Advertisement

அத்தியாயம் பதினெட்டு :

வீடு வந்து சேர்ந்ததும்……. அமைதியாக உடை மாற்றிய விக்ரம்…. “பெட் எடுத்து எதுக்கு ஹால்ல போட்டுக்கிட்டு…. உனக்கு தனியா படுக்க தானே பயம்…. அதான் பிரபா இருக்கானுள்ள….. நீங்க ரெண்டு பேரும் உள்ள தூங்குங்க….. எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு”, என்று பேசிக்கொண்டே லேப் டேப் பை ஆன் செய்தான்.

அன்னகிளியின் முகம் சுருங்கி விட்டது…… “எனக்கு இவனோடு இருக்க வேண்டும் என்று தோன்றுவது போல இவனுக்கு தோன்றவில்லையா…… இவன் மனம் என்னை தேடுவதே இல்லையா…..”,

ஆனாலும் ஒன்றும் பேசாமல் அமைதியாக திரும்பியவள், “வா பிரபா!”, என்று பிரபாகரனை அழைத்துக் கொண்டு உள்ளே போனாள்.

அந்த அறையை கூட்டிப் படுக்கையை தட்டி பிரபாகரனை படுக்க சொல்லி அவள் பக்கத்தில் அமர்ந்துகொண்டாள்.

“நீங்க தூங்கலை அத்தை!”, என்று கேட்ட சிறுவனிடம்…… “நீ தூங்கு பிரபா, இப்போ உன்கூடவே அத்தையும் தூங்கிடுவேன்”, என்று சொல்லி சுவரில் சாய்ந்த வாக்கில் காலை நீட்டி அமர்ந்துகொண்டாள்.

ஒரு நேரம் இவன் அதட்டினாலும் அதில்  ஒரு கொஞ்சல் இருக்கிறது…. அடுத்த நிமிடம் அது இல்லை வெறும் உரிமையை காட்டுகிறான் என்று தோன்றுகிறது…… இதில் அவ்வப்போது அவனுள்ளும் யோசனைகளை வளர்த்துக் கொண்டு அமர்ந்துவிடுகிறான்…… என்ன நடக்கிறது தெரியவில்லை என்பது போல விக்ரமை நினைத்து மனம் குழம்பி அன்னகிளி அமர்ந்திருக்க…..

ஏதோ எடுக்க உள்ளே வந்த விக்ரம்…. இவளை பார்த்தவன், “ஹேய் பேபி! இன்னும் தூங்கலையா நீ?”, என்று சகஜமாக பேசிக்கொண்டே அவனின் பெட்டியில் இருந்து ஏதோ எடுத்தான்.

சகஜமாக பேசினாலும் அந்த குரலில் உற்சாகமில்லை…..

விக்ரமையே அன்னகிளி பார்த்துகொண்டிருந்தாள்….. அவளிடம் பதிலில்லாததால் திரும்பி அவளை பார்த்த விக்ரம்….

அன்னகிளி பதுமையாய் தன்னையே பார்ப்பதை பார்த்து…. “என்ன?”, என்று அவளருகில் வந்து மண்டியிட்டு அமர்ந்து கேட்டான்.

ஒன்றுமில்லை என்பது போல அன்னகிளி தலையாட்டவும்….. “இருக்கு! ஏதோ இருக்கு…..! சொல்லு!”, என்றான்.

அன்னகிளி அமைதியாக அமர்ந்திருக்கவும்….. “என்ன நம்ம டீல் மறந்துபோச்சா…”, என்றான் அதட்டலாக….

அப்போதும் அன்னகிளி அமைதியாக இருக்கவும்…. “இருக்குற டென்ஷன் எனக்கு போதாதா….. உன்னை நல்லா பார்த்துக்கணும்னு தான் நினைக்கிறேன்! என்ன நினைச்ச? அப்படியே சொல்லு!”, என்றான்.

“எனக்கு உங்க கூட இருக்கணும்னு தோணுற மாதிரி….. உங்களுக்கு தோணுறது இல்லீங்களா”, என்றாள்…..

“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்!”, என்று சற்றும் யோசிக்காமல் பதிலளித்தவன்….

“ஆனா அதை நினைக்க முடியாத அளவுக்கு வேற நிறைய சிந்தனைங்க…. அவ்வளவு தான்…. பாரு இப்போ கூட இப்படியே உன் மடில படுத்துக்கணும் போல இருக்கு ஆனா வேலையிருக்கே…”,

“நான் அந்த கமிஷன் போயிட்டு வந்தது ரிப்போர்ட் ரெடி பண்ணிட்டேன்.. ஆனா அது சரியா இருக்கான்னு ஒன்னுக்கு ரெண்டு தடவை சரி பார்க்கணும்…… ஆனா ஒரு அஞ்சு நிமிஷம் ஒன்னும் ஆகாது”, என்று அப்படியே அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான்.

அன்னகிளி அவளின் மன சஞ்சலங்களைஎல்லாம் தூக்கி தூர வைத்து… அவனை மடி தாங்கியவள்…… “அண்ணியோட என்ன பிரச்சனைங்க? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?”, என்றாள்.

“ஒஹ்! நான் எப்படி இருக்கேன்னு தெரியற அளவுக்கு நீ டெவலப் ஆகிட்டியா?”, என்றான் நக்கலாக……         

அவள் வெறுமையாக பார்க்கவும்…

“என்னை முறைக்கிறியா… ஐயோ எனக்கு பயமா இருக்கு….”, என்று அவள் மடியில் முகம் புதையுமாறு திரும்பி படுத்துக் கொண்டான்.

“என்ன பிரச்சனைங்க அண்ணிக்கும் உங்களுக்கும் சண்டைங்களா?”, என்றாள் அன்னகிளியும் காரியத்திலேயே கண்ணாய்.

அதற்கு பதில் சொல்லாமல், “உன் மடில இருந்து எழவே மனசில்லை….. எங்கம்மா மடில கூட இப்படி தான் படுத்துக்குவேன்….. மடி சாச்சிக்கணும்னு எனக்கு தோணியிருக்கு…… ஆனா மடி சாயணும்னு உன்கிட்ட தான் தோணுது… எங்கம்மா மடிக்கு அப்புறம் உன் மடிதான்…..”, என்றான் தலையை ஒருக்களித்து அவள் மடியில் வைத்து.

“என்னது மடி சாச்சிக்கணும்னு தோணியிருக்குங்களா….”, என்றாள் குரலில் இன்னதென்று புரியாத பாவனையோடு.

அன்னகிளியின் குரல் பேதமையை உணர்ந்தவன்…… “அப்படியா சொன்னேன்… ஸ்லிப் ஆப் தி டங் கா இருக்கும்….”, 

“உன் மடி எனக்கு இப்போ ரொம்ப தேவை, ப்ளீஸ்…. நம்ம திரும்ப திரும்ப பேசவேண்டாம்”, என்று மறுபடியும் மடியில் முகம் புதைத்து அதில் அழுத்திக்  கொண்டான்.                                       

“பெரிய பிரச்சனை மாதிரி ஒன்னும் இல்லை தானுங்களே! அண்ணி கொஞ்ச நாளா இயல்பாவே இல்லீங்க… அண்ணனோடையும்  பேசறது இல்லீங்க….. நீங்க தான் என்னை கூட கூப்பிட்டுகிட்டு வந்துட்டீங்களே…… அப்புறமும் ஏன் இப்படி இருக்காங்க…..”, என்றாள் கவலையாக….

“ஒஹ்! உனக்கு கவலை இருக்கும்! நீ உங்க அண்ணனுங்களுக்காக தானே என்னை தேடி வந்த!”, என்றான் திரும்பி படுத்து அவள் முகம் பார்த்து…

இப்படி காயப்படுத்தினால் என்ன செய்வது? அன்னகிளிக்கு வார்த்தையே வரவில்லை…. அவளின் முகம் இன்னும் சுருங்கி விட்டது.

“சியர் அப் பேபி….. இதுக்கெல்லாம் முகத்தை தூக்கி வைப்பாங்களா! டேய்! நானாவது அதுக்காக உன்னை தேடி வந்தேன்! நீ அதுக்கு கூட என்னை தேடி வரலையேடான்னு என்னை கேள்வி கேட்க வேண்டாம்”, என்றான்.

இப்போது விக்ரமை நேரடியாக முறைத்து பார்த்தாள் அன்னகிளி…

விக்ரம், “என்ன உன் மைன்ட் வாய்ஸ் சொல்லு!”, எனவும்…..

“நான் யாரு உங்களுக்கு?”, என்றாள்……

“ஏண்டி…… உனக்கு இந்த சந்தேகம்…..!”,

“யாரு?”, என்றாள் திரும்பவும்…….

“என் போண்டா…….. டீ……… சாரி! ஐ மீன் பொண்டாட்டி!”, என்றான்.

“இந்த இடம்!”,

“நம்ம வீடு!”,

“இந்த விஷயம் எப்பவும் ஞாபகத்துல இருக்கணும்! இது நம்ம வீடு! நான் உங்க பொண்டாட்டி…… இது கோர்ட்டோ….. நீங்க ஜட்ஜோ……. வக்கீலோ……. நான் சாட்சியோ…. இல்லை குற்றவாளியோ கிடையாதுங்க…. இப்படி என்கிட்டே பேசறதுக்கு…. எனக்கு புரியறதே இல்லீங்க….. மனசுக்கும் ரொம்ப கஷ்டமா இருக்குங்க”, என்று சொல்லியே விட்டாள். குரலும் கமறியது….

“நீ ஃபீல் பண்றியா…….”, என்று எழுந்து உட்கார்ந்தவன்….

“முயற்சி பண்றேன்! ஆனா என் பேச்சு இப்படித்தான் பழகிக்கோ! ஈசியா எடுத்துக்கோ… நம்ம கூட பொறந்ததுங்கல்லாம் பெரிய பிசாசுங்க! நமக்கு நிறைய கவலையை குடுக்கறாங்க….!”,

“இதுல நீயும் பிரச்சனை பண்ணாத…….”, என்றான் கவலையான குரலில்….

விக்ரம் இப்படி கவலையாக பேசி பார்த்திராதவள்….. “என்ன ப்ரச்சனைங்க உங்க முகமே சரியில்லீங்களே”, என்றாள்.

“உங்க அண்ணன் மாக்கானுங்கடி……. உயிரையே எடுக்கறானுங்க……”,

“என்ன ஆச்சு?”,

“வேண்டாம்! தெரிஞ்சா நீயும் டென்ஷன் ஆவ….. என்னாலயே முடியலை! நீ எப்படி தாங்குவ…… விடு!”, என்றான்.

“என்ன விஷயமுங்க?”, என்றாள் பயத்தோடு….

சொல்லலாமா? வேண்டாமா? என்று யோசித்தவன் பிறகு சொல்ல ஆரம்பித்தான். “அக்காவுக்கு ஆரம்பத்துல கன்சீவ் ஆனது தெரியலை…….. மூணாவது மாசத்துல தான் தெரிஞ்சிருக்கு…… தெரிஞ்சவுடனே உங்கண்ணன் அந்த பெரிய இம்சை… இந்த குழந்தை வேண்டாம்…. அன்னகிளி இன்னும் விக்ரமோட சேரலை….. கந்தசாமிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை… இப்போ நமக்கு குழந்தைன்னு எப்படி சொல்றது வேண்டாம்ன்னு சொல்லியிருக்கார்…….”,

“என் கூட பொறந்தவங்க ரெண்டு பேரும் தனியா நிக்கும் போது…… எனக்கு இப்படின்னு சொல்ல விருப்பமில்லை…. பிடிக்கலை….. கூச்சமா இருக்கு….. கஷ்டமா இருக்குன்னு……. வித விதமா பேசியிருக்கார்”,

“எனக்கு வாயில நல்ல கெட்ட வார்த்தை வருது…. இதெல்லாம் உங்கண்ணனுக்கு…????”, என்று மேல பேச போன விக்ரமை….. அவசரமாக வாய் பொத்தினாள்.   

“ப்ளீஸ்! அதிகமா பேச வேண்டாம்….. விஷயத்தை சொல்லுங்க!”, என்றாள்…..

“ப்ச்! என்ன சொல்றது?…….. இப்போ மாசக்கணக்கா எங்கக்கா பேசாம இருக்குற மாதிரி…….. அப்போ ஒரு ரெண்டு நாள் இருந்திருந்தா கூட உங்கண்ணன் அடங்கியிருப்பார்”,

“என்னவோ இவ சொல்றா? அவர் கட்டாயப்படுத்தினார்ன்னு…….. என்ன அவ கையை காலை கட்டியா மாத்திரை கொடுத்திருப்பார்!”, என்றான்.

“என்ன மாத்திரை……..?”, என்றாள் கலவரமாக.  

“ம்! கருவை கலைக்கறதுக்கான மாத்திரை!”,

“என்ன?”, என்று அதிர்ந்தாள்.

“ம்! இவ சாப்பிட்டு இருக்கா…..! ஆனா குழந்தை கலையலை….. ஸ்கேன்ல டாக்டர் நல்லா இருக்குன்னு சொல்றாங்க…… இருந்தாலும் இவ மாத்திரை சாப்பிட்டதை சொன்னவுடனே…. என்னால முழுசா குழந்தை நல்லா இருக்கும்னு சொல்ல முடியாது! பொறந்தா தான் தெரியும்னு சொல்லிட்டாங்க!”, என்று விக்ரம் சொல்ல சொல்ல அன்னகிளியின் முகம் வெளிறியது……..

“என்ன? குழந்தைக்கு என்ன?”, என்றாள்…….

“தெரியாது! இப்போதைக்கு ஸ்கேன்ல நல்லா இருக்கு….. பட் இந்த மாதிரி கர்ப்பமா இருக்குறப்போ டாக்டர் கிட்ட கேட்காம எந்த மருந்து மாத்திரையும் சாப்பிடக் கூடாது…… குழந்தைக்கு அதனால பாதிப்பு வரும்… அது உடல் ஊனமா இருந்தா கூட பரவாயில்லை ஆனா மன ஊனமா இருந்தா….?”, என்று கேள்விக்குறியோடு நிறுத்த……

அன்னகிளி மன ஊனம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை ஒரு பயத்தோடு உணர முற்படவும்…. “எஸ், மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைங்க!”, என்று விக்ரம் சொல்லவும்…..

பயத்தில் கை கால் எல்லாம் உதறல் எடுத்துவிட்டது அன்னகிளிக்கு… “என்ன? என்ன?”, என்றாள் திரும்ப திரும்ப.

அவள் பயந்துவிட்டாள் என்று புரிந்து…… “ஷ்! இதுக்கு தான்  சொல்லலை!”, என்றான் அவளை அணைத்து தோள் சாய்த்து.

“ஒன்னும் ஆகாதில்லை….”,

“ஆகாது! ஆகக்கூடாது…. டாக்டர் அந்த ரிஸ்க் இருக்குன்னு சொல்லியிருக்காங்க! ஆனா அப்படித்தான்னு நிச்சயமா சொல்லலை!”, என்று அவளுக்கும் சொன்னான் அவனுக்கும் சொல்லிகொண்டான்….

சூழ்நிலை மிகவும் கனமானது…  இருவரிடத்திலும் மௌனம் சூழ்ந்தது… 

“அண்ணாக்கு தெரியுமா…?”,

“ம்கூம்! யார்கிட்டயுமே அவ சொல்லலை போல….. செக் அப்க்கு உங்க அம்மா தானே கூட போறாங்க… நீ வெளில தானே உட்கார்ந்து இருக்க….. அவ இங்கிலீஷ்ல பேசுவா போல உங்களுக்கு தெரியலை….. அந்த மன கஷ்டத்துலயே இருக்கா…”,

“அந்த கோபம் தான் உங்கண்ணன் கூட பேசறது இல்லை…. அவரும் கருவை கலைக்க சொன்னதுனால பேசமா இருக்கான்னு நினைச்சிட்டு இருக்காங்க போல…. இதுதான் விஷயம்னு தெரியாது……”,   

அன்னகிளிக்கு புரிந்தது….. “பழனிசாமி இதை தாங்க மாட்டான்…… தனக்கே மனம் பதறும் போது…. அம்மாவான அண்ணிக்கு எப்படி இருக்கும். என்னவோ? என்ன நடக்குமோ? குழந்தை நன்றாக பிறக்க வேண்டுமே!”,

“இன்னும் ஒரு மாதம்…. தெரிந்துவிடும்…. குழந்தை நன்றாக பிறக்க வேண்டும்…..”, மனம் இடைவிடாது இருக்கும் கடவுள்கள் அத்தனையிடமும் பிரார்த்திக்க ஆரம்பித்தது. 

இருவருமே அந்த உளைச்சலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர்..

“காலையில அக்காவை இங்க கூட்டிட்டு வரலாமா.. ஒரு ரெண்டு மூணு நாள் இங்க இருக்கட்டுமா?”, என்று அவளிடம் சம்மதம் கேட்டான்….

“அவங்க என் அண்ணி!”, என்றாள்.

“ஆனா இந்த விஷயம் தெரிஞ்ச மாதிரி அக்கா கிட்ட காட்டிக்காத…………”,

“காட்ட மாட்டேன்!”, என்பது மாதிரி தலையசைத்தாள்….

“சரி! நீ தூங்கு!”, என்று விக்ரம் எழுந்து போனான்…….

“நான் வந்து டீ வீ பார்க்கிறேன்!”, என்று அவனோடே எழுந்து வந்தாள்…..

“என்ன சீரியல் பார்க்க போறியா?”,

“நான் சீரியல் பார்க்கறது இல்லை!”,

“ஏன்?”,

“எல்லா சீரியல்லையும் ரெண்டு வைஃப்…… அந்த கான்சப்ட் எனக்கு பிடிக்காது”,

“என்ன அவ்வளவு டெர்ரரா நீ?”, என்றான் கிண்டலாக….

அன்னகிளி முறைக்கவும்…

“நீ மிட்நைட் மசாலா பார்த்தா கூட எனக்கு ஓகே பேபி!”, என்று அவன் சொல்ல…..

“வாயை எல்லாம் இனிமே மூட மாட்டேன்…… வாய் மேல ஒரு அடி தான் வைப்பேன்!”, என்றாள்.

“இப்போ தான் ஜட்ஜ் பொண்டாட்டி மாதிரி பேசற….. ஆனா ஓரே ஒரு டவுட் மட்டும் கேட்டுக்கறேன்!”, என்றான்…..

அவன் கேட்ட விதமே ஏதோ வில்லங்கமாக பேச போகிறான் என்றுணர்த்த….

“எதுல அடிப்ப….. எதுல அடிச்சா வலிக்கும், ஆனா அந்த வலியும் பிடிக்கும்னு சொல்லட்டா”, என்றான்……

“நீங்க திருந்தவே மாட்டீங்க…..”, என்றாள் புன்னகையுடன்…

“நிஜமாவே உன் கூட  பேசினா எனக்கு ரொம்ப ரிலாக்ஸ்டா இருக்கு…  ஒன்னும் ஆகாதுல்ல”, என்று அன்னகிளியிடம் விக்ரம் கேட்க…… 

“ஒன்னும் ஆகாது!”, என்று அன்னகிளி சொல்ல……

“வா!”, என்று அவன் வணங்கும் கற்பக விநாயகர் முன் வணங்கி நின்றான்.   

இருவரும் சகஜமாக பேசினாலும் குழந்தையை பற்றிய கவலை மனதை ஒரு பக்கம் அரித்துக் கொண்டே இருந்தது…..  

பிறகு விக்ரம் வேலை பார்க்க ஆரம்பித்தவன்…….. வேலை மும்முரத்தில் அன்னகிளி என்ன செய்கிறாள் என்று கவனிக்கவே இல்லை…

அவன் முடித்து நிமிர்ந்து அவளை பார்த்த போது….. தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்…..

“இவளை தூக்கிட்டு போயா படுக்க வைக்க முடியும்……. எரும மாடு, உள்ள போய் படுக்கறதுக்கு என்ன….. இப்போ எழுப்பினா தூக்கம் கெடாது..”,

யோசித்தவன்….. பிரபாகரனை தூக்கி வந்து அவளருகில் போட்டு…. பிறகு படுக்கையை தூக்கி வந்து போட்டு அதில் பிரபாகரனை படுக்க வைத்து…

அவள் கீழேயே தான் படுத்தாக வேண்டும் போல பிரபாகரன் படுக்கையில் சிறிது நேரத்திலேயே ரவுண்டு அடித்தான்…

அவளின் தலைக்கும் ஒரு தலையணை யை கொடுத்து…… பிறகு அவன் வேலையை பார்க்க சென்றான்…

அவன் வேலை…… இரண்டு பெக் கை உள்ளே தள்ளி….. பிறகு அவனும் கீழேயே தான் படுத்தான்…

அவன் எப்பொழுதும் போல ஐந்து மணிக்கெல்லாம் விழித்து எழுந்து…. அன்னகிளியோடு பிரபாகரன் இருக்கிறானே என்று முன்புறம் வீட்டை பூட்டிக்கொண்டு…… போலீஸ் கிரௌன்டிற்கு ஜாக்கிங் சென்று வந்து பார்த்தால்….. வீட்டின் முன் லாரி நின்றிருந்தது.

“என் மச்சானுங்க தீயா வேலை செய்யறானுங்கடா…….”, என்று தான் நினைக்க தோன்றியது.

விக்ரமின் அம்மா அப்பாவின் சாமான்களுடன்….. அதை இறக்க ஆட்களுடன் பழனிசாமியும் கந்தசாமியும் கேட்டின் முன் நின்றிருந்தனர்..

“வாங்க!”, என்று இருவரையும் பார்த்து சொன்னவன்…… “ஏன் வெளிய நிக்கறீங்க….”, என்று சொல்லிக்கொண்டே……    

செக்யூரிட்டியிடம், “ஏன்பா! முன்னயே நம்ம வீட்டுக்கு வந்தவங்க தானே! சொந்தம்னு தெரியாதா? உள்ள விடறதுக்கு என்ன?”, எனவும்….

“வீடு பூட்டியிருக்குங்களே சார்!”, என்றான்…..

“ரெண்டு பேரும் தூங்கறாங்க! அதான் பூட்டிட்டு போனேன்!”, என்று சொல்லி கதவை திறந்தவன்…… உள்ளே பார்க்க…. அன்னகிளி இல்லை….

உள்ளே இருப்பாள் என்று அனுமானித்தவன்….. “வாங்க”, என்று சொல்லி……. “அனு”, என்று சத்தம் கொடுக்க….. அண்ணன்கள் இருவருக்கும் உச்சி குளிர்ந்து விட்டது.

எப்பொழுதும் பேர் சொல்லாமல் அவள், இவள் என்று சொல்லியே அதிகம் கேட்டிருப்பர்…. இப்போது பெயர் சொல்லவும்… இருவர் முகத்திலும் அத்தனை சந்தோசம்…..

விக்ரமிற்கு புரியவில்லை…. “நேத்து தானே அவளை பார்த்தானுங்க! இன்னைக்கு திரும்ப பார்க்கறதுக்கு இவ்வளவு சந்தோஷமா!”, என்று.

“சாமான் இறக்கிடலாமா!”, என்று பழனிசாமி கேட்டான்….

“இருங்க! அவ வரட்டும்!”, என்று அன்னகிளியை  பார்க்க உள்ளே சென்றான்.

அவள் குளியறையில் இருக்கும் சத்தம் கேட்கவும்….. கதவை தட்டி, “சாமான் இறக்க கேட்கறாங்க!”, எனவும்….

“எந்த சாமான்?”, என்று அன்னகிளியும் கத்த…….

வெளியே இருக்கும் அண்ணன்களுக்கு கேட்க…… இருவர் முகத்திலும் புன்னகை…..

கதவை படக்கேன்று திறந்த அன்னகிளி, “பிரஷ் பண்ண விடமாட்டீங்களா….?”, என்று சற்று குரலுயர்த்த….

அதிகம் சாமான்கள் இல்லாத வெறுமையான வீடு சத்தம் வெளியில் கேட்டது….

இந்த முறை ஒரு மாறுதலுக்கு விக்ரம் அன்னகிளியின் வாயை பொத்தினான்…… “ஏய்! நான் இன்னும் உன்னை ஒன்னுமே பண்ணலை…. இதுல பிரஷ் பண்ண கூட விட மாட்டீங்களா நீ இப்படி கத்தினா…. என்னை என்ன நினைப்பாங்க உன் அண்ணனுங்க…..”, என்று அவளிடம் ரகசியம் பேசினான்.

“அண்ணனுங்க வந்திருக்காங்களா?”, என்று வெளியே விரையப் போனாள் அன்னகிளி…

“நேத்து நைட் தானேடி அங்கிருந்து வந்தோம்…..”, என்று கை பிடித்து நிறுத்த…

“சரி! விடுங்க!”, என்று கையை உருவிக் கொண்டு சென்றுவிட்டாள்……..

பிறகு சாமான்கள் இறக்க ஆரம்பித்தனர்…..

எல்லாமே புதிது போல இருந்தது….. விக்ரமின் அப்பா வீடு கட்டியதும் எல்லாம் புதிதாக வாங்கியது தான்….

அதனை இன்னும் புதிது போல லதா ஆக்கியிருந்தாள்…. கட்டில், பீரோ, சோபா, டைனிங் டேபிள், ட்ரெஸ்ஸிங் டேபிள், பண்ட பாத்திரங்கள்….. எல்லாம் புதிது போலவே இருக்க….

அருகில் போய் பார்த்தான்……. நிறைய வருடங்கள் ஆகிவிட்டது அல்லவா என்று…… அப்போது தான் எழுந்திருந்த பிரபாகரன்…… “மாமா இது எல்லாம் பெயிண்ட் பண்ணி புதுசு பண்ணினதுக்கு ஆனா செலவாம்……… அம்மா உங்க கிட்ட குடுக்க சொன்னாங்களாம்…….. அப்பா உங்ககிட்ட குடுக்க சொன்னாங்க”, எனவும்….     

விக்ரமின் முகத்தில் புன்னகை….. அன்னகிளியை பார்க்க…. அவளும் நல்ல அக்கா நல்ல தம்பி என்பது போல தான் பார்த்தாள்.

“எனக்கு நேரமாகுது!”, என்று சொல்லி அவன் கோர்ட்டிற்கு போய் திரும்ப மாலையில் வீடு வந்த போது.. பேக்கிங் பிரிக்கப்படாமல் பிரிட்ஜ், டீவீ, மிக்சி, கிரைண்டர்……. என்று லேட்டஸ்ட் மாடலில் எல்லாம் இருந்தது…..

“என்ன இது?”, என்பது போல கண்கள் அன்னகிளியை தேட அங்கே லதா தான் இருந்தாள்……

“என்ன இது?”, என்று விக்ரம் குரலுயர்த்திக் கேட்க…..

“பொறுமையா கேளு! குதிக்காத!”, என்ற லதா… “எல்லாம் என் பேர்ல டியுல வாங்கினது….. இனிஷியல் பேமென்ட் இவ்வளவு……..”, என்று அவனிடம் பில்லை கொடுத்தவள்…….

“இந்த பணத்தை என்கிட்டே குடுத்துடு…… மாசா மாசம் டியு பேமென்ட் என்கிட்டே இவ்வளவு குடுத்துடு! நான் கட்டிக்கறேன்…..!”, என்று கணக்காய் சொல்ல…..

“இப்போ என்ன அவசரம் இதுக்கு?”, என்று விக்ரம் கேட்க….

“டேய்! பில்ல பாருடா!”, என்று விக்ரமை அதட்டி அவனின் அக்கா என்று லதா நிரூபிக்க…..

விக்ரமும் அதை நன்றாக வாங்கி பார்த்தான் தன்னால் முடியுமா என்று…….. வீட்டு வாடைகையா? டெலிபோன் பில்லா? இல்லை டிரைவர் வேலையாட்கள் மாதிரி சம்பளமா……? இல்லை குழந்தைகளுக்கு ஆகும் செலவா…..? இப்போதைக்கு  எதுவுமில்லை….

அதுவுமில்லாமல் இப்போதைக்கு லதாவின் மனதை மற்ற கவலைகள் அண்ட விடாமல் பார்த்துக் கொள்ள நினைத்தவன்… லதா என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் மனநிலையில் இருந்தான். 

அவனுக்கு மாதாமாதம் இந்த தொகையை கொடுத்தாலும் செலவுகளை தாராளமாகவே சாமளிக்க முடியும்…. அவனால் முடியும் என்று தோன்ற, “சரி!”, என்றான்.

சமையலறை வாயிலில் நின்று திரும்பவும் முருங்கை மரம் ஏறிவிடுவானோ என்பது போல அவனையே பார்த்திருந்த அன்னகிளி…. “ஊப்ஸ்!”, என்று பெருமூச்சு விட்டாள்.

“ஆனா……. கண்டிப்பா பணம் குடுக்கணுமா என்ன? எங்கக்கா தானே எனக்கு செலவு செய்ய மாட்டியா நீ!”, என்றான்.

“நிஜமா சொல்றியா?”, என்று முகமலர்ந்து லதா கேட்க…..

“ம்”, என்று கிண்டலாக சிரித்தவன்……. “பொய் கூட சில நேரங்களில் அழகானது!”, என்றான்.

“போடா!”, என்று லதா கடுப்பாக முகத்தை வைத்தாலும் முகம் சற்று தெளிந்து இருந்தது…

அவளருகில் வந்து அவளின் தோளில் கை போட்டு……… “சியர் அப் அக்கா! ஒன்னும் ஆகாது! அவர் இருக்கார்!”, என்று அவன் வணங்கும் கற்பக விநாயகரை காட்டியவன்……

“பொய் எவ்வளவு அழகானது தெரியுமா? அங்க பாரு அந்த எரும மாடு பார்த்துட்டு இருக்கு! நான் அவளை அழகின்னு எத்தனை தடவை பொய் சொல்லியிருக்கேன் தெரியுமா!”, என்று அன்னகிளியை காட்டினான்

“என்ன?”, என்று அன்னகிளி முறைத்து உள்ளே செல்ல…..

“டேய்! அவ நீ சொன்னாலும் சொல்லாட்டாலும் அழகிதாண்டா!”, என்றாள் லதா சிரிப்போடு.

“நான் எப்போ இல்லைன்னு சொன்னேன்! இரு! அவளை போய் பார்த்துட்டு வர்றேன்!”, என்று அவன் உள்ளே போக……

டீ கொதித்து கொண்டிருக்க…. அதை போல அன்னகிளியும் கொதித்து கொண்டிருந்தாள்.

அவளருகில் போய், “என்ன?”, என்பது போல இரு புருவமும் விக்ரம் உயர்த்த……

“நீங்க ஒன்னும் என்னை பொய்யா கூட அழகின்னு சொல்லலைங்க!”,

“நான் ஏன் பொய் சொல்லணும்…. நீ உண்மையாவே அழகி தாண்டி…..”, என்றான் சிரிப்போடு…. 

அவன் பதில் சொன்ன விதத்தில் முகத்தில் பூத்த புன்னகையை மறைத்து “நீங்க உண்மையா சொன்னதில்லீங்க….”, என்று சிணுங்கிக் கொண்டே சொல்லவும்…..   

“இப்போ நீ தான் பொய் சொல்ற! நான் எத்தனை தடவை சொல்லிட்டேன் தெரியுமா! உன்னை பார்த்த முதல் நாள்ல இருந்து சொல்றேன்!”,

“ம்! எப்போ?”, என்பது போல சீரியசாய் அவள் முறைக்வும்…

“ஏண்டி எரும? உன்னை எருமை மாடுன்னு எப்பவும் சொல்லிட்டே தானே இருக்கேன்…. என் பாஷையில எரும மாடுன்னா அழகின்னு அர்த்தம்!”, என்று விக்ரம் கண்ணடித்தபடியே சொல்லவும் அன்னகிளி அசந்து விட்டாள்….

எத்தனை திட்டுக்கள் எப்படியெல்லாம் திட்டிவிட்டு அப்படியே மாற்றி விட்டான்……

“நீங்க ரியல்லி சான்ஸே இல்லீங்க!”, என்று சொல்லும்போது அவள் முகம் வெட்கத்தில் சிவந்து புன்னகை பூசியது…

விக்ரமின் முகத்தில் அவன் மனைவி சொன்னதை கேட்டு சிரிப்பு விரிந்தது.

இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் சளைக்காமல் பார்த்தது….. ரசித்தது…

அழகு என்பது உடல் சமந்தப்பட்ட விஷயம் அல்ல மனம் சம்மந்தப்பட்டது….. தோற்றம் இன்று இருக்கும் நாளை இருக்காது…. அழகானவர்கள் மட்டுமே தம்பதிகளா என்ன…..? இல்லையே…. அவரவர்க்கு அவரவர் இணை அழகு தான்…..

இருவருமே இங்கு தோற்றத்திலும் அழகானவர்கள் தான்…. அதையும் மீறி மன அழகை உணர முற்பட்டனர்……. அந்த வகையில் அவர்கள் இருவரின் மனமுமே அழகானது தான்………..

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அந்த அழகை தானே உணர வேண்டும்…

இருவருமே அந்த அழகை உணர்தனர்….. அவர்களுக்குள் இருப்பதற்கு பெயர்ஐ லவ் யூ என்று சொல்லப்படும் காதலா என்று அறிய முற்படவில்லை….

காதல் என்பது ஐ லவ் யூ என்ற வார்த்தையில் அடங்கக்கூடியது அல்ல….. அதையும் மீறிய ஒரு உணர்வு……. அந்த உணர்வை அறிய அன்னக்கிளி ஆர்வமாய் இருந்தாள்.

இருவருக்குள்ளும் அழகான சிறு சிறு தொடுகைகள் இருந்தது…. அணைப்பு இருந்தது….. முத்தம் இருந்தது….. ஆனால் தாபம் இல்லை……

விக்ரமும் அன்னகிளிக்கு அவளை அடையாமலேயே கணவனாய் உணர்த்தியிருந்தான்….

annakili is now really mad on vikram.

         

Advertisement