Advertisement

அத்தியாயம் பதினெட்டு:

“ஏன் சொல்லனும்”, என்று கேட்டவன். “உனக்கு எப்படி தெரியும் முதல்ல சொல்லு”, என்றான் பிடிவாதமாக.

எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உந்துதல் இருந்ததால் அவள் எதையும் மறைக்க விரும்பவில்லை. “நீங்களும் அண்ணியும் ஒரு நாள் பேசிகிட்டு இருந்ததை கேட்டேன்”,

“என்ன கேட்டே?”,

“அதெல்லாம் சரியா ஞாபகமில்லை, உங்களுக்கு என்னை பிடிக்கும் சொல்ல விருப்பமில்லைன்னு தெரிஞ்சுகிட்டேன். பிடிச்சிருந்தும் வேற ரெண்டு தடவை கல்யாணத்துக்கு ஒத்துட்டு இருக்கீங்க. அது சரி வராததுனால. வித்யா அண்ணி சொன்னதால என்னோட கல்யாணத்துக்கு ஒத்துக்கிடீங்க”, என்றாள் கடகடவென்று.

சற்று யோசனையாக அவளை பார்த்தான். இது தான் அவள் மனதில் உருத்திகொண்டிருந்தது போல என்று எண்ணியவனுக்கு அந்த கேள்விக்கு பதில் சொல்ல பிடிக்கவில்லை. என்ன சொல்லுவான் உண்மையை சொன்னால் தங்களுக்குள் பிரச்சினை வந்துவிட்டால் என்ன செய்வது என்று எண்ணினான்.    

பிறகு ஒரு முடிவோடு அவளை பார்த்து. “ஒத்துகிட்டதுக்கு அப்புறம் ஏதாவது குறை கண்டியா”, என்றான் அவளையே அந்த இருட்டிலும் தீர்க்கமாக பார்த்தபடி.

“இல்லை”, என்று தலையசைப்பதை தவிர வேறு செய்ய முடியாதே. அது நிஜம் தானே அதற்கு பிறகு எந்த குறையும் சொல்ல முடியாதே.

ஆனால் இதெல்லாம் அவள் கேள்விகளுக்கு பதில் அல்லவே.

“அப்புறம் என்ன பிரச்சினை”,

“என்ன பிரச்சினை”, என்று சொல்லுவாள் மறுபடியும் மௌனியாகி விட்டாள்.

கதிருக்கு அவளுக்கு எப்படி விளக்கம் கொடுப்பது என்று தெரியவில்லை. தன் புறம் இருந்து தான் செய்தது அவனை பொருத்தவரை தவறே கிடையாது. ஆனால் அவளை பொருத்தவரை அவள் அதை எப்படி எடுத்துக்கொள்வாள் என்று தெரியாது.  

அவளின் மனவுணர்வுகளை புரிய முற்பட்டவன். இது அதற்கான இடமல்ல என்று உணர்ந்தான். அவளின் தோள்களை சுற்றி கைகளை படரவிட்டு சற்று நெருக்கத்தை கூட்டினான். “நம்ம பேசவேண்டிய இடம் இது கிடையாது. தூங்க முயற்சி செய்”, என்றவன். அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.

அந்த அணைப்பால் என்ன உணர்த்த முற்பட்டான். தெரியவில்லை. “எனக்கு நீ. உனக்கு நான். என்றா. இல்லை. உன்னை விடமாட்டேன். என்றா.”, ஏதோ ஒன்று கைகளை மட்டும் எடுக்கவில்லை. அவளை அணைத்தவாறே வைத்திருந்தான்.

அவன் அணைத்தது அவளுக்கு கூச்சமாக இருந்தது, அறிந்த முதல் அணைப்பு வேறு. தோன்றலின் தோன்றா உணர்வுகள் அவளின் கூச்சத்தை அதிகப்படுத்தின. சங்கடமாக உணர்ந்தாள். அதே சமயம் கையை எடுங்கள் என்று சொல்லவும் பயமாக இருந்தது.

அவளின் அசைவுகள் தொடர. “பேசாம தூங்கு கண்டதையும் நினைச்சு குழப்பாதா. இனி என்ன நினைச்சும் ஒண்ணும் ஆகபோறது இல்லை. உனக்கு நான். எனக்கு நீதான். மாற்றமேயில்லை”, என்று அணைப்பை அதிகப்படுத்த.

“பஸ்”, என்பதால் கூச்சம் அதிகரிக்க. அவனின் அண்மையை அவஸ்தையாய் உணர்ந்த லலிதா. அவள் கேட்க வேண்டிய கேள்விகளை எல்லாம் ஒத்திப்போட்டவளாக. “இது பஸ் கையை எடுங்களேன்”, என்றாள் மெல்லிய குரலில்.

“எல்லாரும் தூங்கறாங்க. நம்மை யார் சீட்டுக்குள்ள எட்டி பார்க்கறா”, என்றான்.

“ம்கும்! திடீர்ன்னு லைட் போட்டு யாராவது நடந்தா. வேண்டாம் கையை எடுங்க ப்ளீஸ்”, என்றாள்.

“கல்யாணமாகி ஒரு வாரம் ஆகப்போகுது. நானே லேட் பிக் அப் பா. இப்போதான் கையை மேலே போடறேன், அதைகூட  விடமாட்டேங்க்ற.”,

“அதுக்குன்னு இப்படி பப்ளிக் லயா போடுவாங்க”,

“யாரும் பார்க்கலை”,

“பார்த்தாலும் பார்க்காட்டாலும் இங்க வேண்டாம்”,

“அப்போ நாளைக்கு காலையில போனவுடனே நான் என்ன வேணா பண்ணலாமா”, என்றான்.

“நீங்க. என்ன வேண்ணா பண்ணுவீங்க. போனவுடனே கோழிப்பண்ணைக்கு ஓடிட மாட்டீங்க.”, என்று  பரிகாசமாக பேச்சை மாற்ற முயல.

“நீ என்னை பத்தி இப்படி தப்பு தப்பா நினைச்சிருக்கியா”, என்றான் லேசாக சிரித்தவாறு. தோளில் இருந்த கையை இடைக்கு மாற்றியவாறு.

புடவையில் இருந்ததால் அவன் கைகளின் உபயத்தால் அவளின் உணர்ச்சிகள் மெதுவாக தூண்டப்பட . கதிருக்கும் அவளை முதன் முதலாக மயக்கமாக பார்த்தது. அப்போது பார்த்த அவளின் இடுப்பு ஞாபகத்திற்கு வர. அவனுள் ஓர் ரகசிய உற்சாகம்.

அதற்குள் லலிதா என்ன சொல்கிறோம் என்பதை உணராதவளாகவே. “நீங்க நல்ல பையனா, கெட்ட பையனா. சீக்கிரம் ஆராய்ச்சி பண்ணலாம். இப்போ ப்ளீஸ் கையை எடுங்க”, என்றாள் நிஜமாகவே கெஞ்சுதலாக.

அவளின் வார்த்தைகள் கொடுத்த உற்சாகம். “நல்ல பையன் தான் கையை எடுப்பான். கெட்ட பையன் கையை எடுக்க மாட்டான். நான் கெட்ட பையனே ப்ரூவ் பண்றேன்”, என்றான் மறுபடியும்.

“நீங்க சொன்னா கேட்க மாட்டீங்க”, என்று அவன் கையை எடுத்துவிட முயல . இன்னும் இறுக்கமாக பற்றினான்

வேறு வழியில்லாமல் கெஞ்சலில் இறங்கினாள் மறுபடியும்.” நீங்க நல்ல பையன் தான். ப்ளீஸ் கையை எடுங்க”, என்று கேட்க.

நிஜமாகவே கெஞ்சுகிறாள் என்று உணர்ந்தவன். “என்ன லலிதா இது”, என்று சலித்தவாறே கையை எடுத்தான்.

பிறகு இருவருக்குமே தூக்கமில்லா இரவாக ஆகிப்போனது அது. பயணம் தூரம் முழுவதும் அமைதியாக கண்விழித்தபடி அவசியமான இரேண்டொரு பேச்சுகள் மட்டும் பேசியபடி வந்தனர்.

லலிதாவிற்கு நாம் என்ன பேச ஆரம்பித்தோம் அது எப்படி முடிந்துவிட்டது என்று இருந்தது. தன்னுடையை திண்மை இவ்வளவு தானா என்றிருந்தது. அதே சமயம் அவன் கேள்விக்கும் தன்னிடத்தில் பதில் இல்லை என்று உணர்ந்தே இருந்தாள். அவனின் கேள்வி உண்மை தானே. “உன்னை திருமணம் செய்ய பேசிய பிறகு ஏதாவது குறை கண்டாயா”.

இல்லையே. யார் இப்படி திருமணம் செய்து கொள்வார்கள். தாங்கள் செய்ய வேண்டிய அத்தனை சீரையும் யார்க்கும் தெரியாமல் அந்த பாட்டியம்மா கொடுத்து. அதையும் அவர்கள் குடும்பத்தில் கூட யாருக்கும் தெரியாமல் செய்து. எந்த குறையும் யார் மேலும் அவன் மேலோ அவன் குடும்பத்தின் மேலோ  சொல்லவே முடியாது.

இதில் தான் அவனை கேள்விகேட்பது சரியா என்ற யோசனையில் ஆழ்ந்தாள். விடியலும் வந்தது இறங்கும் இடமும் வந்தது. யோசனைகள் அவளை நன்கு குழப்பியிருக்க அமைதியாக வந்தாள். கதிர் உற்சாகமாக வந்தான். பஸ்ஸில் அவளோடு ஏற்படத்துவங்கியிருந்த நெருக்கம் அவனை உல்லாசமான மனநிலையில் வைத்தது.

இவர்களை பார்த்த பாட்டி உற்சாகத்தோடு வரவேற்க. சதாசிவமும் “எப்படி இருந்ததும்மா பயணமெல்லாம்”, என்று லலிதாவிடம் கேட்டு விட்டே  வேலையை பார்க்க அமர்ந்தார்.

லலிதா எதையும் உள்ளே எடுத்துபோகவில்லை. அங்கேயே வைத்து பாட்டிக்கு காட்ட ஆரம்பித்தாள். “காட்டலாம் லலிதா முதல்ல எனக்கு டீ”, என்று கதிர் குரல் கொடுக்க. அவளே சென்று அவனுக்கு டீ போட்டு எடுத்துவந்தவள். எல்லாவற்றையும் பாட்டிக்கு காட்டி கொண்டிருந்தாள்.

நகைகளை பார்த்த பாட்டி. “நல்லா இருக்கு யார் செலக்ஷன்”, என்று கேட்க.

“எல்லாமே இவர்தான் பாட்டி”, என்றாள்.

“என்ன என் கதிர் பையன் இவ்வளவு நல்லா செலக்ட் பண்ணுவானா. இத்தனை நாளா எனக்கு தெரியாம போச்சே”, என்று பாட்டியும் பேரனை சிலாகிக்க.

அவளையறியாமல் பெருமையாய் பார்த்தாள் தன் கணவனை.    பிறகு ஊரில் நடந்தது, அது, இது, என்று பாட்டியோடு கதை பேச., பாட்டியும் அவளை பேசவைத்தார். அவள் இப்படி பாட்டியோடு சகஜமாக பேசுவதையே ரசித்து பார்த்திருந்தான். அவன் பார்வையின் வித்தியாசத்தை உணர்ந்தவள் குளிக்க போவது போல் எழுந்து விட. கதிரும் கூடவே எழுந்தான் கோழிப்பண்ணைக்கு போக.

“பாட்டி நான் கோழிப்பண்ணைக்கு போயிட்டு வர்றேன்”, என்று கதிர் சொன்னவுடனே லலிதாவுக்கு சிரிப்பு மலர. அடக்க பெரும்பாடு பட்டாள்.

“நான் சொன்னது சரிதானா”, என்று கதிரை ஒரு பார்வை பார்க்க. அவளை கவனித்தும் கவனிக்காதவன் மாதிரி ஒரு சின்ன பதில் சிரிப்ப்போடு கதிர் செல்ல முற்பட.

“பாட்டி, இதென்ன என்கிட்ட மட்டும் சொல்லிட்டு போற. லலிதா கிட்ட சொல்லலை. எங்க போனாலும் லலிதாகிட்ட சொல்லிட்டு தான் போகணும்.”, என்று பாட்டி பேரனுக்கு கிளாஸ் எடுக்க.

“சரி பாட்டி”, என்று பாட்டியிடம் நல்ல பிள்ளையாக தலையாட்டியவன். அவளை நோக்கி ரகசியமாக புன்னகைத்து. “லலிதா நான் பண்ணைக்கு போயிட்டு வர்றேன்”, என்று சொல்லி கிளம்பினான்.

“நான் வர்றதுக்குள்ள. இங்க இருக்கிற கணக்கெல்லாம் கொஞ்சம் சீக்கிரம் சரிபார்த்துடு”, என்று சொல்லி வேறு சென்றான். “இவனாவது வேலையை விட்டு. என்னை பார்ப்பதாவது”, என்று சிரித்துகொண்டே வேலையை பார்க்க சென்றாள் லலிதா.

கதிருக்கு அன்று முழுவதும் நிற்க நேரமில்லை. பகலில் சாப்பிட தான் பண்ணையில் இருந்து வீட்டுக்கு வந்தான். வந்தவன். சாப்பிட்டு தூங்க கூட இல்லை. உடனே லாரி ஆபிஸ் கிளம்பினான்.

லலிதா அவனிடம். “நைட் முழுசும் தூங்கவேயில்லை. கொஞ்ச நேரம் தூங்கிட்டு போங்க”, என்று சொல்லியும் கேட்காதவனாக உடனே கிளம்பினான்.

“இல்லை லலிதா. ரெண்டு மூணு லாரில பிரச்சினை வேற. நான் கட்டாயம் போகணும்”, என்று சொல்லலி சென்றவன். இரவு உணவிற்கு வரும்போதே மணி பதினொன்று.

அதுவரை லலிதாவும் சாப்பிடாமல் தானே அமர வேண்டும். அமர்ந்திருந்தாள். பாட்டி அந்த நேரம் உறங்க சென்றதால் பரவாயில்லை. அவளையும் கதிர் தன்னோடே சேர்ந்து சாப்பிடும்படி வற்புறுத்தினான்.

அவள் மறுத்தும் பயனில்லை. “நீ சாப்பிட்டா தான் நானும் சாப்பிடுவேன்”, என்று அமர்ந்திருக்க. வேறு வழியில்லாமல் அவளும் சாப்பிட அமர்ந்தாள்.

அதிக பேச்சில்லாமல் இருவரும் உணவு அருந்தினர். கதிர் மிகவும் களைத்திருந்தான் பார்த்தாலே தெரிந்தது. சரியாக சாப்பிடவும் இல்லை.

“இன்னும் கொஞ்சம் வச்சிகோங்க”, என்று லலிதா வற்புறுத்தவும். “என்ன வைக்கிறாள்”, என்று கூட பார்க்காமல் கொறித்தவன். அவள் சாப்பிடும் வரை அமர்ந்திருந்தான்.

லலிதாவுக்கு அவ்வளவு தூக்கம் இல்லை. அவள் மதியம் சிறிது நேரம் தூங்கி எழுந்திருந்தாள். ஆனால் நேற்று இரவும் கதிர் உறங்காததால் தூங்கி வழிந்தான். அவள் சமையலறையில் எல்லாம் ஒதுக்கி வந்தபோது தூங்கியிருந்தான்.

“இவன் கெட்ட பையனாமா, என்னடா இது”, என்று லலிதா வாய் விட்டு சொல்ல பாதி உறக்கத்தில் இருந்த கதிருக்கு நன்கு கேட்டது.

மெதுவாக கண்களை திறந்தவன். “நீ சொன்னா சரிதான். நான் கெட்ட பையன் தான்”, என்று தூக்க கலக்கதிலேயே ஆரம்பிக்க.

“ஐயா சாமி. நீங்க தூங்கிடீங்கன்னு நினைச்சு வாயை விட்டுடேன். தயவு செய்து தூங்குங்க. ரொம்ப டையர்ட் இருக்கீங்க”, என்று அவள் சொல்ல.

“நீ முதல்ல வா”, என்று கையை பிடித்து அவனருகில் இழுத்தவன். அவளை அணைத்தபடியே உறங்க முற்பட்டான்.

“தானே வாயை கொடுத்து மாட்டிக்கொண்டோம். ஐயோ!”, என்று இருந்தது. சும்மா கையை மேலே தான் போட்டு இருந்தான். இறுக்கமான அணைப்பு எல்லாம் இல்லை. ஐந்து நிமிடம் அசையாமல் படுத்திருந்தவள். மெல்ல அவள் மேல் இருந்த கையை எடுத்து அருகில் விட அவனுக்கு அது தெரியவேயில்லை. அதன் பிறகே இவள் நிம்மதியாக உறங்கினாள்.

காலையில் லலிதா எழுந்து குளித்து முடிக்கும் வரை கதிர் எழவேயில்லை. அவன் எழுந்தவுடனேயே நேரம் பார்த்தவன் ஏழரைக்கு மேல் இருக்க.

“ஏன் லலிதா என்னை எழுப்பலை. அச்சோ லோட் ஏத்தனுமே. ஆளுங்களை ஆறுமணிக்கே வரசொன்னேனே”, என்று அவசரமாக தயாராக ஓடினான்.

“இருங்க டீ குடிச்சிட்டு தான் போகணும்”, என்று அவள் அதை கலக்க செல்ல. அதற்குள் தயாராகி வெளியே செல்ல சென்றிருந்தான்.    அதையும் விட அவசரமாக டீ எடுத்துக்கொண்டு பின்னோடு வேகமாக நடந்தாள்.

“ரொம்ப பிடிவாதம் லலிதா நீ, நான் தான் வந்து குடிக்கறேன்னு சொல்றேன் இல்லை”,

“வந்து இன்னொரு முறை குடிப்பீங்கலாம். இப்போ இதை குடிச்சிட்டு போங்க.”,  என்று அவன் முன்னே டம்ளரை வைத்துக்கொண்டு பிடிவாதமாக நின்றாள்.

“நேரம்மாகுதுடி”, என்று புதிதாக “டி”, போட்டு வேறு பேசினான். 

“பேசற நேரம் குடிக்கலாம். குடிங்க.”, என்று அசையாமல் டம்ளரை நீட்டியபடி நிற்க வேறு வழியில்லாமல் வாங்கி அருந்தினான்.

“இம்சை பண்றடி நீ”, என கடிந்துவிட்டு செல்ல. அதற்க்கெல்லாம் அசரவில்லை லலிதா.

எப்பொழுதும் டீ கூட குடிக்காமல் காலையில் எழுந்தவுடனே சென்றுவிடுவான். இன்று அதற்கு இடம் கொடுக்காமல் லலிதா அவனை டீ குடித்த பிறகே போக அனுமதித்தது பாட்டிக்கு நிறைய திருப்தி. அது அவர் முகத்தில் நன்கு தெரிய. “பரவாயில்லை நல்ல பொண்ண தான் நம்ம கதிர் பையன் பிடிச்சிருக்கான்”, என்று மனதிற்குள்ளேயே நினைத்துகொண்டார்.

“எனக்கு வேண்டியது என்ன? என் கதிர் பையனை அவ நல்ல பார்துக்கறது தான்”, என்று மனதிற்குள்ளேயே கடவுளிடம் வேண்டினார்.

கதிர் கிளம்பியதுமே சமையலறைக்கு சென்ற லலிதா சமையல் அம்மா இருந்தாலுமே அவரிடம் கேட்டு அவளே செய்தாள். அந்த அம்மா. “நான் செய்யறேன் கண்ணு, நீ போ!”, என்றதற்கு கூட. “நான் செய்யாதப்ப நீங்க செய்ங்க. நான் செய்யறேன்னு வேலையை விட்டு எடுக்கமாட்டேன்”, என்றாள்.

இந்த வேலையை நம்பி தான் அவர் இருக்கிறார் என்று தெரியும். அதனால் அந்த உத்திரவாதம் கொடுத்தாள், அவர் சற்று நிம்மதியாக இருக்கட்டுமே என்று.

அதை போலவே அந்த சமையல் அம்மாவின் முகமும் பளிச்சென்று மலர்ந்தது. “தேங்க்ஸ் கண்ணு. இந்த வருமானத்தை நம்பி தான் என் ஜீவனம் இருக்கு. அதுவுமில்லாம இந்த மாதிரி வேலை செய்யறதுக்கு இடமும் அவ்வளவு சுளுவுல கிடைக்காது”, என்றார்.

அவரோடு பேசிக்கொண்டே . இட்லி சாம்பார் என்று சமைத்தவள் சதாசிவம் சாப்பிடும் போதும் பக்கத்தில் இருந்தாள். பின்பு பாட்டிக்கும் அவளே பரிமாறினாள். எல்லாம் சொல்லாமலேயே அவளே செய்தாள்.

பாட்டிக்கு பரம திருப்தி என்பதை விட. “நாம வசதி வாய்ப்ப பார்த்து எதையாவது ஒன்னை கொண்டுவந்திருந்தா இப்படி பதவிசா நடந்திருக்குமோ என்னவோ”, என்ற யோசனைகளே ஓடிக்கொண்டிருந்தது.

காலை கதிர் வந்து குளித்து அவன் சாப்பிட உட்கார. அவனுக்கு பரிமாறி அவன் சாப்பிட்டு. இவள் சாப்பிட பதினொன்று மணியானது.

பாட்டி அவள் வந்த முதல் நாள் சொல்லிக்கொடுத்தபடியே. கதிருக்கு பரிமாறி அவன் உண்ட பிறகே இவள் உண்டாள்.

பிறகு கதிர் லலிதாவிற்கு அலுவலக வேலைகள் கொடுத்தான். அதுவே மதியம் வரை சரியாக இருந்தது. பின்பு அவன் லாரி ஆபிஸ் கிளம்பும் போது. “நீயும் கிளம்பு”, என்றான்.

“எங்கே”, என்றாள் லலிதா.

“நீ வாங்கிட்டு வந்த கிப்ட் எல்லாம் உங்க அப்பா வீட்ல கொண்டு போய் கொடுக்க வேண்டாமா”, என்றான்.

அச்சோ எப்படி மறந்தேன் வந்தமுதல் நாள் எப்போதடா வீட்டிற்கு போவோம் என்று இருந்தது. இப்போது எப்படி மறந்தேன் என்று தனக்கு தானே கேள்வி கேட்டு கொண்டாள்.

“என்ன போகவேண்டாமா”,

“இல்லை இல்லை போகணும். அங்கேயா கூட்டிட்டு போறீங்க”, என்று குதூகளித்தவள் இருங்க. “பாட்டி கிட்ட பெர்மிஷன் கேட்டுட்டு வந்துடறேன்”, என்று ஓடினாள்.

“பாட்டி நான் போயிட்டு வரட்டா”, என்று கேட்க. “போயிட்டு வாம்மா”, என்று பாட்டி சொல்லியபிறகே கிளம்பினாள்.

இதையெல்லாம் பார்த்த கதிருக்கு. “எப்படி லலிதா இப்படி வந்த நாள்ள இருந்தே பாட்டிக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்க கத்துக்கற”,

“நான் ஒண்ணும் அவங்களுக்கு என்னை பிடிக்கணும்னு அப்படி செய்யலை”, என்றாள் சற்று கோபமாக.

“அய்யே! நீ பண்றது நல்லதுன்னு தானே சொன்னேன். அதுக்கு ஏன் இத்தனை கோபம்.”,

அவனோடு நேற்றிலிருந்து சகஜமாக பேசிய தைரியம் அவளை பேசவைத்தது. “என்ன பிடிச்சிருக்கு! பிடிச்சிருக்கு! பிடிச்சவங்கல்லாம் சொல்லிட்டா திரியறாங்க”,

“அப்படி சொல்லிட்டு திரிஞ்சா தான் பிடிச்ச மாதிரி அர்த்தமா”,

“சொல்லும்போது சொல்லவும் செய்யனும்! வித்யா அக்கா இல்லைன்னா இப்போ கூட இந்த கல்யாணம் நடந்திருக்காதே”, என்று கரக்டாக பாயிண்ட் டை பிடித்தாள்.

“அச்சோ இன்னும் எத்தனை தடவை சொல்லுவ”,

“அன்! இப்போதான் ஆரம்பிச்சு இருக்கேன். எப்போ எப்போ தோணுதோ அப்போ எல்லாம் சொல்லிட்டே இருப்பேன்”,

கேட்டவன் வாய்விட்டு சிரித்தான். “அம்மா எனக்கு பயமாயிருக்கே”, என்று சொல்ல.

“என்ன கிண்டலா”, என்றாள். “என்னை பிடிச்சிருக்குன்னு சொல்றதை கௌரவகுறைச்சலா நினைச்சவர் தானே நீங்க”, “

“அது அப்படி இல்லை லலிதா”, என்று விளக்கம் சொல்ல முற்பட்டவன் என்ன நினைத்தானோ நிறுத்திக்கொண்டான்.

அவன் சகஜமாக பேசிக்கொண்டிருந்து சட்டென்று அமைதியாகி விட்டதால் அவனுக்கு கோபம் வந்துவிட்டதோ என்று அவன் முகத்தையே லலிதா திரும்பி திரும்பி பார்க்க.

அதற்குள் அவர்கள் வீடு வந்திருந்தது.

இறங்காமல். “கோபமா”, என்றாள்.

“கோபமெல்லாம் இல்லை. ஆனா நீ என்னை சரியா புரிஞ்சிக்கனுமேன்னு தான்” என்றான். பிறகு அவனே “எனக்கு கோபமோன்னு நினைச்சு அங்க போய் உம்முனு இருக்காத” என்று சொல்லி சென்றான்.

“உள்ளே வாங்க”, என்றதற்கு. “வரும்போது வர்றேன்”, என்றுவிட்டான்.

“என்னடா இது? இவன் மறுபடியும் குழப்பறான்.  இவன் என்ன சொன்னான். ஒண்ணுமே சொல்லலையே. ஒண்ணுமே சொல்லாம சரியா புரிஞ்சிக்கனும்னா. எப்படி?”, என்று யோசிக்கும்போதே. “அக்கா”, என்று ஓடிவந்து தங்கைகள் சூழ. அம்மாவும். “லலிதா”, என்று வர. தற்காலிகமாக அவள் நினைவுகளில் இருந்து கதிர் விடைபெற்றான்.

கைகொள்ளா பைய்களுடன் வீட்டிற்குள் நுழைந்தாள். “என்ன இது”, என்று தங்கைகள் ஆர்வமாக பார்க்க துவங்கினர். 

லலிதாவிற்கு சென்னை புராணத்தை கூறவே சரியாக இருந்தது. அங்கே சென்றது பீச் பார்த்தது. அது கசகச வென்று இருந்தது. “நம்ம எங்கயும் போகவேயில்லை அம்மா. எனக்கு அங்க போனா ஒன்னோன்னையும் வாயை திறந்து பார்க்கவே சரியாயிருந்தது”.

“இவருக்கு என்னை கிண்டல் செய்யவே நேரம் சரியாயிருந்தது”, என்று கணவனையும் பேச்சில் இழுத்தவள். அவர்கள் எல்லோருக்கும் வாங்கி வந்திருந்த பரிசுப்பொருளை எல்லாம் பிரித்தாள்.

தங்கைகளுக்கு நிறையவே வாங்கியிருந்தாள். அவர்களுக்கு பார்க்கும் போது உற்சாகமாக இருந்தாலும். தேவிக்கு பயமாகவும் இருந்தது. புகுந்த வீட்டில் என்ன நினைத்திருப்பார்களோ என்று.

“என்ன கண்ணு, இத்தனை வாங்கியிருக்க வீட்ல ஒண்ணும் சொல்ல மாட்டாங்க”.

“அதெல்லாம் சொல்ல  மாட்டாங்கம்மா. அவங்க தான் வாங்கினாங்க”, என்று கணவனை சொன்னாள்.

“இருந்தாலும் கண்ணு நீ பார்த்து நடந்துக்கணும். உங்க வீட்ல சொன்னாலும் இவ்வளவு எல்லாம் வாங்காத”, என்றார்.

“அப்படியெல்லாம் யாரும் வித்தியாசமா நினைக்கறது இல்லைமா, பாரு நானே வரும் போது கொடுக்கலாம்னு தான் இருந்தேன். அவர் தான் ஞாபகமா இன்னைக்கே கூட்டிட்டு வந்தார்”,

“தப்பா நினைக்கறாங்களோ இல்லையோ. நம்ம ஜாக்கிதையா இருக்கணும். எங்கனால உனக்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது”, என்றார்.

“சரி விடும்மா நான் பார்த்துக்கறேன்”, என்றபோதும் அவர் முகம் தெளியவில்லை.

“இதை எல்லாம் நான் திருப்பி எடுத்துட்டு போயிடவா”

“ஐயோ வேண்டாம்! வேண்டாம்! அது மரியாதையில்லை”,

“அப்போ வாயை மூடிட்டு இரு. வந்தா ஏதாவது பேசறியா. இதையே பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்க.”, என்று அவள் ஒரு அதட்டல் போட்ட பிறகே சற்று அமைதியானார்.

தங்கைகளோடு நிறைய பேசினாள். தாய் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்ததோடு சரி. இதில் எதிலும் கலந்து கொள்ளாமல் அமைதியாக இருந்த போதே கந்தசாமி வந்தார்.

அவரிடமும் ஒரு மூச்சு நடந்ததையெல்லாம் சொன்னாள் லலிதா. அவருமே அளவாக தான் தங்கள் வீட்டிற்கு செலவு செய்ய வேண்டும் என்று பாடம் படித்தார்.

அவரிடமும் சரி சரி என்று மண்டையை ஆட்டினாள். அதற்குள் கதிர் வந்துவிட. சாப்பிட்டு செல்லுமாறு வற்புறுத்தியும். ஒரு டீ யோடு நிறுத்திக்கொண்டான். அவன் அவ்வளவாக யாரோடும் பழகமாட்டான். எங்கேயும் சாப்பிட மாட்டான். அது அவன் குணம். 

அவர்களுக்கு மிகுந்த வருத்தம் தான். இருந்தாலும் கதிரை பற்றி நன்கு அறிந்திருந்த கந்தசாமி அவன் இவ்வளவு இறங்கி வந்து பழகுவதே பெரிய விஷயம் என்றுனர்ந்தவர் அதை அப்படியே விட்டு விட்டார்.

ஆனால் லலிதா விடவில்லை. “ஒரு வேளை கூட தன் வீட்டில் இவன் சாப்பிடக்கூடாதா”, என்று தோன்றியது

காரில் வரும் போது ஒரு கனமான மெளனம் நிலவியது.

மனதில் எதையும் வைத்துக்கொள்ளகூடாது என்று புதிய முடிவு எடுத்திருந்தாள் லலிதா. காரில் வரும்போதே கேட்டாள்.

“ஏன் எங்க வீட்ல ஒரு நேரம் கூட சாப்பிட மாட்டீங்களா”, என்றாள் கோபமாக.

“நான் வெளில அவ்வளவா சாப்பிட மாட்டேன் லலிதா”,

“எங்க வீடு உங்களுக்கு வெளிலையா”,

“இல்லைதான்”, என்று உடனே ஒத்துக்கொண்டான். “ஆனா இன்னும் கொஞ்சம் எனக்கு டைம் கொடு பழக்கப்படுத்தறேன்”, என்றான்.

“பொண்ணுங்க நாங்க எல்லாம் உடனே வந்து உங்க வீட்ல பழகலை. உங்களுக்கு மட்டும் என்ன அப்படி”,

“அது என்னவோ ஒரு தயக்கம்”,

“என்ன தயக்கம் உங்களுக்கு சமதையா நாங்க இல்லைல்ல அதுதானே”,

அதுதான் சற்று உண்மையும் கூட. ஆனால் அதை லலிதாவிடம் சொல்ல முடியாது சமாளித்தாக வேண்டும். 

“பொண்ணே எடுத்திருக்கோம். நான் அப்படி நினைப்பனா”,

“பின்ன ஏன் சாப்பிடலை”,

“நான் தான் சொல்றேனே. என்னவோ தயக்கமா கூச்சமா இருந்தது. இனிமே இப்படி சொல்லமாட்டேன், சாப்பிடறேன்”, என்றான் சமாதானமாக.

லலிதாவிடம் தன் மனைவி என்ற உரிமை இருந்தாலும், இன்னும் அவள் வீட்டோடு சகஜமாக பழகும் மனப்பான்மை கதிருக்கு வரவில்லை. ஒரு ஒதுக்கமே இருந்தது.

லலிதாவுக்கு புரிந்தது அவ்வளவு சீக்கிரம் அவன் பழக மாட்டான் என்று. இருந்தாலும் கேட்காமல் விட்டால் அதையே பழக்கபடுத்தி கொண்டால் என்ன செய்வது என்ற கவலையே அவளை பேசவைத்தது.

லலிதாவிற்கு தன்னை நினைத்தே ஆச்சர்யமாக இருந்தது. எப்படி தான் அவனிடம் சகஜமாக பேசுகிறோம் என்று. அவனும் விட்டுகொடுத்து போகிறானே. முன்பெல்லாம் எப்படி பேசுவான். இப்பொழுது தணிந்து  போகிறானே என்று யோசனையாக இருந்தது.

அவளுக்கு புரியவில்லை தன்னுடைய மனைவி என்ற எண்ணமே கதிரின் அத்தனை மாற்றங்களுக்கும் காரணம் என்று. அந்த உரிமை அது கொடுத்த நேசம், பாசம் அவனை எல்லாவற்றிற்கும் தலையாட்ட வைத்தது.    

வீடு வந்துவிட மௌனமாகவே சாப்பிட்டனர். கதிரும் அதிகம் பேசவில்லை. லலிதாவும் பேசவில்லை.

போகும்போது நன்றாக இருந்த மனப்பான்மை வரும் போது சற்று குறைந்திருப்பதாகவே கதிருக்கும் தோன்றியது. லலிதாவிற்க்கும் தோன்றியது.

சாப்பிட்டு எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து வந்தாள் லலிதா. ஆனால் நேற்று போல கதிர் உறங்கவில்லை. இவளுக்காக காத்திருந்தான்.

சற்று படபடப்பாக உணர்ந்தாள் என்ன வரப்போகிறதோ என்று.

Advertisement