Advertisement

அத்தியாயம் ஆறு:

“கதிரின் இந்த திருமணம் சரிவர வேண்டுமே”, என்ற கவலை மட்டும் வேலைக்காகாது என்றுணர்ந்த வித்யா. “பெண் எப்படி”, என்று ஆராய்ந்து பார்த்து விடுவது என்று முடிவு செய்தாள்.

பெண்ணை பார்த்தாள். கீதாவின் அம்மா கீதாவிடம் அடிக்கடி ஏதோ சொல்லி கொண்டே இருப்பது போல தோன்றியது. வித்யா கதிரின் தங்கை அல்லவா அவனின் குணநலன்கள் சிறிது இவளிடமும் இருப்பதால் ஏதோ சரியில்லை என்றுனர்ந்தாள். என்ன என்று தெரியவில்லை?.

“சொல்லுங்க அண்ணி, நீங்க எப்போ காலேஜ் முடிச்சீங்க”, என்று நேரடியாக பெண்ணிடம் சென்று பேச ஆரம்பித்தாள்.

கீதா இவளுக்கு பதில் சொல்லாமல் அம்மா முகத்தை பார்க்க. அவள் அம்மா ஏதோ சொல்ல வர. “இருங்க அத்தை, கீதா அண்ணி சொல்லட்டும். எல்லாத்துக்கும் பதில் நீங்க சொல்றிங்க. இல்லைன்னா சித்ரா சொல்றா. இவங்க தானே எங்க வீட்டுக்கு வந்து இருக்க போறாங்க. இவங்க பேசட்டும்”, என்றாள் சற்று கராறாகவே.

கீதாவின் அம்மா இவளின் பதிலில் தடுமாறினார். சித்ரா இப்போது சபரியிடம் பேசுவதை விடுத்து பதட்டமாக இவர்களின் உரையாடலை கவனித்தாள். சபரியும் இவர்களை கவனிக்க ஆரம்பித்தான்.

“நீங்க பி.ஏ படிச்சிருகீங்கன்னு சொன்னாங்க அண்ணி. எங்க படிச்சிங்க”, என்றாள்.

மறுபடியும் கீதா அவள் அம்மா முகத்தையே பார்க்க வித்யாவிற்கு சற்று எரிச்சல் வர ஆரம்பித்தது. இது ஒரு சாதாரண கேள்வி இதற்கு எதற்கு இத்தனை முறை அவள் அம்மா முகத்தை பார்க்க வேண்டும் என்று யோசித்தபடியே பார்த்தாள்.

“நான். நான்.  வீட்ல இருந்து படிச்சேன்”, என்றாள் திக்கி திணறி கீதா. அவள் பதில் சொன்ன விதம் அவ்வளவு உவப்பாக  இல்லை வித்யாவிற்கு. பதில் சொன்ன விதம் அசட்டு தனமாக இருந்தது.   

“என்ன நீங்க காலேஜ் போகலியா”, என்றாள் சற்று அதிர்ச்சியாக. எப்படி காலேஜ் போனதாக அன்று பெண் பார்த்த தினம் சொன்னதாக தான் ஞாபகம் என்று மனதிற்குல்லேயே நினைத்தவள். “கரெஸ்பாண்டன்ஸ்ல படிச்சீங்களா”, என்றவள். “சரி எந்த ஸ்கூல்ல படிச்சீங்க பிளஸ் டூ”,

“அதுவும் நான் ஸ்கூல்ல படிக்கலையே. வீட்ல இருந்து தான் படிச்சேன். பத்தாம் வகுப்பு வரை தான் படிச்சேன்”, என்றாள்.

கீதாவின் அம்மா இடையில் ஏதோ சொல்ல வர. “நீங்க பேசாதீங்க நானும் இவங்களும் பேசிக்கறோம்”, என்றாள் கீதாவின் பதில் இன்னும் சற்று கராறாகவே

ஒரே யோசனையாக போயிற்று, “டென்த் என்ற சாதாரண வார்த்தையை கூட சொல்லாமல் பத்தாம் வகுப்பு என்கிறாளே, என்ன படித்திருப்பாள் இவள்”,  என்று நினைத்தவள்.

“நீங்க வாங்க அண்ணி. நாம அங்க நின்னு பேசலாம்”, என்று தனியாக அவளை அழைத்து கொண்டு வேறொரு பிரிவிற்கு முன் சென்றாள்.

கீதா சாமான்யத்தில் வரவில்லை. தன் அம்மாவை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே வந்தாள்.

“நீங்க வாங்க”, என்று கைபிடித்து அழைத்து செல்ல. கீதாவின் அம்மாவும் அவள் தங்கையும் எதையும் செய்ய இயலாதவர்களாக பார்த்திருந்தனர்.

“நீங்க ஏன் ஸ்கூல் போய் படிக்கலை”,

“எனக்கு யாரோடயும் பழகத்தெரியலைன்னு அம்மா ஸ்கூல் அனுப்பலை. எப்பவும் என்னை திட்டிடே இருப்பாங்க“, என்றாள் இது சரளமாக வந்ததது. பிறகும் அவளோடு நிறைய கேள்விகள் முன் வைத்தாள்.

தான் இப்படி பேசினாள் தன்னை பற்றி தவறாக நினைப்பார்கள் என்றெல்லாம் கீதா கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை. ஒரு இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருந்தாள். 

கீதாவின் பதில்கள் அவளை அசடாக காட்டின. சற்று விவரம் தெரியாத பெண் போல இருந்தது அவள் பதில்கள். ஆனால் பார்பதற்க்கு பொம்மை மாதிரி அழகாக இருந்தாள்.

வித்யாவிற்கு அவள் அண்ணன் பேசி சென்றது காதில் ஒலிக்க. எப்படியாவது பெண்ணை பற்றி நன்றாக தெரிய வேண்டும் என்று நினைத்தவள் கேள்வியாக கேட்டு தள்ளினாள்.

“ஏன் இப்படி ஒரு இடத்துல நிற்காமஆடிட்டே இருக்கீங்க”, என்று துணிந்து கேட்டே விட்டாள்.

“இல்லையே நான் நல்லா தானே இருக்கேன்”, என்று சட்டென்று கோபப்பட்ட கீதா. “இரு நான் அம்மா கிட்ட சொல்றேன்”, என்று சிறுபிள்ளை போல ஓடினாள்.

பெரிய குழப்பம் வந்து வித்யாவின் மனதில் உட்கார்ந்து கொண்டது. இவள் என்ன இப்படி நிறைய லூசுத்தனம்மாகவே நடந்து கொள்கிறாள். தன்னுடைய அண்ணனின் அறிவிற்கும் கம்பீரத்திர்க்கும் எப்படி இவள் சரி வருவாள் என்றே தோன்றியது.

அங்கே இருந்தே தன்னுடைய மாமியாருக்கு போன் செய்த்தவள், “அத்தே இங்க நாங்க கல்யாண புடவை எடுக்க வந்தோம். அங்க நான் பொண்ணை பார்த்தேன். அப்படி ஒண்ணும் பொண்ணு தெளிவு போல எனக்கு தோணலை. உங்க உறவு தானே உங்களுக்கு பொண்ணை நல்லா தெரியுமா”, என்று அவரை விசாரித்தாள்.

“இல்லையேம்மா, எனக்கு தெரியாதே. ஏதாவது விஷேசம்னா பொண்ணோட அப்பா அம்மா தான் வருவாங்க. பொண்ணை நான் எப்போவாவது பார்த்ததோட சரி. மத்தபடி எனக்கு தெரியாதே”, என்றார்.

“யார் கிட்டாயாவது விசாரிக்க முடியமான்னு பாருங்க அத்தை. எனக்கென்னவோ இந்த பொண்ணை பார்த்தா கொஞ்சம் விவரம் பத்தலைன்னு தோணுது. எதுக்கும் இன்னும் கொஞ்சம் மத்தவங்ககிட்டயும் விசாரிப்போம்”, என்றவள் மனதில் ஒரு பெரிய கவலை ஏறிக்கொண்டது.

அவளுக்கு பேசின வரைக்கும் திருப்தியில்லை. கல்யாணம் பேசிவிட்டாலும் நிச்சயம் கல்யாணத்திற்கு முதல் நாள் தான். உறுதி மட்டுமே செய்திருந்தனர். பயம் வர ஆரம்பித்தது. அவசரப்பட்டு விட்டோமோ என்று. பெண் வீட்டாரை என்ன சொல்ல முடியும். தாங்கள் தான் இன்னும் சரி பார்த்திருக்க வேண்டும் என்றே தோன்றியது. 

இன்னும் நன்றாக விசாரித்து இருக்க வேண்டுமோ என்றும் தோன்றியது. இதையெல்லாம் யோசித்து கொண்டே வித்யா எல்லாரும் இருந்த இடத்திற்கு போக, அங்கே கீதா அவள் அன்னையிடம், “இவங்க நிறைய கேள்வி கேட்டாங்க, நான் ஆடிட்டே இருக்கேன்னு சொல்றாங்க, என்னன்னு கேளும்மா”, என்று குற்ற பத்திரிகை வாசிக்க.

அவள் அம்மா கீதாவை அடக்க அடக்க பேசிக்கொண்டே போனாள். முதன் முறையாக அவள் அம்மா தர்மசங்கடத்துடன் வித்யாவை பார்க்க. “இவங்க ஏன் இப்படி பேசறாங்க”, என்று நேரடியாக கீதாவின் அம்மாவிடமே கேட்க.

“ரொம்ப செல்லமா வளர்த்துட்டோம். அதனால கொஞ்சம் கொஞ்சி கொஞ்சி பேசுவாள். மற்றபடி ஒண்ணும் பிரச்சனையில்லை”, என்று அவர் சொன்ன விதமே அவளிடம் வளர்ந்த பிள்ளையின் பெரிய அறிவு இல்லை என்றே காட்டியது.

வேறு நிறைய புடவைகள் எடுக்க வேண்டி தான் வந்தாள். இப்போது கீதாவின் நடவடிக்கைகள் பார்த்தவுடன் மனது சரியில்லாமல் “கிளம்பலாமா”, என்று சபரியை பார்த்து கேட்டவள். வெளியே கார் வரைக்கும் வந்து. “அப்புறம் பார்க்கலாம்”, என்று அவர்களிடம் சொல்லி கிளம்பிவிட்டாள்.

காரில் சபரியிடம். “பொண்ணை நல்லா பார்த்தியா நீ சபரி. ஏதோ வித்தியாசமா தெரியலை”, என்று சபரியிடம் கேட்டாள்.

சபரிக்கு அண்ணியின் முகத்தை பார்த்தவுடனே ஏதோ சரியில்லை என்று தெரிந்து விட்டது. ஆனால் வித்யாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

அவன் எங்கே பெண்ணை பார்த்தான். இருந்த நேரத்தில் சித்ராவுடன் பேசிக்கொண்டு இருந்தான். பிறகு வித்யா கீதாவை தனியாக அழைத்து போனவுடனும் சித்ராவை தான் பார்த்துக் கொண்டு இருந்தான். இவள் ஏன் இவ்வளவு பதட்டமாக இருக்கிறாள் என்று. இப்படியாக சித்ராவை தான் வித விதமாக பார்த்துக் கொண்டு இருந்ததால் கீதாவை அவன் பார்க்கவேயில்லை.

அதை தன் அண்ணியிடம் சொல்ல முடியாததால். “எனக்கு ஒண்ணும் வித்தியாசமா தெரியலையே அண்ணி”, என்றான் சித்ரா வீட்டிற்கு சாதகமாகவே.

இவன் என்ன சொல்லுகிறான். ஒரு வேலை தான் தான் சரியாக பார்க்கவில்லையோ என்று மறுபடியும் குழப்பத்திற்கு சென்று. கீதாவோடான நினைவுகளை மறுபடியும் அசை போட்டவள், அது செல்லம் கொடுததினாலோ, எதனாலோ, மொத்தத்தில் கீதா ஒரு அரை வேக்காடு என்ற முடிவிற்கே வந்தாள். 

அண்ணனிடம் அதை சொல்ல பயமாக இருந்தது. இன்னும் யாராவது சொல்லட்டும் பார்க்கலாம் என்றும் இருந்தது. தாங்கள் திருமணம் பண்ணி கொள்கிறோமோ இல்லையோ அனாவசியமாக கீதாவை பற்றி அவதூறு பேசக்கூடாது. பெண்ணின் வீட்டில் திருமணத்தை நிறுத்தினாலே ஆயிரம் பேசும் உலகம். இன்னும் பையன் வீட்டில் நிறுத்தினாள். மனம் தடுமாறியது.  

பெண் பாவம் பொல்லாதது என்பதை அவள் அறிவாள், ஆனால் அதே சமயம் அந்த லூசை திருமணம் செய்து வைக்கவும் முடியாது என்று நினைத்தவள், “என்ன செய்வது”, என்ற யோசனையோடே வர.

வீட்டில் அவள் கண்ணில் பட்டது லலிதாதான்.

“இந்த பெண் மாதிரி ஒரு பெண் எனக்கு அண்ணியாக வந்திருக்க கூடாதா. எப்படி கீதா மாதிரி ஒரு பெண்ணை பார்த்தேன்”, என்று தன்னையே சாடிக்கொண்டாள்.

அவள் பார்த்த போது லலிதா குழந்தைகளோடு வீட்டின் முன் இருந்த இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். நொண்டி விளையாடி கொண்டிருந்தாள். இந்த விளையாட்டெல்லாம் குழந்தைகளுக்கு புதிதென்பதால் ஆர்வத்தோடு அவள் பின்னே, “அக்கா, அக்கா”, என்று சுத்தி விளையாடிக்கொண்டிருந்தனர்.

வித்யா அவளிடம் சம்பிரதாயமாக ஒரு புன்னகை செய்து. அவள் எதுவும் கேட்டு விடுவாளோ என்று பயந்தது போல உள்ளே வேகமாக சென்றாள்.

“இந்த அக்கா ஏன் இப்படி ஓடுறாங்க”, என்று யோசித்து லலிதா ஆட்டத்தை விட்டு சற்று தேங்கி நிற்க. அதற்குள் காரை நிறுத்தி சபரி வந்தான்.

 வித்யா உள்ளே போக. பாட்டி, “என்னம்மா எத்தனை புடவை எடுத்த”, என்று அவளை கேட்க. “கல்யாண புடவை மட்டும் தான் பாட்டி எடுத்தோம், வேற எடுக்கலை”,

“ஏன்மா”, என்றதற்கு. “என்னவோ எனக்கு ஒரு மாதிரி உடம்பு சரியில்லாத மாதிரி இருந்தது பாட்டி. அதான்   சீக்கிரம் வீட்டுக்கு வந்துடலாம் அப்படின்னு வந்துட்டேன். இன்னொரு நாள் எடுத்துக்கலாம் பாட்டி”, என்று பாட்டி எதுவும் மேலே கேட்கும்முன் அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

வெளியே, “என்ன சர் உங்க ஆள் கிட்ட பேசிடீங்களா”, என்று சபரியை லலிதா கிண்டல் செய்து கொண்டிருந்தாள். அதற்கு ஒரு அசட்டு புன்னகையை வழங்கி சபரியும் தனது அண்ணியின் கேள்வியினால் குழப்பத்தில் இருத்தால் அந்த இடத்தை விட்டு அகன்றான்.

அவர்கள் திருமண புடவை எடுக்க போய் இருந்தது லலிதாவிற்கு தெரியும்.   அங்கே கீதா, சித்ரா, அவர்கள் அம்மா வருவதும் தெரியும். வித்யாவும் வேகமாக போக சபரியும் போக.

அட திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த தினம் கதிரும் இப்படி தான் போனான் என்று ஞாபகத்திற்கு வந்து. “என்னடா இது பொண்ணை தானே பார்த்துட்டு வராங்க. ஏதோ பேயை பார்த்த மாதிரி இப்படி ஓடறாங்க”, என்று வழக்கம் போல மனதிற்குள் ஒரு என்னடா போட்டாள் லலிதா.

அதற்குள் குழந்தைகள். “அக்கா வாங்க”, என்று மறுபடியும் விளையாட்டிற்கு இழுக்க ஆட்டத்தை ஆரம்பிக்கும் போது. சின்னவள் வேற விளையாடலாம் என்றவுடன் கண்களை கட்டி கொண்டு தொடுவது என்று முடிவு செய்து.

யார் கட்டி கொள்ளலாம் என்று இங்கி பிங்கி பாங்கி போட்டு முடிவு செய்ய. சிறு பெண் அம்பிகா என்று வர அவளுக்கு கட்டி விட்டாள் லலிதா.

அவள் எதிரேயே நின்று வேண்டு மென்றே அம்பிகா விடம் மாட்டி அவளை ஜெயிக்க வைத்தாள். அதற்குள் பெரியவன் ராக்கேஷ் நான் தான் கட்டி கொள்வேன் என்று அடம் பிடிக்க வேறு வழியில்லாமல் அவன் கண்ணை கட்டி விட்டு வேண்டுமென்றே அவனிடமும் மாட்டி அவனையும் ஜெயிக்க வைத்தாள்.

இதையெல்லாம் மேலே இருந்து வித்யா பார்த்து கொண்டுதானிருந்தாள். எப்படி குழந்தைகளுக்காக லலிதா விட்டு கொடுத்து விளையாடுகிறாள் என்று பார்த்து கொண்டிருக்க. வித்யாவின் கவலை சற்று மறந்தது.

குழந்தைகள் விளையாடுவதை ஆர்வத்துடன் குழந்தைகளின் அன்னையாக கவனிக்க ஆராம்பித்தாள். இந்த முறை கண்ணை கட்டுவது லலிதா என்றாகிபோக குழந்தைகள் குதூகளித்தனர்.

“அச்சச்சோ நான் மாட்டிகிட்டேனா”, என்று சலிப்படைந்தவள் போல லலிதா ஆட்டத்தை துவக்கினாள். குழந்தைகள் அவள் கையில் மாட்டாமல் போக்கு காட்டி கொண்டே வர. அப்போது பார்த்து கதிர் வந்தான்.

மன சஞ்சலத்தில் இருந்த அவனும் இவர்கள் விளையாட்டை பார்த்து தேங்கி நிற்க.

“மாமா”, என்று கத்தபோன குழந்தைகளிடம் சைய்கையாலேயே சொல்ல வேண்டாம் என்றான். இவன் சைய்கையால் வேண்டாம் என்று சொன்னதை மேலே இருந்து வித்யா பார்த்து கொண்டிருக்க. என்ன நடக்கிறது என்று ஆர்வமாக பார்க்க ஆரம்பித்தாள்.

இதையறியாத கதிர்வேல் லலிதாவின் விளையாட்டை பார்த்து கொண்டிருக்க. ஒரு கட்டத்தில் அவன் அருகில் வந்தவள் கையை குழந்தைகளுக்காக கீழாக வீச அகப்பட்டது கதிரின் இடுப்பு . கை பட்டவுடனே வேறு யாரோ எனத்தெரிய அவசரமாக கைகளால் கண்களில் இருந்த துணியை எடுத்து கொண்டே பின்னால் போகப் போக தடுமாறி விழபோனாள்.

அவள் தடுமாறி விழபோவதை அறிந்த கதிர் அவனையறியாமல் அவள் இடையோடு வளைத்து பிடித்தான். அந்த சமயம் பார்த்து அவள் கண்களில் துணியை எடுத்திருக்க எதிரே கதிர்.

அதிர்ச்சியிலும், பயத்திலும், மூச்சு விடவும் மறந்தவாளாக லலிதா அவனையே பார்த்திருக்க.

கன்னத்தை தொட்டே மயங்கிய கதிர் இன்று சேலை கட்டி இருந்த லலிதாவின் இடையை வளைத்து பிடித்திருக்க. அவனையறியாமல் அது கொடுத்த மயக்கத்தில் அவனையும் மீறி. “எத்தனை தடவை நீ விழாம நான் தாங்கி பிடிக்கறது. பரவாயில்லை உன்னோட சேர்ந்து அன்னைக்கு நானும் விழுந்தேன். இன்னைக்கு விழலை”, என்று சொல்ல.

அதைக்கேட்டு சுயநினைவுக்கு வந்த லலிதா அவசரமாக ஒரு, “சாரி”, சொல்லி அவனிடம் இருந்து விலகினாள்.

“நீங்க எப்போ என்னை விழாம பிடிச்சீங்க”, என்று கேட்க. அப்போதுதான் தான் உணர்வுக்கு வந்த கதிரும். முதலாளி என்ற முகமூடியை உடனே போட்டு கொண்டவன். அவளிடம் பதில் சொல்லாமல் நடந்தான்.

எப்போது என்று யோசித்த்வளுக்கு வேலைக்கு வந்த முதல் நாள் தான் பள்ளத்தில் விழாமல் காப்பாற்றப்பட்டது ஞாபகத்திற்கு வர. “அது நீங்களா”, என்று கேட்க்கும் முன் இடத்தை விட்டு அகன்றிருந்தான்.

ஏமாற்றமாக உணர்ந்தாள் லலிதா. குழந்தைகளிடம் வந்தவள், “உங்க மாமா வர்றாங்கன்னு சொல்ல மாட்டீங்களா”, என்று கேட்க. “நாங்க சொல்ல தான் வந்தோம் அக்கா. அதுக்குள்ள மாமா தான் சொல்லவேண்டாம். ஷ் சொன்னாங்க”, என்றான் ராகேஷ். 

“ஆமாம், ஆமாம்”, என்று மண்டையை மண்டையை அம்பிகாவும் ஆட்ட. “என்னடா இது அந்த முசுடு நான் விளையாடுறதை பார்த்துட்டு நின்னுச்சா”, என்று மனதிற்குள் ஒரு என்னடா இது போட்டவள் , பிறகு அவளுக்கு அவளே குழந்தைகள் விளையாடுவதை பார்க்க நின்றிருப்பான் என்று சாமாதனமானாள், அவளுக்காக தான் நின்றான் என்பதை அறியாமல்.

ஆனாலும் மனதில் குழப்பம் புகுந்தது. தன்னை இவன் தான் காப்பற்றினானோ. பிறகு ஏன் தன்னிடம் சொல்லவில்லை என்று யோசித்தவளுக்கு, அந்தஸ்த்து பேதம் குறுக்கிடிருக்குமோ என்று முதல் முறையாக சரியாக யோசித்தவள், அவ்வளவு அந்தஸ்து பேதமா என்று மனம் சோர்ந்தாள்.

மேலே இருந்து இதையனைததையும் பார்த்து கொண்டு தானிருந்தால் வித்யா.

கதிர் வந்தது. சத்தமில்லாமல் இவர்களின் விளையாட்டை பார்த்தது. தன்னை மறந்து அவள் இடையை வளைத்தது. அப்போது அவன் முகத்தில் தெரிந்த சந்தோஷம். அவளிடம் ஏதோ பேசியது. நிமிடத்தில் முகம் மாறியது. பின்பு லலிதா ஏதோ கேட்க கேட்க உள்ளே வந்தது என்று அனைத்தையும் பார்த்து கொண்டுதானிருந்தாள்.

அதுவும் இடையை வலைத்த போது கதிரின் முகம். அதில் தெரிந்தது என்ன? என்ன பாவம்? கட்டாயம் காப்பாற்றியது மட்டுமல்ல அதையும் மீறி ஏதோ ஒன்று. வித்யாவிற்கு கீதாவை பார்த்து வந்த குழப்பம் இப்போது கதிரின் நடவடிக்கையை பார்த்தது எல்லாம் தலையை வலித்தது.

அவனின் இந்த செய்கை, “நானே இவனுக்கு பார்த்த பொண்ணு, அரை லூசா, முழு லூசா, இல்லை லூசே இல்லையான்னு மண்டையை ஓடைச்சிட்டு இருக்கேன். இதுல இவன் வந்து கூலா அந்த லலிதா பொண்ணை கட்டி பிடிக்கறான், திரும்ப லுக்கு  வேற விடறான். அது என்ன லுக்குன்னு தெரியலையே”, என்று அவள் அண்ணனை நிறைய மனதிற்குள் அர்ச்சனை செய்ய வைத்தது.   பிறகு ஒன்றும் யோசிக்க விடாமல் அமைதியாக படுத்து கொண்டாள்.

உள்ளே வந்த கதிரும் குழப்பமான மனநிலையில் இருந்தான். கீதாவை பார்த்த குழப்பம். அவள் நடவடிக்கைகள். அதையும் மீறி லலிதாவை அணைத்த குழப்பம். மனம் வேகமாக என்ன செய்து கொண்டிருக்கிறேன் நான் என்று அவனையறியாமல் மிகவும் சோர்வாக உணர்ந்தது.  அவனும் வேறு ஒன்றும் யோசிக்காமல் அமைதியாக படுத்து கொண்டான்.

குழந்தைகளை உள்ளே லலிதா அழைத்து வந்து அவர்கள் அன்னையை தேட. அவர் படுத்து கொண்டிருப்பது தெரிந்தது.

அவர்களை டிவி முன் உட்கார வைத்து. இவள் சில விஷயங்களை சொல்ல கதிரை தேட .அவனும் படுத்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.

“என்னடா இது. என்ன நடக்குது கல்யாண வீட்டுல”, என்று மறுபடியும் ஒரு என்னடா போட்டாள் மனதிற்குள் லலிதா.

Advertisement