Advertisement

அத்தியாயம் ஐந்து:

“அன்றைக்கு அப்படி திட்டி பேசிவிட்டு. அடித்து விட்டு. இன்று ஒன்றுமே நடக்காத மாதிரி எப்படி பேசுகிறான், எப்படி  சகஜமாக பேசுகிறான்?”, என்று லலிதா எண்ணி கொண்டிருக்கும் போதே .

அவளிடம் கதிர் விளக்கமளித்தான். “அவங்களை விட்டா எல்லாத்தையும் நோன்டுவாங்க. போனதடவை வந்தப்பவே கணக்கு வழக்கு எல்லாம் டெலிட் ஆகிடுச்சு அதுதான். சிஸ்டம் முன்னாடி விடவேண்டாம்”, என்று சொல்லி போனான்.

மனதிற்குள் இருவருக்கும். இருவரின் பேச்சால்.  இருவரின் மேலும் கனன்று கொண்டிருந்தாலும் வெளியில் காட்டவில்லை.

“எப்படி இப்படி இவனால் ஒன்றுமே நடக்காத மாதிரி சாதாரணமாக பேச முடிகிறது. என்னை பேசிவிட்டு அடித்து விட்டு சிறிது கூட குற்ற உணர்ச்சியே இல்லையா”, என்று மனதிற்குள்ளேயே பொருமிக் கொண்டிருந்தாள்  லலிதா.

கதிர் அவளிடம் சாரி கேட்கவில்லை. அதற்காக அவள் பேசியதை தொங்கிகொண்டும் நிற்கவில்லை. அவளும் தன்னை நாயோடு ஒப்பிட்டு பேசிய கோபம் இருந்தாலும் அதை இழுத்து வைக்க முடியவில்லை. 

கதிர் இயல்பிலேயே புத்திசாலி. ஆத்திரத்தில் காரியங்களை செய்ததாலும் சிறிது அமைதியாக உட்கார்ந்து யோசித்தால் தன் பிரச்சனையை கண்டுகொள்வான். இப்போதும் கண்டு கொண்டான். அவன் பிரச்சினை லலிதா என்று. 

கதிர் தன்னை தன் செய்கையை ஒருமுகபடுத்தி இருந்தான். அவள் வேலையாள் என்று மனதில் கொண்டுவந்து  இருந்தான். அவன் பாட்டி அவனிடம் ஊட்டி வளர்த்த அந்தஸ்து பேதம் வேறு மாதிரி அவனை யோசிக்கவே விடவில்லை.

அவனின் காதல் காதலி உணருமுன்னே அவனே எதிரியானான். அதில் அவனுக்கு வருத்தமுமில்லை.

லலிதாவிடம் முகம் மாறாமல், “அவர்களை சிஸ்டம் முன்னிலையில் அமர்த்த வேண்டாம்”, என்று கூறி வெளியே சென்றுவிட்டான்.

வெளியே சென்றவன். “எதற்கு இந்த போராட்டம் என்று முடிவெடுத்து. பேசாமல் அவளை வேலையை விட்டு அனுப்பி விடலாமா”, என்று யோசித்தான். அவன் வெளியே வந்த நேரம் மறுபடியும் அவன் செல் அடித்தது. வித்யா அழைத்தாள்.

“அண்ணா கிளம்பிட்டியா”,

“இல்லை பக்கத்தில தான் இருக்கேன்”,

“வீட்டுக்கு வாங்க ஒரு நிமிஷம்”,

“ஏன்”,

“வாங்களேன்”, என்றாள் குரலில் ஒரு வற்புறுத்தலோடு.

உள்ளே சென்றால் பாட்டியும் அவளும் சோபாவில் அமர்ந்து இவன் வருகையை எதிர்பார்த்திருக்க.

“என்ன”, என்று போய் அமர்ந்தவனிடம்.

“எங்க மாமியார் சொந்தத்தில ஒரு பொண்ணு. நாமக்கல் தான் அவங்களுக்கு ஜாதகம் பொருந்தி வருதாம். இப்போ தான் போன் பண்ணி சொன்னாங்க. நாளைக்கே நல்ல நாளா இருக்கு பொண்ணை பார்த்துட்டு முடிவுபண்ணலாமா.”,

“அவ்வளவு அவசரமாவா”, என்றான்.

“என்ன அவசரம் இதுல. என்னைக்கு இருந்தாலும் பொண்ணை பார்க்க தான் போறோம். அது நாளைக்கா இருந்தா என்ன? இன்னும் ரெண்டு வாரம் கழிச்சு இருந்தா என்ன? பார்ப்போம் பிறகு பேசலாம். பிடிக்காட்டி விட்டுடலாம்”, என்றாள்.

“அது எப்படி பார்த்தவுடனே தெரியும் வித்யா”, என்றான்.

“ஏன் அண்ணா தெரியாது. இதுவரைக்கும் உனக்குள்ள ஒரு முகம் கூடவா வந்தது இல்லை. நமக்கு தெரியும் அண்ணா. ஒரு உள்ளுணர்வு அது சொல்லும் அண்ணா”, என்றாள்.

முகம். உள்ளுணர்வு. என்றவுடனே கதிருக்கு லலிதாவை தவிர வேறு யாரும் ஞாபகத்தில் இல்லை. அவள் முகம் கண்களில் வரவும். அவசரமாக, “என்னவோ செய்ங்க”, என்று எழுந்துவிட்டான்.

லலிதா மறுநாள் காலை வேலைக்கு வரும்போதே வீடு பரபரப்பாக இருந்தது. சபரியை பார்த்து ஆவலை அடக்க முடியாமல், “என்ன”, என்பது போல சைய்கையால் கேட்க.

அந்த பக்கம் வேளை இருப்பவன் போல வந்து, அவசரமாக. “கதிர் மாமாவுக்கு பொண்ணு பார்க்க போறோம்”, என்றான்.

“என்னது பொண்ணு பார்க்கவா. இந்த சிடுமூஞ்சிக்கா. பாவம் யாரு பெத்த பிள்ளையோ. இவன் கிட்ட மாட்ட போகுது”, என்று முணுமுணுக்க, அது சபரி காதில் தெளிவாக விழுந்தது. அவன் “என்ன இவள் இப்படி பேசுகிறாள்”, என்று ஆச்சர்யமாக பார்க்க.

அப்பொழுது தான் சற்று சத்தமாக பேசியதை உணர்ந்தவள்.

“சாரி நமக்குள்ளயே இருக்கட்டுமே”, என்றாள். 

அவன் பதிலளிகும்முன் யாரோ அவனை உரக்க அழைக்க. அவசரமாக அவளை பார்த்து புன்னகைத்தபடி சென்றான்.

  தனக்கு வாய் எவ்வளவு அதிகமாகி விட்டது. தானா இவ்வளவு பேசுகிறோம். என்று தனக்கு தானே கேள்வி கேட்டு, குட்டு வைத்து கொண்டாள்.

 “அதிகப்ரசங்கி ஏன் அவன் கிட்ட வாங்கினது பத்தலையா? மறுபடியும் அவனோட பிரச்சினை பண்ணாத. பிடிச்சா வேலையில இரு பிடிக்காட்டி கிளம்பிட்டே இரு, நீ பேசினதை சபரி கேட்கவும் பரவாயில்லை, வேற யாராவது கேட்டிருந்தா, அவ்வளவுதான். அடங்குடி”, என்று தனக்கு தானே திட்டி கொண்டாள்.   

கதிர் லலிதாவிற்க்கும். தான் பார்க்க போகும் பெண்ணிற்கும் இடையில் ஊசலாடினான். ஒருவாறாக மனதை தேற்றி பெண்ணை பார்க்க கிளம்ப. பெண் கீதா அழகாக இருந்தாள். மிக மிக அழகாக இருந்தாள். நிச்சயம் லலிதாவைவிட பல மடங்கு அழகு. அதுவும் பெண் பார்க்கும் பொழுது இருக்கும் அழகைவிட பெண்கள் கூடித்தான் தெரிவர்.  ஆனால் அந்த அழகு ஏனோ கதிரை ஆகர்ஷிக்கவேயில்லை.

கதிர் அவர்களின் வசதி வாய்ப்புகளை ஆராய. இரு பெண்கள். இவள் தான் மூத்தவள். இன்னொரு பெண்ணுக்கும் கீதாவிற்க்கும்  சற்றே வயது வித்தியாசமாக இருக்க வேண்டும். பார்க்க யார் பெரியவள், யார் சிறியவள் என்றெல்லாம் தெரியவில்லை. சிறியவள் சித்ராவை சபரிக்கு நன்றாக தெரிந்திருந்தது. அவனுடன் கூட படித்தவள் என்றான். 

கதிருக்கு  அதெல்லாம்  பெரிய விஷயமாக தோன்றவில்லை. பெண்ணை பார்த்தான்.அழகாக இருந்தாள். வசதி வாய்ப்பை பார்த்தான். அவர்கள் அளவிற்கு ஓரளவு வசதி படைத்தவர்களாக இருந்தனர். பாட்டியிடம் வந்தவன். “நல்லா விசாரிச்சிகோங்க. பொண்ணை பத்தி நல்லா யோசிச்சிகோங்க. நம்ம வீட்டுக்கு சரி வருவாளான்னு. வரும்னு தோணினா சரின்னு சொல்லுங்க”, என்று பாட்டியிடமே முடிவை விட்டான்.

யாரோ பெண் வீட்டிலிருந்து மாப்பிள்ளை பையன் என்ன படித்திருக்கிறார் என்று விசாரிக்க. “பையன் எம் பி ஏ படிச்சிருக்காங்க”, என்று பதில் சொல்லப்பட்டது. “என்ன தொழில்”, என்றார்கள். என்னவென்று தெரிந்திருந்தாலுமே இந்த கேள்விகள் பெண் பார்க்கும் போது வரும்.  இப்படி அவர்கள் மாப்பிள்ளையை பற்றி தோண்டி துருவி விசாரிக்க.

இவர்கள் தரப்பிலிருந்து பெண்ணை பற்றி அதிகம் தோன்றி துலாவவில்லை. ஜானகி பாட்டிக்கும் சதாசிவதிர்க்கும் தங்கள் மகன் திருமணத்திற்கு சரி என்றால் போதும் என்ற மனநிலையிலேயே இருந்தனர். பெண் அழகாக இருக்கிறாள். வசதி வாய்ப்பும் இருக்கிறது என்றவுடனே சரி என்று சொல்லவே தோன்றியது.  

எல்லாம் சரியாக வரும் போல தோன்ற. அடுத்த மாதத்திலேயே நல்ல நாள் இருந்ததால் திருமணத்திற்கு நாள் குறித்தனர். மாப்பிள்ளையிடம், “பெண்ணிடம் தனியாக பேச வேண்டுமா அண்ணா”, என்றதற்கு தேவையில்லை என்று விட்டான்.

அதே பதில் தான் மணப்பெண் கீதாவும் சொன்னாள். அது ஏன்? என்று யாரும் யோசிக்கவில்லை. இந்த புறம் மணமகன் சொல்லவும் மணமகளும் சொல்லிவிட்டால் என்று எண்ணி கொண்டனர். 

வீட்டிற்கு வந்ததும் கதிருக்கு ஏனோ லலிதாவின் முகத்தை பார்க்கவே முடியவில்லை. அந்த பெண்ணிற்கு சரி என்று சொல்லிவிட்டுவந்தது, லலிதாவை பார்த்த பிறகு ஏதோ தப்பு போலவே தோன்றியது.

குழப்பத்தில் நிறைய வேலைகள் இருந்த போதும் அமைதியாக சென்று படுத்து விட்டான். சில சந்தேகங்கள் லலிதாவிற்கு கேட்க வேண்டி இருந்தது. வரவேயில்லை.

சபரியிடம், “என்ன ஆச்சு? பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லிடுச்சா எங்க முதலாளி போய் படுத்துகிட்டார்”.

“ஷ்” என்று அவளிடம் சைகை செய்த சபரி. “கல்யாணத்துக்கு நாள் குறிச்சிடோம். அடுத்த மாசம். யார் காதுலையாவது விழபோகுது”, என்றான்.

“சாரி! சாரி!”, என்றவள்.    

“பின்ன ஏன் சர் போய் படுத்திகிட்டார்”,

“யாருக்கு தெரியும்”, என்றவனை பார்த்தவள் அவன் மிக சந்தோஷமாக இருப்பது போல தோன்ற. “நீங்க ஏன் இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க சாருக்கு தானே பொண்ணு பார்த்திருக்கு”, என்றாள்.

“அப்போதானே என் ரூட் கிளியர் ஆகும்”, என்று சந்தோஷ மிகுதியால் வார்த்தையை விட்டான். விட்டவன் நாக்கை கடிக்க. “என்ன விஷயம் மறைக்கறீங்க”, என்று சிரித்து கொண்டே கேட்க.

மாட்டியவன் போல முழித்தான் சபரி. “சொல்லுங்க சொல்லுங்க. நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்”, என்று மறுபடியும் லலிதா உற்சாகப்படுத்த.

“யார்கிட்டயும் சொல்லமாட்டீங்க இல்லை”,

“யார்கிட்டயும் கண்டிப்பா சொல்லமாட்டேன்”, என்று லலிதாவின் வாக்குறுதியை தொடர்ந்து. “அக்காக்கு கல்யாணம் ஆனா தானே தங்கச்சிக்கு பார்ப்பாங்க”, என்றான்.

அப்போதும் லலிதாவிற்கு புரியவில்லை. “கதிர் மாமாக்கு பார்த்திருக்கிற பொண்ணுக்கு ஒரு தங்கச்சி இருக்கு. என்னோட கிளாஸ் மேட் சித்ரா. எனக்கு ரொம்பவுமே ஸ்பெஷல்”,

“பொண்ணுக்கு தெரியுமா”,

“அவளுக்கு தெரியும். இன்னும் நேரடியா சொல்லிகிட்டதில்லை”,   

“வாழ்த்துக்கள் எங்க முதலாளி திருமணத்திற்கு அப்புறம் உங்களதும் நடக்கறதுக்கு”, என்று கூறி புன்னகைக்க.

அப்போது பார்த்து கதிர் வர. லலிதாவின் புன்னகை இன்னும் அவன் மனதில் அவனை எரித்து கொண்டிருந்த எண்ணங்களுக்கு எண்ணெய் வார்த்தது.

அமைதியாக வந்து நின்றவன், லலிதாவை முறைக்க. “இப்போதானே பொண்ணு பார்த்துட்டு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டு வந்திருக்கான். என்னை எதுக்கு முறைக்கிறான்”, என்று லலிதா என்னும் போதே சபரியை வேலை சொல்லி அனுப்பினான்.

“என்ன வரபோகிறதோ”, என்று லலிதா பயந்து கொண்டே இருந்ததற்கு தகுந்த மாதிரி. “திருந்தவே மாட்டியா நீ”, என்றான்.

அமைதியாக தான் நின்றாள். “என்ன சொன்னாலும் மண்டையில ஏற மாட்டேங்குது”, என்று அவன் மறுபடியும் அவனுக்கு அவனே சொன்ன பிறகு. லலிதா பொறுக்க முடியாமல், “என்ன தப்பு பண்ணினேன் சர், திருந்தறதுக்கு”, என்றாள் சற்று தைரியமாக. தைரியமாக அவனை பார்த்து கேட்டாலும் அந்த குரல் முழுதுமே வருத்தம் தான் இருந்தது.

அந்த வருத்தமான குரல் கதிரை சற்று அசைத்து பார்த்தது. “என்ன தப்பு செய்தாள் அவள்”, என்று கதிருக்குள் அவனே யோசிக்கும் போது,

”நான் என்ன தப்பு செஞ்சேன். என்னை மட்டும் தான் நீங்க அதிகமா திட்றீங்க. நான் நல்லா பார்த்துட்டேன். வேற யார்கிட்டயும் இப்படி இல்லை. எனக்கு தெரியாம நான் ஏதாவது  தப்பு செஞ்சா சொல்லுங்க திருத்திக்கறேன்”, என்றாள் பணிவாகவே.

அவளே இப்படி அவனிடம் கேட்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அவளையறியாமலேயே இதனை கேட்டாள்.

என்ன பதில் சொல்வது என்று கதிருக்கும் தெரியவில்லை. “வேலை நேரத்தில் அதிகமா பேசினா எனக்கு பிடிக்காது”, என்று ஒற்றை வார்த்தையில் முடித்தவன். கணக்கு வழக்கை பற்றி கேட்டு பேச்சை திசை மாற்றினான்.

அவன் அதை பற்றி பேசி முடித்து கிளம்பும் போது. “வாழ்த்துக்கள் சர்”, என்றாள்.

எதற்கு என்பது போல இவன் பார்க்க. “உங்க திருமணத்துக்கு சர்”, என்று அவள் சொல்ல. இவ்வளவு நேரமாக வேலையில் மூழ்கி இருந்ததால் சற்று நேரம் திருமண நினைவுகளில் இருந்து வெளியே வந்திருந்தவனை மறுபடியும் அந்த சுழல் இழுக்க.

அவளுக்கு நன்றி கூட சொல்லாமல் அவளையே பார்த்தபடி சென்றான். அவன் ஏன் அப்படி பார்த்தான் என்று லலிதாவிற்கு சற்றும் புரியவில்லை.`

அவனுக்கே புரியாத போது லலிதாவிற்கு எங்கே புரியும். அவனோடு பேசியதை சற்றும் மறைக்காமல் லலிதா அவளின் அன்னை தேவியிடத்தில் கூறினாள்.

தேவி, “எதுக்கு கண்ணு நமக்கு அவங்க பொல்லாப்பு. போனமா வந்தமான்னு இருக்கணும். தேவையில்லாம பேச்சை வளர்க்காத கண்ணு”, என்று அன்னையாக அவளுக்கு அறிவுரை கூற. கேட்டிருந்த அவள் தங்கைகள், “அதுக்குன்னு அவங்க என்ன பேசினாலும் கேட்டுட்டு இருந்தா, இன்னும் நிறைய தான் பேசுவாங்க அம்மா”,

“ரொம்பவும் அடங்கி இருக்க கூடாது. கொஞ்சமாவது எதிர்த்து நிக்கணும்”, என்று பவித்ராவும் அனிதாவும் கூற. “அதெல்லாம் வேண்டாம் கண்ணு. அவளுக சொன்னா சொல்றாலுக. நாம. நாம உண்டு, நம்ம வேலை உண்டுன்னே இருக்கலாம் கண்ணு.”, என்றார் மறுபடியும்.

“சரி”, என்று லலிதா தலையாட்டும் வரை விடவில்லை.

திருமண வேலைகள் மும்முரமாக நடந்தன. பாட்டி பேரனிடம் இருந்த கலகலப்பு சற்று குறைந்தது போலவே உணர்ந்தார்.

“என்ன கதிர் பையா?”, என்று பலமுறை கேட்டும் ஒன்றுமில்லை என்றே பதில் வந்தது. அவன் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று தான் அவனுக்கு அவனே நினைத்தான். இருந்தாலும் முடியவில்லை. இந்த யோசனைகளில் இருந்ததினால் மணப்பெண்ணிடம் பேசமுயலவில்லை. அவள் ஏன் பேசவில்லை என்று யோசிக்கவும் இல்லை.

இதற்குள் திருமண பட்டெடுக்கும் நாளும் வர. “வித்யா நீ இன்னும் மணப்பெண்ணி டம் பேசவேயில்லை. அதனால் நீயும் புடவை எடுக்க வரவேண்டும்”, என்று வற்புறுத்தி கட்டாயப்படுத்தி. “நான் வரவில்லை”, என்று அவன் சொல்ல சொல்ல கேட்காமல் அழைத்து சென்றாள்.

அங்கே மணப்பெண் கீதா, அவள் தங்கை சித்ரா மற்றும் அவர் அம்மா வந்திருக்க. இங்கே வித்யா கதிர் மற்றும் சபரி மட்டுமே சென்றனர்.

அங்கே ஒரு அழகிய புடவையை வித்யா தேர்ந்தெடுத்து மணப்பெண்ணிடம் காட்ட. அவள் ஸ்ரத்தையேயில்லாமல், “நல்லா இருக்கு”, என்றாள்.

அதற்குள் அவள் தாய் அவளிடம், “நல்லா பாரு கீதா”, என்று மணப்பெண்ணிடம் ஒரு அதட்டல் போட .அவள் மிரண்டாள். “தோ பார்க்கறேம்மா”, என்று சற்று தடுமாறினாள்.

அதிக அளவில் இது தெரியாவிட்டாலும் மணப்பெண்ணை ஊன்றி பார்த்துகொண்டிருந்த கதிரின் கண்ணுக்கு இது தெரிந்தது. பெண்ணின் வீட்டில் ரொம்ப கட்டுப்பாடோ. அதனால் தான் மணப்பெண் இன்னும் தன்னிடம் பேச கூட இல்லையோ என்று தோன்றியது.

அந்த பெண்ணுடைய பதட்டம் அவனுக்கு புதிதாய் தோன்ற. மீண்டும் மீண்டும் கீதாவின் தாய் மெல்லிய குரலில் ஏதோ அதட்டுவது போல தோன்ற. “விடுங்க அவங்களுக்கு எது பிடிக்குதோ அதை எடுக்கட்டும்”, என்றான் கதிர்.

அந்த வார்த்தையை கேட்டவுடன் பளிச்சென்று கீதாவின் கண்கள் மின்ன அவனை நன்றியுடன் நோக்கினாள்.

இது எதையும் பாராமல் சித்ராவும் சபரியும் வளவளத்துக் கொண்டிருக்க. கீதாவை பார்த்துக்கொண்டிருந்ததால் வித்யாவும் கதிரும் கூட இதனை கவனிக்க தவறினர். 

இப்போது கீதாவை நன்கு கவனிக்க துவங்கினான் கதிர். ஏதோ அவள் பதட்டமாக இருப்பதாக வே தோன்றியது. நிற்பது கூட ஒரு இடத்தில் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருந்தாள். “ஏன் இவ்வளவு பதட்டமாக”, இருக்கிறாள் என்று கதிருக்கு தோன்றியது.

கண்கள் அலைபாய்ந்தன. அவளின் இந்த செய்கைகள் எல்லாம் அவனையறியாமல் லலிதாவோடு கீதாவை ஒப்பிட்டது. லலிதா முகம் பார்த்து பேசுவாள். கண்களில் எப்போதும் அலைபுறுதல் இருக்காது. ஏழ்மையான உடைகள் இருந்தாலும் ஒரு நிமிர்வு இருக்கும்.

“இந்த பெண் அழகாக இருந்தாலும், எனக்கு பிடிக்குமா”, என்று யோசிக்க ஆரம்பித்தான். அதற்குள் பெண்ணிற்கு பட்டு எடுத்திருந்தனர். வித்யாவிடம், “நான் போகவா எனக்கு கொஞ்சம் வேலையிருக்கு”, என்றான்.

“அதுக்குள்ளயா அண்ணா. இன்னிக்காவது நீ பொண்ணு கூட கொஞ்சம் பேசி பழகுவேன்னு பார்த்தேன்”, என்றாள். “நானா என்ன பேசி பழகறது.”, 

“எதுக்கும் முதல்ல நீ பேசி பிடிச்சிருக்கான்னு பாரு, நீ சொன்னன்னு தான் இந்த பொண்ணையே பார்த்தேன்”,  என்று சொல்லிவிட்டு, மற்றவர்களிடம் விடை பெற்று  நிற்காமல் சென்று விட்டான்.

மனதில் கவலை ஏறிக்கொண்டது வித்யாவிற்கு. எல்லாம் சரி வர வேண்டுமே என்று!

Advertisement