எப்போதும் அவனிடம் சிடுசிடுக்கும் மாமன் மகள், அவனுக்கு பிடித்த ஐஸ்கிரீமை ஞாபகம் வைத்து கொடுத்தால், மனம் சிறகடித்து பறக்காமல் என்ன செய்யுமாம்?
ஏதோ பாற்கடலில் கடைந்தெடுத்த அமிழ்தமே கையில் கிடைத்தது போன்ற பாவனையை அவன் காட்ட, தலையில் அடித்து கொள்ளலாம் போல இருந்தது நந்தினிக்கு.
பேச்சு அங்கே சுற்றி இங்கே சுற்றி அவர்கள் குடியிருந்த வீட்டை புதுப்பித்து கட்டுவதைப் பற்றி நடந்து கொண்டிருந்தது.
ஆமாம்… நீண்டநாட்களாகவே தன்னுடைய வீட்டை புதிப்பித்து கட்டும் எண்ணம் இருந்திருக்கிறது நாதனின் அண்ணனுக்கு. ஆனால் திலகம் குடும்பத்தை எழுப்பிவிட மனமில்லாமல் தன்னுடைய திட்டத்தை தள்ளிப் போட்டுக்கொண்டே வந்துள்ளார் அந்த மனிதர்.
தற்போது திலகம் தங்கள் திட்டத்தை அவருக்கு சொல்லிவிட்டே இங்கு குடிபெயர்ந்திருக்க, அவரும் வீட்டைப் புதுப்பிக்க இதுதான் சரியான நேரம் என்று களத்தில் இறங்கி விட்டார். தன் தம்பி மகன் அருளிடமே அந்த பொறுப்பையும் கொடுத்திருக்க, வேலை ஜரூராக நடந்து கொண்டிருக்கிறது.
அதைப்பற்றிய பேச்சு நடந்து கொண்டிருக்கும்போது வீட்டுக்கு முன்னால் வேகமாக ஒரு கார் வந்து நின்றது. அதன் சத்தத்தில் எல்லோரும் வாசலைப் பார்க்க, காரிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தார் ராஜவேலு.
ஆமாம்… ராஜவேலு தான்.
அங்கே அவரை எதிர்பார்க்காத எல்லோரின் முகத்திலும் யோசனை வந்து ஒட்டிக்கொள்ள, நந்தினியின் முகமோ அப்பட்டமாக தன்னுடைய வெறுப்பைக் காட்டியது. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து வேகமாக அவள் எழும்ப,
“திலகம்… ஏய் திலகம், என்ன பிள்ளை வளத்து வச்சிருக்க நீ…” சத்தமாக அதட்டியபடியே வீட்டுக்குள் வந்தார் ராஜவேலு.
அவர் பின்னோடு ஓடிவந்த கேட் செக்யூரிட்டி, “சார் உங்க அப்பான்னு சொன்னாங்க மேடம், நான் கேட்டு சொல்லுறேன்னு சொன்னேன். அதுக்கு முன்னாடி உள்ள வந்துட்டாங்க மேடம்.” என்றார் பதட்டமாக.
“நீங்க போங்க, நான் பாத்துக்கறேன்.” சாதாரணமான குரலில் நந்தினி சொல்ல, பயத்தில் திரும்பி திரும்பி பார்த்தபடியே சென்றார் செக்யூரிட்டி.
அந்த அரசாங்க வீடு, மகளுக்கு கிடைக்கும் மரியாதை, அத்தனையும் பார்க்கும் ஒரு சாதாரண தகப்பன் அகமகிழ்ந்து போவான். ஆனால் அதற்கு நேர்மாறான மனநிலையில் நின்றிருந்தார் ராஜவேலு.
ஆமாம்… தன்னை விட்டு தனியாக வந்தவர்களின் வளர்ச்சியை நேரடியாகவே பார்த்தவருக்கு எப்போதும் போல இப்போதும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அதுவும் அவருடைய மூத்த சகோதரியின் குடும்பமும் அங்கே இருக்க, “பெத்த பிள்ளை எங்க போயிருக்கான்னு கூடத் தெரியாம, கூட்டமா கூத்தடிக்கிறியே, நீயெல்லாம் என்ன பொம்பிள்ளை?” தன்னுடைய ஏமாற்றத்தையும் வெறுப்பையும் வார்த்தைகளாக்கி திலகத்தின் மீது கொட்டினார்.
ராஜவேலு அங்கே வந்ததே பேரதிர்ச்சியாக இருக்க, அவர் சொன்ன எதையும் புரிந்துகொள்ள முடியாமல் அவரையே உறைந்து போன பார்வையோடு பார்த்துக் கொண்டிருந்தார் திலகம்.
அவர் சொன்ன விஷயம் மூளையில் பதிவானாலும், அதை ஓரமாக ஒதுக்கி வைத்த நந்தினி, “மரியாதை… எங்க அம்மாவை மரியாதையா பேசணும். அந்த கடவுளாவே இருந்தாலும் எங்க அம்மாவை மரியாதை குறைவா பேசுறதை என்னால அனுமதிக்க முடியாது.” சீறலாக சொன்னவள்,
“மொதல்ல வீட்டை விட்டு வெளியப் போங்க. நீங்களா போனா உங்களுக்கு நல்லது. இல்லைன்னா செக்யூரிட்டியை கூப்பிட வேண்டிவரும்.” என்றாள் தன் முழு உயரத்துக்குமாக நிமிர்ந்து நின்று.
மகளின் ஆளுமையான தோற்றத்திலும் பேச்சிலும் அசந்து போய் அவளையே வேலு பார்த்தபடி நிற்க,
“இங்க வந்து எதுக்கு பிரச்சினை பண்ணுற மாப்ள? மொதல்ல கிளம்பு.” ராஜவேலுக்கு அருகே வந்த நாதன் நாசூக்காகவே அவரை வெளியேற்ற முயன்றார்.
“எல்லாத்துக்கும் காரணம் நீங்களும் உங்க பொண்டாட்டியும் தான். நீங்க மட்டும் அவளுக்கு ஆதரவு குடுக்கலைன்னா அடங்கி என் காலடியில் கிடந்திருப்பா.” வருடங்கள் பல கடந்த பின்னும் இப்போதும் அவர்களையே குற்றம் சாட்டினார் அந்த மனிதர்.
“மாமா ப்ளீஸ்… உங்களுக்குள்ள சட்டப்படி எதுவுமே இல்லைன்னு முடிவாகிடிச்சி. இதுக்கு மேல நீங்க இங்க வந்து பிரச்சினை பண்ணுனா தப்பா போயிடும், கிளம்புங்க.” இது கண்ணன்.
“என்னடா? எல்லாரும் எனக்கு பூச்சாண்டி காட்டுறீங்களா?” எகிறினார் ராஜவேலு.
“பூச்சாண்டி காட்டலை, ஒரு ஃபோன், ஒரே ஒரு ஃபோன் பண்ணுனாப் போதும், வந்து அள்ளிட்டு போயிடுவாங்க. பாக்குறீங்களா?” அமர்த்தலான குரலில் நந்தினி கேட்க,
“கூட பிறந்த தங்கச்சி எங்க போறா வர்றான்னு தெரியாத நீயெல்லாம் போலீஸ்னு வெளிய சொல்லிக்காத.” என்றார் முகத்திலடித்தாற் போல.
இப்போது நந்தினிக்கு விஷயம் பிடிபட்டு விட்டது. இருந்தாலும் மூன்றாம் மனிதராகிப் போயிருந்த தன்னைப் பெற்றவரிடம், தங்கையைப் பற்றி எதையும் கேட்டு தெரிந்து கொள்ள மனமின்றி,
“அதையெல்லாம் நாங்க பாத்துக்குறோம், நீங்க இப்போ கிளம்புங்க. மறுபடியும் இங்க வர முயற்சி செய்யாதீங்க.” என்றாள் அலட்சியமாக. இத்தனை நடந்தும் பார்வையாளராக அமைதியாகவே அமர்ந்திருந்தார் திலகம். அவரைப் பார்த்து,
“என்னமோ பெரிய இவளாட்டம் எம்பிள்ளைகளை நானே வளத்துப்பேன்னு கூட்டிட்டு வந்தியே… என்ன பெருசா வளத்து கிழிச்சிட்ட? இத்தனை வயசுக்கு அப்புறமும் உன் பெரிய பொண்ணுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்க துப்பில்லை உனக்கு. அடுத்தது எவன் கூடவோ ஹோட்டல்ல உக்காந்து சாப்டுட்டு இருக்கு. இதே எங்கையில மட்டும் பிள்ளைங்க இருந்துருந்தா இப்பிடி எல்லாம் நடக்குமா? இல்ல, நடக்கத்தான் விட்டுருப்பேனா? தட்டி வளக்க தகப்பன் வேணுங்குறது இப்போதாவது புரியுதா உனக்கு?” அடுக்கடுக்காக திலகத்தின் மீது குற்றச்சாட்டை வைத்தவர், ஏதோ திலகத்தையே வெற்றி கொண்டது போல கெக்கலித்தார்.
ராஜவேலு இரண்டாவதாக சொன்ன விஷயத்தில் எல்லோரும் அதிர்ந்து போனார்கள் என்றாலும், “என்ன உளர்ற வேலு?” என்று தம்பியை அதட்டினார் லீலாவதி.
“இப்படி சொல்லுவீங்கன்னு தெரிஞ்சு தான் போட்டோ எடுத்துட்டு வந்துருக்கேன்.” அனிதாவும் ஒரு இளைஞனும் எதிரெதிரே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்த புகைப்படத்தை லீலாவதியின் முகத்துக்கு நேராக வேலு காட்ட, ச்சை என்று ஆகிப்போனது எல்லோருக்கும்.
“ஒரு நல்ல தகப்பன் செய்யுற வேலையா இது? உன்னால முடிஞ்சிருந்தா அனிதா கிட்ட அங்கவச்சே விசாரிச்சு இருக்கணும். இல்லையா, இப்படி விஷயம் பாத்துக்கோங்கன்னு யார் மூலமாவது வீட்டுக்கு தகவல் கொடுத்திருக்கணும். அதைவிட்டுட்டு நீ எதை நிரூபிக்க இப்பிடி பண்ணிவச்சிருக்க, ரொம்ப அசிங்கமா இருக்கு வேலு.” என்றார் லீலாவதி வெறுப்பாக.
உண்மையில் அனிதாவை ஒரு இளைஞனோடு பார்த்ததும், திலகத்தை குற்றம் சுமத்த ஒரு வாய்ப்பு கிடைத்ததாகத்தானே புகைப்படத்தை எடுத்துக்கொண்டு ஓடோடி வந்திருக்கிறார் வேலு.
ஆனால் அவர் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக, எந்தவிதமான உணர்ச்சிகளையும் முகத்தில் காட்டாமல் அமைதியாக இருந்து அந்த மனிதருக்கு வெறி ஏற்றினார் திலகம்.
“இந்த திமிரும் அலட்சியமும் இன்னும் எத்தனை நாளைக்குன்னு பாக்கத்தானே போறேன். நீ பெத்துவச்சிருக்குற பொட்டப்பிள்ளைங்க எல்லாம் உன்னை அம்போன்னு விட்டுட்டு போகத்தான் போறாங்க. எப்படியிருந்தாலும் உன் கடைசி காலத்துக்கு நான் தான் உனக்கு. அதை மட்டும் ஞாபகம் வச்சிக்கோ” என்றவர் வேகமாக அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
அவர் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அனிதா வந்திருந்தாள். வீட்டுக்குள் வந்தவளை எல்லோருடைய கண்களும் ஒரே நேரத்தில் அளவிட, இயல்பாக பேசமுடியாமல் தடுமாற்றம் அவளிடம்.
“செலிப்ரேஷன் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா அனி?” ஒரு மாதிரி குரலில் நந்தினி கேட்க,
“ம்ம்… முடிஞ்சது க்கா.” என்றாள்.
“ஃபோட்டோ எடுத்துருப்பீங்களே, அதை எங்களுக்கும் காட்டுறது.” நந்தினி கேட்ட விதத்திலேயே சிறு நடுக்கம் உடம்பில் பரவ, பதிலேதும் சொல்லாமல் தமைக்கையின் முகத்தை பரிதாபமாக பார்த்தாள்.
“ம்ம்… குடு அனிதா.” தங்கையின் அருகில் வந்து நந்தினி கையை நீட்ட, வேறுவழியில்லாமல் அதில் தன்னுடைய கைபேசியை வைத்தவள், கூடவே கைபேசியின் கடவுச் சொல்லையும் சொன்னாள்.
மெச்சுதலாக தங்கையை ஒரு பார்வை பார்த்தவள், கைபேசியில் காலரியை திறந்து பார்க்க, சற்று நேரத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இருந்தன. அத்தனையிலும் அனிதாவோடு ஒரு இளைஞன் இருந்தான்.
அவனை எங்கோ பார்த்தது போல இருந்தது. கண்களை மூடி யோசித்தவளுக்கு பளிச்சென்று ஞாபகம் வர, தன்னைப்போல முகம் அசூசையாக சுருங்கியது.
“இவர் தான் உங்கூட வேலை பாக்குறவரா? இவருக்கு தான் பிறந்தநாளா? அதைக் கொண்டாடத்தான் போனயா?” தங்கையின் கண்களை கூர்ந்து பார்த்தபடி நந்தினி விசாரணையில் இறங்க,
“ம்ம்…” என்று தலையாட்டினாள் அனிதா.
அவ்வளவு தான்… பளாரென்று தங்கையை அறைந்திருந்தாள் நந்தினி.