சாப்பாட்டை நல்லதொரு கேட்டரிங் சர்வீஸில் ஒப்படைத்திருந்தான் கண்ணன். சமையலை அவர்கள் இடத்திலேயே முடித்து, பெரிய பெரிய பாத்திரங்களில் கொண்டுவந்து இறக்கியிருந்தார்கள். பந்தி பரிமாறவும் சீருடை அணிந்த பணியாளர்கள்.
மணமக்களோடு அவர்களுடைய குடும்பத்தார்களும் அமர, இலை போட்டு ஒன்றன் பின் ஒன்றாக பதார்த்தங்கள் பரிமாறப்பட்டது.
“டேய்… சிவா!” தன்னுடைய இலையில் அவியலை பரிமாறிய இளைஞனைப் பார்த்து உற்சாகமாக நந்தினி அழைக்க, அந்த கேட்டரிங் சர்வீஸுக்கே உரிய சீருடை அணிந்து தலையில் தொப்பியோடு நின்றிருந்த சிவா,
“ம்ம்… சிவா தான் மேம், லீவ் சமயம் இப்படியும் வேலைக்கு போவோம், சம்பளம் கிடைக்குமே! சோ, வெறும் வெட்டிப் பசங்க மட்டும் இல்ல நாங்க.” என்றவன்,
“திருமண வாழ்த்துகள் மேடம்” என்று உற்சாகமாக சொல்ல, சிரிப்போடு தலையாட்டி அதை ஏற்றுக் கொண்டவளின் கண்கள், சிவாவுக்கு பின்னால் நின்றிருந்த இளைஞனைக் கண்டு சுருங்கியது.
கேட்டரிங் சீருடை, தலையில் கேட்டரிங் தொப்பி, முகத்திற்கு மாஸ்க் சகிதம் கையில் பதார்த்த வாளியோடு நின்றிருந்தது சாட்சாத் சுரேந்தர் தான். அவனுக்கு தன்னுடைய அக்காவின் திருமண விஷயம் கேள்விபட்டதிலிருந்து அதில் கலந்து கொள்ள வேண்டும் என்று மூச்சுமுட்ட ஆசை. ஆனால் அதற்கு வழியில்லை என்பதால் கேட்டரிங் சீருடையை போட்டுக் கொண்டு வந்துவிட்டான்.
நந்தினியின் பார்வை மாற்றத்திலேயே தன்னைக் கண்டுகொண்டாள் என்பது சுரேந்தருக்கு புரிய, தன் வாளியிலிருந்த பதார்த்தத்தை நந்தினியின் இலையில் வைத்தவனின் கை நடுங்கியது.
அதைக் கவனித்த நந்தினி, “மாஸ்க்கை கழட்டு” என்றாள் கட்டளையாக.
“மேடம், அவனுக்கு ஜலதோஷம் பிடிச்சிருக்குன்னு சொன்னான், அதான் மாஸ்க் போட்டிருக்கான்.” சுரேந்தருக்காக பரிந்து கொண்டு பேசினான் சிவா.
வந்திருப்பது அவன் தான் என்று உறுதியானதும் கணவனை முறைத்து பார்த்த நந்தினி, “நீங்க தான் இந்த ஐடியா குடுத்ததா?” மெல்லிய குரலில் வார்த்தைகளை கடித்து துப்பினாள். கண்ணன் தானே கேட்டரிங் ஏற்பாடு. அதனால் அவன் தான் சுரேந்தர் இங்கேவர உதவி செய்துவிட்டான் என்ற எண்ணம் நந்தினிக்கு.
கண்ணனுக்கு சுரேந்தரை அங்கே கண்டது அதிர்ச்சி என்றால் மனைவியின் கேள்வியும் கோபமும் பேரதிர்ச்சி.
“நீ கிளம்பு சுரேந்தர், வீண் பிரச்சினை வேண்டாம்.” என்றான் கமலகண்ணன்.
ஏற்கனவே அந்த வைரலாகியிருந்த வீடியோவில் சுரேந்தரைப் பார்த்திருந்ததால் திலகம் உட்பட அவருடைய பிள்ளைகள் எல்லோருக்கும் அவனை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. சாப்பிடுவதை மறந்து எல்லோரும் அவனையே அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருக்க, ஒவ்வொருவரையும் ஏக்கம் மிகுந்த கண்களோடு பார்த்துக்கொண்டு மெதுவாக நகர்ந்து வந்த சுரேந்தர், திலகத்துக்கு அருகில் வரவும் நின்றான்.
“அவனைப் போகச் சொல்லுங்க அத்தான்.” பொறுமையை இழுத்துப்பிடித்தபடி நந்தினி சொல்ல, அவளைத் திருப்பிப்பார்த்து உதடுகள் பிரியாமல் சிரித்தவனின் சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று சத்தியமாக யாராலும் கணிக்க முடியவில்லை.
“உங்களுக்கு என்னை பிடிக்காதுன்னு தெரியும் க்கா, டென்ஷன் ஆகாதீங்க, நான் போயிடுறேன்.” கண்கள் லேசாக கலங்க சொன்னவன், யாரும் எதிர்பாராத விதமாக திலகத்தின் கைகள் இரண்டையும் பற்றி தன் கண்களில் ஒற்றியவாரே,
“சாரி பெரியம்மா… என்னை மன்னிச்சுடுங்க” என்றவன், விறுவிறுவென்று அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.
எதிர்பாராத அந்த நிகழ்வில் திலகம் அப்படியே சமைந்து போய் அமர்ந்து விட்டார் என்றால், லீலாவதியிடமிருந்து விம்மல் தெறித்திருந்தது.
மொத்தத்தில் தன்னுடைய செயலால் அந்த இடத்தையே கலங்கடித்துவிட்டு சென்றுவிட்டான் சுரேந்தர்.
அதற்கு நேர்மாறாக அவனுடைய வீட்டில் உற்சாகமான மனநிலையில் இருந்தார் கல்பனா.
இருக்காதா பின்னே? சமீபகாலமாக திலகத்தை ஏதாவது சொன்னால் வரிந்து கட்டிக்கொண்டு தன்னோடு சண்டைக்கு வரும் கணவரின் வாயில் இன்று திலகம் மானாவாரியாக அரைபட்டுக் கொண்டிருக்கிறாரே!
திருமணத்திற்கு அப்பா ஸ்தானத்தில் தன்னை அழைத்தே தீரவேண்டும் என்ற இறுமாப்பில் ராஜவேலு இருந்தால், அவரைக் கண்டுகொள்ளவே இல்லை திலகம். அந்த கோபத்தில் திமிர்பிடித்தவள், அகங்காரம் பிடித்தவள், அப்படி இப்படி என்று வசைமாரி பொழிந்தவரின் வேகம் இன்று உச்சத்தை தொட்டிருக்க, காதில் தேன்மழை பொழிந்தது போல உல்லாசமான மனநிலையில் அத்தனையையும் கேட்டுக் கொண்டிருந்தார் கல்பனா.
இதில் அவ்வப்போது ஏதாவது சொல்லி ராஜவேலுவை தூண்டிவிடவும் தவறவில்லை.
அப்போது ராஜவேலுவின் இரண்டாவது சகோதரி மாதவியிடமிருந்து, கல்பனாவின் அலைபேசிக்கு அழைப்பு வர, கல்யாண வீட்டில் நடந்த விஷயத்தை பற்றி ஏதோ கதை சொல்லப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் உற்சாகமாகவே அழைப்பை ஏற்றார் கல்பனா.
“சொல்லுங்க அண்ணி.” என்றைக்கும் இல்லாமல் உறவுமுறை சொல்லி கல்பனா அழைக்க,
“என்ன சொல்லுறீங்க?” சட்டென்று மொத்த ஆர்வமும் வடிந்துவிட படபடப்பாக கேட்டார் கல்பனா.
“ஹாங்… அதுவும் எங்க போயிருக்கான் தெரியுமா? உன் மூத்தார் வீட்டுல இன்னைக்கு கல்யாணம் நடக்குதுல்ல, அங்க போயிருக்கான். அவனா போனானா? இல்ல நீ எதுவும் ஐடியா பண்ணி அனுப்பி வச்சியா? அப்பிடின்னா, உன் புருஷனுக்காக கல்யாணத்துக்கு போகாம ஒதுங்கி நின்ன எங்களுக்கு என்ன மரியாதை?” சுரேந்தர் ஆர்வக்கோளாறில் செய்து வைத்த விஷயம் இது என்று புரிந்து கொள்ள முடிந்தாலும், தன்னுடைய கைச்சரக்கையும் சேர்த்தே கேள்வி கேட்டார் மாதவி.
கேட்ட விஷயத்தில் உடம்பெல்லாம் பற்றி எரிந்தது போலாகிவிட்டது அந்த பெண்மணிக்கு. தன் மகன் அந்த வீட்டு விசேஷத்துக்கு உணவு பரிமாறப் போனானா? விஷயத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாத கல்பனா கணவரிடம் சொல்ல, அவருக்குமே அதிர்ச்சி தான்.
தாமதிக்காமல் மகனுக்கு அழைத்தால், அவன் கைபேசியை அணைத்து வைத்திருந்தான்.
“போங்க, போய் நாலஞ்சு அடியைப் போட்டு அவனை இழுத்துட்டு வாங்க.” எல்லை மீறிய கோபத்தில் கல்பனாவின் குரல் கூட நடுங்கியது.
“நானா? அன்னைக்கு நான் போகும்போதே வெளியப் போ, இல்லைன்னா செக்யூரிட்டியை கூப்பிடுவேன்னு அந்த பெரியக் கழுதை சொல்லிச்சி. நான் அங்க போகல, நீ பெத்த தறுதலையை போன் பண்ணி நீயே கூப்பிடு.” இத்தனை மாதங்களாக மனைவியிடமிருந்து மறைத்த விஷயம் அவசரத்தில் வாய்தவறி வந்துவிட்டது.
“என்னது? நீங்க அங்க போனீங்களா? எப்போ? எதுக்கு?” மகனின் விஷயம் பின்னுக்கு சென்றுவிட, அதிர்ச்சி மிகுதியில் கணவனின் சட்டையை பிடித்து உலுக்காத குறையாக கேள்வி கேட்டார் கல்பனா.
தன் வாயாலேயே எக்கச்சக்கமாக மனைவியிடம் சிக்கிக்கொண்டதை உணர்ந்து கொண்ட வேலு நடந்ததைச் சொல்ல,
“இந்த காதுல பூச்சுத்துற வேலை எல்லாம் எங்கிட்ட வேண்டாம். அவங்களை வெறுப்பேத்த தான் போனீங்களா? இல்ல, மக எஸ்பி ஆனவுடனே அவங்ககூட உறவை புதுப்பிச்சிக்கலாம்னு போனீங்களா?” கணவனை நம்ப மறுத்து கேள்வி கேட்டார் கல்பனா.
“என்ன கல்பு, இப்பிடி கேட்டுட்ட? இங்க பாரு, இந்த ஃபோட்டோவைப் பாரு, இதைக்காட்டி தான் என்ன பிள்ளை வளத்து வச்சிருக்கன்னு அவளை நாக்கப் பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்க போனேன்.” என்றபடியே அனிதாவும் ஜெகத்ரட்சகனும் இருந்த போட்டோவை கல்பனாவிடம் காட்டினார் ராஜவேலு.
அதைப் பார்த்த உடனே ஜெகனிடம் தெரிந்த செல்வச்செழிப்பில் கல்பனாவின் மனம் வெதும்பிப் போக, “பையன் யாருன்னு தெரியுமா?” மெதுவாக விசாரணையில் இறங்கினார்.
“ம்ம்… வைரவமூர்த்தியோட பையனாம்.” இத்தனை நாட்களில் ஜெகனை அடையாளம் தெரிந்து கொண்டிருந்தார் ராஜவேலு.
“என்னது? வைரவமூர்த்தியோட பையனா?” மனதில் முளைத்திருந்த பொறாமை உணர்வு நொடியில் விடைபெற்று சென்றிருக்க, உற்சாகமாகிப் போனார் கல்பனா.
“ம்ம்… எனக்கும் அதுதான் யோசனையா இருக்கு.” மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக்கொண்டிருந்த பாசம் ராஜவேலுவை இப்படி பேச வைத்திருந்தது.
அந்த குரலில் உஷாரான கல்பனா அமைதியாகிப்போக, “என்னாச்சு கல்பு? ஏன் திடீர்னு அமைதியாகிட்ட?” என்று கேட்டார் வேலு.
“இல்ல, அந்த திலகத்தை கதறவிட எங்கிட்ட அருமையான யோசனை இருக்கு, ஆனா நீங்க என்ன சொல்லுவீங்களோ தெரியல?” கணவனின் முகத்தை பார்த்தபடியே இழுத்தார் கல்பனா.
“என்னவோ சாதனை செய்து கிழிச்சிட்ட மாதிரி அன்னைக்கு என்னா தெனாவெட்டா உக்கார்ந்திருந்தா, அவ கண்ணீர் விட்டு கதறணும், அதை நான் பாக்கணும், என்ன யோசனை சொல்லு?” கண்களிரண்டும் பழிவெறியில் மின்ன, ஆர்வமாக கேட்டார் வேலு.
“பேசாம அந்த வைரவமூர்த்தியைப் பார்த்து இந்த ஃபோட்டோவைக் காட்டிடுங்க, மீதியை அந்த ஆளு பாத்துப்பார்.” பளிச்சென்று கல்பனா சொல்லிவிட,