Advertisement

அத்தியாயம் பன்னிரெண்டு :

விக்ரம் வர பத்து நாட்கள் ஆகும் என்று சொன்னதையும் தாண்டி பதிமூன்று நாட்கள் ஆனது.

எஸ், அன்னகிளி தான் நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தாளே.

தினமும் இரவு சிறிது நேரம் விக்ரம் போனில் பேசுவான். அந்த சிறிது நேரம் என்பது மிஞ்சி போனால் ஐந்து நிமிடங்களே.

நிறைய பேசும் விக்ரமிற்கு போனில் எப்போதும் அதிக நேரம் பேசுவது பிடிக்காது. “அவசியம்னா கூப்பிடறேன், உனக்கும் அவசியம்னா மட்டும் கூப்பிடு…. சும்மா சாப்டீங்களா, தூங்கிணீங்களா, இப்படியெல்லாம் கேட்க போன் பண்ணக்கூடாது!”, என்று தெளிவாக முதல் நாளே அன்னகிளியிடம் சொன்னான்.

அதுவும் எப்போது இரவு வீட்டிலிருந்து சென்றவன்….. போய் சேர்ந்த உடன் கூப்பிடுவான், கூப்பிடுவான் என்று அன்னகிளி எதிர்பார்த்து இருக்க கூப்பிடவேயில்லை.

காலை பத்து மணிவரை பார்த்தாள்….. ம்கூம்! அதற்கு மேல் தாங்காது என்பதாக அவளாகவே விக்ரமிற்கு அழைத்தாள்.    

அவன் எடுக்கவேயில்லை. பிறகு பன்னீருக்கு அழைத்தாள்….. “அண்ணா! எங்கயிருக்கீங்கண்ணா”,

“தூத்துகுடில இருந்து கொஞ்ச தூரத்துல”, என்று ஒரு கிராமத்தின் பெயரை சொன்னார்.

“அவர் பிசியாங்கண்ணா”,

“ஆமுங்க அம்மணி……. எதையோ சுத்தி பார்க்க போயிருக்காங்க….. இங்க ஏதோ அடிதடி போல…… நான் இங்க நிக்கறனுங்க…..”,

“அவர் மட்டுமுங்களா?”, என்று அன்னகிளி சற்று கவலை தொனிக்க கேட்கவும்…

“என்னங்க அம்மணி இப்படி கேட்டுட்டீங்க…… அதெல்லாம் நிறைய பேர் இருக்காங்க…. கூட போலிஸ் அதிகாரிங்க இருக்காங்க… வேற அதிகாரிங்க இருகாங்க….. போலிஸ்காரங்களே ஒரு இருபது பேர் இருக்காங்க அம்மணி! ஒரு கவலையும் இல்லைங்க!”, என்றார்.

“அண்ணா!”, என்று இழுத்தாள் அன்னகிளி…..

“சொல்லுங்க அம்மணி…….”,

“அவர் வேலைல இருக்கும் போது அதிகம் பேச மாட்டாருங்க….. அப்பப்போ எங்க இருக்கீங்கன்னு நான் உங்களுக்கு போன் பண்ணி கேட்டுகட்டுமுங்களா”, 

“என்னங்கம்மணி நீங்க செய்ன்னு ஆர்டர் போடுங்க அம்மணி நானு செய்யறனுங்க… என்கிட்டே போய் தயங்கிகிட்டு”, என்று சொன்னார்.   

இரவு வரையும் விக்ரம் அழைக்கவில்லை… உறங்குமுன் தான் அழைத்தான். “எதுக்கு காலையில கூப்பிட்ட”, என்று விக்ரம் கேட்ட போது……..

“ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டீங்க!”, என்று அவளையும் அறியாமல் வாய் முணுமுணுத்தது.

“ஏய்! சத்தமா பேசுடி!”, என்று அவன் அதட்ட….

அமைதியாகிவிட்டாலும் கோபம் வந்தது அன்னகிளிக்கு…….

அப்போது தான் அவசியமில்லாமல் போன் பேசக் கூடாது என்று விக்ரம் லெக்சர் கொடுக்க… கடுப்பான அன்னகிளி…    

“அவசியம்னா எது? எந்த மாதிரி விஷயம்? எனக்கு எது அவசியமான விஷயம், எது அவசியமில்லாத விஷயம்னு தெரியாது!”, என்று அன்னகிளி தெளிவாக்க முற்படவும்…

அவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விக்ரம் முழிக்க…..

“அப்போ நான் உங்க கிட்ட என்ன என்ன பேசணும்? அதையும் நீங்களே சொல்லிடுங்களேன்!”, என்றும் கேட்டாள்……

விக்ரமிற்கு நிஜமாகவே என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“சரி, நான் வச்சிடறேன்!”, என்று அன்னகிளி சொல்லும்போது தான் அவளுக்கு கோபம் போல என்றுணர்ந்தவன்…….

“ஏய், கோபமாடி!”, என்றான்.

அன்னகிளி மெளனமாக இருக்கவும்…..       

“உன்னை சமாளிக்கறது கஷ்டம் தான் போல…..”, என்று விக்ரம் வெளிப்படையாக முணுமுணுத்தான்.

அப்போதும் அன்னகிளி அமைதியாகவே இருக்கவும்……

“சரி, நானே கூப்பிடறேன்”, என்று சொல்லி தினமும் ஒரு ஐந்து நிமிடம் பேசுவதை வழக்கமாக்கினான்.

அப்போதும் அன்னகிளிக்கு என்ன பேசுவது என்று தெரியாது…. அவன் தான் “சாப்பிட்டீங்களா, தூங்கிணீங்களா”, என்று கேட்க கூடாது என்று சொல்லியிருக்கானே.

ஆனால் அவன் சாப்பிடுவது அவளுக்கு தெரிய வேண்டி இருந்ததே… அவன் இரவில் சாப்பிடும் வஸ்து……

சற்று பயமாக இருந்த போதும் இரண்டாம் நாள் கேட்டே விட்டாள்….. “நேத்து நைட் என்ன சாப்பிட்டீங்க”, என்று.

“என்ன சாப்பிட்டேன்…?”, என்று விக்ரம் யோசிக்க முற்பட…..

“நான் நைட் டிஃபன் கேட்கலை”, என்றாள்…… அந்த புறம் அவள் கேட்க வருவது புரிந்து விக்ரமின் முகத்தில் புன்னகை…  

“ம், சாப்பிட்டேன்! ஆனா எப்பவும் சாப்பிடறதை விட ரொம்ப கொஞ்சம்…. வெளில இருக்கேன் இல்லையா! மீ, எனக்கு நானே கேர்ஃபுல்!”,  என்று விளக்கம் வேறு கொடுத்தான்.   

அன்னகிளி பதில் பேசாமல் இருக்கவும், “ஓகே பேபி! நாளைக்கு பேசலாம்!”, என்று போனை வைத்து விட்டான், அவள் மேலே எதாவது பேசிவிட்டால் என்ன செய்வது என்று.

அதன் பிறகு தினமும் ஐந்து நிமிடம் மட்டுமே பேசுவான்….. அங்கே ஒரு வாரம் ஆகிவிட அங்கேயிருந்து அப்படியே சென்னை…..        

 அவன் ஐந்து நிமிடம் பேசினாலும் பன்னீர் எப்போதும் அவனின் அப்டுடேட்டை அப்டேட் பண்ணிக்கொண்டேயிருப்பார்.

அதனால் விக்ரம் அதிகம் பேசாவிட்டாலும் அவன் என்ன செய்கிறான் என்று ரொம்பவும் அதிகமாக தெரியாவிட்டாலும்….. ஓரளவுக்கு அன்னகிளிக்கு தெரிந்தது.

எப்போதும் அவன் ஞாபகங்களே…. எப்படி தான் இப்படி ஆனோம் என்று அன்னகிளிக்கே தெரியவில்லை. இந்த கொஞ்ச நாட்களாக தான் அவனை பார்க்கிறோம்… இரண்டே நாட்கள் தான் இருந்திருக்கிறோம்…..

எப்படி இது சாத்தியம் என்பது அவளுக்கே புரியவில்லை.  தான் நிறைய விக்ரமை தேடுகிறோம் என்பது புரிந்தது…. இந்த தேடல் அவனுக்குள்ளும் இருக்கிறதா என்பது இப்போது அவளுக்குள் பெரிய கேள்வியாக இருந்தது. 

இத்தனை மன குழப்பங்களுக்கு நடுவிலும் கந்தசாமிக்கு பெண் பார்த்து முடிவாக வேண்டும் என்பதிலும் மிகவும் ஸ்திரமாக இருந்தாள்.

சொந்தத்திலேயே பெண் இருந்தது…… இவர்களுடைய வசதிக்கு பெண்வீட்டினர் குறைவு…….. மற்றபடி குறை சொல்ல ஒன்றுமில்லை……. பெண் மிகவும் சூப்பர், அப்படி ஒரு அழகு என்று சொல்ல முடியாவிட்டாலும் அழகாக இருந்தாள், படித்திருந்தாள், பேச்சுக்களும் மிகவும் மரியாதையாக பதவிசாக இருந்தது.

எல்லோருக்கும் பிடித்திருந்த போதிலும், வயது வித்தியாசம் அதிகம் என்று கந்தசாமி மிகவும் தயங்கினான்.

“எட்டு வயசு வித்தியாசமுங்க பாப்பா!”, என்றான்.

“நீங்க முப்பத்திரண்டு வயசு வரைக்கும் கல்யாணம் பண்ணாம இருந்தீங்கன்னா….. அது உங்க தப்பு! அதுக்காக முப்பது வயசுலையா பொண்ணை பார்ப்பாமுங்க…. அந்த பொண்ணு ஒன்னும் சின்ன பொண்ணல்லாம் இல்லீங்க, இருபத்தி நாலு வயசாகுதுங்க.. ரெண்டு டிகிரி முடிச்சிருக்குங்க, பீ எட் படிச்சிடிருக்குங்கண்ணா”, என்றாள்.

இருந்தும் கந்தசாமி தயங்கவும்…. “அண்ணா எனக்கும் அவருக்கும் கூட எட்டு வயசு வித்தியாசமுங்க”, என்று அன்னகிளி ஆரம்பிக்கவும்…….

“எனக்கொன்னுமில்லைங்க பாப்பா! அந்த பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கான்னு நல்லா தெரிஞ்சிகோங்க…. அவங்க வசதி  கொஞ்சம் கம்மி….. நம்ம வசதி……. அதை பார்த்து ஏதாவது சமாதனப்படுத்தி குடுக்க போறாங்க…. நீங்க பேசி தெரிஞ்சிக்கோங்க பாப்பா….!”, என்றான்.

“ஏன் அண்ணா? வசதி மட்டும் தான் நம்ம தகுதிங்களா? உங்களுக்கு என்ன குறைச்சலுங்க…..?”,

“ம்! தினமும் என் முகத்தை நான் கண்ணாடில பார்க்கறனுங்க பாப்பா… தலையில முடி கொட்ட ஆரம்பிச்சிடுச்சு!”, என்றான்.

“என்னால தானுங்களே உங்க கல்யாணம் தள்ளி போயிடுச்சுங்க…… இப்போ நீங்க இப்படியெல்லாம் பேசறீங்க”, என்று அன்னகிளி கண்கலங்கவும்……

ஒன்றுமே பேசாமல் வெளியில் சென்றவன்….. “அப்பா! நாள் குறிச்சிடுங்க! எனக்கு சம்மதம்!”, என்று சொல்லிவிட்டான்.    

அவனின் சம்மதம் கிடைத்த அடுத்த நிமிடம்….. மளமளவென்று வேலைகள் நடக்க…. விக்ரம் வருவதற்காக உறுதி செய்வதை தள்ளி வைத்தனர். மற்றபடி நாள் குறித்து மண்டபம் பார்த்து என்று எல்லா வேலைகளும் முடிந்து விட்டது…… பத்திரிகை அடிப்பது மட்டும் தான் பாக்கி…

அதுவும் லதாவிற்கு இப்போது எட்டு மாதம் என்பதால் திருமணத்தை ஒரே மாதத்தில் வைத்து விட்டனர்.

அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்க… அன்னகிளி விக்ரமை எதிர்பார்த்து இருந்தாள்.

இப்போதும் காலில் வெயிட் அதிகமாக் கொடுப்பதை தவிர்த்தாலும் யாருடைய உதவியும் இல்லாமல் நன்றாக நடந்தாள்.

விக்ரம் வருவதாக சொன்ன நாளில் திருமண நிச்சயத்தை வைத்திருந்தனர். இரவு கோவை வந்த விக்ரம்…… காலையில் அன்னகிளியின் வீட்டிற்கு வருவதாக சொல்லியிருந்தான்.

“நான் வீட்டுக்கு வரட்டுமுங்களா”, என்று அன்னகிளி அந்த இரவே வீட்டிற்கு வருவதற்கு கேட்டாள்..

“நானே வந்து கூப்பிட்டுக்கறேன், நாளைக்கு எப்படியும் வர்றேன் தானே!”, என்றுவிட்டான்.. 

விக்ரமை காணப் போகும் பரபரப்பு அன்னகிளியின் ஒவ்வொரு அணுவிலும் இருந்தாலும்….. அவளால் வெளிப்படுத்த முடியவில்லை.

அன்று நிச்சயம் என்பதால் வீடு முழுவதும் உறவுகள்…. நிச்சயதிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

வந்தவர்கள் எல்லோரும் அன்னகிளியிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருந்தனர்.. என்ன தான் வசதி வாய்ப்புகள் இருந்தாலும்…. அவசரத்தில் நடந்த அவளின் திருமணம்……. கணவனாக வந்த விக்ரமின் அன்றைய செல்வ நிலை…. பின்பு விக்ரமும் அவளை இங்கேயே விட்டு சென்றது…… எல்லாம் அவளை ஒரு பரிதாபத்திற்குரிய ஜீவனாகவே மற்றவர்களை பார்க்க வைத்தது.

இப்போது அவளின் கணவன் பெரிய பதவியில் இருக்கிறான்…. அவளையும் கூட கூடிச் சென்று விட்டான் என்பது பெரிய பேச்சாக இருக்க….. ஆள் மாற்றி ஆள் மாற்றி அவளிடம் தோண்டி துருவ……

எதையுமே சொல்லாமல் எல்லாவற்றையும் சொன்ன மாதிரி ஒரு தோற்றத்தை கொண்டு வர அன்னகிளி மிகவும் பிரயர்த்தனப்பட வேண்டி இருந்தது.     

நமது குடும்ப அமைப்புகளில் மிக முக்கியமானது இந்த உறவுகளின் பேச்சுகள்…. அவர்களின் வாயை அடைப்பது…. அது என்றுமே யாராலும் முடிந்திராத ஒன்று.

அன்னகிளி நிறைய அனுபவித்து விட்டாள்….. யாரும் அவளை பற்றி நிச்சயம் தவறாக பேசியதில்லை….. ஆனால் எப்போதும் அவளின் வாழ்க்கையை பற்றிய விமர்சனம் அடுத்தவர் பேசும்படியே இந்த நான்கு வருடங்களாக…… வினோத் அவளின் வாழ்க்கையில் புகுந்து குழப்பம் செய்ததற்கு பிறகு இருந்து கொண்டிருந்தது.

உண்மையில் இந்த நான்கு வருடமாக அவள் எந்த உறவினரின் விஷேஷத்திற்கும் சென்றதேயில்லை. அன்னகிளி அதிகம் பேசாவிட்டாலும் கோபம் அதிகம் வரும்… அது விக்ரமிடம் மட்டுமே விதிவிலக்கு. யாராவது ஏதாவது சொன்னால் அதையெல்லாம் பொறுத்துப் போக முடியாது என்றே எங்கும் செல்ல மாட்டாள்.

ஹாஸ்டலில் படித்துக் கொண்டிருந்ததினால் அதிகம் அது யாருக்கும் தெரியவில்லை….     

இன்று தன் கணவனுடன் இந்த நிச்சய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறாள் என்பது அவளுக்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது. காலையில் இருந்தே வீட்டில் பந்தி நடந்து கொண்டிருந்தது…. மாலை நாலு டு ஆறு நிச்சயம்…. பக்கம் தான் பெண்ணினுடைய ஊரும்….. அங்கே பக்கத்தில் இருந்த ஒரு கோயிலின் மண்டபத்தில் நிச்சயம்.

இன்னமும் காணோமே என்று அவள் எதிர்பார்த்துக் காத்திருக்க….. பதினோரு மணிவாக்கில் அழைத்த விக்ரம்… “கொஞ்சம் அவசர வேலை கோர்ட் வந்துட்டேன் அனு…… நீங்க போங்க, நான் வந்துடறேன்”, என்று சொல்லி இவள் பதில் சொல்லும் முன்பே போனை வைத்து விட்டான்.

இப்போ வந்துடுவார் என்று கேட்ட அத்தனை பேரிடமும் அன்னகிளி சொல்லி வைத்திருக்க…. விக்ரம் வராதது பெரிய ஏமாற்றமாக இருந்தது… அவன் வேலை புரிந்தது….. ஆனால் மாலையும் வர முடியாது போய் விட்டால் எல்லோர் முன்னிலையிலும் அவளுக்கு கீழிரக்கமாகி விடும்…… நினைத்த மாத்திரத்தில் உடனே அழுகையும் வந்தது. எல்லார் முன்னிலையிலும் அழுதுவிடக் கூடாது என்று மிகுந்த முயற்சி செய்து கட்டுக்குள் வந்திருந்தாள்.

இருந்தாலும் முகத்தில் இருந்த உற்சாகம் எல்லாம் போய் விட்டது. “என்ன அன்னம்?”, என்று லதா கேட்ட போது கூட……

“ஒன்னுமில்லைங்க அண்ணி!”, என்று விட்டாள்.

“இன்னும் விக்ரமை காணோம்”, என்று லதா சொன்னதற்கு…..

“அவர் நேர நிச்சயம் நடக்கற இடத்துக்கு வந்துடறாராம் அண்ணி! திடீர்ன்னு ஏதோ வேலைங்களாம்!”,  என்று அன்னகிளி சொல்லவும்……

அன்னகிளியின் முக வாட்டத்தின் காரணம் அறிந்த லதா…. “எதுவும் சொல்ல தான் மாட்டான்……. சொன்னா சொன்ன மாதிரி செய்வான்……. கண்டிப்பா வந்துடுவான்……”, என்று அவளை ஆறுதல் படுத்தினாள் லதா…..

அண்ணி தன்னை கண்டு கொண்டது அன்னகிளிக்கு ஒரு மாதிரி இருந்தது…

அன்னகிளியை உற்சாகப்படுத்த, “போ! போ! உன் வீட்டுக்காரன் வரும்போது இப்படி அழுது வடியாம கண்ணுக்கு குளிர்ச்சியா ஃப்ரெஷ் ஷா இருக்கணும்….”, என்று லதா கிண்டலிடிக்க…

“என்ற ஊட்டுகாரர், முதல்ல உங்களை தான் பார்ப்பாரு பாருங்களேன்”, என்று சொல்லி…… “வேணா பாருங்க பெட் வெச்சிக்கலாமுங்களா”, என்றாள்.   

“ஒன்னும் வேண்டாம்! இது தான் சாக்குன்னு நீ பாட்டுக்கு அழுது வடியாத! போ! போ! போய் என்ன சாரீ கட்டுறதுன்னு செலக்ட் பண்ணு!”, என்று விரட்டினாள்.  

ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு, “என்ன உடுத்துவது”, என்று அன்னகிளி அலசி ஆராய்ந்தாள்.

“எதையும் கொண்டு வரக் கூடாது என்று சொல்லிவிட்டான்…. இங்கே இருந்து ஏதாவது கிரான்ட் ஆக உடுத்தினாள் திட்டுவானோ…. ஆனால் மிகவும் சிம்பிள் ஆக இருந்தால் அவளின் பெற்றோர்களும் உடன் பிறந்தவர்களும் வருத்தப்படுவார்கள் என்ன செய்வது?”, என்று அமர்ந்திருக்க……

அத்தையை தேடி வந்த பிரபாகரன்….. “என்ன அத்தை இப்படி உட்கார்ந்து இருக்கீங்க! அங்க பாட்டி உங்களை தேடுறாங்க…….!”,  

“தோ வர்றேன்”, என்று அத்தை சலிப்பாக எழுந்திருப்பதை பார்த்த….. அவளின் ஆசை மருமகன், “என்ன அத்தை”, என்றான்.

“என்ன சாரி கட்றதுன்னு யோசிக்கறேன்…. எனக்கு தெரியலை, நீங்க ஒன்னு செலக்ட் பண்ணுங்க”,

“நானா?”,

“நீங்க எது செஞ்சாலும் உங்க மாமா திட்ட மாட்டாங்க….. மீ எஸ்கேப்புங்க….”, என்றாள்.

பிரபாகரன் இங்கி பிங்கி பாங்கி போட்டு அவளிடமிருந்த பட்டை அலசி ஒரு வழியாக ஒன்றை சொல்ல… “ஹப்பா”, என்றிருந்தது அன்னகிளிக்கு…. அதில் ஜரிகைகள் அதிகம் இல்லை, பார்டரும் சிறியதாக இருந்தது…. நாவல் பழ கலரில் இருந்தது.

“ஓகே தேங்க்யூ”, என்று அவனிடம் சொல்லி ஒரு வழியாக சேலை பிரச்சனையை முடித்தாள்… முகத்தில் வருத்தம் தெரிந்து அண்ணி விசாரித்ததற்கு பிறகு முகத்தில் எதுவும் தெரிந்துவிடாமல் இருக்க மிகவும் கவனமாக இருந்தாள்.

இந்த கந்தசாமி ஏதாவது கவனித்து என்ன? என்ன? என்று அன்னகிளியின் பின்னால் எண்ணத்தை சுழல விட்டால்….. இது அவனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம்……..

கூட பிறந்தற்காக அவர்கள் தன்னையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா என்ன…. முயன்று மனதை அமைதிபடுத்தினாள்.

மாலை மூன்று மணிக்கு தயாராகி வந்த போது…. பெரிய பிரச்சனையாக நகை பிரச்சனையை எழுந்தது….

அன்னகிளி கழுத்தில் இருக்கும் தாலிக் கொடியுடன் கைகளில் ஒரு வளவியுடன் நின்றாள்.

அவள் நகை அணியாத போது மரகததிற்கு அணிய விருப்பமில்லை…… “நீ இப்படி நகை இல்லாம நிக்கும் போது நான் மட்டும் பூட்டிகிட்டு நிற்பனா… வேண்டாம் பாப்பா!”, என்று விட்டார்.

இவர்கள் இருவரும் அணியாத போது லதா எங்கிருந்து அணிவாள்….. அவளும் எதையும் போடவில்லை.

இப்படியே எப்படி விஷேஷதிற்கு போவது என்று அன்னகிளி தான் தவித்து போனாள். பெண் வீட்டினர் மாப்பிள்ளையை பார்த்தாலும் முக்கியமாக வசதி வாய்ப்பை பார்த்தும் தான் பெண் கொடுப்பர்….. இப்படி வீட்டுப் பெண்கள் யாரும் ஒன்றும் அணியாமல் நின்றால்……..

ஏதாவது அவர்கள் வசதியில்லை என்று நினைத்து விட்டால் ஒரு வேலை திருமணத்தில் பிரச்சனை வந்துவிட்டால்….

கோபமாக வந்தது….. யார் மீது கோபத்தை காட்டுவது என்றும் தெரியவில்லை. ஆனால் இப்படியே ஒன்றுமில்லாதவர்கள் போல போய் சபையில் நிற்க முடியாது…. அம்மாவிடமும் லதாவிடமும் பல முறை பேசிப் பார்த்தாள்…. அவர்கள் ஒத்துக்கொள்ளவேயில்லை.    

வேறு வழியில்லாமல் விக்ரமிற்கு போன் செய்தாள்….. அவளின் நேரம் அவன் போனையும் எடுத்தான்..

“நான் நகை போட்டுக்கட்டுமுங்களா”, என்றாள்.

எடுத்தவுடனே அவள் இப்படி கேட்கவும் விக்ரமிற்கு ஒன்றும் புரியவில்லை…

“என்ன நகை?”, என்றான்…..

“அண்ணன் நிச்சயத்துக்கு இங்க வீட்ல என் நகை இருக்குறதை நான் போட்டுக்கட்டுமுங்களா….”,

“போட்டே ஆகணுமா!”,

“ம்! நான் போட்டா தான்……”, என்று அவள் ஆரம்பிக்கவும்….. “அம்மாவும் அண்ணியும் போடுவாங்க….”, என்று அன்னகிளி முடிக்கும் முன்னரே….

போனை விக்ரம் வைத்து விட்டான்…….. அவ்வளவு கோபம் வந்தது அன்னகிளிக்கு…… எல்லாவற்றையும் தூக்கி எறிய வேண்டும் போல…..

நான் என்ன எப்போது பார்த்தாலுமா இவருக்கு போன் செய்து கொண்டிருக்கிறேன்….. எவ்வளவு அலட்சியம்……..  

அண்ணன் திருமணம் இப்போது முக்கியம் என்பதால் அமைதியாக அம்மாவிடம் நகை போட்டுக் கொள்கிறேன் என்று சொல்லவும்….. அவர் சந்தோஷமாக எடுத்துக் கொடுக்கவும்….. வேண்டுமென்றே கழுத்திற்கும் கைகளுக்கும் மட்டுமன்றி….. ஒட்டியாணம்…… வங்கி….. நெத்தி சுட்டி என்று ஒன்று விடாமல் பூட்டிக் கொண்டாள்.

தன் மகளை பார்த்து திருப்தியான பிறகே….. மரகதம் தான் நககைகளை அணிய, அதன் பிறகே லதாவும் அணிந்தாள்.

அவர்கள் உறவுகளோடு நிச்சயம் நடக்கும் மண்டபத்திற்கு சென்று….. அங்கே விக்ரமை எதிர்பார்த்து எல்லாம் மெதுவாக நடக்க……. அப்பாவை தனியாக அழைத்தவள்….. “அப்பா நமக்கு நல்ல நேரம் தான் முக்கியமுங்க….. நீங்க அவரை பார்த்துகிட்டு லேட் பண்ணாதீங்க…. ஆக வேண்டியதை பாருங்க”, என்று சொல்லவும்……

நேரமும் போய்க் கொண்டிருப்பதால்……. அவர் வேலைகளை துரிதப்படுத்த…

திருமண பத்திரிக்கையை வாசித்து…….. பெண்ணையும் மாப்பிள்ளையையும் அமர வைத்து நலுங்க வைக்க ஆயத்தப் படுத்திக் கொண்டிருந்த போது தான்……. விக்ரம் வந்தான்.

அவன் வந்து இறங்கிய தோரணைக்கும்…. ஒரு காப்பாளர் வேறு அவனுடன் இருக்கவும்… அவன் பதவியை முன்னிட்டும் சபையில் ராஜ மரியாதை அவனுக்கு. 

அவனின் அக்காவை திருமணம் செய்து கொடுத்த நாளாக தெரிந்த உறவுகள் தான்…. புதியவர்கள் அல்ல….  அனைவரோடும் ஒரு புன்னகையோடும் இன்முகத்தோடும் மிகவும் அளவாக பேசிக் கொண்டிருந்தவன் கண்கள் மட்டும் அன்னகிளியை வலை வீசித் தேடின.  

சர்வலங்கார பூஷிதையாக மனைவியை பார்க்கவும்…… கண்கள் கோபத்தை பிரதிபலித்தது. அது கொடுத்த அழகு….. மண்டபத்திலேயே இருக்கும் பெண்களிலேயே அதிகமாக ஜொலித்த அவனின் மனைவியின் அழகு எதுவும் அவன் கண்களுக்கு தெரியவில்லை…. அவனுக்கு தெரிந்ததெல்லாம் அன்னகிளி அதிகப்படியாய் அணிந்திருந்த நகைகளே…….   

அதை பார்த்தும் பாராமல் அன்னகிளி பார்த்தாலும், அதை யோசிக்கவோ கவனிக்கவோ விடாமல் அவளுக்கு வேலைகள் இருந்தன.     

நலுங்க வைக்க…. சந்தன கிண்ணம்….. மஞ்சள் குங்குமம்…. அட்சதை என்று அதற்குரிய வெள்ளி பாத்திரங்களில் ஒரு வெள்ளி தாம்பாளத்தில் அன்னகிளி எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்…..

லதா கர்ப்பிணி ஆதலால் அவளை எதுவும் செய்ய விடாமல்….. “நீங்க உட்காருங்க அண்ணி!”, என்று சொல்லி எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.     

அதற்குள் பெண்ணின் வீட்டு பக்கத்தில் இருந்த ஒரு பெண்மணி…. “இந்த பொண்ணு புருஷனோட இல்லைன்னு கேள்வி….. ஏன் இந்த பொண்ணை எல்லா வேலையும் செய்ய விடறீங்க… யாராவது ராசியான கை இருந்தா விட வேண்டியதுதானே!”, என்று முணுமுணுக்கவும்…. அது இரண்டொருவர் காதில் விழுந்து பேச்சாகவும்….

ஒரு சிலர் இல்லை பொண்ணு புருஷனோட தான் இருக்கு என்று பேச….. விக்ரம் வந்ததை பார்த்திராத சிலர், “அப்படித்தான் சொல்றாங்க….. ஆனா அந்த பையன் காணோமே”, என்று பேச….

ஒரு விஷேஷம் என்றால் தங்களை முன்னிருத்திக்கொள்ள கொள்ள… எல்லாம் தெரிந்தது போல காட்டிக்கொள்ள…… இல்லையென்றால் வேண்டுமென்றே புரணி பேச….. ஏதாவது ஒரு வகையில் குழப்பம் செய்ய என்றே சில உறவுகள் இருப்பார்கள்….  

அதுவும் இப்படி ஒரு பெண் அழகாக, கண்ணை பறித்துக் கொண்டு, செல்வ செழிப்போடு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்க….. எல்லோரும் அவளுக்கு முக்கியத்துவம் வேறு கொடுக்க……. சில பெண்களுக்கு தானாக பொறாமை தோன்ற என்ன தவறு இவளிடம் கண்டுபிடிக்க முடியும் என்று ஆராய்வர்.

இங்கே அந்த மாதிரி ஏதோ ஒன்று நடந்தேறிக் கொண்டிருந்தது.    

பெண் வீட்டின் அம்மா வகை உறவே அன்னகிளியின் வீட்டினருக்கு உறவு முறை ஆகினர்…

பெண்ணின் தந்தை வீட்டினர் இவர்களுக்கு உறவு முறை வராது, அதனால் அன்னகிளியின் வீட்டு விவகாரங்கள் அவ்வளவாக தெரியாது…

அவர்களும் ஆளாளுக்கு பேச… ஒரு ஐந்து நிமிடத்தில் இடம் கசமுசா என்றானது.

“ஏம்மா, சொல்லிட்டே இருக்கோம்! மறுபடியும் மறுபடியும் நீயே எல்லாம் எடுத்து வெச்சிட்டு இருக்கியே!”, என்று அந்த பெண்மணி அன்னகிளிடம் கேட்டே விட….

இந்த வேலைகளில் இருந்ததால் அன்னகிளிக்கு ஒன்றும் புரியவில்லை…. “என்ன சொன்னீங்கம்மா?”, என்று அவள் புரியாமல் கேட்க…

“நீ செய்யாதம்மா, உங்க வீட்ல இருந்து வேற யாரையாவது செய்ய சொல்லு”,

“ஏனுங்க?”, என்றாள் அப்போதும் புரியாமல் அன்னகிளி…..

“என்னம்மா இதெல்லாம் விளக்கி சொல்லுவாங்களா, ஒரு வார்த்தை சொன்னா புரிஞ்சிக்கணும்”, என்று பெரிய மனுஷத் தன்மையோடு ஆரம்பிக்கவும்….

விஷயம் ஒரு மாதிரி புரிந்து…. மரகதமும் லதாவும் பதறிப் போனார். வீட்டு ஆண்களின் காதில் விழுந்தது அவ்வளவு தான்! அடுத்த நிமிடம் திருமணம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளே இருக்காது.

அப்போதும் அன்னகிளி, “இல்லைங்கம்மா…… அண்ணி அதிகமா குனிஞ்சு நிமிர முடியாதில்லீங்களா….. அதான் நான் செய்யறனுங்க”, என்றாள் பொறுமையாகவே.

“ஒரு தரம் சொன்னா உனக்கு புரியாது!”, என்று அந்த பெண்மணி சொல்லவும்… அந்த குரல் சற்று அதிகமாக ஒலித்து விட…… அந்த இடமே அமைதியாக… மண்டபம் முழுவதும் அமைதியானது.

உபசரிப்பில் இருந்த பெண்ணின் பெற்றோர்கள் என்னவோ ஏதோவென்று பதறி அருகில் வந்தனர்…

“என்ன? என்ன பெரியம்மா?”, என்று பெண்ணின் தந்தை வந்து அந்த பெண்மணியை கேட்க…

அந்தம்மாள் சாவகாசமாக, “அதொன்னுமில்லை! இந்த பொண்ணு அவ புருஷனோட சேர்ந்து வாழறதில்லையாமே…… கல்யாணத்துக்கு முன்னாடியும் இந்த பொண்ணுனால நிறைய பிரச்சனையாமே….. தாலியெல்லாம் கழட்டி வீசியிருக்காமே…….”,

எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த பேச்சுக்கள் மறையாதா?….. அன்னகிளி சிறிது சிறிது அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

“எல்லா வேலையும் இந்த பொண்ணு இழுத்து போட்டு செஞ்சா… நம்ம பொண்ணு நல்லா இருக்க வேண்டாமா…. அதான் வேற யாரையாவது செய்ய சொன்னேன்……. வசதியிருந்தா இந்த மாதிரி விஷயமெல்லாம் சரின்னு ஆகிடுமா……”,  என்று அது தன் கணீர் குரலில் சொல்ல…..

எல்லோருக்கும் கேட்கவோ புரியவோ இல்லையென்றாலும், பெரும்பான்மையினருக்கு கேட்டது புரிந்தது.   

விக்ரம், “என்ன இது?”, என்பது போல அப்போதுதான் விஷயத்தை க்ரகித்தான். அவனின் பார்வை முழுக்க அன்னகிளியை ஒரு பதட்டத்தோடு ஆராய்ந்தது.  

“இல்லையில்லை! யாரோ தப்பா சொல்லியிருக்காங்க…… அந்தம்மணி அவங்க ஊடுக்காரரோட தான் இருக்குங்க பெரியம்மா”, என்று பெண்ணின் தந்தை அந்த பெண்மணிக்கு விளக்கம் கொடுத்த போதிலும்…..

“அந்த பெண்மணியின் பேச்சை கேட்ட அடுத்த நிமிடம் கந்தசாமி,… “கிளம்புங்க போகலாம், இந்த சம்மந்தம் வேண்டாம்”, என்று வாசலில் போய் நின்றிருந்தான். முத்துசாமிக்கும், பழனிசாமிக்கும் கூட இந்த பேச்சிற்கு பிறகு இந்த சம்மந்தத்தை எப்படி தொடர்வது என்பது மாதிரி தான் இருந்தது.

“இந்த பேச்சை எல்லோர் முன்னும் கேட்பதற்கா இத்தனை தடவை பேசி அண்ணனை சம்மதிக்க வைத்தோம், இவரோடு வேறு சண்டை போட்டுக் கொண்டு இத்தனை நகைகளையும் மாட்டிக் கொண்டு நின்றோம்”, என்று நினைத்த அன்னகிளிக்கு….. அழுகை பொங்க கண்களில் நீர் பெருகியது.

பெண் வீட்டினர் சிலர் கந்தசாமியை சமாதானப்படுத்த ஓடினர்.  “பெரியம்மா வந்தீங்களா, சாப்டீங்களா, போனீங்களான்னு இருக்கணும்….. இப்படி அடுத்த பொண்ணுங்க மனசை நோக வைப்பீங்களா”, என்று பெண்ணின் தந்தை அதட்டிக் கொண்டிருந்தார்.   

அன்னகிளி அவளையும் மீறி திரும்பி விக்ரமை கண்களில் ஒரு இயலாமையோடு பார்த்தாள். பின்பு அந்த இயலாமை ஒரு கோபமாக மாறி அவனை பார்வையால் எரித்தாள்.

“நான்……. எனக்கு…….. இந்த பேர் உன்னால், உன்னை சேர்ந்த ஆட்களினால்….”,  என்று பார்வையாலேயே குற்றம் சாட்டி……… “நீ எனக்கு வேண்டாம், போ!”, என்று விக்ரமை பார்த்து பார்வையாலேயே உணர்த்தி……. அடுத்த நிமிடம் மண்டபத்தை விட்டு விடு விடு  என்று நடக்க…

“இரு பாப்பா! இரு! இரு!”, என்று அவளுடைய அப்பாவும், திருமணத்திற்கு முன் நின்ற அவளுடைய சித்தப்பாவும் ஏறக்குறைய பின்னால் ஓடினர்.  

விக்ரம் ஒரு நிமிடம் அன்னகிளியின் கோபம் அவளின் கண்களில் தெரிந்த செய்தியில் அசந்து நின்றுவிட்டான்.

Advertisement