Advertisement

அத்தியாயம் பதினேழு :

விக்ரம் அன்னகிளியை திருமணம் செய்ய ஏதாவது சதி செய்திருப்பானோ என்பது போல ஒரு தோற்றத்தை வினோத்தின் பேச்சு கந்தசாமிக்கு கொடுத்தது.

அன்னகிளி ஓய்ந்து விட்டாள்…… “சௌம்யாவிற்காக பார்த்து…. நான் வீட்டில் சொல்லாமல் விக்ரமை மதித்து சொல்லிருக்க… அவன் வினோத்திற்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறானா…”, என்ற எண்ணமே ஓங்கி வளர்ந்து நின்றது.

“இத்தனை நாட்கள் பார்த்திருந்த நான் இவனுக்கு முக்கியமில்லையா இந்த வினோத் எல்லாம் முக்கியமாக போய் விட்டானா!”,

வீட்டிற்கு வந்து திருமண விருந்து முடிந்து ஆய்ந்து ஓய்ந்து வீட்டினர் அமர்ந்து……. மாலை வந்து விருந்தினர்களுக்கு அதாவது நெருங்கிய பங்காளிகளுக்கு தேநீர் விருந்து நடந்து கொண்டிருக்க…….

அவசரத்தை மொத்த குத்தகை எடுத்தவன் மாதிரி கந்தசாமி…… “இனி மாப்பிள்ளையான விக்ரம் என்ன செய்ய போகிறான்”, என்பது போல சித்தப்பாவிடம் பேச…. அவர் வேறொருவரிடம் பேச……. இப்படி அவர்களுக்குள் பேசி….

ஒரு பெருசு விக்ரமிடமே….. “இனி தம்பி என்ன செய்யறதா உத்தேசம்?”, என்றார்.

“என்ன உத்தேசம்னா  புரியலைங்க……..”,

“இல்லைப்பா நான் பொண்ணு வீட்டுக்காரன்ற முறையில தெரிஞ்சிக்க விரும்பறேன்! என்ன வேலை? என்ன செய்ய போறீங்க?”, என்று அவர் கேட்கவும்…..

ஏற்கனவே தன்னை மீறி நிகழ்ந்துவிட்ட திருமண பந்தத்தை நினைத்து விக்ரம் மருகிக் கொண்டிருக்க……. அதிலும் அவன் ஏதோ சதி செய்தது போல…. பணத்தை பார்த்தது போல வினோத் வேறு சொல்லியிருக்க…. மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளாகி இருந்தான். இதில் அபஸ்வரமாய் இவர்கள் குரல் ஒலிக்க ஆரம்பித்தது.

“ஏன்? நான் என்ன வேலை செய்யறேன்னு தெரியாமையா எனக்கு பொண்ணு குடுத்தீங்க”,

“அட நீங்க என்ன தம்பி எடக்கா பேசறீங்க…. உங்க விவரம் பொண்ணோட அப்பாக்கு தெரிஞ்சிருக்கும், எனக்கு அதிகம் தெரியாதில்லையா, நம்ம வீட்டு மாப்பிள்ளை ஆகிடீங்க……  சொன்னா தப்பில்லையே, சொல்லுப்பா”, என்றார்.

“என்ன விவரம் கேட்கறீங்கன்னு புரியலைங்க!”, என்றான் பொறுமையாகவே விக்ரம் இப்போது….

“அதான்பா வக்கீலுக்கு படிச்சிருக்கன்னு தெரியும்….. வேற விஷயமெல்லாம்…. எங்க தொழில் பார்க்கிற? எங்க வீடு?”, என்று அவர் ஆரம்பிக்க…

“மெட்ராஸ் ஹை கோர்ட்ல ஒரு வக்கீல் கிட்ட ஜூனியரா இருக்கேன்…. ரூம் எடுத்து தான் தங்கியிருக்கேன்….”,

“ஜூனியரா அப்போ வருமானம் அதிகமில்லைன்னு சொல்லுங்க……. வீடும் இல்லை…”, என்று அவர் யோசிக்க…..

பக்கத்தில் உட்கார்ந்திருந்த சித்தப்பா, “நீங்க என்னங்கப்பா இப்படி பேசறீங்க……. அண்ணன் என்ன செய்யாமையா விட்டுடுவாரு…… வீடு எங்க வேணுமோ அங்க வாங்கி குடுத்துடுவாறு….. இதை ஒரு பெரிய விஷயமா பேசாதீங்க”, என்றார்.

“வருமானம் கம்மியா இருந்தா பேங்ல பணத்தை போட்டா போச்சு…. வட்டி வாங்கிக்கறாங்க”, என்று இன்னொருவர் பேச….

விக்ரமின் தன்மானம் ஏகத்துக்கும் சீண்டி விடப்பட்டது……

“எனக்கு அது தேவையில்லைங்க….. ஏங்க உங்களுக்கு தெரியலைன்னாலும் பொண்ணை கல்யாணம் பண்ணி குடுத்த அவங்கப்பாவுக்கு என் நிலைமை தெரியும்! தெரியாமையா செஞ்சு கொடுத்திருப்பார்…..”, என்று அப்போதும் பேச்சை முடிக்க தான் பார்த்தான்.

அதோடு  அவர்கள் விட்டிருந்தால் பரவாயில்லை… ஆனால் விதியின் சதி என்பது ஒன்று உண்டல்லவா… கந்தசாமி வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல்….

“என்ன இதுல பெரிய பந்தா….. இவர் ஒன்னுமே வாங்காத மாதிரி……. இத்தனை நாள் எங்க தயவுல தானே இருந்தார்…. படிச்சார்…….. சாப்பிட்டார்…. இப்போ என்ன அதை வாங்க மாட்டேன்…. இதை வாங்க மாட்டேன்னா…….. எங்க பாப்பா இவரோட போய் கஷ்டப்படுமா”, என்றான்…..

“எங்க தயவுல தானே இருந்தார்…….. படிச்சார்……… சாப்பிட்டார்…..”, என்ற வார்த்தைகளை கேட்டதும் கட்டுப்பாட்டை இழந்தான்…….

விக்ரம் இப்படி கூட பேசுவான் என்று கந்தசாமிக்கு அன்று தான் தெரிந்தது…..

“டேய்! இவ்வளவு பெரிய பிச்சைகார பசங்களாடா நீங்க!”, என்று பொங்கி எழுந்தான்……

எல்லோருமே அதிர்ந்தனர்……

“என்னடா உங்க தயவுல நான் இருந்தேன்…… படிச்சேன்…… சாப்பிட்டேன்…… எங்க அக்கா எனக்கு உதவி பண்ணினாங்க…… என்னையும் என் தங்கச்சியையும் பார்த்துகிட்டாங்க”,

“அது ஒரு தார்மீக ரீதியான கூட பொறந்தவங்கன்னு பண்றது…”,

“அவ்வளவு தான்! என் தங்கச்சி படிச்சது, அவளை கல்யாணம் பண்ணிக்கொடுத்தது எல்லாம் எங்க அப்பா அம்மாவோட பணம்…”,

“எனக்கு அப்பப்போ உதவி பண்ணினாங்க இல்லைங்கலை…….. எனக்கு எவ்வளவு பீஸ்ன்னு தெரியுமா உனக்கு…. வெறும் நானுத்தி அம்பது ரூபாடா வருஷத்துக்கு…. அதை நீ கட்டி என்னை படிக்க வெச்சேன்னு சொல்றதுக்கு உனக்கு அசிங்கமா இல்லையா… அப்பப்போ போக வர எங்கக்கா எனக்கு செலவுக்கு குடுக்கற பணத்தை நான் இங்க வர்றதுக்கும்…. அவங்களுக்கு சீர் செய்யறதுக்கு இப்படி தான் உபயோகிச்சேன்…”,

“நீ சொன்ன மாதிரி நான் திங்கறதுக்கும் தங்கறதுக்கும் நான் பார்ட் டைம் ஜாப் பார்த்தேன்…… உன்னை மாதிரி உங்கப்பன் பாட்டன் சொத்துல உடம்பை வளர்கலை….. நான் சம்பாரிச்சு தான் நான் சாப்பிடறேன்..”,

“சும்மா எங்க தயவு அது இதுன்னு பேசின…..”, என்று மரியாதையில்லாமல் பேசினான்.

விக்ரம் குரல் உயர்த்தும் போதே…… வீட்டிற்குள் அசதியில் உறங்கிக் கொண்டிருந்த முத்துசாமி… மரகதம், பழனிச்சாமி, லதா என்று அனைவரும் வந்து விட்டனர்.

அவர்களுக்கு விக்ரம் மரியாதையில்லாமல் பேசிக்கொண்டிருப்பது மட்டும் தான் தெரிந்தது….. அதன் சாராம்சம் புரியவில்லை.     

அன்னகிளி முகத்தில் ஒரு திகிலோடு விக்ரமை அவன் ஆக்ரோஷத்தை அவன் கோபத்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்ன தம்பி இப்படி கோபப்படறீங்க…….”, என்று நடுவில் ஒருவர் பஞ்சாயத்திற்கு வந்தார்.. அவனை ஆசுவாசப்படுத்தினார்.

அதற்குள் லதாவும், “என்ன விக்ரம்”, என்று அவன் அருகில் வந்தாள்.

“என்னவோ வீடு வாங்கி குடுக்கறேன்….. பேங்க்ல பணம் போடறேன்னு பேசறாங்க…..”, என்று விக்ரம் சொல்ல…..

இதில் கோபப்பட என்ன இருக்கிறது என்று லதாவிற்கு புரியவில்லை….

“அதனால என்ன விக்ரம்? பொண்ணுக்கு செய்யறது வழமை தானே!”, என்றாள்.

“இன்னும் கட்டுக்கடங்காமல் போனது விக்ரமின் கோபம்…. என்னை கையாலாகதவன்னு சொல்றாங்க… உனக்கு புரியலயா?”, என்றான்.

“நீ ஏன் தப்பா எடுத்துக்கற……?”,

“என்ன நான் தப்பா எடுத்துக்கறேன்! உங்க தயவுல தான் இருந்தேன், படிச்சேன், சாப்பிட்டேன்கறார்…… என்னை…… என்ன பண்றீங்க? எங்க பொண்ணை எப்படி பார்த்துக்குவீங்கன்னு நிக்க வெச்சி இவங்க கேள்வி கேட்கறாங்க…..”,        

விக்ரமை எந்த தளைக்குள்ளும் பூட்ட முடியாது….. அதுவுமில்லாமல் அவனின் விருப்பமில்லாமல் ஒரு செயல் நடந்திருக்கும் போது அவனின் மனம் அந்த உளைச்சலில் இருக்கும் போது இப்படி ஒரு பிரச்சனையை அவர்கள் எழுப்பியிருக்க கூடாது…. 

லதா புரியாமல்….. “அவர் சொன்னா உண்மைன்னு ஆகிடுமா… விட்டு தள்ளுவியா…. பெரியவங்க நாலு வார்த்தை பேசறது தான், விட்டு தள்ளு…”, என்று விக்ரமை சமாதானப்படுத்த..

அவன் பொறுமையை முற்றிலும் இழந்தான்…… அதாவது ஒரு விஷயத்தை நாம் செய்யாத போது யாரவது ஏதாவது பேசினால்…… என்னவோ பேசிட்டு போறாங்க எனக்கொன்னுமில்லை என்று விட்டு தள்ளி கொண்டு போய் கொண்டே இருக்கலாம்.

அது ஒரு வகையான ஆட்கள்..

இன்னொரு வகையான ஆட்கள் முற்றிலும் வேறு…. நான் இதை செய்யாத போது இவர்கள் ஏன் அதை பற்றி பேச வேண்டும் என்று வீறு கொண்டு எழுவர்…..

அப்படிப்பட்ட வகையாகிப் போன விக்ரம் வீறுகொண்டு எழுந்தான்….

“ஏன் நீயேன் பேச மாட்ட! அதான் அந்த பொண்ணை என் தலையில கட்டிட்ட இல்ல….”, என்றான்.

அந்த வார்த்தைகள் அன்னகிளியின் குடும்பத்தை மொத்தமாக காயப்படுத்தியது….. முத்துசாமி தவறு செய்து விட்டோமோ என்று நின்று விட்டார்.

“தலையில் கட்டும் அளவுக்கு என் பெண் குறைந்து போய்விட்டாளா……?”,             

விக்ரமின் பீஸ் நானுற்றி ஐம்பது ரூபாய் என்பது கந்தசாமிக்கு ஒரு செய்தி…. அவன் வேலை பார்த்தான் என்பதும் அவனுக்கு ஒரு செய்தி தான்…… என்னவோ லதா தான் அவனுக்கு எல்லாம் கொடுப்பதாக நினைத்திருந்தான்…..

ஆனாலும் ஒப்புக்கொள்ள மனம் வரவில்லை….. “ஏன் உங்களுக்கு பொண்ணு குடுக்க க்யுல நிக்கறாங்களா………. எங்க பாப்பாவை பேசற…….. யாரு உன் தலையில் கட்டுனா…… நீ பண்ணுன பிரச்சினையில தான் இப்படி ஆகிடுச்சு…… அந்த பையன் தான் தெளிவா சொல்றானே நீ நடுவுல குழப்பம் பண்ணினேன்னு”,

“என்ன நான் பிரச்சனை பண்ணினனா! ஏன் பேசமாட்டீங்க….?”, என்ற விக்ரமிற்கு ஆத்திரம் அடங்கவில்லை…… அதற்கு மேல் பேச விருப்பமுமில்லை…..   

“வீணா பேச்சை வளர்க்காத கந்தசாமி”, என்று சித்தப்பா சொல்லவும்……    

“சரி! இவரு எங்க தயவுல இல்லை…… அதுக்காக வீடு வாசல் இல்லாம எங்க பொண்ணை அனுப்ப முடியுமா”,     

“வீடு வாசல் இல்லைன்னு தெரிஞ்சு தானே கல்யாணம் பண்ணிக் குடுத்தீங்க! இப்போ அதை பெரிய விஷயமா பேசினா எப்படி? அப்படி பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தா பார்த்துக்க வக்கில்லாமையா போயிடுவேன்! வீணா என்னை பேச வைக்காதீங்க!”, என்று விக்ரம் மீண்டும் பேசினான்.  

“ஒன்னு வீட்டோட மாப்பிள்ளையா இருங்க….. இல்லை…… பக்கத்துல கோவைலயே வீடு வாங்கி தர்றோம்! பேங்கல பணம் போடுவோம்! இதுக்கெல்லாம் நீங்க சம்மதிச்சு தான் ஆகணும்! அப்படி உங்க கூட எதுவுமில்லாம எங்க பொண்ணை அனுப்ப முடியாது!”, என்று கட் அண்ட் ரைட்டாக கந்தசாமி பேச…..

கந்தசாமி கொஞ்சம் கட் அண்ட் ரைட்டாக பேசியதும் உறவுகள் ஆளாளுக்கு பேச….  லதாவிற்கு பதட்டம் ஏறியது.. பழனிசாமி எல்லோரையும் அமைதி படுத்த முயன்றும் முடியவில்லை.

என்ன நடக்கிறது? நடக்க போகிறது என்று தெரியாமல் அன்னகிளியும் மரகதமும் தவித்து நிற்க…..  

கந்தசாமியின் அருகில் வந்த விக்ரம், அவனுக்கு மட்டும் கேட்குமாறு….. “ஏண்டா! வீடு நீங்க குடுப்பீங்க! பணம் நீங்க குடுப்பீங்க….! அப்புறம் நான் எதுக்குடா உங்க தங்கச்சிக்கு?……… குழந்தை பெத்துக்கவா!”, என்று தீர்க்கமாக கேட்க……

ஒரு நிமிடம் வாயடைத்து நின்றுவிட்டான் கந்தசாமி…. இந்த பேச்சுக்கள் முற்றிலும் அவனுக்கு புதிது…… அவனால் தங்கையை இழிவு படுத்துவது போல விக்ரம் பேசவும் தாங்க முடியவில்லை…….

“டேய்!”, என்று அவனின் சட்டையை பிடித்து விட…… ஆளாளுக்கு பதறி வந்து பிரித்து விட்டனர்……

லதா விக்ரமின் அருகில் வரவும்……. ஒற்றை விரல் காட்டி தூர நிறுத்தியவன்…. 

அன்னகிளியை பார்த்தான்……. “என்னோட வர்றியா….. இவங்கல்லாம் எதிர்ப்பார்க்குற மாதிரி என்னால நடக்க முடியாது….. இப்போதைக்கு என்னால உனக்கு சொல்ல முடிஞ்சதெல்லாம்….. பட்னியா உன்னை தூங்க விட மாட்டேன்! இஷ்டமிருந்தா என்னோட இங்கிருந்து ஒரு பொருளும் எடுக்காம வா”, என்று விக்ரம் நிற்க……

“நீங்க போகாத பாப்பா! இவன் அசிங்கமா பேசறான்…. இவன் கூட வாழறதுக்கு நீங்க வாழாமையே இருக்கலாம்!”, என்று கந்தசாமி சொல்ல…..

அன்னகிளி போவதா? வேண்டாமா? என்று தடுமாறினாள்….

தைரியமாக விக்ரமை மாப்பிள்ளையாக்கிய முத்துசாமியால்…… அப்படி தைரியமாக, “நீ போம்மா!”, என்று உடனே சொல்ல முடியவில்லை…..  அவர் சில நிமிஷங்கள் தடுமாறவும்….    

தன் மகள் ஒன்றுமில்லாமல் போனால் கஷ்டபடுவாளோ என்று அவர் தலை குனிந்து யோசிக்க…… அன்னகிளி என்ன செய்வது என்று அவர் முகம் பார்த்தாள்…..

விக்ரம் அன்னகிளி தன் முகம் பார்ப்பாளா என்று சில நிமிடம் பார்த்தான்…. அன்னகிளி இடிந்து அமர்ந்திருக்கும் தன் தந்தையை, அவரின் சம்மதத்தை வேண்டி பார்த்து நிற்க…… 

விக்ரம் யோசிக்கவேயில்லை…….

யாரும் என்ன நடக்கிறது என்று உணரும் முன்…… உள்ளே விரைந்து பையை தூக்கி கொண்டு வந்தவன்……. “விக்ரம்! என்ன பண்ற?”, என்று லதா பதற பதற…… முக்கியமான சொந்தங்கள் எல்லோரும் பார்க்க……

போய் விட்டான்…. போயே விட்டான்…..      

முத்துசாமி அனுப்பிவிடலாம் என்று நினைத்து தலை நிமிர்ந்த போது விக்ரம் போய் இருந்தான்.

அவனை மட்டுமே நம்பி பெண் கொடுத்த முத்துசாமிக்கு பெரிய அடியாக போயிற்று…..  அவருக்கு ஒன்றுமே ஓடவில்லை விக்ரமின் இந்த நடவடிக்கை…. அவர் வாழ்க்கையிலேயே தோற்று விட்ட ஒரு உணர்வை கொடுத்தது.  

“ஐயோ! ஆசை ஆசையாய் வளர்த்த மகளின் வாழ்க்கை….?”, அந்த பெரிய மனிதருக்கு கண்களில் நீர் துளிர்த்து விடும் போல ஆகிவிட்டது.

ஒன்றும் பேசாமல் அவரின் அறைக்குள் சென்றுவிட்டார்.

அன்னகிளி அவர் பின்னே சென்றவள்….. தந்தையை இப்படி பார்க்க சகிக்க முடியவில்லை……. எந்த தைரியத்தில் அவருக்கு தைரியம் சொன்னாள் என்று தெரியாது…… ஆனால் சொன்னாள்……

“அப்படி எல்லாம் அவர் என்னை விட்டுட மாட்டார் பா! ஏதோ கோபம்….. ஒரு கட்டயாத்துனால இந்த கல்யாணம் நடந்திருச்சுன்னு ஒரு எண்ணம் இருக்கலாம்…… சரியாகிடும் பா!”, என்றாள்.

மகள் தைரியமாக இருப்பது அவரின் மனதை தேற்றியது…..

பிறகு அன்னகிளியை ஹாஸ்டலில் சேர்த்து விட்டனர்.

ஆரம்பத்தில் லதாவும் பழனிசாமியும்  விக்ரமிடம் பேசினர்….. “எப்போ நீங்க சொன்ன மாதிரி எனக்கு வீடு பணம்ன்னு வருதோ அப்போ பேசிக்கலாம்…. அதுவும் அப்போ எனக்கு மனசிருந்தா வருவேன்! இல்லைன்னா இல்லை!”, என்றுவிட்டான்.

அவனை எந்த வகையிலும் அசைக்க முடியாத லதா அவனிடம் பேசுவதை நிறுத்த…. விக்ரமாகவும் பேச முயலவில்லை….

ஒரு கட்டத்தில் தொடர்புகள் முழுதாக அற்றுப் போக…… அன்னகிளி படித்து முடித்து வீட்டில் இருக்கும் இந்த ஒரு வருடமாக என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என்று முத்துசாமி நினைத்துக் கொண்டிருக்க….. கந்தசாமி பெரிய முட்டுக்கையாக இருந்தான்…..

அதன் பிறகு நடந்தது….. தெரிந்தவையே….

இப்படி விக்ரமும் அன்னகிளியும் நினைவுகளை அசை போட்டுக் கொண்டிருக்க.. நிகழ்காலத்தில் நிச்சயம் முடிந்திருக்க…….. நினைவுகளோடே பயணித்துக் கொண்டு இயந்திர கதியில் அவரவர்க்குரியதை அவரவர் செய்ய….   

நிச்சயம் முடிந்து வீடு வந்து இரவு விருந்தும் முடிந்திருக்க…. “வீட்டுக்கு கிளம்பலாமா?”, என்றான் விக்ரம்.

விக்ரம் அன்னகிளி இருவரின் ஜோடி பொருத்தம் இருந்தவர் கண்களை எல்லாம் பறித்திருக்க……

முத்துசாமிக்கு விக்ரம் பிரச்சனைகளை சமாளித்து நிச்சயத்தை நல்ல விதமாய் நடத்தி முடித்தது…. மற்றும் விக்ரமும் அன்னகிளியும் பேசியது நடந்து கொண்டது……. ஒரு அன்னியோன்யமான தம்பதிகளாக காட்ட….. அவர் மனமும் நிறைந்தது.

இரவு அங்கேயே தங்கிக்கொள்ள சொல்லி விக்ரமிடம் அவர் மாமனாராக சொல்ல….

“இல்லைங்க மாமா! நான் வீட்டுக்கு போயிடறேன்! வேணும்னா அன்னகிளி நாளைக்கு காலையில கூட வரட்டும்!”, என்றான்.

“என்னது நாளைக்கு காலையிலா?”, என்று அன்னகிளியின் முகம் சுருங்கி விட்டது…. ஆனாலும் இப்போவே வருகிறேன் என்று விக்ரமிடமும் சொல்லவில்லை….. யாரிடமும் குறிப்பும் காட்டவில்லை…..

அமைதியாக தான் நின்றாள். ஆனால் கவலையாக இருந்தது குடிப்பானே என்று.

மரகதம் தான், “இல்லையில்லை உங்க கூட வரட்டும்”, என்றார்.

“போ பாப்பா!”, என்று அன்னகிளியிடமும் சொல்ல….. அவள் உடை மாற்ற விரைந்தாள்.

பின்னே போன மரகதம், “ஒன்னு ரெண்டாவது போட்டுக்கிட்டு போ பாப்பா! இப்படி எல்லாத்தையும் கழட்டி வைக்காத!”, என்று நகையை சொல்ல…..

“நான் ஒன்னு ரெண்டு எக்ஸ்ட்ரா போட்டுட்டு போனா கூட…… போட்டிருக்குற தாலிக் கொடி ஒன்னையும் கழட்டி வெச்சிட்டு, மஞ்சள் கயிறை போட்டுட்டு வான்னு சொன்னாலும் சொல்லுவாங்க! பரவாயில்லீங்களாங்கம்மா….”,  என்று அம்மாவிடம் கேட்க…

“வேண்டாம்! வேண்டாம்! நீ போ பாப்பா!”,

விக்ரமின் அருகில் வந்த லதா, “உன் சாமானை எல்லாம் எப்போ எடுத்துக்கற!”, என்றாள் நேரடியாகவே……

விக்ரம் யோசிக்கவும்….. “அம்மா அப்பாவோடது தான்! வேற எதுவும் இல்லை நம்பு….!”, என்றாள்.

“எடுத்துக்கணும்னா ஒரு டீல் இருக்கு!”, என்று விக்ரம் லதாவிடம் சொல்ல……

“என்ன டீல்?”, என்பது போல பார்க்க….. “நீயும் மாமாவும் ஏன் பேசறது இல்லை….. என்ன ப்ரச்சனையிருந்தாலும் அவரோட ராசியா போ…… நான் சாமானை எடுத்துக்கறேன்”, என்றான்.

“தோ பாரு! நீ சாமானை எடு! எடுக்காம போ! அது உன் விருப்பம்!”, என்று வள்ளென்று விழுந்தவள்…… அவளின் ரூமினுள் சென்று விட்டாள்.

அன்னகிளி உடை மாற்றி நகைகளையெல்லாம் களைந்து….. எப்போதும் போல ஒற்றை சங்கிலி ஒற்றை வளையளுடன் வரவும்…..

“கொஞ்ச நேரம் இரு! நான் அக்காவோட பேசிட்டு வந்துடறேன்!”, என்று போனவன்…. சிறிது நேரம் கழித்தே வந்தான்…. முகமும் ஒன்றும் சரியில்லை என்று அன்னகிளிக்கு பார்த்ததும் தெரிந்தது.

“கிளம்பலாம்!”, என்று அன்னகிளியிடம் சொன்னவன்….. “இங்க இருக்குற எங்க பழைய வீட்ல இருந்த சாமானை நான் எடுத்துக்கறேன் மாமா!”, என்று முறையாக முத்துசாமியிடம் சொல்லிவிட்டு…..

கந்தசாமியிடமும் பழனிசாமியிடமும் கூட முறையாக சொல்லிவிட்டு……. “நான் இன்னைக்கு பிரபாகரனை என்கூட கூட்டிட்டு போறேன்!”, என்று அக்காவின் பையனையும் கூட்டிகொண்டு கிளம்பினான்.    

விக்ரமின் முகம் பார்த்து எதுவும் அன்னகிளியால் கண்டு பிடிக்க முடியவில்லை…

காரில் போகும் போது என்னங்க என்று கேட்டாள்….

ஒன்றுமில்லை என்பது போல தலையாட்டினான்….. அவளை திட்டவும் இல்லை சீண்டவும் இல்லை மிகவும் அமைதியாக வந்தான்.

பிரபாகரன் வேறு பேசிக்கொண்டே வரவும்…. அன்னகிளி அவனுக்கு பதில் கொடுத்துக் கொண்டே வந்தாள். விக்ரமின் முகம் சீரியசாக இருந்தது.

Advertisement