Advertisement

அத்தியாயம் எட்டு:

உறக்கத்தில் எப்பொழுதும் போல லலிதா வந்தாள், இல்லையில்லை அவள் முகம் வந்தது. ஆனால் அவனை கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவள் எதுவுமே பேசவில்லை. இவனும் எதுவும் பேசவில்லை. வந்தாள். சென்றாள். ஒரு பார்வையை மட்டும் வீசி. அது “உன் தைரியம் இவ்வளவு தானா”, என்று கேட்டது. “நீ எப்படி வேண்டுமானாலும் பார்த்துக்கொள், நான் இப்படி தான்”, என்று பதில் பார்வை பார்த்து இருந்தான் கதிர்வேல்.    

எப்பொழுதும் போல காலையும் வந்தது. ஆனால் விழிப்பு வரவில்லை. இத்தனை ப்ரச்சனைக்குள்ளும் நல்ல நிம்மதியான உறக்கத்தில் இருந்தான் கதிர்.

“காலையில பேசிக்கலாம்ன்னு சொல்லிட்டு, என்ன தூக்கம் தூங்கறான்?”, என்று திட்டி கொண்டே எழுப்பினாள் வித்யா. “என்ன அண்ணா நீ? இப்போ பத்திரிக்கை வந்துடும். பெண் வீட்ல யாருக்காவது வைக்கறதுக்கு முன்னாடி ஏதாவது செய்யனும். என்ன செய்யணும் எந்திரி”,

“ம்”, என்றான். யாரோ எங்கோ அழைப்பது போல இருந்தது. சாமான்யத்தில் விழிப்பு வரவில்லை.

“எந்திரி”, என்று வித்யா பிடித்து உலுக்கிய பிறக தான் விழித்தான்.

“ம், என்ன?”,

“அண்ணா அப்பா நீ எந்திரிக்கரதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கார். எந்திரி வா”, என்று கையோடு அவனை இழுக்க.

“நீ போ! நான் வர்றேன்”,

“வாண்ணா”, விட்டாள் அழுதுவிடுவாள் போல இருந்தாள். அவளுக்கு இன்னும் எல்லோருக்கும் தெரியும் முன் எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும். அதே ஞாபகம். 

“போ வித்யா, பாத்ரூமாவது போயிட்டு வர்றேன்”, என்று அவளிடம் சொல்லி அவன் உள் புக.

அங்கேயே அமர்ந்திருந்தாள் அவன் வரும் வரை.

அவனுக்கு வந்து பார்த்ததும் சிரிப்பு வந்தது. “எதுக்கு வித்யா இவ்வளவு டென்ஷன்’,

“பின்ன கல்யாணத்தை நிறுதத்றதுன்னா சும்மாவா. நான் முன்னாடியே சரி பார்த்து இருக்கணும். ஏதோ தப்பு பண்ற மாதிரி ஒரு பீலிங்”,

“நம்மை மீறி நடக்கற விஷயத்துக்கு நாம பொறுப்பில்லை”, என்றான் கதிர் அவனையறியாமல்.

லலிதாவும் அவனை மீறி நடக்கும் விஷயம் என்பதை உணர்ந்தும் உணராமல்.

“வா”, என்றழைத்து தன் தந்தையிடம் சென்றவன். “என்ன அப்பா?”, என்றான்.

“என்ன கதிர் செய்யட்டும்”,

“பிடிக்கலைன்னா நிறுத்திடலாம் அப்பா. கல்யாணம் வரைக்கும் எதுவும் நான் மைண்ட்ல பிக்ஸ் பண்ணமாட்டேன் அப்பா”, என்றான் லலிதாவின் முகம் அவன் மனக்கண்ணில் மின்னி மறைந்ததையும் ஒதுக்கி.

அவர் காலையில் பெண் வீட்டினர் வீட்டிற்க்கே போய் பேசி வருவதாக தெரிவித்தார்.

காலை லலிதா வந்த போது வீடு வழக்கத்தை விட  மிகவும் அமைதியாக இருந்தது. “என்னடா இப்படி இருக்கு. இத்தனை பேர் இருக்காங்க. ஒரு சத்தத்தையும் காணோம். பிள்ளைங்க சத்தத்தை கூட காணோம்”, என்று அவள் கண்கள் குழந்தைகளை தேடியது.

குழந்தைகள் டிவி முன் அமர்ந்திருந்தனர். “என்ன விளையாடலையா?”, என்று இவள் சைய்கையால் கேட்க. அங்கிருந்து ஓடி வந்த ராகேஷ். “அம்மா கோபமா இருக்காங்க. இங்க விட்டு நகர கூடாது சொல்லியிருக்காங்க”, என்றான்.

“சரி நீங்க போங்க. அம்மா சொன்னா கேட்கணும்”, என்று அவசரமாக அனுப்பினாள். “என்னடா இது? என்ன நடக்குது தெரியலையே?”,  என்று மனதிற்குள் நினைத்தவள் சபரி கண்ணில் படுகிறானா என்று பார்த்தாள்.

அவனும் தென்படவில்லை. “நீ வேலையை ஆரம்பி லலிதா”, என்று அவளுக்கு அவளே சொல்லியவாறு வேலையை பார்த்தாள், கண்களையும் காதையும் ஹாலில் வைத்தவாறு. ஒரு சத்தமும் இல்லை. ஆள் நடமாட்டமும் இல்லை. இங்கே லலிதாவிற்கு வேலையே ஓடவில்லை.

சிறிது நேரம் கழித்து சதாசிவம் வித்யாவுடன் பேசியவாறு வந்தவர், “நீயும் வர்றியாம்மா. அந்த பொண்ணை உனக்கு தானே தெரியும். எனக்கு பேச சுலபமா இருக்கும்”, என்ற போதே வித்யாவின் மாமியாரும் மாமனாரும் சென்னையில் இருந்து வந்தனர். 

“நீங்க எப்படி திடீர்ன்னு”, என்று வித்யா ஆச்சர்யப்பட. “பொண்ணு உங்க அத்தையோட சொந்தம், அவ தானே சொன்னா. அதனால நீங்க போங்கன்னு உன் புருஷன் நேத்து நைட்டே எங்களை கிளப்பி விட்டுட்டான்மா”, என்றார் அவளின் மாமனார்.

அவர் வந்த குரல் கேட்டு அவசரமாக சபரி வந்து அவனும் அதே கேள்வியை கேட்டான். “என்னப்பா திடீர்ன்னு?”, என்று அவன் கேட்டுகொண்டிருக்கும் போதே அங்கே வந்த கதிர் தனக்கு தாய்மாமாவும் ஆக வேண்டிய வித்யாவின் மாமனாரை பார்த்து. “வாங்க மாமா”, என்று சொன்னவன். “உன் வேலையா இது”, என்று வித்யாவை பார்க்க. “நான் இல்லை அவங்களா தான் வந்தாங்க”, என்று வித்யா அவசரமாக சொன்னாள்.

ஜானகி பாட்டியும் அங்கே வர. வந்தவர் இவர்களை பார்த்து. “வாங்க”, என்ற வார்த்தையை கூட சொல்லாமல். “நீங்க இருந்தும் இப்படி ஆகிடுச்சே .பொண்ணு உன் சொந்தம்ன்றதால தானே கொஞ்சம் அசால்டா இருந்துட்டோம்”, என்று வித்யாவின் மாமியாரை கடிய.

“எங்களுக்கு கொஞ்சம் கூட தெரியாதும்மா. இப்படின்னு தெரிஞ்சா விட்டிருப்போமா”, என்று பாட்டிக்கு அவர் சமாதானம் சொன்னார்.

“அதாம்மா கிளம்பி வந்துட்டோம். நாங்களும் அண்ணனோட போய் இந்த சம்மந்தம் சரிவராதுன்னு பேசிட்டு வர்றோம்”, என்று சொல்லி பெரியவர்கள் மூவரும் சதாசிவம், வித்யாவின் மாமியார், மாமனார், கிளம்பினார்கள்.

கதிர் ஒரு வார்த்தை பேசாமல் அமைதியாக பார்த்திருந்தான். வித்யா தான் அவர்கள் கிளம்பும் வரை வாய் ஓயாமல் பேசினாள். சபரி என்ன செய்வது என்று அறியாதவனாக இதையெல்லாம் ஒரு பதட்டத்தோடு பார்த்திருந்தான்.

அவர்கள் சென்றதும் வித்யா கதிரை ஒரு பிடிபிடித்தாள். “உன் கல்யாணத்தை தானே நிறுத்த சொல்றேன். நீ இப்படி நின்னா நாங்க என்னமோ வேணும்னு செய்யற மாதிர் இருக்கு. நீ எதுவும் வாயை திறந்து பேசமாட்டியா”,.

“மனசுல இருக்கறதை சொல்லனும். அதை விட்டுட்டு சும்மா எனக்கென்ன வந்ததுன்னு இருக்ககூடாது. நீ சொன்னா தானே தெரியும் இல்லைன்னா உன் மனசுல இருக்கறது எனக்கெப்படி தெரியும்”, என்றாள்.

“அதுதான் நிறுத்த சொல்லியாச்சுள்ள, சும்மா என்னை ஏன் குடையுற”,.

“என்ன? உன்ன குடையுறாங்க. மனசுல என்ன இருக்குன்னு சொல்லுன்னா அது குடையுற மாதிரியா”,.

“நான் நீங்க சொல்லி தானே பொண்ணை பார்க்க வந்தேன். வேண்டான்னு சொல்றதுக்கு ஒரு காரணமும் இல்லை சரின்னு சொன்னேன். இப்போ நீ வேண்டாம்னு சொல்லுன்னு சொன்ன. சொல்லிட்டேன். அப்புறமும் மனசுல என்ன இருக்குன்னு கேட்டா நான் என்ன சொல்வேன்”.

“அப்போ உன் மனசுல ஒன்னுமேயில்லையா”, என்றாள் வித்யா லலிதாவை மனதில் வைத்து.

“ஒண்ணுமில்லை! ஒண்ணுமில்லை! போதுமா இன்னும் ஏதாவது சொல்லனுமா”,

வித்யா இப்போது குழப்பத்தில் ஆழ்ந்தாள். “லலிதாவை அவன் அணைத்து பிடித்தது தற்செயலாக நடந்ததா. நான் அதை அதிகப்படுத்துகிறேனா. இவனுக்கு லலிதாவின் மேல்  விருப்பம் இல்லையா. மீண்டும் குழம்பியது நெஞ்சம்”.

“எப்படியோ போ”, என்று அவனிடம் எரிந்து விழுந்தாள்.

“என்ன வித்யா? என்னன்னு சொன்னா தானே தெரியும்”, என்று தனிவாகவே கேட்டான்.

“இல்லை, இல்லை”, என்று இழுத்தவள். “நீ யாரையாவது விரும்பறியா”, என்று கேட்க வந்துவிட்டு. சபரி இருப்பதை பார்த்து “ஒண்ணுமில்லை போ”, என்று சொல்லிவிட்டு சென்றாள்.

அங்கே பெண் வீட்டிற்கு சென்ற மூவரும் யார் பேச்சை ஆரம்பிப்பது என்று தயங்க. அவர்களும் இவர்கள் மூவரும் வந்திருப்பதை பார்த்து என்னவோ ஏதோ என்று பதட்டபட்டு நின்றிருந்தனர்.

நேற்று வித்யா பெண்ணிடம் பேசியதில் இருந்தே அவள் அம்மா மன சஞ்சலத்தில் தான் இருந்தார். இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்க வேண்டுமே என்று.

மெதுவாக வித்யாவின் மாமியார். “அண்ணி, பொண்ணை திடீர்ன்னு பையன் பிடிக்கலைன்னு சொல்றான். தப்புதான். கல்யாணம் பண்ணி பிறகு ரசாபாசம் ஆகி பிரச்சினை வந்து டைவர்ஸ் அது இதுன்னு போகறதுக்கு பதிலா இப்பவே கல்யாணத்தை நிறுத்திடலாமா?”, என்றார் பட்டென்று.

கீதாவின் தந்தையின் முகமும் தாயின் முகமும் அப்படியே விழுந்துவிட்டது. அது காட்டிய வேதனை யார் முகத்தையும் அசைக்கும்.

“ஏன் இப்படி திடீர்ன்னு.”, என்றார் கீதாவின் அம்மா,  “இப்படி சொன்னா எப்படி.”, என்றார் கீதாவின் அப்பா.

“பெண் லூசு மாதிரி நடக்கிறாள். அரை வேக்காடாக இருக்கிறாள்”, என்று எந்த வார்த்தையும் கதிர் வீட்டினர் யாரும் சொல்லவில்லை.

“என்னவோ பிடிக்கலைன்றாங்க. இந்த காலத்து பசங்க அதிகமா வற்புறுத்த முடியாது. இருந்தாலும் சொன்னா கேட்பாங்க தான். ஆனா இப்போ சொல்லி கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வச்சுட்டு பின்னால பிடிக்காம ரொம்ப பிரச்சினை ஆகக்கூடாது இல்லையா. என்ன பண்ணலாம் சொல்லுங்க”, என்றார் கதிரின் அப்பா.

பெண்ணின் அம்மா அப்பா இருவர் முகங்களும் கோபத்தை காட்டவில்லை. வருத்தத்தையே காட்டின.

பதிலுக்கு அவர்களும், “எதுவும் செய்ய முடியாதுங்களா”, என்று இவர்களையே திருப்பி கேட்டனர்.

தங்கள் பெண்ணின்  அரை குறை தனத்தை அறிந்தவர்கள் தான். ஆனால் அது எல்லா நேரமும் வெளிபாடாது, சில நேரங்களில் மட்டுமே வரும். திருமணம் ஆனால் அதுவும் சரியாக போகும் என்றே அவளை பற்றி தெரிந்தவர்கள் சொல்ல. அதை நினைத்தே திருமணத்தை ஏற்பாடு செய்த்தனர்.

அப்போது கீதாவின் அம்மா அவர் தந்தையிடம். “யாராவது ஏழையாக ஏதாவது நிர்பந்தத்தில் இருக்கும் பையனாக. விஷயத்தை சொல்லியே பார்க்கலாம்”, என்று தான் சொன்னார்.

அவர்கள் அதை யோசித்து கொண்டு இருக்கும் போதே இந்த சம்மந்தம் வர. எல்லாம் தானாக நடக்கவும் சிறிது அலட்சியமாக இருந்துவிட்டனர். அது இங்கே கொண்டுவந்து நிறுத்திவிட்டது.

பெண் வீட்டினருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அப்போது பார்த்து இதை எதையும் அறியாத சித்ரா குடிக்க அவர்களுக்கு  காபி எடுத்து கொண்டு வர. அவள் அவர்களுக்கு அதை கொடுத்து கொண்டிருக்கவும். அவர்கள் மறுக்க. “எடுத்துக்கங்க”, என்று வற்புறுத்திய அவளின் அன்னை அவசரமாக அவளின் தந்தையை  உள்ளே அழைத்தார்.

வந்தவரிடம். “என்னங்க நம்ம கீதாவை பிடிக்கலைன்னா என்ன? அது நம்ம தப்பு கூடத்தான். ஆனா அதுக்காக எதுவும் சண்டை போடாம எவ்வளவு பெருந்தன்மையா வந்து பொண்ணை பத்தி குறை சொல்லாம பையனுக்கு பிடிக்கலைன்னு நாசூக்கா சொல்றாங்க. நல்ல சம்பந்தம் விட வேண்டாம், பேசாம நம்ம சித்ராவை சொல்லலாமா?”, என்றார்.

அவர் சொல்வதும் நல்ல யோசனையாக கீதாவின் தந்தைக்கும் பட அவர் யோசிக்கலானார். “இதுக்கு அவங்க ஒத்துக்குவாங்களா. நம்ம கீதாக்கு என்ன பதில் சொல்லுவோம். சித்ரா இதுக்கு சம்மதிப்பாளா”, என்று அடுக்கடுக்காக கேள்வியை அடுக்க. “எனக்கு மட்டும் என்ன தெரியும். நம்ம சேர்ந்து தான் இதை நடத்தனும். எதுக்கும் பேசிப்பார்போம் வாங்க” என்று எப்படி பேசவேண்டும் என்று சொல்லி கொடுத்து அழைத்துகொண்டு ஹாலுக்கு வந்தார். 

அவர்களிடம். “நீங்க என்ன காரணத்தால மறுக்கறீங்கன்னு எங்களுக்கு புரியுது. கீதா ரொம்ப செல்லமா வளர்ந்துட்டா. ரொம்ப சில சமயம் அதனால சின்ன குழந்தை மாதிரி இருக்கும் அவ நடவடிக்கை. கல்யாணம் ஆனா சரியாபோயிடும்னு தான் எல்லாரும் சொன்னாங்க. பையனுக்கு பிடிக்கலைன்னா கட்டாயம் ரிஸ்க் எடுக்க முடியாது. ஏன்னா வரப்போற பையன் அவகிட்ட அனுசரிச்சி நடந்தா அவ நல்ல படியா நடந்துப்பா. இல்லைனா பையனுக்கும் கஷ்டம் அவளுக்கும் கஷ்டம்”.

“ரொம்ப செல்லமா வளர்ந்த இந்த காரணத்துக்காக நிக்குதுன்னா எனக்கு ஒரு யோசனை தோணுது. சொல்லடும்ங்களா”, என்றார் அவர்களின் தந்தை.

“என்ன?”, என்பது போல அவரை பார்த்தனர் கதிரின் அப்பாவும் அவனின் மாமாவும் அத்தையும்.

“ரெண்டு வீட்லயும் கல்யாணம்ன்றது எல்லோருக்கும் தெரிஞ்சு போச்சு, இப்ப போய் கல்யாணத்தை நிறுத்த வேண்டாம். எங்க சித்ராவை உங்க பையனுக்கு பார்க்கறீங்களா”, என்றார்.

இந்த யோசனையில் மூவரும் அதிர்ந்தனர். இப்படி ஒரு விஷயத்தை அவர்கள் யோசிக்கவும் இல்லை. எதிர்ப்பார்க்கவும் இல்லை.

அந்த சம்மந்ததை விட கீதாவின் வீட்டினருக்கு மனமே இல்லை. அதனால சித்ராவை அவசரமாக மணமகளாக்கி முன் வைத்தனர்.

அதிர்ந்தது அவர்கள் மூவர் மட்டுமல்ல சித்ராவும் தான். ஆனால் எல்லோர் முன்னிலையிலும் பேச முடியாதவளாக மௌனியானாள். அதுவும் சபரி வந்திருப்பவர்களின் பிள்ளை வேறு. அவளை எதுவும் பேச விடாமல் செய்தது.

எல்லாரும் ஒருவைகயான உணர்ச்சியின் பிடியில் இருந்தனர். மெதுவாக சதாசிவம், “யோசனையை தப்புன்னு சொல்ல முடியாது. நாங்க வீட்ல போய் பையனோடையும் கலந்து பேசிட்டு முடிஞ்ச வரைக்கும் நல்ல தகவலாவே சொல்றோம் . எப்படி இருந்தாலும் முடிவை ஏத்துகங்க”, என்று சொல்லி எழுந்தனர்.

அங்கே வீட்டில் இருந்த அமைதி, அவசரமாக வித்யாவின் மாமியாரும் மாமனாரும் வந்தது. மூவருமாக கிளம்பி சென்றது, கதிர் அவன் ரூமில் போய் அடைந்து கொண்டது. வித்யா அவள் ரூமில் போய் அடைந்து கொண்டது, ஜானகி பாட்டி காலையிலேயே ஹாலில் உள்ள சோபாவிலேயே படுத்து கொண்டது. பேச்சுக்களை அரை குறையாக கேட்டதில் நல்லது மாதிரி தெரியவில்லை. லலிதாவிற்கு என்ன? என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்ட  சபரியை எதிர் நோக்கி காத்திருந்தாள்.

அப்படி அடுத்தவர் விஷயத்தை நோன்டுபவள் அல்ல லலிதா. தான் உண்டு தன் வேலை உண்டு என்று தானிருப்பாள். ஆனாலும் அன்று ஏனோ ஆர்வமாக இருந்தது. அது கதிர் விஷயம் என்பதாலா தெரியவில்லை. 

சிறிது நேரம் கழித்து முகத்தை தொங்க போட்டவாறே இவளை கூட கவனிக்காமல் சபரி அவள் ஆபிஸ் ரூமை கடக்க. “ஹலோ”, என்று அவனை அழைத்தாள்.

அவன் என்ன என்பது போல பார்க்க. “உள்ளே வாங்க”, என்பது போல கையாட்டின்னாள்.

உள்ளே வந்தவனிடம். “யாருக்காவது உடம்பு சரியில்லையா, வீடே ரொம்ப அமைதியா இருக்கு. சார் கூட இன்னைக்கு கோழிபண்ணைக்கு போகலை போல. நீங்களும் இருக்கீங்க. என்ன ஆச்சு”, என்றாள்.

“ஒண்ணுமில்லைங்க, இன்னும் எனக்கே ஒண்ணும் சரியா தெரியலை, வந்தா தான் தெரியும்”, என்றான் அவனுக்கிருந்த குழப்பத்தில்.

“யார் வந்தா? என்ன தெரியும்?”,

“பொண்ணு வீட்டுக்கு போய் இருக்கறவங்க வந்தா தெரியும், கல்யாணம் நடக்குமா நடக்காதான்னு”,

“ஏன்”, என்றாள் ஆச்சர்யமாக.

“அது”, என்று இழுத்தவன் அக்கம் பக்கம் பார்த்து மெதுவாக. “பொண்ணு கொஞ்சம் லூசு போல”, என்றான்.

“என்ன லூசா”, என்று சற்று குரல் உயர்த்தி அதிர்ந்தாள்.

“அச்சோ கத்தாதீங்க”, என்று பதட்டமானான் சபரி.

“உங்களுக்கும் தெரியாதா”, என்று அடுத்த கேள்வியை கேட்டாள். “எனக்கு தெரியாது”, என்பது போல தலையசைத்தான்.

“எப்படி தெரியாம போகும். சித்ரா உங்க ஆள் அப்படின்றீங்க. அவங்க இதை பத்தி பேசினதே இல்லையா”,

“இல்லை”, என்று தலை அசைத்தான்.

“முன்னன்னா பரவாயில்லை. ஆனா இப்போ கல்யாணம் நிச்சயம் ஆனா பிறகு கூட உங்களுக்குள்ள இந்த பேச்சு வரலையா”,

“இல்லை, ரொம்ப செல்லாம வளர்த்தோம், என்னை மாதிரி எங்கக்கா ரொம்ப விவரம் எல்லாம் இல்லைன்னு ஒரு தரம் சொல்லியிருக்காங்க. ஆனா இப்படின்னு எனக்கு தெரியாது”, என்றான்.

“கல்யாணம் நின்னுடுச்சுன்னா உங்க காதல் என்ன ஆகும்”, என்றாள் லலிதா.

“அது தான் என்னோடைய இப்போதைய பயம். அம்மாவும் அப்பாவும் வேற போய் இருக்காங்க. அவங்களோட சண்டை பண்ணிட்டு வந்துட்டா.”, என்றான் அது சொல்லும் போது அவன் குரலில் தெரிந்த வருத்தம் லலிதாவிற்கு சிரிப்பு வருமோ என்று தோன்றியது.

இந்த காதல் ஒரு மனிதனை என்ன பாடு படுத்துகிறது என்று அவள் நினைக்கும் போதே அங்கே கதிர் வேலையாக வர, சபரியின் பேச்சும் அவள் பேச்சும் நின்றது, அவளுக்கு ஒரு முறைப்பும் பரிசாக கிடைத்தது.

அந்த முறைப்பை பார்த்தவள், “இப்படி இந்த சபரி ஒரு பெண்ணுக்காக இப்படி உருகுகிறானே. இவன் எப்பவாவது ஒரு பெண்ணை பார்த்து காதலில் விழுவானா. இப்படி சபரி மாதிரி மனம் பதைப்பானா.”, என்று யோசித்தவாறு அவன் முகத்தையே அவளையறியாமல் பார்த்து இருந்தாள்.

பார்த்து இருந்தவளுக்கு பெண் லூசு என்பது ஞாபகம் வர, இவனுக்கு இப்படி தான் வேண்டும் என்று சிரிப்பு பொங்கி கொண்டு வந்தது. என்னை என்ன பேச்சு பேசினான்.

அகத்தின் புன்னகை முகத்திலும் தோன்ற. அடக்கியும் அடங்குவேனா என்று அவள் முகத்தில் பெரிய புன்முறுவல் தோன்றியது. அவசரமாக கதிர் பார்க்காதவாறு வேறு புறம் திரும்பினாள்.

Advertisement