அந்த பள்ளியில் வேலைப் பார்த்து கொண்டே, பள்ளி நிர்வாகத்தையும் பார்த்துக் கொள்கிறான் ஜெகத்ரட்சகன். உண்மையைச் சொன்னால் பள்ளியின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொள்வதற்காகவே கல்வியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படித்திருந்தான் அவன்.
அந்த பள்ளியில் தான் தன்னுடைய பிஎட் படிப்பின் போது பயிற்சிக்கு சென்றது அனிதா. அப்போதே இருவருக்கும் ஒரு விருப்பம் இருந்திருக்கிறது. ஆனால் ஒருவருக்கொருவர் தெரியப்படுத்திக் கொள்ளவில்லை.
அதன்பிறகு வேலைக்காக அனிதா அங்கு சென்றபிறகு தான் ஜெகன் தன்னுடைய விருப்பத்தை அனிதாவிடம் சொல்லியது. வேலை என்றால், அரசாங்க வேலை இல்லை. ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க நிர்வாகம் தற்காலிகமாக நியமித்த ஆசிரியர் பணி தான். ஏற்கனவே அவன்மீது ஒரு அபிப்பிராயம் வைத்திருந்தவள், எந்த தயக்கமும் இன்றி அவனுடைய காதலை ஏற்றுக்கொண்டாள். அவர்கள் இருவரும் இணைந்து காதல் உலகில் காலடி எடுத்து வைத்து கிட்டத்தட்ட ஒரு வருடம் இருக்கும்.
இருவரும் மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தரும் புனிதமான பணியில் இருப்பதால் பள்ளியில் வைத்து தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ள முயற்சி செய்வதே இல்லை. கைபேசி மூலம் தங்களது காதலை வளர்த்துக் கொண்டவர்கள், பள்ளியில் சக ஆசிரியர்கள் மட்டுமே. அதனாலேயோ என்னவோ அவர்களுடைய காதல் இன்னமும் வைரவ மூர்த்தி வரை செல்லவில்லை.
இதோ, காதலை பரிமாறிக்கொண்ட பிறகு வந்த ஜெகனின் முதல் பிறந்தநாளில் சற்றே தங்கள் கொள்கையிலிருந்து அந்த காதலர்கள் பிறழ்ந்திருக்க, விஷயம் அனிதா வீடேறி வந்துவிட்டது.
“இப்போ என்ன பண்ணப்போறதா உத்தேசம் நந்தினி?” கண்ணன் கேட்க,
“என்னவா இருந்தாலும் உங்க கல்யாணத்துக்கு அப்புறம் தான் முடிவு செய்யணும்.” முந்திக்கொண்டு சொன்னார் திலகம்.
‘அதுவரையிலும் என்ன செய்வது? தங்கையை பள்ளிக்கு வேலைக்கு அனுப்புவதா? இல்லை வேலையை விடச் சொல்லுவதா? ஒருவேளை வைரவமூர்த்திக்கு விஷயம் தெரிந்து விட்டால், அதற்கான விளைவு எப்படி இருக்கும்?’ யோசிக்க யோசிக்க தலையை பிய்த்து கொள்ளலாம் போல இருந்தது நந்தினிக்கு.
இந்த வீணாகப்போன காதல் இப்படித்தான் வந்து தொலைக்க வேண்டுமா என்று கூட கோபமாக வந்தது நந்தினிக்கு. என்றாலும்,
“நாங்களும் பையனைப் பத்தி விசாரிக்கணும் அனி, பையனோட குணம் எங்களுக்கு திருப்தியா இருந்தா மட்டும் தான் கல்யாணம். அப்புறம் நீ எப்பிடி எங்களை எமோஷனலா கட்டிப்போடப் பாத்தாலும் எதுவும் வேலைக்காகாது.” என்றாள் கண்டிப்பான குரலில்.
“கண்டிப்பா உங்களுக்கும் அவரைப் பிடிக்கும் க்கா.” உறுதியான குரலில் சொன்னாள் அனிதா.
“ம்ம்.. பாக்கலாம். அதுவரைக்கும் உங்க காதலை அந்த வைரவமூர்த்திகிட்ட இருந்து காப்பாத்திக்கோங்க, அப்படியே தெரிந்தாலும் பிரச்சினை எல்லாம் உனக்கு தானே.” சொல்லும்போதே நந்தினியின் குரல் கலங்கிப் போனது.
“ம்ப்ச்… அப்படியெல்லாம் எதுவும் ஆகாது நந்து, நாம எல்லாம் எதுக்கு இருக்குறோம், பாத்துக்கலாம்.” தைரியம் கொடுத்த கண்ணன், மேற்கொண்டு என்ன செய்வது என்று திட்டமிட ஆரம்பித்தான்.
அதன்படி அதே பள்ளியில் அனிதா தொடர்ந்து வேலைக்கு செல்வது என்று முடிவானது.
இங்கே இப்படியென்றால், வைரவமூர்த்திக்கும் விஷயம் சென்றிருந்தது. ஆனால் இந்த அளவிற்கு தெளிவான செய்தி இல்லை.
ஆமாம்… வைரவமூர்த்தியை தெரிந்த நபர், “ நம்ம சின்னவரைப் போல ஒரு பையனை ஒரு பொண்ணோட திருநெல்வேலி ஜங்ஷன்ல பாத்தேன் தலைவரே” என்று போன் செய்து தகவல் கொடுக்க,
“எம்பையனையா? இல்ல, பையனை மாதிரியா?” வைரவமூர்த்தி குறுக்கு விசாரணை செய்த விதத்தில் தகவல் சொன்ன நபருக்கு உறுதியாக சொல்ல முடியாமல் தடுமாற்றம்.
“எதுவா இருந்தாலும் தெளிவா தெரிஞ்சிட்டு வந்து பேசும் வோய்.” தகவல் சொன்ன நபரை எச்சரித்திருந்தாலும், வைரவமூர்த்தியின் மனதிற்குள் சிறியதாக ஒரு சந்தேகம்.
ஏனென்றால் இளையமகனுக்கும் அவருக்குமிடையே கொள்கை ரீதியிலும், கருத்து ரீதியிலும் பெரிய வேறுபாடு இருந்தது. அதைக்கொண்டு தந்தைக்கும் மகனுக்குமிடையே அவ்வப்போது பூசல்களும் வெடிப்பது உண்டு. எனவே ஒருவேளை இருக்கலாமோ என்ற சந்தேகம் மனிதருக்கு.
‘சந்தேகம் என்று வந்தபிறகு மகனிடம் விசாரிக்காமல் விட்டுவிடக்கூடாது.’ முடிவெடுத்துக் கொண்டவர்,
‘அப்படியே தன்னைப் போலவே வளத்து வச்சிருக்கா பையனை.’ மனதிற்குள் மனைவியை நினைத்து கோபத்தில் பற்களைக் கடித்துக் கொண்டார்.
ஒன்று இல்லை, சூழ்நிலையின் காரணமாக இரண்டு திருமணம் செய்தும், இரண்டு மனைவியுமே வைரவமூர்த்தியின் குணத்திற்கு நேரெதிர் தான்.
ஆமாம்… மூத்த மனைவி தன்னுடைய இரண்டாவது பெண்மகவை அதாவது பூங்கோதையை பெற்றெடுக்கும் போது ஏற்பட்ட சிக்கலில் இறந்து போக, இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து எடுப்பதற்காக மூத்த மனைவியின் சொந்த தங்கை லட்சுமியே வைரவமூர்த்தியின் இரண்டாவது மனைவியாக வந்திருந்தார்.
இரண்டாவது மனைவிக்கும் வைரவமூர்த்திக்கும் பிறந்தவன் தான் ஜகத்ரட்சகன்.
மனைவிமார்கள் அவருடைய எதிர்பார்ப்புக்கு இல்லை என்றாலும் மூத்த மகனும் மருமகளும் அவருடைய எதிர்பார்ப்பை குறைவில்லாமல் நிறைவேற்றினார்கள்.
அதனால் மூத்த மகனின் திருமணத்திற்குப் பிறகு வீட்டில் மாமியார் லட்சுமியின் கையைவிட மருமகள் ராஜேஸ்வரியின் கையே ஓங்கியிருந்தது.. போதாதற்கு மூத்த மகனுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் வேறு. போதுமே ராஜேஸ்வரிக்கு, என்னவோ அந்த சாம்ராஜ்யத்துக்கு தானே ராஜமாதா என்ற பாவனை தான் அவளுக்கு.
இரவு உணவு நேரம் வந்தது. வைரவமூர்த்தியும் அவருடைய மூத்த மகனும், பேரன்களும் ராஜேஸ்வரி பரிமாற சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சற்று நேரத்தில் அங்கு வந்த ஜெகன், அவர்களைத் தாண்டி சமையலறையை நோக்கி செல்ல,
“ஜெகா, இங்க உக்காந்து சாப்பிடு. எனக்கு உங்கூட பேசணும்.” தன்னுடைய வார்த்தைகளால் மகனை நிறுத்தினார் வைரவமூர்த்தி.
அந்த வீட்டில் பெண்களுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் உண்டு. அதில் ஒன்று தான் வீட்டு ஆண்களோடு சேர்ந்து டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட அவர்களுக்கு அனுமதி மறுப்பு. ஆண்கள் சாப்பிட்ட பிறகு சமையலறையில் கிடக்கும் உணவு மேஜையில் தான் அவர்கள் சாப்பாடு.
“என்னோட அம்மா, அக்கா உட்காந்து சாப்பிடாத மேஜையில் எனக்கும் இடம் வேண்டாம்.“ என்று விபரம் தெரிந்த நாள் முதலாக அம்மாவோடும் அக்காவோடும் சமையலறையில் கிடக்கும் மேஜையில் தான் சாப்பாடு ஜெகனுக்கு.
இப்போது தகப்பன் சொல்லவும், “என்ன பேசணும், சொல்லுங்க?” உட்கார மறுத்து நின்றபடியே கேட்டான் ஜெகன்.
தன்னுடைய வீட்டுக்கு விஷயம் தெரிந்து விட்டது என்பதை அனிதா ஃபோன் செய்து அவனுக்கு சொல்லியிருக்க, ஒருவேளை யாராவது இங்கேயும் போட்டுக் கொடுத்திருப்பார்களோ என்ற எண்ணம் இருந்தது ஜெகனுக்கு. எனவே உடல்மொழியில் எந்த மாறுதலையும் காட்டிக்கொள்ளாமல் சாதாரணமாகவே நின்றிருந்தான்.
அவன் அங்கேயே நின்றதும் பெண்குழந்தை ஒன்று சமையலறை வாசலில் இருந்து எட்டிப்பார்த்து, “மாமா… உங்களுக்காக நான் வெயிட்டிங்” என்றது. அது வேறு யாருமல்ல, பூங்கோதையின் மகள் ஐஸ்வர்யா தான். பத்து வயது பெண்குழந்தை. ஆனால் வயதுக்கு ஏற்ற செழுமை இன்றி பூஞ்சையாகத் தான் இருந்தது.
“இல்ல, உன்னை ஒரு பொண்ணு கூட ஜங்ஷன்ல பாத்ததா சொன்னாங்க, அந்த பொண்ணு யாரு?” அந்த நபர் அறுதியிட்டு சொல்லாத விஷயத்தை உண்மை போலவே கேட்டார் வைரவமூர்த்தி. சரியாகச் சொன்னால் மகனிடம் போட்டுவாங்கினார் அந்த மனிதர்.