Advertisement

அத்தியாயம் பதினாறு:

லலிதாவிற்கு நிறைய குழப்பங்கள் இருந்தாலும் கதிரிடம் எதுவும் முகம் காட்டவில்லை.  எல்லோரிடமும் சகஜமாக பழகவேண்டும் என்று முயன்றாள். ஆனால் முடியவில்லை. ஏதோ ஒன்று அவளை விலக்கியே நிறுத்தியது.

அது அந்தஸ்து பேதமே. திடீரென்று உடைகளில் மாற்றம் வந்தாலுமே எண்ணங்களில் வர சிறிது நாளாகும். அது அவளை அமைதியாகவே வைத்திருந்தது. இருந்தாலும் வித்யா அவளை விட்ட பாடில்லை. அவளை இழுத்து வைத்து பேசிக்கொண்டு இருந்தாள். பதில் கொடுக்க முடியவில்லை என்றாலும் முகம் சிவக்க வைத்தது.

கதிரை வேறு. “என்னை காப்பாற்றுங்களேன்”, என்பது போல அடிக்கடி பார்வை வேறு பார்க்க. அவள் எல்லோருடனும் நன்றாக பழக வேண்டும் என்று நினைத்தவன். அங்கேயே இருந்து பார்வை மட்டுமே பார்த்தானே தவிர. வேறு உதவிக்கு வரவில்லை.

ஒரு வழியாக மதிய உணவுக்கு பின். “சிறிது நேரம் உறங்குங்கள் அண்ணி”, என்று வித்யா விட. வந்தவள் பார்த்தால். கதிர் அங்கே படுத்துக்கொண்டு இருந்தான். அது சிறிய கட்டில், இரண்டு பேர் படுக்கும் அளவே இருந்தது. எங்கே படுப்பது என்று லலிதா யோசிக்க.

அவள் படுப்பதற்கு தான் யோசிக்கிறாள் என்று உணர்ந்த கதிர். “வந்து படு லலிதா”, என்று ஒரு அதட்டல் போட. அந்த அதட்டல்  வேலை செய்து. அவளை அங்கே படுக்க வைத்தது.

அவனையோ அவன் வார்த்தையையோ மீறும் துணிவு லலிதாவுக்கு இல்லை. அவனிடம் உரிமையாக சண்டைபோடும் துணிவும் வரவில்லை.  

அமைதியாக படுத்துவிட தன்னுடைய அதட்டல் அவளை வாய் பேச வைக்கும் என்று பார்த்தால் அமைதியாகி விட்டாளே. ஏன் என்று இருந்தது கதிருக்கு.

அவளோ அவன் மேல் படாமல் படுப்பது எப்படி என்று பிரம்மப்ரயர்த்தனம் செய்து கொண்டிருந்தாள். எப்படி முயன்றும் முடியவில்லை. சிறிது அவன் மேல் உராய்ந்தவாறே தான் படுக்க முடிந்தது. மனதிற்குள்ளேயே அவனை திட்டிக்கொண்டே உறங்க முற்பட்டாள். 

மனதிற்குள் தான் திட்டுவாள் வெளியில் திட்டும் தைரியம் அவளுக்கு வராது. அவளுக்கு பயம் ஒருவேளை கதிர் அவள் சண்டை போடுவதை பார்த்து அவள் தாய் வீட்டில் கொடு போய் விட்டுவிட்டால்.

திருமணமான இரண்டு நாட்களிலேயே தாய் வீடு சென்றால். தனக்கு தன் தாய் தந்தைக்கு எல்லோருக்கும் எவ்வளவு அசிங்கம். பிடிக்குதோ இல்லையோ கணவனுடன் தான் நீ இருக்க வேண்டும். அவனை பிரிவது என்பது கேவலம், அசிங்கம், மற்றவர்கள் முன் இழிவாகிவிடும். இப்படிதான் லலிதாவின் எண்ணங்கள் ஓடியது.

கதிரை பற்றி இன்னும் நன்கு தெரியாததால். தான் கோபப்பட்டால் தன்னை அடித்துவிடுவானோ இல்லை அனுப்பிவிடுவானோ என்றே அமைதி காத்தாள். அவளுடைய எண்ணங்கள் எல்லாம் சரியோ தவறோ கணவனுடன் நன்றாக பிழைக்க வேண்டும் என்பதே.       

கதிரின் எண்ணம் வேறு மாதிரியாக இருந்தது. திருமணத்திற்கு முன் ஒரு நாள் தன்னிடம் அவ்வளவு வாய் பேசினாள். இப்போதெல்லாம் பேசுவதே இல்லையே ஏன்.   அவளை பேச வைக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான். இவன் யோசனைகளில் உளன்று கொண்டிருக்க அதற்குள் லலிதா உறங்கி இருந்தாள்.

மாலை  லலிதா எழுந்த போது கதிர் அங்கே இல்லை. வெளியே எட்டி பார்த்தால் அங்கே இருந்தே குரல் கொடுத்தான். “ரெடியாகு லலிதா வெளில போகலாம்”, என்று.

“வெளியவா”, என்று ஆர்வமாக உடனே தயாராகி வர. அவர்கள் இருவர் மட்டுமே சென்றனர். “ஏன் அண்ணி நீங்க எல்லாரும் வரலாமே”, என்று வித்யாவிடம் கேட்க.

“ரொம்ப நாளைக்கு பிறகு இப்போதான் ஊரில் இருந்து வந்திருக்கேன். நிறைய வேலை இருக்குது அண்ணி. நீங்க போயிட்டு வாங்க”, என்றாள் லலிதா இருவருக்கும் தனிமை கொடுக்கும் பொருட்டு.

விட்டேனா என்று லலிதா குழந்தைகளை அழைக்க. “அண்ணி அவங்களை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம். அண்ணனுக்கு பொறுமை போய்டும் நீங்க போயிட்டு வாங்க அண்ணி”, என்றாள்.

அதன் பிறகும் லலிதா ஏதோ சொல்ல வர. “போங்க அண்ணி போங்க”, என்று அவளை கைப்பிடித்து வித்யா வெளியே கூட்டி வந்து.

“அண்ணா இன்னும் எங்க வீட்டு நாய் பூனை எல்லாத்தையும் உங்க வீட்டம்மா கூப்பிடறதுக்குள்ள கூட்டிட்டு போய்டு”, என்றாள்.

அப்போது தான் வித்யா தன்னை கிண்டல் செய்வதை உணர்ந்த லலிதா. “நீங்க போங்க அண்ணி”, என்று சொல்லி அவளையறியாமல் கதிரின் கைகளை பிடித்து அவனுக்கு பின் நின்று கொண்டாள்.

உணர்ந்த கதிர். “பரவாயில்லை வித்யா உன் மொக்கை பரவாயில்லை. இப்படியே கண்டினியு பண்ணு”, என்ற சொன்ன பிறகு தான் அவன் கையை பிடிதிருந்ததை உணர்ந்த லலிதா.

இருவரையும் பார்த்து முறைக்க முற்பட்ட லலிதா முடியாமல். “இன்னும் அண்ணி ஏதாவது சொல்றதுக்கு முன்னாடி நம்ம போகலாம்”, என்றாள் சிணுங்கினாள் கதிரை பார்த்து.

புன்னகையுடனேயே வீட்டை விட்டு கிளம்பினர், அவன் அவளை பைக்கில் தான் அழைத்து சென்றான். கார் எடுக்கவில்லை. வித்யா. “காரில் போ அண்ணா”, என்றதற்கு கூட. “ரொம்ப நாள் ஆகிடுச்சு லலிதா. வழி கண்டுபிடிக்கறதுக்கு காரை விட பைக் வசதி”, என்று சொல்லி சென்றான்.

கதிர் லலிதாவை அழைத்து சென்ற இடம் மெரீனா பீச். இது தான் உலகின் இரெண்டாவது பெரிய கடற்கரை என்ற அடைமொழியுடன். அவன் பைக்கை பார்க்க செய்துவிட்டு வர பத்து நிமிடங்கள் ஆனது. பின்பு அவனுடன் கடலுக்கு நடந்தாள். நடந்தாள். நடந்தாள். நடந்து கொண்டே இருந்தாள்.

“இவ்வளவு தூரம் நடக்கணுமா கடலுக்கு”, என்று கேள்வி கேட்டு கொண்டே. வழியில் விற்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டே. கசகச வென ஜனத்திரள். “இத்தனை கூட்டமா”, என்று வியந்து பார்த்துக்கொண்டே வந்தாள். 

நடந்து. நடந்து. கடலும் வர. அதில், “கால் நனைக்கவா”, என்று கதிரிடம் கேட்க. “போ போய் நனைத்துவிட்டு வா”, என்றான்.

“அச்சோ. நான் மட்டும் தனியாவா. நீங்களும் வாங்க.”, என்று அவன் கைபிடித்து அழைத்தாள். தண்ணீரை பார்த்த சந்தோஷம். அவன் கையை பிடித்து தான் இழுப்பதை கூட உணரவில்லை. “இதென்ன நம்ம ஊரா. நம்மளை யாருக்குடா தெரியும், நீயும் போய் நில்ரா”, என்று எண்ணிய கதிரும் போய் தண்ணீரில் கால் நனைத்தான்.

மனைவியோடு கை கோர்த்துக்கொண்டு கால் நனைப்பது ஒரு வித சுகத்தையே கொடுத்தது. அது கொடுத்த சுகத்தோடே. “வா கொஞ்ச நேரம் உட்காரலாம்”, என்று அழைத்து கொண்டு வந்து அமர்ந்தான்.

உட்கார்ந்தவள். “வித்யா அக்கா வீட்ல என்ன பண்றாங்க. அவங்களுக்கு என்ன தொழில்”, என்றாள்

“அவங்களுக்கு நிறைய இங்கே கட்டிடம் இருக்கு. ரெண்டு மூணு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இருக்கு. நிறைய வீடு வாடகைக்கு விட்டிருக்காங்க. ஸோ பெருசா தொழில் கிடையாது. அதையெல்லாம் பார்த்துக்ககறது. வாடகை வசூல் பண்றது சரியா இருக்கும்”.

“இந்த வாடகைகளே நிறைய வரும். முன்ன இருந்தே இதெல்லாம் இருக்கு. எங்க அம்மா மாமாக்கு தங்கச்சின்றதால அம்மாக்கும் பங்கு வந்தது ஒரு இடம். அதை அம்மா வித்யாக்கே கொடுத்துட்டாங்க. இப்போ அதுல பெருசா மாப்பிள்ளை ஷாப்பிங் மால் கட்டிட்டு இருக்கார்”.

“பசங்க ரொம்ப செல்லம் எங்க மாமாவுக்கு. அதுவும் சபரி ரொம்ப செல்லம். அதான் கல்யாணம் பண்ணிட்டு வந்தபோது கூட ஒரு வார்த்தை கூட சொல்லலை”, என்றான்.

அந்த திருமணத்தை பற்றி பேசினவுடனே லலிதாவிற்கு முகம் சுருங்கிவிட்டது. அப்படியே அமைதியாகிவிட்டாள். இவ்வளவு நேரம் நன்றாக தானே இருந்தாள். இப்போது என்ன வாயிற்று என்று கதிருக்கு புரியவில்லை. அவள் முகத்தையே பார்த்திருந்தவன். “என்ன அச்சு லலிதா”, என்றான் தனிவாகவே.

“நிஜமாவே எனக்கு அவங்க கல்யாணத்துக்கு கையெழுத்து போட கூப்பிடறாங்கன்னு தெரியாது. எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்னு கேட்டாங்கன்னு தான் போனேன். எனக்கு அங்க போனதுக்கு பிறகு தான் அவங்க கல்யாணம் பண்ணிக்க போறது தெரியும். கல்யாணம் பண்ணினது அவங்க. ஆனா நீங்க எதுக்கு என்னை திட்டுனீங்க.”, என்றாள் அவனை நேரடியாக பார்த்தபடி.

என்ன பதில் சொல்லுவான்? என்ன சொல்வது என்று தெரியாமல் அவளையே பார்த்தான்.

அவள் மேலே தொடர்ந்தாள். “நான் தான் உங்க கல்யாணத்தை நிறுத்திட்டேன்னு நீங்க நினைக்கறீங்களா.”, என்றாள் அவனையே பார்த்தபடி.

“ச்சே, ச்சே, இல்லை”, என்றான் அவசரமாக.

“அப்புறம் எதுக்கு என்னை திட்டுனீங்க”,

“தெரியலை எனக்கு உன்னை திட்ட உரிமை இருந்ததுன்னு நினைச்சிருக்கலாம்”

“இந்த நினைச்சிருக்கலாம் எல்லாம் சும்மா. எப்படி திட்டுனீங்க. உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணிடேன். அது இதுன்னு எப்படி நீங்க என்னை பார்த்து அந்த வார்த்தை சொன்னீங்க.”, என்றாள் கோபமாக.

கதிருக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. முன்பென்றால் பதில் சொல்ல முடியாத இயலாமை இருந்தால் கோபத்தை அவள் மீது திருப்பியிருப்பான். தான் தவறு செய்தாலும். அவள் அவனை தவறு செய்ய வைத்திருந்தாலும். இப்போது அவள் அவன் மனைவி.

ஆம். அவள் மீது கொண்ட ஆசை தானே. அவனை தேவையில்லாமல் அவளை பேச வைத்தது. அடிக்க வைத்தது. எது எப்படி இருந்தாலும் இப்போது  வீண் பிரச்சனைகளை அவன் விரும்பவில்லை.

அதே சமயம் அவன் காரணங்களை கதிர் சொல்லவும் விழையவில்லை. அவள் அதை எப்படி எடுத்துக்கொள்வாளோ என்று இருந்தது.  சற்று அவளை நெருங்கி அமர்ந்தவன் அவள் கையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு

“இந்த கேள்விக்கெல்லாம் என்கிட்ட பதில் இல்லை லலிதா. என்கிட்ட இப்பத்திக்கு இருக்குறது ஒண்ணே ஒண்ணு தான்”,

“ஐ அம் சாரி”, என்றான் உணர்ந்து.

கதிர் இயல்பிலேயே புத்திசாலி எங்கே ஏற வேண்டும் எங்கே தனிய வேண்டும் என்று அறிந்தவன். இன்னுமொரு மிகப்பெரிய உண்மையும் அறிந்தவன். மனைவியிடம் வெற்றி பெற நினைப்பவன் வாழ்க்கையில் தோற்று போவான். மனைவியிடம் தோற்பவன் வாழ்க்கையில் வெற்றி பெறுவான் என்பதே.   

முன்பு அந்தஸ்து பேதம் பார்த்து. இது சரி வருமா என்று லலிதாவை தள்ளி வைத்தவன் தான். ஆனால் இப்போது அவள் அவன் மனைவி. அதற்குரிய மரியாதையை கட்டாயம் கொடுப்பான். அதனாலேயே இந்த சாரி அவன் வாயிலிருந்து சுலபமாக வந்தது.  

“என்ன? ஐ அம் சாரி. அந்த ஒரு வார்த்தை சொல்லிட்டா எல்லாம் சரியாபோடுமா”.

“அதே மாதிரி தான் இந்த சபரி தான் என்கிட்ட வந்து பேசுவாங்க. நானா பேசினது இல்லை அதுக்கும் அவங்களை திட்டாம என்னை தான் திட்டுனீங்க. அது மட்டுமா கண்டபடி பேசி. என்னை பேசவச்சு. நீங்க என்னை அடிக்க வேற செஞ்சீங்க”, என்றாள் கோபம் சற்று கூட குறையாமல். 

அவள் கையை பற்றியபடி அமர்ந்திருந்தவன். “இப்பத்திக்கு என்கிட்ட இதுக்கெல்லாம் சாரி ங்கற பதிலை தவிர ஒண்ணுமில்லை”.

“என் மனசுல என்ன இருந்தது எனக்கே சரியா தெரியாத போது உன்கிட்ட என்ன சொல்றது. என்ன நினைச்சேன்னு தோனும்போது சொல்றேன். உன்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்வேன்”, என்றான் வருந்திய குரலில்.  

இந்த பதில் கூறும் போது அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யமாக. “தானா இவ்வளவு இறங்கி போய் லலிதாவிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்” என்பதே.” எப்படி இருந்த நான் இப்படி மாறிவிட்டேன்”, என்று அவனுக்கு அவனே கேட்டுக்கொண்டான்.

“எப்படி இது சாத்தியமாயிற்று. இவளை விட்டு வேறு யாரையாவது திருமணம் செய்திருந்தாலும் நான் இப்படி தான் இருந்திருப்பேனா”.

“இவள் தான் எனக்குரியவள் என்றதால் தான் கடவுள் லலிதாவின் முகத்தை என் கனவில் காட்டினாரா. நான் தான் முட்டாள்தனமாக புரிந்து கொள்ளாமல் இருந்துவிட்டேனா.”. 

“இல்லை. கடவுள் என்னை வேறு யாரையும் திருமணம் செய்ய விடாமல் என் அசட்டு தனங்களில் இருந்து என்னை  காப்பாற்றி விட்டாரா  ???????????”   

“இது தெரியாமல் நான் எப்படி லலிதா என்னை. என். எண்ணங்களை ஆட்கொள்ளலாம். அவள் என்னை மயக்குகிறாள் என்று நினைத்து அவளை வார்த்தையால் நிறைய காயப்படுத்தி இருக்கிறேன். அதை எப்படி அவளிடம் சொல்ல முடியும்”.  

எண்ணிய எண்ணங்கள் அவனை ஆட்கொண்டது. அவனுடைய கேள்விக்கு அவனை அவனே, “ஆம்”, என்று சொல்ல வைத்தது. “என்னை கொல்லும் என் எண்ணங்களில் இருந்து காப்பாற்றி லலிதாவை எனக்கு திருமணம் செய்துவைததற்க்கு நன்றி கடவுளே”, சொல்ல வைத்தது.

ஏனென்றால் சித்ராவையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அவளை திருமணம் கட்டாயம் செய்திருக்க முடியாது என்றே தோன்றியது. லலிதாவைவிட்டு வேறு யாரையும் திருமணம் செய்து இருக்க முடியாது என்றே அந்த க்ஷணத்தில் தோன்றியது. 

அந்த க்ஷ்ணத்தை பரிபூரணமாக அனுபவித்தபடி அமர்ந்திருந்தான். முகத்தில் அவனை அறியாமல் ஒரு மென்னகை தோன்ற. ஆர்ப்பரிக்கும் கடலின் அலைகளோடு மனமும் ஆர்பரிக்க. ஆடாது அசங்காது மாறி மாறி தன் மனைவியையும்  கடலையும் பார்த்தபடி அமர்ந்திருந்தான்.     

இந்த பதில் கூறும்போது., இப்படி மன்னிப்பு கேட்கும் போது. இன்னும் என்ன சண்டை போடுவது? என்று லலிதாவிற்கு புரியவில்லை. ஆனால் கோபம் மட்டும் போகவில்லை.

“என்னை பிடிச்சிருந்தும் ஏன் சொல்லலை, எனக்கு அந்த தகுதியில்லைன்னு நீங்க நினைச்சீங்களா” என்ற வார்த்தை தொண்டை வரை வந்துவிட்டது. ஆனால் வெளியில் வரவில்லை.

“எனக்கு எங்க உன்னை பிடிக்கும்னு கேட்டுட்டா. அது எவ்வளவு அசிங்கம்”, என்று கேட்காமலேயே அமர்ந்திருந்தாள்.    

கதிருக்கு இன்னும் தன் மனதில் தான் அவளை பற்றி நினைத்தைதை எல்லாம் சொல்லும் அளவுக்கு நெருக்கமும் தைரியமும் லலிதாவுடன் வரவில்லை. அவனும் அமைதிக்காத்தான்.  

பாதி பேசியும். பேசாமலும். இருவரும் அமைதியாகவே அமர்ந்திருந்தனர். நடு நடுவே சுண்டல், மாங்காய், பூ, ஐஸ், பாசி மணி ஊசி மணி. என்று ஏதேதோ வந்து கேட்ட போதும் இவர்கள் அசையாமல் அமர்ந்திருக்க.

“எங்கேர்ந்துடா வந்ததுங்க முயுஸியம்ல வைக்க வேண்டிய டிக்கெட்டுங்க. வாங்கலைனா பரவாயில்லை. வேண்டாம்னாவது சொல்லுதுங்க”, என்று அவர்களை திட்டிக்கொண்டே சென்றனர்.

வெகு நேரம் அமர்ந்திருந்தனர். வித்யா போன் அடிக்கவும் தான் வீட்டிற்கு போக எழுந்தனர்.    

லலிதா நிறைய கோபத்தில் இருப்பது புரிந்தது. ஏன் இன்னும் அவளுக்கு கோபம் என்று புரியவில்லை. அவளை தனக்கு பிடிக்கும் என்பது அவளுக்கு தெரியும் என்ற கோணத்தில் கதிர் நினைக்கவேயில்லை. மெல்ல அவளை சமாதனாப்படுத்தி விடலாம் என்று எண்ணிக்கொண்டான்.

வீட்டிற்கு வந்தபோது மணி ஒன்பதை நெருங்கி கொண்டிருந்தது. “எங்கே அண்ணா போயிருந்தீங்க”, என்று வித்யா கேட்க. மெரீனா பீச் என்றான்.

“அங்கே ரொம்ப கூட்டமா இருந்திருக்குமே. பெசன்ட் நகர் போய் இருக்கலாம் இல்லை. அஷ்டலட்சுமி கோவில் போன மாதிரியும் இருந்திருக்கும் பீச் போன மாதிரியும் இருந்திருக்கும்”.

“அதுக்கென்ன வித்யா நாளைக்கு போனால் போச்சு”, என்று சொல்லியபடி அமர்ந்தான்.

இரவு அமைதியாக கழிந்தது. லலிதா ஏதாவது வருமோ என்று பயந்து கொண்டிருக்க எதுவும் வரவில்லை. கதிர் அமைதியாக உறங்க முற்பட்டான். அவனுக்கு வித்யாவின் வீட்டில் வாழ்கையை துவங்க இஷ்டமில்லை. தன் வீட்டிற்கு சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான்.

ஆனாலும் அவ்வளவு அருகில் படுப்பது இருவருக்குமே பெரும் அவஸ்தையாக இருந்தது. லலிதா படுத்தவுடனே உறங்கி விட்டாள். கதிருக்கு தான் வெகு நேரம் ஆனது தூங்க. அவளுடன் பேசிய பிறகு இருவருக்குமே கலவையான உணர்ச்சிகள்.  

கதிர் சென்னையில் நிறைய இடங்களுக்கு தினமும் அழைத்து சென்றான்.  இப்படியே இரண்டு மூன்று தினங்கள் கழிந்தன. முடிந்தவரை வித்யா பேசிப்பழகட்டும் என்று இருவருக்கும் தனிமை கொடுத்தாள்.  அன்று குடும்பத்தில் எல்லோரும் சேர்ந்து சினிமாவிற்கு செல்வது என்று முடிவாயிற்று.

சலசல என்று வித்யா பேசிக்கொண்டே வர. குழந்தைகள் குதூகலிக்க. சபரி இப்போது தான் சற்று ஃபார்மிற்கு திரும்பியிருந்தான். கடி ஜோக்குகளாக அள்ளி வீசிக்கொண்டிருந்தான். எல்லோரும் சிரித்து சிரித்தே ஒரு வழியாகினர். கொஞ்சம் சீரியஸ் பெர்சனாலிட்டி யான கதிர் கூட சிரித்து கொண்டே வந்தான்.

புது படம் என்பதால் சற்று கூட்டமாக இருந்தது. ராஜேஷும் சபரியும் டிக்கெட் வாங்க போய்விட . அப்போது பார்த்து சில மாணவர்கள் பேசிக்கொண்டே வந்தார்கள். அதில் ஒருவன் தெரியாமல் வித்யா மீது மோதிவிட .

“டேய்.”, என்று கதிர் கடியும் போதே. “சாரி பாஸ் தெரியாம அக்காமேல இடிச்சிட்டேன்”, என்றான்.

“விடண்ணா தெரியாம தானே இடிச்சிட்டாங்க”, என்று வித்யா சமாதானம் செய்யவும் விட்டுவிட்டான். திரும்ப அவர்கள் சென்று விட்டனர்.

சென்ற மாணவர்கள் அமைதியாக இருந்திருந்தால் பரவாயில்லை. அவர்களின் கெட்ட நேரம் அவர்களுக்குள் பெட் வைத்தனர். இளங்கன்று பயம் அறியாது. செய்யும் செயலையும் அறியாது. அதன் விளைவுகளையும் அறியாது. 

அதில் ஒருவன். “தெரியாம அந்த அக்கா மேல இடிச்சிட்டோம். பக்கத்தில இருந்த ஹீரோ வேற ரொம்ப சீன் போடறார். இப்போ யார் அவங்க மேல தெரிஞ்சு இடிச்சாலும் என்னோட ட்ரீட்”, என்றான்.

அவர்களுக்குள் எந்த மாதிரியான தப்பு எண்ணங்களும் இல்லை. ஆனாலும் அது அவர்களுக்கு ஒரு சாகசம். அதுவும் கதிரின் அமைதியான தோற்றத்தை பார்த்து ஒன்றும் செய்ய மாட்டான் என்று தப்பு கணக்கு வேறு போட்டனர்.

மறுபடியும் வந்து இடிப்பது போல வர இந்த முறை அலெர்டாக இருந்த வித்யா நிமிஷத்தில் நகர. பக்கத்தில் இருந்த லலிதாவின் மேல் அவன் கண்ட்ரோல் இல்லாமல் விழ இருந்தான் ஒருவன்., வேண்டுமென்று செய்யவில்லை, அவனே தடுமாறி விட்டான். அதற்குள் சித்ரா லலிதாவை இழுத்து விட்டாள். அவ்வளவு தான் வந்ததே கோபம் கதிருக்கு.

அடித்து விளாசிவிட்டான். கூட்டம் கூடிற்று. அப்போது தான் வந்த சபரியும்  ராஜேஷும். “என்ன ஆச்சு”, என்று பதறி அந்த பையனை கதிரிடம் இருந்து விடுவிக்க. கதிரின் ஆக்ரோஷத்தை பார்த்த மற்ற மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார்.

அதற்குள் அந்த தியேட்டரின் செக்யூரிட்டி வந்து அந்த மாணவர்களை வெளியேற்ற முற்பட.

“டேய்”, என்று கர்ஜித்தவன். “படிக்கற பசங்கன்றதால விடறேன். இல்லை என்ன பண்ணியிருப்பேன்னு தெரியாது. போங்கடா” என்று சொல்லிவிட. அவன் கோபத்தை பார்த்து எல்லோரும் பயந்து விட்டனர்.

லலிதா சொல்லவே வேண்டாம் திருமணத்திற்கு முன்பு பார்த்த கதிரை பார்ப்பது போல இருந்தது.

“இந்த காலத்து பசங்க முட்டாள்ங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு இவனுங்க பீஃகேவியர்.”, என்று கோபத்தில் இருந்தவனை “விடுங்க”, என்று லலிதா வந்து ஒரு அதட்டல் போட்ட பிறகே சற்று விட்டான்.  லலிதாவிற்கு அந்த பையனை அடித்தது நிறைய கோபம் வந்தது. கதிரை பார்த்து முறைத்தாள்.  

கதிரின் கோபத்தை பார்த்து சபரியும் சித்ராவும் அதிர்ந்தனர்.  “இப்படி ஒன்றுமில்லாததுக்கு இவ்வளவு கோபப்படுபவன். அன்று தாங்கள் திருமணத்தை பதிவு செய்ய இருந்தபோது. எப்படி ஒன்றுமே சொல்லாமல் செய்யாமல் விட்டான்”, என்ற யோசனை சித்ராவுக்குள் ஓடியது.

ஆனால் சபரி சித்ராவின் மனதிற்குள் ஒருவருக்கொருவர் தெரியாமல் வைத்திருந்த குற்ற உணர்ச்சி சற்று குறைந்தது. இல்லாமல் போனது. அசுவாசபெருமூச்சு விட்டனர்.

இப்படி கதிரிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவனுக்கு நிச்சயித்தை பெண்ணை திருமணம் செய்துகொண்டோமே என்ற குற்ற உணர்ச்சி சபரியிடம் இருக்க.

சொல்லாமல் கொள்ளாமல் திருமணத்தை நிறுத்தி வேறு திருமணம் செய்துகொண்டேனே என்ற குற்ற உணர்ச்சி சித்ராவிடத்தில் இருக்க. இப்போது இரெண்டுமே காணாமல் போனது.

வந்த நாளிலிருந்து கதிரையும் லலிதாவையும் பார்த்துக் கொண்டுதானிருந்தனர். லலிதா ஒதுங்கி இருந்தாலும் கதிர் ஒரு அன்யோன்யமே காட்டினான் பார்க்கும் பார்வையிலும் பேச்சிலும்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இன்னும் சபரிக்கும் சித்ராவிற்கும் நிம்மதி ஆயிற்று.  சற்று யோசிக்கவும் செய்தாள் சித்ரா. ஆனால் அந்த யோசனைகளை அவளே ஒதுக்கி விட்டாள்.

 “எப்படி முதலில் இருந்தே லலிதாவை நிறைய பிடிக்குமா. அப்புறம் எப்படி என்னோடான திருமணத்திற்கு சம்மதம் சொன்னான். இது அவர்களின் திருமணத்திற்கு பிறகு வந்த நேசமா. இல்லை முன்பிருந்தேவா.” இப்படி யோசனைகள் ஓடினாலும். “எது எப்படியோ எல்லாம் நல்ல படியாக முடிந்ததே”, என்று யோசனைகளை ஒதுக்கினாள்.     

அதற்குள் லலிதா மெல்லிய குரலில் கதிரிடம் கடிந்து கொண்டிருந்தாள். “எதுக்கு இவ்வளவு கோபம், அதான் அந்த பையன் மேலே  படவேயில்லையே. சித்ரா தான் பிடிச்சு இழுத்துட்டாங்களே”, என்றாள்.

“அப்போ அவனை சும்மா விட சொல்றியா”, என்று குரல் உயர்த்த. அவனை பார்த்து முறைத்தாள்.

“நான் மெதுவா தானே பேசறேன். ஏன் எல்லோருக்கும் தெரியற மாதிரி கத்தறீங்க. அந்த பசங்க பண்ணினது சரின்னு சொல்லலை. கண்டிச்சு விட்டு இருக்கலாம். அவசரப்பட்டு கையை நீட்ட கூடாது”.

“முதல் தடவை கண்டிச்சு தானே விட்டேன்”.

“அதையே இந்த தடவை இன்னும் ஸ்ட்ரிக்ட்டா செய்ய வேண்டியது தானே. அடிக்கறது ரொம்ப தப்பு. அடுத்தவங்களை அடிக்கற உரிமையை யார் நமக்கு கொடுக்கறா”, என்று அவளையும் அவனோடு சேர்த்து வைத்தே பேசினாள்.

“என்னை கோபிக்கறதுல பிரயோஜனமில்லை. அடிச்சது தப்பு” என்றவள். “யார் மேல கைவெக்கலாம் வைக்க கூடாது பார்த்தாலே ஜட்ஜ் பண்ண தெரியவேணாம். இப்படி அடிக்கறது அடுத்தவங்க மனசுல ஆறாத வடுவை உருவாக்கும்”, என்று அவனை சன்னகுரலில் திட்டினாள்.

உள்ளுக்குள் கோபம் கனன்றாலும் அமைதியாக கேட்டிருந்தான் கதிர். அந்த மாணவர்கள் என்ன செய்கிறார்கள் பார்த்தாள். அப்போதுதான் அந்த மாணவர்கள் வாசலை நெருங்கி இருந்தனர்.

“நீங்க வாங்க அண்ணா”, என்று முறை சொல்லி ராஜேஷை அழைத்தவள். அந்த மாணவர்களை நோக்கி சென்றாள். அவர்கள் இருவர் அவர்களை நோக்கி வருவதை பார்த்து வேகமாக போக முற்பட.

“ஹலோ நில்லுங்க”, என்றாள். “அறிவேகிடையாதா உங்களுக்கு”, என்றாள் காட்டமாகவே. “ஜஸ்ட் போர் ஃபன் என்ன வேணுன்னாலும் செய்வீங்களா. இப்போ உங்க ஃபன் எங்க கொண்டு வந்து விட்டிருக்கு பாருங்க. எல்லோருக்கும் எவ்வளவு அசிங்கம்”.

“இது விளையாட்டு கிடையாது. போலீஸ் வரைக்கும் ஒரு வேளை போயிருந்தா இன்னும் எவ்வளவு அசிங்கம். எங்க வீட்ல அவர் அடிச்சதுக்கு சாரி கேட்க தான் வந்தேன். இனிமே இப்படி பண்ணாதீங்க”, என்று மிரட்டி வந்தாள்.

அந்த பையனும் என்ன நினைத்தானோ பின்னாடியே ஓடி வந்து. “சாரி சிஸ்டர்”, என்றான். அவன் முகம் கதிர் அரைந்ததில் வீங்கி இருந்தது.                                                    

 வித்யா, சபரி, சித்ரா, எல்லோரும் லலிதாவின் செய்கையை வாயை பிளந்து அதிசயமாக பார்த்திருந்தனர்.  வித்யாவிற்கு சந்தோஷமாக இருந்தது. கதிரின் தவறை லலிதா சுட்டி காட்டியதால்.

கதிரை பொதுவில் யாருமே கடிந்து பேசமாட்டார்கள். எல்லோரும் அவனை பார்த்து பயமே படுவார்கள். பொதுவில் தவறு செய்ய மாட்டான். மீறி செய்யும் போது யாரும் கண்டிக்க மாட்டார்கள். இப்போது லலிதா கண்டித்தது வித்யாவிற்கு மனதிருப்தியையே கொடுத்தது. .அதையும் பொறுமையாக கதிர் கேட்டது இன்னும் ஆச்சர்யமாக இருந்தது.

சிறு வயதில் இருந்தே யாராவது அவனை கண்டிக்க முற்பட்டால். “உன் வேலையை பார்”, என்பது மாதிரி தான் அவன் பதில் இருக்கும். இன்று லலிதாவின் பேச்சிற்கு பொறுமையாக இருந்தான்.

படம் பார்க்கும் மூடே பெரியவர்களுக்கு இல்லை. இருந்தாலும் வந்தாயிற்று திரும்பி எப்படி போவது என்று யோசித்து கொண்டிருக்க. பார்வையாலேயே எல்லோரையும் கூப்பிடுங்க என்ற மாதிரி லலிதா பார்க்க. “ தியேட்டர் உள்ள போகலாம் வித்யா”, என்று எல்லோரையும் கதிர் அழைத்தான்.

பின்பே சற்று இயல்பு திரும்பிற்று. எல்லோரும் படத்தில் மூழ்க. கதிர் லலிதாவை பற்றியே யோசித்து கொண்டிருந்தான். எப்படி என்னை அதட்டல் போட்டு நிலைமையை கையில் எடுத்துக்கொண்டாள் என்று ஆச்சர்யமாக இருந்தது. தைரியம் தான் என்று தனக்கு தானே மெச்சிக்கொண்டான்.

இரவு வீடு திரும்பும் போது எல்லோரும் ஹோட்டலுக்கு போகலாம் என்று முடிவு செய்ய நன்றாகவே இயல்பு திரும்பிற்று. சித்ரா வாய்விட்டே சொன்னாள். “ரொம்ப தைரியம் லலிதா உனக்கு. எப்படி அந்த பசங்களோட போய் தைரியமா பேசிட்டு வந்த”, என்றாள்.

எல்லோரும் ஓரளவு ஆமோதித்தனர்.

“அப்படி இல்லை அண்ணா. அந்த பசங்க விளையாட்டா ஆரம்பிச்சது சீரியஸா முடிஞ்சிடுச்சு. அவங்க பண்ணினது தப்புதான் இருந்தாலும் எல்லோர் முன்னாடியும் அடி வாங்கறது மனசுல ஆறா வடுவை உருவாக்கும். தேவையில்லாம மனசுல இவரைத்தான் திட்டிட்டு இருப்பான். அதனால தான்”, என்றாள்.

“ஓ! உன் வீட்டுக்காரரை அவன் திட்டக்கூடாது. அதுதானா மேட்டரு”, என்று வித்யா இழுக்க. “ஓஹோ”, போட்டனர் சபரியும் சித்ராவும்.

“காப்பற்றுங்களேன். இல்லையென்றால் ஒட்டியே எடுத்துடுவாங்க”, என்பது போல லலிதா கதிரை பார்க்க.

கதிர் வித்யாவிடம் விளையாட்டாக புகார் வாசித்தான். “என்னையே மிரட்டுறா வித்யா கேட்க மாட்டியா நீ.”,

“என்ன? எங்க அண்ணனை நீ மிரட்றியா அண்ணி”, என்று போலியாக வித்யா லலிதாவை மிரட்ட.

“என்னங்க உங்க பொண்டாட்டியை மிரட்றாங்க அண்ணி. கேட்க மாட்டீங்களா”, என்று லலிதா கதிரை நோக்கியே திருப்ப.

“அதானே என் பொண்டாட்டிய நீ எப்படி மிரட்டலாம்”, என்று கதிரும் வித்யாவை நோக்கி திருப்ப.

இதைப்பார்த்த வித்யா. “என்ன அண்ணி அண்ணன் என்னை திட்டுறாரு கேட்கமாட்டீங்களா” என்றாள்.

“என்னங்க அண்ணியை திட்றீங்களா நீங்க.”, என்பது போல லலிதா கதிரை அதட்ட முற்பட. 

“போதுண்டா சாமி”, என்றான் ராஜேஷ். அங்கே ஒரு சிரிப்பு கிளம்பியது. ராஜேஷ் கதிரை பார்த்து. “எதுக்கு மச்சான் உங்களுக்கு இந்த வேலை. கூட்டணி எல்லாம் ஸ்ட்ராங்”, என்று சிரித்தான்.

என்னவென்று தெரியாத குழந்தைகளும் சிரித்தனர்.   

அன்று இரவு தனிமையில் கதிர் லலிதாவை. “என்ன நீ எல்லார் முன்னாடியும் என்னை அப்படி மிரட்ற. நாட்டாமை மாதிரி பஞ்சாயத்தெல்லாம்  பண்ற”, என்றான்.

“சீரியசாகவே நிறைய மிரட்டி விட்டோம் போல”, என்று பயந்து விட்டாள் லலிதா.    “இல்லை அது வந்து அந்த பையன் மனசுக்குள்ள உங்களை திட்டிட்டே இருப்பான் இல்லையா அதனால தான்”, என்றாள்.

“ஒஹ்! இப்படி தான் நான் அடிச்சப்போ நீ திட்டிட்டே இருந்தியா”, என்று கரெக்டாக பாயிண்ட்டிற்க்கு வந்தான் கதிர். அவனை முறைக்க முற்பட்ட லலிதா.  

“இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்”, என்றாள் சற்று தைரியமாக.

அந்த பதில் கதிருக்கு சிரிப்பை  கொடுக்க. “எப்படி திட்டுன என்னை சொல்லேன் கேட்கறேன்”, என்றான்.                               

 “ம், சுரைக்காய்க்கு உப்பில்லைன்னு திட்டுனேன்”, என்றாள் எரிச்சலாக. “அதையெல்லாம் யாராவது ஞாபகம் வெச்சிருப்பாங்களா”,

“நீ வெச்சாலும் வெச்சிருப்ப யாரு கண்டா”,

“யாரு காணனும் இல்லை யாரு காணனும்”, என்றாள் கோபமாக.

“யாரும் காண வேண்டாம். ஆத்தா ஆளை விடு தாயி”,

“நான் என்ன உங்களை பிடிச்சா வெச்சிருக்கேன்”,

ஒரு மாதிரியாக உல்லாச மனநிலையில் இருந்த கதிர். “கைல பிடிச்சா தான் பிடிச்ச மாதிரியா. நீ தான் கண்லயே பிடிச்சு வச்சிருக்கயே. அதைத்தான் நான் இன்னைக்கு தியேட்டர் வாசலில படம் போட்டு எல்லோருக்கும் காட்டிட்டு வந்திருக்கனே அப்புறம் என்ன”  என்று வசனம் பேச.

 “வசனமெல்லாம் பலமாத்தான் இருக்கு”, என்று வாய்க்குள்ளேயே லலிதா முணுமுணுக்க.

“வேற என்ன பலமா இல்லை”, என்று லலிதாவை மிக நெருங்கி வந்தான் கதிர்.

முளைத்த தைரியம் எல்லாம் வடிந்து போக. “நான் ஒண்ணுமே சொல்லலை”, என்றாள் லலிதா.

“நீ ஒண்ணுமே சொல்ல வேண்டாம்.”, அவள் பூ முகத்தை பிடித்து அருகில் இழுத்தவன். அவள் என்ன ஏது என்று உணரும் முன்னரே. அவள் இதழோடு இதழ் பதித்தான்.

அவள் விழிவிரித்து நோக்க. “கண்லயே ஆளை முழுங்கற லலிதா நீ”, என்றவன் மீண்டும் ஒரு நீண்ட முத்தத்தை அவள் இதழ்களில் பதித்தான்.

ஏனோ அந்த முத்தத்தை பூரணமாக லலிதாவால் அனுபவிக்க முடியவில்லை. அதனால் அவளிடம் ஒரு ஒத்துழைப்பும் அவனுக்கு இல்லை.

அவளிடம் சரியான பிரதிபலிப்பு இல்லாததால் அவளை விடுத்து. “தூங்கு நான் கொஞ்சம் ஐ பி எல் மேட்ச் பார்த்துட்டு வர்றேன்”, என்று ரூமை விட்டு வெளியே சென்றான்.

கண்ணை திறந்து வாங்கும் மழைத்துளியை போன்ற அவஸ்தையை உணர்ந்தாள் லலிதா. ஏன் தான் அப்படி நடந்து கொண்டோம் என்று அவளுக்கு தெரியவேயில்லை.

கதிர் வந்தால் ஒரு சமாதனாம் சொல்வோம். மன்னிப்பு கேட்போம். என்று நிறைய நேரம் விழித்திருந்தாள். கதிர் வரவேயில்லை. தூக்கம் அவளை ஆட்கொள்ள உறங்கிவிட்டாள்.

கதிருமே அங்கே ஒரு பார்வையை மட்டுமே டீவீ யில் வைத்திருந்தான். யோசனை எல்லாம் லலிதாவை பற்றியே இருந்தது. ஏன் இப்படி இருக்கிறாள் என்று.

Advertisement