண்ணா….. இன்னைக்கு தானே குட்டி பையன் நம்ம வீட்டுக்கு வந்திருக்கான்…. நான் அவனோட ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போறனுங்க….. நான் அவர்கிட்ட சொல்லிக்கறனுங்க…”,

மரகதம்…. அன்னகிளியிடம்…. “நீ கிளம்பு பாப்பா….. கல்யாணத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்தது….. கிட்ட தட்ட பதினஞ்சு நாள் ஆகப் போகுது….”, என்று கட்டாயப்படுத்தவும்…..

“அம்மா எனக்கு தெரியுமுங்க….. எப்ப போகணுமுனு… இல்லை! நான் இங்க இருக்க வேண்டாம்னு நினைச்சா சொல்லுங்க, நான் என்னவோ பார்த்துக்கறேனுங்க”, என்று சொன்னதும் மொத்த வீடும் அதிர்ந்தது.

“என்ன பாப்பா! என்ன பேசற?”, என்றபடி முத்துசாமி எழுந்து வர….

“சும்மா எல்லோரும் வான்றீங்க போன்றீங்க… எனக்கு தெரியுமுங்கப்பா என்னை விடுங்க….”, என்றாள்.    

“ஏம்பாப்பா…… ஏம்பாப்பா இப்படி பேசற?”, என்றார் கலங்கி போனார் முத்துசாமி….. எல்லாம் சரியாகிவிட்டது என்று நினைத்த நேரத்தில் திரும்பவும் என்ன இது என்பது போல…..

கந்தசாமி முன்பு எப்படியோ இப்போது திருமணமாகி இந்த ஒரு வாரத்தில் வாழ்க்கை துணை எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்ந்திருக்க……

“என்னன்னாலும் பேசிக்கலாமுங்க பாப்பா! உங்க வீட்டுக்கு போகலாமுங்க”,  என்று சொல்ல……..

“அப்போ இது என் வீடு இல்லைன்னு சொல்றீங்களா…”, என்று அன்னகிளி சொல்ல….

“என்ன பாப்பா இப்படி பேசறீங்க… நான் அப்படி சொல்வனுங்களா…..”, என்றான் கலக்கமாக கந்தசாமி.

“பின்ன உங்க வீட்டுக்கு போகலாம்னு இப்போ தானே நீங்க சொன்னீங்க…..”,

“என்ன பாப்பா இது விதண்டாவாதம்!”, என்று முத்துசாமி கடிய…….  

“நான் ஒன்னும் இங்கயே இருந்துறமாட்டேனுங்கப்பா… ஒரு ரெண்டு நாள் கழிச்சு போறேன்னு சொல்றன் தானுங்களே விட்டுடணும்…”, என்று தந்தையிடம் சொல்லி  அவளின் ரூமிற்குள் போய் படுத்துக் கொண்டாள்….. இப்படியெல்லாம் அன்னகிளி எப்போதும் நடந்து கொண்டதே இல்லை…..

வீடே என்ன செய்வது என்று தெரியாமல் திணறியது.

அவள் உள்ளே சென்றதுமே லதாவின் போன் அடித்தது…… “அக்கா! அவங்க கிளம்பிட்டாங்களா?”, என்றான் விக்ரம்….

“இல்லை டா”,

“ஏன்?”,

“தம்பி கொண்டு போய் விடறேன்னு கிளம்பினார் .. இவ நான் ரெண்டு நாள் கழிச்சு தான் போவேன்னு எப்பவும் இல்லாம சத்தமா பேசிட்டு போய் படுத்துகிட்டா….. பேச்சே ஒன்னும் சரியில்லை…. அத்தை பேசினதுக்கு எனக்கு தெரியும்… நீ கிளம்புன்னு சொன்னா என் வழிய நான் பார்த்துக்கறேன்னு நேரடியா பேசறா…….”,

“மாமா பேசினா…. நான் ஒன்னும் இங்கயே இருந்துட மாட்டேன் ரெண்டு நாள்ல போயிடுவேங்கறா…. ப்ச்! என்ன பண்றதுன்னு தெரியலை……”,

“சரி! நீ போய் படு! இதை போட்டு மனசுல உளப்பாத! நான் பார்த்துக்கறேன்…..!”, என்று சொல்லி விக்ரம் போனை வைத்தான்.

இருந்தாலும் லதாவிற்கு மனசு கேட்கவில்லை…… அவள் அன்னகிளியிடம் பேச சென்றாள்….

அவள் அன்னகிளியிடம் சொன்ன விஷயங்கள அன்னகிளியை இன்னும் கொதி நிலைக்கு கொண்டு சென்றது….

அக்கா, தங்கை என்று விக்ரம் கவனிக்கும் போதே தன்னை விட அவர்களை அதிகமாக கவனிக்கிறானோ என்று மனதை போட்டு குழப்பி கொள்ளும் அன்னகிளியால்…..

விக்ரம் வாழ்க்கையில் ஏற்கனவே ஒரு பெண் இருந்திருக்கிறாள் என்பதை சுத்தமாக ஜீரணிக்க முடியவில்லை….

இது தெரியாமல் லதா…. “இப்போது தான் விக்ரம் சாஷாவை மறந்து உன்னோடு இணக்கமாக இருக்கிறான்”, என்று  சொல்ல…. அன்னகிளி கொதித்து எழுந்து விட்டாள்.

என்ன இன்னொரு பெண்ணை மறந்து என்னோடு இணக்கமாக இருக்கும் அளவிற்கு நான் குறைந்து போய் விட்டேனா… 

“அவர் லைஃப்ல இன்னொரு பொண்ணு இருந்தான்னா எதுக்கு என்னை அவருக்கு நீங்க கல்யாணம் செஞ்சு வெச்சீங்க…….. எதுக்கு நீங்க என்கிட்டே இந்த விஷயத்தை சொல்லலீங்க…..”, என்று லதாவை ஒரு பிடி பிடிக்க…….

லதாவிற்கு பயமாகி விட்டது…… மனதும் தாங்கவில்லை……

“ஏன் விக்ரம்க்கு என்ன குறைச்சல்”, என்று லதாவும் சண்டையிட…..

“அப்போ எனக்கு குறைச்சலுங்களா….. அப்படி இன்னொரு பொண்ணை நினைச்சிட்டு இருக்குறவரை நான் ஏன் கல்யாணம் பண்ணியிருக்கணும்”, என்று அன்னகிளி பதிலுக்கு கத்த……

லதா இன்னும் அதிகமாக பயந்து விட்டாள்……..

“கத்தாத!”, என்று லதா சொல்லும் போதே…….  மரகதமும், பழனிசாமியும், கந்தசாமியும் என்னவோ ஏதோவென்று உள்ளே வந்தனர்….

என்ன விஷயம் என்று மரகதம் கேட்கவும்…. அன்னகிளி என்ன சொல்வாளோ என்று பயந்து லதா பார்க்க அன்னகிளி வாயை திறக்கவில்லை….

லதாவை பார்த்த பழனிசாமி….. “நீ போ! நீ போய் குழந்தையை பாரு!”, என்று லதாவை அனுப்பினான்.

கந்தசாமி, “என்னங்க பாப்பா?”, என்று பேச முற்பட…..

“எனக்கு தூக்கம் வருதுங்கண்ணா!”, என்று எடுத்த எடுப்பிலேயே அன்னகிளி பேச விருப்பமில்லை என்று காட்ட…..

“நீங்க ரொம்ப மாறிட்டீங்க பாப்பா!”, என்றான் அண்ணனாக கந்தசாமி…..

எதற்கும் அன்னகிளி அசையவில்லை….

ஏற்கனவே விக்ரம் ஒரு பெண்ணை காதலித்து இருந்தான் என்பதை அன்னகிளியால் தாங்கவே முடியவில்லை…. யார் மீது என்று தெரியாமலேயே கோபம் கோபமாக வந்தது…. 

அவளின் ரூமிற்கு சென்ற லதா உடனே விக்ரமை அழைத்து விஷயத்தை சொல்ல….. விக்ரமிற்கு அப்படி ஒரு கோபம் வந்தது லதாவின் மீது……

“நான் தான் பார்த்துக்கறேன்னு  சொன்னனில்லை, உனக்கு என்ன அவசரம்? உன்னை யார் இதெல்லாம் சொல்ல சொன்னது, அவ என்ன  நினைக்கிறா? என்ன பண்ணுவா? எதுவும் சொல்ல முடியாது…… மனசுல இருக்குறதையும் சொல்ல மாட்டா அவ!”, என்று லதாவை திட்ட… அவள் அழ….

“ப்ச்! அழாத அக்கா! விடு! இப்போ நீ அழக் கூடாது! உடம்பை பார்த்துக்கோ! அவளை  நான் பார்த்துக்கறேன்!”, என்று அவளை வெகுவாக சமாதானபடுத்தி போனை வைத்தான்.

அன்னகிளியின் பதில்களால், செய்கைகளால் வீடே ஒரு மாதிரி உற்சாகமிழந்து யாரும் யாரிடமும் பேசாமல்…. சீக்கிரமே உறங்க சென்றது.

அன்னகிளி சாப்பிட கூட இல்லை…. யார் கூப்பிட்டும் அசையவில்லை…..

பத்து மணிக்கே வீடு உறங்க போய்விட…..

அன்னகிளி ஏதேதோ எண்ணங்கள் உளல படுத்திருந்தாள்…… கார் ஹாரன் ஒன்று விட்டு விட்டு அடிக்க…… இந்த நேரத்தில் யார் இப்படி அடிப்பது என்று தோன்றிய அடுத்த நொடி…. விக்ரமாக இருப்பானோ என்றும் தோன்ற…. அதற்குள் இன்னும் இரண்டு மூன்று முறை ஹாரன் ஒலித்துவிட………

வேகமாக கதவை திறந்து போனாள்…. பார்த்தாள் அவனின் கார் தான்……

அதற்குள் அவளின் போனும் அடித்தது…

“ஏய், வந்து கார்ல ஏறுடி!”, என்றான்….. எடுத்த எடுப்பிலேயே……

“அதெல்லாம் வர முடியாது!”, என்றாள் அன்னகிளியும் பட்டென்று……

“நீ வரலைன்னா! நான் வருவேன்! பரவாயில்லையா?….. தலை கால் தெரியாம ரொம்ப நாளைக்கு அப்புறம் குடிச்சிருக்கேன்! வரட்டுமா…….. நான் குடிக்கறது இப்போதைக்கு உன்னை தவிர யாருக்கும் தெரியாது! என் அக்காக்கு கூட தெரியாது!”, என்றான்…

அதற்குள் ஹாரன் சத்தம் கேட்டு முத்துசாமியும் பழனிசாமியும் கூட என்ன வென்று பார்க்க வந்திருந்தனர்……

பழனிசாமி இவனின் காரை பார்த்து கேட்டை திறக்க போக…….

“அண்ணா இருங்க…”, என்றாள்…..

“ஏனுங்க பாப்பா! நான் போய் உள்ள கூப்பிடறேனுங்க!”, என்று பழனிசாமி மறுபடியும் போகப் போக….

விக்ரம் குடிப்பது யாருக்கும் தெரிவதில் அன்னகிளிக்கு விருப்பமில்லை…… “அண்ணா இருங்கன்னு சொன்னேன்”, என்றாள் குரலுயர்த்தி….

இப்படி என்றுமே அன்னகிளி பேசியிராததால்….. முத்துசாமியும் கந்தசாமியும் அசந்து  நின்றனர்……   

தடுத்தும் அண்ணன் விக்ரமை பார்க்க போகும் அபாயம் இருப்பதால்….. மளமள வென்று செருப்பை போட்டவள்… “நான் கிளம்பறேன்னு எல்லார்கிட்டயும் சொல்லிடுங்க…….. அப்பா கிளம்பரனுங்கப்பா”, என்றவள்….

விரைந்து சென்று காரில் ஏற…. காரின் விண்டோவை இறக்கிய விக்ரம்…. அங்கிருந்தே பழனிசாமியை பார்த்து கையை மட்டும், “கிளம்புகிறேன்”, என்பது போல அசைத்து கிளம்பிவிட்டான்.

முத்துசாமிக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை… அவர் மலைப்பாய் மூத்த மகனை பார்க்க……. “அப்பா! நீங்க கவலைப்படாதீங்க! விக்ரம் பாப்பாவை  பார்த்துக்குவானுங்க! பயம் வேண்டாம்… பாப்பாவும் பார்த்து நடந்துக்குமுங்க….. அதுக்கு ஏதோ கோபம்! ஒரு ரெண்டு நாள் இருந்துட்டு போறேன்னு சொல்லிச்சு அவ்வளவுதான்…… வாங்க….”,

“இப்போ புருஷன் கூப்பிட்டவுடனே கிளம்பிருச்சு இல்லீங்களா….. வாங்க! நீங்க டென்ஷன் ஆகி பீ பீ ஏத்திக்காதீங்க, ஒரு ரெண்டு நாள் விட்டு போய் பார்த்துட்டு வருவீங்கலாம்”, என்று சமாதானப்படுத்தி அழைத்து போனான். 

“இப்படி குடிச்சிட்டு உங்களை யாரு காரை ஓட்டிட்டு வர சொன்னதுங்க”, என்று கார் சிறிது தூரம் சென்றதுமே அன்னகிளி விக்ரமை பார்த்து பொறிய…..

“நீதான்!”, என்றான் அசால்ட்டாக விக்ரம்….

அன்னகிளி பார்வையிலேயே அவனை எரிக்க….

“பின்ன! நீ வந்திருந்தா நான் ஏன் வர போறேன்…..”,

“இது நீங்க குடிக்கற டைம் கூட இல்லீங்களே…”,

“ஆமாம்! இல்லை தான்! ஆனா நீ பண்ணுன இம்சையில கொஞ்சம் சீக்கிரம் குடிச்சிட்டேன்……”,

“யாரு? நானு உங்களை இம்சை பண்றனுங்களா! நீங்க கூட தான் என்னை இம்சை பண்றீங்க! நானும் உங்களை மாதிரி குடிக்கட்டுமுங்களா……?”,

“குடிக்கறது என்ன அவ்வளவு ஈசின்னு நினைச்சியா…….. அது எவ்வளவு கஷ்டம் தெரியுமா, குடிக்கறவனை கேட்டா தான் தெரியும்….”, என்று விக்ரம் தத்துவம் பேச…..

“அப்படியே தலயில தட்டணுமுனு ஆத்திரம் வருதுங்க”, என்றாள்.

“ஏய், தட்டி கிட்டி வெச்சிடாத! நானே ஒரு குத்து மதிப்பா காரை ஓட்டிட்டு இருக்கேன்!”, என்றான் சீரியசாக விக்ரம்…..

அதற்குள் கோவை வந்திருந்தது… “பசிக்குதுடி….. எங்கயாவது சாப்பிட்டிட்டு போகலாமா…..”,

“ஒன்னும் வேண்டாமுங்க….. வீட்டுக்கு போகலாம்….”,

“அங்க ஒன்னுமில்லை, எனக்கு பசிக்குது!”, என்றான் சிறுபிள்ளை போல…..

“ப்ச்! இப்படி குடிச்சிட்டு எங்கயாவது போய் தடுமாறுணீங்கன்னா……. மானமே போகும்”,

“சொல்ல முடியாது! செஞ்சாலும் செய்வேன்!”, என்றான் அவனே…..

“இரு! பெரிய ஹோட்டல்ன்னா வெளில செக்யூரிட்டி இருப்பான்…. என்ன வேணும்னு சொல்லி பணம் குடு….”,

“இவ்வளவு கலாட்டா தேவைங்களா”, என்று முனகிக் கொண்டே அன்னகிளி இருந்தாள்.

அதற்குள் ஒரு பெரிய ஹோட்டலின் முன் விக்ரம் காரை நிறுத்த…… செக்யூரிட்டியே இவனின் காரை பார்த்து ஓடி வந்து ஒரு பெரிய சல்யூட் அடிக்க….

அன்னகிளி விரைவாக கிடைக்கும் சில உணவு வகைகளை சொல்லவும் பத்தே நிமிடங்களில்…… அது வந்துவிட….

பணம் கொடுக்க விக்ரமை பார்க்க…… “அவன் எடுத்துக்கோ”, என்பது போல அவன் பேன்ட் பேக்கட்டை காட்டினான்.

“செக்யூரிட்டி நிக்கறான்! எடுத்து குடுங்க!”, என்று அன்னகிளி வார்த்தைகளை கடித்து துப்ப……

விக்ரம் அசைவதாயில்லை… வேறு வழியில்லாமல் அன்னகிளி தான் அவன் பேண்ட்டில் கை விட்டு பணத்தை எடுத்தாள்…..

விக்ரம் அமர்ந்து இருந்ததால் கையை உள்ளே விட்டு எடுக்கவும் சிரமமாக இருக்க.. “கொஞ்சம் அந்த பக்கமா சாய்ங்க!”, என்றாள் கடுப்பாக..

“ஒரு கையாள என்னை அப்படியே தூக்கி! இன்னொரு கையாள பணத்தை எடுக்க மாட்ட!”, என்று விக்ரம் சொல்ல….     

“நீ அடங்கவே மாட்டாயா!”, என்பது போல அன்னகிளி பார்த்துக் கொண்டே அவனை சாய்த்து கையை விட்டு எடுத்தாள்….    

செக்யூரிட்டியிடம் பணத்தை கொடுத்து…. “காரை எடுங்க!’, என்றாள் விக்ரமை பார்த்து…

“என்னை அழகுன்னு திட்டுறியா?”, என்றான்.

அன்னகிளி புரியாமல் பார்க்க…. “இல்லை, எருமைன்னு திட்டுறியா”, என்றான்.. 

“உங்களை அடிக்க மாட்டேன்! நான் இந்த கார் கண்ணாடில தலையை முட்டிக்குவேனுங்க!”, என்று அவள் சீரியசாக சொல்லவும்…….

ஒரு புன்னகையோடு காரை எடுத்தான்….. 

காரை விட்டு இறங்குவதற்கே விக்ரம் தடுமாறினான்….. அன்னைகிளியாக கை கொடுத்து உதவினாள்…..

“நிக்க, நடக்க முடியலை, வார்த்தை மட்டும் தெளிவா வருது…”, என்று அன்னகிளி முணுமுணுக்கவும்…..

“என்னடி சொல்ற”, என்றான்… 

“ம்! நீங்க ரொம்ப அழகுன்னு சொன்னேன்!”, என்று அன்னகிளி சொல்லவும் விக்ரமிற்கு அப்படி ஒரு சிரிப்பு….

செக்யூரிட்டியிடம் சாவியை கொடுத்து வண்டியை பார்க் செய்ய சொல்லி, விக்ரமை வீட்டினுள் கூட்டி வருவதற்குள்ளாகவே ஒரு வழி ஆகிவிட்டாள்…..

எப்படியோ காரை பத்திரமாக ஓட்டி வந்துவிட்டானே என்றிருந்தது…. 

அவசரமாக அவனுக்கு உணவு கொடுத்து அவனை தூங்க படுக்கையறைக்குள் தள்ளுவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

இந்த கலாட்டாவில் அவளுக்கும் பசி எடுத்துவிட…. அவள் உண்டு அறைக்குள் போனாள்……

விக்ரமின் பழைய வீட்டில் இருந்த டபுள் காட் இப்போது ரூமினுள் இருந்தது…. ஆனால் அதில் விக்ரமின் மெத்தை பாதி மட்டுமே வந்தது…. மீதி வெறும் காட்டிலாக இருக்க…. அதில் ஒரு தலையணையை போட்டு உறங்குவதா, இல்லை கீழே உறங்குவதா என்று அன்னகிளி யோசிக்க……..

“படுடி! இல்லாத மூளையை கசக்காத!”, என்றான் கண்ணை திறக்காமல்…….

அன்னகிளியும் வழக்காடாமல் அமைதியாக படுக்க…..

“ஏண்டி வர மாட்டேன்னு சொன்ன?”, என்றான்….

“அதான் வர வெச்சிடீங்கதானே”,

“ஏன் வர மாட்டேன்னு சொன்ன?”,

 “இப்போ நான் இங்க இருக்கவா எழுந்து வெளில போய் படுக்கட்டுமுங்களா!”, என்றாள் கோபமாக…..

“இங்க படுத்தா என்ன? வெளில படுத்தா என்ன?”, என்று முணுமுணுத்தவன்… “படுடி ஓவரா சீன போடறா”, என்று உறங்க முற்பட்டான்….    

 “யாரு? நான் சீன் போடறனுங்களா… என்ன? என்ன சீன் போட்டனுங்க……. நீங்க தான் யாரோ நினைப்புல என்னை விட்டுட்டு இருந்தீங்க….”,

“ஏதாவது உளறக் கூடாது அனு… நான் கூப்பிட்டேன் நீ தான் வரலை….”,

“இப்போ கூட தான் நான் வரலைன்னு சொன்னனுங்க….. ஆனா விட்டீங்களா? இல்லையே… அப்போ மட்டும் ஏன் என்னை அந்த மாதிரி  கூப்பிடலை… ஏன்னா நீங்க வேற யாரையோ லவ் பண்ணியிருக்கீங்க……”, என்று கேட்கும் அன்னகிளியை வாயடைத்து போய் பார்த்தான்.

“உனக்கு தெரியாத விஷயத்தை நீயா கற்பனை செஞ்சு உளறக் கூடாது….. பழசை பேசி இருக்குற லைஃப் ஸ்பாயில் பண்ண கூடாது…..”, என்று விக்ரம் சொல்ல…

“அப்படியெல்லாம் என்னால விட முடியாது”, என்று அன்னகிளி சொல்ல…

“சரி! நீ அதையே பிடிச்சிட்டு தொங்கு! ஆனா தொங்கறதை என்கூட இருந்து தொங்கு! விட்டுட்டு போகணும்னு நினைச்ச, தொலைச்சிடுவேன்!”, என்று விக்ரமும் கடுமையாக சொன்னவன்… உறங்க ஆரம்பித்தான்.

“நான் எங்கடா போனேன்! நீதானே அனுப்பின!”, என்று அன்னகிளிக்கு கத்த வேண்டும் போல தோன்றியது… ஆனாலும் வார்த்தையை வளர்க்காமல் அமைதியாக படுத்துக் கொண்டாள்.       

 

Advertisement