Advertisement

அத்தியாயம் பதினான்கு :

வினோத் ஏறக்குறைய அன்னகிளியின் மேல் பைய்தியமாகவே இருந்தான்…. அன்னகிளிக்கு தன்னை பிடிக்குமா பிடிக்காதா என்ற எண்ணமே இல்லை.

ஏனென்றால் செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்தவன்….. இதுவரை கேட்டது எல்லாமே கிடைத்திருக்கிறது….. நினைத்தது எல்லாம் நடந்திருக்கிறது.

அதுவுமில்லாமல் அன்னகிளிக்கு தன்னை பிடிக்காமல் போகக் கூடும் என்ற நினைப்பு சிறிதும் அவனுக்கு இல்லை. அவனிடம் எதுவும் குறை என்று பார்த்தால் ஒன்றும் கிடையாது தான்.

பெண்கள் விரும்பும் ஹேண்ட்சம் லுக் உடையவன்…… படித்திருந்தான்…… நல்ல வசதி……. நல்ல குணமுடையவன்…. எந்த கெட்ட பழக்கமும் கிடையாது…… மிகுந்த செல்வம் இருந்தாலும் அந்த கர்வம் சிறிதுமின்றி அடுத்தவரை மதித்து  நடப்பவன்.

குடும்பமும் பாரம்பர்யமான குடும்பம்….  பெண்ணை  பெற்றவர்கள் யாராய் இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு பெண் கொடுக்கவே விரும்புவர்.

ஆனால் வினோத்திற்கு புரியவில்லை…. பிடித்தம் என்பது இதையெல்லாம் மீறியது என்று.  

வினோத்தும் அன்னகிளியின் பார்வை தன் மேல் பட…. அடிக்கடி திருமண விஷயங்கள் பேசுவதற்கென்று என்று லதா வீட்டிற்கு வர போக இருந்தான்.

அந்த மாதிரி திருமண பத்திரிகை அடித்ததை கொடுக்க வினோத் லதாவின் வீட்டிற்கு வந்திருக்க…….. விக்ரம் வினோத்துடன் இருந்த சிறிது நேரத்திலேயே  அவனின் கண்கள் அன்னகிளியை தேடுவதை கண்டுகொண்டான். இதேதடா புது பிரச்சனை என்று விக்ரமிற்கு தான் கவலையாக போய் விட்டது.

அப்போதும் வினோத்தை அவன் தப்பாக எடுக்கவில்லை…. “என்ன வினோத்? என்ன நடக்குது?”, என்று விக்ரம் நேரடியாக கேட்டே விட்டான்.

வினோத்தும் தயங்கவில்லை, “எனக்கு அன்னகிளியை பிடிச்சிருக்கு அண்ணா! ஐ லவ் ஹெர்!”, என்று சொல்லியும் விட்டான்…..

சௌம்யாவின் தோழன் என்பதால் வினோத்தும் அவளை போல விக்ரமை அண்ணா என்று தான் அழைப்பான்.

“நீங்க தான் எங்க கல்யாணத்தை நல்ல படியா நடத்திக் கொடுக்கணும்”, என்ற கோரிக்கையையும் முன் வைத்தான்.

விக்ரமிற்கு இது நடந்தால் ஆட்சேபனை ஒன்றுமில்லை. வினோத் நல்ல பையனே… தன்னுடைய தங்கையை அந்த வீட்டில் கொடுக்கும் போது அன்னகிளியை மட்டும் வேண்டாம் என்றா சொல்லுவான்.

ஆனால் இது அவன் முடிவல்லவே…. வினோத் மிகப் பெரிய குடும்பத்தை சேர்ந்த பையன், மறுக்க காரணங்கள் இல்லையென்றாலும்…. அவன் வேறு ஜாதி…. அதனால் முத்துசாமியும் அவன் குடும்பத்தினரும் ஒத்துக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது.

அதுவுமில்லாமல் இப்போது தான் பிளஸ் டூ எழுதியிருக்கும் பெண் அன்னகிளி….. அவளுக்கு இப்போது அவளின் வீட்டில் திருமணம் செய்வார்களா என்றும் தெரியாது.

விக்ரமும் யோசிக்கவில்லை….. அன்னகிளிக்கு வினோத்தை பிடிக்குமா இல்லையா என்று. 

“இப்போ எதுவும் அவசரப்படாத  வினோத்! முதல்ல உங்கண்ணன் சௌமி கல்யாணம் முடியட்டும்……  நான் லதா அக்கா கிட்ட பேசறேன்…. அன்னகிளிக்கு எப்போ கல்யாணம் பண்ண போறாங்க என்ன ஏதுன்னு மெதுவா விசாரிக்கறேன்….?”,

“ஏதாவது வாய்ப்பிருக்கான்னு பார்க்கிறேன்… இருந்தா சொல்றேன்….. நீ உங்க வீட்ல பேசி முறையா உங்கப்பாவை அன்னகிளி அப்பா கிட்ட பேச சொல்லு……. அதுவரைக்கும் இந்த மாதிரி பார்க்கறது எல்லாம் வேண்டாம் வினோத்…. அவங்கண்ணனுங்க பார்த்தாங்க நீ தொலைஞ்ச”, என்றான்.

“சரி! சரி!”, என்று நல்லபிள்ளையாக தான் தலையை ஆட்டினான் வினோத்.

காதல் அடக்க கூடியதோ….. அடங்க கூடியதோ கிடையாது…. 

திருமணம் வரை ஏதோ ஒரு சாக்கு வைத்து அன்னகிளியை கண்ணால் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் திருமணத்தில் விக்ரமிற்கு தான் அதிக பதட்டம்… வினோத் ஏதாவது பார்வையாலோ பேச்சாலோ அன்னகிளியின் மேல் உள்ள ஆர்வத்தை காட்டி விடுவானோ என்று.

விக்ரம் சொல்லும் அறிவுரைகளை கேட்டாலும்…… திருமணத்தில் அன்னகிளி எந்த இடத்தில் இருக்கிறாளோ அதற்கு அருகில் இருக்குமாறு வினோத் பார்த்துக் கொண்டான்.  

இவ்வளவு தீவிரமாக ஒருவன் பார்க்கும் போது அன்னகிளிக்கு எப்படி தெரியாமல் இருக்கும். வினோத்தின் பார்வையில் தன் மேல் உள்ள ஆர்வத்தை பார்த்த அன்னகிளிக்கு ஒரு பதட்டம் வந்தது. வினோத் அப்படி பார்ப்பது அவளுக்கு பிடிக்கவில்லை.

வினோத் இருக்கும் இடத்தை விட்டு ஒதுங்க ஆரம்பித்தாள். தன்னை பார்த்தால் அன்னகிளியின் கண்களில் தோன்றும் பயந்த மருண்ட பார்வை….. இன்னும் வினோத்தை அவளின் பால் பித்தாக்கியது.

திருமணம் முடிந்த பிறகு அன்னகிளியை பார்க்க வழியில்லாமல் தவித்து போனான் வினோத்…..

விக்ரம் அவனுக்கிருந்த சில பல மனப்போராட்டங்களில் வினோத்தை பற்றியோ அவன் அன்னகிளியை விரும்பியது பற்றியோ மறந்தே போனான். திருமணம் முடிந்து சென்னை போனவன்… போனவன் தான்.

தன்னுடைய கடமையாய் நினைத்த அவனின் தங்கையின் திருமணம் நல்லபடியாக முடிந்ததில் மிகுந்த ஆசுவாசத்தில் இருந்த விக்ரமை வேறு நினைவுகள் முழுதாக ஆட்கொண்டு இருந்தன.   

அன்னகிளி என்ற பெண் அவனின் ஞாபகத்தில் இல்லை. அன்னகிளியிடம் விக்ரம் பேசாவிட்டாலும்…. அவளின் பத்துவயதில் இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் பெண்.. இந்த எட்டு வருடமாக அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான். அதனால் எப்போதும் அன்னகிளியின் மேல் அவனுக்கு அக்கறை உண்டு.   

அதுவுமில்லாமல் இப்போதைக்கு விக்ரமின் வீடு என்று பார்த்தால் லதா அக்காவின் வீடு தானே. அந்த வீட்டில் இருக்கும் பெண் அவன் வீட்டு பெண் தானே. அந்த பாசம் எப்போதும் விக்ரமினுள் இருக்கும்.  

வினோத்தின் தீவிரத்தை விக்ரமும் குறைத்து மதிப்பிட்டு விட்டான்.    

இதற்கிடையில் சௌமியாவிடம் பேச்சுக் கொடுத்து… அன்னகிளி எந்த காலேஜில் சேர்ந்திருக்கிறாள், எப்படி போகிறாள் என்ற விவரங்களை எல்லாம் வினோத் கண்டுகொண்டான்.

மிகவும் நெருங்கிய தோழமை சௌமியாவிற்கும் வினோத்திற்கும் இடையில்…..  நண்பனுக்குள் புதிதாக ஏதோ ஒரு மாற்றம் என்று கண்டுகொண்டாள் சௌம்யா.

அதை தன் கணவன் மனோஜிடமும் பகிர்ந்து கொண்டாள்.  சௌமியாவும் நிறைய பேச்சுக் கொடுத்து விஷயத்தை வாங்க முற்பட….. இப்போது புதிதாக ஒரு ஆசை முளைத்திருந்தது வினோத்தினுள், அன்னகிளியிடம் காதலை சொல்லி பதிலுக்கு அன்னகிளியையும் காதல் சொல்ல வைக்க வேண்டும் என்பது.

அதுவரை இனிமேல் யாரிடமும் சொல்வதில்லை என்று முடிவு செய்தவன்…. “ஐ அம் இன் லவ் சௌமி…… ஆனா பொண்ணு யாருன்னு சொல்ல மாட்டேன்….. கொஞ்ச நாள் வெயிட் பண்ணு சொல்றேன்”, என்றான்.

சௌமியாவும் அது அன்னகிளி என்று கண்டாளா என்ன….. யாரோ ஒரு பெண் என்று அலட்சியமாய் இருந்துவிட்டாள்.

அன்னகிளி தினமும் அவளுடைய ஊரிலிருந்து….. கோவையில் இருக்கும் ஒரு புகழ் பெற்ற மகளிர் கல்லூரிக்கு பஸ்சில் போய் வந்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்தவன்……

தினமும் அவளுடைய ஊருக்கு முன் இருக்கும் பஸ் ஸ்டாபிற்கு காலையில் வந்து……. அவள் ஏறும் முன்னே பஸ்சில் ஏறிவிடுவான்…. அடுத்த ஸ்டாப்பில் அன்னக்கிளி ஏறுவதற்காக அவன் கண்கள் மனம் உடம்பு என்று மொத்தமும் பரபரத்துக் காத்திருக்கும்.

காலேஜ் வரை பின் செல்வான்…… மாலையும் அதுவே தொடரும் காலேஜில் அவள் ஏறும் பஸ்சில் ஏறுபவன் அவளின் ஊர்வரை வந்து அந்த ஸ்டாப்பில் இறங்காமல் அடுத்த ஸ்டாப்பில் இறங்கிவிடுவான்.

அதனால் அன்னகிளியின் அண்ணன்களுக்கோ அவளுடைய ஊரில் யாருக்கும் தெரியாது போனது. யாருக்காவது தெரிந்திருந்தால் உடனே அன்னகிளியின் வீட்டினருக்கு தகவல் பறந்திருக்கும். 

முதல் இரண்டு மூன்று நாட்கள் அன்னகிளி கவனிக்கவில்லை…… அதன் பிறகு தான் கவனித்தாள்….. கவனித்த பிறகு முழுவதும் பதட்டம் ஏறிக்கொண்டது…..

அசல் என்றால் உடனே அண்ணன்களிடம் சொல்லியிருப்பாள்…. ஆனால் சொந்தமாக வேறு போய்விட்டான் எப்படி சொல்வது என்று தெரியவில்லை. ஒரு மாதிரி பயத்தில் இருந்தாள்.

சில நாட்கள் பார்த்தவள் கல்லூரி பக்கத்தில் வைத்து வினோத்திடம், “இப்படி என் பின்னாடி வராதீங்க”, என்று தைரியமாக சொல்லிவிட்டாள்.   

“ஹப்பா! என்னோட பேசிட்டியா….. ம்! எப்போ தான் என்கிட்டே பேசுவேன்னு பார்த்துகிட்டே இருந்தேன்… நானா பேச வந்தாலும் நீ பயந்து பார்க்குற பார்வையில எனக்கு பேச்சு வர மாட்டேங்குது!”, என்றான்.

“நான் என் பின்னாடி வராதீங்கன்னு சொன்னேன்…”, என்றாள் இன்னும் பயந்த குரலில்.

“ஏன்? ஏன் வரக்கூடாது? எனக்கு உன்னை பிடிச்சிருக்கு! ஐ லவ் யூ!”, என்றான்.

வினோத் பெரியவர்கள் மூலமாக பேசியிருந்தால் கூட திருமணம் நடந்த பிறகு அவன் காதல் கை கூட வாய்ப்பிருந்திருக்கும். கண்டிப்பாக வீட்டில் யாரை சொல்கிறார்களோ அந்த மாப்பிள்ளையை தான் அன்னகிளி திருமணம் செய்திருப்பாள்.

ஆனால் அங்கே தான் வினோத் தவறு செய்தான். காதல் அது இது என்பது எல்லாம் அன்னகிளிக்கு பிடிக்காத வார்த்தை என்று தெரியாமல் போய்விட்டது.    

அன்னகிளி, ஷி இஸ் எ கேர்ள் ஆப் ஹெர் ஓன் மாரல்ஸ்… அவளுக்கு இந்த காதல் பிடிக்காது….. அவளின் வீடு, அவளின் ஆட்கள் இது மேல் பற்று அதிகம்….. சௌம்யாவின் வேற்று இன திருமணமே அவளுக்கு அவ்வளவாக ஒப்புதல் இல்லாத ஒன்று….. சிறு வயதில் இருந்தே அப்படி ஒரு எண்ணப் போக்கில் வளர்ந்து விட்டாள்.

அதற்காக அடுத்தவர் செய்யும் போது அதற்கு எதிர்ப்பு என்பது மாதிரி மனநிலை எல்லாம் இருக்காது….. அவளுக்கு அது சரி கிடையாது…. அவளால் அதை செய்ய முடியாது.  

அன்னகிளி பேச தான் மாட்டாள், அதற்காக சிந்திக்க கூடவா மாட்டாள்.

அன்னகிளி அதிகம் பேசாமல் அமைதியாக இருப்பதை பார்த்து.. பெரிதாக அன்னகிளி எதுவும் செய்யக்கூடும் என்று யாரும் அன்னகிளியை பற்றி நினைக்க மாட்டர்.   

வினோத் அன்னகிளியின் வாயால் காதலை கேட்க விரும்பி அவளை  பின்தொடர…. இந்த செய்கைகள் எல்லாம் அன்னகிளிக்கு அவன் மேல் ஒரு பிடித்தமின்மையை கொடுத்தது.

ஆனால் அவளுக்கு தைரியமாக பயமில்லாமல் பேச முடியவில்லை. “ப்ளீஸ்! என் பின்னாடி வராதீங்க! எனக்கு இதெல்லாம் பிடிக்கலை!”, என்று சொல்லி மளமளவென்று கல்லூரிக்குள் சென்று விட்டாள்.  

அது ஆரம்பத்தில் காதலை கேட்கும் ஒரு பெண்ணிற்கு இருக்கும் தயக்கமாக எடுத்துக் கொண்டான்.

மாலையும் வினோத் நிற்க….. ஒரு மாதிரி எரிச்சல் ஆனவள்….. திரும்பவும் அவனிடம் பேச முற்படவில்லை….. நீ நின்றால்  எனக்கென்ன நிற்காவிட்டால் எனக்கென்ன என்ற மனப்பான்மையை கொண்டு வர விரும்பி…… வினோத்தை அலட்சியப் படுத்தி விட்டு போய் விட்டாள்.

ஆனால் தினமும் வினோத் தொடரவும், பேச முயற்சி செய்யவும், சமயம் கிடைக்கும் போது இவள் பேசினாலும் பேசாவிட்டாலும் வினோத் பேசவும், அன்னகிளியின் பொறுமை பறந்தது.

வீட்டில் சொன்னால் லதா அண்ணிக்கும் அவரின் தங்கை வீட்டிற்கும் பிரச்சனையை வந்துவிட்டால் என்ன செய்வது…… கந்தசாமி அண்ணனுக்கு தெரிந்தால் மிகவும் பிரச்சனையாகிவிடும் என்று அவளுக்கு தெரியும்.

முடிந்தவரை பிரச்சனையை வராமல் எப்படி இதை சமாளிப்பது என்று அன்னகிளி தவித்துக் கொண்டிருந்த போது…. விக்ரம் ஊருக்கு வந்தான்.

யாரும் இல்லாத சமயம் பார்த்து அன்னகிளி அவளாக விக்ரமிடம் பேச வந்தாள். “என்ன?”, என்று கடுமை காட்டி விக்ரம் கேட்கவும்…. அன்னகிளிக்கு அவன் கேட்ட தொனியில் அவனிடம் விஷயத்தை சொல்லவே விருப்பம் இல்லை…

இருந்தாலும் இப்போதைக்கு அவனை விட்டால் சொல்ல ஆளில்லை….

“அதுங்க”, என்று தயங்கி தயங்கி ஆரம்பித்தவள்….. “அந்த வினோத் டெய்லி என்னை ஃபாலோ பண்றாருங்க…. எனக்கு அது பிடிக்கலீங்க…..”, என்றாள்.

“ஷ்! இதை எப்படி மறந்தேன்!”, என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்ட விக்ரம்… “நான் பார்த்துக்கறேன்!”, என்று அன்னகிளியிடம் ஒரு வார்த்தை மட்டுமே சொன்னான்.

அன்னகிளியும் அதை நம்பி விட்டுவிட்டாள்…..

விக்ரம் வினோத்தை தொலைபேசியில் அழைத்து, “என்ன இது? இப்படி செய்யற! இது  சரி கிடையாது வினோத்!”, என்று சத்தம் போட…

“அண்ணா! நான் உங்க கிட்ட தானே முதல்ல சொன்னேன்….. நீங்க சௌமி கல்யாணம் முடிஞ்சவுடனே என்னன்னு பார்க்கிறேன்னு சொன்னீங்களே… நீங்க தான் நடத்திக் கொடுக்கணும்!”, என்று கேட்கவும்…

வினோத் வேறு இனம் என்பதை தவிர நல்ல வரன், அன்னகிளிக்கும் பொருத்தமாய் இருப்பான் என்று தோன்றியதால்…. அன்னகிளியின் வீட்டில் பேச முடிவு செய்தான்.

அதற்கு முன் வினோத்திடம், “நீ முதல்ல உங்க அப்பா அம்மாகிட்ட பேசிட்டு சொல்லு”, என்றான்.

வினோத்தும் உடனே வீட்டில் பேசிவிட…. அவர்களும் அன்னகிளியை, அவளின் வீட்டின் குடும்ப பாரம்பர்யத்தை, வசதியை பார்த்திருந்ததால் மறுத்து பேசவில்லை. அதுவுமில்லாமல் வினோத் பிடிவாதம் பிடித்தால் பிடித்ததுதான்.

செல்ல மகன் பெற்றோருக்கும் அண்ணனுக்கும் மறுக்க மனம்வரவில்லை….. அவன் குடும்பம் உடனே சம்மதம் கொடுத்தது. சௌமி உடனே விக்ரமிற்கு போன் செய்து விஷயத்தை தெரிவிக்க…..       

அன்னகிளி சொன்னது, “அவரு பின்னால வர்றது பிடிக்கலீங்க”, என்பது மாதிரி தான் விக்ரமிற்கு தோன்றியது….. வினோத்தை பிடிக்கவில்லை என்று அன்னகிளி சொன்னதாக விக்ரமிற்கு தோன்றவில்லை.          

அவன் பக்குவமாக லதாவிடம் விஷயத்தை சொல்லி வினோத்திற்கும் அவனின் குடும்பத்திற்கும் அன்னகிளியை பிடித்திருக்கிறது என்று சொல்லி……. அன்னகிளியின் தந்தையிடம் பேச சொல்லி….. அவருக்கு சம்மதம் என்றால் வினோத்தின் வீட்டில் இருந்து திருமணம் பேச வர காத்துக் கொண்டிருப்பதாக சொன்னான். 

சௌம்யாவை திருமணம் செய்து கொடுத்த போது…. வினோத்தின் வீட்டுப் பெருமை, புகழ், நல்ல தன்மை, செல்வ செழிப்பு என்று அத்தனையும் அன்னகிளி வீட்டினர் பார்த்து இருந்தது தான். 

வீட்டில் முத்துசாமியிடம் பக்குவமாக விஷயம் சொல்லப்பட…..

வயது பதினெட்டு என்றாலும்… அன்னகிளி ஒரு வளர்ந்த பெண்ணாக தோன்றியதால்…. திருமணம் செய்து வேண்டுமாலும் படிக்கட்டும் என்ற எண்ணம் முத்துசாமிக்கும் இருந்தது.

அதுவுமில்லாமல் கந்தசாமிக்கும் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர்.

நல்ல இடம் என்றாலும் வேறு இனம்….. அதனால் தன் அங்காளி பங்காளிகளுடன் பேசி அப்புறம் முடிவெடுக்கலாம் என்று நினைத்து அவர்களையெல்லாம் கூப்பிட்டு வீட்டில் வைத்து பேசினார்.

அப்போது தான் கந்தசாமியும் மெதுவாக அன்னகிளியிடம் விஷயத்தை பகிர்ந்தான்…..

அன்னகிளிக்கு மிகுந்த அதிர்ச்சி…… “என்னது கல்யாணம் பேசவா? வேண்டாமான்னு…..?  முடிவெடுக்க போறாங்களாண்ணா?”, என்றாள் அதிர்ந்த குரலில்.

“இல்லைங்க பாப்பா! அவங்க வீட்ல கேட்கறாங்க! நம்ம சொன்னா தானுங்க வருவாங்க! இல்லைன்னா வரமாட்டாங்க……”, என்றான் கந்தசாமி உடனே தங்கையின் அதிர்ந்த குரலை பார்த்து.

“எனக்கு பிடிக்கலீங்கண்ணா! இது வேண்டாம்!”, என்றாள் பட்டென்று உடனே……

“இல்லீங்க பாப்பா! உடனே எதுவும் முடிவு இல்லீங்க….. நம்ம வீட்டு பெரியவங்க எல்லாம் பேசிட்டு இருக்காங்க……”,

“அப்போ போங்க! இப்போவே சொல்லுங்க! எனக்கு இதுல இஷ்டமில்லீங்க!”, என்றாள்.

அப்போது பார்த்து லதா வந்தவள், “ஏன் அன்னம்? வினோத் நல்ல பையனாமே! விக்ரம் தான் சொன்னான்… நல்ல குடும்பம்! இப்போ நம்ம சௌமி கல்யாணத்துல பார்த்தோம் தானே!”, என்று அவளின் பங்கிற்கும் பேச……

இப்போது வினோத்தை விட விக்ரம் மேல் கோபம் வந்தது அன்னகிளிக்கு….

“நான் என்ன சொன்னேன்! இவன் என்ன செய்து வைத்திருக்கிறான்!”, என்பது மாதிரி…. சற்றும் யோசிக்கவில்லை அன்னகிளி…. எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கும்போதே…..அவளே கூடத்திற்கு வந்து…..

“எனக்கு இதுல இஷ்டமில்லீங்கப்பா, இதை பத்தி நாம பேசவேண்டாமுங்க….. இப்போ கல்யாணம் வேண்டாம், நான் முதல்ல டிக்ரீ முடிக்கறேன்……. அதுக்கப்புறம் நீங்க யாரை சொன்னாலும் நான் கல்யாணம் பண்ணிக்கறனுங்க……. ஆனா இந்த ஆளுங்க வேண்டாம்….. எனக்கு வேற ஆளுங்க வேண்டாம்! நம்ம ஆளுங்க தான் வேணும்!”, என்று தெளிவாக சொன்னாள்.

அப்போதும் வினோத் வேண்டாம் என்று தான் சொன்னாள்….. வீணாக பிரச்சனை வேண்டாம் என்று வினோத் தன் பின்னால் தினமும் வருகிறான் என்று காட்டிக் கொடுக்கவில்லை.

இதை பற்றி விக்ரமிடம் முன்னேயே சொல்லியிருக்கிறாள் என்றும் சொல்லவில்லை.  

“நம்ம பாப்பாவே வேண்டாம்னு சொல்லுது! அப்புறம் எதுக்கு பேசிகிட்டு! வேண்டாம்னு சொல்லிடுவோம்!”, என்று அங்காளி பங்காளிகள் சொல்ல…..இந்த சம்மந்தம் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

விக்ரமும் அங்கே தான் இருந்தான். “இந்த எரும மாடுக்கு எவ்வளவு தைரியம்?  சபையில் வந்து இவ்வளவு தைரியமா பேசுது…. ஏன் வினோத்துக்கு என்ன குறைச்சல்….. அவனை விட இவளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்குமா?”, என்பது மாதிரி தான் விக்ரமின் எண்ணம் இருந்தது.

ஆனால் இனி அவன் செய்ய கூடியது இதில் ஒன்றுமில்லை…   

எல்லோரும் அவரவர் வீட்டிற்கு போனவுடன்….. விக்ரம் தனியாக இருந்த சந்தர்ப்பத்தில் அவன் முன் வந்து நின்ற அன்னகிளி……..

“நான் பார்த்துக்கறேன்னு சொன்னீங்களே! இது தான் நீங்க பார்த்துக்கறதுங்களா…. நான் தான் பிடிக்கலைன்னு சொன்னனுங்களே…… என்னை விட உங்களுக்கு அந்த வினோத் தான் முக்கியமுங்களா…. அவருக்காக இவ்வளவு செய்யறீங்க….”,  

“அப்போ நான் சொன்னது…… சௌமிக்கா லதாக்கான்னா இப்படி தான் பண்ணுவீங்களா….”, என்று கண்களில் கண்ணீரோடு மூக்கு விடைக்க அன்னகிளி விக்ரமை பார்த்து கேட்ட போது விக்ரமின் மனம் அசைந்து தான் போனது…

“சாரி……….”, என்று மனமுணர்ந்து கேட்டவன்…….. “வினோத் உன்னை ரொம்ப லவ் பண்றான், எனக்கு அவனை நல்லா தெரியும், நல்ல பையன்… உனக்கு நல்ல பொருத்தமா இருப்பான்னு தான் வீட்டில பேசினேன்….”, என்று தன்னிலை விளக்கம் கொடுக்கவும்….

“அவருக்கு பிடிச்சா? எனக்கு பிடிக்கணும்னு ஏதாவது கட்டாயமுங்களா!”, என்று அன்னகிளி கேட்ட போது விக்ரமினால் பதில் சொல்ல முடியவில்லை.

அன்னகிளிக்கு பிடிக்கவில்லை என்ற பதில் வினோத்தின் வீட்டிற்கு சொல்லப்பட….

எல்லாம் நல்ல படியாக நடந்து விடும் என்று நினைத்துக் கொண்டிருந்த வினோத் நிலைகுலைந்து போனான். வேறு எந்த பிரச்சனையை என்றாலும் சமாளிக்கலாம் பெண்ணுக்கு பிடிக்கவில்லை எனும் போது என்ன செய்வது.

விக்ரமும் அவனை நேரிலேயே பார்த்து…. “அவளுக்கு பிடிக்கலை வினோத்! இனிமே தொந்தரவு பண்ணாத! நானும் முடிஞ்சவரை ட்ரை பண்ணிட்டேன்… வீட்ல இருக்குறவங்களை கூட சம்மதிக்க வைக்க முடியும்! ஆனா பொண்ணுக்கு பிடிக்கலைங்கும் போது என்ன பண்ண முடியும்….”,

“அவ பின்னாடி போகாத! அவளுக்கு பிடிக்கலை! விட்டுடு!”, என்று சற்று ஸ்ட்ரிக்டாகவே சொன்னான்.   

என்ன அன்னகிளியை விடுவதா? அந்த நொடியில் வினோத்திற்கு அவன் உயிர் இருக்கும் வரை முடியாது என்று தான் தோன்றியது. 

மனம் குறுக்கு வழியில் யோசிக்க….. தாலி கட்டி விட்டால் எப்படியும் ஒத்துக்கொள்வாள் என்று அன்னகிளியை பற்றி தெரியாமல் அவனாக முடிவு செய்தான்….        

 

Advertisement