Advertisement

அத்தியாயம் பதினொன்று :

காரிலேயே இருவருமே அமர்ந்திருப்பதை பார்த்து பழனிசாமி தான் முதலில் அருகில் வேகமா சென்றான்.

என்ன ஏதென்று கேட்காமல்….. “உள்ள வா விக்ரம்…”, என்று அவன் பக்கமிருந்த கார் கதவை திறக்க…..

“இல்லைங்க மாமா லேட் ஆச்சு…. ஒரு வேலையா நான் காலையில தூத்துகுடில இருக்கனும்….. வீட்ல இவ மட்டும் தனியா இருக்க வேண்டாமேன்னு கொண்டு விட வந்தேன்”, என்றான்.

பிறகு பொதுவாக, “லேட் ஆகுது……..”, என்று சொன்னவன் அமர்ந்திருந்த அன்னகிளியின் கையை ஆதரவாக பற்றி ஒரு அழுத்தம் கொடுத்தான். மனக்காயங்களை இருவருமே கிளறி விட்டு கொண்டனர். ஆனால் இன்னும் அதிகப்படுத்த விக்ரமிற்கு மனமில்லை.

அன்னகிளி திரும்பி விக்ரமை பார்க்கவும், “சாரி”, என்று சத்தம் வராமல் வாயை மட்டும் அசைத்து ஸ்நேகமாய் புன்னகைத்தவன்  “இறங்கு”, என்றான் கனிவாக…   

கார் கதவை திறந்து அன்னகிளி மெதுவாக இறங்க முற்படவும்…. இப்போது கந்தசாமி வேகமாக வந்து அன்னகிளியை கை பிடித்து இறக்கினான்.

கந்தசாமியை பிடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தவள், “அவரை இறங்கி வர சொல்லுங்க அண்ணா, ஒரு பத்து நிமிஷம் ஒன்னும் நேரம் ஆகாதுங்க”, என்று பழனிச்சாமியை நோக்கி  அன்னகிளி சொன்னாள்.

அருகில் வந்திருந்த முத்துசாமியும், மரகதமும், லதாவும் கூட விக்ரம் பேசியதை அன்னகிளி பேசியதை கேட்டனர்.

“வாங்க தம்பி!”, என்று அன்னகிளியின் அப்பாவும் அம்மாவும் கேட்டை விட்டு வெளியே வந்து வரவேற்றனர்.

சைரன் வைத்த காரை அக்கம் பக்கத்தில் ஓரிருவர் வந்து ஆவலோடு பார்க்கவும்…. தூரமோ கம்மியோ எப்படியும் உறவு முறை வரும்…… என்ன ஏதென்று அவர்களுக்குள்ளே பேசும் அபாயம் இருப்பதால்…..

“என்ற மருமகன்! நம்ம லதா தம்பி……. அன்னதோட வீட்டுக்காரர்…….. நான் கூட ஜட்ஜு ஆகிடார்ன்னு சொன்னனுங்களே….. போனவாரம் அவர் கொண்டு வந்து விட சொன்னார்ன்னு விட்டுட்டு வந்துடோம்னு சொன்னமுள்ள, இப்ப ஊருக்கு போறாராம், கொண்டு வந்து விட வந்திருக்காருங்க”,  என்று அவசரமாக விளக்கம் மரகதம் சொல்லி அன்னகிளியின் அருகில் போகவும்…..

“பொண்ணுக்கு அடிபட்டிருக்கு சொல்லாம விட்டுட்டீங்க…. பார்க்க கேட்டா அவங்க வீட்டுக்காரரோட அனுப்பிட்டேன்னு சொல்லிட்டீங்க”, என்ற படி ஒரு முதிய பெண்மணி..

“எப்படி இருக்க அன்னம்”, என்று பேச்சு கொடுக்க….

“அம்மா, அவருக்கு டிஃபன் ரெடி பண்ணுங்க!”, என்று மரகதத்திடம் சொல்லிய அன்னம்…. “இப்போ பரவாயில்லைங்க பெரியம்மா…… ஒரு பத்து நிமிஷமுங்க, இதோ வந்துடறனுங்க, அவருக்கு உடனே கிளம்பணும்…..”, என்று சொல்லி விக்ரம் காரில் இருந்து இறங்கினானா இல்லையா என்பது போல திரும்பி பார்த்தாள்.

அவன் அப்படியே அமர்ந்திருக்கவும்….. நின்று நிதானமாக திரும்பி அவனை பார்த்தாள்… “இப்போது நீ வருவாயா? மாட்டாயா?”, என்பது போல அன்னகிளி நிற்கவும்….

“லேட் ஆகுது!”, என்று அவன் அங்கிருந்தே சத்தமாக சொல்லாமல் வாயை அன்னகிளிக்கு புரியும்படியாக அசைத்தான்.   

அப்போதும், “சரி, போங்க!”, என்பது போல அவள் தலையாட்டாததை பார்த்தவன்…. அன்னகிளியை முறைத்துக் கொண்டே இறங்கினான்.

அவன் இறங்குவதை பார்த்ததும், நீ முறைத்தாலும் எனக்கொன்றுமில்லை முறைக்காவிட்டாலும் எனக்கொன்றுமில்லை என்பது போல ஒரு பார்வை பார்த்து திரும்பி வீட்டை நோக்கி அண்ணனை பிடித்துக் கொண்டு நடந்தாள்.

“ரொம்ப திமிராகிடிச்சு இவளுக்கு!”, என்று முணுமுணுத்துக்கொண்டே வீட்டை நோக்கி சென்றான்.

விக்ரம் உள்ளே வருவதை பார்த்த லதா வேகமாக அவனுக்கு டிஃபன் என்ன இருக்கிறது என்பது போல பார்க்க வீட்டுக்குள் முதல் ஆளாக போக……

அதை பார்த்த விக்ரம்…. கந்தசாமியின் கை பிடித்து நடந்து கொண்டிருந்த அன்னகிளியை… பழனிசாமியை….. அன்னகிளியின் பெற்றோரை…. ஏன் பிரபாகரனை கூட முந்திச் வேகமாக அவன் அக்காவிடம் சென்றவன்…..

“அறிவில்ல உனக்கு…….. எதுக்கு இப்படி இப்போ வேகமா நடக்கற…. மெதுவா நட!”, என்று அதட்டினான்.

அடுத்த உடன்பிறப்பு என்று நினைத்த அன்னகிளியின் முகத்தில் இப்போது ஒரு புன்னகை தான் தோன்றியது. “இப்போ தான் ஒரு உடன்பிறப்பு கிட்ட நான் கூட இருந்தேன்னு அளவா பேசிட்டு வந்தார்….. இப்போ அக்கா….. ம்…. இறங்கி வர சொன்னது நானு, எனக்கு முன்னாடி அக்காவை பார்க்க வீட்டுக்குள்ள ஓடறார்”,

அன்னகிளி இப்படி விக்ரமை பற்றி நினைக்க கந்தசாமி….. அண்ணனாக அன்னகிளியை நன்கு பார்த்தவன்…. அவளின் முகம் புன்னகையை காட்டினாலும் திருப்தி இல்லை.

“ஏனுங்க பாப்பா முகமெல்லாம் ஒரு மாதிரி சோர்ந்து கெடக்கு….. அழுத மாதிரி இருக்குங்க…. என்ன தான் பாப்பா நடக்குதுங்க….”,

“எனக்கொன்னுமில்லைங்கண்ணா…… நம்ம அப்புறம் பேசலாமுங்க…… முதல்ல அவரை கவனிப்போமுங்க……. ரொம்ப நேரமா நேரமாகுதுன்னு  சொல்லிக்கிட்டு இருகாங்க”, என்றாள்.

லதாவிடம் என்குயரி நடத்திக் கொண்டிருந்தான் விக்ரம், “எப்பவும் இப்படி தான் நடப்பியா”, என்று….

அவன் பேசிய பேச்சில் தாங்க முடியாமல், “எப்பவும் இல்லைடா உனக்கு என்ன சாப்பிட இருக்குன்னு பார்த்து ரெடி பண்ண வந்தேன்…”,

“என்னது?”, என்று விக்ரம் காட்டிய அதிர்ச்சியில் மொத்த குடும்பமும் அவனை பார்த்தது…..

இன்னமும் சீரியசாக அவளை திட்டினான்……. “நீ எனக்கு டிஃபன் ரெடி பண்ணுறியா? போச்சு! ஏன் நாளைக்கு நான் ஒழுங்கா ஊர் போய் சேர வேண்டாமா! நீ போய் முதல்ல உட்கார்….”,

“உள்ள வந்துட்டேன், நான் கிளம்பறேன்!”, என்று மறுபடியும் விக்ரம் போக முற்பட….

எல்லோர் முகத்திலும் புன்னகை…… முத்துசாமி ஆசுவாசமாக சோபாவில் அமர்ந்தார். லதா விக்ரமை பார்த்து முறைக்க முயன்று முடியாமல் புன்னகைத்தாள்…. “என்னவோ விக்ரம், எங்களால தைரியமா சொல்ல முடியாததை நீயாவது சொல்ற!”, என்றான் பழனிசாமி.

அப்போதும் லதா பழனிசாமியை நோக்கி திரும்பி பார்க்காததை மனதினுள் குறித்துக் கொண்டான் விக்ரம்.

“எங்க போனாலும் சாப்பிட டைம் எடுப்பீங்க தானே! இங்க சாப்பிட்டிட்டு போங்க!”, என்று சொல்லிய அன்னகிளி நிற்காமல் அண்ணனின் கை பிடித்தே சமையலறையில் என்ன இருக்கிறது என்று பார்க்க சென்றாள்.

சாதம், குழம்பு என்று இருந்தது….  அதற்குள் பின்னோடு வந்த லதா…… “அவன் நைட் சாதம் சாப்பிட மாட்டான்”, என்று தன் தம்பியை பற்றி தெரிந்தவளாக சொன்னாள்.

இன்னும் அதெல்லாம் அன்னகிளிக்கு தெரியாதல்லவா…..

“நீங்க ரெண்டு பேரும் போங்க, நான் பார்த்துக்கறேன்!”, என்று வந்த மரகதம்……. வீட்டிற்கு மருமகன் வந்த பரபரப்பில்…… அவசரமாக சட்னியை ஆட்டி…… பிரிட்ஜில் இருந்த தக்காளி தொக்கை சூடு பண்ணி…… ஐந்து நிமிடத்தில் தோசை வார்க்க ஆரம்பித்து….

விக்ரமை டைனிங் ஹால் வர சொல்லி பரிமாற ஆரம்பித்து விட்டார். விக்ரமிற்கு நேரமாகிவிட்டது என்ற அவசரம்…….. எந்த பிகுவும் செய்யவில்லை…… அன்னகிளியை கூட கவனிக்கவில்லை……. அன்னகிளி தான் அவனை கவனித்துக் கொண்டிருந்தாள்.

மரகதம் சுட்டு முடித்து ஹாலுக்கு போய்விட…. லதாவும் பின்னோடு போய் விட்டாள். 

விக்ரம் சாப்பிட்டு முடிக்கும் வரை அன்னகிளி மட்டுமே உடனிருந்தாள். வேகமாக உண்டு முடித்து டைனிங் ஹாலில் இருந்து ஹாலிற்குள் பிரவேசிக்க கால் வைத்தவன்….. வேகமாக காலை உள்ளே இழுத்தான்.    

அவனுக்கு அருகில் நின்று கொண்டிருந்த அன்னகிளியை பார்த்து முறைத்தான். என்ன என்று புரியாமல் அன்னகிளி ஹாலுக்குள் எட்டி பார்க்க….. அங்கிருந்தவர்களை பார்த்தவள் “ஐயோ, அம்மா! இதற்கு இவன் பேசியே கொல்வானே!”, என்பது போல விக்ரமை பார்க்க…..

“எரும மாடு இதுக்கு தான்  நான் அப்படியே போறேன்னு சொன்னேன்…..”, என்று அவளை திட்ட…..

“ஆரம்பிச்சிட்டரா”, என்பது போல அன்னகிளி பரிதாபமாக அவனை பார்த்தாள்….

அங்கே ஹாலில் சித்தப்பா, பெரியப்பா, மாமா என்று சொந்த பந்தங்கள் மாப்பிள்ளையை பார்க்க வென்று அமர்ந்திருந்தார்கள்.

“எப்படிடி இவ்வளவு சீக்கிரம் வந்தாங்க…… உங்க வீட்ல இருந்து யாராவது குரூப் மெசேஜ் தட்டி விட்டாங்களா?”, 

“என்னை விட அதிகமா பேசுவாங்கடி இவங்க….. நான் போகணும்…… புரிஞ்சிக்கோ முதல் முதலா எனக்கு குடுக்கப்பட்ட கூடுதல் பொறுப்பு…. ஜாயின் பண்ணி மூணு நாலு  மாசத்துல இது ரொம்ப ரேர்….. நான் போகணும்”, என்றான்….

“ஆத்தா வையும், சந்தைக்கு போகணும், காசு குடு!”, என்பதாக அன்னகிளிக்கு தோன்ற அவளின் முகத்தில் ஒரு விரிந்த புன்னகை…… பொங்கிய சிரிப்பை அடக்கினாள்.

“என்னடி சிரிப்பு?”, என்று விக்ரம் மறுபடியும் கேட்க…

“இதை சொல்லவா முடியும்! சும்மாவே சாமியாடுகிறான்!”,….. “ஒன்னுமில்லைங்க”, என்று கண்களில் பிடிவாதம் காட்டி அன்னகிளி சொல்ல….

“இருடி! உன்னை ஊருக்கு போயிட்டு வந்து வெச்சிக்கறேன்……..”,

இப்போது இன்னும் சிரிப்பு அன்னகிளியின் முகத்தில்… விக்ரமின் முகத்திலும் சிறு விஷமம்…… “எதுக்குடி இப்போ சிரிப்பு! கட்டிகிட்டவளை வெச்சிறேன்னு சொன்னதுனாலையா….”,

இப்போது அன்னகிளியின் முகத்தில் நன்றாகவே புன்னகை…. “அதுதானே நினைச்ச…!”, என்று விக்ரமும் புன்னகைத்தவன்….

“அவங்களாவது நான் வர்றதுக்காக ஹால்ல உட்கார்ந்து இருகாங்க… உங்கண்ணன் பாரு நம்ம கண்ணுக்கு தெரியற மாதிரி உட்கார்ந்து இருக்கான். என்னவோ நான் உன்னை அடிச்சு துவைக்கற மாதிரி…… ஒரு எக்ஸ்பிரஸன் குடுத்து அப்பப்போ இங்கேயே பார்க்கிறான்”,

“ஏதோ ஒருத்தன் பத்து நாளைக்கு ஊருக்கு போறானே, பொண்டாட்டிய கொஞ்சுவான், கட்டிப்பிடிப்பான் முத்தம் கொடுப்பான்னு அறிவு வேண்டாம்…. விட்டா என் வீட்டுக்குள்ள சிசி டிவி கேமரா வெச்சி உன்னை நான் கொடுமை படுத்தறனா இல்லையான்னு செக் பண்ணுவான்….”,  

“முதல்ல இதுக்கு ஒரு முடிவு கட்டறேன், அவனை அந்த பக்கம் திரும்ப வைக்கிறேன்!”, என்று சொன்ன விக்ரம்…. அன்னகிளியே எதிர்பார்க்காத வண்ணம்…… அவளை இழுத்து இடையோடு மிக நெருக்கமாக அணைத்தான்.

“ஐயோ! என்ன பண்றீங்க!”, என்று அன்னகிளி பதற….

“ம்! ரொமான்ஸ் பண்றேன்…… இனிமேலாவது உங்கண்ணன் நம்மளை பார்க்கறதை விடட்டும்! அவன் கல்யாணத்தை பத்தி யோசிக்கட்டும்!”, என்று விக்ரம் முகத்தை அன்னகிளியின் முகத்திற்கு மிக அருகாமையில் வைத்துக்கொண்டு சொல்லவும், அமைதியானாள் அன்னகிளி.

அவன் சொன்னதற்கு தகுந்த மாதிரி இங்கே பார்த்துக் கொண்டிருந்த கந்தசாமிக்கு விக்ரம் அன்னகிளியை முத்தமிடுவது போல தோன்ற, அவசரமாக அந்த இடத்தை விட்டே மாறினான்.

“போய்ட்டான்”, என்று விக்ரம் சிரிக்க… அவனின் சிரிப்பு அன்னகிளியை கவர்ந்த போதிலும், “அச்சோ! சத்தம் கேட்க போகுது! எல்லோரும் வெளில உட்கார்ந்து இருகாங்க!”, என்று மீண்டும் பதறினாள்……

“இவ எவடி அவ…? சரி, சத்தம் வராம ஒரு முத்தம் குடுக்கட்டா…?”, என்றான் மிக அருகாமையில் இருந்த அன்னகிளியின் முகத்தை பார்வையாலேயே கபளீகரம் செய்தபடி.

“ஆங்! ஆரம்பித்து விட்டாயா?”, என்பது போல அன்னகிளி ஒரு பார்வை பார்க்க…… “வாய் மட்டும் தாண்டி பேச மாட்டேங்கற! அதுக்கெல்லாம் சேர்த்து உன் கண்ணு நல்லா பேசுது…..”,

“ஆனா பாரு! இப்போ நான் இப்படியே உன்னை விட்டுட்டு போயிட்டேன்னு வை…… கட்டிப்பிடிச்சாரே ஒரு முத்தம் குடுத்தாரான்னு நீ ஃபீல் பண்ணுவ….”, என்று வியாக்கியானம் பேசினான்.

“உன்னை ஃபீல் பண்ண விட எனக்கு மனசே இல்லை…. சொல்லு! என்ன பண்ற….. பீல் பண்ணுறியா?…… வேண்டாமா?”, என்று சரசமாக கேட்க….   

“வேண்டாம்”, என்று வாய் திறந்து அன்னகிளி பதில் சொல்லாத போதும் கண்கள் அதை நன்கு உணர்த்த…… எட்டி பார்த்தாலும் சட்டென்று தெரியாத மாதிரி அருகில் இருந்த கதவின் பின்னால் அவளை நகர்த்தி…..

மெதுவாக…… மிக மெதுவாக….. அவளின் இதழ்களை வசப்படுத்த ஆரம்பித்தான்.                  

தானும் அனுபவித்து…….. மற்றவரும் அனுபவிக்க வேண்டி……….

பயின்று…….. பயிற்று வித்து……. என்று நேரம் ஓடியது. இருவருமே தங்களின் மனக்காயங்களை அதில் கரைக்க முயற்சித்தார்கள் என்றால் அது மிகையல்ல.

அதிலும் விக்ரமிற்கு எப்படியோ அன்னகிளிக்கு அவனை பிரிய மனமேயில்லை. அவனுள் புதைந்து விடவே விரும்பினாள்…. சுற்றுபுறம் கூட ஞாபகத்தில் இல்லை. காயம் செய்தவன் அவனாக இருப்பினும் அவளுடைய மனக் காயங்களுக்கு விக்ரம் மட்டுமே மருந்தாக முடியும்.    

வெளியே பேச்சு சத்தம் சற்று அதிகமாக கேட்கவும்….. விடுவித்தவன்… “எப்படி இருந்தது? எனக்கு இது தான் முதல் முயற்சி…….”, என்று எப்பொழுதும் போல கூச்சமேயில்லாமல் பேச ஆரம்பிக்க….

முகம் சிவந்தவ அன்னகிளி அவன் வாயை அவசரமாக கை கொண்டு மூடி….. “ஷ், இதெல்லாம் பேசக்கூடாது…..”, என்று சொல்லி….. “இப்போ நேரமாகலையா”, என்றாள்.

“ஒஹ், யெஹ்! உன்கூட இருந்தா என் நேரம் என்னோட கட்டுபாடுல இல்லை”, என்று சொல்லியபடி………. இரண்டு கை புஜத்தையும் அவனாகவே தட்டிக் கொண்டவன் ஏதோ மல்யுத்ததிற்கு போவது போல ஆக்ஷன் செய்து ஹாலுக்குள் போகவும்….. அன்னகிளியால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

சற்று நேரத்திற்கு முன் இருந்த மனநிலை முற்றிலுமாக மாறியிருந்தது அன்னகிளிக்கு…… அதே சமயம் பத்து நாட்களுக்கு மேல் விக்ரமை எப்படி பார்க்காமல் இருப்பது என்ற கவலையும் தோன்ற சிரிப்பு கட்டுக்குள் வந்து ஒரு கவலை தொற்றியது.

நேற்று காலை முதல் தான் அவன் வீட்டில் அவனோடு இருக்கிறாள் என்பதே அவளுக்கு ஞாபகமில்லை. He mesmerizes me……. 

அவளும் ஹாலுக்குள் போய் ஒரு ஓரமாக நின்றாள்.

“எப்படி இருக்கீங்க தம்பி?”, என்று ஒரு பெருசு ஆர்பட்டமாக ஆரம்பித்தது……

இன்னொரு பெருசு, “நான் அப்போவே சொன்னேன்….. தம்பி காத்து மாதிரி அவரை கைக்குள்ள வைக்க முடியாது… அவரை போய் ஒன்னு வீட்டு மாப்பிள்ளையா இருங்க… இல்லை பக்கத்துல வீடு பார்த்துக் குடுக்கறோம்…. இங்கயே இருங்க எம்பட  பொண்ணை மட்டும் பார்த்துக்கோங்கன்னு ஏதோ வேலை வெட்டி இல்லாதவரை சொல்ற மாதிரி சொல்லியிருக்க கூடாதுல்ல”, என்று ஆரம்பித்தார்.

கந்தசாமிக்கு பதட்டம், இன்னும் பேச்சு வளர்ந்தால், “எல்லாம் நம்ம ஆளு தான்பா சொன்னான்”, என்று இப்போது தேவையில்லாமல் அவனின் பெயரையும் இழுத்து விடுவார்கள்.

கோபம் வந்தால் விக்ரம் எப்படி பேசுவான் என்று கந்தசாமிக்கு நன்றாக தெரியும், அந்த பேச்சுக்கள் கொடுத்த கோபத்தில் தான் அன்னகிளியை அவனோடு சேர்த்து வைக்க கந்தசாமி முயலவேயில்லை.

திரும்பவுமா ?????? மனம் பதறியது கந்தசாமிக்கு 

விக்ரம் இவர்கள் பேச்சை கவனித்ததாகவே தெரியவில்லை. நின்று கொண்டிருந்த எட்டு மாத கர்ப்பிணியான அக்காவை பார்த்து ஒரு சேரை எடுத்து போட்டு உட்காரு என்க…..

என்ன இத்தனை பெரியவர்கள் முன் அமர்வதா என்று லதா அவர்கள் கண்ணில் படாமல்……. ஆனால் பேசுவது கேட்கும் இடத்தில் அமர்ந்து கொண்டாள். மருமகள் தானே அமர முடியாது மகள் அமரலாம் தானே….. அன்னகிளியிடம் சேரை திருப்பியவன்…. “உட்காரு”, என்றான் அவளை பார்த்து….

சொன்னால் செய்ய வேண்டும் என்று அந்த குரல் சொல்ல…. அமர்ந்தாள்.

“நானு அப்போவே சொன்னேனுங்க தம்பி பெரியாளா வருவார்ன்னு”, என்று இன்னொருவர் சொல்லிகொண்டிருந்தார். இவர்கள் முன்பு தன்னை எப்படி பேசினார்கள் என்று அறியாதவனல்ல விக்ரம்.

பேசத் தெரியாதவனுமல்ல விக்ரம்….. ஆனால் இப்போது அதை சொல்லி காட்ட முடியாது……. சொல்லிக்காட்டுவது அவர்களுக்கு எப்படியோ அவனுக்கு அது பெரிய மனிதத்தன்மை கிடையாது.

“நீங்கல்லாம் பெரியவங்க! உங்களுக்கு தெரியாதது என்ன இருக்க போகுது… இப்போ நான் அவசரமா போகணும்….. அன்னகிளியை திரும்ப கூப்பிட வரும் போது சொல்றேன்… சாவகாசமா உட்கார்ந்து பேசலாம்.. இப்போ நான் உத்தரவு வாங்கிக்கட்டுங்களா”, என்று பணிவாக சொன்னான்.   

முன்பு பேசியதற்கு எல்லாம் விக்ரம் அலட்சியப்படுத்துவானோ என்று பலரும் நினைத்திருக்க…… இந்த பணிவான பேச்சு அவனை மிகவும் உயர்த்திக் காட்டியது…

“நீங்க கிளம்புங்க தம்பி, நாங்க பாப்பாவை பார்த்துட்டு போறோம்”, என்று அவர்கள் உத்தரவு கொடுக்க… விட்டால் போதுமென்று என்று எல்லோரிடமும் ஒரு தலையசைவோடு கிளம்பி விட்டான்.

நொடியில் சூழலை சமாளித்து கிளம்பிய விக்ரமை பார்த்தாள் அன்னகிளி….  முகத்தில் ஒரு முறுவல் தானாக தோன்றியது.

எண்ணம், சொல், செயல் என்று எல்லாவற்றிலும் தெரிந்தும் தெரியாமலும் அன்னகிளியை ஆக்ரமித்துக் கொண்டிருந்தான் விக்ரம்.

வழியனுப்ப கந்தசாமியும் பழனிசாமியும் போகும் முன் கார் சென்றிருந்தது.

வீட்டிற்கு உள்ளே நுழைந்த கந்தசாமி, “இவ்வளவு பணிவா இருந்து பேசி நம்மளை வில்லனாகிட்டானே!”, என்று நினைத்ததற்கு சரியாக….

அங்கே ஆளாளுக்கு…… “முன்ன மாதிரி அவரை எடுத்தெரிஞ்சு பேசாதே! அதை செய்யதே! இதை சொல்லாதே!”,  என்று காது தீயும் அளவிற்கு அட்வைஸ்.  இப்போது கந்தசாமி நொந்தசாமி ஆகிவிட்டான்.  

எது எப்படியோ கந்தசாமியின் மனதிற்கு மிகவும் திருப்தி….. விக்ரம் வெளியூர் போக வேண்டி இருந்த போது சற்று யோசிக்காமல் உரிமையோடு இங்கே கொண்டு வந்து விட்டானே. சாப்பிடவும் பிகு செய்யாமல் சாப்பிட்டானே…..

அவன் சீர் வாங்காவிட்டால்   போகிறது…… இப்படி ஒரு உரிமையான ஒரு உறவோடு பழகினாலே போதும் என்று இருந்தது. இனி தன் பேச்சை விட விக்ரமின் பேச்சிற்கு மதிப்பு அதிகம் என்றும் புரிந்தது.

“ம்! ஒழுங்கா பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணுடா கந்தசாமி!”, என்று அவனுக்கு அவனே சொல்லிகொண்டான்.

விக்ரம் கோயம்பத்தூரை நோக்கி வேகமெடுத்து இருந்தான். அவன் கண்களுக்கு இருட்டில் தெரியும் காட்சிகள் எப்பொழுதுமே பிடித்தமான ஒன்று…. அதனுள் என்ன நடக்கிறது என்று தெரியாத போது….. நல்லதாக நடந்து கொண்டிருக்கிறது என்று மனதை சமாதானப்படுத்த முடியும்…. ஒருவேளை நல்லதாகவும் நடந்து கொண்டிருக்கலாம்.

வலி போல இருட்டும் ஒரு வரப்ரசாதம்……

வலிக்கும் போது தான் அங்கே நமக்கு ஒரு தொந்தரவு என்றே தெரியும்! அந்த இடத்தையோ காரணத்தையோ கவனிப்போம்…. அது மனதானாலும் சரி உடலானாலும் சரி….

வலிக்கு எதிர்பதம் இருட்டு……..

இருட்டு…. பல தேவையில்லாத விஷயங்களை தனக்குள் மறைத்துக் கொள்கிறது… அது வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவதில்லை….   ஒருவர், இருவர் அல்ல பல பேருக்கு….. மறைக்கப்படுபவை சில சமயம் மறைந்தும் போகின்றன.         

விக்ரமின் வேகம் எல்லா விஷயத்திலும் எப்போழுதுமே அசாத்தியமானது. செய்ய வேண்டும் என்று நினைத்தால் எதையும் செய்து விடுவான் விக்ரம்…

ஆனால் அவன் நினைத்தும் நிறைவேறாதது….. நிறைவேற வேண்டும் என்று மனம்கொள்ளா ஆசையிருந்தும்….. அது நிறைவேற வேண்டாம் என்று அவனாக நினைத்துக் கொண்டது….

அவன் கனவு கை சேராவிட்டால் போகிறது…. ஆனால் வேறு ஒரு கனவு கை சேர வேண்டும்??????…… பல லட்சக்கணக்கான மக்களின் விருப்பம்.  

Advertisement