Advertisement

அத்தியாயம் ஒன்பது:

லலிதா வந்த சிரிப்பை பெரும் பாடுபட்டு அடக்கினாள், சிரிப்பு அடங்கினாலும் முகத்தில் புன்முறுவல் அப்படியே இருந்தது.

கதிர் இதை ஆரம்பத்தில் கவனிக்கவில்லை. வேலை விஷயமாக முதலில் அவளோடு பேசியவன், பேச்சு போய் கொண்டு இருக்கும் போது தான் பார்த்தான் அவள் முகத்தில் இருந்த மலர்ச்சியை.

எதற்கு இவள் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறாள் என்று இருந்தது. அவளிடம் கேட்கவில்லை. அந்த மலர்ந்த முகத்தை மனதிற்குள் ரசித்தவாறே படம்பிடித்தான்.

அவன் அவளை விரும்புவதை அறியாத லலிதா. “இந்த முகமும் யாரையாவது விரும்புமா”, என்று கதிரை பற்றி நினைக்க. அவன் விரும்பும் முகமே அவள் தான் என்று தெரியவில்லை.

லலிதாவிற்கு கதிருக்கு பார்த்த பெண் லூசென்பதை நினைத்து நினைத்து சிரிப்பு வந்து கொண்டே இருந்தது. கதிர் அந்த புறம் நகர்ந்ததுமே சத்தம் வராதவாறு வாய் விட்டு சிரித்தாள்.

“ஆண்பிள்ளைகளோட பேசாம உன்னால வேலை பார்க்க முடியாதான்னு என்னை எப்படி கேட்டான். என்னை எப்படி அடிச்சான்”, என்று அன்றைய தினத்தின் நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வந்து சிரிப்பை முகத்தில் இருந்து மறைய வைத்தது.

பின்பு  தான் வேலையை அமைதியாக பார்க்க ஆரம்பித்தாள். அவள் வேலையை ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே ஹாலில் சலசலப்பு கேட்க. பார்வையை எட்டி போட்டாள்.

பெண் வீட்டிற்கு சென்றவர்கள் எல்லாரும் திரும்பி இருந்தனர். என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆவல் உந்தினாலும் தன்னுடைய செய்கை சற்று அதிகப்படியாக தோன்ற, முயன்று கவனத்தை வேலையில் திருப்பினாள்.    

அங்கே வந்த வித்யாவின் மாமியார், ஜானகி பாட்டியிடம் விவரத்தை கூற ஆரம்பித்தார்.

“அத்தை, கீதா பொண்ணை பிடிக்கலைன்னா அவ தங்கச்சி சித்ரா பொண்ணை கல்யாணம் கட்டிகறீங்களான்னு கேட்கறாங்க”, என்றார்.

இதை அவரும் எதிர்பார்க்கவில்லை.

“இது என்னடியம்மா கதையா இருக்கு. ஏற்கனவே ஒரு லூசு பொண்ணை காட்டியிருக்காங்க. அதுக்கு பதில் சொல்லாம அடுத்த பொண்ணை கட்டிகறீங்கலான்னு கேட்டா என்ன அர்த்தம்?”, என்று கோபப்பட ஆரம்பித்தார்.

“அது தான் இல்லைன்னு ஆகிபோச்சு இல்லைம்மா அதையே பேசி என்ன பிரயோஜனம்”, என்றார் கதிரின் தந்தை.

“நீ என்னடா இவ்வளவு அசால்டா பேசற”, என்று அவர் மீதும் கோபப்பட அப்போது தான் வித்யா, கதிர், சபரி, என்று எல்லாரும் குழும ஆரம்பித்தனர்.

“என்ன பாட்டி கோபப்படறீங்க. அவங்க ஏதாவது பிரச்சினை பண்றாங்களா”, என்று வித்யா கேட்க.

“நீ வேற ஏண்டி?. இவங்களை அங்க போய் ரெண்டு பேச்சு பேசி கல்யாணத்தை நிறுத்திட்டு வாங்கன்னு சொன்னா புதுசா சம்பந்தம் பிடிச்சிட்டு வந்து இருக்காங்க. அக்காகாரி போயி தங்கச்சிகாரி வந்திருக்கா.  என்னனு சொல்றது இந்த கூத்தை. எனக்கு ஒண்ணும் சரிவரும்னு தோணலை”, என்றார் பட்டென்று.

கேட்டு கொண்டிருந்த சபரியின் உள்ளம் பதை பதைத்தது. இப்படி ஒரு சூழல் வரும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை. என்ன செய்வது என்றும் புரியவில்லை. அங்கே சித்ரா என்ன நிலையில் இருக்கிறாளோ. என் காதல் அவளுக்கு தெரியுமா. என்ன செய்வது?”.  

“என்ன”, என்று அவள் பங்கிற்கும் அதிர்ந்தாள் வித்யா. கதிரின் முகத்தை பார்க்க அவனும் இதை எதிர்பார்க்கவில்லை என்று அவனின் ஆச்சர்யமான பாவனை காட்டியது.

“வித்யா அண்ணன் நம்மை போல அதிர்வான்”, என்று பார்த்தாள். “ஆச்சர்யத்தை காட்டுகிறான். என்ன சொல்வது?”, என்று அவனை இப்போது அவளும் ஆச்சர்யமாக பார்த்தாள்.

“அப்போது பெண் மாறியதில் இவனுக்கு சம்மதம் தானா”.

வித்யாவிற்கு அவள் அண்ணனை பற்றி சரியாக தெரியவில்லை. அவனுக்கு அந்தஸ்து, கௌரவம், இதெல்லாம் தான் முக்கியம். பெண் யார் என்பது எல்லாம் பிற்பாடு தான். அவர்கள் வீடு சொல்லும்படியான அந்தஸ்தில் இருக்கிறதா. பெண் அழகாக இருக்கிறாளா. இதைத்தான் அவன் பார்பான்.

அவர்களிடம் இருந்து அவன் சீரையோ வரதட்சனையோ எதிர் பார்க்கவில்லை. ஆனால் குடும்பம் கட்டாயம் பேர் சொல்லும்படியாக பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்த்தான்.

இந்த காரணங்கள் எல்லாம் தான் லலிதாவிடம் இருந்து அவனை தள்ளி நிறுத்தியது. தன்னிடம் தன் ஏவல் வேலைகளை செய்யும் ஒருவரின் மகள், அவளும் தன்னிடம் வேலை பார்க்கிறாள் என்ற அந்தஸ்து பேதத்தின் காரணமாக. கதிரின் மனம் விடாமல் லலிதாவின் புறம் சாய்ந்தாலும் அதை அடக்கினான்.          

ஆச்சர்யமான முக பாவத்தில் இருந்து யோசனையாக மாறியது கதிரின் முகம். அப்போதும் லலிதாவின் புறம் அவன் மனம் சாய்வதை அவனுக்கு சொல்ல மனம் வரவில்லை. தனக்கு திருமணம் ஆகிவிட்டால் சரியாக போகும் என்றே நினைத்தான்.

“மொதல்லையும் நீங்க சொல்லி தான் சரின்னு சொன்னேன். இப்போவும் நீங்க சொன்னா சரின்னு சொல்றேன்”, என்றான் ஒரு நிமிட யோசனையில்.

வித்யா ஒன்றுமில்லாத விஷயத்தை நாம் தான் யோசித்து பெருசாக்கி விட்டோமா என்று நினைக்க ஆரம்பித்தாள். “அண்ணன் சாதரணமா லலிதாவை விழாமல் பிடித்ததை நான் மேலே இருந்து பார்த்து அணைத்ததாக தப்பர்த்தம் செய்து விட்டேனோ”, என்று நினைத்தாள்.

பிறகு அப்பாவை பார்க்க. “இந்த பொண்ணு விவரமா தான் தெரியுது”, என்று சதாசிவம் சொல்ல.

அப்போது பார்த்து வித்யாவின் மாமனார். “இது நம்ம சபரியோட கூட படிச்ச பொண்ணு. அவனுக்கு நல்லா தெரியுமே”, என்று எடுத்துக் கொடுத்தார்.

எல்லாரும் இப்போது சபரியை பார்க்க அவன் என்ன சொல்வான். அவனுக்கு இன்னும் சித்ரா தன்னை விரும்புகிறாளா என்றே தெரியாது. சித்ரா தான் அவளை விரும்புவதை உணர்ந்திருப்பாள் என்ற ஒரு அனுமானம் தான். அதை மட்டும் வைத்து ஒன்றும் சொல்லிவிட முடியாதே. ஆயிரத்தில் ஒரு பங்காக ஒரு வேலை அவள் தன்னை விரும்பாமல் இருந்துவிட்டால் அவள் பெயரை களங்கப்படுத்தியது போல ஆகிவிடுமே என்று யோசித்து கொண்டிருக்க.

“சொல்லு சபரி பொண்ணு எப்படி, உனக்கு தெரிஞ்சு ஏதாவது குறையிருக்கா. பொண்ணை இப்போ தான் பார்த்தோம். அழகா இருக்கா. பார்க்க பதவிசா இருக்கா. நீ என்ன சொல்ற?”, என்று அவனிடம் கேட்டார் அவனது தந்தை.

“நல்ல பொண்ணுப்பா”, என்றான் அவனையும் மீறி குரல் கரகரத்தது. “சொல்ற மாதிரி எதுவும் குறையில்லை”, என்றான் உணர்ந்த குரலில்.

“அப்புறம் என்ன சரின்னு சொல்லிடலாம்”, என்றார்கள் பெரியவர்கள்.

“அவசரபடறமோன்னு தோனுது”, என்றார் ஜானகி பாட்டி.

“இப்படி சொன்னா எப்படிம்மா”, என்றார் சதாசிவம்.

“நானே சரியா பார்க்காம சம்மந்தம் பேசிட்டு இப்போ நிருத்தறமேன்னு  வருத்தமா இருந்தேன். கடவுளா பார்த்து அதுக்கு ஒரு வழி விட்டுருக்கார். வேண்டாம்னு அச்சானியமா பேசாதம்மா. அதே மூகூர்த்தத்துலயே முடிச்சிடலாம். என்ன பத்திரிக்கையை மாத்தி அடிக்கணும்”. 

“என்னவோ எனக்கு தோணினதை சொல்றேன். நீங்க இவ்வளவு தீவிரமா இருக்கறது முக்கியமில்லை. பையன் என்ன சொல்றான்”, என்று கதிரை ஜானகி பாட்டி பார்க்க,

“உங்களுக்கெல்லாம் எப்படி சரின்னு படுதோ செய்ங்க”, என்றான்.

“இப்படி சொன்னா எப்படி அண்ணா?”.

“எனக்கு ஒண்ணுமில்லை வித்யா. கல்யாணம் வரைக்குமே நான் யாரையும் மைன்ட்ல பிக்ஸ் பண்ணமாட்டேன். எனக்கு நீங்க எப்படி பண்ணினாலும் சரி. ஆனா நமக்கு சரி சமமா இருக்கற இடமா பாருங்க”, என்றான்.

“முதல்ல ஜாதகம் பாருங்கடா”, என்று பாட்டி சொல்ல. 

இதையெல்லாம் கேட்ட வித்யா லலிதாவை தன் அண்ணி ஆக்கும்  ஆசையை மனதிற்குள்ளேயே புதைத்தாள். கதிர் மட்டும், லலிதாவின் புறம் உள்ள ஆசையை வார்த்தையால் சொல்ல வேண்டியதே இல்லை, ஒரு பார்வை பார்த்திருந்தாள் கூட திருமணத்தையே முடித்து வைத்திருப்பாள். இப்போது ? இப்போது என்ன செய்ய முடியும்.

“இவன் ஏன் இவ்வளவு அழகிற்கும் அந்தஸ்திர்க்கும் முக்கியத்துவம் கொடுக்கிறான். அதையும் மீறியதல்லாவா வாழ்க்கை. அதன் நிம்மதி”. கதிர் மேல் கோபம் கோபமாக வந்தது வித்யாவிற்கு.

சபரி ஒரு புறம் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவன்., சித்ராவிடம் பேசியே ஆகவேண்டிய அவசியத்தை உணர்ந்தவன்., என்ன செய்வது என்று யோசிக்கலானான்.

அவர்கள் எல்லாரும் மெதுவாக பேசவில்லை. ஓரளவு சத்தத்துடன் தான் பேசினர்.  உள்ளே இருந்து காதை தீட்டி வைத்து இவ்வளவு விஷயத்தையும் அறிந்த லலிதாவின் மனமும் பதைபதைத்தது. ஏனென்றால் சபரியின் காதல் அறிந்த ஓரே ஜீவன் லலிதா தான்.

இந்த சபரி ஏன் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருக்கிறான். தைரியமாக விஷயத்தை சொல்ல வேண்டியது தானே. தைரியமில்லாதவர்கள் காதலிக்க கூடாது என்றே தோன்றியது.

இந்த கதிர் ஏன் இப்படி இருக்கிறான். அந்தஸ்து, அழகு, என்று. ஒரு வேளை உண்மை தெரியாமல் இருந்து. அந்த வளர்ந்தும் வளராத பெண் மனைவியாக வந்திருந்தாள் என்ன செய்திருப்பான்.

யோசனை கதிரை பற்றி தறிகெட்டோட. “உனக்கு ஏண்டி அவன் கிட்ட வம்பு, பட்டதெல்லாம் போதாதா. வேலையை பாருடி. பெரிய இடத்து சமாச்சாரம், உனக்கு எதுக்கு பொல்லாப்பு”, என்று மனசாட்சி இடித்துரைக்க மறுபடியும் வேலையை பார்க்க ஆரம்பித்தாள்.

அந்த இடத்தை விட்டு அகன்ற சபரி சித்ராவை போனில் அழைத்தான்.

“என்ன சித்ரா நடக்குது? உனக்கு இதுல சம்மதமா?”,

அவன் எதை பற்றி கேட்கிறான் என்று புரிந்த சித்ரா. “நீங்க என்ன நினைக்கறீங்க, என் சம்மதம் இருக்கும்னா”, என்று பதில் கேள்வி கேட்டாள்.

“சரி, என்ன பண்ணலாம்”,

“எனக்கு தெரியலை. நீங்க சொல்லுங்க. ஏற்கனவே என் அக்கா கல்யாணம் நிக்கற தருவாயில என் கல்யாணத்தை பேசி இருக்காங்க. அதுவும் உங்க அப்பா அம்மாகிட்டயே பேசியிருக்காங்க. என்னால இந்த சூழல்ல மறுத்து பேசமுடியாது. நீங்களே ஏதாவது செய்ங்க”, என்றாள் சித்ரா.

“சரி என்ன செய்ய முடியும்னு பார்க்கிறேன். நான் என்ன முடிவு எடுத்தாலும் என் கூட இருப்ப இல்லையா. பின் வாங்க மாட்டியே”.

“இல்லை மாட்டேன்”, என்றாள்.

 இருவரும் ஒருவருக்கொருவர் காதலை வார்த்தையால் சொல்லாமலேயே காதலை திருமணத்தில் முடிக்க திட்டமிட்டார்கள்.

போன் பேசி ஹாலுக்கு வந்து பார்த்தாள் ஹால் காலியாக இருந்தது.

அவனுக்கு தெரியவில்லை. பெண் வீட்டில் ஜாதகம் வாங்கி பொருத்தம் பார்த்து முடிவு செய்து வர. அவன் அப்பாவும் அம்மாவும் போய் இருக்கிறார்கள்.

அது தெரியாமல் இவன் விஷயத்தை அம்மாவிடம் சொல்லிவிடலாம் என்று அன்னையை தேட.

“வெளிய போய் இருக்காங்க”, என்று சொன்னாள் வித்யா.

எங்கே என்று கேட்கும் சமயம். வித்யாவை கதிர் கூப்பிட. “தோ வர்றேன்”, என்று சொல்லி சென்றாள் வித்யா.

யாருமில்லாததால் லலிதாவிடம் பேச வந்தான் சபரி.

அவன் முகம் பார்த்தே அவன் மனநிலையை உணர்ந்த லலிதா. “என்ன செய்ய போறீங்க”, என்றாள்.

“தெரியலை அம்மா கிட்ட சொல்ல போறேன். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. நான் இங்கே வந்ததுக்கு காரணமே சித்ராவோட ஊர் நாமக்கல் அப்படின்றதாலதான். அவளோட பழக ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்கலன்னாலும் கண்லயாவது பார்க்க முடியுமேன்னு தான் இங்கே வந்தேன்”.

“அவங்க அக்காவோட இங்க சம்மந்தம் நடந்தா. எனக்கு ஈஸி யா இருக்கும்னு பார்த்தேன். இப்படி நடக்கும்னு நானே எதிர்பார்க்கலை”, என்றான் வருத்தத்தோடு.

“எது செஞ்சாலும் சீக்கிரம் செய்ங்க. இல்லைன்னா மறுபடியும் கல்யாணம் நிச்சயம் ஆகிடும்”, என்று லலிதா சொன்னாள். சொல்லிவிட்டாள் தான் ஆனாலும் உதைத்தது. இது கதிரின் வாழ்க்கை தலையிடாதே. அவனுக்கு தெரிந்தால் நிறைய பிரச்சினை செய்வான் என்று தோன்றியதால் அடுத்த நிமிடம் வாயை மூடிக் கொண்டாள்.

இதே யோசனையில் சபரி உளன்று கொண்டிருக்க. நேரம் கடந்து கொண்டிருந்தது. வெளியே சென்றிருந்த அவன் அன்னையும் தந்தையும் வந்து இருந்தனர்.

நிறைய வேலை செய்து இருந்தனர். ஜாதகம் பார்த்து பெண்வீட்டில் சம்மதம் தெரிவித்து. அன்றே மீண்டும் பத்திரிகை அடிக்க கொடுத்த வந்திருந்தனர். ஏனென்றால் அவர்கள் பார்த்த மூகூர்த்திற்கு இன்னும் இருபது நாட்களே இருந்தது.

சபரி அவன் அன்னையிடம் சொல்லலாம் என்று நினைத்திருந்ததை அப்படியே விழுங்கினான். சபரியின் அன்னையும் கதிரின் கல்யாணத்தில் மிகவும் மும்முரமாக இருந்ததால் தன்னுடைய மகனிடம் தெரிந்த மாற்றத்தை கவனிக்க தவறினார். இயல்பிலேயே லோட லோட என பேசும் சபரி அமைதியாகி விட்டான்.

அவன் மனதில் ஓடிகொண்டிருந்தது எல்லாம் என்ன செய்வது? என்ன செய்வது? மட்டுமே. நிச்சயம் சித்ராவை விட முடியாது. அதே சமயம் பத்திரிகை அடிக்கும் முன் ஏதாவது செய்ய வேண்டும். இல்லையென்றால் கொஞ்சம் பேருக்கு தெரிந்தது. இன்னும் எல்லோருக்கும் தெரிந்து அவமானமாகிவிடும்.

யோசித்து. யோசித்து. ஒரு முடிவே மனதில் நின்றது.

செயல் படுத்த முடிவு செய்தான். எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து தானே ஆக வேண்டும். அன்னைகூட  இல்லாத போது தந்தையிடம் என்றான்.

“அப்பா எனக்கு பணம் வேண்டும்”, என்றான்.

“எதுக்குடா”,

“சொல்ற மாதிரி இருந்தா சொல்லி கேட்க மாட்டேனா”, என்றான்.

அவனையே பார்த்தார். அவனும் விடாமல் அவரையே பார்த்தான். அவனை பார்த்தவாறே. “எவ்வளவு”, என்றார்.

மனதில் கணக்கு போட்டவன், “இரண்டு லட்சம்”, என்றான்.

அவ்வளவா மறுபடியும் எதுக்குடா என்றார் காதிலேயே வாங்காதவன் போல பிடிவாதமாக நின்றான். பின்பு அவரே “எப்போ வேணும்”, என்றார். 

“நாளைக்கு”, என்றான்.

“சரி தர்றேன்”, என்றவர். “எதுக்குன்னு சொல்லுடா ஏதாவது பிரச்சினையில மாட்டிக்க போற”,

“பிரச்சினை வந்தா என்னை விட்டுடுவீங்கலாப்பா”, என்றான்.

இதற்கு என்ன சொல்ல முடியும். அவர் மிகவும் பாசமான தந்தை தான். பிரச்சனையை சொன்னால் தீர்வு சொல்லுவார் தான். ஆனாலும் வேண்டாம் என்று சொல்லி எதிர்த்து செய்வது என்பது முடியாது. சொல்லாமலேயே செய்ய முடிவு செய்தது. அதனால் தான்.

அவர் ஒன்றும் பேசாமல் அவன் மேல் கைபோட்டாவர், “உனக்கு என்ன தோணுது நான் விட்டுடுவேணா”,.

“இல்லை”, என்று மறுத்தவன் இடத்தை விட்டு நகரும் முன். “நமக்குள்ளேயே இருக்கட்டும்ப்பா. அம்மாக்கு தெரிய வேண்டாம்”, என்றான்.

“என்ன விஷயமோ”, என்று மனம் பதைத்தாலும் வளர்ந்த பிள்ளை தனியாக முடிவெடுத்து வாழ்கை வாழ கற்றுகொள்ள வேண்டும் என்று நினைத்தவர். என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தீர்மானமாக முடிவடுத்தார். வரப்போவதை அறியாதவராக.   

யாருக்கு சபரியிடம் உள்ள வித்தியாசம் தெரிந்ததோ, இல்லையோ, இரண்டு பேருக்கு தெரிந்தது,  லலிதாவிற்கு நன்கு தெரிந்தது விஷயம் தெரிந்ததினால். விஷயம் தெரியாமலேயே கதிருக்கும் தெரிந்தது.

கலகலப்பாக பேசும் சபரியின் பேச்சுக்கள் மிஸ்ஸிங். அன்று இரவு உணவருந்தும் போதே கவனித்தான். என் கல்யாணத்தில் தானே பிரச்சினை. இவன் ஏன் இப்படி இருக்கிறான் என்று கவனித்தான் கதிர்.

யாருமில்லாத போது அக்கறையுடன் கேட்க வேறு செய்தான். “ஏதாவது பிரச்சனையா சபரி. நான் ஏதாவது உதவி செய்ய முடியுமா”, என்று.

இந்த அக்கறை சபரிக்கு பெரும் குற்ற உணர்ச்சியை கொடுத்தது. “ஒண்ணுமில்லை மாமா”, என்றான். “இவர் எப்பொழுதும் போல் நம்மிடம் சிடு சிடு வென்றே இருக்கலாம் போல. ஏன் இப்படி திடீரென்று அக்கறை”, என்றே தோன்றியது கதிரை  பார்த்து சபரிக்கு.        

அப்பொழுதும் அவனை யோசனையாக பார்த்துக்கொண்டு சென்றான் கதிர்.

விஷயம் தெரிய வரும் போது இவர் என்னிடம் எப்படி நடந்து கொள்வார் என்றே யோசனை ஓடியது சபரிக்கு. இருந்தாலும் செய்தது தானே ஆகவேண்டும் என்று யோசித்து படுத்திருந்தான் சபரி.

காலையில் லலிதா வேலைக்கு வந்த போது சபரி வீட்டில் இல்லை. கதிரும் இல்லை. காலையிலேயே கதிரிடம் சபரி சொல்லியிருந்தான். எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு. ரெண்டு நாளைக்கு என்னை எதிர்பார்காதீங்க. எனக்கு லீவ் வேண்டும் என்று சொல்லி சென்றிருந்தான். மறுபடியும் கதிர் அவனிடம், “ஏதாவது பிரச்சனையா என்ன விஷயம்”, என்று கேட்டதற்கு. “ஒன்றுமில்லை”, என்றே சபரியிடம் இருந்து பதில் வந்தது.

அன்று லலிதா போகும் வரையிலும் சபரி கண்ணில் படவில்லை. இங்கு வீட்டில் கல்யாண வேலையை ஆரம்பித்து இருந்தனர். கதிர் அன்று பார்த்து லலிதாவிற்கு நிறைய வேலை கொடுக்க, “எப்படி இவனால் இப்படி இருக்க முடிகிறது. வாழ்கையின் முக்கிய முடிவு நேற்று அதன் போக்கை மாற்றி இருக்கிறது. அதன் சுவடு சிறிதும் இல்லாமல் வேலை பார்த்து கொண்டிருக்கிறான்”.

“எப்படி இவனால் முடிகிறது”, என்று அவனையே பார்த்திருக்க. ஏதோ யோசனையாக லலிதா தன்னையே பார்ப்பதை கதிர் உணர்ந்தாலும் வாய் விட்டு கேட்கவில்லை. வேண்டுமென்றால் கேட்கட்டும் என்று விட்டு விட்டான்.

லலிதா இன்னுமே யோசனையாக தான் பார்த்திருந்தாள். “இன்னும் சபரி வேறு என்னசெய்ய போகிறானோ. இவன் அதை எப்படி எடுத்து கொள்ளப்போகிறானோ”, என்று.

“இந்த லலிதா ஏன் என்னை இப்படி பார்க்கிறாள்”, என்று கதிரும் அவளை பதிலுக்கு, “என்ன”, என்பது போல ஒரு பார்வை பார்க்க. பார்வையை அவசரமாக திருப்பினாள் லலிதா.

“யார் எப்படி போனா உனக்கென்னடி. உன் வேலையை பார்”, என்று மனதிற்குள் தன்னை தானே திட்டியவாரே.

கதிரின் பார்வை தன்னை துளைப்பதை உணர்ந்தும் உணராமல் வேலையை பார்த்தாள்.

சும்மாவே அவன் உன்னை முறைச்சு முறைச்சு பார்ப்பான். இப்போ நீ அவனை வேற பார்த்து வெச்சிட்டியா. அதை அவன் வேற பார்த்துட்டானா. முடிஞ்சடி நீ. பாரு இப்போ முறைக்கிறான். நல்ல வேலைக்கு வந்து சேர்ந்த நீ. வேற யாராவதா இருந்தா ஒரு வழி பண்ணியிருப்பேன், இவனை தான் பார்த்தாலே எனக்கு பயமா இருக்கே? கடவுளே என்னை இவன் கிட்ட இருந்து காப்பாத்து”, என்று சம்மந்தம்மே இல்லாமல் அந்த நேரத்தில் கடவுளை துணைக்கழைத்தாள்.

கதிரே அவள் வேண்டாம் என்று நினைத்தாலும் முடியுமா. காலத்தின் கோலங்கள் செய்யும் ஜாலங்கள் மிக அதிகம்.        

Advertisement