Advertisement

அத்தியாயம் இருபது:

மூன்று வருடங்களுக்கு பிறகு…      

கதிரும் லலிதாவும் நல்ல ஒரு அன்யோன்யமான திருமண வாழ்கை வாழ்ந்தனர். பாட்டியின் கெடு பிடிகள் அதிகமே என்றாலும் எல்லாவற்றையும் சமாளிக்க கற்று கொண்டாள் லலிதா. மூன்று வருடங்கள் குழந்தை இல்லாது அப்போதுதான் கர்ப்பம் தரித்திருந்தாள் லலிதா. அது ஏழாம் மாதம்.     

லலிதா கர்ப்பமாகி ஏழு மாதங்கள் ஆகவும் மிகவும் விமரிசையாக வளைக்காப்பு செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.  திருமணமாகி மூன்று வருடம் கழித்து கர்ப்பம் தரித்ததால் லலிதாவை கண்ணுக்குள் வைத்து தாங்கினான் கதிர்.

வளைக்காப்பிற்கு ஊரையே அழைத்திருந்தனர், அந்த விழா தான் வெகு விமரிசையாக நடந்து கொண்டு இருந்தது. தாய்மை தந்த மெருகு கதிரின் கண்களுக்கு லலிதாவை பேரழகியாக காட்டியது. அத்தனை உறவுகளுக்கு மத்தியில் அவளை நேரடியாக பார்க்கவும் முடியவில்லை. அதற்காக பார்க்காமலும் இருக்க முடியவில்லை.

ஏதாவது சாக்கு வைத்து அவள் இருந்த இடத்திலேயே சுத்தி கொண்டு இருந்தான். லலிதா தான் அவனை கடிந்து கொண்டாள். “என்னையே பார்க்காம வந்தவங்களை பாருங்க”, என்று.

அதைகேட்ட வித்யா சிரித்தாள். “அச்சோ அண்ணி நீங்க இங்க இருக்கறது தெரியாம சொல்லிட்டேன். சாரி கடிக்காதீங்க”, என்றாள் உடனே கதிர் திட்டுவான் என்று பயந்து லலிதா.

“பயப்படாதீங்க அண்ணி, அண்ணா இன்னைக்கு உங்களை ஒண்ணும் சொல்ல மாட்டாங்க”, என்றாள் வித்யா.

“எங்க அண்ணி சித்ராவை காணோம்”,

“அவளுக்கு அவ பொண்ணு பின்னாடி சுத்தவே நேரம் சரியா இருக்கு”, என்றாள் வித்யா.

“ஆமாம் சித்ராவிற்கு இரண்டு வயதில் ஒரு பெண் இருந்தாள். பெயர் அனன்யா. படு சுட்டி. அவளை இடுப்பில் ஏற்றிக்கொண்டு அப்போது தான் சித்ரா வந்தாள்.

வந்தவள் கடுப்போடு வித்யாவை பார்த்து கேட்டாள் “எங்க அக்கா இவ அப்பாவை காணோம்”, என்று.

“இப்போ தானே சபரியை இங்கே பார்த்தேன்”, என்றாள் வித்யா.

“நீங்க வேற அக்கா. இவளை கைல குடுத்துடுவேன்னு என் கண்லயே படாம திரியறார். எனக்கு இவ பின்னாடி ஓடி ஓடி முடியலை”, என்று சித்ரா சொல்லிக்கொண்டு இருக்கும் போதே சபரி நின்ற இடத்தை கண்ஜாடையில் கதிர் காட்டினான்.

“அங்க தான் இருக்கிறாரா இருங்க போறேன்”, என்று சபரியை தேடி சித்ரா போக. எல்லோருக்கும் சிரிப்பு லலிதா வாய்விட்டு சிரிக்க.

பார்த்துகொண்டிருந்த பாட்டி அவளை அதட்டினார், “பிள்ளைதாச்சி பொண்ணு. இப்படியா சிரிப்ப. எங்கயாவது பிடிச்சிக்க போகுது”,

கேட்ட லலிதா கப்பென்று வாயை மூடி முகத்தில் புன்னகையை தவழவிட்டாள்.

“உங்களுக்கு ரொம்ப பொறுமை அண்ணி. எங்க பாட்டியையே சமாளிக்கறீங்க”, என்றாள் வித்யா லலிதாவை பார்த்து.

அப்போதும் பாட்டியை பற்றி ஒரு குறை சொன்னாலில்லை லலிதா. முகம் புன்னகையையே காட்டியது.

“அதானே என் பொண்டாட்டியாவது பாட்டியை விட்டு கொடுக்கறதாவது. பாட்டியும் ரூல்ஸ் மேல ரூல்ஸ் ஆ போடறாங்க. ஏதாவது என்கிட்ட இவளும் கம்ப்ளைன்ட் செய்வான்னு பார்த்தா அசரமாடேங்கரா. எல்லாத்தையும் தாங்கறா” என்றான் கதிர்.

“கேட்டா பெரியவங்க அப்படித்தான்னு எனக்கே சொல்றா”,

“நல்ல ஜோடி அண்ணி நீங்க.”, என்றாள் வித்யா. சொன்னவள் அண்ணனை பார்த்து. “அண்ணா நான் உன்னை சொல்லலை, அண்ணியை பாட்டியையும் தான் சொன்னேன்”, என்று சிரிக்க. மீண்டும் லலிதாவிற்கு சிரிப்பு வந்தது. வாய்விட்டு சிரித்தவள், அவசரமாக அடக்கினாள்.

இதைப்பார்த்து கதிரின் கண்களில் குறும்பு தோன்றியது. அந்த குறும்பை பார்த்த லலிதாவிற்கு வெட்கம் தோன்ற.

“நீங்களும் நல்ல ஜோடி தான் அண்ணி” என்று இருவரையும் பிளாஷ் அடித்தாள் வித்யா. அதற்குள் யாரோ கூப்பிட சென்றாள்.

“என்ன லலிதா நானும் நீயும் நல்ல ஜோடி இல்லையா”.

“மத்தவங்க சொல்லி தான் நம்மளை பத்தி நமக்கு தெரியுமா”, என்றாள் கண்களில் காதலுடன். இப்போதெல்லாம் கதிரை நிறைய காதலிக்க  கற்றுகொண்டால் லலிதா. கற்றுகொள்ள வைத்தான் கதிர். பார்வையே அவனை ஒரு அன்போடு காதலோடு தான் தழுவும். 

“பப்ளிக்ல என்னை இப்படி பார்த்து வைக்காதடி”,

“அப்போ தனியா போயிடுவோமா”, என்று கண்ணடித்தாள்.

“அம்மாடி ரொம்ப தைரியம் ஆகிடுச்சுடி உனக்கு”,

“யார் பொண்டாட்டி நானு. கதிர்வேல் பொண்டாட்டி இல்லை”.

“இரு என் பேரை சொல்ற. பாட்டிகிட்டயே சொல்றேன்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பாட்டி தடுமாறியபடி அங்கே வந்தார்.

“டேய் கதிர் பையா வயசான காலத்துல ஏண்டா என்னை அலையவிடுற”,

“ஏன் பாட்டி என்ன ஆச்சு”,

“என்ன அச்சா?. வந்தவங்களை கவனிக்காம உன் பொண்டாட்டி பின்னாடியே சுத்திட்டு இருந்தா. கண்ணு படும் போடா”, என்று அந்த இடத்தை விட்டு அவனை துரத்தினார்.

அவசரமாக அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் கதிர். அப்போது பார்த்து சித்ரா அங்கே வர அவளை பிடித்துக் கொண்டார் பாட்டி.

“பாருடியம்மா உங்கப்பா அம்மாவையும் நேர்ல போயி கூப்பிட்டிட்டு வந்திருக்கோம். வருவாங்களா தெரியலை. வந்தா கப்புன்னு கால்ல விழுந்து அவங்களோட சேருவியோ. இல்லை உன் பொண்ணை காட்டி சேருவியோ உன் சாமர்த்தியம். ஆனா ஏதாவது பண்ணி சேர்ந்துடு.”.

“அவங்களுக்கு பார்க்கணும்னு தான் இருக்கும். ஆனா சொல்ல மாட்டாங்க. ஏதாவது பண்ணி சேர்ந்துடு. என்ன?.”, என்று அவளை மிரட்டும் தொனியில் சொல்லி கொண்டிருக்க எல்லாவற்றிற்கும் “சரி, சரி,” என்று மண்டையை ஆட்டியவள்.

“இருங்க பாட்டி அவரையும் கூப்பிடுறேன், அவருக்கும் கொஞ்சம் சொல்லுங்க”, என்று சொல்லி சபரியையும் கூப்பிட்டு பாட்டியிடம் விட்டு சென்றாள்.

 பாட்டி. வொய் ப்ளட்! சேம் ப்ளட்! ரேஞ்சிற்கு அட்வைஸ் மழை பொழிய. அவர் நல்லது தான் சொன்னாலும் சொன்ன விதத்தில் நொந்து விட்டான் சபரி.

“பாட்டி அங்கே அவரை யாரோ கூப்பிடறாங்க”, என்று லலிதா தான் அவனை காப்பற்றி விட்டாள்.

சபரி அவளுக்கு கண்களில்லேயே நன்றி சொல்லி சென்றான். சபரியும் லலிதாவும் அதிகம் பேசிக்கொள்ளா விட்டாலும் ஒரு நல்ல நட்பு இருவரிடையிலும் இருந்தது. அதற்குள் லலிதாவிற்கு நலங்கு வைக்க மனையில் உட்கார வைக்க அழைத்தனர்.

பாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி சென்றாள். கேமராவில் படம் பிடிப்பவன் போல ஒரு ஹேண்டி கேம் தூக்கி வந்து கதிர் அருகே நின்று கொண்டான்.

“நீங்க அடங்கவே மாட்டீங்களா”, என்று கண்களாலேயே லலிதா மிரட்ட “ஹேய் நீ போடி. நான் அப்படி தான் நிற்பேன்”, என்று கண்களாலேயே அவளுக்கு பதில் சொன்னான் கதிர்.

தேவிக்கும் கந்தசாமிக்கும் முகம் கொள்ளா பெருமை. பவித்ராவும் அனிதாவும்  தங்கள் அக்காவின் வளைக்காப்பில் விழுந்து விழுந்து வேலை செய்துகொண்டிருந்தார்கள். தங்கைகளை பார்க்க லலிதாவின் முகத்திலும் பெருமை.

பிறகு பெரியவர்கள் சிறியவர்கள் என்று அனைவரும் நலங்கு வைத்து வளையல் மாட்ட. வந்திருதவர்களுக்கும் வளையல் கொடுக்கப்பட்டது.

பின்பு அவளை அமர வைத்து உணவு பரிமாறப்பட. இலையில் இருந்த அந்த ஏழுவகை உணவை பார்த்து பயந்து விட்டாள் லலிதா. எல்லோர் முகத்தையும் பரிதாபமாக பார்க்க.

“கொஞ்சம் தான் இருக்கு அண்ணி. முடிஞ்ச வரைக்கும் சாப்பிடுங்க”, என்று அவளுக்கு சமாதானம் சொன்னாள் வித்யா.

கதிரை லலிதா பரிதாபம்மாக பார்க்க. “சாப்பிடு லலிதா”, என்று கண்களாலேயே சைகை செய்தான்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க. ஒரு வழியாக உண்டு முடித்தாள் லலிதா.

ஏழு மாதத்தில் அவளுக்கு வயிறே தெரியவில்லை. இருந்தாலும் அவளுக்கு சிரமமாக இருந்தது. இங்கு இவர்கள் பார்த்துகொண்டிருக்க. பந்தி ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, சித்ராவின் அம்மாவும் அப்பாவும் வந்தனர்.

எல்லாரும் அவர்களை சித்ராவிற்காக நன்றாக கவனித்தனர். அங்கே மகள் தாய் தந்தையரிடத்தில் ஒரு மௌன பரிபாஷை நடை பெற. அதற்குள் விட்ட குறையோ தொட்ட குறையோ என்று நினைக்குமாறு சித்ராவின் இருவயது பெண் அனன்யா. “தூக்கு பாட்டி”, என்று தானாகே சித்ராவின் அம்மாவிடத்தில் சென்று நிற்க.

அவர் ஆசையாக அள்ளி அணைத்தார். அதே சாக்காய் வைத்து அப்போதே சித்ரா சபரியை அழைத்துகொண்டு அவர்கள் கால்களில் விழுந்தாள்.

அங்கே ஒரு உணர்ச்சி மயமான மௌன நாடகம் அறங்கேறியது.   பெற்றோர் மகளின் ஊடல் முடிந்து கூடல் நடந்தது. அனன்யா அவள் அம்மா சொல்லி கொடுத்திருபடி கிளாப் செய்து சிரித்தாள்.    

பிறகு சபரியின் பெற்றோர் வந்து சித்ராவின் பெற்றோரிடத்தில் பேச எல்லாம் சுமுகமாக முடிந்தது.

அதற்குள் பந்தி முடிந்திருக்க தேவியும் கந்தசாமியும் லலிதாவை அழைத்து கொண்டு கிளம்ப சம்மதம் கேட்க. பெரியவர்கள் தலையசைக்க எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பினாள். கண்கள் மட்டும் விடாமல் தன் கணவனை தேட அவனை காணவில்லை.

அங்கே கதிர் இல்லை. “இருங்க அப்பா நான் அவர்கிட்ட சொல்லிட்டு வர்றேன்”, என்று சொல்லி தேட. மண்டபத்தில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.

“கரக்டா சமயத்துக்கு ஆள் இருக்காதீங்க”, என்று அவனை கடிந்தாள்.

“அதுவா”, என்று சிரித்தவன்.

“என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு நான் எல்லார்கிட்டையும் சொல்லிட்டு இருக்கேன்”.

“அய்யே நீங்க சொல்ற லட்சணம் எனக்கு தெரியாது.  சரி நான் கிளம்பறேன்”, என்று சொல்லி அவள் கிளம்ப போக .

“ரெண்டு நாள் தான். நான் வந்து கூப்பிடும் போது வந்துடனும்”, என்று சொல்லி அனுப்பினான்.

ஆமாம்! இரண்டு நாட்கள் போவதற்கு தான் இந்த ஆர்ப்பாட்டம். பிறகு எல்லோரிடமும் மறுபடியும் ஒருமுறை சொல்லிக்கொண்டு கிளம்பினாள்.

இரண்டு நாட்கள் தன் பெற்றோருடனும் தங்கைகளுடனும் நன்கு கழித்தாள். அவர்களுக்கு மிகுந்த சந்தோஷம். அதிகம் கதிர் அவளை அங்கே தங்க அனுப்பியதே இல்லை. ஒரு நாள் அனுப்புவதே சிரமம்.

காலையில் போனால் மாலையில் திரும்பிவிடவேண்டும். இது எழுதப்படதா விதி லலிதாவிற்கு. என்றாவது அதிசயமாக அவள் மிகவும் வற்புறுத்தி கேட்டால் ஒரு நாள் அனுப்புவான்.

இப்போதுமே பிரசவம் தங்கள் வீட்டில் தான் என்று சொல்லிவிட்டான். இவர்களும் ஒன்றும் சொல்லவில்லை. அவர்களுக்கும் தெரிகிறது கதிர் அவளை மிகவும் நன்றாக பார்த்துக்கொள்கிறான் என்று.

குழந்தை பிறந்த பிறகு தான் ஆள் தேவை, அப்போது ஏதாவது ஏற்பாடு செய்து கொள்ளலாம் என்று தேவியும் விட்டுவிட்டார்.

பவித்ரா அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தாள். “அக்கா ரெண்டு நாளா பாரு மழை கொட்டிட்டே இருக்கு. ஏன்னு தெரியும்மா? மாமா உன்னை இங்க ரெண்டு நாள் விட்டு வச்சிட்டார் இல்லை, அதுக்கு”,

அதற்கு அனிதா, “நம்ம வீட்டோட மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொன்னா. கடைசில மாமா எங்க அக்காவையே வீட்டுக்கு அனுப்ப மாட்டேங்கறார். எங்க போயி சொல்ல இதை”,

“எங்கயும் சொல்லாத உன் மாமா கிட்டயே சொல்லு”, என்றாள் லலிதா

“என்ன மாமா கிட்டயா. அம்மாடி நாங்க பேசறதெல்லாம் நீ போய் சொல்லிடாத அக்கா”, என்று பதட்டபட்டார்கள் இருவரும்.

ஆம் லலிதாவை தவிர இன்னும் கதிர் என்றால் எல்லோருக்கும் பயம். வார்த்தைகளையே அவனிடத்தில் எண்ணி எண்ணி பயந்து கொண்டு தான் பேசுவர்.

இரண்டு நாட்கள் முடிந்தவுடனே சரியாக லலிதாவை கூப்பிட வந்துவிட்டான் கதிர்.

என்னவோ நிறைய நாட்கள் பார்க்காதது மாதிரி ஒரு எக்ஸ்ப்ரெஸ்ஸன் வேறு.

பார்த்த லலிதாவிற்கு சிரிப்பு பொங்கியது. “ஏற்கனேவே எல்லாரும் என்னை கிண்டல் பண்ணிட்டு இருக்காங்க. நீங்க வேற ஏன் இப்படி ஒரு பாவனையில நிக்கறீங்க”.

“ரெண்டு நாள் ஆச்சுடி உன்னை பார்த்து”,

“உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை”

“தெரியுது தான். என்ன பண்ணலாம்”

“ஒண்ணும் பண்ண வேண்டாம்”, என்று நொடித்தாள்.

“சாயந்திரம் வர்ரேன்னு சொன்னிங்க. காலையிலயே வந்திடீங்க”.

“கோவிலுக்கு போயிட்டு வந்து சாப்பிட்டு கிளம்பலாம்”, என்றான்.   

மறுபடியும் நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசிக்க கிளம்பினர், பவித்ராவையும் அனிதாவையும் அழைத்துக்கொண்டு.

வெண்ணைக்காப்பில் ஜொலித்தார் ஆஞ்சநேயர். காண காண கண்கொள்ளா காட்சி. 

அமைதியாக ஒரு மணிநேரம் அங்கேயே கணவனும் மனைவியும் அமர்ந்து விட்டனர். அவர்கள் அமர்ந்திருந்த நேரம் அங்கே கதிருக்கு தெரிந்த ஒரு அம்மாவும் மகனும் வந்தனர். வந்தவன் இளைஞன். திருமண வயதிருக்கும். கதிர் போய் தனியாக ஏதோ பேசினான். லலிதாவிற்கு ஒரே குறுகுறுப்பு, “யாரது நம்மை விட்டு பேசுகிறார்” என்று.

சிறிது நேரத்திலேயே  பவித்ராவை அழைத்தான்.அவள் அப்போது             எம். சீ. ஏ. இரெண்டாம் ஆண்டு படித்து கொண்டிருந்தாள்.

“பவித்ரா உனக்கு இந்த வருஷம் ப்ரொஜெக்ட் இருக்கில்ல. இவர் எனக்கு தெரிஞ்சவர். இவர் கூட எம். சீ. ஏ.  தான். உனக்கு ஐடியா ஏதாவது வேணும்னா கேளு”, என்றான்.

அவன் பேசும்போதே வேறேதோ விஷயம் என்று லலிதா கண்டுகொண்டாள்.  இருந்தாலும் எது இருந்தாலும் அவன் வாய் மொழியாக வரட்டும் என்று அமைதியாக அஞ்சநேயருகான ஸ்லோகங்களை அவள் வாய் விடாது உச்சரித்து கொண்டிருந்தது.

சிறிது நேரம் கழித்து அவர்கள் பேசட்டும் என்று லலிதாவின் அருகில் அந்த அம்மாவை கூப்பிட்டு கொண்டு வந்தான்.

“இது என் மனைவி லலிதா அம்மா”, என்று அறிமுகம் செய்து வைத்து இருவரையும் சற்று அளவளாவ விட்டான்.

அந்த அம்மாளும் நன்றாக சரளமாக பேசியதால் லலிதாவும் நன்றாக பேசினாள்.

“எத்தனாம் மாதம் ம்மா இது உனக்கு”,

“ஏழாம் மாதம்மா”, என்று லலிதா அவரிடம் தன் உடல்நிலை குறித்து பேசிகொண்டிருக்க.

பவித்ராவும் அந்த இளைஞ்சனும் வந்தனர் . “கேட்டுட்டேன் மாமா”, என்றாள். பிறகு அவர்கள் விடைபெற்று கிளம்பினர்.

தங்கைகள் இருந்ததால் யார் அவர்கள் என்று அதிகம் கேட்கவில்லை. அதற்குள் வீடு வந்துவிட  மதிய உணவு உண்ண அமர்ந்தனர். இப்போதெல்லாம் அதிக பிகு பண்ணாது கதிர் லலிதாவின் தாய் வீட்டில் உண்ண பழகியிருந்தான்.

உண்டவுடனே கிடைத்த தனிமையில். “யார் அது”, என்றாள் லலிதா.

“அது நான் பவித்ராக்கு பார்க்க போற மாப்பிள்ளை, அவளுக்கு பிடிச்சிருந்தா”, என்றான். 

அந்த பையனோடு லலிதாவை பேசவிடும்போதே, இந்த மாதிரி ஏதோ ஒன்று வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே லலிதா நினைத்திருக்க. அதே மாதிரி வந்துவிட்டது.

பையன் அமெரிக்கால வேலைல இருக்கான். லீவ்க்கு வந்திருக்கான் . அவனுக்கும் பிடிச்சி நம்ம பவித்ராக்கும் பிடிச்சா மேல பேசலாம்.

“அது”, என்று இழுத்தாள் லலிதா. அவள் எதற்கு இழுக்கிறாள் என்று தன் மனைவியை பற்றி அறியாதவனா கதிர்.

“ப்ச்”, என்ற கதிர். “நம்ம தான் கல்யாணத்தை நடத்த போறோம் கவலைபடாதே”, என்றான்.

கேட்ட லலிதாவிற்கு ஏனோ அழுகை வந்தது. அவன் தோள் சாய்ந்து கண்ணீர் விட்டாள்.

“லூசு, எதுக்கு அழற இப்போ”, என்று கதிர் திட்ட.

“அழுக வருது. அழரேன்”, என்றாள் அழுகையோடு சிரித்துகொண்டே.

“உங்க வீட்ல பார்த்தா. நான் உன்னை கொடுமை படுத்தறேன்னு நினைக்க போறாங்க”.

“யாரு. நீங்க. என்னை. கொடுமைபடுதறீங்கன்னு நினைப்பாங்க. நான் வேணா உங்களை கொடுமைப்படுத்தறேன்னு நினைப்பாங்க”, என்று சிரித்தாள். இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் காதலோடு தழுவியது.

அவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே போன் வந்தது பையன் வீட்டில் சம்மதம் என்று.

பவித்ராவை உடனே தனியாக அழைத்து கதிரே கேட்டான்.

“பிடிச்சிருக்கா. எங்களுக்காக சொல்லாத. நிஜத்தை சொல்லு.”, என்று.

“பேசினவரைக்கும் எனக்கு நல்ல மாதிரியா தான் தெரிஞ்சது, நீங்களே முடிவு பண்ணுங்க மாமா”, என்றுவிட்டாள்.

இன்னும் நன்றாக விசாரித்து முடிவு செய்யலாம் என்று நினைத்தவன். தேவியிடமும் கந்தசாமிடமும் விஷயத்தை சொல்ல அவர்களுக்கும் சந்தோஷமே.

பின்னர் லலிதாவை அழைத்து வீடு வந்தான். வித்யாவும் குழந்தைகளும்  அங்கே தான் இருந்தனர்.

“என்ன அண்ணி அம்மா வீடு எப்படி இருந்துச்சு”.

“நல்லா இருந்துச்சு அண்ணி”

“இங்க எங்க அண்ணனை தான் பார்க்க முடியலை. அப்படி ஒரு மூட் அவுட்”, .“எப்படி இருந்த எங்க அண்ணன். இப்படி ஆகிட்டார் அண்ணி”, என்று கிண்டலடித்து சிரித்தாள் வித்யா.

“போங்க அண்ணி. உங்களுக்கு என்னை கிண்டல் பண்றதே வேலை”, என்று சொல்லி லலிதா மேலே அவள் ரூமிற்கு போனாள்.

அவள் போக,,,,,,,,,,, கதிரும் மேலே போக. வந்தவுடனே அவசரமாக அணைத்தாள் கணவனை. அப்படியே அணைத்தபடியே நிற்க.

அவனும் வயிறு இடிக்குமோ என்று அவளை பிரிக்க முற்பட விடவேயில்லை லலிதா.

“வயிறு அழுந்தபோகுது லலிதா”

“எல்லாம் எங்களுக்கும் தெரியும். பேசாம இருங்க”

வெகு நேரம் கழித்தே கணவனை விட்டு விலகி. அவனை பார்த்து மனம் விட்டு சிரித்தாள்.   

“நான் ரொம்ப லக்கி. நீங்க கணவனா வந்ததுக்கு”,

“நான் கூடத்தான்”, என்று கதிரும் பங்குக்கு வர.

“சரி நாம”, என்றாள் இருவருக்கும் பொதுவாக.

கனவில் வந்த லலிதாவின் முகத்தை கதிர் காதலோடு பார்க்க. அதற்கு சற்றும் சளைக்காமல் பதில் பார்வை கொடுத்தாள் லலிதா.

அது ஒரு இனிய தாம்பத்தியத்தின் அடையாளம்.   

மாலையில் பூஜை அறையில் லலிதா விளக்கேற்ற.  குழந்தைகள் அவர்களின் அத்தையிடம் ஒரு பாடல் பாடும் படி சொல்ல. நமது லலிதா நிறைந்த மனதோடு பாடினாள்.

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை கண்ணா

குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்குக்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதைத் தந்திட வேங்கடேசன் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா

கண்ணா திரையின்பின் நிற்கின்றாய் கண்ணா – உன்னை

மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்ற வரதா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

கலிநாளுக்கிரங்கி கல்லிலே இறங்கி

நிலையாகக் கோவிலில் நிற்கின்றாய் கேசவா

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

யாதும் மறுக்காத மலையப்பா

யாதும் மறுக்காத மலையப்பா உன் மார்பில்

ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா

ஒன்றும் குறையில்லை மறை மூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா

 

பாடல் பாடி முடித்தவுடனே கண்கள் கணவனை தேட அவன் அவளை தான் அன்போடு பார்த்துக்கொண்டு இருந்தான். இருவர் மனமுமே நிறைந்து இருந்தது 

                                                                                                        லலிதா நன்றாக குழந்தை பெற்று. பல்கி நல்கி பெருகி வாழ்க்கையில் கதிரோடு சிறக்க. எல்லாம் வல்ல இறைவனை வணங்கி. அவர்களை வாழ்த்தி விடைபெருவோம்.

                        ( கனாவில் உன் முகம் )            

Advertisement