Advertisement

அத்தியாயம் பன்னிரெண்டு:

வித்யா அவள் அண்ணனை பார்க்க போன போதே பாட்டி கூப்பிட்டார். அது காதில் விழாமல் வித்யா போக. போய் வித்யாவை  அழைத்து வர சொல்லி லலிதாவை அனுப்பினார்.

லலிதாவும் பின்னேயே போக பேசின எல்லாவற்றையும். அண்ணனும் தங்கையும் பேசின எல்லாவற்றையும். நம்மை மீறி நடந்தது என்று வித்யா  ஆரம்பித்ததில் இருந்து அனைத்தையும் லலிதா கேட்டாள்.

முதலில் அவள் சபரியையும்  சித்ராவையும் திட்டியது. பின்பு அவர்களின் தைரியத்தை பாராட்டியது. அதற்கு கதிர் கோபப்பட்டது. பின்பு. “நீ யாரையாவது காதலிக்கறியா அண்ணா”, என்று கேட்டது. “அது உனக்கே தெரியும் தானே”, என்கிற மாதிரி அவள் அண்ணன் பதிலளித்தது.

யாராக இருக்கும் என்று லலிதா யோசிக்கும் போதே. “அது நமக்கு சரிவராது”, என்று அவள் அண்ணன் சொன்னது. அதையும் மீறி   “லலிதாவை பண்ணிக்கோ”, என்று வித்யா பட்டென்று சொன்னவுடனே. அதிர்ச்சி என்பதையும் தாண்டி வேறு யாராவது லலிதா என்று அவர்களுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று யோசித்தாள்.

பின்பு தான் ஒரு வேளை அது நானாக இருப்பேனோ என்று தோன்றியது. என்ன நடக்குது என்னை சுற்றி. வித்யா அக்கா, “காதலிக்கிறாயா”, என்று கேட்டதற்கு. “ஆம்”, என்று சொல்லாமல். “அது சரிவராது”, என்கிறான்.

“யார்க்கும் தெரியாமல் தானாக நடப்பது போல நடத்திக்கொடுக்கிறேன். ஒத்துக்கொள்”, என்று சொன்னவுடனே. “என்ன சொன்னானோ”, தெரியவில்லை.

அவன், “சரி”, என்று தலையாட்டியது லலிதாவிற்கு தெரியவில்லை.

“அப்படி என்ன தன்னை விரும்புவதை கூட சொல்ல முடியாதா அளவுக்கு நான் கீழாக இருக்கிறேனா. எந்த வகையில் நான் கீழ். ஆஸ்தியிலா. அந்தஸ்திலா. அழகிலா. இல்லை எல்லாவற்றிலுமா”.

“அப்படி காதலிப்பதை கூட சொல்ல முடியாதா அளவுக்கு நான் இருக்கிறேனா. யார் கேட்டார்கள் இவன் காதலை. எனக்கு அப்படி ஒரு காதல் தேவையில்லை. நான் ஒன்றும் அப்படி இவன் தான் வேண்டும் என்று இருக்கவில்லையே”.

“இவன் தானே காதலிக்கிறான். நான் ஒன்றும் காதலிக்கவில்லையே. காதலிக்கும் பெண்ணை காதலிக்க வைக்க கூட திறமையில்லை இவன் இது நமக்கு சரிவராது என்கிறான்”.

“ஏன் ஆஸ்தியினால் வரும் அந்தஸ்த்து என்ற ஒன்றை தவிர எனக்கு என்ன குறைச்சல். சரிவராது என்கிறான். இவனை என்னை காதலிக்க சொல்லி அழைத்தேனா”. மனம் கொத்திதது.

பாட்டி கீழே இருந்து மறுபடியும் குரல் கொடுக்கவும் தெளிந்தாள். கதவை மெதுவாக தட்ட வெளியே வித்யா வந்து பார்த்தாள். “என்ன லலிதா, எப்போ வந்தே”, என்று கேட்க.

“இப்போதான்க்கா வந்தேன். பாட்டி கூப்பிட்டாங்க”, என்றுவிட்டாள்.

முகம் கோபத்தை காட்டாமல். தனக்கு எதுவும் தெரிந்த மாதிரி காட்டாமல் இருக்க மிகுந்த சிரமாமாக இருந்தது. ஓரளவு சமாளித்தாள். வித்யாவிற்கும் ஒன்றும் தெரியவில்லை.

ஆனால் லலிதாவிற்கு வித்தியாசம் தெரிந்தது. புதிதாக வித்யாவின் குரலில் ஒரு வாஞ்சை, ஒரு பாசம் தெரிந்தது. சந்தேகமில்லாமல் லலிதாவிற்கு புரிந்து விட்டது. அவர்கள் தன்னை பற்றி தான் பேசியிருக்கிறார்கள் என்று.

அமைதியாக திரும்பி விட்டாள்.

பாட்டி. “இன்னுமா வர்றாங்க”, என்று கேட்க. “வந்துட்டே இருக்காங்க பாட்டி”, என்று சொல்லி தன் அலுவலக அறையில் போய் அமர்ந்து கொண்டாள். தலை வலித்தது. மனம் பாரமாக உணர்ந்தது. கதிரின் செய்கைக்கெல்லாம் சிறிது அர்த்தம் புரிந்த மாதிரி இருந்தது.

“என்னை பிடித்திருக்கிறது. அதை சொல்ல கூட மனமில்லாமல் இரு முறை திருமணத்திற்கு சரியென்று இருக்கிறான். இதில் அவர்கள் திருமணம் செய்ததற்கு தன்னை கோபப்படுகிறான். என்னவென்று சொல்ல?”,

“இவனை சும்மா விடலாமா. நிற்க வைத்து அறை விட வேண்டும்”, என்று ஆத்திரமாக வந்தது.

அவள் யோசனையில் அவள் உளன்று கொண்டிருந்த போதே சபரியும் சித்ராவும் வர. வித்யா லலிதாவை உதவிக்கு அழைத்தாள். “நீ போய் ஆரத்திகரை”, என்றவள் அவர்களை வெளியே நிற்க வைத்து பாட்டியிடம் உத்தரவு கேட்க சென்றாள்.

“பண்ணிட்டு வந்துட்டான். என்ன பண்றது முகத்தை காட்ட முடியுமா. போ. போய் கரை ஆரத்தியை”, என்றார்.

சபரியின் அம்மா முகம் திருப்பி அமர்ந்திருந்தவரை. “வாங்க அத்தே”, என்று சமாதானப்படுத்தி கொண்டிருந்தாள் வித்யா.

அப்போதுதான் வந்த சதாசிவம், “என்னம்மா நம்ம பையன் ஏதோ செஞ்சிட்டான். அதுவரைக்கும் நம்ம ஆளா பிடிச்சிருக்கானே. வேற பிரிவு ஆட்களை கொண்டுவராம. அதுவரைக்கும் சந்தோஷம் கூப்பிடும்மா”, என்றார் அந்த வீட்டின் உரிமையாளறாக. சபரியின் தந்தையும் அதையே சொல்ல.

வேறு வழியில்லாமல் சபரியின் அம்மா வித்யாவிடம், “ஆரத்தி கரைச்சு கூப்பிடு”, என்று சொல்ல. சந்தோஷமாக வித்யா லலிதாவிற்கு குரல் கொடுத்தாள். “லலிதா அதை கொண்டுவா”, என்று.

கதிர் இவளை அந்த திட்டு திட்டினான். லலிதா எங்கே இங்கே. என்று புரியாமல் சபரியும் சித்ராவும் பார்க்க. லலிதா வந்து ஆரத்தியை வித்யாவிடம் கொடுத்து அவர்களை பார்த்து மெல்லியதாக ஒரு புன்னகை புரிந்தாள்.

லலிதாவின் முகத்தை தான் சபரியும் சித்ராவும் ஆராய்ந்து கொண்டிருந்தனர். உணர்ந்த லலிதா மற்றவர்களை பாருங்கள் என்பது போல சிறு சைகை கண்களின் வழியாக செய்ய. அவளுக்கு அதிக பிரச்சினை இல்லை போல என்று ஆசுவாசப்படனர். பிறகு தான் தங்களின் சூழ்நிலையையே ஆராய்ந்தான். அம்மாவின் கோபமான முகம் என்ன வரப்போகுதோ என்ற கவலையை கொடுத்தது.

உள்ளே நுழைந்தவுடனேயே பொறிய ஆரம்பித்தார். “ஏன் சபரி ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்ல. மறுபடியும் ஒரு பத்திரிகை அடிச்சு எவ்வளவு வேதனை குழப்பம். பையனை பெத்த நம்மளே இப்படினா பொண்ணை பெத்தவங்க அவங்களுக்கு இன்னும் எவ்வளவு வேதனை”, என்று சொல்ல.

அமைதியாக அத்தனையும் உள்வாங்கி நின்றனர். சபரியின் அப்பா. “அவங்க வீட்டுக்கு போனீங்களே, என்ன ஆச்சு”, என்றார்.

“அவங்க அம்மா முகம் கொடுத்து பேசலை அப்பா. அவங்க அப்பாவையும் பேச விடலை”.

“எதிர்பார்த்ததுதான், ஒரு பொண்ணோட கல்யாணம் நின்னு இன்னொரு பொண்ணை கல்யாணத்துக்கு பேசியிருக்கும்போது அந்த பொண்ணு இப்படி வந்து நின்னா பதறத்தான் செய்யும். எனக்கே என்ன செய்யறதுன்னு புரியலை”, என்றார் சபரியின் தந்தை.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும்போதே கதிர் வர. சபரியும் சித்ராவும் குற்ற உணர்ச்சியில்  எழுந்து நின்றனர். நின்றது அவன் திருமணம் அல்லவா. அவன் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ என்று மொத்த வீடும் அவனை பார்க்க அவன் தெளிந்திருந்தான்.

நேரே அவர்களிடம் வந்தவன் கன்க்ராட்ஸ், “என்ன உங்கப்பா கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தன்னா அமர்களப்படுத்தியிருப்பார். இப்படி சொல்லாம செஞ்சிட்ட. அதனால எவ்வளவு பேருக்கு வருத்தம். அப்பா மட்டும் எல்லோருக்கும் பத்திரிகை கொடுக்க ஆரம்பிச்சு இருந்தார்னா ரொம்ப அவமானமாபோயிருக்கும் எங்களுக்கு”, என்றான்.

அப்போதும் அவன் மான அவமானத்தை பற்றி தான் பேசுகிறான் மனிதரின் உணர்வுகளை. இந்த திடீர் திருமணம் விளைவித்த வருத்தங்களை பற்றி பேசவில்லை. ஒரு வேளை பத்திரிகை எல்லாம் அடிக்காமல் இருந்தாள் அவனுக்கு சம்மதம் தான் போல என்று நினைத்தாள் லலிதா.

அவன் தன்னை விரும்புவதை தெரிந்து கொண்ட பிறகு அவனை பார்க்கவே ஏனோ எரிச்சலாக இருந்தது. என்னை தீண்ட தகாதவள் போல இவன் நினைக்கிறான் போல என்ற எண்ணம் எழுவதை தடுக்க இயலவில்லை.

அந்த எண்ணம் எழுந்ததும் அது தரும் பல்வேறு உணர்ச்சிக்கு ஆளானவள் அவனை பார்ப்பதையே தவிர்த்தாள். அவனை பார்க்க பார்க்க கோபம் பொங்கியது.

“சொல்லுங்க பெல் பாட்டம் முதலாளி”, என்று அவன் முன்னாடி இப்போது போய் கைகட்டி வாய் பொத்தி அவனை காமெடி பீஸ் ஆக்கி நின்றாள் எப்படி இருக்கும் என்று சம்மந்தம் இல்லாமல் தோன்றியது. அந்த கோபத்திலும் சிரிப்பு வந்தது. கஷ்டப்பட்டு அடக்கி அலுவலக அறை நோக்கி போனாள். 

கதிரின் பார்வை முழுவதும் பார்த்தும் பார்க்காத மாதிரி லலிதாவின் மீது தான் இருந்தது. தன்னை பார்த்துக்கொண்டிருந்தவள் திடீரென்று பார்வை மாற்றியது, அவள் முகத்தில் முகத்தில் தெரிந்த கலைவையான உணர்ச்சிகள். முதலில் கோபம் பின்பு சிரிக்க போவது போல முகம் மாற. அதை அடக்கி வேகமாக அலுவலக அறை நோக்கி சென்றது. யாரையோ காமெடி பீஸ் ஆக்கியிருப்பாள் போல என்று அவளை போலவே அவனுக்கும் தோன்றியது. “யாரை என்னையா”, என்று சரியாக முதல் முறையாக அவள் மனதை படித்தான்.

ஆனால் ஏன் என்னை காமெடி பீஸ் ஆக்கின்னாள் தெரிந்து கொள்ள வேண்டும் போல தோன்றியது. இங்கே இவர்கள் எல்லாரும் பேசிக்கொண்டிருக்க. மெதுவாக அவள் இருந்த அலுவல் அறை நோக்கி சென்றான்.

நேரடியான கேள்வி. “எதுக்கு இப்போ சிரிப்பை அடக்கின. என்னை பார்த்து அடக்கின மாதிரி தெரிஞ்சது”.

புதிதாக முளைத்த தைரியம் லலிதாவை ஒரு அலட்சிய பார்வை கதிரை நோக்கி வீச வைத்தது. ஆனால் குரல் அதீத மரியாதை காட்டியது.

“என்ன கேக்கறீங்க சர். எனக்கு ஒண்ணும் புரியலையே”, என்றாள்.

அவள் வேண்டுமென்றே சொல்லுகிறாள் என்பது புரிய. “என்ன புரியலை”, என்றான்.

“உன்னை பார்த்து சிரிக்க வேற செய்யறேனா”, என்று மனதிற்குள் நினைத்தவள்.

“எனக்கு எதுவுமே புரியலை. எதுவுமே புரியாம தான் லூசு மாதிரி இருந்துட்டேன். நான் நினைச்சது வேற நடக்கறது வேற. என்கிட்ட அவ்வளவு கோபப்பட்டீங்க. பொண்ணு மாப்பிள்ளையை பார்த்தவுடனே அப்படியே மாறிடீங்க”.

“நான் உன்மேல தான் கோபப்பட்டேன் .அவங்க மேல இல்லை. என்ன இருந்தாலும் நீ என்கிட்ட சொல்லியிருக்கணும்”, என்றான் கடினமான குரலில்.

“அப்போ சொன்னதே தான். எதுக்கு சொல்லனும். நான் நினைக்கறது. எனக்கு தெரிஞ்சது. எல்லாம் உங்ககிட்ட சொல்லனும்னு அவசியம் இல்லை”, என்று வேண்டுமென்றே சண்டையை வளர்த்தாள்.

“என்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்லுவ”,

“ஒஹ்! நீங்க என் முதலாளி இல்லை, உங்ககிட்ட சொல்லனும் ஆமாமில்லை”, என்று வேண்டுமென்றே. “ஆமாம். இல்லை.”, என்று சொல்லி அவனிடம் கடுப்படித்தாள்.

மனதிற்குள் ஓடியது. “இவன் கிட்ட வேலைபார்த்தா இவனுக்கு என்னை காதலிக்க கூட ரைட்ஸ் கொடுத்திருக்காங்காலா என்ன?. முட்டாள். என்னையே சைட் அடிச்சிட்டு. என்னை கையாள வேற அடிச்சிருக்கான்”.

பழையதை நினைத்து இன்னும் கோபத்தை அதிகரித்து கொண்டிருக்க, இந்த லலிதா இன்னும் புதிதாக தெரிந்தாள் கதிருக்கு. தன்னை கிண்டல் செய்வது போல தோன்றியது.

அவன் அவளையே முறைத்து பார்க்க. “போடா வேலையை பார்த்துட்டு”, என்பது போல சலிக்காமல் பதில் பார்வை பார்த்தாள்.

இவளுக்கு என்னவாயிற்று இன்று. இப்படி தைரியமாக என்னிடம் நடக்க மாட்டாளே. வாயாட மாட்டாளே. என்று கதிர் யோசித்து அப்புறம் வரலாம். என்று திரும்ப

வேண்டுமென்றே, “சர் ஏதோ கேட்டீங்களே உங்களை பார்த்து சிரிச்ச மாதிரி. அப்போ சிரிக்களை. இப்போ சிரிச்சு காட்டட்டா”, என்றாள் சீரியசாக.

“என்ன சொல்வது”, என்று கதிருக்கு புரியவில்லை. சிரிப்பு வரும் போல இருந்தது. சிரிப்பை மறைப்பதற்காக. “ஒண்ணும் தேவையில்லை”, என்று எரிந்து விழுந்து போக.

அதற்கு மேல் மனதிற்குள் அவன் மேல் எரிந்து விழுந்தாள் லலிதா. “இவன் லவ் சொன்னாலே இவன் பின்னாடி போகமாட்டேன். இதுல லவ்வே சொல்லலை. நான் இவன் பின்னாடி போவனா? இவன் பணம் இருந்தா இவன் வரைக்கும். லூசுபைய லலிதாவை அவ்வளவு ஈசியா நினைச்சிட்டான்.இடியட் .என் அனுமதி இல்லாம என்னைபத்தியே அப்போ இவன் இவ்வளவு நாளா நினைச்சிட்டு இருந்திருக்கிறானா.”, என்று மனம் சராமாரியாக திட்டிக்கொண்டு இருந்தது.  

“ஏதோ படிக்க வைச்சாங்கன்னு ஒருமரியாதைக்கு வேலைக்கு வந்தா என்ன காப்பாதனத சொல்ல கூட இவன் கெளரவம் பார்க்கிறான். இவன் காதலிச்சதே தெரியாம இவன் உடன்பிறப்பு வேற என்னை கல்யாணம் பண்ணி வெக்கறேன்னு வாக்குறுதி கொடுத்திருக்கு”.

“கொடுக்கும்! கொடுக்கும்! பணம் இருக்கில்லை! அந்த திமிர்”, என்று வித்யாவையும் சேர்த்து திட்டினாள்.

அதற்குள் அவள் மனசாட்சி அவளுக்கு குரல் கொடுத்தது. “ஏன் லலிதா உண்மையை சொல்லு. ஒரு வேளை இவங்க பெண் கேட்டாங்கன்னா உங்க வீட்ல வேண்டாம்னா சொல்லுவாங்க. உடனே சரி சொல்ல மாட்டாங்க”.

“அவங்களுக்கு இந்த மாதிரி சம்மந்தம் எல்லாம் எட்டாக் கனவு. நீ என்ன பண்ண முடியும். ஒண்ணும் பண்ணமுடியாது. உங்க அப்பாவும் அம்மாவும் கையை காலை கட்டியாவது உன்னை மணமேடைல உட்கார வைக்க மாட்டாங்க”, என்று எண்ணம் ஓடியது.

நிஜம்தான் அவர்கள் மட்டும் பெண் கேட்டுவிட்டால் வானத்திற்கும் பூமிக்கும் தன் தந்தை குதிப்பார். இந்த கல்யாணத்தில் இருந்து தப்பவே முடியாது.

“எப்படி தன்னை காதலிப்பதை தன்னிடம் சொல்ல மறுக்கும் ஒருவனை தான் திருமணம் செய்யபோகிறேனா”,. எண்ணம் சுழன்றது. தலையும் சுழன்றது. தலையை பிடித்து அப்படியே டேபிள் மேல் கவிழ்ந்து படுத்து விட்டாள்.   

அங்கே வெளியே சபரியையும் சித்ராவையும் பாட்டி ஒரு வழி செய்து கொண்டிருந்தார். “எப்படிப்பா ஒரு வார்த்தை கூட சொல்லாம இப்படி பண்ணிடீங்க. பெத்தவங்களை பத்தியும் நினைக்களை. மத்தவங்களை பத்தியும் நினைக்களை. ஒரு வார்த்தை சொல்றதுக்கென்ன”.

“கல்யாணம் பண்ணிகறதுக்கு இருக்கிற தைரியம். அதை சொல்றதுல இல்லைனா எப்படி.”, என்று அவர்களை ஒரு பிடி பிடித்து கொண்டிருந்தார்.

அதே சமயம் அதை அப்படியே அலட்சியப்படுத்தாமல் பெண்ணுக்கு மாப்பிள்ளைக்கும் விருந்து   தயார் செய்ய சொல்லியிருந்தார். என்ன செய்வது என்று சபரியின் பெற்றோருக்கு புரியவில்லை. பெண் வீட்டில் போய் சமாதானம் பேசுவதா வேண்டாமா தெரியவில்லை. சிறிது நாள் கழித்து போவதா இல்லை இப்போதே போவதா ஒன்றும் தெரியவில்லை.

சபரி வீட்டுக்கும் சித்ரா வீட்டுக்கும் பொதுவாக உள்ள உறவினர் ஒருவரை வரவழைத்தனர், சமாதானம் பேச செல்வதற்கு. இதை எல்லாம் கவனிக்கும் மனநிலையில் இல்லை கதிர். லலிதாவின் நடவடிக்கை வித்தியாசமாக பட்டது. புதிதாக எப்படி இந்த தைரியம். என் முகம் பார்த்து பேச பயப்படுவாள் இன்று என்ன தைரியம் என்று குழம்பினான்.

அவன் காதல். அவன் அதை சொல்ல பிரியப்படாதது. அதனால் அவளுக்குள் எழுந்த கோபம். அது கொடுத்த தைரியம் . என்று புரியவில்லை. 

லலிதாவின் நினைவுகள் என்றையும் விட அதிகமாக அலைகளித்தன.              

இங்கே இந்த விஷயங்கள் அதாவது சபரி சித்ராவின் விஷயங்கள் நடந்து கொண்டிருக்க. இதில் ஒரு கண் வித்யா வைத்திருந்தாலும் சந்தர்ப்பம் பார்த்து தன் அண்ணன் திருமண விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்துக்கொண்டே இருந்தாள்.

“பாட்டி நீ அசதியாயிருப்ப. அவங்க எல்லா விஷயத்தையும் பார்த்துப்பாங்க வா”, என்று தன் பாட்டியை தூங்க வைப்பது போல கூட்டிக்கொண்டு போனாள்.  

அவரிடம். “அண்ணன் கல்யாணம் இப்படி ஆகிடுச்சே பாட்டி”, என்று வருத்தப்பட்டவள். “நம்ம அண்ணன் ஜாதகத்தை எடுத்துட்டு போய் பார்த்துட்டு வருவோமா”.

“செய்டியம்மா எப்படியாவது என் பேரன் கல்யாணம் சீக்கிரம் நடந்துடனும். ஒரு தடவை இல்லை ரெண்டு தடவை இப்படி ஆகிடுச்சு. நாள் தள்ள வேண்டாம்”, என்றாள்.

“பாட்டி என் மனசுல ஒரு எண்ணமிருக்கு சொல்லட்டா” என்றாள் தயங்கி தயங்கி.

அவள் தயக்கத்தை பார்த்தவர். “விஷயம் பெரிது”, என்பதை உணர்ந்தவர். “என்ன வித்யா”, என்றார்.

“அது பாட்டி.”, என்று இழுத்தாள் வித்யா. “நான் சொன்னா நீங்க என்னை திட்ட மாட்டீங்க இல்லை”,

“சொல்லு அப்புறம் திட்றதா இல்லையா யோசிக்கறேன்”,.

இவங்க கிட்ட எப்படி சொல்றது என்று உதறல் எடுத்தது வித்யாவிற்கு. இந்த அண்ணன் தைரியமாக நான் லலிதாவை விரும்புகிறேன் என்று ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் தனக்கு இவ்வளவு சங்கடம் உண்டா என்று அண்ணனையும் திட்டியது.

பிறகு ஒரு வாறு தைரியத்தை திரட்டி. “நம்ம லலிதாவை பார்க்கலாமா”, என்றாள்.

“என்ன நம்மட்ட வேலைபார்க்கிற லலிதாவையா”, என்று பாட்டி திருமணம் நின்றதை விட அதிகமாக அதிர்ந்தார்.        

Advertisement