Advertisement

அத்தியாயம் நான்கு:

கண்களில் அவளை அறியாமல் நீர் பெருகியது. ஆனால் அது ஒரு கட்டத்தில் அவனை ஒன்றும் தன்னால் செய்ய முடியவில்லையே என்று இயலாமையாக மாறியது.

அவள் ஏதாவது பதில் பேசுவாள். சண்டை போடுவாள். என்று எதிர்பார்த்து காத்திருக்க. கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தவள், திரும்ப தன் இடத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள்.

அவளுக்கு மனம் ஆறவேயில்லை. “என்ன சொல்லி அவன் திட்டியிருந்தாலும் பரவாயில்லை, ஆனால் உடையை. நடத்தையை.  என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் தன்னை பற்றி. தினமும் தன் உடையை ஆராய்ந்து கொண்டிருக்கிறானா. அதுவும் ஆண்களோடு தன்னை. யோசிக்கவே முடியவில்லை. எங்கு தவறு.”, என்று புரியவில்லை 

அவள் அமைதியாக அமர்ந்தது இன்னும் கதிரின் கோபத்தை அதிகப்படுத்த. “என்ன நான் பேசிகிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு போய் உட்கார்ந்துட்ட. என்ன நான் சொன்னது உண்மையா?”,

இவ்வளவு நாட்களாக அவனை பார்த்து பயந்த பயம், சற்று இவன் பேச்சால் மட்டுப்பட்டது. என்ன செய்துவிடுவான் இவன் என்னை என்று தோன்ற வைத்தது. அவனுக்கு பதிலும் கூற வைத்தது.

“என்ன உண்மையா? இதுக்கு என்னால பதில் சொல்ல முடியும். ஆனாலும் சொல்ல மாட்டேன். நீ என்னை விட பணத்திலையும் பலசாலி, உடல்லையும் பலசாலி. நீ என்னை ஏதாவது செஞ்சிட்டனா?”,

“என்ன என்னை பயமுறுத்தரியா. சொல்லு தான் பார்போமே”,

“நாய்ன்னு இருந்தா குலைக்க தான் செய்யும். அதுக்காக எல்லாம் நம்ம அதை பார்த்து திரும்ப குலைக்க மாட்டோம்”, என்றாள் அலட்சியமாக. 

“என்னடி சொன்ன”, என்ன்றவன் ஓங்கி அறைவிட. தூர போய் விழுந்தாள்.

விழுந்தவள் அப்போதும் விடாமல், “இப்படி தான் பண்ணுவீங்கன்னு சொன்னேன்”, என்றாள் விடாமல்.

“வாயை மூடு”, என்று கர்ஜித்தான்.

அடி வாங்கினாலும் அவனை கோபப்படுத்தி விட்ட. காயப்படுத்தி விட்ட. திருப்தி லலிதாவிற்கு.  

இப்படி ஒரு வார்த்தைகள் வளரும் என்று கதிரே எதிர்பார்க்கவில்லை. சத்தம் கேட்டு ஒரு சில வேலையாட்கள் வந்து பார்த்தனர். வெளியே சென்ற சபரியும்  வந்து பார்த்தான். வேகமாக வந்து அவளை தூக்கி விட அவளால் எழக்கூட முடியவில்லை.

வந்து பார்த்தவர்களுக்கு கதிர் லலிதாவை அடித்திருக்கிறான் என்று உணர்த்தியது.

பாட்டி வந்தார், “என்ன கதிரு பண்ணிவச்சிருக்க ஆம்பிள்ளை வேலையாள்ன்னு நினைச்சியா. கைநீட்டி அடிக்க. ஆம்பிள்ளை வேலையாள் மேல கூட கை வைக்க முடியாது. ஒரு பொண்ணு கைநீட்டி அடிச்சிருக்க ரொம்ப தப்புப்பா. கணக்கு வழக்குல தப்பிருந்தாலும் கை நீட்ட கூடாதுப்பா”, என்றார். நிலைமையின் தீவிரம் அது அல்ல என்று அவருக்கு உணர்த்தினாலும். பேரனின் செய்கை எல்லோர் முன்னிலையிலும் அந்த பெண்ணையும் சிறுமைப்படுத்தி. அவனையும் சிறுமைப்படுத்தும். என்பதால் ஏதோ சொல்லி சமாளித்தார்.

வேறு யாரும் எதுவும் சொல்லிவிடும்முன் அவரே கதிரை கண்டித்தார். 

“நீ வாம்மா”, என்று அவளை கைபிடித்து அழைத்து போகப்போக. “இல்லை, நான் என் வீட்டுக்கு போறேன்”, என்றாள் அடக்கப்பட்ட அழுகையுடன் லலிதா.

“போகலாம், போகலாம், கொஞ்சம் நேரம் கழிச்சு போகலாம்”, என்று அவளை சமாளித்து அந்த இடத்தை விட்டு அகற்றினார்.

எல்லாரும் கலைந்து அவரவர் வேலையை பார்க்க முணுமுணுத்துக் கொண்டே போக. 

கதிரை முறைத்து கொண்டே போனார் ஜானகி பாட்டி.

கதிர் இப்படி ஒரு சூழலை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. அறைந்ததில் அவள் முகமே ஒரு புறம் வீங்கி இருந்தது, நன்றாக தெரிந்தது. எங்கேயும் போகமால் சபரியை மட்டும் வெளி வேலைகளுக்கு அனுப்பி அவன் ரூமிற்குள் சென்று அடைந்து கொண்டான். 

“போய் முகம் கழுவி வா”, என்று பாட்டி அவளை அனுப்ப. வீட்டின் பின்புறம் உள்ள தண்ணீர் பைபிற்கு சென்றவள். முகத்தில் தண்ணீரை தெளிக்க. கன்னம் எரிந்தது. மனது அதைவிட எரிந்தது. அடக்கமாட்டாமல் சரிந்து அழ ஆரம்பித்தாள், வாயை மூடி சத்தம் வெளியே கேட்காதபடி அடக்கி.

மேலே கதிர் அவன் மாடியில் ஜன்னலில் இருந்து இதை  பார்க்க நேர்ந்தது. அவனுக்கு அவன் மேல் இன்னும் கோபம் பொங்கியது. சமாதனப்படுத்துவோமா என்று கூட அவன் நினைவில் அவனையறியாமல் அவன் இயல்பையும் மீறி உதித்தது. அவள் அழுவது அவனை ஏதோ செய்தது.  சாதாரணமாக ஆரம்பித்தது எப்படி முடிந்துவிட்டது என்று அவன் நினைக்க.

எப்படி ஆரம்பித்து. எப்படி பேசி. எப்படி அடித்து விட்டான். என்று தோன்ற தோன்ற நாளையிலிருந்து வேலைக்கு வரக்கூடாது  என்று முடிவெடுத்தாள்.

மறுபடியும் உள்ளே வர. அவள் வருவதற்காக காத்திருந்த பாட்டி அவளிடம் என்னவாயிற்று, ஏன் அடித்தான், எதுவும் கேட்கவில்லை. அவரின் உள் மனது கூறியது இது கட்டாயம் கதிரின் தவறாக தான் இருக்க வேண்டும் என்று.

“விட்டுடு! அவன் செஞ்சது சரின்னு சொல்லமாட்டேன்! தப்பு தான்! பெருசு பண்ண வேண்டாம். கொஞ்சம் கோபக்காரன் யார்கிட்டயும் இப்படி இதுவரை நடந்தது இல்லை. ஏதோ அவனையும் மீறி நடந்துடுச்சி விட்டுடு”, என்றார் மறுபடியும் அந்த பெரிய வீட்டு பெண்மணி.

யாரிடமும் இது போல் பேசியிருக்க மாட்டார், கேட்டிருக்க மாட்டார் என்பது அவர் பேசும்போதே தெரிந்தது, தன் பேரனுக்காக மிகவும் இறங்கி வருகிறார் என்று.

ஒன்றும் சொல்லாமல் அமைதி காத்தாள்.  “போ! போய் வேலையை பார் பெருசு பண்ணாத”, என்றார் மறுபடியும்

“இல்லை! எனக்கு இந்த வேலை வேண்டாம்! நான் வரலை!”, என்றாள்.

அவளிடம் தன்மையாக. “என்ன நடந்ததுன்னு கூட நான் கேட்கலை. எனக்கு தப்பு கதிர் மேல தான்னு உள் மனசு சொல்லுது. இப்போ நீ வேலையை விட்டு போனேன்னா அது தேவையில்லாத பல பேச்சுக்களை கொடுக்கும். இங்க நடந்ததை எல்லாரும் பார்க்கலைன்னாலும் அவன் உன்னை அடிச்சிட்டான்ற மாதிரி எல்லோருக்கும் தெரியும்”.

“இப்போ நீ போனா இத்தனை நாள் நீ கட்டி காப்பாத்தி வந்த பேர் எல்லாம் காத்துல பறந்துடும். வீட்டு ஆள் எனக்கே என்ன நடந்துதுன்னு தெரியாதப்ப மத்தவங்களுக்கு என்ன தெரியும். நீ வந்துட்டு இருந்தின்னா ஏதோ வேலை பிரச்சனைன்னு போய்டும்”.

“நான் அவன் கிட்ட  பேசறேன். இனிமே இந்த மாதிரி நடக்காது”, என்றார் என்ன நடந்தது என்றே தெரியாமல். கிட்ட தட்ட பதினைந்து நிமிடம் அந்த சிறிய பெண்ணிடம் பேசி அவளை வேலையை விட்டு போகும் முடிவை வாபஸ் வாங்க வைத்தார். எத்தனை வருட அனுபவம் எத்தனை பேரை பார்த்திருப்பார்.

அவளை மொத்தத்தில் குழப்பி விட்டார். அவளை விடுத்து பேரனிடம் சென்றவர், “என்ன கதிரு பண்ணியிருக்க இதை உன்கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கலை”,.

அவளிடம், “என்ன நடந்தது”, என்று கேட்காதவர் கதிரிடம் வந்து. “என்ன நடந்தது”, என்றார்.

“கோவத்துல அடிச்சிட்டேன் பாட்டி”, என்று உண்மையை ஒத்து கொண்டான்.

“எதுக்கு கோபம்! சொல்லு எதுக்கு கோபம்!”,

மௌனமாகவே இருந்தான்.

என்ன கேட்டும். எதற்கு கோபம் என்று வாயை திறக்கவில்லை.

“நீ யார் கதிர் கோபப்பட்டு அவளை அடிக்க. உன் கோபத்தை எதுக்கு நீ அவகிட்ட காட்டற. இப்படியா நான் உன்னை வளர்த்தேன். அதிகமான சந்தோஷத்தையும் வேலைபார்க்கறவங்ககிட்ட காட்ட கூடாது. அதிகமான கோபத்தையும் காட்ட கூடாது”,.

“அவங்களை தள்ளி தான் நிறுத்தணும். என்ன செஞ்சிட்டு இருக்க நீ. உன்கிட்ட வேலைக்கு வந்து முதல் சம்பளம் கூட வாங்காத பொண்ணை அடிச்சிருக்க”, என்று பாட்டி அவனை ஒரு பிடி பிடித்தார்.

மற்ற நேரங்களில் என்றால் எதிர்த்து பேசியிருப்பான். இன்று அவனே மீண்டும் ஒரு குற்ற உணர்ச்சிக்கு ஆட்பட்டிருந்ததால் எல்லாவற்றையும் அமைதியாகவே கேட்டு கொண்டான்.

கனவில் வந்த அந்த முகம் இப்போது அவன் அடித்த பிறகு. “நீ என்னை இப்படி செய்துவிட்டாயா”, என்று அன்று இரவு அவன் கனவில் கேட்க.

அதன் பிறகு உறக்கத்தை தொலைத்தான்.

வீட்டிற்கு சென்ற லலிதா யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. “வேறு ஏதாவது என்றால் சொல்லலாம். தன் ஏழ்மையை சுட்டிகாட்டியிருகிறான். “,

“தன் உடையை சுட்டிகாட்டியிருக்கிறான். மீறி ஆண்களிடம் பேசாமல் உன்னால் வேலை பார்க்க முடியாதா. என்னிடமும் பேசுவாயா என்பது என்னை மயக்குவாயா என்பது போல அர்த்தம் வர. என்னை பார்த்து எதை வைத்து இப்படி சொன்னான். இவன் மனநிலை சரியில்லாதவனோ”, என்று என்ன தோன்றியது. தான் பார்த்த மனநிலை சரியில்லாத நாயகர்களாக வரும் படங்களை எல்லாம் எண்ணி பார்த்தாள்.

கடைசியில் அவன் தன்னை மனநிலை சரியில்லாதவலாக ஆக்கிவிடுவான், அவனிடம் ஒதுங்கியே இருக்க வேண்டும். முடிந்தவரை வேலையை விட்டு சீக்கிரம் விலகி விட வேண்டும் என்று முடிவெடுக்க.

அப்போது வந்த கந்தசாமி, “என்ன ஆச்சு கண்ணு”, என்றார் பதட்டமாக. சரி அவருக்கு விஷயம் தெரிந்து விட்டது இனி மறைக்க முடியாது என்று எண்ணியவள்,

உண்மை காரணத்தை கூற முயலவில்லை. “அது அப்பா, வேலைல நான் எந்த தப்பும் பண்ணலை. ஆனா பண்ணிட்டேன்னு நினைச்சு அடிச்சிட்டாருப்பா”, என்றாள்.

ஒரு வயது வந்த பெண்ணின் தாய்க்கும் தந்தைக்கும் இதை கேட்டால் எப்படி இருக்கும். தவித்தனர்.

தேவையில்லாமல் அவளை கொண்டு போய் சிக்கலில் மாட்டி வைத்து விட்டோமோ என்று. அவர்கள் சொன்னாலும் வேலைக்கு அனுப்பி இருக்க கூடாது ஏதாவது சாக்கு சொல்லி இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.

தெரியாத இடம் என்றாள் சற்று மரியாதை இருக்கும். தெரிந்த இடம் படிக்க வைத்தவர்கள் அலட்சியமாக நடத்துகிறார்களோ என்று தோன்றியது.

மறுநாள் இதை பற்றி கட்டாயம் பெரிய முதலாளியான சதாசிவதிடம் பேச வேண்டும் என்று நினைத்தார் கந்தசாமி.

“நின்னுக்கறியா கண்ணு”, என்றார் தேவி. “இல்லைம்மா, நான் கூட அப்படிதான் நினைச்சேன். அந்த பெரியம்மா இப்போ நிக்க வேணாம்ன்னு ஏதோ பேசறாங்க. இன்னும் ஒரு முயற்சி பண்ணி பார்க்கறேன். முடியலைன்னா நின்னுக்கரேன்”, என்றாள்.

“என்னவோ கண்ணு. போன நாளே விழுந்த. இப்போ இது., என் மனசே சரியில்லை”, என்றார் அவள் அன்னை.

அவளை அடித்தது சற்று மிகுந்த குற்ற உணர்ச்சி கதிருக்கு. ஆனாலும் அவள் பேசியது தவறு என்பதில் எந்த மாற்றமும் இல்லை கதிரிடம். அதனால் மன்னிப்பு கேட்கலாமா என்று நினைத்தவன் பின்பு அந்த முடிவை விட்டான்.

ஆனால் முன்பு போல் கூட அவளிடம் பேசமுடியவில்லை. சபரியும் அவள் அடி வாங்கியதில் சற்று பயந்திருந்தான். என்னவென்று தெரியாவிட்டாலும் முன்பு போல் பேச விழையவில்லை, புன்னகையுடன் நிறுத்தி கொண்டான்.

இப்போது முறைக்கும் படலம் லலிதாவிற்கு சொந்தமானது போல கதிர் பாராத போது அவனை முறைத்து பார்த்து திருப்தி பட்டு கொண்டாள். மறந்தும் அவனிடத்தில் பேசவில்லை. “என்ன, ஏது”, என்று இன்னும் சுருங்கி போயிற்று.

அதற்குள் இந்த விஷயம் கதிரின் தந்தை காதுக்கும் சென்றுவிட அவரும் இந்த மாதிரி அவன் செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை. அதையும் விட செய்ய வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லை.

எதுவாகினும் சரியில்லை என்றுனர்ந்தவர் முதலில் அவனுக்கு ஒரு திருமணம் அவசியம் என்பது போல உணர்ந்தார். அவனின் தனிமை கூட இந்த மாதிரி அவனை கோபப்படுத்தும் என்று நினைத்தார். பிறகு தரகரை கூப்பிட்டு அவன் ஜாதகத்தை அன்றே கொடுத்தார்.

வளர்ந்த பையன் அவனை அதட்டினாலும். அந்த பெண் மேல் துவேஷத்தை வளர்த்து விட்டால் என்ன செய்வது என்று கண்டும் காணாமல் விட்டவர், இனிமேல் இந்த மாதிரி நடக்காது என்று கந்தசாமியிடம் உறுதி அளித்தார்.

 ஜானகி பாட்டியும், அவர் மகன் சதாசிவமும் சேர்ந்து தங்கள் குல வாரிசான கதிர்வேலுக்கு தீவிரமாக பெண் பார்க்க தொடங்கினர்.

இது எல்லாம் கதிருக்கு தெரிந்து தான் இருந்தது. அவனும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அதே சமயம் லலிதாவை அடித்து விட்டான் என்று அவளிடம் வேலை வாங்காமலும் இருக்கவில்லை.

ஒரு வகையாக லலிதாவிடம் இருந்து எண்ணங்களில் ஒதுங்க முயன்றான். காதல் சொல்லாமலேயே. அவள் காதலி தான் இன்னும் அடையாளம் காட்டப்படாமலேயே காதலியை பிரிய நினைத்தான்.

சபரி இதை எதுவும் அறியவில்லை. அவன் இருக்கும் இடத்தை முடிந்தவரை கலகலப்பாக்கி கொண்டிருந்தாலும் அந்த வீட்டின் சீரியஸ்நெஸ் அவனை சற்று அடக்கியே வாசிக்க வைத்தது. அவனது அண்ணியான வித்யாவிடம் புகார் படிக்க வைத்தது.

“என்ன அண்ணி உங்க வீட்ல யாரும் பேசிக்க மாட்டேங்கறாங்க. யாரும் சிரிக்க மாட்டேங்கறாங்க. நான் நிஜமாவே நம்ம வீட்டை மிஸ் பண்றேன் அண்ணி. அண்ணா கிட்டயும் அப்பா கிட்டயும் சொல்லுங்களேன். நீங்க என்ன வேலை சொன்னாலும் செய்யறேன். என்னை எப்படியாவது சென்னைக்கு கூப்பிட்டுக்கோங்க”, என்றான்.

“போகறதுக்கு முன்னாடி ஊர் பூராவும் நிறைய பொண்ணுங்க இருப்பாங்களா. சைட் அடிப்பேன். ஊர் சுத்துவேன். அப்படி இப்படின்னு சொல்லிட்டு. இப்போ என்ன இப்படி சொல்றிங்க”, என்றாள் வித்யா

“ஊர் பூராவும் என்ன அண்ணி பேசறீங்க. வீட்டுக்குள்ள ஒண்ணு இருக்கு, அதையே சைட் அடிக்க விடமாடேங்கறார் உங்க அண்ணன். இனி நான் ஊருக்குள்ள எங்க போறது”, என்றான்

“எங்க வீட்டுக்குள்ளயா. யார் அது?”, என்றாள்.

“அதுதான் உங்கள் வீட்டு பாலைவனத்தின் சோலை”,

“யாரு பாலைவனத்தின் சோலை? புரியறமாதிரி சொல்லுங்க”, என்றாள்.

“லலிதா”, என்றான், “உங்க வீட்ல வேலை செய்யறாரே கந்தசாமி. அவர் பொண்ணு”,

“ஆமா புதுசா கணக்கு வழக்கு பார்க்க வந்திருக்குன்னு, அப்பாவும் பாட்டியும் சொன்னாங்க”,

“ம், திரும்பி பார்த்தாகூட  உங்க அண்ணன் என்ன முறை முறைக்கிறார். என்ன முறைச்சா கூட பரவாயில்லை. அந்த பொண்ணை முறைக்கிறார். அதனால சைட் கூட அடிக்க முடியலை. பேசமுடியலை. அவரும் சைட் அடிக்க மாடேங்கறார். என்னையும் அடிக்க விடமாடேங்கறார்”, என்றான் விளையாட்டுதனமாக.

“என்னது அண்ணா.  உன்னை விட்டு அந்த பொண்ணை முறைக்கிறாரா”, என்றாள் யோசனையாக. வித்யா மனதிற்கு ஏதோ நெருடலாக பட்டது.

“ஏதோ ஒண்ணு வீட்ல எல்லாம் கைவரிசையை காட்ட வேண்டாம். அமைதியா ஒழுங்கா இருங்க. நான் இன்னும் ரெண்டு நாள்ல அங்க பசங்க லீவ்க்கு வர்றேன்”, என்றாள்.

ஒரு வாறு சத்தமில்லாமல் லலிதாவினிடத்திலும் கதிர்னிடத்திலும் சூழல்கள் சென்றன. இருவருக்குள்ளும் இருவரின் வார்த்தை தாக்கங்களும் கனன்று கொண்டிருந்தன. ஆனால் இருவருமே வெளியில் காட்டவில்லை.

லலிதா அவனை ஒன்றும் செய்ய முடியாத தன் இயலாமையை எண்ணி மனதிற்குள் நொந்து கொண்டே இருந்தாள். சிறுபிள்ளைத்தனமாக கடவுளிடம் அவன் தன்னை அடித்தது போல ஒரு அடியாவது அடிக்க வேண்டும் என்று வேண்ட வேறு செய்தாள். சந்தர்ப்பம் அமையாதா என்று எண்ணி எண்ணி காத்திருந்தாள் சிறு பெண் போல.

பிறகு கடவுளிடம் இவனை விட பணம் படைத்தவனாக ஒரு கணவனை கொடுக்கும்படியும் வேண்டினாள். “தினம் ஒரு புது உடை அணியும் அளவுக்கு வசதி படித்தவனாக இருக்க வேண்டும் கடவுளே. என் உடையை எப்படி சொல்லி விட்டான். தினம் ஒரு உடை அணியும் நிலையில் இருப்பவர்கள் தான் இவனை திரும்பி பார்ப்பார்களா”.

“பார்கவே சகிக்கமாடாமல் இருக்கிறான் பேச்சை பார். அடுத்த முறை சந்தர்ப்பம் கிடைக்கட்டும், கட்டாயம் சொல்லிவிடுவேன், நீயும் உன் மூஞ்சியும் போடா”, என்று. அவன் அடித்தாலும் பரவாயில்லை என்று. இப்படி பலவாறாக லலிதாவும் இப்பொழுது கதிரை பற்றியே நினைக்க ஆரம்பித்திருந்தாள்.          

ஒரு பெண், ஒரு ஆண், என்று இரு மக்களோடும், தன் கணவரோடும் வித்யா ஆர்ப்பாட்டமாக தன் தாய் வீடு வந்தாள். அவள் கணவன் ராஜேஷ் அவளை விட்டு போவதற்காக வந்திருந்தான்.

வீடு ஆட்களால் நிறைந்தது. அமைதியாக இருந்த வீடு இப்போது ஆட்களோடு கலகலத்து பார்பதர்க்கே நன்றாக இருந்தது லலிதாவிற்கு.  “இவர்கள் வீடு எப்படி இருந்தால் உனக்கென்ன? வாங்கின அடி பற்றாதா”, என்று தனக்கு தானே கடிவாலமிட்டு கொள்வாள்.

வித்யா அவள் அண்ணன் போலவோ. அவள் பாட்டி போலவோ இல்லை. நன்றாக பழகினாள். “நீ வேலையாள்”, என்ற வித்தியாசம் காட்டுவதாக லலிதாவிற்கு தோன்றவில்லை.

வந்தவுடனேயே கேட்டாள். “வேலை எப்படி இருக்கிறது சிரமமாக இருக்கிறதா? இன்னும் ஏதாவது வசதிகள் வேண்டுமா?”, என்று.

“இல்லை எல்லாம் நன்றாக தான் இருக்கிறது”, என்று லலிதா சொல்லும்போதே, அங்கே வந்த வித்யாவின் மக்கள் அவள் முன் கம்ப்யூட்டர் இருப்பதை பார்த்து. “ஆன்ட்டி உங்க சிஸ்டம்ல கேம்ஸ் இருக்கா”, என்று வந்து நின்றனர்.

அவர்களை அளவிட்டாள். ஆண் பெரியவன் போல தோன்றினான். ஒரு ஏழு எட்டு வயது இருக்கும். பெண் சிறியவள் போல தோன்றினாள். ஒரு ஐந்து வயது இருக்கும். அவர்கள் கேட்டது ஸ்ருங்காரமாக இருந்தது.

“ஒஹ் இருக்கே!”, என்று லலிதா பதில் சொல்ல வாயேடுக்கும் போது.  

அந்த பக்கமாக அப்போது வந்த கதிர். இவர்கள் பேசியதை கேட்டு அவனையறியாமல் நின்று முதல்முறையாக சகஜமாக லலிதாவை பார்த்து “இல்லைன்னு சொல்லு”, என்று சைகை செய்தான்.

அவளுக்கு புரியவில்லை. “என்னிடமா அவன் பேசுகிறான்”, என்று ஆச்ச்சர்யத்தில் அதிர்ந்து நிற்க. “சொல்லுங்க ஆன்ட்டி”, என்றனர். குழந்தைகள் மறுபடியும் அவளை பார்த்து.

“இல்லைன்னு சொல்லு”, என்று மறுபடியும் சைகை செய்தான். அப்போது தான் இந்த சைகையை பார்த்த வித்யா. இவன் இவ்வளவு சகஜமாக இவளிடம் பேசுவானா என்பது போல பார்த்திருக்க.

 

“இல்லை, இதுல கேம்ஸ் இல்லை. ஆனா கேம்ஸ் இல்லைனா என்ன? நம்ம வேற விளையாடலாம். எனக்கு நிறைய விளையாட்டு தெரியும்”, என்றாள்.

“அதான் ஆன்ட்டி சொல்றாங்க இல்லை. அப்புறம் விளையாடலாம். இப்போ  போகலாம் வாங்க! ஆன்ட்டியை வேலை நேரத்தில் டிஸ்டர்ப் பண்ண கூடாது”, என்று கதிரை யோசனையாக பார்த்தவாரே வித்யா அவர்களை கூட்டிச் சென்றாள்.  

Advertisement