Advertisement

அத்தியாயம் பதினைந்து :

விக்ரம் பழனிசாமியிடம், “கொஞ்ச நாளைக்கு அன்னகிளியை கார்ல கொண்டு போய் விட்டுட்டு நீங்களே கூட்டிட்டு வந்துடுங்க மாமா”, என்றான்.

அவ்வளவு சீக்கிரத்தில் வினோத் விலகிக் கொள்வான் என்று விக்ரமிற்கு தோன்றவில்லை. எத்தனை பேரை பார்க்கிறான்…. வினோத்தின் முகத்தில் தெரிந்த தீவிரம் அவனுக்கு சற்று சஞ்சலத்தை கொடுத்தது.

திரும்பவும் பஸ்ஸில் அன்னகிளியை பின் தொடர வாய்ப்பிருக்கிறது என்று கணித்த விக்ரம்…. பழனிசாமியை கல்லூரி கொண்டு போய் விட சொல்லவும்..

“ஏன்?”, என்று பழனிசாமி கந்தசாமி இருவரும் கேட்கவும்..

“நம்ம பொண்ணுக்கு பிடிக்கலைன்னு சொல்லியிருக்கோம், ஏதாவது பொண்ணுகிட்ட பேச முயற்சி பண்ணினா… ஒரு முன்னெச்சரிக்கையா”, என்றான்.

“என்ன? என்ன? வந்து பேசுவானா?”, என்று அண்ணன்கள் இருவரும் ஏகத்திற்கும் கோபப்பட….

“நிச்சயமா சொல்ல முடியாது, நம்ம கவனமா இருக்கலாம்னு சொன்னேன்”, என்றான்.

அன்னகிளியிடமும் தனியாக……. “இனிமே வினோத் பின்னால வந்தா உங்கண்ணன் கிட்ட சொல்லிடு….. சௌமிக்காக யோசிக்காத…… ஆனா மாதிரி ஆகட்டும்… சரியா!”, என்று தனியாக பேசினான். 

விக்ரம் தனியாக ஏதோ அன்னகிளியிடம் பேசுவதை பார்த்த கந்தசாமி… “என்ன?”, என்று வந்து நின்றான்….

“ஐயோ! இவன் இருப்பது தெரியாமல் பேசி விட்டேனே! இவன் வேறு நோண்டி நோண்டி கேட்பானே!”, என்றிருந்தது.

அதற்கு தகுந்த மாதிரி ஏதோ விசாரணை செய்வது போல கந்தசாமி கேட்கவும்….. “இவங்க பிரச்சினையில நான் ஏன் தலை வைக்கணும்! நல்லதுக்கே காலமில்லை! யார் பின்னாடி யார் சுத்துனா எனக்கென்ன? யார் யாரை கல்யாணம் பண்ணிகிட்டா எனக்கென்ன?”, என்று தான் நினைக்க தோன்றியது.

“கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க சொன்னேன்!”, என்று விக்ரம் சொல்லவும்…..

“எதுக்கு நீ இவ்வளவு சொல்ற…. அவங்க பொண்ணு கேட்டாங்க நாங்க குடுக்க மாடோம்ன்னு சொல்லிட்டோம்….. அவ்வளவுதானே….. பொண்ணுன்னு இருந்தா நாலு பேர் கேட்க தான் செய்வாங்க! அதுக்கு எதுக்கு இவ்வளவு ஜாக்கிரதை”, என்றான்.

வினோத் பின் தொடர்ந்தது கந்தசாமிக்கு தெரியாது…… விக்ரம்மும் அன்னகிளியும் ஒரே மாதிரி நினைத்து இப்போது எதற்கு பிரச்சனையை அதிகப்படுத்திக் கொண்டு என்று சொல்லவில்லை.

அப்போதும் விக்ரம் அந்த புறம் நகர்ந்ததும்… “உங்களுக்கென்ன பாப்பா இவனோட பேச்சு……. இப்படி தனியால்லாம் பேசாதீங்க…. ஏன் தனியா மட்டுமென்ன இவனோட பேச வேண்டிய அவசியமேயில்லை…… சொந்தக்காரங்கன்னு எல்லோரையும் வீட்டுக்குள்ள விட்டுகிட்டு இந்த அண்ணி நம்ம உயிரை எடுக்கறாங்க!”, என்று கந்தசாமி சொல்லியது விக்ரமின் காதில் நன்கு விழுந்தது….

கேட்டதும் மனதிற்கு கஷ்டமாக இருந்தது விக்ரமிற்கு….. “எத்தனை வருடங்களாக என்னை இவன் பார்க்கிறான்…… ச்சே! ச்சே! என்ன மாதிரி பேசுகிறான்… என்றாவது அந்த பெண்ணை நான் பார்த்ததுண்டா? பேசியதுண்டா….? அவளின் நல்லதிற்கு தானே சொன்னேன்……”, என்றிருந்தது.

“இனிமேல் இங்கே வரவே கூடாது….. ஏதாவது விஷேஷம் என்று அக்கா அழைத்தால் மட்டுமே வரவேண்டும்”, என்று நினைத்துக் கொண்டான்.

கந்தசாமியிடம் அன்னகிளி, “அண்ணா ஏனுங்க இப்படி பேசறீங்க! அவரும் நம்ம வீட்ல ஒருத்தர் மாதிரி தானுங்களே! அண்ணி காதுலையோ அவர் காதுலையோ விழுந்தா அவங்களுக்கு மனசு கஷ்டமா இருக்கும்! இப்படி பேசாதீங்க….!”, என்று பதில் சொல்வதும் காதில் விழுந்தது தான். 

ஆனாலும் விக்ரமின் மனது சமாதானம் ஆகவில்லை….. “யாரோ எப்படியோ போகட்டும்! நமக்கு என்ன?”, என்று அன்று இரவே ஊருக்கு கிளம்பிவிட்டான்.                 

மாதம் ஒரு முறை எப்படியும் விக்ரம் ஊருக்கு வருவான்…. அந்த மாதம் வரவில்லை… “ஏன் விக்ரம் வரலை…….. பிரபா உன்னை பார்க்கணும்னு சொல்றான்”, என்று லதா வருந்திக் கூப்பிடவும்…..

“அக்கா கொஞ்சம் வேலை இருக்கு! அதுவுமில்லாம…… எக்சாம்கும் படிக்கணும்”, என்றான்…. அப்போதிருந்தே எல்லா பரீட்சையும் எழுதிக்கொண்டிருந்தான் விக்ரம்……. யு பீ எஸ் சீ….. டீ என் பீ எஸ் சீ…. லா போஸ்டிங் சமந்தமாக எக்ஸாம் என்று…. ஒன்றையும் பாக்கி வைக்கவில்லை.

“ஒரு நாள் வாடா…. ஒன்னும் படிப்பு கெடாது…….. எனக்கும் உன்னை பார்க்கணும் போல இருக்கு…. சௌமியும் சொல்லிட்டே இருந்தா….. அதுவுமில்லாம மூணு மாசத்துல அவளுக்கு தாலி பிரிச்சு கோர்கணும்! அது பத்தியும் பேசணும்!”, என்று லதா சொல்லவும்…..

அதிகம் அவனால் மறுக்க முடியவில்லை…..

“நைட் கிளம்பி காலை சென்று…… மறுபடியும் அங்கிருந்து நைட் கிளம்பி காலை வந்துவிடலாம்….. தங்கும் வேலை வேண்டாம்…….”, என்று நினைத்தவன்….. “வர்றேன் அக்கா”, என்றான்.

ஒரு புதனன்று காலை விக்ரம் கிளம்பி கோவை வந்து ட்ரெயின் விட்டு இறங்கிய போது மணி காலை ஆறு தான்…. அந்த நேரத்தில் சௌமி வீட்டிற்கு வேண்டாம் பிறகு அவளை பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து….. நேரே லதாவின் வீட்டிற்கு சென்றான்.

வினோத் இந்த ஒரு மாதமாக அன்னகிளியை பார்க்க எத்தனை முறை முயன்றும் முடியவில்லை…… வீட்டிலிருந்து அண்ணன்களில் யாராவது கொண்டு வந்து விடுவர்…. பிறகு அவர்களே கூட்டிக் கொண்டு சென்று விடுவர்.

அவளுடைய வீட்டிற்கும் போக முடியாது…. பெண்கள் கல்லூரி….. அங்கேயும் உள்ளே போய் பார்க்க முடியாது.

வினோத் தவித்து போனான்….. எதிலும் கவனம் செல்லவில்லை, அவன் கவனம் முழுவதும் அன்னகிளி மட்டுமே…….. அவன் எடுத்த முடிவு இத்தனை நாட்களாக மனதில் தீவிரம் அடைந்து கொண்டே இருந்தது….

தாலி கட்டிவிட்டால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது…… அவளுக்கும் தன்னோடு வாழ்வதை தவிர வேறு வழி கிடையாது என்று நினைத்தான்….

அந்த புதன் காலையில் அவனும் முடிவெடுத்து….. சௌமியிடம் போய் நின்றான்……

“சௌமி! ப்ளீஸ்! ஒரு ஒரு தடவை நான் அன்னகிளிக்கிட்ட பேசிப் பார்க்கிறேன்…. ப்ளீஸ்! ப்ளீஸ்!”, என்று சௌமியிடம் கெஞ்ச….

“பேச தானே போகிறான்!”, என்று நண்பனை நம்பி அவன் சொன்னதை செய்ய ஒத்துக் கொண்டாள்.

“அவ காலேஜ் போ….. அங்கயிருந்து ஏதாவது ரீசன் சொல்லி அவளை பக்கதுல இருக்குற கோயிலுக்கு கூட்டிட்டு வா…. அங்க வெச்சி ஒரு தடவை பேசிப் பார்க்கிறேன்”, என்று சொன்னான்.

வினோத் எதுவும் வரம்பு மீறி செய்வான் என்று சௌமி கனவிலும் நினைக்கவில்லை….

வினோத் சொன்னபடி காலையில் அன்னகிளி கல்லூரி வரும் முன்பே… கல்லூரிக்கு உள்ளே சென்று…. அன்னகிளி வருவது தெரியுமாறு நின்று கொண்டாள்.

பழனிச்சாமி தான் அன்று அவளை கல்லூரியில் இறக்கி விட்டான். இதற்குள் விக்ரம் கூட சௌமியாவின் வீட்டிற்கு கிளம்பிக் கொண்டிருந்தான். “நான் அன்னகிளியை விட போறேன்! எங்களோடயே வந்துடு விக்ரம்!”, என்று பழனிசாமி கூப்பிட்டதற்கு கூட…

“இவளோடு போனால் அவ்வளவு தான்! நான் என்னவோ இவள் பின்னால் சுற்றுவது போல கந்தசாமி பேசுவான்!”, என்று நினைத்தான் விக்ரம்…. அதுவுமில்லாமல் அவனுக்கும் அன்னகிளியுடன் போக விருப்பமில்லை…. “எனக்கு கொஞ்ச நேரம் ஆகும் மாமா! நீங்க போங்க!”, என்றுவிட்டான்.   

பழனிச்சாமி இறக்கி விட்டவுடன் உள்ளே வந்துகொண்டிருந்த அன்னகிளியிடம் சௌம்யா செல்லவும்…..

அவளை அங்கே பார்த்த அன்னகிளிக்கு அதிர்ச்சி..

“இங்கே எங்கக்கா நீங்க?”, என்று கேட்டாள்.

“உன்னை பார்க்க தான் அன்னம்!”, என்று சௌமி சொல்லவும்……

“என்ன விஷயம்?”, என்றாள் மிகவும் ஜாக்கிரதையான குரலில் அன்னக்கிளி…..

“ஒரு தடவை வினோத் உன்னை பார்த்து பேச இஷ்டப்படறான்….. உனக்கு நிஜமாவே இஷ்டமில்லையா இல்லை வீட்ல அப்படி சொல்றாங்களான்னு அவனுக்கு சந்தேகம்….”,

“உன் எண்ணம் என்னவோ நீயே நேரா ஒருதடவை சொல்லிடேன்….. ஆனா வினோத் ரொம்ப நல்லவன், உனக்கு ரொம்ப பொறுத்தம்”, என்றும் சொல்ல….

“எனக்கு இஷ்டமில்லை! நீங்களே சொல்லிடுங்க!”, என்று சௌமி சொன்னதை காதில் வாங்காமல் அன்னகிளி சொல்லிச் செல்ல……

“ப்ளீஸ்! ஒரு தடவை நீயே சொல்லிடு….. செத்து போறேன், அது இதுன்னு பேசறான்….”, என்று அன்னகிளியிடம் அதையும் இதையும் கிட்ட தட்ட கால் மணிநேரம் பேசி அவளின் மனசை இளக்கி….

“ஜஸ்ட் அஞ்சு நிமிஷம்”, என்று சொல்லி அவளை அருகில் இருந்த ஒரு கோவிலுக்கு அழைத்து சென்றாள் சௌமி.      

ஒரு மாதிரி பயத்திலும் பதட்டத்திலும் தான் சென்றாள் அன்னகிளி…. கல்லூரியை விட்டு வெளியே வந்த பிறகு பதட்டம் இன்னும் அதிகமாகிவிட்டது. “அக்கா! எனக்கு பயமாயிருக்கு! நான் திரும்ப போறேன்! நீங்களே சொல்லிடுங்க!”, என்றாள்.

“ஒன்னும் பயமில்லை வா! நான் கூட இருக்கேன்ல!”, என்று அன்னகிளி தைரியம் சொல்லி நண்பனுக்காக அழைத்துப் போனாள்.                

அதிக கூட்டமில்லை கோவிலில்… சிறிய கோவில்…. கடவுள் சன்னிதானத்தின் முன் வினோத் நின்றிருந்தான்……

சௌம்யா முன் செல்ல பின் தொடர்ந்தாள் அன்னகிளி…..

இருவரும் வருவதை பார்த்துக் கொண்டிருந்த வினோத்……. சௌமியாவும் அன்னகிளியும் அருகில் வந்ததும்…..   அன்னகிளியின் அருகில் வந்தான்.

அவனிடம் எப்படி பேசி புரியவைப்பது என்பது போல அன்னகிளி பார்க்க…… என்ன நடக்கிறது, ஏது நடக்கிறது என்று உணரும் முன்பே…. கையில் வைத்திருந்த பொன் சங்கிலியில் கோர்க்க பட்டிருந்த தாலியை அன்னகிளியின் கழுத்தில் வினோத் அணிவித்தான்.

ஒரு நிமிடம் அன்னகிளிக்கும் ஒன்றும் புரியவில்லை…. பார்த்துக் கொண்டிருந்த சௌமிக்கும் ஒன்றும் புரியவில்லை……. கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலியை பார்த்த அடுத்த நிமிடம் உச்ச பட்ச அதிர்ச்சியில் கால்கள் துவள அன்னகிளி அப்படியே மடிந்து அமர்ந்துவிட்டாள்.

ஒன்றுமே ஓடவில்லை அவளுக்கு……

என்ன ஒரு ஏமாற்றுத்தனம் ?????

“என்ன வினோத் இப்படி பண்ணிட்ட?”, என்று சௌமி தான் கத்தினாள்…

தங்கள் பெற்றோர் இறந்த பின் தங்களை அரவணைத்து ஆதாரித்த குடும்பம்….. அவர்களின் நிழலில் இருந்த ஒரே காரணத்தினால் எந்த பெரிய பிரச்சனையும் அவளையோ விக்ரமையோ அணுகியது இல்லை…… தங்களை பார்த்துக் கொண்ட வீட்டினரின் பெண்….. அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்ற நினைப்பில் அழுகை வந்தது….

விக்ரம் அங்கே லதாவின் வீட்டில் தான் இருக்கிறான் என்பது தெரிந்து உடனே அண்ணனுக்கு அழைத்து விவரம் சொன்னாள்….. விக்ரம் அப்போது சௌமியின் வீட்டிற்கு தான் வந்து கொண்டிருந்தான். அவர்கள் சொன்ன இடத்திற்கு அருகில் தான் பஸ் வந்துகொண்டிருந்தது.

சௌமி அழுகையோடே விவரம் தெரிவிக்கவும் பதறி…… எந்த இடம் என்று கேட்டு அங்கே விக்ரம் விரைய…….

இங்கே வினோத் தன் அப்பா அம்மாவிற்கு, அண்ணனுக்கு என்று அவனே தொலைபேசியில் அழைத்து விவரம் தெரிவித்தான்…… அவர்களும் ஒரு பக்கம் கிளம்பி வந்தனர்.

தகவல் தெரிந்தவுடனே விக்ரம் பழனிசாமியிடம் இப்படி என்று சொல்லிவிட்டான்….. அப்போதுதான் அன்னகிளியை கல்லூரியில் விட்டு திரும்ப வந்து வீட்டிற்குள் கால் வைத்திருந்த பழனிசாமியும் உடனே கந்தசாமியிடமும், முத்துசாமியிடமும் சொல்ல அவர்களும் பதறி கிளம்பி வந்தனர்.

ஆனால் அருகில் இருந்ததால் எல்லோருக்கும் முன் விக்ரம் அந்த இடத்திற்கு வந்து விட்டான். அவன் பார்வையில் முதலில் பட்டது மடங்கி அமர்ந்திருந்த அன்னகிளி தான்.

வினோத் அன்னகிளியிடம் பேச முயற்சித்துக் கொண்டிருந்தான். அவள் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள்.

இரண்டொருவர் நின்று பார்ப்பதும் போவதுமாக இருந்தனர்…..  

சௌமி விக்ரமை பார்த்ததும் பதறி அருகில் ஓடி வந்தாள்….. “அண்ணா!”, என்று அழைக்கவும்…..

விக்ரம் முதலில் கேட்டது, “இங்கே அவ எப்படி வந்தா?”, என்பது தான்……..

“நான் தான் கூட்டிட்டு வந்தேன்!”, என்று சௌமி சொல்லி முடிக்க கூட இல்லை….. விக்ரம் அடித்த அடியில் தூர போய் விழுந்தாள்.

சரியான அடி…… “அம்மா”, என்று சௌமி கத்திய கத்தலில் தான் அன்னகிளி தெளிந்து சுற்றுப் புறத்தையே பார்த்தாள்….

“அண்ணா! எனக்கு சத்தியமா தெரியாதுண்ணா! வினோத் இப்படி பண்ணுவான்னு எனக்கு தெரியாதுண்ணா!”, என்று சௌமி அழுகையோடு சொல்லவும்…… அப்போதும் விக்ரமிற்கு தங்கை செய்து வைத்த வேலையில் ஆத்திரம் அடங்கவில்லை……… எழுந்து நின்ற சௌமியாவை மீண்டும் கன்னத்தில் அறைய…..

“அவளை ஏன் அடிக்கறீங்க?”, என்று வினோத் இடையில் வரவும்…..

“எல்லாம் உன்னால தாண்டா நாயே! தாலியாடா கட்டுவ நீ!”, என்று அவனையும் ஓங்கி ஒரு அடி வைத்தான். 

விக்ரமிற்கும் மனது முழுக்க பயம் இருந்தது…. முதலிலேயே அன்னகிளியின் வீட்டில் இந்த வினோத் பின் தொடர்வதை தெளிவாக கூறியிருக்க வேண்டுமோ… இப்போது நான் மறைத்தது தெரிந்தால் என்ன என்ன பிரச்சனை வருமோ…. இவன் வேறு இப்படி செய்து விட்டானே என்று பயமாக இருந்தது.

இரு வீட்டிலும் அவனின் உடன் பிறப்புக்கள் வேறு இருக்கின்றனர்….. பயமாக இருந்தது.       

அந்த இடத்தில் சற்று கூட்டமும் கூட ஆரம்பித்தது….

கூட்டம் கூடுவதை பார்த்தவன்…. அந்த பதட்டத்திலும், “நீ இங்க இருந்து போ சௌமி….. நீதான் இவளை கூட்டிட்டு வந்தன்னு யாருக்கும் தெரியக் கூடாது! போ! என்ன காரியம் பண்ணியிருக்க தெரியுமா?”, என்று அவசரமாக அவளை வெளியே போக சொல்லி அன்னகிளியின் அருகில் போனான்.  

விக்ரம் சௌமியாவிடம் பேசியதை அன்னகிளியும் கேட்டுக் கொண்டு தானிருந்தாள். “நடந்த அநியாயம் எனக்கு! அப்போதும் தங்கையை தானே பார்க்கிறான்!”, என்று விக்ரமின் மேல் அந்த நிமிடம் வெறுப்பு பொங்கியது.

சௌமி அப்போதும் தயங்கவும்….. “நிக்காத போடி!”, என்று அவளை விக்ரம் விரட்டினான்.

சௌமி தான் அழுதுகொண்டே போனாள்… அன்னகிளி அழவெல்லாம் இல்லை… கோபம் ஆத்திரம் எல்லாம் பொங்கியது….. எழுந்து நின்றாள்.   

அன்னகிளி அப்போது தான் எழுந்து நிற்கவும்….. அடி வாங்கிய வினோத்……. “அண்ணா நீங்க இதுல தலையிடாதீங்க….. நான் தாலி கட்டிட்டேன்! இனிமே அவ என் மனைவி! நீங்க இதுல தலையிடவேண்டிய அவசியமில்லை…… அவங்க வீட்டு ஆளுங்க கேட்டா நான் பேசிக்கறேன்!”, என்று வினோத் சொல்லவும்…

விக்ரமிற்கு கட்டுக்கடங்காத கோபம் வந்து…… “ஏண்டா……. தாலி கட்டினதும் இல்லாம தெனாவெட்டா பேசுவியா நீ…. உனக்கு பிடிச்சா இவளுக்கும் பிடிக்கணும்னு ஏதாவது அவசியமா? தாலியாடா கட்டுவ நீ!”, என்று வினோத்தை துவைத்து எடுத்தான்.

கூட்டம் கூடி நின்றவர்கள் வேடிக்கை பார்த்தனர்…. யாரும் விலக்கி விடவில்லை….. “இனிமே அவ என் மனைவி……”, என்ற வினோத்தின் வார்த்தைகள் அவளின் காதுகளில் ஒலித்த நிமிடத்தில் இருந்து பித்து பிடித்தது போல உணர்ந்தவள்….. வினோத் அடிவாங்குவதை பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றாள்.

வினோத்தால் திரும்ப அடிக்கவே முடியவில்லை…… அதற்கான சந்தர்ப்பமே விக்ரம் கொடுக்காமல் பின்னி எடுத்துக் கொண்டிருந்தான்.

அப்போது வினோத்தின் பெற்றோரும் மனோஜும் வந்துவிட்டனர்……. விக்ரமிடமிருந்து வினோத்தை பிரித்து எடுப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

மனோஜ் விக்ரமை பிடித்து தூர இழுத்து நிறுத்திக் கொண்டான்…. இல்லையென்றால் நிச்சயம் வினோத்தின் அப்பா விக்ரமை அடித்து இருப்பார். தன் மகனை பார்த்த அவருக்கு பொறுக்க முடியவில்லை…… முகமெல்லாம் வீங்கி… சட்டையெல்லாம் கிழிந்து….

“நீ யாருடா என் பையனை அடிக்க….. எதுவா இருந்தாலும் பொண்ணோட குடும்பம் கேட்கட்டும் நாங்க சொல்லிக்கறோம்…… உன்னை யாருடா என் பையன் மேல கையை வைக்க சொன்னா!”, என்று அப்போதும் விக்ரம் அருகில் ஆவேசமாக வரவும்….

மனோஜ் தான் இடையில் புகுந்தான்…..

“ஏண்டா….. உன் பொண்டாட்டியோட அண்ணன்னு பாசம் பொங்குதா?”, என்று மனோஜையும் வினோத்தின் அப்பா கேட்க…..

“அப்பா! நம்ம பையன் தப்பு பண்ணியிருக்கான்!”, என்று நிதர்சனத்தை மனோஜ் விளக்க முற்படவும்….

“இருக்கட்டும்டா…… நம்ம கிட்ட தான் சொல்லணும்! இவன் யாரு என் பையன் மேல கையை வைக்க….. ஒன்னுமில்லாத வெறும் பய! என் பையனை எப்படி அடிச்சிருக்கான் பாரு!”, என்று கட்டுக்கடங்காத ஆவேசத்தோடு பேசிய அவர்….

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அன்னகிளியை பார்த்து…. “தாலியை வாங்கிட்டு அந்த பொண்ணு அமைதியா நிக்குது…. இவனுக்கு என்னடா வந்துச்சு”, என்று பொங்கவும்…….

அந்த வார்த்தையில் முற்றிலும் சுரணை வரப்பெற்ற அன்னகிளி…… கொஞ்சம் கூட யோசிக்கவேயில்லை…… நிமிட நேரத்தில் வினோத் அவள் கழுத்தில் போட்ட தாலியை கழட்டி …. வினோத்தின் அம்மா கை பிடித்து நிறுத்திக் கொண்டிருந்த வினோத்தின் மேல் தூக்கி எறிந்தாள்.  

அவள் தூக்கி எரியும் போது சரியாக அவளின் அண்ணன்களும் தந்தையும் உள்ளே நுழைந்தனர்.

அன்னகிளி தாலியை கழற்றி வினோத்தின் மேல் தூக்கி எரிந்ததை அங்கிருந்த அனைவரும் பார்த்து அசந்து நின்றனர். முகத்தில் அவ்வளவு ஆவேசம் அன்னகிளிக்கு….. அப்போதும் அழுகையில்லை…… ஆவேசத்தோடு கத்தவில்லை… இப்படியாகிவிட்டதே கதறவில்லை…..     

கந்தசாமி தான் ஓடி வந்து தங்கையின் அருகில் நின்றான்…. அப்போதும் அன்னகிளிக்கு ஒன்றும் தோன்றவில்லை.

வினோத்தை பார்த்து முறைத்துக் கொண்டு நின்றாள்…. 

முத்துசாமி அருகில் வந்து நின்று, “என்னங்க பாப்பா நடந்துச்சு!”, என்று கேட்டது தான் தாமதம்……. அவரின் தோள் சாய்ந்து கதறிவிட்டாள்…. “அப்பா!”, என்று தான் சத்தம் வந்தது அதற்கு மேல அவளால் பேசவே முடியவில்லை.

மகள் அழும் போதே நிலைமையை கணிக்க முயன்றார் முத்துசாமி…. ஒரு தகப்பனாக கோபம், இயலாமை, ஆத்திரம் என்று ஒரு சேர அவரை தாக்கி கொண்டு இருந்தது.

தான் இருக்க தன் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலைமையா…… தகப்பன் என்று தான் பிறகு மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு சுத்துவதில் அர்த்தமே இல்லாதது போல உணர்ந்தார். 

வினோத்தின் தோற்றம் அவன் வாங்கியிருந்த கடுமையான அடிகளை காட்டியது….. விக்ரம் தான் அடித்திருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டார்.

சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று அன்னகிளியின் குடும்பத்தினருக்கு தெரியவில்லை…… வினோத் தான் வேண்டிய மட்டும் அடிகளை வாங்கியிருந்தான்… அவனால் நிற்க கூட முடியவில்லை…… விக்ரம் அடித்திருந்த அடியில், அன்னகிளி வீசியடித்த தாலியில் ஒரு அரை மயக்க நிலைக்கு போய் கொண்டிருந்தான்.  

வினோத்தின் பாரத்தை தாங்க முடியாமல்… அவனின் அம்மா ஒரு சத்தம் கொடுக்க…… வினோத்தின் தந்தையும் மனோஜும் தான் விரைந்து போய் அவனை தாங்கி பிடித்தனர்.        

“நீங்க எப்படி பாப்பா இங்க வந்தீங்க! இவன் கிட்ட எப்படி தனியா மாட்டுனீங்க….! நான் தானுங்களே உங்களை காலேஜ்ல இறக்கி விட்டேன்!”, என்று பழனிசாமி அன்னகிளியிடம் கேட்டான்.

“நீங்க தனியா வரவும் தானே! இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து போச்சு! ஏன் பாப்பா வந்தீங்க…..?”, என்று பழனிசாமி தோண்டி துருவவும்.   

விக்ரமின் இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கே கேட்டது……. அன்னகிளி என்ன சொல்வாளோ என்பது போல அவளையே விடாமல் பார்க்க…

அன்னகிளியும் அவனை தான் பார்த்தாள்……..

விக்ரமின் கண்கள் அவளை கெஞ்சியது…… சௌமியை சொல்லிவிடாதே என்று….    

அதற்குள் முத்துசாமி பழனிசாமியை அதட்டினார்….. “அவன் செஞ்சதுக்கு நம்ம பொண்ணை நம்மளே கேள்வி கேட்போமா….. அவனை என்ன பண்ணலாம்…. அதை சொல்லுங்கடா”, என்று கர்ஜித்தார்.      

விட்டால் அவர் வினோத்தை கொன்றே போட்டுவிடுவார் போல தோன்றியது…. 

 

Advertisement