Advertisement

அத்தியாயம் பதினான்கு:

அப்போதும் தேவி சமாதானமாகவில்லை. “அதெப்டி ஜாதகம் கொடுத்தாலே சம்மதிச்சு தானே கொடுக்கறோம்”,

“கொடுப்போம் தேவி. நாம கனவுல கூட நினைக்க முடியாத சம்மந்தம்”,  என்று பேசி பேசி அவரை கரைத்தார்.

“லலிதா ஒருகட்டத்தில் பொறுக்க முடியாமல் அவங்க கேட்டா நாம கொடுத்தே ஆகணுமாப்பா. நமக்கு இஷ்டம் இல்லைன்னு சொல்ல முடியாதா”.

“கல்யாண விஷயம் இப்படி அச்சானியமா பேசாதம்மா” என்று அதட்டல் போட்டவர் பின்பு தணிந்து. 

“எப்படி சொல்வம்மா”, என்றார் கந்தசாமி. “அவங்களை அண்டி பிழைக்கறவங்க நம்ம. நமக்கு இஷ்டமில்லைன்னு சொல்லிட்டு நாம அங்கயே வேலை பார்க்க முடியுமா. நீ படிச்சிருக்க. உனக்கு வேறு வேலை கிடைக்கும் தான். ஆனா எவ்வளவு நாள் நீ வேலை செய்ய முடியும்”,

“உன்னை விடு எனக்கு யார் வேலை கொடுப்பா. அப்படியே கொடுத்தாலும் இங்க விட்டு புதுசா என்னால எங்கயாவது போய் செய்ய முடியுமா சொல்லும்மா”,

தந்தை சொல்வது நியாயமான பேச்சுக்களே.

“நீ சின்ன பொண்ணு லலிதா இதுல எல்லாம் தலையிடாத. உனக்கு அப்புறம் பவித்ரா இருக்கா, அனிதா இருக்கா. வாழ்க்கை ரொம்ப பெரிய விஷயம். என்ன சேகரிச்சு வெச்சிருக்கேன் இந்த அப்பா உங்களுக்காக. ஒண்ணுமில்லை”.  

“அவங்க எவ்வளவு பெரிய குடும்பம்னு உனக்கு தெரியாதா. ரொம்ப குழப்பிகாத. எல்லாம் நல்லதே நடக்கும். நல்லதே நினை”, என்றவர் தேவிக்கு மனம் சஞ்சலமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் ஜாதகத்தை வாங்கி கொண்டு கிளம்பி விட்டார்.

அங்கே பாட்டியிடம் கொண்டுபோய் கொடுக்க. அவர் யாரிடமும் கொடுக்காமல் அன்று மாலை வரும் முன்னே பார்த்து வர அவரே கிளம்பினார் வித்யாவுடன்.

லலிதாவின் ஜாதகத்தை பார்த்து ஆஹா ஓஹோவென்று ஜோசியக்காரர் புகழ. அதிலேயே பாதிவீழ்ந்தார். 

பின்பு ஜாதக பொருத்தங்கள் பார்க்க அது நல்ல திருப்தியாக இருக்க. பாட்டி மீதியும் வீழ்ந்தார். அப்போதே சதாசிவத்திடம் பேசினார். அவர் அதிகம் யோசிக்கவில்லை.

அவர் அம்மா சொல்கிறார் என்றால் யோசிக்காமல் சொல்ல மாட்டார் என்று என்றரிந்தவர். அவரும் சரி என்று சொல்ல இந்த கல்யாண வேலை ஜரூராக ஆரம்பித்தது.

கதிருக்கு மிகவும் ஒரு திருப்தியான மனநிலையை கொடுத்தது. அவன் லலிதாவை பற்றி யோசிக்கவேயில்லை.   

லலிதாவிடம் யாரும் உனக்கு சம்மதமா என்று கேட்கவில்லை. கதிரும் லலிதாவிற்கு இதில் சம்மதம் இருக்குமா என்று நினைக்கவில்லை.

கேட்ககூடாது என்ற எண்ணமில்லை. லலிதாவின் வீட்டில் கேட்டிருப்பர் என்று நினைத்தனர். ஆனால் கதிர் ஒருவேளை அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டால் என்ன செய்வது என்றே கேட்கவில்லை. அடுத்த நாளில் இருந்து லலிதாவை வேலைக்கு வரவேண்டாம் என்றும் சொல்லிவிட்டனர்.

நிறைய நிறைய வேலைகள் நடந்தது. அந்த திருமண சேலை வேண்டாம் என்று வித்யா சொல்லிவிட்டதால் புது திருமண சேலை எடுத்தனர். ஒட்டியும் ஒட்டாமலும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் லலிதா இருந்தாள். லலிதாவை அழைத்து போய் தான் எடுத்தனர். ஆனால் கதிர் வரவில்லை.

சொல்ல போனாள் கதிருக்கு சற்று நெருடலாக இருந்தது. புதிதாக முளைத்த லலிதாவின் தைரியம் கதிருக்கு அந்த நெருடலை கொடுத்தது. ஒரு வேலை லலிதா இந்த திருமணத்திற்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டால். அதனால் திருமணம் வரை அவளை பார்ப்பதையே தவிர்த்தான்.

லலிதாவின் வீட்டினர் இந்த திடீர் திருமணத்தை தாங்க மாட்டனர் என்று தெரியும். பாட்டி கந்தசாமியையும் தேவியையும் அழைத்து தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறி திருமணத்திற்கு உரிய நகையையும் பணத்தையும் கொடுத்தார்.

தேவி தயங்கிய போது கூட. “சபையில இதெல்லாம் பார்ப்பாங்க. இதெல்லாம் யாருக்கும் தெரியனும்ன்ற அவசியமில்லை. நான் இதை பத்தி வித்யா, கதிர் கிட்ட கூட பேசிக்கலை. இதெல்லாம் என்னோட பணம். என் பேரனோட மனைவிக்கு கொடுக்கறேன், எடுத்துக்கங்க. உங்களை குறைச்சு சொல்லலை. நிலைமை தெரிஞ்சு தான் பொண்ணை எடுக்கிறோம். இருந்தாலும்  எங்களுக்கு சபை கௌரவம்னு ஒண்ணு இருக்கு. அதுக்கு எந்த குறையும் வராம எல்லாத்தையும் செஞ்சிருங்க”, என்றார்.

முதலில் தேவி தயங்கினாலும் பாட்டிமா சொல்வதும் ஒருவகையில் நியாயமாகவே பட்டது. ஏற்றுக்கொண்டனர்.

முன் நிச்சயித்த திருமணங்களில் நாட்கள் ஓடாதது போல தோன்றின. இந்த திருமணத்தில் நாட்கள் வேகமாக ஓடின. சபரியையும் சித்ராவையும் சென்னைக்கே சபரியின் தந்தை அழைத்து சென்று விட்டார்.

லலிதாவின் மறுப்பு குரல் யாருக்கும் கேட்கவில்லை. ஏனென்றால் அது ஓங்கி ஒலிக்கவில்லை. அவள் தந்தை எந்த காரணமும் கூறவேண்டாம் என்று ஒருமாதிரியாக மன்றாடி கேட்டுக்கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

 “இது என் வாழ்க்கையில் எனக்கு கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பு”, என்றார்.

“மீறி இந்த திருமணம் வேண்டாம் என்றால் அவன் மீது ஏதாவது குறை கூறு”, என்றார். ஏதாவது இருந்தால் தானே கூறுவாள்.

பணத்திமிர், அந்தஸ்து, அது. இது. என்ற ஏதோ ஒன்று அவனோடு கூட பிறந்தது. அவனே இறங்கி வந்து இந்த திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான். வேறு எதுவும் அவனிடம் சொல்வது போல குறை இல்லையே.

தன்னை அவன் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. என்னுடைய உணர்வுகளை பார்க்கவில்லை. என்னை பிடித்திருந்தும். பிடித்திருக்கிறது என்று ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இந்த ஒரு விஷயம் அவளால் தாங்க முடியவில்லை. இது ஒரு வகையான நிராகரிப்பு அல்லவா. 

இதெல்லாம் ஒரு காரணமாக சொல்ல முடியாதே. ஆனால் இது அவளுக்கு பெரிய காரணம். என்னை பிடிதிருந்தும் அதை ஒரு வார்த்தை கூட சொல்லமுடியாதவனை நான் ஏன் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணமே ஓங்கி இருந்தது. யாருக்காகவும் காத்திராமல் திருமண நாளும் வந்தது.

முன் தினம் நிச்சயம் மிகவும் ஆடம்பரமில்லாமல் எளிமையாக நடந்தது. அவளை ஆள் வைத்து அனுப்பிய பிறகு அன்று தான் கதிர் பார்த்தான். எளிமையான அலங்காரத்திலேயே லலிதா ஜொலித்தாள்.

கதிர் யாரும் பாராமல் லலிதாவை பார்ப்பதையே வேலையாக வைத்திருந்தான். தப்பி தவறி கூட லலிதா கதிரை நிமிர்ந்து பார்க்கவில்லை. அதையெல்லாம் உணரும் நிலையில் கதிர் இல்லை.

இந்த திருமணம் அவன் முகத்தில் நிறைய திருப்தியை கொடுத்திருந்தது. அந்த திருப்தி பாட்டியின் முகத்திலும் வித்யாவின் முகத்திலும் நிறைய சந்தோஷத்தை கொடுத்திருந்தது.

ராகேஷும் அம்பிகாவும் லலிதாவிடம் வந்து, “அத்தை, அத்தை”, என்று சும்மா, சும்மா, எதையாவது பேசிக்கொண்டு இருந்தனர்.   அவர்களின் விளையாட்டு தோழியே அவர்களின் அத்தையாக வருவதில் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷமே.

திருமண வேலைகள் இருந்ததால் அவர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை வித்யா பவித்ராவிடமும் அனிதாவிடமும் கொடுத்திருந்தாள். அவர்கள் தனியாக தனியாக ஒதுங்கி நிற்பதை பார்த்தே அவர்களுக்கு அந்த வேலை கொடுத்தாள்.

அதன்பிறகு தான் அவர்களின் அக்காவின் திருமணத்தில் அவர்கள் சகஜமாக அங்கும் இங்கும் உலவ ஆரம்பித்தனர். தேவிக்கு அதனால் வித்யாவை மிகவும் பிடித்து போனது. அவள் எல்லா விஷயத்திற்கும் தங்களை இழுத்து கேட்டு,கேட்டு செய்தது அவருக்கு இந்த திருமணத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச சஞ்சலங்களையும் மறக்க செய்தது.

கதிரை நேரில் பார்த்ததும் அவருக்கு பயங்கர திருப்தி. அவன் கம்பீரத்தை பார்த்தவர் தங்களின் வசதி வாய்ப்புக்கு இப்படி ஒரு மாப்பிள்ளை தாங்கள் எவ்வளவு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது என்று அறிந்தே இருந்தார்.               

நல்ல அணிமணிகளில், பட்டுடுத்தி லலிதா பார்ப்பதற்கே மிக மிக அழகாக இருந்தாள். ஆள் பாதி ஆடை பாதி என்ற கூற்று அவளுக்கு நன்கு பொருந்தியது. நல்ல உடைகளும் மணப்பெண் அலங்காரமும் அவளை பேரழகியாக காட்டியது.

“ஏன் இப்படி வசதியில்லாத இடத்தில் பெண் எடுக்கிறார்கள்”, என்ற உறவுகளின் முணுமுணுப்பு லலிதாவை மணப்பெண் அலங்காரத்தில் பார்த்தும் அப்படியே அடங்கி விட்டது. 

திருமணத்திற்கு வந்திருந்த சித்ராவும் சபரியும் அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டது இது தான். சித்ரா சபரியிடம், “நான் அன்னைக்கே சொன்னேன் இல்லை. இந்த பொண்ணு உங்க கதிர் மாமாவுக்கு ரொம்ப முக்கியம் போல. அதனால தான் நம்மளை கண்டுக்காம அவளை அந்த திட்டு திட்டு திட்டியிருக்கார். விடுங்க எல்லாம் நல்லதுக்கே”, என்றாள்.

எல்லாரும் லலிதாவை பார்த்து அசந்ததை விட கதிர் லலிதாவை பார்த்து அசந்தது தான் அதிகம். மற்றவர் முன் முகம் மாறாமல் காக்க மிகவும் சிரமப்பட்டான். அவன் கனவில் வந்தது போலவே இருந்தாள். அவளையே கண் எடுக்காமல் பார்க்க வேண்டும் என்று எழுந்த உந்துதலை அடக்க மிகுந்த பிரயத்தனப்பட்டான்.  திருமண சடங்குகள்    ஆரம்பிக்க லலிதா கதிரின் பக்கத்தில் அமர்த்தி வைக்கபட்டாள்.

அலைபாய்ந்தது லலிதாவின் மனது. இவ்வவளவு நேரம் கூட ஒன்றும் தெரியவில்லை. இப்போது அவள் மனது அவளை சாடத்துவங்கியது. “நடக்குதோ இல்லையோ நீ உன் எதிர்ப்பை இன்னும் அதிகமாக இந்த திருமணத்திற்கு காட்டியிருக்க வேண்டும் இல்லையா”.

“இப்போது பார் அவன் தங்கை சொன்னபடி அவனுக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உன்னை காதலிக்கிறான். என்று யாருக்கும்  தெரியாமலேயே இந்த திருமணத்தை நடத்திவிட்டார்கள்”.

லலிதாவிற்கு கண்ணை கரித்தது. மனதின் எரிச்சலினாலும் எதிரே இருந்த ஹோம குண்ட புகையின் எரிச்சலினாலும்.  இவள் மனம் யோசனையில் மிதந்து கொண்டிருந்தாலும் அய்யர் சொன்னதை கைகள் இயந்தரகதியில் செய்தது. 

இதற்கு எதிர் மாறான மனநிலையில் இருந்தான் கதிர் மிகுந்த சந்தோஷமாக இருந்தான். தாலி கட்டும் தருணமும் வர. முதல் இரண்டு முடிச்சை கதிர் போட. மூன்றாவது முடிச்சை வித்யா போட்டாள்.

கதிருக்கு இனிதே லலிதா மனைவியாக, லலிதாவிற்கு இஷ்டமேயில்லாமல் கதிர் கணவன் ஆனான். எப்படி இருந்தாலும் எந்த மனநிலையில் இருந்தாலும் இது இனி அழிக்க முடியாத பந்தம் அல்லவா. திருமணம் முடிந்தது.

அதன் பிறகு நிறைய திருமண சடங்குகள்.  எதிலும் ஆர்வமாக லலிதா பங்கேற்கவில்லை என்பதை கதிர் உணர ஆரம்பித்தான். மோதிரம் போட்டு எடுக்கும் விளையாட்டில் லலிதா கையை சுழற்றவேயில்லை குடதிற்க்குள். கதிரும் அவளுக்கு விட்டு கொடுத்து எவ்வளவு நேரம் மோதிரத்தை எடுக்காமல் இருந்தான். எல்லாரும் கிண்டல் செய்ய ஆரம்பிக்கவும் தான் வேறு வழியில்லாமல் எடுத்தான்.   

“எதற்காக இப்படி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு இருக்கிறாள் தன்னை பிடிக்கவில்லையோ” என்று தோன்ற ஆரம்பித்தது. கூடவே “தன்னை பிடிக்காமல் வேறு யாரை பிடிக்கும். தான் அவளுக்கு குறைந்து விட்டோமா”, என்று தோன்றி சற்று எரிச்சல் வர ஆரம்பித்தது.  திருமண வைபவங்கள் முடிந்து வீடு வந்து சேர்ந்த போது, “ஹப்பா”, என்று இருந்தது.

மண்டபத்தில் பெற்றோரை பிரிந்து வந்தபோது லலிதா அழுத அழுகை யாரையும் அசைக்கும். எதற்கு அப்படி ஒரு அழுகை வந்தது என்று அவளுக்கே புரியவில்லை. அப்படி தேம்பி தேம்பி அழுதாள்.

அவள் அழுததை பார்த்து தேவியும் அழ. அவர்கள் இருவரும் அழுவதை பார்த்து பவித்ராவும் அனிதாவும் அழ. கடைசியாக இதை பார்த்துக்கொண்டிருந்த பாட்டி ஒரு அதட்டல் போடவும் தான் அழுகை சற்று மட்டுப்பட்டது. அப்போதும் நிற்கவில்லை.

“ஏன் இப்படி அழுகிறாள். தன் பெற்றோரை விட்டு வருவதற்க்கு அழுகிறாளா. இல்லை என்னோடு வருவதற்க்கு அழுகிறாளா”, என்றே கதிருக்கு தோன்ற ஆரம்பித்தது. எரிச்சல் இன்னும் அதிகமாக  ஆரம்பித்தது. “இப்போது என்னை திருமணம் செய்து கொண்டதில் என்ன குறைந்து விட்டாள். இப்படி சீன் போட்டுக்கொண்டு இருக்கிறாள்”, என்று தோன்றியது.

அவனின் முக மாற்றங்களை கவனித்து கொண்டிருந்த வித்யா. “பெத்தவங்களை விட்டு புது இடம் வர்றா இல்லையா. அதான் இந்த அழுகை”, என்றாள்.

“என்ன புது இடம். இவ்வளவு நாள் இங்க தானே இருந்தாள்”, என்று கதிர் சொல்ல. “அதுவும் இதுவும் ஒண்ணா அண்ணா. பேசாம இரு”, என்று அவனை அதட்டினாள்.

கதிருக்கு இருந்தாலும் இது சற்று ஓவராக தான் தோன்றியது. “திருமண சடங்குகளிலும் ஈடுபாட்டோடு இல்லை பெரிய இவளா இவ”, என்று தோன்ற துவங்கியது.

புது இடத்திற்கு வரும் பெண்களுக்கு எத்தனை பேர் ஆதரவு இருந்தாலும் கணவன் ஆதரவு மாதிரி வராது. அதனால் தான் கோபப்படக் கூடாது  என்று அவனுக்கு தெரியாமல் போனது.

மண்டபத்தில் இருந்து வரும் போதே மாலை நான்கு மணியை  நெருங்கிக் கொண்டு இருந்தது. பழகிய இடம் தான் ஆனாலும் லலிதாவிற்கு புது இடமாக தோன்ற துவங்கியது.

மிகவும் அயர்ச்சியாக இருந்தது. அது மற்றவர்களுக்கும் தெரிந்தது. பார்த்த வித்யா அவளை கதிரின் அறைக்கு அழைத்துப்போய். “கொஞ்ச நேரம் தூங்கு லலிதா”, என்று சொல்லிவிட்டு போனாள்.

அவளுக்கு படுக்க தயக்கமாக இருந்தது. கதிர் உள்ளே வந்த போது பார்த்தால் உட்கார்ந்த நிலையிலேயே இருந்தாள்.

“டயர்டா இருந்தா தூங்கு லலிதா”, என்றான். அவன் இன்னும் பேச்சை வளர்த்தால் என்ன செய்வது என்று பட்டென்று படுத்து கொண்டாள்.   

படுத்தவளுக்கு உறக்கமும் வரவில்லை. கண்களை மூடி படுத்தபடி இருந்தாள். அறைக்குள் அவன் நடமாடும் சத்தம் கேட்டது. கண்களை மூடியபடி திறக்காமல்  படுத்திருந்தாள்.

 சிறிது நேரத்தில் சத்தம் அடங்கியது. மெதுவாக கண்களை திறக்க அவன் உடை மாற்ற முற்படுவது பார்த்து இன்னும் இறுக்கமாக கண்களை மூடிக்கொண்டாள்.

கதிர் உடைமாற்றி அவள் முன் வந்து நின்று ஆசைதீர கனாவில் வந்த அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தது அவளுக்கு தெரியாது. அவள் கண்களின் அலைபுறுதலை வைத்தும் அவள் விடும் மூச்சுக்களை வைத்தும் அவள் உறங்கவில்லை என்று கண்டுகொண்டான்.

“லலிதா”, என்று அழைக்க வேறு செய்தான். லலிதா கண்களை விழிக்கவேயில்லை. சிறிது நேரம் நின்று பார்த்தவன் பின்பு பொறுமையின்றி சென்று விட்டான்.      

லலிதாவிற்கு மனம் எதையெதையோ எண்ணிக்கொண்டு தான் இருந்ததே தவிர உறக்கம் என்பது வரவில்லை. அப்படியே கண்களை திறக்காமல் எத்தனை நேரங்களோ விழித்தே இருந்தாள். மறுபடியும் வித்யா வந்து அழைத்த போது தான் கண்களை திறந்தாள்.

வித்யா அவளை குளிக்க சொல்லி புது உடைகளை கொடுத்து சென்றாள். வித்யாவை பார்த்தால் லலிதாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. நிற்காமல் பம்பரமாக சுழன்றாள்.

வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களையும் கவனித்து. தன்னையும் கவனித்து. அத்தனையும் சிறு முக சுனக்கமோ களைப்போ இன்றி கவனித்தாள். மனதின் உற்சாகம் அத்தனையையும் செய்ய வைக்கும் என்று லலிதாவிற்கு புரியவில்லை.

அவளின் மனதின் உற்சாகமின்மை அவளுக்கு சோர்வை கொடுத்தது. வித்யா சொன்னதை செய்தவள் தயாராகி அமர்ந்தாள். பின்பு கதிர் வந்து தயாராக இருவரையும் பக்கத்தில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு வித்யா அனுப்பி வைத்தாள். 

நடந்து போகும் தூரம் என்பதால் நடந்து போக. அவனோடு நடந்து போவது லலிதாவுக்கும் புது அனுபவம். அவளோடு நடந்து போவது கதிருக்கும் புது அனுபவம். அவனோடு நடப்பதில் கால்கள் பின்னியது. பட்டு புடவை வேறு தடுக்கி சற்று பதட்டத்தை கொடுத்தது.

அவள் பதட்டத்தை கதிர் கண்டுக்கொள்ள கூடாதே என்று நினைப்பதே அதிக பதட்டத்தை கொடுக்க ஒரு இடத்தில் தடுமாறி விழப்போனாள். கதிர் தான் கைபிடித்து நிறுத்தினான். “பார்த்து வா லலிதா”, என்றான். 

பிடித்தவன் கைகளை மறுபடியும் விடவில்லை. அவன் கையை பிடித்து நடப்பது ஒரு மாதிரியாக இருக்க கையை இழுக்க முயற்சி செய்தாள். “பேசாம வா”, என்று ஒரு அதட்டல் போட்டு பிடித்துக்கொண்டே நடந்தான்.  சன்னதியில் தெய்வத்தை தொழ தான் கையை விட்டான். 

தெய்வத்தின் சன்னதியில் நின்றபோது கதிர் கண்மூடி வணங்க. லலிதாவிற்கு மறுபடியும் அழுகை வந்தது.

கண்களில் நீர் வர கதிர் பார்த்துவிட்டான். “என்ன ஆயிடுச்சுன்னு இப்படி அழுதுட்டே இருக்க”, என்றான்.  பிறகு பூசாரி வரவும். “பூசாரி வருகிறார்”, என்று எச்சரிக்க. லலிதா கண்களை அவசரமாக் துடைத்தாள். பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு கோபம் கோபமாக வந்தது.

“போகலாமா”, என்றவன் வேறு ஒன்றும் அதன் பிறகு பேசவில்லை.

அவர்கள் கோவிலில் இருந்து வந்த போதே லலிதாவின் வீட்டில் இருந்து சீர் கொண்டு வந்து இருந்தனர். வித்யாவிற்கே ஆச்சர்யமாக இருந்தது. எப்படி இவர்களால் இவ்வளவு நிறக்க செய்ய முடியும் என்று யோசிக்க.

சீர்வகைகளை பார்த்து கதிருக்குமே ஆச்சர்யம் தான். இத்தனை நகைகள் அவர்களுக்கு வாய்பேயில்லை என்று தான் தோன்றியது.

வித்யா கதிரை பார்க்க. கதிர் வித்யாவை பார்க்க. இருவருக்குமே ஒன்றும் தெரியவில்லை. இருவரும் சீர்வரிசையை பெரிதாக நினைக்கவில்லை. அதனால் அதைப்பற்றி ஒன்றும் யோசிக்கவில்லை. ஆனால் பாட்டி அப்படியா ? 

அருகில் நின்றுகொண்டிருந்த லலிதாவிற்கு இவர்களைன் பார்வை பரிமாற்றம் புரிய. கதிர் இப்போது லலிதாவை பார்க்க அவள் பாட்டியை கண்காட்டினாள். அப்போது தான் அது பாட்டியின் வேலை என்று வித்யாவிற்கும் கதிருக்கும் புரிந்தது.

“யார் கேட்டாலும் கடன் வாங்கி செய்தோம்”, என்று தான் சொல்ல வேண்டும் என்று பாட்டி கந்தசாமியிடமும் தேவியிடமும் கூறியிருந்தார்.

உறவுகளின் எப்படி இவ்வளவு சீர் என்ற முணுமுணுப்பிற்கு. “பெரிய இடம், கடனை உடனை வாங்கி செய்திருக்காங்கப்பா”, என்ற செய்தியே பரப்பப்பட்டது.  சீர்வரிசையை பொருத்தவரையில் எல்லோருக்கும் திருப்தி.     

இருவரும் ஒருங்கே அமர வைத்து சாப்பிட வைக்கப்பட. சாப்பிடும் போது மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஒரு புன்னகை. தலையசைப்பு என்றே பதில் கொடுத்தான்.

அவனுக்கு கோவிலில் நடந்த விஷயத்திற்கு கோபம் வந்துவிட்டது என்று லலிதாவிற்கு புரிந்தது.  கொஞ்சம் பயமாக இருந்தது. அந்த பயத்தில் சாப்பாடே இறங்கவில்லை. அவள் சரியாக சாப்பிடவில்லை என்பதை கதிரும் கவனித்து கொண்டு தான் இருந்தான்.

இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருக்க. கணவனுக்கும் மனைவிக்கும் எதிர்பார்த்த தனிமை வந்தது. தனித்து விடப்பட்டனர். அந்த நிமிடத்தில் எந்த மனநிலையில் இருந்தனர் என்று கேட்டால் இருவருமே அறியார்.

கதிர் ஏதாவது கேட்பான் என்று லலிதா எதிர்பார்த்திருக்க. அவள் ஏதாவது சொல்வாள் என்று கதிர் எதிர்பார்த்தான்.

இருவருமே எதுவும் பேசவில்லை. அவன் அமர்ந்திருக்க அவள் நின்றே இருந்தாள். அங்கே நிறைய பழங்கள் திண்பண்டங்கள் இருந்தன. அவளுடைய முகத்தை பார்த்த கதிருக்கு கோபத்தை இழுத்து வைக்க முடியவில்லை.

“சரியா சாப்பிடலை போல ஏதாவது சாப்பிடறியா”, என்றான் கதிர்.

“இல்லை”, என்பதுபோல தலையாட்டினாள்.

அவளையே பார்த்தான். அந்த இரவுக்கென விஷேஷ அலங்காரத்தில் லலிதா ஜொலித்தாள். அவன் கனவு முகம் அவன் அருகில். ஆனால் திரும்பி பார்க்க மறுக்கிறது.

ஏன் என்று புரியவில்லை. அவளை பார்த்தாலே சோர்ந்து தெரிந்தாள். இந்த நிலையில் வாழ்க்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு போக கதிருக்கு விருப்பம் இல்லை.

“தூங்கறியா”, என்றான். “சரி”, என்பது போல தலையசைக்க. “தூங்கு”, என்று அவன் எழுந்து இடம் விட்டான்.

“நீங்க”, என்றாள்.

“நான் அப்புறம் தூங்கறேன்”, என்றவன் அங்கே இருந்த சேரில் அமர்ந்து ஏதோ பத்திரிக்கையை எடுத்துக் கொண்டான். அவள் அமர்ந்து அவனுக்கு முதுகு காட்டி படுத்துவிட .அப்போதுதான் அங்கே இருந்த பாலை பார்த்தான்.

“லலிதா”, என்று கூப்பிட அரக்க பரக்க எழுந்தாள்.

“ஈசி, ஈசி”, என்றான். “நம்ம இனிமே சேர்ந்து தான் இருக்க போறோம். இப்படி என்னை பார்த்து பதட்டப்படறதை முதலில நிறுத்து”. என்றவன்.

“என்னோட விஷயங்கள் எப்பவும் யாருக்கும் தெரியறதை நான் விரும்பமாட்டேன்”, என்றான்.

“அதுதான் எனக்கு தெரியுமே”, என்று மனதிற்குள்ளேயே நினைத்தாள். வெளியில் சொல்லவில்லை.

“அதனால இப்படி பதட்டப்படறது. மத்தவங்க முன்னாடி உன்னோட எமோஷன்ஸ் காட்றது. முக்கியமா அழறது. இது எனக்கு பிடிக்கவே பிடிக்காது”, என்றான்.

“உனக்கு பிடிச்சா எனக்கென்ன? பிடிக்காட்டி எனக்கென்ன? பிடிச்சதெல்லாம் இவன் என்னவோ சொல்ற மாதிரி.”, என்று மனதிற்குள் அவனை திட்ட.

அதையெல்லாம் அறியாத அவன் சீரியசாக அவளிடம் பேசிக்கொண்டிருந்தான். “மத்தவங்க முன்னாடி இப்படி எல்லாம் நீ நடக்க கூடாது”, என்று.

அவன் சொல்வதையெல்லாம் சீரியசாக கேட்கும் மாணவி போல லலிதா பார்க்க. அந்த பார்வை கதிரை என்னவோ செய்தது. அவசரமாக “பால் குடிச்சிட்டு தூங்கு”, என்றான்.

அப்போது தான் அம்மா சொன்னது எல்லாம் ஞாபகத்திற்கு வர. “என்னை உங்க கால்ல விழுந்து கும்பிடச் சொன்னாங்க”, என்று லலிதா அவசரமாக எழுந்தாள்.

“இப்போதானே என்கிட்ட பதட்டப்பட வேண்டாம்னு சொன்னேன்”, என்று அதட்டினான்.

எழுந்து நின்றவள். “என்னடா இது இவன் மாறி மாறி பேசிட்டே இருக்கான்.  இப்போ என்ன செய்யனும் நான். கும்பிடனுமா வேண்டாமா”, என்பது போல பார்க்க.

உன் இஷ்டம் என்பது போல அவனும் பார்த்திருந்தான். இடத்தை விட்டு எழுந்திரிக்கவில்லை, அவள் என்ன தான் செய்கிறாள் பார்க்கலாம் என்று .

அவனை முறைத்து பார்க்க மனம் விழைந்தது. அடித்து கிடித்து விட்டான் என்றாள். பக்கத்தில் சென்றவள். “எழுந்துக்கறீங்களா”, என்றாள்.

அவள் காலில் விழத்தான் கேட்கிறாள் என்றுணர்ந்தவன். “தேவையில்லை வேண்டாம்”, என்றான் சின்ன சிரிப்போடு.

அவன் சிரிப்பை பார்த்து கோபமாக வந்தது லலிதாவிற்கு. “இப்படி சிரிச்சா நான் மயங்கிடுவனா”, என்று மனதிற்குள்ளேயே நினைத்தவள் “எதுக்கு என்னை கூப்பிடீங்க”, என்றாள்.

“பால்”, என்றான். “என்ன?”, என்று புரியாமல் பார்த்தவளிடம். “பால் சாப்பிடு வேஸ்ட் ஆகிடும்”, என்றான்.

“உங்களுக்கு”,

“குடிச்சிட்டு குடு”,

கவனமாக முகத்தை அண்ணாந்து பாலை வாய் படாமல் தூக்கி குடித்தாள், பார்த்தவனுக்கு சிரிப்பு வந்தது.

அவள் பக்கத்தில் வந்தவன். “ரொம்ப தூக்கி குடிக்காத லலிதா பட்டு புடவைல கொட்டிடபோகுது”, என்று சொல்ல. திடீரென்று பக்கத்தில் குரல் கேட்டவளுக்கு புரை ஏறியது.

அவள் பால் புடவையில் கொட்டிவிடாமல் இருக்க அவசரமாக அதை வாங்கியவன் ஒரு டவலை எடுத்து அவள் வாயருகில் வைத்தான். அதற்குள் சமாளித்திருந்தாள்.

அவ்வளவு அருகில் அவனை பார்க்கவும் என்னவோ போல இருந்தது. அவனை பார்த்து முறைத்தவள். “இப்போ உங்களால தான் கொட்டியிருப்பேன்”, என்றாள்.

இவனுக்கு சிரிப்பு வந்தது. “சரி என்னால தான்”, என்று விட்டு கொடுத்தவன். “குடிச்சிட்டு கொடு”, என்றான்.

“எனக்கு போதும். நீங்க குடிங்க”, என்று அவனிடமே திருப்பினாள்.

“எனக்கு உன்னை மாதிரி குடிக்க தெரியாதே. வாய் வெச்சு தான் குடிப்பேன் பரவாயில்லையா”, என்றான் வேண்டுமென்றே.

“என்னடா இது”, என்று மனதிற்குள் என்னடா போட்டவள். “மறுபடியும் நான் என்ன குடிக்கவா போகிறேன்”, என்று நினைத்தவள் “குடிங்களேன்”, என்றாள்.

கொஞ்சம் மட்டும் குடித்தவன். “எனக்கு போதும் நீ குடிச்சிடு”, என்று திருப்பி கொடுத்தான்.

“என்ன? நானா! எனக்கு வேண்டாம்”, என்றாள் அவசரமாக. 

“ஏன் நான் குடிச்சா குடிக்க மாட்டியா”,

இதற்கு என்ன பதில் சொல்வாள். “ஆமாம்”, என்று சொல்ல வாய் விழைந்தாலும் அது மாற்றி. “இல்லை”. என்றது.

அவள் அவனிடம் இருந்து காலையில் இருந்து தள்ளி தள்ளி போகிறாள் என்று வேண்டுமென்றே செய்தான்.

“டிரெஸ்ல கொட்டிக்க போற. இப்படியே வா தூங்க போற. டிரெஸ் மாத்திட்டு அப்புறம் குடிச்சிட்டு தூங்கு”, என்று மறுபடியும் அவன் போய் உட்கார்ந்து பத்திரிக்கையை எடுத்துக்கொள்ள.

எப்படி மாற்றுவாள் அவன் அமர்ந்து இருக்கும்போது. அவளுக்கு தேவையானவைகளை அங்கே ஒரு கவரில் வைக்க பட்டிருந்தது தான். ஆனால் அவள் முன்னிலையில் எப்படி மாற்றுவாள்.

உள்ளே பாத்ரூம் சென்று பார்க்க அது ஈரமாக இருந்தது. இப்படியே தூங்குவது என்று முடிவு செய்து வந்தவள் மளமளவென்று பாலை குடித்தாள். இந்த முறையும் தூக்கி தான் ஆனால் கவனமாக.

பின்பு. “நான் இப்படியே தூங்கறேன்”, என்று கூறி படுக்க.

“லலிதா”, என்று ஒரு அதட்டல் போட்டான் கதிர். “இது நம்ம ரூம் ஈசியா இரு. இவ்வளவு பெரிய பட்டு புடவையை கட்டிட்டு, இவ்வளவு நகையை போட்டுட்டு, எப்படி தூங்குவ மாத்திட்டு தூங்கு” என.

“சும்மா மாத்து மாத்துன்னா எப்படி மாத்துவேன்”, என்றாள்.

“ஏன் வேற டிரெஸ் இல்லையா”,

“அதெல்லாம் இருக்கு. கூடவே நீங்களும் இருக்கீங்களே”, என்றாள் தைரியத்தை எல்லாம் திரட்டி.

அவன் அதுவரை அதை கவனிக்கவில்லை. “வெளியவும் போகமுடியாது”, என்று அவனுகுள்ளேயே பேசிக்கொண்டவன். “நான் பாத்ரூம்ல இருக்கேன். நீ மாத்திட்டு கூப்பிடு”, என்று சொல்லி செல்ல.

“அச்சோ”, என்று இருந்தது லலிதாவிற்கு.

இவள் பெரிய இவள் போல. “இல்லை நீங்க திரும்பி உட்கார்ந்துக்கங்க நான் சீக்கிரமா மாத்திக்கறேன்”, என்றாள்.

“அவ்வளவு நல்ல பையன் இல்லை நான். பரவாயில்லையா”, என்றான்.

இதற்கு என்ன சொல்லுவாள் லலிதா. அமைதியாக நிற்க. “மாத்து”, என்று சொல்லி பாத்ரூமில் புகுந்தான்.

அவசரமாக உடை மாற்றி அவனை அழைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.

கதிருக்கு நிறைய எதிர்பார்ப்புகள் தான். ஆனால் எல்லாம் இயல்பாக நடக்க வேண்டும் என்று விரும்பினான். லலிதா வேறு அழுகை திலகமாக இருந்தாள்.

தன்னை பார்த்து பயமா இல்லை வேறு ஏதாவது பிரச்சனையா தெரியவில்லை. அதனால் அவனும் மற்றொரு புறத்தில் அமைதியாக தன்னை முயன்று கட்டுபடுத்தி படுத்துக்கொண்டான்.

Advertisement