Advertisement

அத்தியாயம் பதினைந்து:

அடுத்த நாள் விடியல் யாருக்கும் காத்திராமல் வர, கதிர் அதிகாலையிலேயே விழித்துக்கொண்டான். லலிதா இன்னும் உறங்கிக்கொண்டு தான் இருந்தாள்.  எந்த இடத்தில் எப்படி உறங்க ஆரம்பித்தாலோ அப்படியே சற்றும் அசையாமல் உறங்கியிருந்தாள்.

எப்படி இப்படி அசையாமல் படுக்கிறாள் என்று எண்ணியவாறே, அவன் கனவு முகத்தை சிறிது நேரம் ரசித்தான். அவள் எழாமல் தான் மட்டும் சென்றால் நன்றாக இருக்காது என்றுணர்ந்தவன்,,,,, அவள் ஆறரை மணியாகியும் எழாமல் இருக்க. எழுப்பினான். “லலிதா”, என்று குரல் கேட்டவுடனே அரக்க பரக்க எழுந்தாள்.

“இப்படி  எழுந்திருக்காதன்னு நேத்து தானே சொன்னேன்”, என்று அவளை கடிந்தவன். “எனக்கு வெளில போகணும் நேரமாச்சேன்னு தான் எழுப்பினேன்”, என்றான்.

அவளை வித்யாவிடம் விட்டு விட்டு கதிர் கோழிப்பண்ணைக்கு கிளம்பினான். “இன்னைக்கும் போகனுமா அண்ணா”, என்று வித்யா  கடிந்த போது. “போகணும் வித்யா. ரெண்டு மூணு நாளாவே போகலை”, என்றான்.

“டீ குடிச்சிட்டு போங்க அண்ணா”, என்று வித்யா கத்த. கத்த., “வந்து குடிக்கறேன், வந்து குடிக்கறேன்”, என்று சொல்லிவிட்டு சென்றான்.

அப்போது லலிதா குளித்துவிட்டு வர. “இங்கே இருந்தா அண்ணி இப்படி தான் செய்வாங்க. அண்ணாவை அழைச்சிட்டு  ஒரு வாரம் எங்களோட சென்னை வாங்க. இன்னைக்கு நைட் நான் போறேன். கல்யாணத்துக்காக தான் இவ்வளவு நாள் தங்கினேன்.இன்னைக்கு நைட் போகலாம்னு எங்க வீட்ல அவர் சொல்லிட்டு இருந்தார்”, என்றாள்.

சிரித்தாள் லலிதா, “எனக்கு எப்படி தெரியும். அவர் எப்படி சொல்றாரோ அப்படி”, என்றவள். “லலிதான்னே கூப்பிடுங்க அக்கா”, என்றாள்.

“என்னது அக்காவா, நான் உங்களுக்கு அண்ணி. நீங்க எனக்கு அண்ணி. மாத்தினோம் பாட்டி ஒரு வழி பண்ணிடுவாங்க. நேத்தே என்னை கூப்பிட்டு சொல்லிட்டாங்க. உங்களை நான் அண்ணின்னு தான் கூப்பிடனும்ன்னு”, என்று சொல்லி சிரித்தாள்.

“பாட்டி”, என்ற வார்த்தையை கேட்டவுடனே. “சரிங்க அக்கா. இல்லையில்லை அண்ணி.”, என்றாள் லலிதா. “பாட்டி”, என்ற வார்த்தை எப்பொழுதையும் விட பயம் கொடுத்தது. எப்பொழுது தன்னுடைய அம்மா வீட்டிற்கு போவோம் என்று இருந்தது. ஒரு ஒட்டுதல் இல்லாத தன்மையே இருந்தது.

அதை உணர்ந்தாளோ என்னவோ வித்யா ஏதாவது பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தாள். தன்னுடைய கணவன் குழந்தைகளை கூட பார்க்காமல் லலிதா பின்னாடியே சுற்றி கொண்டிருந்தாள்.

“நீங்க போங்க அண்ணி. நான் பார்த்துக்கறேன்”, என்று லலிதா அவளை வற்புறுத்தி அனுப்பி வைத்தாள். மணி பத்தாகியும் கதிரை காணவில்லை.

லலிதாவிற்கு இரவும் சரியாக சாப்பிடாததால் பசித்தது. மறுவீட்டு விருந்திற்கு அழைத்துப்போக லலிதாவின் உறவில் இருந்து இரண்டு பேர் வேறு வந்து காத்து இருந்தனர். வித்யா போன் செய்த பிறகே வந்தான். வந்தவன் அவசரமாக குளித்து சாப்பிட உட்கார. வித்யா ,“இன்னும் உன் பொண்டாட்டியும் சாப்பிடலை”, என்று சொல்ல. அவளையும் சாப்பிட அழைக்க. “உனக்கு பரிமாறிட்டு அப்புறம் அவ சாப்பிடுவா”, என்றார் பாட்டி.

“ஒரே நாளில் மறுத்து பேசினால் நன்றாக இருக்காது”, என்று கதிரும் வித்யாவும் மௌனியாக. லலிதாவிற்கு இன்னும் பாட்டியிடம் இருந்து என்னென்ன வரப்போகிறதோ என்று பயமாக இருந்தது.

கதிருக்கு பரிமாற ஆரம்பித்தாள் லலிதா. அவளுக்கு அதெல்லாம் பழக்கமில்லை என்பதால் சற்று தடுமாற்றமாக இருந்தது. அவன் சாப்பிடும் வரை எல்லாரும் அங்கே இருந்ததால் அவள் நிற்க வேறு வேண்டி இருந்தது.

பிறகு அவள் சாப்பிட்டு ஒரு வழியாக மறுவீட்டு விருந்துக்கு லலிதாவின் வீட்டுக்கு கிளம்ப.லலிதாவை பார்த்த பாட்டி மறுபடியும் ஒரு அதட்டல் போட்டார்.

“என்ன லலிதா என்ன இது இப்படி போற”, என்று.

லலிதா பயந்து விட்டாள். அவளுக்கு புரியவில்லை என்னவென்று.

வித்யா பாட்டியை கடிந்தாள், “என்ன பாட்டி சொன்னால் தானே தெரியும்”, என்று.

“பின்ன என்னடியம்மா அவ கையையும் கழுத்தையும் பாரு ஒரு சங்கிலி ஒரு வளையல்ன்னு இருக்கா.”, என்று சொல்ல.

அப்போதுதான் லலிதாவுக்கும் வித்யாவுக்கும் புரிந்தது நகைகள் போடாததற்கு திட்டுகிறார் என்று.

“வாங்க அண்ணி”, என்று அவசரமாக வித்யா லலிதாவை அழைத்து போய் நகைகளை போட்டு விட.

“இப்போதானே மகாலட்சுமி மாதிரி இருக்கா. இப்படி தான் இருக்கணும். இப்போ போ.”, என்று உத்தரவு கொடுக்க. “ஹப்பா”, என்று மூச்சு விட்டபடியே கிளம்பினாள். இதையெல்லாம் ஒரு சிரிப்போடே பார்த்து கதிர் ரசித்திருந்தான்.       

அங்கே சென்றும். ஆரத்தி எடுத்து அவர்கள் வீட்டுக்கு உள் போனவுடனே அவளை விட்டு. “லாரி ஆபிஸ் வரை போயிட்டு வந்துடறேன்”, என்று சொல்லி சென்று விட்டான்.

மறுபடியும் “ஹப்பா”, என்று இருந்தது லலிதாவிற்கு. அவன் பக்கத்தில் இருந்தாலே மூச்சு முட்டுவது போல இருந்தது. அவளால் இயல்பாக இருக்க முடியவில்லை.

“என்னம்மா மாப்பிள்ளை இப்படி போறாங்க ஒரு காபியாவது குடிச்சிட்டு போகக்கூடாது”, என்ற தேவியின் கேள்விக்கு கந்தசாமி பதில் சொன்னார், “தம்பி எப்பவுமே அப்படிதான். இதுக்கு மேல எல்லாம் அவர்கிட்ட எதிர்பார்க்க முடியாது. நம்ம பொண்ணை கவனி”, என்றார் தந்தையாக. 

பவித்ராவும் அனிதாவும் அவளோடு பேச ஆவலாக இருக்க அவர்களோடு பேசிக்கொண்டு இருந்தாள். லலிதாவின் அம்மா மறைமுகமாக. “நீ சந்தோஷமா இருக்கியா கண்ணு”, என்று கேட்க. அவர் கேட்பதை உணர்ந்து. “இருக்கேன் அம்மா”, என்றாள் சிரித்த முகமாகவே.

பின்பு தான் தேவி விருந்து சமைக்கவே சென்றார். மதியம் அவர்கள் போன் செய்து அழைத்த பிறகு தான் வந்தான். சாப்பிட்டவுடனே “கிளம்பலாமா”, என்றான்.

“அதற்குள்ளாகவா”, என்று தேவியும் கந்தசாமியும் கேட்க. “இன்னைக்கு நைட் நாங்க வித்யாவோட சென்னை போனாலும் போவோம். வந்தே ஆகணும்னு ரகளை பண்றா. ஊர்ல இருந்து வந்ததுக்கு பிறகு வேணா நான் லலிதாவை அனுப்பி வைக்கறேன்”, என்று அவர்களை சமாதானப்படுத்தியே அழைத்து சென்றான்.

வண்டியில் செல்லும் போது வழியில் அவளிடம். “போவோமா லலிதா”, என்று சம்மதம் கேட்க. “உங்க விருப்பம்”, என்றாள். “இது பதில் இல்லை லலிதா. உனக்கு என்ன இஷ்டமோ சொல்லு”, என்றான்.    

“கல்யாணதிற்கே இஷ்டமா கேட்கலை. இதுல என்ன இஷ்டம் வேண்டி கிடக்கு”, என்று மனதிற்குள்ளேயே அவனை திட்டியவள்.  “எனக்கு  நிஜமாவே தெரியலைங்க நீங்க எப்படி சொல்றீங்களோ அப்படி”,  என்றாள் மறுபடியும்.

“சரி போகலாம்” என்று அவனே முடிவெடுத்தவன். அவளிடம் பேச்சை வளர்தினான்.

“நான் மகாலட்சுமியை கேலண்டர்ல தான் பார்த்திருக்கேன்”, என்றான் சிரிப்போடு. லலிதாவிற்கு புரியவில்லை. “இல்லை நீ மகாலக்ஷ்மி மாதிரி இருக்கன்னு பாட்டி சொன்னாங்க”, என்றான்.

முகம் சிவந்தாள் லலிதா. “இவன் என்ன இப்படி பேசுகிறான். புகழ்கிறானா. கிண்டல் செய்கிறானா தெரியவில்லை?. நான் அவனிடம் மயங்குகிறேனா”, என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அவள் முகத்தை ஆராய்ந்தபடியே வண்டி ஒட்டிக்கொண்டு இருந்த கதிருக்கு. அவள் முக மாற்றங்கள் நன்கு தெரிந்தது. முதலில் முகம் சிவந்தது. பின்பு குழப்பம் காட்டியது. பேச்சை மாற்றினான்.  

“நீ முன்னாடியே சென்னை போயிருக்கியா”.

“இல்லை நான் இங்க விட்டு எங்கயும் போனதில்லை”, என்றாள்.

“ஒஹ்! அப்போ நாம கண்டிப்பா போறோம், நான் காலேஜ் படிச்சது சென்னையில் தான்”, என்றான் கூடுதல் தகவலாக. வண்டி வீடு நோக்கி போகவில்லை நாமக்கல் நோக்கி சென்றது.

“நாம எங்கே போறோம்”, என்றாள்.

“கோவிலுக்கு”, என்றான். அவன் அழைத்து சென்ற இடம் நாமக்கல் ஆஞ்சநேயர் சன்னதி. லலிதா அடிக்கடி வரும் இடம் அது. ஆனால் இந்த கல்யாண கலாட்டாக்களில் அதையும் மறந்திருந்தாள்.

“எப்படி மறந்தேன் உனை”, என்று மனதில் கேட்டுகொண்டே அதற்கு மன்னிப்பும் கேட்டுகொண்டே. “தேங்க்ஸ்”, என்றாள் கதிரை நோக்கி.

“இந்த வார்த்தை நமக்குள்ள அவசியமில்லாததுன்னு நான் நினைக்கிறேன்”, என்றான் கனிவாகவே.

“ஞாபகத்துல வச்சுக்கறேன்”, என்று திரும்ப பதில் கொடுத்து வேகமாக இறங்கி கோயிலை நோக்கி போகப் போக.

“இரு லலிதா”, என்று குரல் கொடுத்தான்.

“என்ன”, என்பது போல பார்த்தவனிடம். “கல்யாணத்துக்கு அப்புறம் முதல்ல போறோம். சேர்ந்து போவோம்”, என்றான்.

“இவனுக்குள் இவ்வளவு சென்டிமெண்டா”, என்று வியந்தவள். அந்த இடத்திலேயே நின்று கொண்டாள். அவன் காரை பார்க் செய்து அவளோடு அருகில் இணைந்து நடந்தான்.

மதிய நேரம் என்பதால் பூஜைகள் முடிந்து ஆஞ்சநேயர் அலங்காரத்தில் இருந்தார். அய்யர்கள் யாரும் இல்லை. அங்கே ஆஞ்சநேயரை வணங்கி அமர்ந்தனர். அவள் வாய் தானாக ஸ்லோகத்தை முணுமுணுத்தது.

ஸ்ரீ ராமஜெயம்

ஸ்ரீ மாருதி கிருபை உண்டாக

சர்வ கல்யாண தாதரம்                                                                               சர்வ வாபத்கன வாரகம்                                                                                     அபார கருணாமூர்த்திம்                                                                     ஆஞ்சநேயம் நாமம் யஹம்

துஷ்டக்ரகங்கள் விலக

அஞ்சனா கர்ப்ப சம்பூதம்                                                                             குமாரம் பிரம்ம சாரினம்                                                                         துஷ்டக்ரஹ வினாசாய                                                                       ஹனுமந்த முபாஸ்மஹே

காரியங்களில் வெற்றி பெற

ஸ்ரீ ராம தூத மஹாதீர                                                                                         ருத்ர வீர்ய சமுத்பவ                                                                                      அஞ்சனா கர்ப்ப சம்பூத                                                                                        வாயு புத்ர நமோஸ்துதே      

அவள் அனுதினமும் ஸ்துதிக்கும் ஸ்தோத்திரங்கள். கதிருடன் அமர்ந்திருக்கும் போது தான் சொன்னாள். அவள் ஆஞ்சநேயரை பார்த்து சொல்லிக்கொண்டிருக்க. “இவளோடான என் வாழ்வு சிறக்க வேண்டும்”, என்று கதிர் ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொண்டு இருந்தான். 

இது மட்டுமல்ல இன்னும் நிறைய ஸ்லோகங்கள் அணிவகுத்தது. எல்லாவற்றிற்கும் பொறுமையாக அமர்ந்திருந்தான். நிறைய நேரம் கழித்தே, “போகலாமா”, என்றாள். மனம் இந்த திருமணத்தினால் விளைந்த சஞ்சலத்தில் இருந்து சற்று வெளியே வந்திருந்தது.

மனம் நிர்மலமாக இருக்க. “போகலாமா”, என்றாள் ஒரு மகிழ்ச்சியான மனநிலையிலேயே.

அவர்கள் மீண்டும் வீடு வந்து. பாட்டியிடம், “வித்யா கூப்பிடுகிறாள், போகட்டுமா.”, என்று கேட்க .பாட்டியும், “சரி”, என்று தலையாட்ட  அவர்கள் எல்லாரும் அன்று இரவே சென்னை பயணப்பட ஆயத்தமாகினர்.

திடீரென்று கிளம்பியதால் ட்ரெயின் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை. வெயிடிங் லிஸ்ட் கூட இல்லை. வேறு வழியில்லாமல் சேலத்தில் இருந்து பஸ்சில் செல்வது என்று முடிவாக வீட்டை விட்டு எல்லாரும் மணி ஏழுக்கே கிளம்பினர்.

கதிர், லலிதா, குழந்தைகள், வித்யா, அவள் கணவன், சித்ரா, சபரி, அவர்களின் மாமனார், மாமியார் என்று அனைவரும் கிளம்பினர். இது எல்லாமே லலிதாவிற்கு புது அனுபவமாக இருந்தது.

பஸ்ஸில் கதிரும் லலிதாவும் தனி சீட்டில் அமர்த்தப்பட அவனுடன் அவ்வளவு அருகில் அமர்ந்து பயணிப்பது இன்னும் புது அனுபவமாக. ஆணின் அருகாமை அவஸ்தையாகவும் இருந்தது.

கதிருக்கு எதுவும் இருந்த மாதிரி தெரியவில்லை. மிக இயல்பாக இருந்த மாதிரி தான் இருந்தது. ஆனால் அது லலிதாவின் பார்வைக்கே.

பேச்சு கதிரனது மிகவும் சொற்பமே என்பதால் ஒரு அமைதியான பிரயாணமாகவே அது அமைந்தது. பிரயாணம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் எல்லாம் தூக்கம் கண்ணை சுழற்ற செமி ஸ்லீப்பர் என்பதால் கால்களை தூக்கி மேலே வைத்து நன்றாக வசதியாக படுத்துக்கொண்டு உறங்க ஆரம்பித்தாள். 

கதிருக்கு அவ்வளவு பக்கத்தில் லலிதாவை வைத்துக்கொண்டு நிம்மதியான உறக்கம் வர மறுத்தது. எப்பொழுதும் அவள் முகத்தை பார்த்தே மயங்குபவன் கதிர். இப்பொழுது இவ்வளவு பக்கத்தில் அவள் உறங்கி கொண்டிருக்க எங்கிருந்து உறக்கம் வரும்.

அவள் முகத்தையே பார்த்தபடி வந்தான். அவளோ உறக்கத்திலேயே இன்னும் நெருங்கி அவன் தோளில் தலையை வாகாக சாய்த்து உறங்கினாள். அப்போதைக்கு அதை அனுபவித்த படியே உறங்க ஆரம்பித்தான்.

சிங்கார சென்னை காலையிலேயே சுறுசுறுப்பாக வந்த எல்லோரையும் வரவேற்றது. லலிதா.நிறைய அல்ல. ஆனால் சற்று வாயை பிளந்தபடி சென்னையை பார்த்திருந்தாள்.

ஒரு பக்கம் உயர்ந்து தெரிந்தது பார்வைக்கு. இன்னொரு பக்கம் கசகசவென்று இருந்தது. சென்னையின் கலவைகளை அவள் முகபாவம் காட்டியது. கந்தசாமியும் தேவியும் தன் பிள்ளைகளை எங்கும் அழைத்து வந்ததில்லை. 

அது அவளின் முதல் சென்னை பயணம் அல்லவா. அவள் முக பாவனைகளை பார்த்த கதிருக்கு சிரிப்பு வந்தது. “இது என்னடா அமெரிக்காக்கு வந்த எக்ஸ்ப்ரஷன் குடுக்கறா”, என்று நினைத்தான்.  யாரும் இல்லை என்றால் ஏதாவது சொல்லி சிரித்திருப்பான். எல்லாரும் இருந்ததால் அடக்கியே வாசித்தான்.

வித்யா வேறு அவனை ஜாடையாக கிண்டல் செய்தாள். “நேத்து பஸ் ஏறுனதுல இருந்து நீ அண்ணி முகத்தை தவிர யார் முகத்தையும் பார்க்கலை. யாரோ தெரியாத பொண்ணை சைட் அடிக்கற மாதிரி அடிக்கற. நம்மளோட தான் வரப்போறாங்க. கொஞ்சம் சுத்தி முத்தி பாருங்க”, என்றாள்.

அவள் பேசும்போதே அவர்கள் ஏறிய அவர்கள் வீட்டு கார்கள் வடபழனியில் இருக்கும் அவர்கள் வீட்டிற்கு கொண்டு வந்து சேர்த்திருந்தது. பெரிய வீடே.

நமது லலிதாவுக்கு பங்களா என்ற வார்த்தை வரவில்லை. சென்னை சிட்டியில் அவ்வளவு பெரிய வீடு பணக்காரர்கள் என்று சொல்லப்படும் வர்கத்தினராலேயே வைத்திருக்க முடியும் என்று தெரியும் அளவுக்கு விவரமாக இருந்தாள் லலிதா.

“வாங்க அண்ணி. வாங்க வாங்க. வாங்க அண்ணா. என்னை கல்யாணம் பண்ணி கொடுத்தபோது இருக்க வந்தது. பிறகு இப்போதான் வர்றீங்க”, என்றாள்.

லலிதா இவர்களை பார்த்துக்கொண்டே இருக்க.

“உங்களுக்கு தெரியாது அண்ணி எவ்வளவு நாள் கூப்பிட்டு இருப்பேன் தெரியுமா. வரவே மாட்டாங்க. இது என் புகுந்த வீடு மட்டும் கிடையாது. இது தான் எங்க தாய் மாமா வீடும் கூட”.

“அம்மா இருந்தபோ கூட அம்மா வந்து இருப்பாங்க. அப்பாவும் அண்ணாவும் காலைல வருவாங்க சாயந்திரம் போய்டுவாங்க. ரொம்ப அடம்.”, என்று குற்றப்பத்திரிக்கை வாசிக்க.   

வித்யாவின் கணவன் ராஜேஷிடம். “எப்படி மாப்பிள்ளை உங்களுக்கு பேச சான்ஸ் ஏதாவது கொடுப்பாளா என் தங்கச்சி. இல்லை அவளே பேசிட்டே இருப்பாளா”, என்றான் கதிர் கிண்டலாக.

“உங்களுக்கு  இந்த ரகசியம் தெரியாதா மச்சான். நான் தெரியும்னு இல்லை நினைச்சேன். நீங்களாவது உங்க தங்கச்சி மாதிரி இல்லாம என் தங்கச்சிக்கு பேச வாய்ப்பு கொடுங்க”, என்றான் லலிதாவை மனதில் வைத்து.

“என் தங்கச்சி மாதிரி உங்க தங்கச்சி பேசமாட்டேங்கறாளே மாப்பிள்ளை”.

“ஒண்ணும் பிரச்சனையில்லை மச்சான். உங்க தங்கச்சி கிட்ட ட்ரைனிங் விடுங்க. அப்புறம் பாருங்க எப்ப வாயை மூடுவான்னு நீங்களே கதறுவீங்க”.

“என்ன அண்ணா நீங்க. அவரே யாரு ஆளு கிடைப்பா என்னை ஓட்றதுக்குன்னு பார்த்துட்டு இருக்கார். இதுல கேள்வி கேட்டு நீ வசதி வேற செஞ்சு குடுக்கறியா.”, என்று வித்யா பேசிக்கொண்டு இருக்கும்போதே மணக்க மணக்க எல்லோருக்கும் டீ சித்ரா கொண்டுவந்தாள்.

“ஒரு குரல் கொடுத்திருந்தா நானே வந்திருப்பேன் இல்லை சித்ரா”, என்று வித்யா சொல்ல.

“அதனால என்னக்கா நான் போடக்கூடாதா”, என்றாள் சித்ரா

“இல்லை அதுக்கில்லை சித்ரா உனக்கு அளவு தெரியாதுல்ல”, என.

“இல்லைக்கா அவர் என்கூட இருந்து யார் யாருக்கு என்ன அளவு சொன்னாங்க”, என்றாள் சபரியை.

“ஓ! இது சபரியோட வேலையா சரியா சொல்லியிருப்பான்”, என்று காலையிலேயே அங்கே ஒரு அரட்டை கச்சேரி ஆரம்பமானது.  

காலை வேளைகளில் கதிர் இப்படி வேலையில்லாமல் அமர்ந்திருக்கும் தருணங்கள் மிகக்குறைவு. காலையில் கோழிப்பண்ணையில் தீவனம் வைக்கிறார்களா என்று பார்வை இடுவது, முட்டை லோடு ஏற்றுவதை பார்ப்பது, இறைச்சிக்காக கோழிகளை ஏற்றுமதி செய்வது என்று வேலை சரியாக இருக்கும்.

இங்கே பேசிக்கொண்டு இருந்தாலும் காரியத்தில் கண்ணாக போன் செய்து அங்கே நாமக்கலில் என்ன நடக்கிறது என்று கேட்டுகொண்டே இருந்தான்.

“டீ சாப்பிட்டிட்டு பேசுங்க ஆறிடும்”, என்றாள் லலிதா, முதல் முறையாக அவள் உரிமையாக கதிரிடத்தில் பேசும் வாக்கியம் கேட்காமல் இருப்பானா கதிர்.

“எப்படி இருந்த கதிர் மாமா இப்படி ஆயிட்டாங்க இல்லை அண்ணி”, என்று சபரி நக்கல் அடித்தான். வித்யா அவனை புரியாமல் பார்க்க.  

“நேத்து நீங்க டீ குடிக்க சொன்னதுக்கு வந்து குடிக்கறேன்னு கத்திட்டு இன்னைக்கு ஒரு வார்த்தை எவ்வளவு அவசரமா குடிக்கறாங்க.”, என்று சொல்ல அங்கே ஒரு கேலி சிரிப்பு கிளம்பியது.

“இப்படியா அண்ணா என் மானத்தை வாங்குவ”, என்று போலியாக வருத்தப்பட்டாள் வித்யா. கிண்டல் செய்ய. செய்ய. லலிதாவின் முகம் சிவக்க அதற்கும் ஒரு சிரிப்பு கிளம்பியது.

மனதிற்குள் மறுபடியும், “நான் மயங்குகிறேனா”, என்று லலிதாவிற்கு ஓடியது. அதே சமயம் சித்ராவை பார்த்தவள்.

“இவள் மட்டும் துணிந்து சபரியை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நான் எப்படி இவன் மனைவியாகி இருக்க முடியும்”, என்ற எண்ணமும் ஓட ஆரம்பித்தது.

சிவந்த முகம் சுருங்கியது. மறுபடியும் இவள் முகமாற்றத்தை பார்த்த கதிர் கட்டாயம் இவள் மனதிற்குள் ஏதோ வைத்திருக்கிறாள். நான் என்னிடம் உள்ள தயக்கம் என்று எண்ணுவது தவறு என்றேண்ணியவன். 

“விட்டா நீ பேசிட்டே போவ வித்யா. கொஞ்சம் குளிச்சு ப்ரெஷ் ஆகலாம் எனக்கு ஒரு ரூமை கொடு”, என.

“உன் பொண்டாட்டியோட தனியா  இருக்கணும்னு சொல்லுங்க அண்ணா இதுக்கு எதுக்கு குளிக்கறேன்னு பில்ட் அப்”, என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி அவனிடம் சொல்ல.

“நீ அடங்கவே மாட்டியா”, என்று அவளை கடிந்தபடியே பேகை தூக்க வேறு வழியில்லாமல் அவனை அழைத்துக்கொண்டுபோய் ரூமிற்குள் விட்டாள்.

அவனோடு லலிதா போக. அவர்களை விட்டு வித்யா சிரிப்போடு செல்ல. “இவ வேற கடுப்படிக்கறாடா”, என்று லலிதாவிடம் சொன்னான்.

“கடுப்படிக்கறாங்களா. என்ன பண்றாங்க”, என்றாள்.

“ம்! ரூமுக்குள்ள உன்னையும் என்னையும் விட்டுட்டு போகறதுக்கு என்ன பில்ட் அப் பண்றா. இன்னும் நான் உன் கையை கூட பிடிக்கலை யார் கிட்ட சொல்ல முடியும்.”, என்று போலியாக வருத்தப்பட. லலிதா ஏதோ வேலை இருப்பது போல பேகை நோன்டினால்.

பேகை வாங்கி அந்தப்புறம் வைத்தவன். அவள் கையை பிடித்தான். இதை எதிர்பார்க்காத லலிதா விழித்து கையை உருவப்பார்க்க பார்க்க.

“பயப்படாத லலிதா.  இதுக்கெல்லாம் குழந்தை பிறக்காது”, என்றான் பட்டென்று.

“அச்சோ! என்ன இப்படி பேசறீங்க.”, என்றாள் பதட்டமாக வாய் விட்டு.

“வேற எப்படி பேசுவாங்க. கல்யாணம் ஆகி ரெண்டு நாள் ஆகுது இன்னும் ஒரு சைவ கிஸ் கூட இல்லை. யார்கிட்டயாவது இதை சொல்ல முடியுமா”, என்று வசனம் பேச .

லலிதாவிற்கு பதட்டத்தில் வேர்க்க ஆரம்பித்து ஒரு மாதிரி இருந்தது. 

“ஏய் என்னதிது இப்படி வேர்க்குது”, என்று அவன் அருகில் வந்து கர்சீப்பால் வேர்வையை துடைக்க.

“இல்லை. நானே. நானே. துடைச்சிக்கறேன்”, என்று பதட்டத்தோடு பின்னால் போய் தொப்பென்று கட்டிலில் உட்கார்ந்தாள்.

அவள் பதட்டம் அவனுக்கு சிரிப்பை வரவழைத்தாலும் சற்றே யோசனையை கொடுத்தது. ஏதாவது உடல் உபாதை இருக்குமோ என்று.

“உடம்பு சரியில்லையா லலிதா.”, என்றான் அருகில் வந்து.

“இல்லை, அதெல்லாம் ஒண்ணுமில்லை. நல்லா தான் இருக்கேன்”, என்றாள்.

“அப்புறம் எதுக்கு இவ்வளவு டென்ஷன்”,

“தெரியலை”

“ஒண்ணுமில்லாததுக்கு  எதுக்கு இவ்வளவு டென்ஷன். ஈஸி இதெல்லாம் நேச்சர்.”,  என்று அவன் அருகில் அமர நகர்ந்து அமர்ந்தாள். அது அவனுக்கு சற்று கோபத்தை கிளப்ப இன்னும் நெருங்கி அமர்ந்தான்.

“என்ன வரப்போகிறதோ”, என்று பயத்தில் கண்களை அவள் மூட .

“இப்போ எதுக்கு இவ்வளவு அலம்பல் பண்றவ நீ. நான் இப்படி பண்ணிடுவேன்னா”, என்று அவள் கன்னத்தில் முத்தமிட. விதிர்த்தாள்.

அவசரமாக இன்னும் தள்ளி நகர்ந்து அமர்ந்தாள். கதிர் அந்த முதல் முத்தத்தை அனுபவித்து ஏதோ பேச வாய் எடுக்க. “அண்ணா”, என்று வித்யாவின் குரல் கேட்டது.

“சாரி அண்ணா. போன் வெளில விட்டுட்டு  வந்துட்டீங்க. ரொம்ப நேரமா அடிச்சிட்டே இருக்கு”, என்று கொடுத்துவிட்டு செல்ல அதற்குள் குளிக்க லலிதா பாத்ரூமிக்குள் நுழைந்திருந்தாள்.

கதிருக்கு சிரிப்பும் வந்தது சற்றே யோசனையாகவும் இருந்தது.  அவளை மேலும் டென்ஷன் ஆக்காமல் வெளியே வந்தான். திரும்ப அவன் ரூமிற்கு வந்தபோது அவள் இல்லை வித்யவோடு கிட்சனில் இருந்தாள்.

மேலும் அவளை தொந்தரவு பண்ணாமல் வேறு வேலை பார்த்திருக்க. லலிதா அவன் முகத்தை முகத்தை பார்ப்பது தெரிந்தது. லலிதா அவனுக்கு கோபம் வந்துவிட்டதோ என்று அவன் முகத்தை பார்த்து ஆராய்ந்து கண்டுபிடிக்க முயன்று கொண்டிருந்தாள்.

லலிதா முகத்தை பார்க்கும் போது “என்ன”, என்று புருவம் உயர்த்தி கதிர் கேட்க. “ஒன்றுமில்லை” என்று வேகமாக தலையாட்டினாள். அவள் செய்கைகள் அனைத்தும் கதிருக்கு சிரிப்பையே வரவழைத்தன.

கதிர் சாப்பிட அமர்ந்தபோது லலிதாவையும் சாப்பிட அமர சொல்ல. “இங்க பாட்டியில்லை லலிதா உட்காரு”, என்று கதிர் சொல்ல.

அவர்களோடு அமர்ந்த வித்யாவும் அதையே சொன்னாள் “இங்க பாட்டி இல்லை அண்ணி, அத்தை அதையெல்லாம் பார்க்க மாட்டாங்க கேசுவலா இருங்க.”, என்றாள்.

“பாட்டி இல்லையென்றால் என்ன? என்னை டென்ஷன் பண்ண தான் அவர் பேரன் இருக்கிறானே”, என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டே சாப்பிட்டாள்.

அதையெல்லாம் உணராமல் கதிர் சப்பாத்திகளை உள்ளே தள்ளி கொண்டிருக்க புரை ஏறியது.

“யாரோ உன்னை நினைக்கறாங்க அண்ணா. “,என்று சொல்லிக்கொண்டே அவசரமாக அவன் தலையை தட்டியபடி வித்யா தண்ணி கொடுக்க.

“நினைக்கறாங்களோ திட்டறாங்களோ”, என்று சபரி எடுத்துகொடுக்க.

“நீதான் என்னை திட்டுனியா”, என்பது போல கதிர் பார்க்க. அவளே தான் என்று சொல்லிகொள்வது போல லலிதா பரிதாபமாக விழிக்க.

இருவர் பார்வை பரிமாற்றத்தையும் பார்த்த வித்யா.

“அண்ணா அண்ணி முழிக்கறதை பார்த்தால் அண்ணி தான் நினைச்சு இருப்பாங்க போல. ”, என்று வித்யா போட்டுடைக்க.

“நினைச்சாங்களோ. திட்டுனாங்களோ”, என்று மறுபடியும் சபரி எடுத்துக்கொடுக்க.

லலிதா. “அச்சோ நான் இல்லை”, என்று பதட்டப்பட.  அங்கே சிரிப்பு கிளம்பியது.

“அண்ணி நான் பாவம். என்னை விட்டுங்களேன்”,  என்றாள் பரிதாபமாக லலிதா வித்யாவை நோக்கி சொல்லிவிட்டு. காப்பாற்றுங்களேன் என்பது போல கதிரை பார்க்க.  

கதிர் அவளையே ரசித்து பார்த்திருந்தான்.

அவன் ரசனையான பார்வை அவளுடைய எல்லா சஞ்சலங்களையும் மறக்க வைத்து ஒரு இனிமையான மயக்கத்தை கொடுத்தது.

Advertisement