Advertisement

அத்தியாயம் பதினொன்று:

லலிதா அவன் பின்னே வேகமாக போனாள். அவளுக்கு விந்தையாக இருந்தது. தன் மேல் கோபம் இருக்க வேண்டியது தான். அதற்காக அவர்களை விட்டு தன்னை மட்டும் குற்ற சாட்டுவது அவளுக்கு சற்று எதிர்மறை உணர்ச்சியை கொடுத்தது . அவனிடம் கேள்வி கேள் என்று உந்தியது.

“உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணியிருக்கே”, என்ற வார்த்தை அவளை அசைத்தது. 

 அவள் வருவது தெரிந்தாலும் கதிர் நிற்கவில்லை . கார் வரை வேகமான நடை. அவன் காரில் ஏறி அமர்ந்ததும் கிளம்பி விடுவான் என்றரிந்தவள். அவன் ஏறியதும் மற்றொரு புறம் உள்ள கதவை திறந்து வேகமாக ஏறி அமர்ந்தாள்.

அவளுக்கு அவனிடம் சொல்லிவிடவேண்டும் என்ற உந்துதல் இருந்ததால் அவள் முன் புறம் அமர்ந்ததை அவளே கவனிக்கவில்லை.

வேகமாக அவன் புறம் திரும்பி. “நான் சொல்றதை ஒரு நிமிஷம் கேளுங்க சர்”, என்றாள்.

கதிர் அவளோடு பேச விருப்பமில்லாமல் அப்படியே அமர்ந்திருந்தான். அதையே சம்மதமாக எடுத்தவள். “எனக்கு அவங்களுக்கு கல்யாணம்னு சத்தியமா தெரியாது. ஒரு ஹெல்ப் வேணும்னு சபரி சர் கேட்டதால தான் இங்கே வந்தேன். வந்த பிறகு தான் அவங்களுக்கு கல்யாணம்னு தெரியும்”, என்றாள். “சத்தியமா எனக்கு தெரியாது நம்புங்க”.

“நான் யாருக்கும் துரோகம் செய்ய நினைக்கலை”, என்றாள் கெஞ்சல் குரலில்.

இந்த பதில்கள் கதிருக்கு கோபத்தை கொடுத்தது. “நீ துரோகம் செய்ய நினைக்கலையா”, என்றான் ஏளனமான குரலில்.

இப்போது லலிதாவிர்க்கும் சற்று கோபம் எட்டி பார்த்தது. “நான் என்ன துரோகம் செஞ்சேன். சும்மா என் மேல பழி போடறதே வேலையா வெச்சிருக்கீங்க”, என்றாள் தைரியமாக.

“என்னது நான் உன்மேல பழி போடறதே வேலையா வெச்சிருக்கேனா. ஏன் நீ பேச மாட்டே”,

“இதெல்லாம் பேசாதீங்க. நான் என்ன துரோகம் செஞ்சேன். உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செஞ்சேன். எனக்கு இவங்க கல்யாணம் தெரியாது. தெரியாது.”, என்றாள் சற்று குரல் உயர்த்தி. 

“என்ன தெரியாது. அவங்க காதலிச்சது தெரியாதா? தெரியாதா உனக்கு? என்றான் கதிரும் ஆக்ரோஷமாக. 

இருவரும் பயங்கரமான கோபத்தில் இருந்து அதே உணர்வோடு காரசாரமான  வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

“தெரியும்! ஆனா அப்போ கல்யாண பொண்ணு இவங்க இல்லை! இவங்க அக்கா!”,

“அதுக்கப்புறம் தெரியும் தானே ஏன் சொல்லலை”.

“அது சபரி சர் சொல்ல வேண்டிய விஷயம். நான் எப்படி சொல்ல முடியும்”,

“அப்போ ஒரு வேளை அவன் சொல்லியிருக்களைன்னா அடுத்தவன் காதலிச்ச பொண்ணை நான் கல்யாணம் பண்ணியிருக்கனுமா?”,

“அவங்க அதுக்குள்ள சொல்லிடுவாங்கன்னு நினைச்சேன்”,

“என்ன நினைச்ச? கிழிச்ச நீ! இதைதான் நான் சொன்னேன் துரோகம்னு. நான் முக்கியமா படலை உனக்கு. பட்டிருந்தா என்கிட்ட முதல்ல நீ சொல்லியிருப்ப. இது அவங்க விஷயம் மட்டுமில்லை. நான் சம்பந்தப்பட்ட விஷயம் கூட தான். நீ மறைச்சிட்ட”, என்றான் மறுபடியும் குற்றம் சாட்டி.

“கொஞ்சம் கூட புரிஞ்சிக்கவே மாட்டேங்கறீங்கலே”,

“எதுக்கு புரிஞ்ஜிக்கணும்”

லலிதாவிற்கு கோபம் எல்லை மீற, “நான் மட்டும் எதுக்கு புரிய வைக்கணும் உங்களுக்கு. நீங்க யார் எனக்கு?, நான் எதுக்கு அடுத்தவங்களை பற்றி உங்ககிட்ட சொல்லனும். ஏதோ நீங்க வாங்கின பட்டம் மாதிரி இல்லை பொறந்தப்பவே உங்க கூட பொறந்த மாதிரி எப்பவும் முதலாளி முதலாளின்னு சொல்றது. அப்புறம் நான் உனக்கு முக்கியமில்லையா கேட்கறது. எந்த வகையில நீங்க எனக்கு முக்கியமா இருக்கனும்னு நினைக்கறீங்கன்னு எனக்கு புரியலை?”,. 

அவள் கையை சட்டென்று பிடித்தான். “நான் யார்ன்னு உனக்கு புரியவே இல்லையா. அது உன் தப்பு”, என்றான். கையை வேகமாக இழுத்து  முகத்தை பக்கத்தில் அவனையறியாமல் இழுக்க போக. கையை அவள் அனிச்சை செயலாக வேகமாக இழுத்து கொண்டாள்.  

அந்த செய்கையின் போதும் அந்த வார்த்தைகளின் போதும் அவன் சொல்ல வரும் விஷயம் லலிதாவிற்கு புரியவில்லை. அவன் அடிக்க தன்னை பக்கத்தில் இழுக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள். இதையும் மீறி கதிரை பற்றி வேறு ஒன்றும் அவளுக்கு தோன்றவில்லை.

ஏனென்றால் கதிரை அவள் அந்த மாதிரி யோசிக்கவே இல்லை. கதிர் தன்னை ஒரு வேளை விரும்புவானோ என்று ஆயிரத்தில் ஒரு பங்காகவோ இல்லை கனவிலோ கூட நினைத்தது இல்லை.

“என்ன என் தப்பு. கல்யாணம் பண்ணது அவங்க ரெண்டு பேரும், அவங்களை விட்டுட்டு என்னை ஏன் இந்த அளவு கோபிக்கறீங்கன்னு புரியலை”, 

தன் மீது எந்த தவறும் இல்லை என்று புரிய வைத்துவிடும் நோக்கத்தில் பதிலுக்கு பதில் வார்த்தையாடினாள்.

இந்த லலிதா புதிது கதிருக்கு, பயந்து.அடங்கி. ஒடுங்கி. பேசவா வேண்டாமா என்று தான் கதிரிடம் பேசுவாள். எதிர்த்தும் பேசியிருக்கிறாள் தான். அடி வாங்கின பிறகு அதுவும் மாறிற்று. அவனிடம் இருந்து ஒதுங்கியிருக்க ஆரம்பித்தாள்.

ஆனால் இந்த தைரியம் புதிது. அது அவனை வாயடைக்க வைத்தது. அந்த நிலையிலும் இந்த. அவனுடன் உரிமையோடு சண்டைபோடும் லலிதாவை கதிருக்கு இன்னும் பிடித்தது. இந்த மாதிரி அவள் தைரியமாக இருப்பாள் என்ற அந்த குணம் இன்னும் அவனுக்கு முன்பே தெரிந்திருந்தால். அவனை ஈர்த்திருந்தால், அவள் தான் வேண்டும் என்று முன்பே முடிவெடுதிருப்பானோ என்னவோ. 

இருந்தாலும் அவள் செய்தததை ஒத்துகொள்ள முடியவில்லை. அவள் செய்தது தவறாகவே பட்டது. ஒன்றும் பேசாமல் அவளை  வைத்துக்கொண்டே வண்டியை கிளப்பினான்.

அவளுக்கு அவன் கோபத்தை பார்த்து சபரியிடம் போகிறேன் என்றும் சொல்லமுடியவில்லை. அதற்கும் கோபிப்பான் என்று தெரியும். அமைதியாக வருவது வரட்டும் என்று அமர்ந்து கொண்டாள்.நேரே அவன் வீட்டிற்கு வண்டியை  வேகமாக செலுத்தினான்.

அங்கே லலிதா அப்படியே கதிரின் பின் கிளம்பிய உடனே ஒரு நிமிடம் சபரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. சித்ராவும் அவனும் முகத்தை முகத்தை பார்த்துக்கொண்டனர்.

“இதென்ன சபரி அவர் நம்மை கோபப்படாம அந்த பொண்ணை கோபப்பட்டு போறார். அதுவும் நாம கையெழுத்து போடறதுக்கு முன்னேயே வந்திருப்பார் போல. அதை தடுக்க எந்த முயற்சியும் எடுக்கலை. என்ன நடக்குதுன்னு பார்த்துட்டே நின்னுட்டு இருப்பார் போல”.

“அதுதான் எனக்கும் புரியலை. லலிதாவுக்கு இவ்வளவு சிக்கல் ஆகும்னு நான் நினைக்கலை. ஆனா எனக்குமே புரியலை ஏன் அந்த பொண்ணை கோபப்படறார்ன்னு”,

சிறிது யோசித்தவள். “இதுக்கு ரெண்டு காரணம் தான், எனக்கு தெரிஞ்சு இருக்க முடியும். ஒண்ணு நம்மளை பார்த்து அவருக்கு பயமா இருக்கும். இல்லை நம்மளை விட அந்த பொண்ணு அவருக்கு முக்கியமா இருக்கும். முதல் காரணம் இருக்க வாய்ப்பில்லை. நம்மளை பார்த்து அவருக்கு பயம் கிடையாது. ரெண்டாவது தான் இருக்கும். அந்த பொண்ணு அவருக்கு முக்கியமா இருக்கும். அதான் திட்டினதை கூட அவ பக்கமா நின்னு அதிகமா மத்தவங்களுக்கு கேட்காத மாதிரி திட்டினார்”,

நான் சொல்வது சரியா என்பது போல சித்ரா சபரியை பார்க்க. “எனக்கு தெரியலை. ஆனா அங்க வீட்லயும் லலிதா நிறைய திட்டு வாங்குவா. நான் வீட்ல அவ கிட்ட கதிர் மாமா இல்லாதப்ப தான்  பேசுவேன்”, என்றான்.

“சரி! நம்ம என்ன செய்ய முடியும், விடுங்க. இனி நம்மளே எத்தனை பேரை ஃபேஸ் பண்ணணுமோ விடுங்க”, என்று அவள் சொல்ல.

ஞாபகம் வந்தவனாக தன் தந்தைக்கு அழைத்தான். இன்று ஊருக்கு போக விழைந்தவர்களை கூட நாளைக்கு போகலாம் என்று அவன் தான் தடுத்திருந்தான்.

போன் செய்தவன் அவர் போனை எடுத்ததுமே. “அப்பா” என்றவன். “நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் அப்பா”, என்றான் .

இதை எதிர்பார்க்காத அவர்.  “என்ன சபரி சொல்ற”, என்றார். ஏதாவது நண்பர்களுடன் சேர்ந்து பிரச்சனையில் மாட்டியிருப்பான் அதை தீர்க்க பணம் கேட்கிறான் என்றே நினைத்திருந்தார். இப்படி கல்யாணம் செய்ய பணம் கேட்கிறான் என்று நினைக்கவில்லை.

தந்தையாக பெண் யாரோ? என்ன சிக்கலில் மாட்டியிருக்கிறானோ? என்று தளர்ந்தார்.

“அப்பா! அப்பா!”, என்று மறுபடியும் மறுபடியும் தொலைபேசியில் அழைத்த பிறகு. “சொல்லு”, என்றார்.

“பொண்ணு சித்ரா”, என்றான்.

அவருக்கு பெண்ணின் பெயர் கேட்டதும் தெரியவில்லை.

சபரிக்கு அது கதிருக்கு நிச்சயம் செய்திருக்கும் பெண் என்ற வார்த்தையை கூட சொல்ல பிரியப்படவில்லை. சித்ராவின் தந்தையின் பெயரையும் தாயின் பெயரையும் சொல்லியவன். “அவங்க பெரிய பெண்ணை கதிர் மாமாவுக்கு நிச்சயம் செய்தோம்”, என்றான்.

“அப்போ இந்த பெண்ணை கதிருக்கு இப்போ பார்த்தோமே அந்த பெண்ணா”, என்றார்.

“ம்”, என்றான். “என்னடா சபரி இப்படி பண்ணிட்ட ஒருவார்த்தை என்கிட்ட சொல்லியிருக்கலாம்ல. வேற ஏதாவது செஞ்சிருக்கலாமே, அவசரப்பட்டுடியே”, என்றார்.

“ஒரு வேலை நீங்க வேண்டாம்னு சொல்லியிருந்தா என்ன செய்ய முடியும்னு தான் இப்படி செஞ்சேன்”, என்றான் இறங்கிய குரலில். பிறகு தெளிந்தவனாக. “இப்போ ரெஜிஸ்டர் ஆபிஸ்ல இருக்கேன். எங்கே வரட்டும்., அங்க வரட்டுமா. இல்லை இவளை கூட்டுட்டு சென்னைக்கு நம்ம வீட்டுக்கு போகட்டுமா. இல்லை வீட்டுக்கே வராத எங்கேயாவது போன்னு சொல்றீங்களா”,.

“டேய் எங்கயும் போகாத. முதல்ல இங்க மாமா வீட்டுக்கு வா! .பொண்ணு வீட்டுக்கு தெரியுமாடா”,

“இல்லை தெரியாது”,.

“பொண்ணை பெத்தவங்க. முதல்ல அவங்க வீட்டுக்கு போய் என்ன ஏது நிலவரம்னு பார்த்துட்டு கூட்டிட்டு வாடா”, என்றார். சபரியின் முகத்தில் புன்னகை மலர்ந்தது. மனதில் தைரியம் பிறந்தது. தன் தந்தை தன்னை விடமாட்டார் என்று தெரியும். அதுவே அவனை எல்லாவற்றையும் தைரியமாக செய்ய தூண்டியது.   

சித்ராவை அழைத்துகொண்டு அவள் அம்மாவின் வீட்டுக்கு சென்றான். அங்கே அவள் அம்மா மட்டுமே இருந்தார். இவர்களை இந்த கோலத்தில் பார்த்ததும் அப்படியே அமர்ந்து விட்டார். அவரின் தந்தையுமே குலதெய்வம் கோவிலுக்கு பத்திரிகை வைத்து கும்பிட்டு வர சென்றிருந்தார்.

ஒரு வார்த்தை கூட பேசவில்லை. திட்ட கூட இல்லை. அமைதியாக உள்ளே சென்றுவிட்டார். இவர்களை பார்க்க வந்த கீதாவை கூட கையை பிடித்து இழுத்து சென்றுவிட்டார்.

அவர்களின் தந்தை வரும்வரை ஒருமணிநேரம் ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

அவர் தந்தை வந்தவர் அவரும். “நீ இதை முன்னமே சொல்லியிருக்கலாம்”, என்று வருத்தத்தோடு பேசிக்கொண்டு இருக்கும்போதே,

“நம்மளே வேண்டாம்னு முடிவு செஞ்சு அவ செஞ்சிருக்கா. இன்னும் என்ன அவகிட்ட பேச்சு அனுப்பிவிடுங்க, நம்ம தேவையில்லைன்னு நினைச்சவ நமக்கும் தேவையில்லை”, என்று சித்ராவின் அம்மா வந்து கோபமாக கத்த. சித்ராவின் தந்தையும் நீங்கள் போகலாம் என்பது போல ஒரு பார்வை பார்க்க பதில் பேசாமல் அமைதியாக எழுந்து வந்துவிட்டனர்.

இங்கே வீட்டில் சபரியின் தந்தைக்கு எப்படி விஷயத்தை சொல்வது என்று தெரியவில்லை. மெதுவாக முதலில் அவர் மனைவியையும் வித்யாவையும் கூப்பிட்டு விஷயத்தை பகிர இருவருமே அதிர்ந்தனர்.

சபரியின் அம்மாவிற்கு மகன் இப்படி செய்துவிட்டானே என்ற ஆதங்கம் இருக்க, வித்யாவிற்கு அதோடு சேர்த்து தன் அண்ணனின் கல்யாணம் மறுபடியும் நின்று விட்டதே  என்ற கவலையும் சேர்ந்து கொள்ள அவளையறியாமல் வாசலுக்கு வந்து நிற்க.

கதிரின் கார் வேகமாக நுழைந்தது. வித்யா பார்த்த போது காரின் முன் சீட்டில் கதிருடன் லலிதா அமர்ந்திருந்தது கண்களுக்கு தெரிந்தது. அவளையும் மீறி இந்த திருமணத்தை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று லலிதாவை கதிருடன் ஜோடி சேர்த்தது.

இறங்கி கதிர் வேகமாக உள்ளே போக. “அண்ணா”, என்று விஷயத்தை சொல்லும் முடிவுடன் வித்யா அழைக்க. கதிர் நிற்காமல் போனான். எப்படி இவனிடம் சொல்லப்போகிறோம் என்று யோசனையோடு வித்யா நின்றாள்.  

மறுபுறம் இருந்து இறங்கிய லலிதா ஒருவேளை தன்னை வித்யா தவறாக எடுத்து கொண்டாள் என்ன செய்வது என்று தயங்கி தயங்கி நிற்க. அதன் சுவடு எதுவுமில்லாமல் வித்யா. “உடம்பு சரியில்லைன்னு சீக்கிரம் போன. அண்ணனோட வர்ற, என்ன அச்சு?”, என்றாள் வித்யா.

“அது வந்து”, என இழுத்தாள் லலிதா.

“என்ன லலிதா சொன்னா தானே தெரியும்”,

“சபரி சர் என்னை போன் பண்ணி ஒரு ஹெல்ப் வேணும்னு கேட்டார்.”, என்று நடந்ததை சொன்னவள். “எனக்கு தெரியாதுக்கா அவர் கல்யாணத்துக்கு சாட்சி கையேளுத்து போட கூப்பிடறார்ன்னு. கதிர் சர் என்னை ரொம்ப கோபிச்சார்”, என்றாள்.

“உன்னை ஏன் கோபிச்சார்”, என்றாள் விஷயம் வாங்கும் நோக்கத்துடன் வித்யா.

“அதுதான் அக்கா. எனக்கும் புரியலை”, என்றாள் உண்மையாக லலிதா. வித்யாவிற்கு புரிந்த மாதிரியும் இருந்தது புரியாத மாதிரியும் இருந்தது.

விஷயத்தை வாங்கும் நோக்குட.ன். “என்ன சொல்லி கோபிச்சாங்க சொல்லு”, என்றாள் வித்யா.

“கொஞ்சம் ஞாபகம் இருக்கு, கொஞ்சம் ஞாபகம் இல்லை”, என்றாள் லலிதா. “பரவாயில்லை ஞாபகம் இருக்கிற வரை சொல்லு”, என்றாள் வித்யா.

நிஜமாகவே என்ன சொல்லி திட்டினான் அவன் என்று அதிகம் ஞாபகமில்லை. சில வார்த்தைகள். “உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யற. நான் முக்கியமில்லை. அவங்க முக்கியமா”, போன்றவை மட்டும் நினைவில் வர எதையும் மறைக்காமல் உரைத்தாள்.

கேட்ட வித்யாவிற்கு நன்கு புரிந்தது. உரிமையிருக்கும் இடத்தில் இந்த வார்த்தைகள் வரும். உரிமை வேண்டுகிறானா? எடுத்துக்கொண்டானா? மறுக்கிறானா? புரியவில்லை? வித்யாவிற்கு. அண்ணனிடம் பேசவேண்டிய அவசியத்தை உணர்ந்தவள்.

லலிதாவிடம். “சரி நம்ம பேசியது நமக்குள்ள இருக்கட்டும். நீ சாட்சி கையெழுத்து போட்டது வேற யாருக்கும் தெரியவேணாம்”.

“ஆனா கதிர் சர் சொல்லிடுவாரே”,

“சொல்ல மாட்டாங்க”, என்று தீர்மானமாக சொல்ல. “என்ன சொல்வது”, என்று தெரியாமல் லலிதா பார்த்தாள்.

“போ லலிதா. நீ எப்பவும் போல போய் வேலையை பார் “,என்ற வித்யா பாட்டியிடம் விஷயத்தை சொல்ல சென்றாள்.

பாட்டியிடம் விஷயத்தை கூற. பாட்டி மேலும் கீழும் குதிக்காதது ஒன்று தான் குறை. “நான் தான் அவசரப்பட வேண்டாம்னு சொன்னேனே, யார் கேட்டீங்க?”,

“என் பேரனை எல்லாம் என்னன்னு டீ நினைச்சீங்க. எத்தனை முறை பத்திரிகை அடிச்சு அடிச்சு நிக்கறது. அவனை மாதிரி ஒரு பையன் யாருக்கு டீ கிடைப்பான்.வேற யார்கூடவாவது கல்யாணம் நடந்திருந்தா பரவாயில்லை. கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கே வந்தா எப்படி தாங்குவான்”, என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்ய .

“பாட்டி !அண்ணன் அப்படி ஒன்றும் வருத்தப்பட மாட்டாங்க. நீ சத்தம் போட்டு அவனை வருத்தப்பட செய்யாத”, என்று பாட்டியை அதட்டியவள். “முதல்ல அப்பா கிட்ட சொல்லலாம்”, என்று தொலைபேசியில் அழைக்க.

அவர். “கதிர் விவரத்தை தெரிவித்து விட்டான்”, என்று கூறினார்.

‘பாரு அண்ணனுக்கு தெரிஞ்சிருக்கு, அப்பா கிட்ட அண்ணனே சொல்லிட்டாங்க. நாம மேல என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்”,.

சொல்லியவள் செய்வதற்காக கதிரை நோக்கி போனாள். கதிரை  அணுகினால், விட்டத்தை நோக்கி படுத்திருந்தான்.

“அண்ணா”, என்றதற்கு பதிலே இல்லை

“இது நம்மளையும் மீறி நடந்தது அண்ணா! இதுக்கு நீ ஏன் வருத்தப்படரே”, என்றாள் அதற்கும் பதில் இல்லை.

“அவங்க முன்னால இருந்தே லவ் பண்ணியிருக்கணும் அண்ணா இல்லைன்னா ரெண்டு நாள்ல கல்யாணம் பண்ணியிருக்க முடியாது. என்ன கல்யாணம் பேசினப்பவே இந்த சபரி தைரியமா சொல்லி இருக்கலாம்”.

“கல்யாணம் பண்றதுக்கு இருக்கிற தைரியம். காதலிக்கறதை சொல்றதிலையும் வேண்டாமா.  தைரியமில்லாதவங்க காதலிக்க கூடாது அண்ணா”.

“ஆனா ஒருவகையில அவங்களை பாராட்டனும், யாருக்காகவும் எதுக்காகவும் பார்க்காம அவங்க கல்யாணம் பண்ணிகிடாங்க இல்லையா. இந்த தைரியம் நிறைய பேருக்கு வர்றதில்லை . உள்ள ஒண்ணு நினைக்கறாங்க வெளிய ஒண்ணு பேசறாங்க”,

வித்யா அவள் அண்ணனை தாக்க வென்று தான் அந்த வார்த்தைகளை சொன்னாள்.

அது சரியாக வேலை செய்தது. ஏற்கனவே கதிர் எரிச்சலில் இருந்தான். அது வார்த்தையை விட வைத்தது.  

“இப்போ நீ அவங்களை பாராட்றயா இல்லை என்னை திட்றையா”,

“உன்னை. உன்னை. நான் ஏன் திட்டணும். நீ அந்த மாதிரி ஏதாவது வேலை செய்யரியா. நீ காதலிக்கறியா.”, என்றாள்.

“நீ என்னை பார்த்து அந்த வார்த்தைகளை சொல்லி இருந்தன்னா என்னன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். நீயே அதை வெச்சிக்கோ யார்கிட்டயும் போய் தம்மபட்டம் அடிக்காத”. “அது நமக்கு சரிவராது”

“ஏன் அண்ணா உனக்கு இவ்வளவு பட்டும் இன்னும் புத்தி வரலையா? ஏற்கனவே ஒரு லூசு. இன்னொன்னு இப்படி பண்ணிடுச்சு. இன்னும் யாருக்காக நீ காத்திருக்க. பேசாம லலிதாவையே பண்ணிகோன்னா.”, என்று விஷயத்தை போட்டு பட்டென்று உடைத்தாள்.

அவள் பேசும்போதே வித்யா அறிந்து கொண்டாள் என்று உணர்ந்து கொண்டாலும். “உனக்கு எப்படி தெரியும்”.

“நீ அவளை அடிச்சப்பவே எனக்கு கொஞ்சம் சந்தேகம். எங்கண்ணன் அப்படி யார்கிட்டயும் உரிமை எடுக்காதவன் எப்படி இந்த பொண்ணு கிட்ட மட்டும் எடுத்தான்னு”,.

“உன்கிட்ட அப்போவே கேட்கலாம்னு நினைச்சேன். சந்தர்ப்பம் சரியில்லை. தள்ளி போட்டேன். அது இதுவரை கொண்டு விட்டுடிச்சி”.

“ப்ளீஸ் அண்ணா நான் யார்கிட்டயும். ஏன் என் கணவர் கிட்ட கூட சொல்லமாட்டேன். நீ லலிதாவை விரும்பறதை. நானா ஏற்பாடு பண்ற மாதிரி இந்த கல்யாணத்தை நடத்திடறேனே. அந்த மூகூர்த்ததுல கல்யாணத்தை நடத்திடலாம் அண்ணா”.

“நம்பு அண்ணா! யார்கிட்டயும் நீ அவளை விருமபறத்தை சத்தியமா சொல்லமாட்டேன். இந்த கல்யாணத்தை நானே பேசின மாதிரி நடத்தட்டுமா”, என்று கேட்க.

“நடந்தால் தான் என்ன?”, என்று தோன்ற. “சரி”, என்று தலையசைத்தான் கதிர்.                                   

Advertisement