Advertisement

அத்தியாயம் மூன்று:

காலையில் எழுந்து காபி குடித்தவுடனேயே கோழிபண்ணை செல்லும் கதிர் பிறகு ஒரு பத்து மணிவாக்கில் வந்து டிபன் சாப்பிட்டு மதியம் வரை இங்கே இருக்கும் வேலைகளை பார்த்து பின்பு மதியம் மூன்று மணிக்குமேல் வீட்டிலேயே சாப்பிட்டு லாரி ஆபிஸ் கிளம்பினான் என்றால் திரும்ப ஒரு எட்டு ஒன்பது மணிக்கு தான் வருவான்.

சதாசிவம் மேற்பார்வையே, அதிகமாக எதுவும் செய்ய மாட்டார் கட்சி கூட்டம், லாரி ஒனர் அசொசியேஷன் கூட்டம், கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கம், என்று அங்கும் இங்கும் செல்லவே நேரம் அதிகமாக செலவழிப்பார். வீட்டில் இருக்கும் நேரமும் குறைவு…… தொழிலை பார்க்கும் நேரமும் குறைவு.  

லலிதா அங்கு வேலைக்கு சேர்ந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகிவிட்டன. அவளை இரண்டு நாட்களாக பணம் பட்டுவாடா செய்யும் வேலையும் சேர்த்து கொடுத்தான் கதிர். கந்தசாமிக்கு கோழிபண்ணையை மேற்பார்வை பார்க்கும் வேலையை போட்டு கொடுத்தான்.

எல்லாம் சரியாக போவது மாதிரி தெரிந்தாலும் மீண்டும் வித்தியாசத்தை உணர்ந்தாள் லலிதா.

அவள் பாராதபோதெல்லாம் அவளையே பார்க்க ஆரம்பித்தான் கதிர். அவனால் அவளை பாராமலும் இருக்க முடியவில்லை. இது தான் காதலா என்று அவனை அவனே கேட்க ஆரம்பித்திருந்தான்.

இதுதானா என்று தெரியவில்லை. காதல் சொல்லவும் முயலவில்லை. தான் சொல்லும் தகுதி அவளுக்கு இல்லை என்பது மாதிரியான எண்ணம் அவனுள் ஓடிக்கொண்டிருந்தது.  இந்த ஜாலங்கள் அனைத்தும் சமையத்தில் அவன் பார்வையில் வந்துவிடும். அந்த பார்வை. 

வெறும் பார்வை மட்டுமே அவளை மிகவும் இம்சித்தது. லலிதாவிற்கு அவனிடம் என்ன வித்தியாசம் என்று கண்டு பிடிக்க முடியவில்லை. ஏதோ உணர்ந்தாள். எல்லோரிடமும் மரியாதையாகவும் கம்பீரமாகவும் பழகினான். பாட்டியிடம் செல்லம் கொஞ்சினான். தன்னிடம் எவ்வாறு நடந்தான் என்பது அவளுக்கே தெரியவில்லை.

அவன் பார்க்காத போது அவனை பார்த்து வைக்க அவள் தன்னை பார்ப்பதை உணர்ந்தான். அந்த பார்வையில் பெரும் சஞ்சலம் இருந்ததையும் உணர்ந்தான். தான் தன் பார்வைகள் தான் அதற்கு காரணம் என்பதையும் உணர்ந்தான். அதை மாற்றலாம் என்றால் முடியவில்லை.

சிறிது அவளிடம் பேசித்தான் பார்போமே என்று தோன்றியது.

கதிரை தினமும் கனவில் வந்து இவள் இம்சித்து கொண்டிருப்பது இவளுக்கு எங்கே தெரியும்.

தினம் தினம் அவளுடன் கனவில் பேசுபவன் நனவில் பேச முடிவெடுத்தான்.

என்றுமில்லாமல் அன்று காலையில் வந்தவுடனே கதிர் அவளை பார்த்து. “குட் மார்னிங்”, என்றான்.

என்னடா இது அதிசயமாக நம்மை பார்த்து குட்மார்னிங் சொல்கிறான் என்று மனதிற்குள்ளேயே பயந்தவள். திரும்ப சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்து பதில் சொன்னாள். “குட்மார்னிங் சர்”, என்றவளை பார்த்து.

“வேலை எப்படி இருக்கு, நல்லா இருக்கா”,

“நல்லா இருக்கு”, என்பது போல் தலையை உருட்ட. 

“இருக்குன்னு சொல்றியா, இல்லைன்னு சொல்றியா?”,  என்று கேட்க.

எப்பொழுதும் போல் அது அவளுக்கு மிரட்டலாக தோன்றி, “இருக்கு சர்”, என்று சொல்ல வைத்தது.

“எது இருக்கு”,

“நல்லா இருக்கு சர்”, என்றாள். விட்டாள் அழுதிருப்பாள்.

அதை உணர்ந்தானோ. என்னவோ. “என்னை பார்த்தா பயமாவா இருக்கு”, என்றான்.

இதற்கு, “இல்லை”, என்று சொன்னாள் அது பொய். “இருக்கு”, என்று சொன்னால் தப்பாக எடுத்து கொள்வானோ என்று பயந்து அமைதியாகவே நின்றாள்.

அவளிடம் வார்த்தையை வளர்க்க விரும்பி. “பாட்டிக்கு புக் படிச்சி சொல்றியா, டைம் இங்க நல்லா போகுதா. அம்மா போனதுல இருந்து பாட்டியால வீட்டை சமாளிக்க முடியலை. வெளில காட்டிக்க மாட்டாங்க. ஆனா அவங்களால முடியலை. ஏதாவது இங்க சரியில்லை வீட்லன்னு உனக்கு தோணினா சொல்லு.”, என்றான்.

“சரி, சரி”, என்பது போல தலையை ஆட்டினாள்.

“ஏதாவது கேட்டா பதில் சொல்லனும். இப்படி தலைய தலைய ஆட்டினா நான் என்னன்னு எடுத்துக்குவேன்”, என்று அவளை சிறிது சத்தமாக கடிய உலுக்கி விழுந்தவள். “சொல்றேன்”, என்றாள்.

“என்ன சொல்ற?”, என்றான் பதிலுக்கு.

“பதிலை”, என்றாள்.

“தட்ஸ் குட்”, என்றான்.

“என்னடா இது”, என்ற அவளின் வழக்கமான டையலாக் சொல்லி மனதிற்குள் நொந்து கொண்டாள்.

என்னதான் மறைத்தாலும் மனதின் சந்தோஷத்தை நிறைய நேரம் மறைத்து வைக்க முடியாது.

அது கதிரிடம் தெரிய. “என்ன கதிர் பையா, ரொம்ப சந்தோஷமா இருக்க”, என்றார் பாட்டி. செல்லமாக பாட்டி அவனை கதிர் பையா என்றே கூப்பிடுவார். 

“அப்படியா பாட்டி தெரியுது. எனக்கெதுவும் தெரியலையே”, என்றான்.

“உனக்கு தெரியலையா, உனக்கு தெரியவைக்கிற மாதிரி என்ன பண்ணனும் சொல்லு”, என்றார்.

“ஒண்ணும் பண்ணவேணாம் பாட்டி”, என்று பிடி கொடுக்காமல் நழுவினான்.

இவன் நழுவி செல்வதை பார்த்த பாட்டி. “சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணனும்”, என்று எண்ணியவராக போனை கையிலெடுத்தார்.

அவர் அழைத்தது அவனின் தங்கை வித்யாவை.

“சொல்லுங்க பாட்டி”, என்றவளை.

“என்னத்த சொல்றது. கல்யாணம் பண்ணி போயிட்டா பொறந்த வீட்டை மறந்துடுவீங்களா என்ன?”,

“ஏன் பாட்டி? என்ன ஆச்சு? கோபமா பேசறீங்க”,

“ஆத்தி நான் கோபமா பேசறேன்னு தெரியுதா”,

“என்ன பாட்டி நீங்க விஷயத்தை சொல்லுங்க”,

“நம்ம கல்யாணம் ஆகி ரெண்டு குழந்தை பெத்துட்டோமே. நம்ம அண்ணன் இன்னம் கல்யாணத்துக்கே வழியில்லாம இருக்கானேன்னு ஏதாவது இருக்கா உனக்கு”,

“அய்யோ பாட்டி! அண்ணன் மட்டும் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லட்டும். பொண்ணை க்யூவுல நிறுத்த மாட்டேன்”, என்றாள். 

“என்ன செய்வியோ தெரியாது! இந்த தைக்குள்ள அவன் கல்யாணம் நடக்கணும் தெரியுதா”, 

“சரின்ர வார்த்தைய அண்ணன் கிட்ட வாங்கு, பொண்ண நான் ரெடி பண்றேன்”,

“அவன் கிட்ட நான் சரின்னு வாங்கறேன். நீ பொண்ணை பாரு”, என்று போனை வைத்தார் .

போனை வைத்த அடுத்த நிமிடம் மறுபடியும் அடித்தாள்.

“இப்போ என்ன வித்யா கண்ணு”,

“பாட்டி நான் என் கொழுந்தனாரை. அதான் சபரியை வேலை கத்துக்க அங்கே அனுப்பறேன்னு சொன்னேனே, என்ன அச்சு”,

“உங்கண்ணன் ரொம்ப யோசிக்கறான். நான் என்ன பண்ணட்டும்”,

“அதெல்லாம் எனக்கு தெரியாது. அவர் யாருக்கும் அடங்காம ஊரை சுத்திட்டு இருக்காராம். உங்க வீட்டுக்கு கொஞ்ச நாள் அனுப்பி வைக்கலாம்னு எங்க வீட்டுக்காரர் சொல்றார். உங்க அண்ணனுக்கு கொஞ்சம் பயப்படுவான்னு சொல்றார்”.

“நாளைக்கு நான் அவங்களை அனுப்பி வைக்கறேன். எந்த பிரச்சனையும் வராம நீதான் பார்த்துக்கணும். என் கொழுந்தனார் மட்டுமா என்ன? அண்ணனுக்கு அவர் தாய்மாமன் மகன் கூட தானே. நீங்க சொல்லுங்க”,  என்று சொல்லி பதில் கூட தெரிந்து கொள்ளாமல் போனை வைத்தாள்.

இது எதுவும் தெரியாத கதிர்வேல், “என்ன செய்யலாம். இது காதல் தானா? அவளிடம் சரிவருமா? நம் வீட்டில் இத்தனை வருடம் நம்மை அண்டி பிழைப்பவரின் பெண், எப்படி என்னை இப்படி சலனப்படுத்தலாம்”, என்று அவனுக்கு அவனே யோசித்து கொண்டு இருந்தான். அவன் யோசிக்க யோசிக்க அவன் பார்வைகள் வித்தியாசப்பட லலிதாவின் பயம் அதிகம் ஆகியது.

ஒரு நாள் காலையில், “மாமா எப்படி இருக்கீங்க”, என்று சதாசிவத்தை கேட்டுக்கொண்டே  சபரிநாதன் எனப்படும் சபரி அவர்கள் வீட்டிற்கு வந்து இறங்கினான்.

காலையில் அவனை பார்த்து எல்லாரும் ஆச்சர்யப்பட.

“ரெண்டு நாளைக்கு முன்னாடியே நம்ம வித்யா பொண்ணு சொன்னா! நான் மறந்துட்டேன்”, என்றார் ஜானகி பாட்டி

அவன் சத்தத்தை பார்த்து கதிர் முகம் சுளிக்க.

கதிரிடம், மெதுவாக. “ஒரு ஆறுமாசம் கொஞ்சம் பொறுத்துக்கோ கதிர். இவனுக்கு நீ வேளை சொல்ல கொடுப்பேன்னு நான் உன் தாய் மாமனுக்கு வாக்கு கொடுத்திருக்கேன்”, என்று சதாசிவம் சொல்ல.

“என்னை கேக்காம நீங்க ஏன் அப்பா இந்த வேலையெல்லாம் செய்யறீங்க”, என்று அவரை கதிர் கடிந்தான். “சரியான அதிகப்ரசங்கிபா அவன். நம்ம சொல்றதை கேட்க மாட்டான். இப்போ இருந்தா அவனை நான் பார்க்கறேன்”,  என்றான்.

“விடு கதிர். இன்னும் பத்து நாள், குழந்தைங்க ஸ்கூல் லீவ் விட்டவுடனே நான் வித்யாவை இங்க வர சொல்லி இருக்கேன். அவ வந்தா ஒரு ரெண்டு மாசம் இருப்பா அவ பார்த்துக்கறா. அப்புறம் ஏதாவது சாக்கு சொல்லி அவளோடயே அனுப்பிடலாம்”.

“என்னவோ பண்ணுங்க, நீங்க பண்றது எதுவுமே எனக்கு பிடிக்கலை. என்னோட ப்ரைவசிக்கு எந்த தொந்தரவும் வராம பார்த்துக்கங்க அப்பா”, என்று மறுபடியும் அவரிடம் கடிந்து சென்றான்.

“என்ன மாமா, கதிர் மாமா.  என்ன சொல்றார்?”, என்று சமயம் தெரியாமல் சபரி கேட்க.

“ஒண்ணுமில்லைப்பா! என்ன வேலைல ட்ரைனிங் கொடுக்கலாம்னு பேசினோம்”,

கதிரை பற்றி தெரிந்தவன் ஆதலால், “நம்பிட்டேன்”, என்று ராகம் இழுத்தவன். 

“இப்போ தானே மாமா வந்திருக்கேன். அதுக்குள்ள என்ன வேலை ஒரு ரெண்டு நாள் போகட்டும்”, என்றான்.

அதுதான் சபரி எல்லாவற்றையும் ஈசியாக எடுத்துக்கொள்வான். வாழ்க்கையை விளையாட்டுத்தனமாக வாழ்பவன். சீரியஸ் எதற்கும் ஆகமாட்டான். ஈசி கோயிங் ஜாலி ஃபெல்லோ.

“எல்லாரும் வீட்ல சம்பாரிச்சா யாரு செலவு பண்ணுவா. நான் செலவு பண்றேன்”, என்று சும்மா சுற்றி கொண்டிருப்பவன். கதிருக்கு சற்று அடங்குவான் என்பதால் அங்கே அனுப்பி வைத்தனர் அவன் குடும்பத்தார்.    

அங்கே இருந்து சென்று கொண்டிருந்த கதிர் திரும்ப வந்து. “என்ன ரெஸ்ட். நீ என்ன கடினமான வேலையா செய்ய போற! குளிச்சிட்டு சாப்பிட்டு என் கூட பண்ணைக்கு வர்ற”, என்று சொன்னான் கண்டிப்பாக.

அவனை விட சபரி சிறியவன், அவனின் விளையாட்டு குணம் அறிந்ததால் எப்போதும் கண்டிப்பாக தான் பேசுவான்.  

“டேய் விளையாடாம வேலையை பார்க்கணும்”, என்று போகிற போக்கில் மறுபடியும் சொல்லிவிட்டு சென்றான்.

குளித்து ரெடியாகி வர நேரமெடுக்க. அதற்குள் கிளம்பியிருந்த கதிர். “அவனை அனுப்பி விடுங்க பாட்டி”, என்று சொல்லி வெளியே நின்றிருந்தான்.

சபரி கீழே வரும்பொழுது. அப்போது தான் உள்ளே லலிதா நுழைந்து கொண்டிருந்தாள்.

அவனையறியாமல் விசில் கிளம்பியது. “யார் இது பொண்ணு. அதுவும் இந்த வீட்டுக்குள்ள”, என்று யோசித்தபடியே அவளருகில் வந்தவன்.

“ஹாய் ஐ அம் சபரி நாதன். நீங்க.”, என்றான் முகம் நிறைய புன்னகையோடு.

“யார் இவன்”, என்பது போல லலிதா மெளனமாக பார்க்க. “பேர் சொல்ல மாட்டீங்களா”, என்றான் மறுபடியும்.

“நீங்க யாரு”, என்றாள்.

“ஓ! நான் அதை சொல்லலை இல்லை! இது என் அத்தை வீடு! அப்படியும் சொல்லலாம். என் அண்ணி வீடுன்னும் சொல்லலாம்!”, என்றவன், “நீங்க யார் இந்த பாலைவனத்தில் சோலையாக.”,  என.

லலிதாவிற்கு சிரிப்பு வந்தது. நிறைய முறை, “இது என்ன? இப்படி ஒரு அமைதி இந்த வீட்டில் ஒரு புன்னைகைக்கு கூட பஞ்சம், இந்த வீட்டில் பாலைவனம் போல.”, என்று அவளே பலமுறை நினைதிருக்கிறாள். இப்போது சபரி சொல்லவும் சிரிப்பு வந்தது.  

அவனை ஏன் இன்னும் காணோம் என்று பார்க்க கதிர் வர. அவன் பார்வைக்கு பட்டது லலிதாவின் மலர்ந்த முகம் தான். அவள் அப்படி சபரியுடன் சிரித்ததை பார்த்தவுடனே ஒரு இனம் புரியாத கோபம் கிளம்பியது.  

சரளமாக பேசும் சபரியிடம்  பேச லலிதாவிற்கு தயக்கம் தோன்றவில்லை. அவளும் சகஜமாக, “இது என் முதலாளி வீடு, நான் லலிதா”, என்றாள்.

“முதலாளி வீடா, யாரு முதலாளி”,

“இந்த வீட்ல எல்லாரும்  முதலாளி தான்”,

“நான் கூடவா”,

“அதை இந்த வீட்ல இருக்கறவங்க தான் சொல்லனும்”,

“அவங்க சொன்னா கூட நான் கிடையாது. அதை சொல்ல தான் இந்த கேள்வியே”, என்று சிரித்தான்.

பார்த்து புன்னகைத்தவள். “நான் போறேன்”, என்று ஆபிஸ் ரூமிற்குள் போனாள்.

இதையெல்லாம் கதிர் பார்த்துக்கொண்டிருந்ததை இருவருமே அறியார். 

அங்கே போனால் பெண்டேடுத்தான் கதிர்.

வேலை, வேலை, வேலை.

காலையிலிருந்து மதியதுக்குல்லேயே சபரி அலண்டுவிட்டான்.

வீட்டிற்கு வந்தவுடனே லலிதாவை தேடி ஓடினான்.

அவனுக்கு யாரோடாவது பேசிக்கொண்டே இருக்க வேண்டும். கதிர் எதிரில் வேலையாட்களிடம் பேசினால் திட்டு விழும்.

அதனால் அவன் மேலே சென்றிருக்கும்போது லலிதாவிடம் வந்தவன்.

“உங்க முதலாளி ரொம்ப அநியாயம் பண்றாங்க. இப்படி வேலை வாங்கினா நான் என்னத்துக்கு ஆவேன். நீங்க எப்படி இவங்க கிட்ட வேலை செய்றீங்க. கஷ்டமாயில்லை.”, என்று புகார் வாசித்து கொண்டிருக்கும்போதே அங்கே வந்த கதிர். “நீங்க எப்படி இங்க வேலை செய்றீங்க கஷ்டமா இல்லை”, என்ற வார்த்தை காதில் விழ கோபம் பொங்கியது.

சபரி லலிதாவின் அழுவலக அறையை நோக்கி போவதை பார்த்தவுடனேயே கீழே இறங்கி வந்துவிட்டான் கதிர். அதையரியாத சபரி லலிதாவிடம் வளவளத்து கொண்டிருந்தான்.   

“ஏன் சபரி அவங்க உன்கிட்ட வேலை கஷ்டம்னு சொன்னாங்களா”, என்றான்.

அவனை எதிர்பாராத இருவரும் திடுக்கிட்டு திரும்பினர். “இல்லை”, என்று சொல்ல வந்த லலிதா அவனின் கோபம் பார்த்து பயந்து நின்றாள்.

“காலையில தான் வந்த. அதுக்குள்ள மேடம் உன்கிட்ட வேலை சரியில்லைன்னு சொல்ற அளவுக்கு க்ளோஸ் ஆயிட்டாங்களா. இல்லை அதை கேட்கிற அளவுக்கு நீ ஆயிட்டியா”, என்றான் லலிதாவை பார்த்து குற்றம் சாட்டும் பார்வையோடு. “உனக்கு இவனோடு என்ன பேச்சு”, என்பது போல பார்க்க.

அந்த பார்வையை பார்த்த லலிதாவிற்கு பயத்தையும் மீறி கோபம் வந்தது. பேசினது அவன். அவனை விட்டுட்டு என்னை முறைக்கிறான். “அதுவுமில்லாம நான் யாரோட பேசினா இவனுக்கு என்ன?”, என்று கோபம் துளிர்த்தது.

“இவன் கிட்ட வேலை பார்த்தா நான் யார்கிட்ட பேசணும், யார்கிட்ட பேசக்கூடாது, எல்லாம் இவங்க முடிவு செய்வாங்களா! நான் அப்படி தான் பேசுவேன்”, என்று மனதிற்குள்ளேயே நினைத்துகொண்டாள் அவனை பற்றி அறியாதவள். 

“நீ போ போய் சாப்பிடு”, என்று சபரியை பார்த்து சொன்னான். “அனாவசியமான பேச்சுகள். அதுவும் வேலையாட்களோடு. வேலையை கெடுக்கும்”, என்றான் அவன் பின்னே வந்து.

அது லலிதாவின் காதில் நன்கு விழுந்தது. “அவன் பார் உன்னை நிமிஷ நேரமும் வேலையால் என்பதை மறக்கவில்லை. நீ என்னடாவென்றால் அவன் உன்னை வேறு பார்வை  பார்ப்பதாக கற்பனை செய்கிறாய்”, என்று அவளுக்கு அவளே குட்டு வைத்து கொண்டாள்.

“என்ன வேலை கெடும்”, என்று அந்த கோபம் வேறு கனன்றது. “என்ன செய்துவிட்டேன் நான். ஒன்றும் செய்யவில்லை. அவன் வந்து பேசினான். கேட்டேன்”,

“இவன் யார் என்னை யாரோடு பேச வேண்டும். பேசக்கூடாது, என்று சொல்வதற்கு. அவன் வந்து பேசினால் நான் அப்படி தான் பேசுவேன், இவனை மாதிரியே எல்லாரும் முறைத்து கொண்டே  திரிவார்களா. காலையில் வந்தால் நான் யாரோடு பேசுகிறேன், நான் யாரோடும் பேசுவதில்லையே. இவன் பாட்டிக்கு புத்தகம் படித்து காட்டுவதை தவிர”,

“வேலை செயபவளாம். வேலை கெடுமாம். ஒரு ஆணிடம் பேசினாலே தப்பான கண்ணோட்டத்தில் வந்து பார்ப்பதா”, என்று மனதிற்குள் கனன்று கொண்டே இருந்தது.

இரண்டு நாட்கள் அமைதியாக போயிற்று. அப்போதும் அவளை பார்த்து புன்னகைப்பது. போகும் போது வரும் போது ஒரு வார்த்தை பேசுவது. என சபரி இருந்தான். அதற்கு மேல் சபரியால் பேசாமல் இருக்க முடியவில்லை. அவள் தனியாக இருக்கிறாள் என்று ஒரு நாள் பேச வர. சபரிக்கு என்ன தெரியும்? வீட்டில் கதிர் இருக்கும் நேரம் முழுதும் அவள் கதிரின் கண்பார்வையில் தான் இருப்பாள் என்று.  

“ஹலோ லலிதா மேடம்! வேலையெல்லாம் எப்படி போகுது?”, என்று கதிர் அப்போது தான் வெளியே போனான் என்று பேச்சு கொடுக்க.

“வேலை எங்கயும் போகலை. இங்கேயே தான் இருக்கு”, என்றாள் நக்கலாக.

“ஐயோ ஜோக்கா! சிரிப்பு வரலையே”, என்று அவன் சொன்ன விதம் புன்னகையை வரவைக்க. சிரித்து கொண்டே.

“என் முதலாளி பார்த்துடபோறார். அப்புறம் வேலைக்காரங்க கூட  ஏன் பேசறன்னு, உங்களுக்கு திட்டு விழப்போகுது”,

“ச்சே! ச்சே! கதிர் மாமா நல்லவங்க! ஆனா எல்லார்கிட்டையும் டிஸ்டன்ஸ் கீப் அப் பண்ணுவாங்க! தப்பா எடுத்துக்காதீங்க!”, என்றவன். “அவரை எடுத்தாலும் பரவாயில்லை. என்னை எடுக்காதீங்க. நான் அப்படி எல்லாம் இல்லை”, என்று சொல்லும் போதே.

“எப்படி எல்லாம் இல்லை”, என்று வந்து நின்றான் கதிர்.

லலிதாவும் சபரியும் ஆச்சர்யமாக பார்த்தனர். இப்போது தானே வெளியே போனான். அதற்குள் வந்துவிட்டான் என்று.

அவர்கள் பார்வையை உணர்ந்தவன். “இவனை கூட்டிட்டு போக வந்தேன்”, என்று சபரியை கை காட்டியவன். “நீ போ”, என்று அவனை அனுப்பி விட்டு. 

“என்ன நான் வெளில போனதும் வசதியா போச்சுன்னு பழையபடி வேலையை ஆரம்பிச்சிடீங்களா”,  என்றான் லலிதாவிடம். 

இந்த வார்த்தையை கேட்டவுடனே, நிறைய கோபம் வந்தது லலிதாவிற்கு.  தைரியத்தை திரட்டி. இதை அப்படியே விடக்கூடாது என்பதற்காக.

“என்ன வேலையை ஆரம்பிச்சோம்னு சொல்றீங்களா”, என்றாள் குரலில் தைரியத்தை காட்டி.

அந்த தைரியம் கதிர்வேல்லை உசுப்ப. “எனக்கென்ன தெரியும், என்ன வேலைன்னு உங்களுக்கு தான் தெரியும்”, என்றான் கிண்டலாக.

அவனுக்கே தெரியும் அவன் பேசுவது மிகவும் அதிகப்படி என்று. ஆனால் தன்னிடம் இதுவரை ஒரு வார்த்தை கூட வேலை தவிர வேறு பேசியிராத லலிதா. சபரியிடம் பேசுவது கதிருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அதனால் வேண்டுமென்றே சீண்டினான்.

“இப்படியெல்லாம் பேசாதீங்க”, என்றாள் அடக்கப்பட்ட கோபத்தோடு.

“பேசினா என்ன பண்ணுவ”,

“சும்மா எதையாவது உளறாதீங்க. ஒரு ஆணும் பெண்ணும் பேசினாலே தப்பா”, என்றாள் இரண்டு நாட்களாக அவன் அவளை முறைத்துகொண்டிருப்பது பொறுக்காமல்.

தன்னை எதிர்த்து அவள் பேசுவது பிடிக்காமல். அதுவும் தன் வார்த்தைகளை உளறல் என்று கூறியது இன்னும் பிடிக்காமல்.

“வந்தியா. வந்த வேலையை செய்யணும். சும்மா வாய் பேசக்கூடாது புரிஞ்சுதா. ஏன் பசங்க கிட்ட பேசாம உன்னால வேலையை பார்க்க முடியாதோ.”, என்று நிறுத்தியவன்.

 அவளை மேல் இருந்து கீழ் அளவெடுப்பது மாதிரி பார்த்து. “ரெண்டு மூணு டிரெஸ்ஸை திரும்ப திரும்ப போட்டுட்டு வரும்போதே இப்படியா. இன்னும் நீ கொஞ்சம் நல்லா டிரெஸ் பண்ணிட்டு, நல்லா வர்ற மாதிரி இருந்தா. என் கிட்டயே பேசுவியா.”, என்றான் என்ன பேசுகிறோம் என்று புரியாமல்.

 

அவள் தன்னை அளவுக்கு அதிகமாக சலனப்படுத்துகிறாள் என்ற அவனுக்குள்ளயே இருந்த அவன் மேல் இருந்த ஆத்திரத்தில் வார்த்தைகள் கூர்மையாக அவளை கத்தியை போல கிழித்தன.

தன்னிடம் எண்ணி எண்ணி பேசுபவள் சபரியிடம் பேசிவிட்டாள். அதுவும் தன்னை எதிர்த்து பேசுகிறாள் என்று. இதுவரை யாரும் தன்னை எதிர்த்து பேசி பழக்கப்பட்டிராத கதிர்வேல் வரை முறை தெரியாமல் வாய் விட்டான்.  

இதை லலிதா நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. ஏன் இப்படி தன்னை பேசி விட்டான் என்று புரியவில்லை. கண்களில் கண்ணீர் மளமளவென்று இறங்கியது. அதுவும் தன் உடையை பற்றி கூறியவுடன் அவளால் தாங்கவே முடியவில்லை. 

Advertisement