Advertisement

அத்தியாயம் பத்து :

வினோத் விக்ரமை பார்த்ததும் வெலவெலத்து விட்டான். அவன் முகத்தில் ஒரு பதட்டம் அப்பட்டமாக தெரிந்தது.

விக்ரமிடம் இத்தனை நேரமிருந்த விளையாட்டு தனங்கள் எல்லாம் அடியோடு மறைந்தன.

வினோத்தை ஒரு பார்வை தான் பார்த்தான் விக்ரம்……

“கால்ல கட்டு போட்டு உட்கார்ந்திருந்தாங்க……. அது தான் என்னன்னு கேட்க வந்தேன்”, என்றான் அவனாகவே.

“இப்படி தான் உன் கண்ல படறவங்க யார் கட்டு போட்டிருந்தாலும் போய் விசாரிப்பியா…”, என்றான்……. எந்த வகையிலும் குரல் உயரவில்லை….. ஆனால் அந்த த்வனி……. வினோத்தின் முகத்தில் ஒரு வியர்வையை அரும்ப செய்தது.

ஷோ ரூம் வாயில் கண்ணாடி கதவுகளால் இருக்க… இவர்கள் வாயிலுக்கு சற்று தள்ளி தான் பேசிக்கொண்டிருந்தனர். வெளியே இருந்து பார்த்தால் உள்ளே இருப்பவர்கள் கண்ணுக்கு தெரிவர்….

இவர்களை அப்படி வெளியே இருந்து பார்த்துவிட்டு உள்ளே வந்த ஒரு பெண்…. “வினு எதுக்கு போனை கட் பண்ணிட்டே இருக்கீங்க…. அங்க எல்லோரும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க”, என்று சொல்லிகொண்டே   அருகில் வந்தவள்……..

அப்போதுதான் வினோத் இருவருடன் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து… “யாருங்க”, என்று வினோத்திடம் கேட்டுக் கொண்டே விக்ரமையும் அன்னகிளியையும் பார்த்து புன்னகைத்தாள்.

சிறு புன்னகை கூட இருவரின் முகத்திலும் தோன்றாததை பார்த்தவள்….. வினோத்தும் ரெஸ்ட்லெஸ்ஸாக இருப்பதை பார்த்தவள்…

“யாரு இவங்க? ஏதாவது பிரச்சனையா?”. என்று வினோத்திடம் கேட்கவும்…..

“இவங்க அன்னகிளி, இவர் விக்ரம்!”, என்று வினோத் சொல்லவும் அந்த பெண்ணின் முகத்தில் முதலில் ஒரு அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது…… அந்த அதிர்ச்சியே அந்த பெண்ணிற்கு விஷயம் தெரியும் என்று காட்டிக் கொடுத்தது.

ஆனால் உடனேயும் இன்னும் ஒரு அறிமுகம் செய்து கொள்ளும் ஆவல் அந்த பெண்ணின் முகத்தில் தோன்றியது. “நான் சாதனா, இவரோட மனைவி!”, என்று அவளாகவே அறிமுகப்படுத்திக் கொண்டாள்.

“சௌமி அக்கா, எப்பவும் உங்களை பத்தி பேசுவாங்க அண்ணா!”, என்று சாதனா விக்ரமிடம் ஏதோ நெடு நாள் பழக்கம் போல பேசவும்…..

“சௌமி”, என்ற பெயரைக் கேட்டதும் விக்ரமின் முகத்தில் ஒரு இளக்கம்.

சாதனா பேசுவதில் விருப்பமில்லை என்பதாக அன்னகிளி விக்ரமை பார்த்து, “நம்ம போகலாமா”, என்றாள்.             

“ப்ளீஸ் இருங்க! சௌமி அக்கா இங்க ரெஸ்டாரெண்ட்ல தான் இருக்காங்க….  வினு போய் அண்ணிய வர சொல்லுங்க”, என்று வினோத்தை அனுப்பினாள்.

இப்போது அன்னகிளி விக்ரமிடம் எதுவும் சொல்லவில்லை….. ஆனால் என்ன செய்ய போகிறான் என்பது போல அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

அன்னகிளிக்கு விக்ரமை பற்றி ஒரு விஷயம் நன்கு தெரியும்…. அது விக்ரம் அவனின் அக்காவிடமோ தங்கையிடமோ பேசுகிறானோ இல்லையோ….. அவர்கள் இருவரும் அவனுக்கு மிகவும் முக்கியமானவர்கள்.

எத்தனை பிரச்சனைகள் வந்த போது சௌம்யாவின் பெயர் வெளியே வராமல் பார்த்துக் கொண்டான்.  

உண்மையும் அது தான்! விக்ரமிற்கு அவர்கள் இருவரும் மிகவும் முக்கியம்…. ஆனால் அவர்களை பற்றி கண்டுகொள்ளாமல் இருக்கிறான் என்றால் அவர்களுடைய வாழ்க்கை துணைகள் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை தான். அவனின் நம்பிக்கை மிகவும் உண்மையான ஒன்று.      

அந்த பெண் சாதனா விடாமல் பேசிக்கொண்டிருந்தாள்…… வினோத் அந்த பக்கம் போனதும்….. “சாரி! அவர் செஞ்சது மிகப்பெரிய மன்னிக்க முடியாத தப்பு….. மன்னிப்பு கேட்க கூட தகுதியில்லை தான்….. இருந்தாலும் வினு ரொம்ப அதுக்காக கில்டியா பீல் பண்றார். அவருக்கும் இப்போ புரியுது அது ரொம்ப பெரிய தப்புன்னு…”,

“ப்ளீஸ்! அவரை மன்னிச்சுடுங்க!”, என்று அந்த சாதனா….. விக்ரமையும் அன்னகிளியையும் பார்த்து கேட்டாள்.

அன்னகிளியின் மனது ஒரு ஆற்றாமைக்கு, ஒரு கழிவிரகத்திற்கு சென்று கொண்டிருந்தது. மன்னிக்க கூடிய தப்பா அது…….  முடியாது என்றுமே அவளால் முடியாது .

தப்பு, சரி என்பதையும் விட….. இதில் அவப் பெயர் அன்னகிளிக்கு தானே….. எல்லாம் தெரிந்த விக்ரம் கூட…… “ஏன் மூணாவதா யாரையாவது கல்யாணம் பண்ணிக்க போறியா?”, என்று அவளை பார்த்து எப்படி கேட்டான்.

வர துடித்த கண்ணீரை முயன்று அடக்கினாள்.

முகமெல்லாம் ஒரு மாதிரி இயலாமையில் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்த முடியாத தன்மையில் சிவக்க ஆரம்பித்தது.

அந்த பெண் சாதனா மிகவும் சகஜமாக பேசியது விக்ரமை ஒரு மாதிரி ஆச்சர்யதிற்குள்ளாகியது. எப்படி இப்படி மனிதர்களால் ஒன்றுமே நடக்காத மாதிரி பேச முடிகிறது. எவ்வளவு பெரிய பாதகமான செயலை அவளின் கணவன் செய்திருக்கிறான்.

இந்த சௌமி வேறு என்னை பார்த்தால் லதா அக்கா மாதிரி விலகி போக எல்லாம் மாட்டாள்….. நான் பேசாவிட்டாலும் பேச முற்படுவாள்…. ஏதாவது லூசு மாதிரி பேசி வைக்க கூடாதே என்று கவலையாக இருந்தது.    

இப்படி விக்ரமின் மனதில் யோசனைகள் ஓட….. அவன் அன்னகிளியை கவனிக்க மறந்தான்.     

அதுவும் சௌமியா உடனே வரவும்….. வினோத்தை பார்த்த போது கூட பொங்காத ஒரு கோபம் கட்டுக்கடங்காமல் அன்னகிளிக்கு பொங்க ஆரம்பித்தது.

சௌமி, “அண்ணா”, என்று ஓடி வந்து அவன் கையை பிடித்துக் கொண்டாள். பெரிதாக முகத்தில் எதையும் காட்டாவிட்டாலும் விக்ரம் அமைதியாக தான் நின்றான். கையை விலக்கவில்லை.

பார்த்த அன்னகிளிக்கு கோபம் ஆத்திரம் எல்லாம் ஒரு சேர இன்னும் அதிகமாகியது. “ஒஹ்! இவனுடைய சொந்தக்காரர்கள்….. எனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இவனுக்கு ஒன்றுமில்லை”, 

“நான் உன்னை பார்க்கணும், பார்க்கணும்னு நிறைய தடவை கேட்டேன்! ஆனா வீட்ல விடவேயில்லை….. இவரும் கூட்டிட்டு வர்றேன், கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி இத்தனை வருஷமா ஏமாத்திட்டே இருக்கார்!”, என்று சௌமி சொல்லும்போதே அவளின் கணவன் மனோஜ் குமார் அங்கே கையில் ஒரு குழந்தையை பிடித்தபடி தோளில் இன்னொரு குழந்தையை போட்டுக் கொண்டு வந்து சேர்ந்தான்.

விக்ரம் வினோத்தை அடித்து விட்டதால்…. அன்னகிளியை வேறு திருமணம் செய்து கொண்டதால்….. சௌம்யாவை எந்த வகையிலும் விக்ரமோடு தொடர்பு கொள்ள அவளின் கணவனோ குடும்பத்தினரோ அனுமதிக்கவில்லை.  

மனோஜ் குமார்….. வினோத் குமாரின் அண்ணன்…. அதாகப்பட்டது வினோத்தின் அண்ணன்…….. சௌமியும், வினோத்தும் காலேஜ் மேட்ஸ் அண்ட் ஃபிரண்ட்ஸ்….  

வினோத்தின் ஃபிரண்ட் என்ற வகையில் சௌமி மனோஜிற்கு அறிமுகமாகி…. மனோஜிற்கு சௌமியை பிடித்து திருமணம் செய்ய விருப்பப்பட்டு விக்ரமிடம் பெண் கேட்டான் மனோஜ்.

வேறு ஜாதி என்பதை தவிர மறுக்க ஒரு காரணமும் இல்லை விக்ரமிற்கு….. மனோஜ் நல்ல மாதிரியாக தெரிந்தான்… விசாரித்த வரைக்கும் நல்ல அபிப்ராயமே எல்லோரும் சொன்னார்கள்…. நல்ல பாரம்பரியமான குடும்பம் வசதி வாய்ப்புகளும் அதிகம்…. டெக்ஸ்ட்டைல் பிசினெஸில் கொடி கட்டி பறந்தார்கள். 

தானாக தேடினாலும் இப்படி ஒரு மாபிள்ளையோ… குடும்பமோ அமைவது கஷ்டம் என்று தெரிந்து… அப்போதும் ஜாதகம் பார்த்தான்…… ஜாதகத்திலும் இருவருக்கும் ஒன்பது பொருத்தம் என்றிருக்க….. வேறு ஆட்கள் என்ற போதிலும் தைரியமாக திருமணத்திற்கு சம்மதம் சொன்னான்.

விக்ரமின் அக்கா வேறு ஆட்கள் என்று தயங்கிய போதும்…. அவளையும் அவர்கள் வீட்டினரையும் சம்மதிக்க வைத்தான். கோயம்பத்தூரில் பெயர் பெற்ற குடும்பம் என்பதால் வசதி வாய்ப்பு ஜாதியை எல்லாம் பின்னால் போக வைத்து எல்லோரின் முழு மனதோடும் ஈடுபாட்டோடும் இந்த திருமணத்தை நடத்தி வைத்தது.   

மனோஜின் கையை பிடித்த படி வந்த மூன்று வயது பெண் குழந்தையை தூக்கி, “அண்ணா! என் பொண்ணு அண்ணா!”, என்று விக்ரமின் கையில் கொடுத்தாள்.

மனோஜின் தோளில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு ஆண் குழந்தையை காட்டி, “வினோத் குழந்தை”, என்று சௌம்யா சொல்லும்போதே சாதனா குழந்தையை வாங்கினாள்.

மனோஜ் முதலில் சற்று தயங்கினாலும்.. அவனாக விக்ரமிடம் பேச்சுக் கொடுத்தான்.

எல்லோர் பார்வையும் அவ்வபோது அமர்ந்திருந்த அன்னகிளியை பார்த்து பார்த்து மீண்டது விக்ரமை தவிர.

அவன் கையில் இருந்த தங்கையின் குழந்தையில் லயித்திருந்தான். குழந்தையின் குண்டு கன்னம்  முத்தமிட தூண்ட…… அதில் முத்தம் வைத்தவன்…… “உங்க பேர் என்ன?”, என்று குழந்தையிடம் கேட்க…….

“ஜனனி”, என்று அழகாக சொன்னது.    

“எப்படியிருக்க விக்ரம்…. இங்க கோயம்பதூர்லயா இருக்க?”, என்று மனோஜ் கேட்கவும்…..

“ம், இங்க தான் போஸ்ட் ஆகியிருக்கிறேன்!”, என்றான் விக்ரம்…..   

“என்ன போஸ்டிங்!”, என்று மனோஜ் கேட்க….

“டிஸ்ட்ரிக் ஜட்ஜ்!”, என்று விக்ரம் சொல்லவும்….

“ஒஹ், கங்ராட்ஸ்!”, என்று மனோஜ் சொல்ல…. சௌம்யாவின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி…….

“அண்ணா, யு மேட் இட்!”, என்றாள்.

விக்ரம் ஒரு சிறுதலையசைப்போடு அதை ஏற்றுகொண்டான். பிறகு ஏதோ உந்த சட்டென்று அன்னகிளியை திரும்பி பார்த்தான்.

அவளின் முகம் அப்படி சிவந்து அவளின் அடக்கப்பட்ட கோபம் நன்கு தெரிந்தது. விக்ரமை அவ்வளவு கோபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள். கண்களில் நீர் முட்டிக் கொண்டு நின்றது…. எப்போது வேண்டுமானாலும் அவள் வெடிக்கும் அபாயம் இருப்பதை உணர்ந்தவன்….. 

“ஜனனி குட்டி அம்மாகிட்ட போங்க!”, என்று சொல்லி சௌம்யாவிடம் கொடுத்தவன்…..

“we need to go”, என்று மனோஜிடம் சௌம்யாவிடமும் சொல்லியவன்…..  அன்னகிளியை நோக்கி கையை நீட்ட….. அவன் கையை பற்றியபடி மெதுவாக எழுந்து நின்றாள். நிற்கும் போது இருக்கும் மன உளைச்சலில் தடுமாற… அவளின் தோளை ஆதரவாக அணைத்து பிடித்து நிறுத்தினான்.  

“என்ன காலில் கட்டு”, என்று அன்னகிளியிடம் கேட்க சௌம்யாவிற்கு தைரியம் இல்லை….

விக்ரமிடம், “என்ன அண்ணா கட்டு……”, என்றாள்.

“ஆக்சிடென்ட்.. கால்ல பிராக்க்ச்சர்…. சர்ஜெரி செஞ்சிருக்காங்க….”, என்று சொல்லி ஒரு சிறு தலையசைப்பை பொதுவாக கொடுத்து விட்டு நடக்க துவங்கினான்.

அதற்குள் ஷாப் ஓனர் வேகமாக வந்தார்….

“நான் செலக்ட் பண்ணினது என்னோட டிரைவர் வந்து வாங்கிக்குவார்”, என்று சொல்லிகொண்டே வெளியே செல்ல கதவை திறக்க போக….. ஓனரே திறந்து விட்டார்.  

இவ்வளவு நேரமாக வினோத் உள்ளே வரவில்லை, வெளியே தான் நின்றான். சாதனாவும் வினோத்துடன் போய் நின்று கொண்டிருந்தாள்.

இவர்கள் ஷோ ரூமில் இருந்து வெளியே வரவும்…… தயக்கமாக இவர்களின் முகம் பார்த்து அவர்கள் இருவரும் நிற்க….. அவர்களை நோக்கி திரும்பினால் நான் தொலைந்தேன் என்று நினைத்த விக்ரம் கவனமாக அவர்கள் புறம் திரும்பவில்லை.

சாதனா அவர்களை நோக்கி எட்டெடுத்து வைப்பது விக்ரமின் பார்வை வட்டத்திற்குள் விழ….. அன்னகிளி அறியாமல், “வராதே”, என்பது போல கையை காட்டினான்.      

பிறகு பன்னீரிடம் பணத்தை கொடுத்து, “அந்த டிரஸ் எல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கு வந்துடுங்க….. நான் ஊருக்கு போய் இந்த அம்மணியை விட்டுட்டு வந்துடறேன்”, என்று சொல்லி கார் சாவியை கேட்க……

“இருங்க சார்! கார் பார்கிங்ல இருக்கு எடுத்துட்டு வர்றேன்!”, என்று அவசரமாக பன்னீர் போனார்.

அன்னகிளி விக்ரமின் கையை பற்றி மெதுவாக இறங்கவும் கார் வாயிலில் நிற்கவும் சரியாக இருந்தது.

ரெட் லைட் பொருத்தப்பட்ட கார்….. அஃப்கோர்ஸ் அது சத்தம் செய்யவில்லை, ஒளி எழுப்பவில்லை….. இருந்தாலும் அதன் மரியாதையை தனி தானே! சௌம்யாவின் மொத்த குடும்பமும் பார்த்துக் கொண்டு தான் இருந்தது…..

அன்னகிளியை முன்புறம் அமர வைத்து, மறுபுறம் வந்து அமர்ந்து காரை எடுத்தான் விக்ரம். 

“அண்ணா ரொம்ப மாறிட்டான்! நான் செஞ்சது தப்பு தான்! ஆனா அதுக்கு திட்டென்ன? அடி கூட அண்ணா கிட்ட வாங்கிட்டேன்! என்னை தேடி வரலைன்னா பரவாயில்லை, பார்க்கும் போது கூட நல்லா பேசக் கூடாதா!”, என்று ஆதங்கத்தோடு மனோஜிடம் சௌம்யா சொல்ல……     

“ஒன்னு நல்லா புரிஞ்சிக்கோ சௌமி….. கல்யாணமாகிட்டா எத்தனை உறவுகள் இருந்தாலும், நம்ம அவங்க மேல அளவு கடந்த அன்பு வெச்சிருந்தாலும், ஃபர்ஸ்ட் ப்ரியாரிட்டி அவங்க வாழ்க்கை துணைக்கு தான்…”,

“ஏதோ பார்க்கும் போது இந்தளவு பேசறாங்கன்னு சந்தோஷப்படு……. நம்ம உறவு உங்கண்ணனோட ஒட்டாது……. வினோத் என் தம்பி….. நம்ம அப்பா அம்மாவோட எல்லோரும் ஒரே வீட்ல தான் சேர்ந்து இருக்கோம்….. இருப்போம்… அப்படியிருக்கும் போது பார்க்கும் போது பேசினாலே பெரிய விஷயம்”,

“நம்ம வினோத்த எவ்வளவு கஷ்டப்பட்டு அந்த பொண்ணோட நினைப்புல இருந்து வெளில கொண்டு வந்தோம் உனக்கு தெரியாததில்ல…… சாதனா அவனோட வாழ்க்கையில கிடைச்ச கிஃப்ட். மறுபடியும் எந்த குழப்பமும் வேண்டாம்”,

“பார்க்கும் போதெல்லாம் நடந்த கசப்பான நிகழ்வுகள் ஞாபகத்துல வரும்….. எல்லோருக்கும் மனவருத்தம்…. எனக்கு தெரிஞ்சு உங்கண்ணன் இப்போ தான் நல்ல பதவில உட்கார்ந்து இருக்கான்….. அந்த பொண்ணும் இப்போ தான் அவனோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சு இருக்குன்னு நினைக்கிறேன்…..”,   

“அவங்களும் நல்லா இருக்கணும், வினோத்தும் நல்லா இருக்கணும், வீணா உங்க அண்ணனோட ஒரு உறவை எதிர் பார்க்காத……”, என்று மிகவும் ஸ்ட்ரிக்ட்டான முறையிலேயே சொன்னான்.

“ம்”, என்று தலையாட்டுவதை தவிர வேறு வழியில்லை சௌம்யாவிற்கு.

காரில் ஒரு ஆழ்ந்த அமைதி….. அன்னகிளி நேராக ரோட்டை பார்த்துக் கொண்டிருந்தவள் விக்ரமின் புறம் பார்வையை கூட திருப்பவில்லை.

விக்ரமும் ஜனநெருக்கடி மிகுந்த பகுதி எல்லாம் போய் ஹைவேஸ் பிடித்ததும்….. “ஹேய் பேபி….. ஜனனி உன்னை மாதிரி ஒரு பெரிய பேபி இல்லை….. சின்ன பேபி அதான் தூக்கினேன்….. நம்ம பிரச்சனைகள்ள குழந்தை என்ன பண்ணுவா…..”, என்று விக்ரம் சொன்னது தான் தாமதம்……

“நான் என்ன பண்ணினேன்”, என்று வெடித்தாள் அன்னக்கிளி…..

“ஹேய் பேபி! கோபம் வேண்டாம், கூல்!”, என்று விக்ரம் சொல்ல, மறுபடியும் ஆத்திரம் பெருகியது அன்னகிளிக்கு…..  

“என் தப்பு என்ன? அதை முதல்ல சொல்லுங்க!”, என்று விக்ரமை நேரடியாக பார்த்துக் கேட்டாள் அன்னகிளி……

“மடப் பய, இப்போ தானா எங்க கண்ல பட்டு தொலைக்கணும்!”, என்று மனதிற்குள் வினோத்தை திட்டிய விக்ரம்….. “நீ தப்பு பண்ணினேன்னு யார் சொன்னா?”, என்று சமாதானத்திற்கு வர……

“அந்த இடியட் பண்ணின வேலைக்கு எல்லோரும் என்னை திட்டினாங்க தானே…. அவங்க எல்லாம் கூட அதை மறந்துட்டாங்க! ஆனா நீங்க இப்போ கூட என்னை மூணாவது கல்யாணம் பண்ணிக்க போறியான்னு கேட்டு திட்டுனீங்க!”, என்று சொல்லி அன்னகிளி தேம்பி தேம்பி அழ….

செய்வதறியாது திகைத்தான் விக்ரம்….. ஒரு ஓரமாக காரை நிறுத்தியவன்…..

“ஐயோ அனு! ஐ அம் சாரி, நீ டைவர்ஸ் அது இதுன்னு பேசின கோபத்துல வந்த வார்த்தை….”,

“என்னோட தப்பு இதுல என்ன….. எதையுமே நான் செய்யலையே… உங்க கூட நடந்த கல்யாணம் கூட என்விருப்பம் இல்லையே…. வீட்ல தானே செஞ்சு வெச்சாங்க…”,

“அவன் என்ன பண்ணினான்னு மத்தவங்களுக்கு தெரியாது…. உங்களுக்கு கூடவா தெரியாது…..”,

“சௌம்யா அக்கா தான் என்னை ஏதேதோ சொல்லி கூட்டிட்டு போனாங்க……. எனக்கு எதுவுமே தெரியாது….. அங்க போனா இவன் எனக்கு, எனக்கு……..”, என்று தேம்பியவளுக்கு வினோத் தாலி கட்டியதை சொல்லக் கூட பிடிக்கவில்லை.

“ஆனா நீங்க கொஞ்ச நேரத்துல வந்துடீங்க…. அப்போ அண்ணா கூட வரலை…… வந்தவுடனே சௌம்யா அக்காவை திட்டினாலும், அடிச்சாலும் அந்த இடத்தை விட்டு உடனே அனுப்பிச்சிடீங்க…..”,

“என்னையும் ரொம்ப ரிக்வெஸ்ட் பண்ணி கேட்டீங்க, சௌம்யா அக்கா பேர் சொல்ல வேண்டாம்னு…… நானும் இதுவரை யார்கிட்டயும் சொன்னது கூட கிடையாது. இதுக்கு அப்போ எனக்கு நீங்க யாருமே கிடையாது”,

“ஆனா நீங்களே என்னை மூணாவது கல்யாணம் பண்ணிக்க போறியான்னு கேட்கறீங்க….”,

“பண்ணினது அவன்! ஆனா எல்லோரும் என்னை பத்தி பேசினாங்க.. அந்த தாலியை கழட்டி வீசினப்போ பாராட்டினவங்களும் இருக்காங்க! திட்டினவங்களும் இருக்காங்க……! எப்படியோ என்னை பத்தி எல்லோரும் பேசினாங்க……..”,

“அந்த பேச்சுக்கள் அதிகமாகாம இருக்க, மறுபடியும் எனக்கு வினோத்னால பிரச்சனை வாராம இருக்க…… உங்களுக்கு என்னை கல்யாணம் பண்ணி வெச்சாங்க..”,

“இதுல என் தப்பு எங்க இருக்கு……”,

“என்னவோ உங்களுக்கு என்னை பிடிக்கலை…. எல்லோரும் ரொம்ப வற்புறுத்தி கல்யாணம் செஞ்சு வெச்சாங்க…. லதா அண்ணி உங்களை ரொம்ப வற்புறுத்தினாங்க! அப்போவும் இந்த பிரச்சனை சௌம்யா அக்கானால, அவங்களை சேர்ந்தவங்கனால….. அண்ணியோட சொந்தம்னு சௌம்யா அக்காவோட வினோத் எங்க வீட்டுக்கு வந்தப்போ என்னை பார்த்ததுனால……”,

“இப்படி அதனால தான் என்னை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டு இருப்பீங்க…… அது மத்தவங்களுக்கு தெரியாம இருக்கலாம் ஆனா எனக்கு தெரியுமுங்க.  அதுக்கப்புறம் அண்ணன் கொஞ்சம் பேசிட்டாரு தான்…… நீங்களும் என்னை விட்டுட்டு போயிட்டீங்க……”,

விக்ரமை அக்கு வேறு ஆணி வேறாக கணித்தாள்…. “இதுல என் தப்பு எங்க இருக்குங்க…….”,

“எத்தனை பேர் எத்தனை விதமா பேசியிருப்பாங்க தெரியுமுங்களா… but i dont mind anybody… ஏன்னா நான் ரொம்ப தெளிவா இருந்தேனுங்க…. நான் எங்கயும் மனசளவுல கூட தப்பு பண்ணலைன்னு…..”,

“கல்யாணம் முடிஞ்சு உங்க பின்னாடி கூட நான் வரலீங்களே….. அதுக்கப்புறம் கூட உங்களை என் கணவர்ன்ற முறையில தான் நினைச்சனுங்க…..”,

“அப்போ கூட உங்களை எனக்கு பிடிக்குமான்னு கூட யோசிச்சது இல்லைங்க…….. இந்த ரெண்டு நாளா தான் உங்களை எனக்கு பிடிக்குதுங்க, என் மனசு உங்களை தேடுதுங்க…..”,

“பட், இது கூட எனக்கு ஒரு மரியாதையில்லாத செயல் தானுங்க! ஏன்னா இந்த பிடித்தம் இப்போகூட நான் தான் உங்களை தேடி வந்ததால தான் வந்ததுங்க!  நீங்க என்னை தேடி வரலீங்களே…..”,

“அப்போவும் என்னை நிறைய திட்டுறீங்க, எனக்கு அது ஒன்னும் வலிக்கலைங்க…. ஏன்னா i know you are like that, ஆனா மூணாவது கல்யாணம் பண்ணிக்க போறியான்னு கேட்டபோ எனக்கு நிஜமா செத்து போகலாம் போல தான் இருந்ததுங்க”, என்று சொல்லி அவள் அழ….  

“ஹேய் பேபி! இங்க பாரு அழக்கூடாது! நான் தான் சாரி சொன்னேன் தானே!”, என்று வருத்தத்தோடு விக்ரம் கேட்டான்.  

“சாரி கேட்டா, சொன்னது இல்லைன்னு ஆகிடுமுங்களா?”,

விக்ரமிடம் இதற்கு பதில் இல்லை….. அதற்கு பதில் தேடிக்கொண்டோ, சொல்லிக் கொண்டோ இருக்க நேரமில்லை….. இப்போது என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையிலும் அன்னகிளி இல்லை, ஏனென்றால் இவ்வளவு பேசுவது அவள் இயல்பே இல்லை.

மௌனமாக காரை எடுத்தவன்….. அன்னகிளியின் வீட்டில் தான் மறுபடியும் நிறுத்தினான்.   

பிறகு அன்னகிளியை பார்த்து…….. “நீ என்னை தேடி வந்ததுக்காக இவ்வளவு பீல் பண்ண வேண்டிய அவசியமே இல்லை….. நீ ஒன்னும் உனக்காகவோ……. இல்லை ஐயோ நாமளாவது நம்ம குடும்பத்தோட இருக்கோம், நம்ம வீட்டுக்காரர் தனியா இருக்கார்னா வந்த…….?”,

“இல்லையே உங்க ரெண்டு அண்ணனுக்காக வந்த….. இப்போவும் நான் சொன்ன வார்த்தை தப்பு தான்…… ஆனா நீ எனக்காகவோ இல்லை, உனக்காகவோ என்னை தேடி வரலை…….”,

“கல்யாணம் ஆனா நாள்ல இருந்து நீ என்னை நினைச்சிட்டு இருந்திருப்ப இல்லைன்னு சொல்லலை, ஆனா உன் மனசு என்னை தேடிச்சா என்ன? இன்னும் என்னை யாராவது தேடுவாங்களான்னு கூட எனக்கு தெரியாது…… அட்லீஸ்ட் இந்த ரெண்டு நாளா என்னை நீ தேடுறன்றது எனக்கு சந்தோஷம் தான். அந்த சந்தோஷத்தை கூட நீ எனக்கு குடுக்க மாட்டியா…..?”,

இப்போது பேச்சற்று போய் நிற்பது அன்னகிளியின் முறையாயிற்று.    

அன்னகிளியும் இறங்கவில்லை….. விக்ரமிற்கு இறக்கிவிடவும் மனமில்லை….. கார் வாயிலில் நின்ற சத்தத்தை கேட்டு பிராபாகரன் வெளியில் வந்து பார்த்து…. வீட்டுக்குள் போய் சொல்ல…. எல்லோரும் அவசரமாக வெளியில் வந்து பார்த்தனர்.

அப்போதும் இருவரும் அப்படியே தான் அமர்ந்து கொண்டிருந்தனர்.

இருவரும் அசையாமல் உட்கார்ந்திருந்ததை பார்த்து மறுபடியும் என்னவோ என்று மொத்த வீடும் பதறி பார்த்தது.

Advertisement