Advertisement

அத்தியாயம் பத்தொன்பது : 

வாழ்க்கையை லகுவாக கொண்டு செல்ல விக்ரமும் அன்னகிளியும் முயன்றாலும் அவர்களால் முடியவில்லை….. குழந்தையை பற்றிய கவலை மனதை அரித்தது.

விக்ரமுமே உற்சாகம் குறைந்து காணப்பட்டான்…. அன்னகிளியும் அமைதியாக இருந்தாள்…… எப்போதும் ஒரு மாதம் ஆகும் எப்போது குழந்தை பிறக்கும் அதன் ஆரோக்யத்தை அறிவோம் என்பது போல இருவருமே இருந்தனர்.

அதனால் சிறு சிறு தீண்டல்கள் கூட இல்லை…… அங்கே வந்து இருக்க சொல்லி லதாவிடம் சொன்ன போது மறுத்துவிட்டாள்…. கணவனிடம் முகம் கொடுத்து பேசாவிட்டாலும் கணவனை விட்டும் இருக்க மாட்டாள் லதா.

அதே சமயம் இப்போது தான் சேர்ந்து வாழ ஆரம்பித்து இருக்கிறார்கள்……. தான் எதற்கு இடையில் என்பது போல லதா நினைக்க…. அவர்கள் தான் உடல் சார்ந்த வாழ்க்கையை ஆரம்பிக்கவே இல்லையே….

விக்ரமிற்கு தெய்வ நம்பிக்கை அதிகம்….. அவனால் இரண்டு நாட்களிற்கு மேல் குழந்தையை பற்றிய கவலையை தாங்க முடியவில்லை ஐயனை சரணடைந்தான்……

அதுவும் அன்னகிளி பார்த்து பார்த்து ஒரு பூஜை அறையை அவனுக்காக அமைத்துக் கொடுக்கவும்…….. அவன் குழந்தையின் நலனுக்காக ஐயனை வேண்டி கடுமையான விரதம் இருந்தான்…. பணியை முன்னிட்டு மாலை போடவில்லை அவ்வளவே….

காலை ஐந்து மணிக்கு எழுந்து பச்சை தண்ணீரில் குளித்து…. அவனே சமைத்து அவனே உண்டு….. அதுவும் மாலை ஒரு வேளை உணவு மட்டுமே…. அவன் உடைகளை அவனே துவைத்து….. வெறும் தரையில் உறங்கி……

அன்னகிளியை சமைக்க அனுமதிக்கவில்லை…. அவனுக்கான எந்த வேலையையும் செய்ய வேண்டாம் என்று விட்டான்….

விக்ரம் குழந்தைக்காக இவ்வளவு கடுமையான விரதம் இருக்கும் போது  அன்னகிளியாலும் நன்கு உண்ண முடியவில்லை….. அவளும் ஒரு வேளை மட்டுமே உண்டாள்…. மாலை விக்ரம் அவனுக்கு சமைப்பதை அன்னகிளிக்கும் சேர்த்து தான் சமைப்பான்… அதை மட்டுமே உண்பாள்…..

முடிந்தவரை விக்ரமை போல அவளும் குழந்தைக்காக வேண்டி விரதம் காத்தாள்.    

 “நீ வேணா உங்கம்மா வீட்டுக்கு போயிட்டு குழந்தை பிறந்த பிறகு வர்றியா”, என்றான்.

மீண்டும் உறவுகள் என்னவோ ஏதோ வென்று நினைக்கும் அபாயம் இருக்கிறது.. அதே சமயம் அவளுக்கும் விக்ரமை விட்டு போக மனமில்லை…..

“இல்லை! நான் உங்களுக்கு எந்த வகையிலும் தொந்தரவு குடுக்க மாட்டேனுங்க….. நீங்க டிஸ்டர்ப் ஆவீங்கன்ற மாதிரி ஃபீல் பண்ணுனிங்கன்னா எதிர்ல கூட வரலீங்க…..”, என்றாள்.

“இல்லை! அதுக்காக இல்லை! மனசுல எனக்கு கண்ட்ரோல் இருக்கும்! என்னோட வார்த்தைகள்ல எனக்கு கண்ட்ரோல் கிடையாது…. விரதத்துல ரொம்ப முக்கியமானது… நம்ம அடுத்தவங்களை காயப்படுத்தக் கூடாது.. வருத்தப்பட வைக்க கூடாது…… சமையத்துல உன்னை திட்டுறேன்…. அதுவுமில்லாம பேச்சும் சில சமயம் என்னை மீறி தடம் மாறிடும்….. அதான்!”, என்றான்.     

“நான் அதிகம் பேச மாட்டேன்….. நான் பேசாம நீ தனியா ஃபீல் பண்ணுவ இல்லையா? அதுக்கு தான்!”, என்றான்.

“இல்லை! நான் உங்க முகம் பார்த்துகிட்டே இருந்துடுவேன்!”, என்று அவள் பதிலளிக்கவும் மேலே பேசாமல் இருந்துவிட்டான்.

“எப்படி நீங்களே சமைக்கறீங்க…….?”,

“நான் படிச்சிட்டு இருந்தப்போ பார்ட் டைம் ஜாப் பண்ணினேன்னு சொன்னேன் இல்லையா…. என்ன பண்ணினேன் தெரியுமா சமையல்!”,  

“என்ன சமையலா?”,  என்பது போல அவள் ஆச்சர்யமாக பார்க்க…..

“எஸ்! சென்னையில இருக்குற ஒரு ப்ரைவேட் மெடிகல் காலேஜ் மெஸ்ல……”,

“சாயந்தரம் ஆறு மணில இருந்து நைட் பத்தரை வரை வேலை….. திரும்ப காலை அஞ்சு மணில இருந்து எட்டு மணி வரை வேலை…… முடிச்சிட்டு காலேஜ் போவேன்”,

“ரெண்டு வேலை சாப்பாடு செலவு மிச்சமாகும்! அங்கேயே சாப்பிட்டுக்கலாம்  அதான்….. அதுவுமில்லாம எனக்கு சமைக்கறதுலையும் இன்ட்ரேஸ்ட்!”,

“எனக்கு உங்களை பத்தி இன்னும் ஒன்னுமே தெரியலை!”,  

“நான் இதெல்லாம் தெரியவிடலை! உங்கண்ணன் எப்பவுமே என்னை இளக்காரமா பார்ப்பான்… இதுல நான் சமையல் வேலை செய்யறேன்னு தெரிஞ்சா அவ்வளவு தான்…..”,

“எனக்கு எந்த வேலையும் கௌரவ குறைச்சல் கிடையாது.. ஆனா உங்க வீட்டு ஆளுங்க அப்படி நினைப்பங்களான்னு சொல்ல முடியாது! அது தான் என்னை பத்தி அதிகம் தெரியவிட்டதில்லை…..”,

“அண்ணிக்கு?”,

“அவளுக்கு தெரியாமலா! அக்காக்கு எல்லாம் தெரியும்…… அவளுக்கு என்னை பத்தி தெரியாதுன்னா இந்த நாலு வருஷமாதான் தெரியாது! மத்தபடி எல்லாம் தெரியும்!”,           

“எனக்கு தான் ஒன்னும் தெரியலை”, என்று குறைப்பட்டாள்…..

சிரித்தவன்…. “இப்போ இருக்குற நான் உன்னோட கணவன்….. அது உனக்கு தெரிஞ்சா போதும்…… என்னோட பழச தெரிஞ்சு நீ என்ன பண்ண போற….. நீ நினைச்சு சந்தோஷப்படர அளவுக்கு ஒன்னும் இல்லை…… ஏன்? நான் கூட அந்த நினைவுகளை மறக்க தான் நினைக்கிறேன்….”,

“என் பழைய நினைவுகள் என்னோட போகட்டும்!”, என்று அவன் சொன்னபோது…. அவன் கண் முன் வந்து அவனின் தமிழச்சி தான் சிரித்தாள்…..

 “வணக்கம்! விக்கி பையன் அவர்களே!”, என்று எப்போதும் உணவருந்த வரும் போது சொல்லிக் கொண்டு தான் வருவாள்.

விக்ரம் சமைக்கும் இடத்தில் தான் இருப்பான்.. அவன் பெண்கள் உணவருந்த வரும் இடத்திற்கு வரமாட்டான்….. ஆனால் சாஷா அவனை தேடி வந்து பேசிவிட்டு செல்வாள். அவள் விக்ரம் வேலை செய்த மெஸ் இருக்கும் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்கும் மாணவி…..        

விக்கி என்று சாஷா அழைத்தாள்…… “டோன்ட் ஷார்டன் மை நேம்….”, என்பான் விக்ரம்.

“உன்னுடைய பெயரில் நீ ரம்மை வைத்துள்ளதால் என்னுடைய தோழிகள் மயங்கி கிடக்கிறார்கள்….. நான் அதற்கு ஆளல்ல……. பார் நீ கண்ணுக்கு தெரிகிறாயா என்று எல்லோரும் எட்டி பார்ப்பதை…. இங்கே வர எல்லோருக்கும் ஆர்வம்…… நீ தான் அவர்கள் வந்தால் வார்த்தையிலேயே கடித்து துப்பி விடுகிறாயே…”,

“உனக்கு அந்த பயம் இல்லையா?”,

“பயமா! எனக்கா? உன்னை பார்த்தா…..? எனக்கு உன்னை பார்த்து பயமில்லை! நீ பேசும் ஆங்கிலத்தை பார்த்து தான் பயம்! நீ அதை விடமாட்டாயா…..!”,

“i am used to that…….”,        

“ஆங்கிலம் என்பது ஒரு மொழி…… அது தகுதி கிடையாது…… its a medium of communication…. its not a qualification….”,

“ஆங்கிலத்தில் என்னோடு கதைக்காதே! நான் தமிழச்சி! என்னோடு நீ தமிழில் தான் கதைக்க வேண்டும்!”, என்பாள்…..  

தோழிகள் அவனிடம் மயங்குவதாக சொன்னவள்…… கடைசி வரை அவள் மயங்கினாளா இல்லையா விக்ரமிற்கு புரியாத புதிர்….

முயன்று நினைவில் இருந்து மீண்டவன்….. தயங்கி நின்றான்.

அவன் தயக்கத்தை பார்த்து, “என்னங்க”, என்று அன்னகிளி கேட்கவும்…..

“அக்கா மாதிரி சௌமிக்கும் ஏதாவது பிரச்சனையிருந்தா….. நான் அவ கிட்ட போன்ல பேசட்டுமா?”, என்றான்.

விக்ரம் நினைத்தால் பேசியிருக்கலாம் அவனை தடுப்பவர் யாரும் கிடையாது….. அன்னகிளியிடம் கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை….. அது அன்னகிளியின் அறிவிற்கு நன்கு புரிந்தது….. ஆனால் மனதிற்கு பிடிக்கவில்லை…….

அக்காவும் தங்கையும் அவனுக்கு பிரதானம் என்று மனது நினைப்பதையும் தடுக்க முடியவில்லை….  ஆனாலும் தலை தானாக, “சரி”, எனபது போல ஆடியது.

“தேங்க்ஸ்….!”, என்று விக்ரம் சொல்லவும்…

அன்னகிளி முறைத்தாள்……

“சரி! நானே வெச்சிக்கறேன்! என்னோட தேங்க்ஸ்ஸ!”, என்று சொல்லியபடி அவன் சென்றாலும்…

விக்ரமிற்கு அன்னகிளி தான் முதலிடம்…. அவன் அப்படித்தான் நினைக்கின்றான் என்று அன்னகிளியின் அறிவு ஆணித்தரமாக அடித்து சொன்னாலும்….. மனது இல்லை எல்லாம் அவனின் அக்கா தங்கைக்காக தான் என்றது.   

நீ இரண்டாம் பட்சம் தான் என்று சொல்லியது… ம்கூம்! நான் தான்! நான் மட்டும் தான் முதலிடமாய் இருக்க வேண்டும்! என்று விடாமல் சத்தம் போட்டது..

இதுநாள் வரையில் விட்டு பிரிந்திருந்த போது அவளுக்கு எதுவும் தெரியவில்லை ஆனால் இப்போது தாங்க முடியவில்லை….. அவள் மட்டுமே முதலிடமாய் முக்கியமாய் இருக்க வேண்டும்…

மனது ஓலமிட்டது…. ஆம்! ஓலம் தான் இட்டது….. இந்த நினைப்பு தப்பு என்று புரிந்தது….. 

கட்டுக்குள் கொண்டு வருவதற்குள் தடுமாறி விட்டாள்.

ஆனால் வெளியில் எதையும் காட்டவில்லை… அதனால் விக்ரமிற்கு தெரியவில்லை.

அதிகம் அன்னகிளியின் முகம் பார்த்துக் கூட பேசவில்லை விக்ரம்… முகம் பார்த்து பேசினாலே ஏதோ அவள் சரியில்லை என்பது மட்டும் தான் தெரியும்…… அவள் மனதில் இருப்பதை அவளாக சொன்னால் அன்றி கண்டு கொள்ள முடியாது…       

இப்போது விக்ரம் அவள் முகமே பார்க்கவில்லை எனும் போது என்ன சொல்வது…….. அவனுக்கு அன்னகிளியின் மனது சற்றும் தெரியவில்லை….

விக்ரம் அவன் அவன் வேலைகள் என்றொரு மோனத்தில் இருந்தான்….. அன்னகிளி இப்படி நினைக்க கூடும் என்று சற்றும் அனுமானிக்கவில்லை…..     

அன்னகிளிக்கு இருந்த மிகப் பெரிய திருப்தி….. விக்ரம், “எனக்கு இது பழக்க மாயிடுச்சு! நைட் எனக்கு இதில்லாம தூக்கம் வராது!”, என்று சொன்ன குடிப்பழக்கத்தை தொட கூட இல்லை….

ஏன் காலையில் எழுந்ததும் டீ இல்லாமல் வேலையே ஓடாது என்பான்…. அந்த டீ யை கூட குடிக்கவில்லை.    

நாட்கள் ஓடின…….. ஒரே வீட்டில் இருந்தாலும் அவரவர், அவர் வேலையுண்டு என்பது போல இருந்தனர்….

சோம்பியிராமல் வீட்டில் அன்னகிளியும் முடிந்தவரை வீட்டை அழகுப்படுத்தினாள்….. எம்ப்ராய்ட்ரி, பெயிண்ட்டிங் போன்றவற்றில் அன்னகிளிக்கு மிகுந்த ஈடுபாடு என்பதால் அதில் ஆர்வம் செலுத்தினாள்…

கந்தசாமியின் திருமணத்திற்கு பத்து நாட்களே இருந்ததால் திருமண வேலை முன்னிட்டு கோவை வரும்போதெல்லாம் வீட்டிற்கு பெரிய அண்ணனோ, சின்ன அண்ணனோ யாரோ ஒருவர் வீட்டிற்கு வருவதும் போவதுமாக இருந்தனர்…  

திருமணத்திற்கு அழைக்க வரும் பொழுது….. அழைப்போடு பெண்ணிற்கும் மாப்பிள்ளைக்கும்…. பட்டு சேலை, பட்டு வேஷ்டி, பட்டு சட்டை….. அதனோடு கந்தசாமிக்கு பார்த்திருக்கும் பெண்ணுக்கு இவர்கள் சீராக செய்யும் நகை போல அன்னகிளிக்கும் ஒன்று எடுத்து வந்திருந்தனர்.

விக்ரம் எடுத்து கொள்வான் என்ற நம்பிக்கை முத்துசாமிக்கு இல்லை…. இருந்தாலும் கொடுப்பது அவரின் முறை…. என்று அவர் அதையும் தட்டில் வைத்துக் கொடுக்க…

விக்ரம் டென்ஷன் எல்லாம் ஆகாமல்…… “சேலையும், வேஷ்டி சட்டை மட்டும் போதும்!”, என்பது போல சொல்லி அதை மட்டும் அன்னகிளியை எடுத்துக் கொள்ள சொன்னான்.

இதை எதிர்பார்த்தே இருந்ததினால் அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை…. ஆனாலும் அன்னகிளியின் தந்தையாக….. “கல்யாணத்தன்னைக்கு இதை பாப்பா போட்டுக்கட்டும்! பெரிய மருமக! சின்ன மருமக! பொண்ணு! மூணு பேருக்கும் ஓரே மாதிரி செஞ்சிருக்கேன்!”, என்று அவர் சொல்ல….

“அப்போ பார்த்துக்கலாம் மாமா!”, என்று முடித்து விட்டான்… அப்போதே அவரிடம் சொல்லியும் விட்டான்…….. “சபரி மலைக்கு மாலை போடவில்லை….. ஆனால் அதற்கான விரதத்தை கடை பிடிப்பதால்…… திருமணதிற்கு வருவேன், ஆனால் அங்கே உணவு உண்ண மாட்டேன்… அதை எல்லோர் முன்னிலையிலும் பெரிது படுத்தாமல் அப்படியே விட்டு விடுங்கள்!” என்றான்.

அன்னகிளியும் விக்ரமின் விரத அனுஷ்டானங்களை பற்றி சொல்லியிருந்தாள், “வெகு வருடங்களுக்கு பிறகு லதா கர்ப்பமாகி இருப்பதால்…… குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்று சபரி மலைக்கு செல்கிறார் என்று நினைக்கிறேன்”, என்றும் சொல்லியிருந்ததால்  அவர் விக்ரமின் போக்கிற்கே விட்டு விட்டார்…..

சௌமியை பற்றி விக்ரமாக ஒன்றும் சொல்லவில்லை…. பேசினானா? இல்லையா? என்றும் தெரியவில்லை.. அன்னகிளியாக ஒன்றும் கேட்கவில்லை…..

மிகவும் எதிர்பார்த்த அவளின் அண்ணன் கந்தசாமியின் திருமணம் வர….. அதில் கவனத்தை திருப்பினாள்…..

“கல்யாண வேலையிருக்கும்! அக்கானால அதிகம் அலைய முடியாது…. ஏதாவது வேலையை இழுத்து போட்டுக்கிட்டு சிரமப்பட போறா….. அதுவுமில்லாம உங்கம்மா தனியா கஷ்டப்படுவாங்க! நீ அங்க போய் ஹெல்ப் பண்ணு!”, என்று விக்ரம் அவளை கிளம்ப சொன்ன போது கண்மண் தெரியாத கோபம் அன்னகிளிக்கு……

“இவனின் அக்கா இழுத்துப் போட்டுகொண்டு வேலை செய்வார்களா? எப்படி இவனால் சொல்ல முடிகிறது… எப்போதுமே லதா பொதுவாகவே சிரமப்பட்டு எந்த வேலையும் செய்ய மாட்டாள்! இதில் கர்ப்பமாயிருக்கும் போது எதுவுமே செய்வதில்லை…!”,

“அக்காவை பற்றி விக்ரமிற்கு நன்கு தெரியும்……..”, 

“நான் கொண்டு வந்து விட வர முடியாது! மாமா கிட்ட சொல்லியிருக்கேன்….  நான் கல்யாணத்துக்கு முதல் நாள் வர்றேன்….”, என்றான்.

“நீ போகிறாயா? இல்லையா?”, என்ற சம்மதம் கேட்கவில்லை என்று முகம் சுருங்கி விட்டது…. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அண்ணியை மிகவும் நன்றாக ஒரு சிரமமும் இல்லாமல் தான் அன்னகிளி பார்த்துக் கொள்வாள்…….. ஆனால் விக்ரம் அதை சொல்லவும் கோபம் வந்தது…..

என்னவோ அவனின் அக்காவிற்காக மிகவும் பார்ப்பது போல தோன்றியது…. அப்படியா விட்டுவிடுவார்கள் “உன் அண்ணன் கல்யாணம் நீ போ!”, என்று சொன்னால் பரவாயில்லை…… 

ஒன்றும் பேசாமல் பெட்டியை கட்டி விட்டாள்….. திருமணத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே அம்மா வீட்டிற்கு வந்துவிட்டாள்…… எப்போதும் போல மனதில் இருப்பது எதையும் காட்டிக்கொள்ளாமல்…. வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்தாள்…… சிரித்த முகத்துடனே வளைய வந்தாள்.

விக்ரமிற்கு ஓரே எண்ணம் மட்டுமே குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் என்று…. அன்னகிளி இப்படி மனதிற்குள் மருகிக் கொண்டிருப்பாள் என்று கனவிலும் நினைக்கவில்லை…..

திருமண நாளும் நெருங்க…… திருமணம் முடிந்து ஒரு வாரத்திலேயே லதாவிற்கு குழந்தை பிறக்கும் தேதியாக டாக்டர் சொல்லியிருக்க…. லதாவின் முகத்தில் பதட்டம் எப்பொழுதுமே தங்க ஆரம்பித்தது.

தன்னுடைய சஞ்சலங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிய அன்னகிளி….. முடிந்தவரை அண்ணியுடன் இருந்தாள்……. சுந்தர காண்டத்தை வாசித்துக் காட்டினாள்.

தான் கருவை கலைக்க சொன்னதால் லதா கோபமாக இருப்பதாக நினைத்து அவளை மேலும் கோபப்படுத்த வேண்டாம் என்று பழனிசாமி நினைத்திருக்க……..

நடுவில் ஒரு நாள் மாலை சிறிது நேரம் வந்த விக்ரம் அன்னகிளியிடம்…. “எதுக்கு மாமா இப்படி தள்ளி தள்ளி நிக்கறாங்க….. அக்காவோட இருக்க சொல்லு…. அவ திட்டுனா இவர் வாங்க மாட்டாரா….”, என்றான்.

“நம்ம எப்படீங்க இதையெல்லாம் சொல்ல முடியும்! அவங்க அவங்க பொண்டாட்டியை அவங்கவங்களுக்கு பார்த்துக்க தெரியும்!”, என்றாள்.

“என்ன பார்த்துக்கறார் உங்கண்ணன்?”, என்று விக்ரம் கேள்வி கேட்க….

“நீங்க உங்க மனைவியை பார்த்துக்கறதை விட நல்லா பார்த்துக்குவார்!”, என்று கத்த வேண்டும் போல தோன்றிய மனதை மிகவும் சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தவள்…. ஏதோ வேலையிருப்பது போல நகர….

“உனக்கு ஏதாவது மேரேஜ்க்கு பர்ச்சேஸ் பண்ணனுமா?”, என்றான்…

விக்ரம் கவனித்து பார்க்காத போது, எதுவும் தேவையில்லை என்று நினைத்தவள்…….  “ஒன்றும் வேண்டாம்!”, என்று சொல்லிவிட்டாள்……

“நம்ம என்ன கிஃப்ட் பண்ணலாம்!”, என்று விக்ரம் கேட்டபோது….

“உங்க விருப்பம்!”, என்றாள்.

“ஏன் அனு இப்படி சொல்ற?”, என்று விக்ரம் பதிலுக்கு கேள்வி கேட்ட போது…

“பட்ஜெட் உங்களுக்கு தானே தெரியும்! அதான் சொன்னேன்!”, என்றாள்…..

விக்ரம் அதை தவறாக எடுக்கவில்லை….. “பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆளுக்கு ஒரு மோதிரம் வாங்கிடலாமா!”, என்று அவளின் சம்மதம் கேட்டான்….

“வேண்டாம்! அண்ணனுக்கு மட்டும் செஞ்சா போதும்!”, என்று விட்டாள்…..

“அப்போ பிரேஸ்லெட் வாங்கிடலாமா….. ஆனா உங்கண்ணன் போட்டிருக்குற மாதிரி எல்லாம் என்னால வாங்க முடியாது!”, என்றான்.

“தங்கச்சி செய்யற சீர்…… எங்கண்ணன் அதை கம்மியா நினைக்க மாட்டார்….. இப்போ முதல்ல மாதிரி இல்லை”, எனவும்……

“சரி! அதையே வாங்கிடலாம், வா போகலாம்….. நைட் திரும்ப வந்துடுவியாம்…..”,

“இல்லை! எனக்கு கொஞ்சம் தலைவலி! நான் வரலை….. நீங்க கல்யாணத்துக்கு வரும் போது வாங்கிட்டு வந்துடுங்க….”,    

விக்ரம் எதையுமே தப்பாக எடுக்கவில்லை……     

திருமணம் வெகு சிறப்பாக நடந்த போதும்… நிச்சயம் போல விக்ரமும் அன்னகிளியும் யார் கண்ணையும் கவரவில்லை……

அன்னகிளி அணி மணிகள் அணியாவிட்டாலும் அழகி தான் என்பதால் அவள் திருமணதிற்காக எந்த ஒப்பனையும் செய்யாதது யார் கவனத்தையும் அதிகமாக கவரவில்லை…

தந்தை திருமணத்திற்காக செய்த புதிய நகை ஒன்றை மட்டுமே அணிந்து கொண்டாள்..  

விக்ரம் அன்னகிளியின் அருகில் மிகவும் அவசியம் இருந்தால் ஒழிய வரவில்லை……..   அதுவுமில்லாமல் லதா சோர்ந்து தெரிய…. அவள் மீது கவனம் வைப்பதிலேயே விக்ரமின் கவனம் இருந்தது.

அதற்கு தகுந்த மாதிரி திருமணம் முடிந்து மதிய விருந்து  நடக்கும் போதே…. லதாவிற்கு வலி எடுக்க…..

“நீயும் உங்கப்பாவும் இங்க பார்த்துக்கோங்க அனு….. நான் அத்தையையும் மாமாவையும் கூட்டிட்டு போறேன்!”, என்று சொல்லி…. மரகதத்தையும் பழனிசாமியையும் அழைத்துக் கொண்டு விக்ரம் கோவையில் இருக்கும்  மருத்துவமனை நோக்கி விரைந்து சென்றான்.

டிஸ்ட்ரிக்ட் ஜட்ஜின் அக்கா….. கவனிப்பு பல மடங்கு அதிக அக்கறையுடன் சிறப்பாக இருந்தது….

மீண்டும் ஒரு ஆண்  மகவை லதா ஈன்றெடுத்தாள்…. பிரசவம் எந்த சிக்கலுமில்லாமல் நல்ல படியாக நடந்தது…… குழந்தை எப்படி பிறக்குமோ என்ற பயம் இருந்ததால்…… கூடவே ஒரு கைதேர்ந்த பச்சிளம் குழந்தை மருத்துவரும் இருக்க…..

அவர் குழந்தை பிறந்தவுடனே அது நன்றாக எந்த குறையுமில்லாமல் இருக்கிறதா என்று சோதிக்க….. மருத்துவத்தில் இருக்கும் அத்தனை பரிசோதனைகளையும்… செய்தார்.

பரிசோதனைகள் என்றால் ப்ளட் டெஸ்ட் ஸ்கேன் என்பது போல இல்லை… சில பல பச்சிளம் குழந்தையின் நலத்தை உறுதி படுத்த ஸ்கேல்கள் இருக்கின்றன….. பிறந்த உடனே அழுததா….. கை கால்கள் அசைவு…. மூச்சு விடுதல்….. தலையின் அளவு…. கை கால்களின் நிறம்… இன்னும் எத்தனையோ… எல்லாம் செய்து குழந்தையின் ஆரோக்யத்தை உறுதி செய்தார்…..   

விக்ரமிற்கு மனதின் பார மெல்லாம் வடிந்தது….. அக்காவை கூட பார்க்கவில்லை…. பிறந்த குழந்தையை தூர இருந்து பார்த்தவன்…. பழனிசாமியிடம், “குழந்தை நல்லா இருக்குன்னு அக்காகிட்ட சொல்லிடுங்க, நான் இப்படியே வீட்டுக்கு போயிட்டு சபரி மலைக்கு கிளம்பறேன்….. அங்கே கீழ பம்பைல இருமுடி கட்டிக்கிறேன், அனு கிட்ட சொல்லிடுங்க”, என்று சொல்லி…… உடனே கிளம்பிவிட்டான்.

அன்னகிளிக்கு விஷயம் தெரிந்த போது குழந்தை ஆரோக்யமாக பிறந்தது மனதிற்கு சந்தோஷமாக இருந்தது…….. ஆனால் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க கூட முடியவில்லை….. என்னிடம் ஒரு போனில் கூட தகவல் சொல்ல முடியவில்லையா அப்படியே கோவில் கிளம்பிவிட்டாரா என்ற வருத்தமே மேலோங்கி இருந்தது.

 

Advertisement