Advertisement

அத்தியாயம் இரண்டு:

கதிர் வேண்டாம் என்று தலையசைத்ததால் அந்த வேலையாள் வாயை திறக்கவில்லை. அதுவுமில்லாமல் அவனுக்குமே சரியாக தெரியாது, அவன் தான் காப்பாற்றினானா என்று. அதனால் அமைதியாகிவிட்டான்.

அதற்குள் கதிரை பார்த்த கந்தசாமி, அவசரமாக லலிதாவின் கையை பற்றி எழுப்பினார். “நம்ம பொண்ணு தம்பி உங்களை பார்க்க கூட்டிட்டு வந்தேன்”, என்றார்.

கதிருக்கு அவளை  இவ்வளவு நேரம் பார்த்த பார்வை மாறி அதில் கண்டிப்பும் அலட்சியமும் தோன்றியது. 

அப்போது தான் அவளும் கதிரை பார்த்தாள். உயரமாக அளவான உடலோடு தீர்க்கமான பார்வையோடு இருந்தான். அந்த பார்வையே லலிதாவினுள் ஒரு அச்சத்தை கொடுத்தது.

அவனை பார்த்தவுடன் அவளையறியாமல் வணக்கம் சொன்னாள்.   

சின்ன ஒரு தலையசைப்போடு அதை ஏற்றவன், அவளை கூப்பிட்டு வந்த காரணம் அறிந்ததால். “இங்க இல்லை வேலை. வீட்ல இருக்கிற ஆபீஸ்ல தான். இங்க இருக்கிற அக்கௌன்ட்சும். லாரி ஆபீஸ் அக்கௌன்ட்சும். வீட்டுக்கு வந்துடும். சரிபார்க்கனும். அப்பப்போ இங்கயும் லாரி ஆபீஸ்லையும் அவங்க கொடுக்கறது சரியான்னு சரிபார்க்கனும்”, என்றான்.

பிறகு, “எப்பவும் எதிலயும் ரொம்ப கவனம் தேவை. அதுவும் இது கணக்கு வழக்கு ரொம்ப ரொம்ப தேவை. கொஞ்சம் அசந்தா இப்பவே இந்த குழில விழுந்திருப்ப. போய் எட்டிப்பார். யாரோ வந்து காப்பாத்துன மாதிரி எல்லா நேரமும் நடக்காது. ஜாக்கிதையா இருக்கணும்”, என்றான்.

அவன் அறிவுரையாக தான் கூறினான். ஆனால் லலிதாவிற்கு அது மிரட்டலாக தோன்றியது. 

அவன் பேச்சால் அந்த வேலை பெரிய வேலையாக தெரிந்தது லலிதாவிற்கு. அதைவிட கதிர் பேசும் போதே அவளுக்கு அவன் ரொம்ப கண்டிப்பானவன் போல தோன்ற. பயமாக இருந்தது எப்படி இவனிடம் வேலை பார்ப்பது என்று. 

மறுபடியும். “வீட்டிற்கு வாங்க”, என்று சொன்னவன். நேத்தே இதை ஒரு கனமான தகரத்தை போட்டு மூடி நாலு பக்கமும் கல்லு வைங்கன்னு சொன்னேன், மேல முள்ளு செடி போட்டு வைங்கன்னு சொன்னேன். சொன்னதை செய்ய முடியலைன்னா இதை மூடிடுங்கடா. இந்நேரம் விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும் தெரியுமா? என்னடா வேலை பாக்கறீங்க எல்லாம்?”, என்று அங்கிருந்த வேலையாட்களை ஒரு பிடி பிடித்தான். பிறகு  அவன் பைக்கில் ஏறி பறந்துவிட.

மெதுவாக தன் தந்தையின் கையை பிடித்தபடி அந்த பள்ளத்தை எட்டி பார்க்க கிட்ட தட்ட இருபது அடி பள்ளம். தலை சுற்றியது. விழுந்திருந்தாள் உயிர் பிழைப்பதே அரிதாகியிருக்கும். பிழைத்தாலும் நிறைய அடிபட்டிருக்கும். வாழ்க்கை முழுவதும் முடமாகியிருப்பதற்க்கு நிறைய வாய்பிருந்தது. அந்த பயத்தில் தன்னை காப்பாற்றியது யார் என்று நிறைய யோசிக்காமல் போனாள்.

முதலிலேயே எதுவும் சரி இல்லாதது போல லலிதாவிற்கு தோன்றியது. மறுபடியும் இரண்டு கிலோ மீட்டர் நடக்க வேண்டி வந்துவிட்டது. நடந்து, நடந்து, லலிதா மிகவும் சோர்ந்து போனாள்.

“ஏன்பா ஒரு போன் பண்ணி கேட்டுட்டு வந்து இருக்கலாம்ல. ஏன்பா இப்படி நடக்க வைக்கறீங்க”, என்று அவள் அப்பாவை கடிந்தாள்.

“இதுவரைக்கும் அப்படி எதுவும் நான் பன்னுனதில்லை கண்ணு. அவங்க என்ன சொல்வாங்களோ அதை தான் செய்வேன். உனக்கு ஏதாவது இந்த மாதிரி யோசனை தோணினா சொல்லிடு, செய்யறேன்”, என்றார் பொறுமையாக.

அவரை கடிந்து என்ன செய்வது என்று தோன்றியது. “அவனுக்கு அறிவிருக்காதா. இப்போது தான் அவ்வளவு தூரம் நடந்து வந்திருக்கிறார்கள். எப்படி நடப்பார்கள் என்று தெரிய வேண்டாம்”, என்று கண் மண் தெரியாமல் கோபம் உதித்தது

அவன் தான் தன்னை காப்பாற்றினான் என்று தெரியாதாதால் ஒரு நல்ல அப்பிராயம் அவன் மேல் தோன்ற இடமே இல்லாமல் போய் விட்டது.

நடந்து அங்கே வீடு சேர்ந்தால். அங்கே ஹாயாக அவன் உட்கார்ந்து பாட்டியோடு பேசியபடி அமர்ந்து காபி அருந்தி கொண்டிருக்க.

காரணமில்லாமல் அவன் மேல் கோபம் வந்தது. அவர்கள் முதலாளிகள் அப்படி தான் இருப்பார்கள் என்பதை மறந்து போனாள்.

அவளை பார்த்தவன் பார்த்தும் பார்க்காத மாதிரி திரும்பி கொண்டான்.

ஒரு அதிகபடியான பார்வை கூட பாட்டியிடம் நிறைய கேள்விகளுக்கு இடம் கொடுத்து விடும் என்று கதிருக்கு தெரியும். அவன் குணமே யாரையும் பொருட்படுத்த மாட்டான் என்று பாட்டிக்கு தெரியும். அதனால் புதிதாக அவனாக முதலில் பேச ஆரம்பித்தால் அது தேவையில்லாத பேச்சிற்கு இடம் கொடுக்கும். 

பாட்டி, “நான் உங்களை கோழிப்பண்ணைக்கு போக சொன்னேனே”,

“போனோம்மா, தம்பி தான் மறுபடியும் இங்க வரசொன்னாங்க”, என்றார் கந்தசாமி.

“ஏம்பா கதிரு நீயா சொன்னே”, என்றார்.

“ஆமாம் பாட்டி”,

“ஏம்பா காலை வெயில்ல அலைய விட்டிருக்க. நீ அங்க இருப்பன்னு தான் அங்க அனுப்பினேன்”,

அமைதியாக ஒரு பார்வை பாட்டியை பார்க்க.

“சரி என்ன வேலை சொல்லிடு”, என்றார்.

அப்போது தான் அவளை பார்ப்பது போல பார்த்தான். நடந்ததினாலோ கீழே விழுந்ததினாலோ மிகவும் களைத்து தெரிந்தாள்.

“நான் சொல்லிக்கறேன் பாட்டி. உன் வேலையை நீ சொல்லிடு”, என்றான்.

“என்னடா இது”, என்று மனதிற்குள் மறுபடியும் ஒரு என்னடா போட்டு லலிதா நிற்க.

“பொண்ணு உன் பேரு என்ன?”, என்றார் பாட்டி.

“லலிதா”,

“நல்ல பேரு”, என்று அவர் வெளியில் சொல்ல. மனதிற்குள்ளேயே நல்ல பேரு என்று அவர் பேரன் நினைத்தான். பாட்டிக்கு மறதி அதிகம். காலையில் கேட்ட பேரை மறுபடியும் கேட்டார்.

“காலையில தானே என் பேரை இந்தம்மா கேட்டது. அப்போ தெரியலையா இது நல்ல பேருன்னு”, என்று மனதிற்குள்ளேயே பதில் படித்தாள் லலிதா.  

“உன் வேலையோட எனக்கு கொஞ்சம் புஸ்தகமும் படிச்சு காட்டனும். முன்ன மாதிரி எனக்கு கண் பார்வை இல்லை செய்வியா”, என்றார்

“செய்யலைன்னா விட்டுடற மாதிரி தான்”, என்று மனதிற்குள்ளேயே பாட்டிக்கு அர்ச்சனை செய்தாள்.

தலை தானாக. “சரிங்க அம்மா”, என்று ஆட.

“சும்மா பாட்டிம்மாண்ணே கூப்பிடு. என்னோடயும் நீ நிறைய நேரம் இருக்க போற”, என்றார் ஜானகி பாட்டி.

“ஆமா உனக்கு தமிழ் படிக்க தெரியுமா”, என்றார்.

“என்னடா இது”, என்று எப்பொழுதும் போல் லலிதா நினைக்க.

“இல்லைம்மா, இந்த காலத்து இளவட்ட பசங்க நிறைய பேரு எனக்கு தமிழ் படிக்க தெரியாதுன்னு சொல்றது தான் கௌரவம்னு நினைக்கறாங்க. நீ அதுல சேத்தியோன்னு நினைச்சேன்”, என்று நக்கலடிக்க.

கதிருக்கு சிரிப்பு வந்தது. அடக்கியும் புன்னகை வந்தது.

“எனக்கு நல்லா படிக்க வரும்”, என்று தலையாட்டினாள். இன்னும் என்னென்ன வருமோ என்று யோசித்த படியே.

அவள் முக பாவனைகளையே பார்த்தும் பார்க்காமல் பார்த்துகொண்டிருந்த கதிர். இருபத்தி ஒன்பது வயது இளைஞன். திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று தள்ளி போட்டுகொண்டு இருப்பவன். நிறைய திமிர் பிடித்தவன். அலட்சியம் அவன் கூட பிறந்தது. யாரையும் மரியாதைக்காக கூட மதிக்காதவன். தான் செல்வம் படைத்தவன் என்ற நினைப்பு அவன் ஒவ்வொரு செய்கையிலும் இருக்கும். செல்வம் படைத்தவர்களுடன் பழகுவதை தான் விரும்புவான்.

தாய் இல்லாதவன். தாயுடன் மிகுந்த ஒட்டுதலுடன் இருந்தவனுக்கு அவரின் இழப்பு மிகப்பெரிய அடி என்றே சொல்ல வேண்டும்.

சற்று கனமான சரீரம் அவன் அன்னைக்கு. அது மிகுந்த உடல் உபாதைகளை தோற்று விக்க. இரண்டு வருடங்களுக்கு முன் தூக்கத்திலேயே ஹார்ட் அட்டாக் வந்து இறந்து போனார்.

அதிலிருந்தே இப்போது தான் அந்த வீடு மீண்டு இருந்தது. கதிருடன் கூட பிறந்தது ஒரு தங்கை, வித்யா. திருமணமாகி இரு பிள்ளைகள் இருந்தனர். சொந்த தாய்மாமனின் மகனுக்கே கொடுத்தது. அவர்களின் வாசம் சென்னையில்.

கதிருக்கு நண்பர்கள் என்று நிறைய கிடையாது. ஒன்றிரண்டு பேரே உண்டு. வேலை வேலை என்று தன்னை மூழ்கடித்து கொள்பவன்.

இன்று லலிதாவை பார்த்த பிறகு அவளோடு பழக வேண்டும், பேச வேண்டும், என்ற ஆர்வம் மிகுந்தது என்றே சொல்ல வேண்டும். ஆனால் யாரோடு பேசாதவன் இன்று அவளோடு ஒன்றிரண்டு வார்த்தை பேசினால் கூட எல்லோர் கவனத்தையும் கவரும் என்றதால் அவளை காப்பாற்றிய போது கூட அதை வெளியில் சொல்லவில்லை. அதுவுமில்லாமல் அவன் நட்பு வட்டத்தில் இது போல ஆட்கள் என்றுமே வரமாட்டார்கள்.

வேலை செயபவர்களிடத்தில் சகஜமாக பழகும் மனப்பான்மை கிடையாது தள்ளியே நிற்பான்.

யோசித்து கொண்டே இருந்தவன் திடீரென்று அவன் அவளிடத்தில் நடந்து கொண்ட செய்கை அவனை தாக்க அதுவும் மூர்ச்சையான பெண்ணிடம், தப்பென்று உணர்ந்தவன்.

“வேலை நாளைக்கு சொல்றேன் பாட்டி. இன்னைக்கு நீங்க ஏதாவது சொல்லனும்னா சொல்லுங்க”, என்று இன்னும் அவனுடைய மனதையே அவன் அமைதி படுத்த வேண்டி இருந்ததால் வெளியே கிளம்பி விட்டான்.

“இவன் என்னடா அங்கே இருந்து இங்கே வரவைத்து, மறுபடியும் வேலை சொல்லாமல் செல்கிறான்”, என்று கதிரின் மேல் லலிதாவிற்கு கோபமும் எரிச்சலும் வந்தது.

வீட்டிற்கு வந்ததும் பொருமி தள்ளிவிட்டால் தாயிடமும் தங்கைகளிடமும்.

அங்கே பள்ளத்தில் விழப்போய் தரையில் விழுந்து விட்டாள் என்றவுடனே அவள் தாய் தேவிக்கு மனசே இல்லை.

“யார் காப்பாத்தினது தெரியலையா”, என்று பலமுறை கேட்டார்.

அவர் அத்தனை முறை கேட்கவும் தான். “தன் உயிரை யார் காப்பாற்றியது”, என்று எப்படியாவது கேட்டு தெரிந்திருக்க வேண்டும் என்று லலிதாவிற்கு தோன்றியது. 

“நம்ம இவ வரலைன்னு சொல்லிடலாமாங்க”, என்றார்.

“இப்போ எப்படி தேவி அப்படி சொல்ல முடியும். போகட்டும். எப்படியும் நம்ம இவ ஜாதகத்தை விட தான் போறோம். நல்லதா ஏதாவது வரன் வந்தா கல்யாணத்தை முடிச்சிடலாம். அப்புறம் வேலைக்கு போகனும்னு அவசியம் இல்லாம போய்டும் இல்லை”, என்றார்.

“இன்னும் ரெண்டு பொண்ணுங்க அவங்க உதவியோட தான் படிச்சிட்டு இருக்காங்க. அதுவும் நம்ம பவித்ரா இப்போ தான் காலேஜ் முதல் வருஷம். நம்ம அனிதா இப்போ தான் பிளஸ் ஒன். அதையும் நம்ம பார்க்கணும் இல்லை”, என்றவுடன்.

கோபம் எல்லாம் கணவரின் மேல் திரும்பியது தேவிக்கு. “அத்தனை தடவை சொல்லி தானே அனுப்பினேன். பத்திரமா கூட்டிட்டு போய் வாங்கன்னு இப்படி பண்ணிட்டு வந்து நிக்கறீங்களே”,

“அதுவும் எங்க வரணும், யாரை பார்க்கணும்னு, தெளிவா கேட்டுட்டு வர மாட்டீங்க. பையனா சும்மா நடக்க வைக்கறதுக்கு. பொண்ணு தெரியவேணாம்? எவ்வளவு தூரம் நடக்க வச்சிருக்கீங்க”, என்று அவரிடம் சத்தம் போட. அவர் என்ன செய்வார் பாவம்.

அங்கே கதிருக்கு தன் செய்கையை நினைத்து மனசே கொள்ளவில்லை. யாரும் பார்க்கவில்லை என்பது பிறகு, தான் செய்தது தவறாகவே உணர்ந்த்தான். அன்று இரவு அவனுக்கு உறக்கமே இல்லை.

அது தன் கனவில் வரும் முகமோ என்று நீண்ட நேரம் யோசித்து உறங்க அந்த முகம் கனவில் வந்தது. இதுநாள் வரை சரியாக  தெரியாத அந்த முகம் இப்போது அவன் கண்களுக்கு கனவில் சரியாக தெரிந்தது. அது அவளே.  

ஆனால் உடை அவள் அணிந்திருந்தது போல சாதாரண உடை அல்ல, நல்ல ஆடம்பரமான உடை. கனவில் அவனுக்கு அது புடவையா வேறு எதுவுமா தெரியவில்லை. ஆனால் தேவைதை போல இருந்தாள்.  நல்ல அணிமணிகள். பார்க்க பார்க்க உறக்கம் கலைய. அதற்குள் விடிந்து விட்டதா என்று இருந்தது.

மறுநாள் காலை தன்னை தானே பார்பதற்க்கு அவனுக்கு பிடிக்கவில்லை. நேற்று காலையிலிருந்து தனக்கு என்னவாயிற்று? என்ன செய்வது? என்று யோசித்த படியே கிளம்பினான்.  

ஒரு வழியாக மறுநாள் மொத்த குடும்பமும் லலிதாவை தேற்றி சமாதானப்படுத்தி வேலைக்கு அனுப்ப தனது தங்கைகளின் படிப்பை கருத்தில் கொண்டு போனாள்.

எப்பொழுதும் காலை வேளைகளில் கோழிபண்ணைக்கு சென்று விடும் கதிர் அன்றும் அங்கே மேற்பார்வையிட சென்றிருந்தான்.

லலிதா வருவாள் என்று தெரியும். பாட்டியிடம், “கந்தசாமி பொண்ணு வரும். நீங்க ஏதாவது படிக்க கொள்ள வச்சிகோங்க. நான் வந்தா வேலை சொல்றேன், இல்லை லாரி ஆபிஸ் போயிடன்னா நாளைக்கு பார்த்துக்கலாம்”, என்றவன் வேண்டும் என்றே லாரி ஆபிஸ் போக.

அன்றும் பாட்டிம்மாவிற்க்கு படித்து காட்டும் வேலை தான் லலிதாவிற்கு.

புத்தகம் படிப்பது அவளுக்கு இஷ்டம் என்பதால் அவள் அதை அனுபவித்து செய்தாள். 

லலிதாவை சிறிது தவிர்க்க நினைத்தான். நேற்று அவளிடம் அவன் நடந்து கொண்டது சிறிது குற்றவுனர்ச்சியை கொடுத்தது. அதே சமயம் நேற்றிலிருந்து லலிதாவின் நினைவுகள் வேறு ஆக்ரமிக்க அது அவனுக்கே சரி வரும் என்று தோன்றவில்லை.

தங்களை அண்டி பிழைப்பை நடத்தி கொண்டிருப்பவர்களின் பெண் தன்னை இவ்வளவு சலனப்படுத்துவதா என்று வேறு தோன்ற மனம் ஊஞ்சலாடியது, அவனையே அவன் மனம் சாடியது.

காதலில் முதலில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை. அதுவும் கண்டதும் காதல் இல்லவே இல்லை. ஆனால் அந்த முகம் அடிக்கடி அவன் நினைவுகளிலும் கனவுகளிலும் தோன்றும் முகம், என்ன உணர்வு இது? என்று தெரியாதவனாக தடுமாறினான்.

மூன்று நாட்கள் லலிதாவிற்கு பாட்டியுடனே கழிய. நான்காவது நாள் தான் துணிந்து லலிதாவை கதிர் பார்த்தான். தன்னை தானே திடமானவன் எந்த சலனத்திற்க்கும் இடம் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி கொண்டு.

அதை செயல் படுத்தவும் செய்தான்.

அவளுடைய வேலைகளை எந்த சலனமுமில்லாமல் அவளுக்கு சொல்லிகொடுத்தான். வாரம் இருமுறை லாரி ஆபிஸ் கணக்கையும் கோழிப்பண்ணை கணக்கையும் போய் பார்க்க வேண்டும் என்று கூறினான்.

அப்போதெல்லாம், போய் வர தானே தானே ஏற்பாடு செய்வதாக கூற.

அவளையறியாமல், “ஹப்பா”, என்றாள்.

“என்ன ஹப்பா”, என்று இவன் கேட்க.

அப்போதுதான் தான் அதை வாய்விட்டு கூறியதை உணர்ந்தவள்.

“ஒன்னுமில்லைங்க சர்”, என.

“சொல்லுன்னு சொன்னேன்”, என்று கதிர் சற்று குரல் உயர்த்தி கூற. அதிர்ந்தவள்.

“நடக்க வேண்டி இருக்குமோன்றதுக்காக சொன்னேன்”, என்றாள் தயங்கி.

“வேலைன்னு வந்துட்டா சோம்பல் கூடாது”, என்று அறிவுரை கூற. மறுபடியும் அது லலிதாவிற்கு மிரட்டலாகவே தோன்றியது. “சரிங்க சர்”, என்று தலையை ஆட்டினாள்.

இரண்டு நாட்கள் பக்கத்தில் இருந்து வேலையை கற்று கொடுத்தான். அவனிடம் வேலை கற்கவே லலிதாவிற்கு பதட்டமாக இருந்தது. ஒரு முறை தான் சொல்லி கொடுத்தான். இவள் இயல்பிலேயே சற்று புத்திசாலி என்பதால் உடனே கற்றுக்கொண்டாள்.

கதிரும்  அவனை அவனே ஒருமுகப்படுத்தி இருந்ததால் எந்த எண்ணங்களும் அவனுள் எழாமல் பார்த்துக்கொண்டான்.

அதே சமயம் லலிதாவும் அனாவசியமாக ஒரு வார்த்தை அவனிடம் பேசவில்லை. என்ன? ஏது? என்ற விவரம் கேட்பதற்கு மட்டுமே வாயை திறந்தாள்.

இந்த அவளின் அமைதியான  நடத்தை இன்னும் வெகுவாக அவள்புறம் அவனை ஈர்த்தது.

அவளின் அமைதி ஜானகி பாட்டியை கூட ஓரளவிற்கு வசியப்படுத்திவிட்டது என்றே சொல்ல வேண்டும். அவள் வீட்டில் இருக்கும் சத்தமே இல்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாள்.

“பரவாயில்லை பொண்ணை நல்லா தான் வளர்த்து வச்சிருக்க கந்தசாமி”, என்று சர்டிபிகேட் கொடுத்தார்.

இதை வந்து தேவியிடம் கந்தாசாமி சொல்ல. தேவிக்கு பெருமை பிடிபடவில்லை. “ஏதோ இந்த நல்ல பேரோடவே, நல்ல இடமா என் பொண்ணுங்களுக்கு அமைஞ்சிட்டா அதுவே போதும்”, என சொல்ல.

பவித்ரா தான் ஆரம்பித்தாள். “அம்மா முதல்ல இந்த பேச்சை விடு, என் பொண்ணுங்க படிச்சு நல்ல பெரிய உத்தியோகத்துக்கு போகனும்னு சொல்லு. அப்புறம் கல்யாணத்தை பற்றி பேசலாம்”,

“ஆமா அம்மா, எனக்கொரு கேள்வி”, என்றாள் அனிதா.

“நீ என்னடி வெச்சிருக்க, நீயும் சொல்லு. கேட்போம்”, என்றார் தேவி

“இல்லை, நாங்க மூணு பேரும் கல்யாணம் பண்ணி போயிட்டா.  உங்க சாப்பாட்டுக்கு நீங்க என்ன பண்ணுவீங்க. இப்பவே அந்த பெரிய வீட்ல அப்பாவை மறைமுகமா கலட்டி விட்டுட்டாங்க. நாங்களும் போயிட்டா உங்களை யார் பார்த்துப்பா. சொத்துன்னு நம்ம கிட்ட விக்க கூட ஒண்ணும் கிடையாது. என்ன பண்ண போறீங்க”, என்றாள் அனிதா.

“அம்மா எங்களை படிக்க வச்சு நாங்க வேலைக்கு போனா தான் நாளைக்கு உங்களுக்கு செய்ய முடியும். உங்களுக்கு வர்ற மாப்பிள்ளைங்க வசதியா இருந்தாலும் செய்வாங்கன்னு எப்படி எதிர்ப்பார்க்க முடியும்”  

“என்ன பண்றது? இவ்வளவு எங்களுக்கு யோசிச்ச நீங்க. இதையும் யோசிக்காமையா இருப்பீங்க அதையும் சொல்லு”, என்றார் தேவி.

அதற்கு பவித்ரா, “ஒண்ணு எங்களை நல்லா படிக்க வச்சு வேலைக்கு அனுப்பனும். இன்னொன்னு.”, என்று இழுத்தவள்,  “வீட்டோட மாப்பிள்ளையா பார்த்துடு அம்மா”, என்று சொல்ல.

“வர வர இந்த புள்ளைங்களுக்கு வாய் அதிகமா போய்டுச்சு”, என்று செல்லமாக ரெண்டு அடி வைக்க.

“அடிச்சாலும் எங்க யோசனை எப்படி பாரு”, என்றனர் அவர்தம் இளைய மக்கள் இருவரும். அதை மூத்த மகள் ஒரு யோசனையுடன். “இது கூட நல்லாதான் இருக்கு”, என்று எண்ணியபடியே கேட்டிருந்தாள். 

இரண்டு நாட்களாக கதிர் வேலை கற்று கொடுத்தாலும் அவளுக்கு அது புரிந்தாலும் என்னவோ பிடிக்கவில்லை. என்னவோ கதிரின் பார்வையில் ஒரு வித்தியாசத்தை உணர்ந்தாள். என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. தப்பாகவும் படவில்லை. என்னவென்று சொல்ல தெரியவில்லை. சில சமயம் நீ எல்லாம் எனக்கு ஒரு பொருட்டா என்பது போல தான் அவன் பார்வை இருந்தது. ஏன் அந்த பார்வை என்று புரியவில்லை.

நான் எப்படி அவர்களுக்கு ஈடாவேன். நான் சாதாரண ஒரு வேலையால் தானே. ஆனாலும் அந்த அலட்சிய பார்வை ஏன்? நீ என்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. 

நான் என்ன செய்துவிடுவேன் அவனை? நான் என்ன செய்ய முடியும் அவனை?

 

அந்த போராட்டமே கதிரின் உள்ளும் நடந்தது. அவள் என்னை ஒன்றும் செய்ய முடியாது! நான் அவளை காதலிக்கவில்லை என்று உரு போட்டு கொண்டு சதா சர்வ காலமும் அவனை அறியாமல் அவளையே நினைத்திருந்தான்.

இது எதையும் அறியாத லலிதா எப்பொழுதும் போல் அவள் வேலையை பார்த்து கொண்டிருந்தாள். தான் தான் அவனை தப்பாக நினைக்கிறோமோ அவன் முதலாளி என்ற ஹோதாவில் இருக்கிறானோ தான் வேண்டாததை நினைக்கிறோமோ என்று தன்னை தானே சமாதானப்படுத்தினாள்.

Advertisement