Advertisement

அத்தியாயம் ஏழு:

ஏன் கல்யாண வீடு இப்படி இருக்கிறது? என்று யோசிக்க தெரிந்தவளுக்கு. கதிர் தான் தன்னை காப்பாற்றினான் என்று அறிந்து கொண்டவளுக்கு. அவன் அவள் இடையை பிடித்து அணைத்த விதத்தில் உள்ள வித்தியாசம் தெரியவில்லை.

முதலில் யாரையோ பிடித்து விட்டோம் என்று கண் கட்டியிருந்தபோது நினைத்தது. பின்பு கதிரை பார்த்த அதிர்ச்சி. பின்பு அவன் தான் தன்னை முன்பு காப்பாற்றினான் என்ற செய்கை தந்த வியப்பு. அதை சொல்ல கூட தயங்க வைக்கும் அவன் கெளரவம். என்று இத்தனையும் யோசித்தவளுக்கு அவன் அணைத்து பிடித்த வித்தியாசம் தெரியவில்லை.

அவன் தன்னை காப்பாற்றியதை கூட தன்னிடம் சொல்ல விருப்ப படாத அவன் அந்தஸ்து பேத ஆதங்கத்தில் இருந்தவள். அப்படியே அவள் வேலை செய்யும் இடத்தில் அமர்ந்திருந்தாள்.   

அவர்களின் அம்மா படுத்து கொண்டிருந்ததால் டிவி முன் இருந்த குழந்தைகள் மறுபடியும் இவளை தேடி ஓடி வர., அவர்கள் சாப்பிட்டு நிறைய நேரம் ஆகி இருந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் பாட்டியிடம் சென்றாள்.

“பாட்டிம்மா இவங்களுக்கு பசிக்குது போல என்ன செய்யட்டும்”, என்றவுடன். “அவங்கம்மா என்ன செய்யறா தெரியலையே?”, என்றவர். “ஏற்கனவே ஒரு மாதிரி இருக்குன்னா, சமைக்கற அம்மா வேற இன்னைக்கு வரலை, நீயே அவங்களுக்கு என்ன வேணுமோ செஞ்சு கொடேன்”, என்றார்.

நன்றாக சமைக்க கூடியவள் தான் லலிதா.  அதனால் பாட்டி சொன்னவுடன் சமைப்பதற்கு பயம் இல்லை. ஆனால் அங்கே சமைப்பதற்கு தயக்கமாக இருந்தது. குழந்தைகளின் வாடிய முகம் அவளின் தயக்கத்தை போக்கியது. 

குழந்தைகளின் அம்மா வித்யா அப்படி குழந்தைகளை விடுபவள் அல்ல. ஆனால்  இன்று இன்று கீதாவை பார்த்த அதிர்ச்சி. இனி என்ன செய்வது என்ற குழப்பம். இது கட்டாயம் தன் அண்ணனுக்கு சரிவராது என்று நினைத்து கொண்டிருக்கும் போது. அவன் லலிதாவிடம் நடந்து கொண்ட விதத்தை பார்த்தது. எல்லாம் அவள் தலை வலியை தூண்டியிருக்க, தன் கணவனோடு பேசுவதை கூட தவிர்த்து வித்யா மாத்திரையின் உதவியால் நல்ல உறக்கத்தில் இருந்தாள்.

இதற்குள் லலிதா குழந்தைகள் சாப்பிட பூரி மசால் தயாரிப்பில் இறங்கினாள். என்ன வேண்டும் அம்பிகாவிற்கு என்ற லலிதாவின் கேள்விக்கு வந்த பதில் தான் பூரி. அதனால் பாட்டியிடம் குழந்தை கேட்டதை சொல்லி அவர் சம்மதம் கேட்க. “செய்யறது தான் செய்யற, அப்படியே எல்லோருக்கும் செஞ்சு வச்ச்சிடு. வித்யா எழுந்தா மத்தவங்களுக்கு சுட்டு கொடுத்துடுவா”, என. “இது வேறையா”, என்று எண்ணி கொண்டே தயாரிப்பில் இறங்கினாள்.  அவளுக்கு குழந்தைகளுக்கு செய்வதற்கு உற்சாகமாக இருக்க குழந்தைகளிடம்.

“இன்னும் கொஞ்ச நேரம் சோட்டா பீம் பாருங்க”, என்று மறுபடியும் டிவி முன்னிலையில் உட்கார வைத்து. அவசர அவசர மாக சமையலை செய்து கொண்டிருக்க. அப்போது பார்த்து எழுந்து வந்தான் கதிர்வேல், அவளிடம் அவள் முன்பு கூற வந்த விஷயத்தை கேட்க.

அங்கே வீட்டின் சமையல் அறையில் அவள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்தான். சேலையை தூக்கி இடுப்பில் சொருகி அடுப்பில் ஏதோ செய்து கொண்டிருந்தாள். இவன் தொண்டையை கனைக்கவும் திரும்பியவள் கதிரை பார்த்து அப்படியே நின்றாள்.

சற்று முன் அவன் அணைத்து நின்ற இடுப்பு வேறு இப்போது அவன் பார்வைக்கு பளிச்சென்று தெரிந்தது. கண்களை அவசரமாக வலுகட்டாயமாக அவள் முகத்தை நோக்கி நிலை நிறுத்தினான்.

அவள் முகத்தில் வடிந்த வியர்வை அவனை துடைத்து விடேன் என்றது. தன்னையே தப்பு என்று கடிந்தவன் பார்வையை கடுமை ஆக்கினான்.       

அப்படி சேலையை வரிந்து கட்டி கொண்டு வேலை செய்து கொண்டிருக்கும்போது அங்கே கதிரை எதிர்பார்க்காத லலிதா தடுமாறினாள்.

அவசரமாக எண்ணெய் கையோடே சேலையை இறக்கியவள், “அது குழந்தைங்க பசிக்குது சொன்னாங்க. வித்யா அக்காக்கு உடம்பு சரியில்லைன்னு. அதான். நான். சமைக்க.”, என்று தடுமாறினாள்.  

அதுவும் நன்றாக இருந்தவன் பார்வை, திடீரென்று கடுமையாகவும் பயந்து விட்டவள். “நீங்க கொடுத்த வேலையை முடிச்சிட்டேன். உங்களை தேடினேன். நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தீங்க”, என்றாள்.

ஒன்றும் பேசாமல். “வேலையை பார்”, என்று சைகை மட்டும் காட்டி அந்த இடத்தை விட்டு அகன்றான்.

“பெரிய இவன் இவன். வாயை திறந்து சொல்ல மாட்டானோ. இதென்ன என் வேலையா. அவங்க வீட்டு குழந்தைகளுக்காக செஞ்சா. என்னை முறைச்சு பார்கறான்.”, என்று மனதிற்குள் திட்டியபடியே வேலையை செய்தாள்.  

பூரி வாசனை கதிருக்குமே பசியை கிளப்பியது. குழந்தைகளுக்கு மட்டுமே சுட்டு கொடுத்து அவர்களை சாப்பிட வைத்து கொண்டிருந்தாள் லலிதா, வேறு யாரையும் சம்ப்ரயாதாயதிர்க்காக கூட கேட்கவில்லை. அவர்களை சாப்பிட வைத்தவுடன். தன் வேலையை நோக்கி போய்விட கதிருக்கு பயங்கரமாக பசித்தது.

அவன் எதையும் வெளி காட்டவில்லை. அதன் பிறகு கதிர்டம் அவன் கேட்ட விளக்கங்களை கொடுத்து. அவள் வீடு கிளம்பும் சமயம் வித்யா அவசரமாக இறங்கி வந்தாள்.

அங்கே பார்த்தால் அம்பிகா சோபாவிலேயே உறங்கி இருக்க. ராகேஷ் பொம்மைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான். “சாப்பிடாமயே தூங்கிட்டாளா. என்னை எழுப்பி இருக்க மாட்ட பாட்டி”, என்று வித்யா குறைபட.

“சாப்பிட்டுட்டாடி. லலிதா செஞ்சு கொடுத்தா”, என்று பாட்டி சொல்ல.

நன்றியோடு லலிதாவை நோக்கியவள், “தேங்க்ஸ்”, என்றாள்.

“நீங்க என்ன அக்கா குழந்தைகளுக்காக செஞ்சதை போய் தேங்க்ஸ் சொல்றிங்க. நான் வரேன்க்கா”, என்று அவள் கிளம்பினாள்.

வித்யாவிற்கு இப்போது நிஜமாகவே லலிதாவை கீதாவோடு ஒப்பிட தோன்றியது. “அந்த மாதிரி ஒரு லூசு வந்தா. என் குழந்தைகளுக்கு ஏதாவது செஞ்சு கொடுக்குமா. எனக்கு முடியலைன்னு நான் இந்த மாதிரி ரெஸ்ட் எடுக்க முடியுமா. ரெண்டு கேள்வி கேட்டதுக்கே அம்மான்னு ஓடினா. இங்கே வந்தா அதே மாதிரி எங்க அண்ணனுக்கு தொல்லை கொடுத்தா. எனக்கு அம்மா வீட்டோட பிரச்சினை வந்து அது இல்லைன்னு ஆகிட்டா. எனக்கே அம்மா இல்லை, என்னை யார் அனுசரணையா பார்த்துக்கறது”, என்று ஆராய்ந்தது. இந்த திருமணம் நிச்சயம் சரிவராது என்றுனர்ந்தவள்.

அப்பாவிடம் இதை பற்றி பேசிவிட்டு தான் அண்ணனிடம் பேசவேண்டும் என்று நினைத்தவள். முதலில் அவள் கணவனிடம் ஆலோசனை கேட்க போனை எடுத்தாள்.

கணவன் ராஜேஷிடம் நடந்தது அத்தனையும் ஒப்புவித்து. “என்ன செய்வது?”, என்று கேட்க. “என்ன செய்றது இப்போவாவது தெரிஞ்சதேன்னு சந்தோஷப்பட்டு கல்யாணத்தை நிறுத்த வேண்டியது தான். பத்திரிக்கை வந்துடிச்சா?”,

“நாளைக்கு வரும்னு சொன்னாங்க. வந்தா முதல் பத்திரிக்கை தாய் மாமன் வீடு தானே வைக்கணும் நாளன்னைக்கு சென்னைக்கு நம்ம வீட்டுக்கு வரேன்னு சொன்னாங்க”,

“பரவாயில்லை பத்திரிகை கொடுக்கறதுக்கு முன்னாடி தெரிஞ்சிடுச்சு முதல்ல உங்கப்பாகிட்ட பேசி பொண்ணு வீட்ல சொல்ற வழியை பாருங்க. எதுக்கும் உங்க அண்ணன் கிட்ட முதல்ல சொல்லிடு. இல்லைன்னா உன்கிட்ட தான் கத்துவான். எல்லார்கிட்டயும் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை விஷயத்தை உடனே சொல்லு போ”, என்றான் அவள் கணவன்.

அவள் அண்ணனிடம் பேசவே பயமாக இருந்தது. பெண்ணை இப்போது வேண்டாம் என்று சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வானோ என்று. ஆனால் அவன் லலிதாவோடு இழைந்ததை வைத்து பார்த்தால் பெரிதாக பிரச்சினை ஒன்றும் இராது என்றே தோன்றியது.

லலிதாவை பிடித்திருந்தால் தைரியமாக வீட்டில் பேச வேண்டியது தானே அதை விடுத்து திருமணத்திற்கு ஏன் ஒத்துக் கொண்டான் என்றும் யோசனையாக இருந்தது. குழப்பம் மறுபடியும் ஆரம்பித்தது.

இரவு உணவு அமைதியாக கழிந்தது. லலிதாவின் சமையலை ரசித்து உண்டான் கதிர். சாப்பிட்டவுடன் சதாசிவம் அங்கேயே அமர்ந்திருந்தார். கதிர் அவன் ரூமிற்கு போகப் போக. “இரு அண்ணா”, என்றவள் பாட்டியையும் அழைத்தாள்.

மூவரும் ஒருங்கே சேர்ந்தவுடன். “அப்பா!”, என்று ஆரம்பித்தவள் “கல்யாணப் பொண்ணு. அந்த பொண்ணு. அண்ணனுக்கு சரிவரும்னு தோனலைப்பா”, என்றாள்.

இருவர் அதிர்ந்தனர். ஒருவன் “ஏன்”, என்ற ஒரு பார்வை மட்டுமே பார்த்தான். வித்யா அவன் அண்ணனை பார்த்தே இதை சொன்னாள். கூடவே எதையாவது அவன் முகத்தில் இருந்து படிக்க முடிகிறதா என்றும் பார்த்தாள்.

ஒன்றும் தெரியவில்லை. அதில் ஒரு அதிர்ச்சியுமில்லை. சந்தோஷமும் இல்லை. இதை ஒரு செய்தியாக கேட்டு, ஏன் என்ற பார்வையே நின்றது.  

“ஏன் வித்யா?”, என்றார் அவசரமாக ஜானகி பாட்டி.

“அது பாட்டி அந்த பொண்ணு தெளிவில்லாம பேசுது. ஒரு வளர்ந்த பொண்ணு மாதிரி பக்குவமா நடந்துக்க தெரியலை. அதுவுமில்லாம படிப்பும் இல்லை போல. சும்மா கரெஸ்பாண்டன்ஸ்ல படிச்சிருக்கு. எனக்கு என்னன்னு சொல்லத் தெரியலை. கொஞ்சம் லூசு மாதிரி தெரியுது”,.

“என்ன லூசா”, என்று இப்போது வாயைத் திறந்தான் கதிர்.

“லூசுன்னா பைத்தியம் லெவல் இல்லை. ஆனா மெச்சுரிட்டி பத்தாது. உனக்கு கட்டாயம் மேட்ச் ஆகாது. எனக்கு வேண்டாம்னு தோணுது”, என்றுவிட்டாள் முடிவாக.

சதாசிவம் என்ன செய்வது என்று அவர் அன்னையின் முகம் பார்க்க.

ஜானகி பாட்டி மிகுந்த கோபப்பட்டார், “என்ன லூசு பொண்ணை நமக்கு காட்டியிருக்காங்களா. நம்மளை என்ன நினைச்சாங்க. என் ராஜா மாதிரி பேரனுக்கு லூசு பொண்ணா”, என்றார்.

அப்போது தான் சத்தம் கேட்டு ரூமை விட்டு வெளியே வந்த சபரி அமைதியாக நடப்பதை நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

ஜானகி பாட்டி கதிரை பார்த்து. “ஏன் பையா இத்தனை நாள் பேசும்போது உனக்கு தெரியலையா”, என்றார்.

“யார் கூட பேசினா. நானெல்லாம் யாரோடயும் பேசலை.”, என்றான் எரிச்சலாக கதிர்.

“ஏன் நீ பொண்ணு கூட பேசலை?. பேசியிருந்தா முன்னாடியே நமக்கு தெரிஞ்சிருக்கும் இல்லை”,  என்றார் பாட்டி.

“பேசலை இப்போ என்ன அதுக்கு. நீயெல்லாம் தாத்தா கூட பேசி தான் கல்யாணம் கட்டுனியா. சும்மா என்னை கேள்வி கேக்கற. பொண்ணை பார்க்க சொன்னா. லூசை பார்த்து வச்சிட்டு பேச்சை பாரு”, என்று அவர் மீது கோபத்தை திருப்பினான்.

திரும்ப திரும்ப எல்லோரும் சித்ராவின் அக்காவை லூசென்று சொல்ல சபரிக்கு பதட்டம் ஏற ஆரம்பித்தது.

“ஏன் கதிரு அம்மாவை கோபப்படற. யாருக்கு இப்படின்னு தெரியும்” என்ற சதாசிவம் வித்யாவை பார்த்து.

“நீ பொண்ணு வீட்ல எதுவும் கேக்கலியா வித்யா”,

“கேட்டேன்பா செல்லமா வளர்ந்த பொண்ணுன்னு சொல்லறாங்க. நான் என்ன சொல்றது?. செல்லமா வளர்ந்ததுனால கூட இருக்கலாம்பா. யாராவது அந்த பொண்ணை பொறுமையா பார்த்துக்கற அளவுக்கும் வரலாம். யாரையும் தப்பு சொல்ல முடியாது. ஆனா எனக்கு. எனக்கென்னவோ பிடிக்கலை.”,

“பொண்ணு விஷயம்மா அப்படி சட்டுன்னு எதுவும் சொல்ல முடியாது”,

“அப்போ என்ன அந்த லூசே இருக்கட்டும் அப்படின்றீங்களா”.

“அப்படியில்லை வித்யா. நாளைக்கு பத்திரிக்கையே வந்திடும். இந்த நிலைமையில எப்படி நிறுத்த”

அப்பாவும் பெண்ணும் பேசுவதை அனைவரும் அமைதியாக வேடிக்கை பார்த்திருந்தனர்.

“நிறுத்திதானேபா ஆகணும். இப்போ அதை பார்த்து கல்யாணம் பண்ணி பின்னாடி டைவர்ஸ் அது இதுன்னு அலையறதா. எனக்கு நல்லா தெரியும் சரிவராதுன்னு. நாளைக்கு நீங்க பொண்ணு வீட்ல பேசும்போது  பொண்ணு செல்லமா வளர்ந்திச்சுன்னு சொன்னா தடுமாறாதீங்க. வேண்டான்னு சொல்லிடுங்க”,

“பொண்ணு வீட்ல நிறுத்தினா பரவாயில்லைம்மா. நாம நிறுத்தினா பொண்ணை தாறுமாறா பேசுவாங்க. நாலும் யோசிக்கணும். அது நல்லாயிருக்கோ லூசோ நம்மளால ஒரு பொண்ணுக்கு கெட்ட பேர் வேண்டாம்”,

“நாலோ. பத்தோ. யோசிங்க. ஆனா நிறுத்தி தானே ஆகணும்”, என்றவள் கதிரை நோக்கி திரும்பி. “நீ என்ன அண்ணா அந்த லூசு பொண்ணை கட்ட போறியா? நான் இப்படி கத்திட்டு இருக்கேன். நீ அமைதியா இருக்கே”,

கதிர் அமைதியாக த்தான் இருந்தான். பொண்ணு வேண்டாம் கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று வித்யா சொன்னதில் இருந்து அவன் அலைபாய்ந்த மனது அமைதியாகி விட்டது. சந்தோஷம் என்று சொல்ல முடியாது, அவனை மீறிய ஒரு நிம்மதி. அதனால் அமைதியாக அமர்ந்து விட்டான்.

இப்போது வித்யா அவனை கேட்கவும் தடுமாறியவன், “பொண்ணை பார்த்தது  நீங்க. என்னை கேட்டா நான் என்ன சொல்றது?. நான் உன்கிட்ட தெளிவா சொல்லிட்டு தானே வந்தேன். பொண்ணு சரியா பாருன்னு. அதுக்கு அப்புறம் தானே நீ பார்த்தே”. 

“சரி என்ன பண்ணலாம் சொல்லு”,

“அவனை என்னடி நீ கேட்கற. வேற பேச்சே இல்லை. நமக்கு அந்த பொண்ணு வேணாம். மொதல்ல அந்த பொண்ணு வீட்டுக்கு போனை போட்டு குடு .அவனுங்களை நாக்கை பிடுங்கற மாதிரி நாலு கேள்வி கேட்கனும்”. என்று தன்னையும் மீறி ஜானகி பாட்டி கத்த.

பயத்தோடு பார்த்தான் சபரி. “என்ன ஆகுமோ”, என்று. சித்ரா வீடல்லவா.

“ஏன் பாட்டி இப்படி கத்தற. எதையாவது நீ இழுத்து விட்டுக்க போற. அமைதியா இரு! அப்பா பார்த்து பாரு”, என்று கதிர் அவரை கடிந்தான்.

“என்னடா பார்த்தான் உங்கப்பன். பொண்ணை மொதல்லேயே நல்லா விசாரிச்சு இருக்க வேண்டாமா. இப்போ இப்படி ஆயிடுச்சு. கல்யாணம் நிக்கறது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா”, என்று உணர்ச்சி மிகுதியால் அழ ஆரம்பித்தார்.

சதாசிவம் தன் அம்மாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் தடுமாற.

அவர் அருகில் வந்தமர்ந்த வித்யா. “பாட்டி தெரியாம நடந்திடுச்சு. யாரும் எதிர்ப்பார்கலை. அதான் முன்னாடியே தெரிஞ்சிடுச்சே. அதுக்கு சந்தோஷப்படாம, அழகுற நீ.  என்னத்தை சொல்ல?”, என்று அவரை சமாதனப்படுதினாள்.

அவர் அழுவதை பார்த்த சபரி என்ன நடக்குமோ என்று மனதிற்குள்ளேயே பதட்டமானான். அவனுக்கு அவன் பாடு அவர்கள் வீட்டோடு சம்மந்தம் முறிந்து விட்டால் தன் திருமணம் சித்ராவோடு எப்படி நடக்கும் என்ற யோசனை. அவன் மனமே அவனுக்கு சமாதனம் சொல்லியது. நானும் தான் அங்கே இருந்தேன். எனக்கு ஒன்றும் தெரியலையே இந்த வித்யா அண்ணி ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று யோசித்தான்.

காதல் கொண்ட மனதல்லவா எல்லாவற்றையும் சித்ராவிற்கு சாதகமாகவே யோசிக்க வைத்தது.

இவன் இப்படி யோசித்து கொண்டிருக்க. கதிர் பாட்டியை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கினான்.

“அச்சோ எதுக்கு இப்ப அழற பாட்டி. பிரஷர் அதிகமாகிட போகுது.ஏன் பாட்டி எனக்கென்ன பொண்ணா கிடைக்காது? போ போய் படு! எல்லாத்தையும் காலையில பேசலாம். எல்லோரும் கொஞ்சம் யோசிக்கலாம். என்ன செய்யறதுன்னு? இப்போ படு. எந்திரி நீ. போ.”, என்று ரூமிற்குள் சென்று அவரை தள்ளி படுக்க வைத்தான்.

அவரிடம் மட்டுமல்ல தன் தங்கை தந்தை என்று மற்றவரிடமும் இதையே சொல்லியவன் எல்லோரையும் தூங்கும் படி பணித்து அவன் உறங்க சென்றான்.

அவனுக்கு யோசிக்க வேண்டி இருந்தது. திடீரென்று இந்த மாதிரி கேள்விப்பட்டது நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. ஒரு வேலை இந்த திருமணம் நடந்த பிறகு இது தெரிந்திருந்தால் தன் நிலைமை.

பெண் லூசு மாதிரி தான் தனக்கும் தோன்றியதே. அழகு இருந்தாலும் அலைபாயும் கண்கள், ஒரு இடத்தில் நிற்காமல் ரெஸ்ட் லெஸ் ஆக இருந்தது. ஏதோ வித்தியாசத்தை காட்டியது பெண்ணிடம். அதனால் தான் வித்யாவிடம் சொல்லி வந்தான்.

அழகு. அந்தஸ்து. என்று நானே. என்னையே. கிணற்றில் குதிக்க வைக்க இருந்தேனா.     

ஒரு வேலை தான் லலிதாவிற்கு மனதளவில் துரோகம் செய்ததால் இப்படி நடந்திருக்குமோ? தான் அந்தஸ்து பார்த்து அவளிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ?

வந்த காதலை கூட தன்னால் லலிதாவிடம் சொல்ல முடியவில்லையே. என்ன காரணம்? அந்தஸ்தா. இல்லை இத்தனை வருடமாக கர்வத்தோடு இருந்த என்னை. ஒரு சிறு பெண் என்னை. எவ்வளவு எளிதாக  அசைத்து பார்க்கிறாள் என்ற என் எண்ணம்மா. 

பேசாமல் லலிதாவையே திருமணம் செய்து கொள்ளலாமா? வீட்டில் பேசுவோமா இல்லை வேண்டாமா?. லலிதாவை தான் வேண்டாம் என்று சொன்னதால் இப்படி ஆகிவிட்டதா?.

அப்படி என்ன பெரிய காதல்.  அது தன்னை ஏன் இவ்வளவு ஆட்டிபடைக்க விடவேண்டும்?. இப்படி பலவாறாக எண்ணங்களில  உலன்றவன், அவனையறியாமல் உறக்கத்திற்கு சென்றான்.

 “கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா”,

என்ற ஒரு கவிஞனின் சொல்லுக்கேற்ப.

Advertisement