Advertisement

அத்தியாயம் பதினாறு :

“இழுத்து சாத்துங்கடா கோயில் கதவை…. இவனுங்களை நான் ஒரு வழி பண்ணாம இந்த இடத்தை விட்டு அனுப்பறதில்லை”, என்று அழும் மகளை தோளில் தாங்கி முத்துசாமி ஆக்ரோஷமாக பேசவும்….

எவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யம் வினோத்தின் தந்தையுடையது….. எத்தனை பேரை கட்டி மேய்க்கிறார்……… எப்படி யாரிடம் பேச வேண்டும் என்பது அவருக்கு அத்துபடி…..  

வினோத்தின் தந்தை நல்லவர் தான், ஆனால் எதிரில் இருப்பவர் அவருக்கு எதிரியாகும் வரை….. 

வினோத்தின் தந்தை வந்து கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். “என் பையன் செஞ்சது தப்புதானுங்க… நான் மன்னிப்பு கேட்கறேன் உங்ககிட்ட.. நீங்க என்ன சொன்னாலும் செய்யறோம்…. உங்க பொண்ணை எங்க வீட்டு மருமகளா அனுப்புனீங்கன்னா ரொம்ப சந்தோசம்….”,

“என் பையன் கெட்டவன் எல்லாம் கிடையாது…. என்னவோ உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறதுல இவ்வளவு தீவிரமா இருக்கான். இந்தளவு போவான்னு தெரிஞ்சிருந்தா நான் நேர்ல வந்தே உங்ககிட்ட பொண்ணு கேட்டிருப்பேன்…..”, என்று மன்னிப்பு கேட்டு நின்றார்.

கோபத்துடன் நின்ற முத்துசாமியிடம்….. “இப்பவும் ஒன்னுமில்லை….. நீங்க பொண்ணு குடுக்க சம்மதிச்சீங்கன்னா ஜாம் ஜாம்ன்னு கல்யாணத்தை நடத்திடலாம்….. இந்த விஷயம் யாருக்குமே தெரிய வராது”, என்று ஒரு தேர்ந்த வியாபாரியாக…..

முத்துசாமியிடம் மன்னிப்பும் வேண்டி அதே சமயம் காரியத்தையும் சாதித்துக் கொள்ள விரும்பினார்.

இப்போது வினோத்தின் தந்தைக்குமே ஒரு ஈகோ பிரச்சனையாகிவிட்டது இது…. பிடித்திருக்கிறது என்றால் பெண் கொடுக்கவில்லை…. அப்படி என்ன இவர்கள் தங்களுக்கு மேலே……. தங்களுக்கு இல்லாத பணமா புகழா பாரம்பர்யமா?

இப்போது என் மகன் கட்டிய தாலியை இந்த பெண் கழற்றி வீசுகிறாள்….. வினோத்தின் தந்தையாக அவனுடைய மனவுணர்வுகளை படிக்க முற்பட்டவர்…. அவருமே இந்த திருமணம் நிலைக்க வேண்டும் என்பதில் இப்போது தீவிரமாக இருந்தார்.

தன் மகன் பெண்ணின் விருப்பமில்லாமல் அவளுடைய பெற்றவர்கள் உற்றார் உறவினர்கள் யாருக்கும் தெரியாமல் தாலி கட்டியது கேவலமில்லை அவருக்கு…. ஆனால் அந்த பெண் தாலியை கழற்றி வீசியது கேவலம்… அது வெளியே தெரிந்தால் இன்னும் கேவலம்…. இந்த திருமணம் நிலைக்க வேண்டும்…. இல்லை மறுபடியும் நடக்க வேண்டும் என்று வினோத்தின் தந்தையின் மனம் நொடியில் முடிவெடுத்து அதை செயல் படுத்தவும் முடிவெடுத்து…….

முத்துசாமியிடம் பேச ஆரம்பித்தார்…

இவர்கள் பேசிக்கொண்டு இருந்த போதே…. பழனிசாமியின் அருகில் வந்த விக்ரம் அவனின் காதில்….. “மாமா! எதுவா இருந்தாலும் நம்ம வீட்டுக்கு போயிடலாம்….. இந்த ஊர்ல ஓரளவுக்கு செல்வாக்கான குடும்பம் வினோத்தோடது”,

“எவனாவது மீடியால இருக்குறவன் பார்த்து போட்டோ கீட்டோ புடுச்சு பிரஸ்ல போட்டுட்டா நம்ம பொண்ணுக்கு தான் அசிங்கம்…… வினோத் வீட்டு ஆளுங்களும் வினோத்கு தான் சப்போர்ட் பண்றாங்க….. முதல்ல அன்னகிளியை இந்த இடத்துல இருந்து கூட்டிட்டு போங்க”, என்றான்.   

வார்த்தைகளின் சூட்சுமத்தை இவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று விக்ரமிற்கு தோன்றவில்லை…… முத்துசாமியின் குடும்பத்திற்கு எதுவும் நேரடியாக செய்து தான் பழக்கம்….. வினோத்தின் தந்தை அப்படி அல்ல என்று விக்ரமிற்கு தெரியும்.  

வினோத்தின் தந்தை முத்துசாமியிடம் பேசிக்கொண்டிருந்தாலும் விக்ரமின் மேலும் பார்வையை வைத்திருந்தார்.. தன் மகனை இப்படி உருக்குலைய அடித்தவன் அல்லவா.. என்ன ஆனாலும் சரி விக்ரமை மட்டும் அவர் விடுவதாயில்லை.  

“அவன் யார் என் மகனை அடிக்க…… என்னிடம் தானே சொல்லியிருக்க வேண்டும்….  அவன் என்ன அப்படி அந்த பெண்ணிற்கு உறவு….. கூடப் பிறந்தவனா உணர்ச்சி வசப்பட….  இதற்கும் அவன் என்ன என்னை தெரியாதவனா…… தங்கையை இந்த வீட்டில் திருமணம் செய்து கொடுத்திருக்கிறோம் என்பது கூட இல்லையா…..”, என்பதாக தான் விக்ரமை பற்றி அவர் எண்ணம் இருந்தது.    

விக்ரம் சொன்னதைக் கேட்ட பழனிசாமியும் உடனே தந்தையிடம்…… “அப்பா முதல்ல விஷயம் நாலு பேருக்கு தெரியறதுக்கு முன்னாடிங்க நம்ம பாப்பாவை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடலாம்ங்க…..”, 

கந்தசாமிக்குமே அது தான் சரியென்று பட…… “நம்ம போகலாமுங்க பா”, என்றான்.

அன்னகிளியின் குடும்பம் ஒன்றுமே சொல்லாமல் கிளம்பியது……

வினோத்தின் தந்தை, “ஒன்னுமே சொல்லாம கிளம்பறீங்க”, என்று கேட்கவும்….

“உங்க மகன் செஞ்ச காரியத்துக்கு நாங்க பதில் சொல்ற நிலைமையில இல்லீங்க”, என்று பேச்சை முடித்த முத்துசாமி…. “அப்படியே விட்டுடுவோம்னு மட்டும் நினைக்காதீங்க”, என்று சொல்லி சென்றார்.

அன்னகிளியை அழைத்துக் கொண்டு முத்துசாமியும் அவளின் சகோதரர்களும் செல்ல….. பின் தங்கிய விக்ரம்….. வினோத்தின் தந்தையிடம் வந்து…. “உங்க பையனை அடிச்சதுக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்”, என்றான்.

எப்படியும் தங்கையின் மைத்துனனாக போய்விட்டான்….. அந்த வீட்டில் அவனின் தங்கை வாழவேண்டுமே… என்னவானாலும் மனோஜ் விட மாட்டான் என்று தெரியும். இருந்தாலும் தன் சார்பில் அது ஒரு குறையாக தெரிய வேண்டாம் என்று போய் மன்னிப்பு கேட்டான்.

“நீ மன்னிப்பு கேட்டா என் பையனை நீ அடிச்சது இல்லைன்னு ஆகிடுமா…. சும்மா விட மாட்டேண்டா உன்னை”, என்று வினோத்தின் தந்தை ஆவேசப்பட……

“நான் மன்னிப்பு கேட்டுட்டேன், இதுக்கு மேல உங்க இஷ்டம். என் தங்கச்சி உன் பொறுப்பு”, என்பது போல ஒரு பார்வை…… ம்கூம்….. வினோத்தின் தந்தையை நோக்கி அல்ல…. மனோஜை நோக்கி செலுத்திய விக்ரம்….. கோயிலை விட்டு வெளியேறினான்.

விக்ரம் வருவதற்காக முத்துசாமி காத்திருந்தார்….. தன் பெண்ணிற்காக போய் அடித்திருக்கிறான்…… அப்படியே விட்டு செல்ல மனமில்லை…….

தன்னுடன் பேசிக்கொண்டிருந்த வினோத்தின் தந்தையின் பார்வை கோபத்துடன் விக்ரமை தழுவுவதை பார்த்துக் கொண்டு தான் இருந்தார்.

அதனால் இருந்து விக்ரமையும் அழைத்துக் கொண்டு தான் போனார்…. கந்தசாமி முறைத்ததை லட்சியம் செய்யவில்லை…

வீட்டிற்கு சென்று பிறகு தான் வீட்டுப் பெண்களுக்கே விஷயம் தெரியும்… அதிர்ந்து நின்று விட்டனர்…. “நீ எப்படி பாப்பா அங்க போன…… அண்ணன் தானே கொண்டு  போய் விட்டாங்க”, என்று அம்மாவும் துருவவும்…

“விஷயம் தெரிஞ்சு போகலை…… ஏதோ செத்துப் போயிடுவேன்னு சொன்னான்… சொல்லி புரியவைக்கலாம் பாவமேன்னு போனேன்…… இப்படி செய்வான்னு நான் எதிர்பார்க்கலீங்க ம்மா”,  என்றாள்.

“நீ எப்படி அங்க போன?”, என்று கந்தசாமி அப்போதும் விக்ரமிடம் கேட்டான்…

விக்ரம் தடுமாறி நின்றவன்….. பிறகு, “வினோத் அவங்கப்பாம்மா கிட்ட போன்ல சொல்லியிருப்பான் போல….. உடனே என்கிட்டே சௌமி சொன்னா… நான் பக்கத்துல இருந்ததுனால உடனே போயிட்டேன்”, என்றான்.   

தங்கைக்காக எத்தனை பொய் சொல்கிறான் இவன் என்று விக்ரம் மேல் ஆத்திரமாக வந்தது அன்னகிளிக்கு…… அவளால் தானே எனக்கு இந்த அவமானம்….. ஆனால் அப்போதும் சௌம்யாவை அன்னகிளி காட்டிக் கொடுக்கவில்லை.

என்ன செய்வது இந்த பிரச்சனையை எப்படி கையாள்வது என்று அன்னகிளி வீட்டினர் யோசிக்க…..

முத்துசாமி அங்கே வினோத் வீட்டினர் முன்னிலையில் தைரியமாக பேசி வந்துவிட்டாலும் நிலை தடுமாறி போனார்….. அப்படியே அமர்ந்து விட்டார்.   

வீட்டில் மயான அமைதி நிலவியது….. முத்துசாமி நிலை தடுமாறாமல் இருந்ததினால் தான் அண்ணன்கள், மனைவி, மருமகள் என்று தைரியமாக இருந்தனர்.

அவர் தடுமாறி அமரவும்….. வீட்டினரும் தடுமாறி விட்டனர்….

சிறிது நேரத்தில் வீட்டிற்கு அவரின் சமூகத்தில் கோவையில் பெரிய ஆளாய் இருக்கும் ஒருவர் வந்தார்….. சமூக கூட்டங்கள் அங்கே, இங்கே என்று பார்க்கும் போது நன்கு பேசி பழகுபவர்….

இப்போது எதற்கு இவர் வீட்டிற்கு வருகிறார் என்று முத்துசாமி புரியாமல் பார்க்க….

“என்ன முத்துசாமி இப்படி ஆகிடிச்சுங்கலாமா”, என்று அவர் ஆரம்பிக்க……. வீடு மொத்தமுமே அதிர்ந்தது……

அதற்குள் முத்துசாமியின் பங்காளிகள் ஓரிருவர் வந்தனர்…..அவர்களுக்கும் விஷயம் தெரிந்திருக்க……

முத்துசாமி உடைந்தே போனார்….. சில மணிநேரங்களில் வீடு மொத்தமும் அவரின் உறவுகள்……

வந்தவர்……. இனி என்ன செய்ய போகிறீர்கள் என்பது போல மூளை சலவை செய்தார்.

அங்கே தொட்டு இங்கே தொட்டு, “ஆனது ஆயிடுச்சு பேசாமல் நம்மளே கல்யாணம் பண்ணி வெச்சிடுவோம்”, என்றார்.

“எந்திரிச்சு போய்யா வெளில”, என்று சொல்ல துடித்த வாயை கடிவாளமிட்டு அடக்கினார்…… அப்படி பேசினால் அவருடைய ஆட்களையே அவருக்கு எதிராக திருப்பி விடுவர்……. அந்த அபாயமெல்லாம் எல்லாம் இருக்கிறது.

“பொண்ணுக்கு விருப்பமில்லைங்க இருந்திருந்தா நான் நடுவுல நிக்க மாட்டேன்…….”, பாப்பாவுக்கு இஷ்டமில்லாத போது என்ன செய்வது என்பது போல பேச…..

“பாப்பாக்கு என்னங்க தெரியும்! நம்ம தான் சொல்லி புரிய வைக்கணும்…. கட்டுன தாலியை கழட்டி தூக்கி வீசுச்சிடுச்சாம்…… அதுலயே இன்னும் நம்ம பொண்ணுக்கு அவ்வளவு விவரம் வரலைன்னு தெரியலீங்களா”, என்றார் வந்தவர்.

பேச துடித்த கந்தசாமியை பார்வையாலேயே அடக்கினார் முத்துசாமி…..

விக்ரமிற்கு வினோத் வீட்டினர் அன்னகிளியை விடுவதாயில்லை என்று நன்கு புரிந்தது….

பெண்ணை பேசியதும் முத்துசாமி இனியும் பேசாமல் இருந்தால் சரியாகாது என்று புரிந்தவர்……

“அப்படி விவரமில்லாத பொண்ணை கட்டி அவங்க என்ன பண்ண போறாங்க……… என் பொண்ணுக்கு கல்யாணமே ஆகலைன்னாலும் பரவாயில்லை….. நாங்க பார்த்துக்கறோம்…. நானில்லைனாலும் என் பசங்க பார்த்துக்குவாங்க…. அப்படி அந்த ஆளுங்களுக்கு கல்யாணம் பண்ணி குடுக்க முடியாது”, என்றார் தீர்மானமாக.

“இப்படி எடுத்தோம் கவிழ்தோம்னு பேசுனா எப்படிங்க முத்துசாமி…. சாமி சன்னிதானம் முன்னாடி நடந்த கல்யாணம் இல்லைன்னு ஆகிடுமா……”,

“அது கல்யாணமே கிடையாதுங்க அதை கல்யாணம்னு சொல்லாதீங்க…. எத்தனை நாடக கல்யாணம், சினிமா கல்யாணம் எல்லாம் முறையா அம்மி மிதிக்கிற மாதிரி அக்னியை வலம் வந்து எடுக்கறாங்க அதெல்லாம் கல்யாணமா என்ன…..?”,

“அது மாதிரி தான் இதுவும்…. இது கல்யாணம் கிடையாது”, என்றார் தீர்மானமாக நிமிர்ந்து நின்று…..

இத்தனை நேரமாக யாரையும் பேசவிடாமல் முத்துசாமி மட்டுமே பேசிக்கொண்டு இருந்தவர்….. தன்னுடைய அண்ணன் தம்பிகளை பேச்சில் இணைத்தார்.

“என்ன பெரிய அண்ணா நான் சொல்றது சரிதானுங்களே…. சின்ன தம்பி நீங்க சொல்லுங்க”, என்று சொன்னது தான் போதும்….

அவர்கள் புகுந்து வந்தவரை ஒரு வழியாக்கினர்….. “நீங்க நம்ம ஆளுங்க…. நீங்க இப்படி பேசலாமா.. நாங்களே சரின்னு சொன்னாலும் நம்ம பொண்ணுக்கு ஒரு அநியாயம் நடந்திருக்க நீங்க எப்படி விடுவீங்க…..”,

“அப்புறம் நம்மளை மாதிரி ஆளுங்க பெரிய மனுஷனுங்கன்னு சொல்றதுல என்ன இருக்கு…. நம்ம பொண்ணுக்கே இப்படி ஒரு நிலைமைன்னா ஆதரவு இல்லாத பொண்ணுங்க என்ன பண்ணுவாங்க…. நம்ம யாருன்னு அவங்களுக்கு காட்ட வேண்டாமா”, என்று ஏகத்திற்கும் எகிற…

வந்தவரால் அதற்கு மேல் ஒன்றும் பேசமுடியவில்லை……. அவர் என்ன செய்வது என்று யோசிக்கும் போதே…. அவர்களின் சமூகத்தை சார்ந்த பெரிய போலிஸ் அதிகாரி ஒருவரும் வந்தார்……

“நடந்ததை கேள்வி பட்டனுங்க”, என்று அவரும் ஆரம்பித்து…. வினோத் வீட்டினருக்கு சாதகமாக பேசவும்…. முத்துசாமி வீட்டு ஆட்கள் கொதித்தனர்…

“என் பொண்ணு பேரு வீணா எல்லார் வாயிலையும் விழுந்து அரை பட வேண்டாம்னு தான் அமைதியா இருக்கேன்….. இருந்தாலும் அவனுங்களே எல்லார் கிட்டயும் பரப்பி விடரானுங்க…..”,

“கம்ப்ளைன்ட் குடுப்பேன் அது இது ன்னு நினைக்காதீங்க……. என் காட்ல வேலை செய்யறவங்க கிட்ட சொன்னா கூட போதும்… அவன் குடும்பத்துக்கு ஒரு பத்து ஏக்கர் எழுதி வைக்கறன்னு……. என்ன வேலை சொன்னாலும் செஞ்சிடுவாங்க….”,

“அந்தளவுக்கு என்னை மறைமுகமா அவங்க போக வைக்கிறாங்க… தேவையில்லாமல் என்னை சீண்ட வேண்டாம்”, என்றார்.

“நம்ம பொண்ணு வாழ்க்கை இதுல அடங்கியிருக்குங்களே”, என்றார் அந்த போலீஸ் அதிகாரி…..

“என் பொண்ணுக்கு பிடிக்கலைங்கறது தான் விஷயமே…. இதுல ஜாதி, வசதி, பையனை பத்தி குறைன்னு எதுவுமே கிடையாது….  ஆனா என் பொண்ணு பத்தி எப்போ இத்தனை பேர் பேச வெச்சானுன்களோ இனிமே என் பொண்ணுக்கே இஷ்டம்னா கூட அவளை கொன்னு கூட போடுவேன் அந்த ஆளுங்க வீட்டுக்கு அனுப்ப மாட்டேன்… பார்த்துருவோம்டா நானா அவங்களான்னு”, என்று தோளில் துண்டை உதறி போட்டுக் கொண்டு அவர் எழுந்த வேகத்தை பார்த்து…..

வந்தவர்கள் பயந்து தான் விட்டனர்….

“விடுங்க! விடுங்க!….. அவங்களை இனிமே உங்க பொண்ணு வாழ்க்கையில தலையிடமாட்டேன்னு நான் எழுதி வாங்கி தர்றேன்”, என்று அந்த அதிகாரி சொல்ல… சற்று தணிந்தார் முத்துசாமி…….

“என்ன? எழுதி வாங்கிக்கலாமா?”, என்று உறவுகளுடன் அவர் ஆலோசிக்க…. எல்லோரும், “சரி”, என்ற நேரத்தில்………

“வேண்டாம்”, என்றான் விக்ரம்….

“ஏன் பிரச்சனை தீர வேண்டாமா……..”, என்று கந்தசாமி சண்டைக்கு வரவும்………. எல்லோர் முன்னிலையிலும் கந்தசாமி பேச எப்போதும் போல விக்ரம் பொறுத்து போகவில்லை…….

“சும்மா என்கிட்டே எகிர்ற வேலையை முதல்ல விடுங்க”, என்று தைரியமாக சொன்ன விக்ரம்…..

“எழுதி வாங்க வேண்டாம்!”, என்றான் ஸ்திரமாக……

“நீ இதுல தலையிடாத”, என்று கந்தசாமியும் ஏகத்துக்கு வார்த்தையை விடவும்….

“நீ அமைதியா இரு நீ பேசாத”, என்று முத்துசாமி அவனை அதட்டினார்….. “நீ ஏன்னு சொல்லு விக்ரம்”, என்று காரணம் கேட்க…….

“வினோத் அன்னகிளி வாழ்க்கையில எங்கயுமே இல்லை….. இனிமே பிரச்சனை பண்ண மாட்டோம்னு எழுதிக் கொடுத்தா…. அப்போ அவன் ஏதோ ஒரு வகையில இருந்த மாதிரி ஆகிடும்…. எங்க கல்யாணம் நடந்திருக்கு அது இதுன்னு சொல்ல வாய்ப்பிருக்கு….”,

“ஒரே ஆளுங்கன்னா கூட பரவாயில்லை வேற வேற ஆளுங்க…… அந்த பொண்ணுக்கு சம்மதம்….. ஆனா அவங்க ஜாதி காரணமா அனுப்ப மாட்டேங்கறாங்கன்னு கேஸ் பைல் பண்ண கூட வாய்ப்பிருக்கு…..”,

“அதனால தான் எங்ககிட்ட எழுதி வாங்கியிருக்காங்கன்னு சொல்லுவாங்க… எந்த சாட்சியும் இந்த விஷயத்துக்கு வேண்டாம்… அவங்களை யாருன்னே தெரியாதுன்னு சொல்லி அனுப்பிடுங்க! மேல இதை பத்தி பேசவே வேண்டாம்…… கல்யாணம் நடக்கவே இல்லை! அவ்வளவு தான்! அந்த பேச்சோடு தான் நிக்கணும்”,

“அந்த கல்யாணம் செல்லாதுங்கற பேச்சு கூட வேண்டாம்! கல்யாணம் நடக்கலைங்க……!”, என்றவன்….. இன்னும் தைரியமாக அன்னகிளியை அழைத்தான்.

ரூமிற்குள் இருந்தாலும் அன்னகிளி அவன் பேசியதை கேட்டுக் கொண்டு தான் இருந்தாள்…..

வந்தவளுக்கு கண்களால் அவன் செய்தி சொல்லி….  “உனக்கு யாரவது தாலி கட்டுனாங்களா என்ன…….?”,

விக்ரம் சொன்ன செய்தியை படித்து அன்னகிளி புத்திசாலி என்று நிரூபித்தாள்…. “நான் காலையில இருந்து வீட்ல தானுங்க இருக்கேன்…….. இன்னைக்கு நான் எங்கயும் போகலைங்க”, என்றாள் இன்னும் தைரியமாக…   

அவள் பதில் சொன்ன விதத்தில்…. இந்த பெண்ணை அசைத்து வினோத்துடன் சேர்த்து வைப்பது ஆகாத காரியம் என்று வந்தவர்களுக்கு புரிந்தது.   

விக்ரமின் பேச்சை முத்துசாமியின் உறவுகள் கூட யாரும் மறுக்கவில்லை…. அவன் பேச்சில் ஒரு ஆளுமை இருந்தது மறுக்க முடியாத உண்மை.  

அரை நாளாக பேசிக் கொண்டிருந்த விஷயத்தை ஐந்து நிமிட பேச்சில் முடித்து விட்டான் விக்ரம்…

முத்துசாமிக்கு அவனுடைய புத்திசாலித்தனம் பிடித்தது……

“தம்பி யாரு?”, என்று அந்த போலிஸ் அதிகாரி கேட்டார்…..

“நம்ம மருமகளோட தம்பி, வக்கீலுங்க”, என்று முத்துசாமி சொல்லவும்…..

“ஒஹ்! நீ தான் வினோத்தை அடிச்சதா! இன்னும் அவங்க உன் மேல கம்ப்ளைன்ட் குடுக்கறதா வேண்டாமான்னு யோசிச்சிட்டு இருக்காங்க…… குடுத்தாங்க நீ தொலைஞ்ச….. அப்பா அம்மா யாரும் கிடையாது…. உன்கூட யாரும் நிக்க மாட்டாங்க தம்பி! நீ ஏன் இதுல பஞ்சாயத்து பண்ற!”, என்று அவர் ஒரு மறைமுக மிரட்டல் விடுக்கவும்….

“நீ யாருமற்ற அனாதை”, என்று அவர் மறைமுகமாக பேசியது……. விக்ரமின் தன்மானத்தை ஏகத்துக்கும் சீண்டியது….. அதுவுமில்லாமல் கம்ப்ளைன்ட் அது இது என்று எப் ஐ ஆர் பதிவானால் அவ்வளவு தான் அவனின் மிகப்பெரிய வேலைக்கான கனவுகள் பாதிக்கப்படும்.  

பேச வந்த முதுசாமியை தடுத்த விக்ரம்……  அவன் பேச முற்பட……

அவனை பேசவிடாமல், அவன் பதில் சொல்லுமுன்பே, “குடுக்கட்டும் தம்பி! நாங்க பார்த்துக்கறோம்…. நீங்க மட்டும் போலிஸ் இல்லை தம்பி! உங்களுக்கு மேலயும் இருக்காங்க கீழயும் இருக்காங்க…. எங்களுக்குன்னு யாரவது இல்லாமையா போவாங்க…..”

“நீங்க தான் நம்ம ஆளுங்கன்னு கூட இல்லாம எங்களை விட்டுட்டீங்கன்னு தெரியுது… உங்க வீட்ல பொண்ணுங்க இல்லையா…..? நாளைக்கு அதை நம்ம ஜனங்களுக்குள்ள கட்டிக்குடுக்கணும்னு உங்களுக்கு இல்லையா”, என்று அவரும் பதிலுக்கு மிரட்ட……

“ஐயோ! அப்படி எல்லாம் இல்லீங்க…. இதுவே ஒரு பொறுக்கி பயன்னா பேசியிருப்பனுன்களா….. பொண்ணு நல்லா இருப்பான்னு தோணிச்சு! நீங்க இவ்வளவு முடிவா இருக்கும் போது என்ன பண்ண முடியும்! நான் வரட்டுமுங்களா”,   

“ரொம்ப தீவிரமா இருக்காங்க! வேற கல்யாணம் பொண்ணுக்கு பண்ண விடமாட்டாங்க… பொண்ணுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுங்க! அப்போ தான் ப்ரச்சனை அடங்கும்…”,

“இல்லைனா இன்னைக்கு ஓஞ்ஜாலும்……. நாள பின்ன தலை தூக்கும்”, என்று அவர் சொல்லிவிட்டு செல்லவும்….

யாரிடமும் செய்யலாமா? வேண்டாமா? என்று கேட்கவில்லை…… நேராக விக்ரமிடம் சென்றவர்…. “என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறியா விக்ரம்”, என்றார்.

அதிர்ந்து நின்றுவிட்டான் விக்ரம்…  அவனை அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவே விடவில்லை அதன் பிறகு யாரும்…. பழனிசாமியும் லதாவும் அந்த செய்கையை அவர்களதாக்கினார்கள்….. கந்தசாமிக்கு அதில் விருப்பமில்லை….. ஆனால் தந்தையின் ஒற்றை பார்வையில் வாய் திறக்கவில்லை, திறத்தாலும் அவன் சொல் அந்த நிமிடத்தில் எடுபடவில்லை.

விக்ரமினால் முத்துசாமியிடம் மறுக்க முடியவில்லை…. அதே சமயம் பழனிசாமியிடம்…. லதாவிடம்…… ஏன் அன்னகிளியிடம் கூட…. “எனக்கு விருப்பமில்லை”, என்றான்.

அன்னகிளி என்ன செய்வது என்று தெரியாமல் நின்றாள்…. ஏற்கனவே ஒரு திருமணம்….. அதை இந்த பிடிவாதம் பிடித்து வேண்டாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாள்…… இப்போது போய் தந்தை தேர்ந்தெடுத்த விக்ரமை வேண்டாம் என்று எப்படி சொல்லுவாள்….

ஆனால் அதை புரிந்து கொள்ளாமல் விக்ரம்….. “ஏய் மரியாதையா என்னை பிடிக்கலைன்னு சொல்லிடு! உனக்கு ஹெல்ப் பண்ண போய் என்னை மாட்டி விட்டுடாத!”, என்று மிஞ்சினான்…. கெஞ்சினான்…….

ம்கூம்…… அன்னகிளி அசையவில்லை….. அவள் மட்டுமல்ல  யாரும் அசைவதாக காணோம் என்றவுடன்…. முத்துசாமியிடமே சென்று, “இது சரிவராதுங்க மாமா!”, என்று நாசூக்காக மறுப்பை தெரிவித்தான்.

“ஏன் விக்ரம்? நீயும் என் பொண்ணை தப்பா நினைக்கிறியா!”, என்று அவர் கேட்ட நேரம் அங்கே அன்னகிளியும் மரகதமும் கூட இருக்க…… அன்னகிளியின் ஓய்ந்த தோற்றத்தையும் பார்வையும் பார்த்தவனால் மறுக்க முடியவில்லை.

“எரும மாடு உயிரை எடுக்கறா….. இவளை வெச்சிக்கவும் முடியலை……  விடவும் முடிய மாட்டேங்குது…..”, என்று அன்னகிளியை நினைத்த அடுத்த நொடி மனம்……

“ஐயோ சாஷா………”, என்று நினைக்க தோன்றியது….. “சாஷா….. என்றால் கூட அவளுக்கு பிடிக்காதே……. அவளுக்கு தமிழச்சி என்றால் தான் பிடிக்கும்….. ஐயோ என் தமிழச்சி…..”,

மனம் பதறி நிற்க…… ஒன்றுமே செய்ய முடியவில்லை விக்ரமால்…

அவனை அறிந்த, தெரிந்த……. அவனின் தமிழச்சியையும் தெரிந்திருந்த லதா….. எதையும் செய்ய விடவில்லை. 

மாலையே சொந்த பந்தங்களுக்கு எல்லாம் அழைப்பு விடுத்து…… அடுத்த நாளே ஊரில் இருந்த சிவன் கோவிலில் திருமணம் நடந்து……. அன்றே திருமணத்தையும் பதிவு செய்தனர்.

எப்படியோ செய்தி தெரிந்த வினோத்…… பதிவு திருமணம் முடிந்து வெளியே வரும் போது….. சரியாக அங்கே வந்தவன்….

“நீங்க இவளை கல்யாணம் பண்ணிக்கறதுக்காக தான் இப்படி செஞ்சீஞ்ங்களா….. பணம் வேணும்னா இவளை கல்யாணம் பண்ணினா எவ்வளவு கிடைக்குமோ அதை நான் குடுத்திருப்பேனே ….. அதுக்காக சதி செஞ்சு என் கல்யாணத்தை கெடுத்துட்டீங்களே….. என் காதலை சேர்த்து வெக்கறேன்னு சொல்லி இப்படி செஞ்சிடீங்களே”,  என்று ஏதோ பணத்திற்காக விக்ரம் அன்னகிளியை திருமணம் செய்தது போல எல்லோர் முன்னும் பேசினான்.    

கந்தசாமி விக்ரமை முறைத்த முறைப்பிற்கு அளவே இல்லை……. அன்னகிளியும் விக்ரமை, “நீ இப்படி சொன்னாயா”,  என்பது போல பார்த்தாள்……

விக்ரம் வினோத்தை மறுக்கவும் இல்லை…. மற்றவர்களுக்கும் விளக்கம் சொல்லவில்லை…… “வினோத்….. இவ என் மனைவி…. முதல்ல அதை ஞாபகம் வை…… இன்னொரு தடவை நீ இவளை பார்க்க கூடாது…… அவ இவ ன்னு பேசின.. திரும்ப பேச வாய் இருக்காது”, என்றான்.    

விக்ரம் பதில் கொடுத்த விதத்தில் அருகில் இருந்த உறவுகள் திருப்தியாகிவிட…. அன்னகிளி குழம்ப…… கந்தசாமி மட்டும் விக்ரம் தான் இத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் என்பது போல நம்பத் துவங்கினான்.    

Advertisement