Advertisement

அத்தியாயம் பதிமூன்று:

பாட்டி அதிர்ந்ததை பார்த்ததுமே எப்படி இவரை கதிர் லலிதா திருமணத்திற்கு ஒத்துக்க வைப்பது என்று வித்யாவிற்கு நிறைய கவலையாகி போனது.

“ஏன் பாட்டி அவளுக்கு என்ன குறை?. கொஞ்சம் வசதி கம்மி அது அவளோட எல்லா விஷயதிளையும் தெரியறதால பார்க்க சுமாரா இருக்கா. நல்ல உடைகள் போட்டா இன்னும் ரொம்ப நல்லா இருப்பா பாட்டி”,

“ஏண்டிம்மா அவங்களுக்கு கொஞ்சம் வசதி கம்மி இல்லை. ரொம்ப கம்மின்னு கூட சொல்ல முடியாது. வசதியே இல்லை அது தான் நிஜம்”.

“இப்போ அவ கொண்டு வந்து நமக்கு என்ன நிறைய போகுது பாட்டி”

“அவ கொண்டு வந்து என்ன நிறைய போகுது இல்லை பேச்சு. நம்ம அந்தஸ்து கெளரவம் என்ன ஆகறது.  வித்யா என் பேரனுக்கு என்ன குறை. ஏன் அந்த வீட்ல பெண் எடுக்கணும். அப்படி என்ன அவசியம் வந்தது. நமக்கு ஏத்த மாதிரி வேற பொண்ணே கிடைக்காதா”.  

இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வாள் வித்யா. என்ன சொன்னாலும் பாட்டி ஒத்துக்கொள்ள மாட்டார். ஒரு பதிலை தவிர. சொல்லிதான் ஆகவேண்டும்.

“அந்தஸ்து, ஆஸ்தி அது இதுன்னு பேசி தான் பாட்டி இந்தளவுக்கு நிலைமையை கொண்டு வந்து விட்டிருக்க.”,

“நான் என்னடி கொண்டு வந்து விட்டேன். நடந்ததுக்கு நானா பொறுப்பு. இந்த சம்மந்தமே நீ கொண்டு வந்தது தான்”,. 

“ஐயோ பாட்டி நான் அதை சொல்லலை. உங்க பேரனை பத்தி பேசறேன்”.

“என் பேரனுக்கு என்னடி”,

“உன் பேரன் அவன் மனசுல இருக்கறதை கூட அதனால தான் சொல்ல மாட்டேங்கறான்”.

“என்ன இருக்கு அவன் மனசுல”,

“கேட்டு நீ என்ன பண்ண போற. நிறைவேத்த போறயா”, என்று அவரை உசுப்பேத்தினாள்.

“ஏன் என் பேரனுக்கு நான் என்ன செய்ய மாட்டேன்”.

“சொல்றது பெருசில்ல பாட்டி செய்யனும்”.

“செய்வேன் என் பேரனுக்காக எதுவும் செய்வேன்”. 

“அப்போ அந்த லலிதா பொண்ணை கல்யாணம் பண்ணி வை. அந்த பொண்ணை அவனுக்கு ரொம்ப இஷ்டம். ஆனா சொல்ல மாட்டேங்கறான். உனக்கு பிடிச்சிருக்கற அதே அந்தஸ்து பேதம் தான் அவனையும் பிடிச்சிருக்கு. அவனுக்கு பிடிச்சிருக்குன்றதை கூட சொல்லாம ரெண்டு கல்யாணத்துக்கு சம்மதிச்சு இருக்கான்”.

“அவனுக்கு இந்த பொண்ணுன்னு தான் இருக்கோ என்னவோ. வேற எல்லாம் எத்தனை பார்த்தாலும் அது நிக்காதோ என்னவோ”.

“இங்க பாரு இப்பவும் அவனுக்கு பிடிச்சிருக்குன்றதை வாய் தொறந்து சொல்லலை. நானா கண்டுபிடிச்சு கேட்டேன். அப்போவும் அந்தஸ்தை பார்த்து இது நமக்கு சரிவராதுன்னு சொல்றான்”.

“நான் தான் நீ அந்த பொண்ணை விரும்புனதை யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி வைக்கறேன்னு சொல்றேன். என் பேச்சுல உனக்கு நம்பிக்கை இல்லைன்னா நீயே ரெண்டு பேரையும் கவனி. ஏதாவது தெரியுதான்னு பாரு. அப்படி உனக்கு எதுவும் கண்டு பிடிக்க முடியலைன்னா அப்புறம் அண்ணன் கிட்ட கேளு”, என்றாள்.

ஒன்றும் பேசாமல் பாட்டி அமைதியாக இருக்கவும். செய்வார் என்று அவளுக்கு தெரியும். ”சரி தூங்கு பாட்டி”, என்று சொல்லி வெளியே புது மணமக்களை கவனிக்க சென்றாள்.

அவர்களின் பிரச்சனையே ஓடிக்கொண்டு இருந்தாலும் அண்ணனை கவனிக்க தவறவில்லை. வீட்டில் மணமக்களை கொண்டு விருந்து சமைத்து இருந்ததினால் லலிதாவை சாப்பிட அழைத்தாள்.

“லலிதா இன்னைக்கு அவங்களுக்கு கல்யாணம்ன்றதால விருந்து சமைச்சு இருக்கோம். நீயும் இங்கேயே சாப்பிடு லலிதா”

“இல்லை அக்கா. நான் கொண்டுவந்திருக்கேன். வேண்டாம்”.

“ப்ச்,. நீ எதுவும் இங்க இருந்து சாப்பிட மாட்டேன்னு எனக்கு தெரியும். இன்னைக்கு சாப்பிடலாம் தப்பில்லை. கல்யாண சாப்பாடு சாப்பிடனும்”, என்று வற்புறுத்தினாள்.

“எனக்கு பசியே இல்லை அக்கா, என்னால கண்டிப்பா எதுவும் சாப்பிட முடியாது. ஏற்கனவே சர் எனக்கு வயிறு மனசு எல்லாம் நிறைய கொடுத்திட்டார்”, என்றாள்.

இதற்கு மேல் தான் அவளை வற்புறுத்துவதை விட கதிர் சொன்னால் தான் சரிவரும் என்று உணர்ந்தவள்.

உள்ளே போய். “அண்ணா எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா”, என்றாள்.

“என்ன?”, என்பது போல பார்த்தவனிடம். “உன் பொண்டாட்டிய போய் சாப்பிட கூப்பிடு”, என்றாள்.

ஒரு நிமிஷம் புரியாத முக பாவம். உடனடியாக புரிந்து மலர்ச்சியை காட்ட. நடக்குமா என்பது போல பார்த்தான். அந்த வார்த்தை அவனுக்கு பிடித்தது. நீண்ட கால போராட்டம் அந்த வார்த்தையால் ஒரு முடிவுக்கு வந்தது போல உணர்ந்தான். 

“நான் நடத்தி கொடுக்கறேன் அண்ணா”, என்றாள்.

“ரொம்ப கோவமா இருக்கா. சாப்பிட கூப்பிட்டா ஏற்கனவே வயறு நிறைய நீ கொடுத்துட்டேன்னு சொல்றா”,

“சொல்லுவேன் வந்தா பாரு. வரலைன்னா விட்டடுடு. காலையில இருந்து என்கிட்ட ரொம்ப வாய் பேசறா. இப்படி எல்லாம் பேசினதே இல்லை”, என்றான் மனம் திறந்து.

“இவ்வளவு நாள் முதலாளின்ற பந்தாவோடவே நடந்துகிட்ட. அவளை திட்டியிருக்க. பத்தாத்துக்கு அடிச்சிருக்க, அவ்வளவு சீக்கிரம் சரியாப்போகுமா. என்னோட கணிப்பு நிறைய சிரமப்படவேண்டியிருக்கும். அவ்வளவு சீக்கிரம் நடக்காது”, என்றாள்.

அவளை பார்த்து ஒரு புன்னகை புரிந்து போனான். அந்த பொண்டாட்டி என்ற வார்த்தை கதிருக்கு இனித்தது.   

கதிருக்கு சித்ரா சபரியின் திருமணம் நிறைய தைரியத்தை கொடுத்திருந்தது. புது உற்சாகத்தை கொடுத்திருந்தது.

சபரியையும் சித்ராவையும் பார்த்த பிறகு அவர்களுக்கு இருக்கும் தைரியம் ஏன் தனக்கில்லாமல் போனது என்று தோன்ற துவங்கியது.  சபரி இன்னும் வாழ்கையில் எந்த வகையிலும் செட்டில் ஆகவில்லை. அவனுக்கு இருக்கும் தைரியம் தனக்கு எங்கே போனது என்று தனக்குள்ளேயே பலமுறை கேட்டுக்கொண்டான்.

திடீரென்று பிறந்த இந்த உத்வேகம் லலிதா தான் உன் மனைவி என்று அவனுக்கு அவனே சொன்னது. என்ன ஆனாலும் பார்த்துவிடலாம் என்று தோன்ற துவங்கியது. மனம் உல்லாசத்தில் பறந்தது. உற்சாகத்தில் மிதந்தது.

சபரியின் திடீர் திருமணம் அவனுள் புது  முடிவை கொடுத்தது. இத்தனை நாள் அவனுள் நடந்த போராட்டங்களை எல்லாம் ஒரு முடிவுக்கு கொண்டுவந்தது. நடந்தால் தான் என்ன என்று தோன்றிய ஒரு விஷயம், இது தான் நடக்க வேண்டும் என்று தோன்ற துவங்கி. லலிதாவோடான திருமணத்தை மனம் ஆவலாக எதிர்பார்க்க துவங்கியது. அவனே எதிர்பாராத. புது மாற்றம். அவனுள் மாற்றத்தை ஏற்படுத்திய மாற்றம். அவன் எதிர்பார்ப்புகளை தூண்டும் மாற்றம்.  

அது கொடுத்த உந்துதல் லலிதாவிடம் பேச சொன்னது. 

“சாப்பிட வாயேன் லலிதா”, என்றான் சிறது புன்னகைத்த முகமாக.

அதை அவள் கவனத்தில் எடுக்கவே இல்லை.  அதிகம் பெயர் சொல்லி அழைக்க மாட்டான்.  அவன் பெயர் சொல்லி அழைத்ததையே யோசித்து கொண்டிருந்தாள்.

“இப்போதானே சர் முடியாதுன்னு அக்கா கிட்ட சொல்லி அனுப்பிச்சேன். எனக்கு பசியில்லை. அதுவுமில்லாம நான் எனக்கு உங்களோட உட்கார்ந்து சாப்பிடற அளவுக்கு தகுதி கிடையாது”.

“அதை நான் தான் முடிவு பண்ணனும். நீயில்லை வா”, என்றான் பட்டென்று.  அவன் திமிராக பேசவேண்டும் என்று நினைக்க வில்லை. ஆனால் பிறப்பிலிருந்து வருவது அவ்வளவு சீக்கிரம் மாற்ற முடியாதது.

“எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ண முடியாது. என் விஷயம் நான் தான் பண்ணனும்” என்றாள் இரு பொருள்பட. 

சண்டை வேண்டாம் என்று நினைத்த கதிர். “சரி நீயே பண்ணு. இப்போ சாப்பிட வா”.

தான் திட்டியதால் தான் நிறைய கோபமாக இருக்கிறாள் என்று நினைத்தவன், “இப்போ கூட சொல்றேன், அதுல ஒண்ணும் மாற்றமேயில்லை. நீ செஞ்சது ஒரு வகையில தப்பு. அந்த கோபம் தான் என்னை பேச வைத்தது வா”, என்றான்.

“முடியாது”, என்பது போல அமைதியாக நின்றிருந்தாள்.

“கையை பிடிச்சு இழுத்துட்டு போகட்டுமா”, என்றான்.

“ஆங்”, என்றபடி முழித்தாள்.

“வரலைன்னா கட்டாயம் கையை பிடிச்சு இழுத்துட்டு போவேன். பார்க்கணுமா உனக்கு. எனக்கு ஒண்ணும் இல்லை. எல்லார் முன்னாடியும் உனக்கு தான் ஒரு மாதிரி இருக்கும், பரவாயில்லையா.”, என்றான் புன்னகை முகத்தோடு.

புதிதாக முளைத்த தைரியம் மறைந்து போக ஒரு மாதிரி பயத்துடன் பார்க்க, “கையை பிடிக்கணும் போல இருக்கு”, என்று அவள் கையை பிடிக்க வர.

“அச்சோ வேண்டாம்”, என்று பதறி பின்னால் போனவள். “நானே வர்றேன்”, என்றாள்.

அவள் பயம் பார்த்து சிரிப்பு வந்தது வாய்விட்டு சிரித்தான்.

அப்போதுதான் படுத்தும் தூக்கம் வராததால் இவர்களை நோட்டம் விட பாட்டி எழுந்து அவன் அழுவலக அறைக்கு வர. லலிதாவின் பயந்த முகமும், இவன் சிரிப்பும் கண்ணில் பட்டது.

அப்படி வாய்விட்டு சிரிக்க கூடியவன் அல்ல கதிர். அவன் சிரிப்பதை பார்க்க பாட்டிக்கு சந்தோஷமாக இருந்தது. அப்படி ஓரு சந்தோஷத்தை இவள் தன் பேரனுக்கு கொடுத்தால். இவளை திருமணம் செய்து வைத்தால் தான் என்ன என்று தோன்றியது. ஆனால் அந்தஸ்து. யோசிக்க ஆரம்பித்தவர். லலிதாவை பார்க்க அவள் முகம் சஞ்சலத்தை பயத்தை காட்டியது.

அது ஒரு வகையான திருப்தியை கொடுத்தது. அவள் அப்படி ஒன்றும் சந்தோஷப்பட்டு சிரித்து பேசி கொண்டிருக்கவில்லை என்றுணர்ந்தவர் அவள் மேல் இன்னும் நல்ல அப்பிராயமே கொண்டார். ஏற்கனவே அவளை அறிவார். தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் பெண் தான். இப்போது தன் பேரன் சிரித்தும் அவள் சிரிக்காமல் இருப்பதில் நல்ல அப்பிராயமே கொண்டார்.

அப்போதுதான் பாட்டி வந்ததை பார்த்த லலிதா இன்னும் பயத்தோடு கூடிய பார்வையை அங்கே நிலைக்க விட, என்னவாயிற்று இன்னும் பயப்படுகிறாள் என்று திரும்பி பார்த்த கதிர், பாட்டியை பார்த்தவன் “என்ன பாட்டி”, என்றான்.

“சும்மா வந்தேன்டா. ஏன் வரக்கூடாதா”, என்றார்.

“என்னடா இவர். ஒரு மார்கமாக பேசுகிறார்”, என்று கதிர் நினைத்தாலும் வெளியே காட்டாமல். “நீ எங்க வேணாலும் வரலாம் பாட்டி”, என்றான். 

அவளிடம் மறுபடியும், “சாப்பிட வா” என்று சொல்லி, அவள் தலையசைக்கும் வரை அவளை பார்த்து பின்பு தான் தன் பாட்டியோடு வெளியே வந்தான். இதையெல்லாம் பாட்டி கவனித்த படியே வெளியே வந்தார். 

கிராமம் அல்லவா விஷயம் கேள்விப்பட்டு ஒன்றிரண்டு உறவினர்கள் குழுமத் துவங்கியிருந்தனர். அண்ணன், தம்பிகள் மாமன், மச்சான்கள், என்று வர. எல்லோரையும் சதாசிவமும். சபரியின் தந்தையும் சமாளித்து கொண்டிருந்தனர். சபரியின் அம்மா முகத்தை தூக்கி வைத்து தான் சுற்றி கொண்டிருந்தார்.

சித்ரா தனிமையாக உணரக்கூடாது என்று வித்யா மற்றவர்களை சித்ராவிடம் பேசவிடாமல் அவளே ஏதாவது பேச்சு கொடுத்துக்கொண்டே இருந்தாள். மற்றவர்கள் ஏதாவது ஏடாகூடமாக கேட்டுவிடுவர் என்று தெரியும். அப்படி பேசிய வித்யாவை சித்ராவிற்கு பிடித்துவிட்டது.

புது இடம். புது ஆட்கள். என்ற பயம் சற்று மட்டுப்பட சித்ரா அமர்ந்திருந்தாள். சாப்பாடு தயாராக. வித்யா பெண் மாப்பிள்ளையை அமர வைத்தவள் லலிதா என்று குரல் கொடுத்தாள். கேட்ட லலிதா வெளியே வர. அவளை சித்ராவின் புறம் அமர வைத்தாள்.

கண்டும் காணாமல் கதிர் அவளை பார்க்கும் இடத்தில் அமர்ந்து கொண்டான். இதையெல்லாம் பாட்டி பார்த்து கொண்டிருந்தார். வித்யா சொன்னது சரி போலவே அதுக்குள்ளே தோன்றியது. எப்படி இவ்வளவு நாட்கள் தன் கண்ணில் படாமல் போனது என்று தன்னையே கேட்டுகொண்டார்.

சரி பிறகு கவனிக்கலாம் என்று எண்ணிக்கொண்டு வந்திருந்த விருந்தினர்களிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். வந்திருந்த பெண்மணிகளில் ஒருவர். “என்ன ஜானகிம்மா எங்க சொந்தத்துல ஒரு பொண்ணு இருக்கு கதிருக்கு சொல்லவா”, என.

“வேணாண்டியம்மா எங்க கண்லயே ஒரு பொண்ணு இருக்கு. அதே மூகூர்தத்துல கல்யாணம் நடக்கும்”, என்றார்.

“யாரும்மா அது”, என்றதற்கு.

“என் கண்ல தாண்டி இருக்கு. இன்னும் என் பேரன், மகன், யார்கிட்டயும் சொல்லலை. கூடிய சீக்கிரம் சொல்றேன்”, என்று பேச்சை முடித்துக் கொண்டார்.

சங்கடமாக இருந்தது லலிதாவிற்கு அங்கே உணவருந்த. அதுவும் பெண் மாப்பிள்ளையுடன் அமர வைக்கப்பட்டதால் எல்லோர் கண்ணும் தன் மீதும் பட்டு பட்டு அகல இன்னும் சங்கடமாக உணர்ந்தாள்.

சாப்பிட்டு முடித்ததும் சபரியும் சித்ராவும் அவளிடம் ஸ்பெஷல் ஆக தாங்க்ஸ் மறுபடியும் சொன்னர்.

கதிர் பார்த்தால் திட்டுவானே என்று பயத்தோடு லலிதா பார்க்க. அவனை காணோம். அதன் பிறகு பயம் அகன்றவளாக சித்ராவிடமும் சபரியிடமும் பேச ஆரம்பித்தாள்.

சிறிது நேரம் பேசியிருந்தவள் கண்கள் தானாக கதிரை தேடியது. யாரோடோ வெளியே பேசிக்கொண்டு நின்றிருந்தான். அவளுக்கு அங்கே இருக்கவே பிடிக்கவில்லை. கதிரை தேடி அங்கே போனவளை என்ன என்பது போல பார்க்க. “நான் வீட்டுக்கு போகட்டுமா”, என்றாள்.

“போ”, என்று சொல்லாமல். “இரு”, என்று சொல்லியவன் அங்கே இருந்த யாரோ ஒரு ஆளை அழைத்து. “இவங்களை கொண்டு போய் வீட்டில் விட்டுட்டு வாங்க”, என்று கார் சாவியை அளித்தான்.

“இல்லை நான் எப்பவும் போலவே போயிடுவேன்”, என்று அவள் சொல்லவும் காதிலேயே விழாதவன் போல. “போங்க”, என்று அந்த ஆளிடம் சொல்லி அனுப்பினான்.

தனக்கு இம்சைகள் ஆரம்பமாகிவிட்டதோ என்ற எண்ணம் தோன்றுவதை லலிதாவினால் தடுக்க முடியவில்லை. எப்படி இருந்தவன். தன்னை அவ்வளவு திட்டிக்கொண்டு இருந்தவன். தன்னிடம் அவ்வளவு வேற்றுமை பாராட்டி கொண்டு இருந்தவன். காலையில் கூட அவ்வளவு திட்டினான் எவ்வளவு மாறிவிட்டான். அவளை அறியாமல் பெருமூச்சு எழுந்தது.    

வந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் பாட்டி இதையெல்லாம் உள்ளிருந்து பார்த்துக்கொண்டே தானிருந்தார். புதிதாக முளைத்திருக்கும் கதிரின் அக்கறை லலிதாவின் மீது.

பார்த்தவர் முதலில் ஜாதகத்தை வாங்கி பார்க்கலாம்.  பின்பு முடிவு செய்து கொள்ளலாம் என்று நினைத்தவர். அதை செயலாற்றும் விதமாக கோழி பண்ணையில் இருந்து கந்தசாமி, லலிதாவின் தந்தையை அழைத்துவர ஆள் அனுப்பினார்.

லலிதா வீட்டிற்கு போய் சிறிது நேரத்திலேயே அவள் தந்தையும் வந்துவிட்டார். அரக்க பறக்க வந்தவர். “தேவி”, என்று லலிதாவின் அன்னையை அழைத்தவர். “நம்ம லலிதா ஜாதகத்தை பெரிய வீட்டம்மா  கேட்டாங்க”, என்றார்.

“நம்ம லலிதா ஜாதகத்தையா எதுக்கு”,

“வேற எதுக்கு பேரனுக்கு பார்க்கத்தான்”,

“சும்மா விளையாடாதீங்க இதுல ஏதாவது வில்லங்கம் இருக்க போகுது. அவங்கலாவது நம்ம லலிதாவை பார்க்கறதாவது உளறாதீங்க.”,

“இல்லை தேவி நிஜமா தான் சொல்றேன்”.

உடனே லலிதாவை அழைத்த தேவி. “அப்பா என்னவோ சொல்றாங்களே உனக்கு தெரியுமா”,

“எதும்மா”, என்றாள்.

“அதான் உன் ஜாதகத்தை கேட்டு விட்டிருகாங்களே. உனக்கு ஏதாவது தெரியுமா”, 

“எனக்கெதுவும் தெரியாதும்மா”,

“நீங்க சொல்றதை என்னால நம்மபவே முடியலை”, என்று அவருக்குள்லேயே பேசிக்கொண்டார்.

சிறிது நேரம் அமர்ந்தவர். “அப்படி பார்க்கறாங்கனா பையன்கிட்ட ஏதாவது பிரச்சினை இருக்கபோகுது”.

“நான் பார்த்து வளர்ந்த பையன். அப்படி எதுவும் கிடையாது தேவி. ரெண்டு முறை கல்யாணத்துக்கு பார்த்து நின்னிருச்சு இல்லை”

“நின்னிருச்சா. நீ ஏன் எதுவும் சொல்லலை லலிதா”, என்று மகளை கேட்க.

“இன்னைக்கு தாம்மா நின்னது”, என்று லலிதா நடந்த கதைகள் எல்லாம் சொல்ல.

“எனக்கு இன்னும் நம்பிக்கை வரலை”, என்றார் தேவி.

“ஜாதகம் தானே கொடுப்போம் தேவி. சரியில்லைன்னா அப்புறம் பார்க்கலாம்”, என்று லலிதாவின் தந்தை அவளின் அன்னையை சமாதானப்படுத்த ஆரம்பித்தார்.

Advertisement