Advertisement

அத்தியாயம் பதினேழு:

கதிருக்கு ஒரே யோசனையாக இருந்தது. அவனை பிடித்திருக்கிறதா இல்லையா என்பது ஒரு புறம் இருக்க. வேறு யாரையும் பிடிக்கவில்லை என்பது நிச்சயம். என்ன மனதில் இருக்கிறது மெதுவாக தான் கொண்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

தூக்கமில்லா இரவாக கழிந்தது கதிருக்கு. மறுநாள் இரவு அவர்கள் ஊருக்கு கிளம்புவதாக இருந்ததால். அன்று ஷாப்பிங் செல்வது என்று முடிவாக கதிர், லலிதா மட்டும் சென்றனர்.

டி நகர் வந்தவள் அங்கே இருந்த கடைகளையும் ஜனத்திரளையும் வேடிக்கை பார்ப்பதில் தான் ஆர்வம் காட்டினாளே தவிர எதுவும் வாங்கின பாடில்லை. 

லலிதா எதுவுமே உரிமை எடுத்து கதிரிடம் கேட்கவில்லை. கதிருக்கு கடுப்படிக்க ஆரம்பித்தது. ஒண்ணுமே வாங்காததுக்கு எதுக்கு ஷாப்பிங் வந்தோம் என்றான்.

அவன் கோபத்தை பார்த்து “ங்கே”, என்று விழித்தாள். பிறகு அவனிடம் சமாதனாமாக. “என்ன வாங்கட்டும் என்று தெரியலை. இப்போதானே கல்யாணத்துக்கு வாங்கினோம் எல்லாம் என்கிட்டயே இருக்கு”.

“இருந்தா புதுசா வாங்ககூடாதுன்னு ஏதாவது இருக்கா வாங்கு”, என்றான். “எனக்கு தெரியலை நீங்க ஹெல்ப் பண்ணுங்க”, என்றாள்.

“எனக்கு பொண்ணுங்களுக்கு என்ன வேணும்னு எப்படி தெரியும்”, என்றான்.

“சரி வாங்க. சாரி எடுக்கலாம்”, என்று கூட்டிப்போனாள்.

அவளுக்கு தெரிந்த அளவு அவள் எடுத்தாள். அந்த அளவுக்கு தேரிவிட்டாளே என்று கதிர் சந்தோஷப்பட . பார்த்தால். “இது வித்யா அண்ணிக்கு. இது சித்ராவுக்கு. இது பெரியம்மாக்கு”, என்றாள்.

அதை பார்த்து சிரித்தான். “இந்த விலையில இந்த மெடீரியல் எல்லாம் வித்யா கட்ட மாட்டா.”, என்றான். அப்போதே சற்று கோபம் வர ஆரம்பித்தது லலிதாவிற்கு.

“இப்போதானே  பொண்ணுங்களுக்கு என்ன வேணும்னு எனக்கு எப்படி தெரியும்னு சொன்னீங்க”,

“ஆமா இப்போ கூட அதுதான் சொல்றேன். ஆனா இந்த மாதிரி விலைகுறைச்சலா எல்லாம் அவ கட்ட மாட்டா தெரியும்”.

தனக்கு அவர்கள் அந்தஸ்துக்கு வாங்க தெரியவில்லை என்று பரிகசிப்பது போல இருந்தது. பிறகு அவளுக்கு அவளே, “எனக்கு தெரியாது என்று தானே சொல்கிறான்”, என்று சமாதனப்படுத்திகொண்டவள். அவள் போனை எடுத்து வித்யாவையே அழைத்து. “என்ன மாதிரி அண்ணி நீங்க உடுத்துவீங்க”, என்று சகஜமாக பேசுவது போல பேசி விஷயத்தை வாங்கி அதே மாதிரி எடுத்தாள்.  

“இன்னும் வேற ஏதாவது அண்ணிக்கு வாங்கணுமா.”,

“போதும்”, என்றவன் “உனக்கு”, என்றான்.

நமக்கு ஏன் வன்பு அவனே எடுக்கட்டும். இல்லை அதுக்கும் ஏதாவது சொல்லுவான் என்று எண்ணியவள். “நீங்களே வாங்குங்க”, என்று அவன் சாய்ஸ்சிலேயே விட. அவனே அவளுக்கு புடவைகள். சல்வார். என்று எடுத்தான்.

நல்ல ப்லெசென்ட் கலர்களில் எடுத்தான். சுரிதார்களும் அருமையான டிசைன்களில் எடுத்தான்.

“இப்போ தானே ஒண்ணும் தெரியாதுன்னு சொன்னீங்க”.

“மறுபடியும் அதே தான் சொல்வேன். பொண்ணுங்களுக்கு என்ன எடுக்கனும்னு தெரியாது. ஆனா உனக்கு தெரியும். நீயும் மத்தவங்களும் ஒண்ணா”, என்றான்.

மனதிற்குள் சற்று நேரத்திற்கு முன் ஏற்பட்ட சஞ்சலங்கள் மறைய குளிர்ந்து விட்டாள்.  

ஆனாலும் அவனிடம். “என்னவோ மாத்தி  மாத்தி பேசறீங்க. தெரியுதுன்றீங்க. தெரியாதுன்றீங்க. என்கிட்ட மறைச்சு மறைச்சு பேசறீங்க”,

“உன்கிட்ட நான் மறைகிறேனா? என்ன அது?”, என்றான் ஆச்சர்யம் ஓங்க. 

“எனக்கென்ன தெரியும், உங்களுக்கு தான் தெரியும்”, என்றாள். அவன் திருமணத்திற்கு முன்பிருந்தே தன்னை பிடிக்கும் என்பதை சொல்லவில்லை என்பதை மனதில் வைத்து.  

“எனக்கொன்னும் தெரியலை. நீ ஏதாவது மனசுல வச்சு பேசறியா. கேட்டுடு. என்றான் சீரியசாக, அவளின் ஒதுக்கங்களின் காரணம் அறிய முற்பட்டவனாக. 

“இல்லையில்லை, ஒண்ணுமில்லை”, என்றாள் அவசரமாக.

அவள் அப்படி சொன்னதே ஏதோ இருக்கிறது என்று தோன்ற  வைத்தது. இருந்தாலும் கடையில் வைத்து என்ன கேட்பது பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டான். 

அப்போதாவது கேட்டிருக்கலாம் அவளின் மனதின் சஞ்சலங்கலாவது குறைந்திருக்கும். ஆனால் கேட்கவில்லை. அவளும் மௌனியாகிவிட்டாள்.  

போதும் துணிக்கடையை விட்டு கிளம்பலாம் என்று முடிவெடுத்தபோது.”உன் தங்கை. உங்க அப்பா அம்மாக்கெல்லாம் ஒண்ணும் வாங்கலையா.”

“அவங்களுக்கும் வாங்கறதா?”

“என்ன கேள்வி இது. ஏன் வாங்க மாட்டியா? வித்யாக்கு வாங்கற.”

“அது.”, என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்தாள்.

 “என் குடும்பத்திற்கு நீ வாங்குவியோ மாட்டியோ எனக்கென்ன தெரியும்”, என்று அவள் மனதில் நினைப்பதை வெளியே சொல்லவா முடியும். அப்படியே பேச்சை நிறுத்திவிட்டாள்.

“உன் தங்கைங்க லலிதா நான் மறந்தாலும் நீ மறக்க கூடாது. பல சமயம் நான் வித்யாவையே மறந்துடுவேன். இதுல உன் தங்கைங்க ஞாபகம் இருக்கறது சிரமம் தான் தயங்காம என்கிட்ட கேள்.”,

“சரி”, என்பது போல தலையாட்டினாள்.

பிறகு அவள் குடும்பம் அவள் அப்பா, அம்மா, பவித்ரா, அனிதா, என்று அனைவருக்கும் எடுத்தாள். பொருட்களும் வாங்கினாள். மனம் நிறைய சந்தோஷமாக உணர்ந்தது.     

“அவர்களுக்கு வாங்கி பாட்டிக்கு வாங்காமல் போனால் நன்றாக இருக்காது” என்றுணர்ந்தவள். “பாட்டிக்கு”, என்றாள்.

“பேசேன் பாட்டிக்கு. என்ன வேணும்னு கேளு”, என்று அவருக்கு போன் செய்து கொடுக்க.

“நானா நான் பேசலை. பயமாயிருக்கு”, என்று அவள் சொல்லிகொண்டிருக்கும்போதே வீட்டில் போன் எடுக்கப்பட்டது.

“பேசு லலிதா ரெண்டு நாள் ஆயிடுச்சு பேசியே.”, என்று சைய்கையாலேயே கதிர் சொல்ல. வேறு வழியில்லாமல் போனை வாங்கியவள். “எப்படி இருக்கீங்க பாட்டி”, என்றவுடன் பாட்டிக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டது.

“நான் நல்லா இருக்கேன். அங்க எல்லோரும் எப்படி இருக்காங்க”,

“எல்லோரும் நல்லா இருக்காங்க பாட்டி”, என்றாள்.

இன்னும் மேலே இரெண்டொரு கேள்விகள் கேட்டார்.

“பாட்டி நாங்க இங்க கடை வீதியில இருக்கோம். உங்களுக்கு என்ன வாங்கட்டும்”, என்றாள்.

“எனக்கா”, என்று சிரித்தவர். “நீ கேட்டதே. எனக்கு சந்தோஷம் லலிதா. எனக்கொண்ணும் வேண்டாம்”, என்றார்.

“ஏதாவது வாங்கிட்டு வர்றேன் பாட்டி”, என்றாள்.

“நீயே ஏதாவது வாங்கிட்டு வா லலிதா எனக்கொண்ணும் தேவையில்லை”, என்றவர். “அப்படியே வித்யா வீட்ல எல்லோருக்கும் வாங்கிடுங்க”, என்றார்.

“வாங்கிட்டோம் பாட்டி”, என்றவளிடம். “உங்க அம்மா வீட்டுக்கும் வாங்கியிருக்கள்ள”,.

“வாங்கியிருக்கேன் பாட்டி”, என்றாள்.

பிறகே பாட்டி கதிரிடம் போனை கொடுக்க சொன்னவர். “கதிர் பையா வரும்போது அவளுக்கு கொஞ்சம் நகைங்க இன்னும் வாங்கிட்டு வாடா.”, என்று பணித்த பிறகே விட்டார்.             

பின்பு அவனே அவளுக்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினான். பார்த்தவள். “என்கிட்ட போன்  இருக்கு”, என்று தடுக்க முற்பட.

“உன் ஓட்ட மொபைல்ல தூக்கி தலைய சுத்தி போடு.”, என்றான் அந்த கடை பணியாளன் முன்னேயே. அந்த வார்த்தையை சாதாரணமாக தான் கதிர் சொன்னான். ஆனால் அப்போதுதான் புடவைக்கும் ஒரு சொல் சொல்லியிருந்ததால். அவமானமாக உணர்ந்தாள் லலிதா. தன் ஏழ்மையை சுட்டி காட்டியது போல உணர்ந்தாள். அந்த வார்த்தைகளை கேட்டவுடனே லலிதாவின் கண்களில் கண்ணீர் தலும்பி விட்டது.

அதை எவ்வளவு சிரமப்பட்டு வாங்கினாள் என்பது அவளுக்கு தானே தெரியும். இன்றைய நிலைமைகள்  வேறாக இருந்தாலும் அன்றைய நிகழ்வுகளை மறக்க முடியாது அல்லவா. கதிர் போனை மும்முரமாக ஆராய்ந்து கொண்டிருந்ததால் இவளின் மாற்றங்களை கவனிக்கவில்லை.

அவன் அந்த போனை வாங்கி அவள் கையில் கொடுத்தபோது துளி கூட சந்தோஷமில்லை. அந்த போன் கையிலும் கனத்தது. மனதிலும் கனத்தது.

கதிர் அவளை பார்த்து சந்தோஷமாக சிரிக்க. பதிலுக்கு சிரிக்க முற்பட்டாள். முடியவில்லை. “என்ன லலிதா மாடல் பிடிக்கலையா வேற பார்க்கலாமா”, என்றான் கதிர் ஒருவேளை மாடல் பிடிக்கவில்லையோ என்றெண்ணி.

“இல்லை அதெல்லாம் வேண்டாம். இதுவே நல்லாயிருக்கு”, என்றாள் அவசரமாக.

“அப்புறம் ஏன் முகம் டல்லா இருக்கு”,

“லேசா தலைவலி”, என்றாள்.

“அப்போ வீட்டுக்கு போகலாமா”, என்றான்.

“வேண்டாம். வேண்டாம். லேசா தான் இருக்கு. நீங்க ஒண்ணும். இன்னும் உங்களுக்கு வாங்கலை. உங்களுக்கு வாங்கின பிறகு போகலாம்”, என்றாள்.

“எனக்கு அதிகமா ஒண்ணும் தேவையில்லை. ஊர்ல கூட வாங்கிக்கலாம். முடியலைன்னா வீட்டுக்கு போய்டலாம்”,

“இல்லை, நான் நல்லா தான் இருக்கேன்”, என்று மறுபடியும் அவள் சொன்ன பிறகே விட்டான்.

பிறகு அவன் அவளை அழைத்து சென்றது ஒரு நகைக்கடை. “இந்த முறை. நீயே செலெக்ட்பண்ணு”, என்றான்.

“எனக்கு அதிகமா தெரியாது”

“பரவாயில்லை யாரும் பொறக்கும் போதே எதையும் கத்துட்டு வரதில்லை. கத்துக்கலாம் நீயே எடு”, என்று வற்புறுத்தினான்.

தான் ஏதாவது எடுத்து அது சரியில்லாமல் மறுபடியும் கடை பணியாளர் முன் ஏதாவது சொல்லிவிட்டால் என்ன செய்வது என்று யோசனையாக இருந்தது. ஏது வந்தாலும் பார்த்துதானே ஆகவேண்டும் என்று முடிவு எடுத்தவள். பின்பு மெதுவாக அவனிடம், “கல் வச்சதா இல்லை ப்ளைனா எடுக்கறதா”, என்றாள்.

“உன்கிட்ட எது இல்லையோ அது எடு”, என்றான். இன்னும் அவளிடம் என்ன என்ன இருக்கிறது என்று கூட சரியாக தெரியாது.  திருமணதிற்கு முன்பு தான் வாங்கினர். பின்பு இங்கே வந்துவிட்டாள். சுவரை பார்த்து யோசிக்க.

“அங்க ஏதாவது தெரியுதா” என்றான் கதிர்.

“எங்க”, என்றாள் அவசரமாக.

“இல்லை சுவரையே பார்த்துட்டு இருந்தியே. அங்க ஏதாவது தெரியுதா”, என்று அவன் கடிக்க.

அவனை பார்த்து முறைத்தாள்.

“ஜோக்கடிச்சா சிரிக்கணும். முறைக்க கூடாது”,

மறுபடியும் அவள் முறைக்க.

“சரி விடு. சொல்லு. என்ன இருக்கு”,

“இல்லை. எனக்கு சரியா ஞாபகமில்லை”,

“கிழிஞ்சது போ. இதுக்கு தான் இந்த பில்ட் அப்பா.”, என்றவன். அவனே தேர்ந்தெடுக்க ஆரம்பித்தான். எங்கோ வேடிக்கை பார்த்து நின்றவளை. “இங்கே பாரு”, என்று அதட்டல் வேறு போட்டான்.

பின்பு மல்டி கலர் ஸ்டோன்ஸ்ஸில் ஒரு செட்டும். ரூபியில் ஒரு செட்டும். ஆன்டிக் மாடலில் ஒரு செட்டும். எடுத்தான்.

ஒரே நாளில் கதிர் செலவு செய்யும் பணத்தை பார்த்து பயந்து விட்டாள்.

“எதுக்கு இவ்வளவு. என்கிட்ட கல்யாணத்துக்கு வாங்குனது நிறைய இருக்கு, பாட்டி சொல்லி பாட்டி சொன்ன மாதிரி தான் அப்பாவும் அம்மாவும் வாங்குனாங்க”, என்று லலிதா சொல்ல.

“இதுவும் பாட்டி சொல்லி தான் வாங்கறேன்”, என்றான். “நமக்கு சொந்த பந்தம் ஜாஸ்தி. அடிக்கடி நிறைய விஷேஷதுக்கு போக வேண்டியிருக்கும். போட்டதையே போட்டுட்டு போக முடியாது லலிதா”, என்று விளக்கம் வேறு சொன்னான்.

எல்லாம் புதுமையாக இருந்தது லலிதாவிற்கு. “நகை கூட புதிது புதிதாகவா போட்டு செல்வார்கள்”, என்று.

“இப்படியெல்லாம் தான் ஒன்றும் தெரியாமல் நிற்போம். அவன் மானத்தை வாங்குவோம். என்று தான் அவன் தன்னை பிடித்திருக்கிறது என்று சொல்லவில்லையோ”,  என்று உள்ளுக்குள்ளேயே எண்ணத் துவங்கினாள்.

அவள் எண்ணங்கள் ஒருபுறமிருக்க. அதை அதிகம் யோசிக்க விடாமல் கதிர் ஏதாவது பேசிக்கொண்டே இருந்தான்.

“இன்னும் என்ன வாங்கணும்”, என.

“ஒன்றும் வேண்டாம்”, என்று பயந்து மறுத்தாள்.

இவள் ஏன் இப்படி மறுக்கிறாள் என்று யோசனையாக பார்த்த கதிர். “திருமணத்திற்கு முன்பும் இவளையே யோசிக்க வைத்தாள். இப்போதும் வைக்கிறாள். என்ன நினைக்கிறாள் என்றே புரிய மாட்டேங்குதே”, என்று சலிப்பாக இருந்தது.

அவ்வளவு பொருட்கள் வாங்கியும் ஒரு திருப்தியில்லா மனநிலையிலேயே கணவனும் மனைவியும் வித்யாவின் வீட்டிற்கு திரும்பினர்.

வீட்டிற்கு வந்தவுடன் எல்லோருக்கும் வாங்கின துணிமணிகளை பொருட்களை லலிதாவை விட்டே கொடுக்க செய்தான்.

குழந்தைகளுக்கு அவர்கள் வாங்கி வந்திருந்த புதுவகையான விளையாட்டு பொருட்களால் நிறைய சந்தோஷம். “சூப்பர் அத்தை”. என்று வித்யாவின் ஆண் மகவு ராக்கேஷ் சொல்ல. “எல்லாம் உன் மாமா தான் கண்ணா வாங்கினார்”, என்று எல்லா பெருமையும் தூக்கி லலிதாவுக்கு கொடுக்க.

அதே நேரம் வித்யாவின் பெண் மகவு அம்பிகா ஏதோ அவள் மாமாவிடம் கேட்க. கதிரும் அதையே திருப்பி சொல்லிகொண்டிருந்தான். “எல்லாம் உன் அத்தை செலெச்ஷன்”, என்று. 

கேட்டிருந்த வித்யா, சித்ரா, எல்லோரும் சிரித்தனர். “நல்லா சப்போர்ட் பண்றீங்க. புருஷனும் பொண்டாட்டியும்.”, என்று கிண்டலடிக்க.  கதிர் லலிதா இருவர் முகங்களுமே மலர்ந்தது.     

பின்பு நகைகளை எடுத்துக்காட்ட. “அண்ணா நீ இவ்வளவு சூப்பரா செலெக்ட் செய்வியா.”, என்று வித்யா கேட்க. மற்றவர்களும் “டிசைன் நன்றாக இருக்கிறது”, என்றே சொல்ல.

“நீங்களே கரக்டா கண்டுபிடிச்சிடீங்க அண்ணி. எல்லாம் அவர் செலெக்ஷன் தான். எனக்கு ஒண்ணுமே தெரியலை”, என்றாள் லலிதா.

அவள் எண்ண வோட்டத்தை உணர்ந்த கதிர். “இதென்ன பெரிய விஷயம் லலிதா. நான் விட்டிருந்தா நீ கூட நல்லா தான் எடுத்திருப்ப. நான் தான் விடவேயில்லையே”, என்றான்.

பேச்சில் கூட தன் மனைவியை விட்டு கொடுக்காத அண்ணனை பார்த்து. “போதும் அண்ணா போதும். நாங்க உங்க மனைவியை பத்தி ஒண்ணும் தப்பா நினைக்க மாட்டோம்.”, என்று கிண்டல் செய்தாள் வித்யா.

“மாப்பிள்ளை இவ வாயை மூடுங்க முதல்ல. ரொம்ப பேசறா.”, என்று ராஜேஷை நோக்கி கதிர் சொல்ல.

“ஆன்னா. ஊன்னா. அவரை இழுத்துடு நீ”, என்று கதிரிடம் செல்லம் கொஞ்சினாள் வித்யா.

அவள் செல்லம் கொஞ்சியதை பார்த்த சித்ராவிற்கு தன் தாய் வீட்டு ஞாபகம் வந்தது.

அவள் அம்மா அவளிடம் முகத்தை திருப்பியது ஞாபகத்திற்கு வந்தது. சித்ராவிற்கு முகம் விழுந்துவிட்டது. வித்யா இதை கவனிக்கவில்லை. பார்த்துகொண்டிருந்த லலிதா. இதை வித்யாவிடம் ஜாடை காட்ட. அப்போதுதான் சித்ராவை கவனித்த வித்யா. “என்ன சித்ரா”, என்க.

அப்போது பார்த்து சபரியும். “என்ன சித்ரா”, என.

எல்லோரும் மாற்றி மாற்றி கேட்டதால் சித்ராவிற்கு கண்கள் கலங்கி விட்டன.

“என்ன? என்ன?”, என்று எல்லோரும் பதற. “ஒண்ணுமில்லை வீட்டு ஞாபகம்”, என்றாள்.

என்ன சொல்வது என்று அறியாமல் எல்லோரும் அமைதியாக. வித்யா அவளை பார்த்து. “கொஞ்ச நாள் எல்லாம் சரியா போயிடும். நீ மட்டும் சீக்கிரம் ஒரு குழந்தையை பெத்துக்கோ, பாரு பேரப்பிள்ளையை பார்க்க ஓடோடி உங்கம்மா வந்துட மாட்டாங்க”, என்றாள்.

அதை கேட்ட சித்ரா அழகாக வெட்கப்பட்டாள். “நீங்க போங்கக்கா”, என்று. அவள் வெட்கத்தை பார்த்து லலிதா சிரிக்க.

அதைபார்த்த வித்யா. “இப்போ எதுக்கு நீங்க சிரிக்கறீங்க அண்ணி. யாராவது சேரணும்னு தான் குழந்தை பெத்துக்கணும்னு இல்லை. இல்லைனா கூட பெத்துக்கலாம். ஏற்கனவே எங்க அண்ணன் கொஞ்சம் லேட்டா கல்யாணம் பண்ணி இருக்காங்க. அதனால நாளை தள்ளி போடாம சீக்கிரம் குழந்தையை பெத்துக்க பாருங்க”, என்றாள்

லலிதாவின் முகம் சிவந்து விட்டது. “என்ன அண்ணி நீங்க”, என்று லலிதாவும் அழகாக வெட்கப்பட. வித்யாவிற்கு சிரிப்பு சிரிப்பாக வந்தது. அவளின் வெட்கத்தை பார்த்து வித்யா மறுபடியும் ஏதோ சொல்ல போக.

அங்கே இருந்தே கதிரிடம் மெல்லிய குரலில் கத்தினாள் லலிதா. “அவங்க வாயை அப்படியே மூடுங்க”, என்று.

“இதைதான் நான் மாப்பிள்ளைகிட்ட சொல்லிட்டே இருக்கேன் கேட்கமாடேங்கறார்”, என்று போலியாக அலுத்துகொண்டு வித்யாவின் வாயை மூடப்போக. “அண்ணா உங்க கல்யாணத்துக்கே நான் தான் கராணம்”, என்று வித்யா ஆரம்பிக்க.

லலிதா ஆர்வமாக பார்க்க. அதற்குள் கதிர் வித்யாவின் வாயை மூடி இருந்தான். “அச்சோ பிசாசே வாயதொறக்காதடி”, என்று.

அதற்குள் எல்லோரும் என்ன? என்ன? என்க கதிரின் கண்ணில் என்ன கண்டாளோ வித்யா. “ஒண்ணுமில்லை”, என்றுவிட்டாள்.

“எல்லோர் முன்னிலையிலும் என்னை பிடித்திருந்தது என்று சொல்வது எவ்வளவு கௌரவகுறைச்சலான விஷயம் இவனுக்கு”, என்று மறுபடியும் உள்ளுக்குள்ளேயே எண்ணி மறுகத்துவங்கினாள் லலிதா.

இரவு ஊருக்கு கிளம்பும் போது வித்யா இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும்படி வற்புறுத்த. “மூன்று மாதம் கழித்து மறுபடியும் வருகிறோம்”, என்ற வாக்குறுதியோடு கிளம்பினான் கதிர்.

மறுபடியும் ஒரு பேருந்து பயணம். முன்பு போல் மிகவும் அமைதியாக இல்லை சற்று பேசிக்கொண்டே வந்தான் கதிர்.

லலிதா எப்பொழுதும் போல் உறங்கிவிட. அவளின் அருகாமையில் கதிர் தான் உறங்காமல் விழித்திருந்தான். அதுவுமில்லாமல் நிறைய நகை வேறு எடுத்துபோனதால். உறங்கவில்லை. அந்த வீடியோ கோச்சில் போட்டிருந்த படத்தை பார்த்தான். அதுவும் சற்று நேரத்தில் முடிந்து விட்டது.

மணி ஒன்று தான் ஆகியிருந்தது. போனில் கேம் ஆடிக்கொண்டே விழித்திருந்தான். அவன் அசைவுகளில் கண்விழித்தாள் லலிதா. “நீங்க தூங்கலையா”, என்றாள்.

“இல்லை. தூக்கம் வரலை. அதுவுமில்லாம நகை வேறு இருக்கு இல்லையா”, என்றான்.

“சரி நான் கொஞ்ச நேரம் முழிச்சிட்டு இருக்கேன். நீங்க தூங்குங்க”, என்றாள்.

“இல்லை எனக்கு தூக்கம் வரலை.”, என்றவன் அவளிடம் பேச்சு கொடுக்க துவங்கினான்.

“உனக்கு தூக்கம் வந்தா தூங்கு”

“இல்லை எனக்கு தூக்கம் வரலை”,

மற்றவர்களுக்கு கேட்கும் என்று மெதுவாக கிசுகிசுப்பாக பேசினர்.

அவளுக்கு சித்ராவின் கலங்கிய முகம் ஞாபகத்திற்கு வர. “பாவம் இல்லை சித்ரா”, என்றாள்.

அதற்கு வேறு விளக்கம் கொடுத்தான் கதிர். “அவ மட்டுமா பாவம் அவளை பெத்தவங்க கூட தான் பாவம். சொல்லாம கொள்ளாம கல்யாணம் செஞ்சிடாங்க இல்லை. பெத்தவங்களுக்கும் தானே வலிக்கும்”,

“அது திடீர்ன்னு அவங்களுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆனாதால சொல்ல முடியாம போய் இருக்கலாம்”.

“திடீர்ன்னு ஃபிக்ஸ் ஆனாலும் அவளுக்கு தெரிஞ்சு தானே ஆச்சு”,

“அப்போ என்ன உங்களை கல்யாணம் பண்ணியிருக்கனும்னு சொல்றீங்களா”

“இந்த மாதிர் உளர்ன அப்படியே ஒரு அரை விடுவேன். நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன பேசிட்டு இருக்க. அறிவில்ல. இப்போ அந்த பொண்ணு அடுத்தவன் பொண்டாட்டி. மறந்தும் இப்படி பேசாத”, என்றான் மிரட்டலாக

லலிதாவின் ஸ்ருதி இன்னும் இறங்கிற்று. “பின்ன நீங்க தானே”, என்று அவள் இழுக்க.

“என்ன நான்தானே?. ப்ளான் பண்ணி கல்யாணம் பண்ணிக்க தெரிஞ்சவங்களுக்கு. அந்த மாதிரி ஏதாவது பிளான் பண்ணி அப்பா அம்மா கிட்ட சொல்ல தெரியாதா”,

“வேற ஆளுங்கன்னா கூட பரவாயில்லை. ரெண்டு பெரும் சொந்தம். எங்க அளவு சபரியும் வசதி. ஒரு வார்த்தை என் மாமாகிட்ட சொல்லியிருந்தா கூட முடிச்சிருப்பார்”, என்றான் கோபமாக.

அவன் கோபத்தை பார்த்த லலிதா வேறு எதுவும் பேசவில்லை. அமைதியாகி விட்டாள்

அவளின் அமைதியை பார்த்த கதிர். “ஏன் அமைதியாகிட்ட அவங்க செஞ்சது சரின்னு சொல்றியா”,

“இல்லை, இல்லை, அப்படி எல்லாம் இல்லை நீங்க கோபமா இருக்கீங்கன்னு அமைதியானேன்”.

“என்ன இருந்தாலும் பெத்தவங்களுக்கு தெரியாம கல்யாணம் பண்றது தப்பு. அதை நான் என்னிக்கும் ஒத்துக்க மாட்டேன். இத்தனை வருசமா வளர்தவங்களை பார்க்க வேண்டாமா. அப்படி என்ன காதல்?”, என்றான் மறுபடியும் கோபமாக.

“அது அப்படி கிடையாது. காதலிக்கறவங்களுக்கு தான் அதன் அருமை பெருமை தெரியும்”.

“என்ன பெரிய அருமை பெருமை”

“எனக்கு அதை பத்தி தெரியாது. ஏன்னா நான் காதலிச்சதில்லை. ஆனா எல்லோரும் உங்களை ,மாதிரியே இருக்க மாட்டாங்க”, என்றாள்.

“என்ன என்னை மாத்திரியே இருக்க மாட்டாங்க”,

தான் வாய் விட்டதை உணர்ந்து கப்பென்று வாயை லலிதா மூடிக்கொள்ள.

“பதில் சொல்லு லலிதா என்ன என்னை மாதிரியே இருக்க மாட்டாங்க”

லலிதா மறுபடியும் அமைதியாகவே வர

“சொல்லு லலிதா”, என்று மறுபடியும் அதட்டினான்.

தன் தைரியத்தை எல்லாம் ஒன்று திரட்டிய லலிதா. “உங்களுக்கு கூட தான் என்னை பிடிச்சிருந்தது. ஆனா சொல்லலையே”, என்றாள்.

“உனக்கு எப்படி தெரியும்”, என்றான் சட்டென்று எழுந்த ஒரு ஆச்சர்யத்துடன்.

“எனக்கு தெரியறது இருக்கட்டும். நீங்க என்னை பிடிச்சிருக்குன்னு சொன்னீங்களா”, என்றாள்.

“ஏன் சொல்லனும்”, என்றான் அவளையே பார்த்தவாறு அவன்.

லலிதா கதிரையே இமைக்காமல் பார்த்தாள் என்ன பதில் இதென்று.   

Advertisement