Advertisement

அத்தியாயம் பத்து:

லலிதாவை விடுத்து கதிர் வேறு வேலை பார்க்க கிளம்பினாலும், அவள் ஏன் தன்னை அப்படி பார்த்தாள் என்ற யோசனை மூளைக்குள்  ஓடிகொண்டே இருந்தது.

அங்கே சபரி சித்ராவிடம் கலந்து பேசி சம்மதமும் வாங்கி விட்டான். வீட்டில் பேச சந்தர்ப்பம் இருக்கிறதா என்று சபரி கேட்க. “முடியவே முடியாது”, என்று விட்டாள். “அவர்கள் திருமணத்தில் தீவிரமாக இருக்கிறார்கள். ஏற்கனவே அக்காவின் திருமணம் நின்று என் திருமணம் என்பதால் கட்டாயம் பேசினால் பிரச்சினை தான் வரும் சம்மதம் கிடைக்காது”,.

திருமணம் முடிந்து பேசிக்கொள்ளலாம் என்று விட்டாள். “ஆம்”, சபரியும் சித்ராவும் திருமணம் செய்ய முடிவு எடுத்துவிட்டார்கள். பெற்றோரிடம் சொல்லலாம் தங்களின் காதலை என்றால் இங்கே சித்ராவின் வீட்டில் கீதாவின் திருமணம் தடை பட்டதால்  சித்ராவின் திருமணமாவது நல்ல படியாக நடை பெறவேண்டும் என்பது அவர்களின் பேச்சில் தெரிய. அதனால் தன் காதலை சொல்லும் தைரியம் சித்ராவிற்கு வரவில்லை.

அங்கே வீட்டில் சபரி சொல்லலாம் என்றால் ஒரு திருமணம் நின்று இப்போது தான் இன்னொரு முறை நிச்சயமாகி இருக்கிறது. கதிர் எப்படி எடுத்துகொள்வானோ என்ற பயமே அவனை வீட்டில் சொல்ல விடாமல் தடுத்தது. அவன் அப்பா அம்மாவிடம் அவனுக்கு சிறிதளவும் தயக்கமோ பயமோ இல்லை. கதிர் வீட்டினர் எப்படி எடுத்து கொள்வார்களோ என்ற தயக்கமே பெரிதாக இருந்தது. யாரோடும் அதனால் தான் பகிரவில்லை.

இரண்டு நாட்களில் கோவிலில் திருமணம். பின்பு அன்றே பதிவு செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தனர். அதற்கு ஏற்பாடுகள்    செய்வதற்காக சபரி இரண்டு நாட்களாக காலையில் செல்பவன் இரவு தான் வீடு திரும்பினான். அதனால்  லலிதா அவனை பாக்கவே முடியவில்லை.

“என்ன செய்கிறான் இந்த சபரி தெரியவில்லையே. ஆளையே காணோம். திருமணம் நெருங்குகிறது. நாளை குல தெய்வம் கோவிலுக்கு பத்திரிக்கை வைக்க போவது போல பேசிக்கொள்கிறார்கள். என்ன நடக்குமோ தெரியலையே”, என்று தேவையே இல்லாமல் தன் மனதை போட்டு லலிதா குழப்பிக்கொண்டாள்.

கதிரின் திருமணம் நடந்தால் என்ன? நின்றால் தனக்கென்ன? இந்த பதட்டம் சபரிக்காகவா. கதிருக்காகவா. அவளுக்கே தெரியவில்லை. பயமாக இருந்தது. 

அதனால் அவளையறியாமல் ஒரு மெல்லிய பதட்டம், அவளிடம் குடிகொண்டது. அவளையே எப்பொழுது கவனிக்காமல் கவனிக்கும் கதிருக்கு அவள் பதட்டம் நன்கு தெரிந்தது. “இவள் என்னையே பார்க்கிறாள். பதட்டமாக வேறு இருக்கிறாள். என்ன விஷயமோ தெரியவில்லை?”, என்று கதிர் அவளை ஆராய ஆரம்பித்தான்.

அது தெரியாத லலிதா வேறு வித்யாவிடம். “அக்கா சபரி எங்கே ரெண்டு நாளா காணோம்”, என்று பேச்சு வாக்கில் கேட்பது போல கேட்க.

அப்போது தான் வித்யாவே அதை கவனித்தாள். அவளிடம், “தெரியலை”, என்றவள் அமைதியாக இருக்காமல். கதிரிடம் கேட்க வேறு செய்தாள். “எங்கே அண்ணா சபரியே காணோம். ஏதாவது வேலையா அனுப்புனியா? கண்லயே படலை. லலிதா கூட கேட்டா”, என்றாள்.

பட்டென்று. “அவ ஏன் கேட்டா”, என்ற கேள்வி அவனையறியாமல் கோபமாக கதிரின் வாயில் இருந்து வந்தது. அவனின் கோபம் வித்யாவிற்கு வித்யாசமாக தெரிந்தது.

அதை பார்த்த வித்யா. “நீ ஏன் இவ்வளவு கோபப்படற. இது ஒரு சாதாரண கேள்வி. நாளைக்கு நான் ரெண்டு நாள் கண்ல படலைன்னாலும் இந்த கேள்வி வரும், நீ கண்ல படலைன்னாலும் இந்த கேள்வி வரும்”, என்று அவனை யோசனையாக பார்க்க.

“நான் எங்கயும் அவனை அனுப்பலை”, என்றான். அவனுக்கு சந்தேகமாக தோன்ற ஆரம்பித்தது. “இந்த சபரி இரண்டு நாட்களாக ஆளைக் காணோம், வேலையிருக்கு என்று சொன்னான். பதட்டமாக வேறு இருந்தான். இந்த லலிதாவும் பதட்டமாக இருக்கிறாள். அவனை கேட்க வேறு செய்கிறாள். என்ன நடக்கிறது?. என்ன விஷயம் தெரியவில்லையே?”, என்று தோன்றியது.

வித்யா அவன் முக மாறுதல்களை பார்த்து. “என்ன அண்ணா”, என்றாள். “ஒன்றுமில்லை”, என்பது போல தலை அசைத்தான்.

வித்யா மறுபடியும் கேள்விகள் கேட்க. அவன் வாய் இயந்தர கதியில் பதிலளித்து. அவன் பதில்களில் இருந்தே அவன் இங்கே இல்லை, என்பதை வித்யா கண்டுகொண்டாள்.

“ஏன், ஏன், திடீரென்று என்னவாயிற்று. இப்போது சபரியை பற்றியும் லலிதாவை பற்றியும் தான் பேசினோம். லலிதா செய்த மாற்றமா இது. இன்னும் இருபது நாளில் திருமணம். என்ன செய்து கொண்டிருக்கிறான்?”, என்று வித்யா சந்தேகத்தோடு கதிரை பார்க்க ஆரம்பித்தாள்.

கதிர் லலிதாவை சந்தேகப்பட. வித்யா கதிரை சந்தேகப்பட்டாள். 

அடுத்த நாள். சபரியும் சித்ராவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்த நாள். வந்தது.

சித்ரா வீட்டில் தோழிக்கு திருமணம் என்று சொல்லி, காலையிலேயே கோவிலுக்கு வந்துவிட, அங்கே சபரியும், அர்ச்சகரும், சபரியுடைய ஒரு ஃபிரின்ட் சென்னையில் இருந்து வந்திருந்தான். வேறு தெரிந்தவர்கள் யாருமில்லை.  

சித்ராவிற்கு மனது என்னமோ செய்த்தது. ஆனால் கதிரை நினைத்தால் அந்த தயக்கம் அகன்றது. சற்று யோசித்து பெற்றோரிடம் வாதாடி தன் காதலை புரிய வைக்கலாம் என்றாலும், இந்த கதிர் வீட்டில் விடாமல் கதிருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால். அந்த எண்ணமே உவப்பாக இல்லை.

மனதை திடப்படுத்தினாள். இனி எது வந்தாலும் எதிர்கொள்ள தான் வேண்டும். சபரியை விட. உலகம் தன்னை தான் இதற்கு அதிகம் பழிக்கும் என்றரிந்தவள்.

புரோகிதராக மாறிய அர்ச்சகர். மந்திரங்கள் அக்னி வளர்த்து அதன் முன் உரைக்க ஆரம்பித்து. இவர்களை அமர சொல்ல. கோவிலுக்கு சாமி கும்பிட வந்தவர்கள் இவர்களை வேடிக்கை பார்க்க.

வேடிக்கை பார்த்தவர்களுக்கு சபரியின் நண்பன் அட்சதை கொடுக்க. யாரென்றே தெரியாதவர்கள் ஆசிர்வதிக்க. சித்ராவின் கழுத்தில் மங்கள நாண் பூட்டினான் சபரி.

இருவரும் தங்களுக்குள், அந்த நிமிடம் இந்த உலகை எதிர்கொள்ளும் தைரியத்தோடு, இருவரும் ஒருவரை ஒருவர் இணைபிரியாத உறுதி பூண்டனர்.

சபரிக்கு இது, கதிருக்கு நிச்சயம் செய்திருக்கும் பெண் என்ற கலக்கமே அதிகமாக இருந்தது.

மணியை பார்த்தால் அது ஒன்பதை காட்டியது. ரெஜிஸ்டர் ஆபிஸ், பத்து மணிக்கு தான் திறக்கும், திருமணத்தை பதிவு செய்து கொள்ள நேற்றே எல்லா ஏற்பாடுகளையும் சபரி செய்திருந்தான்.

அப்போது தான் உரைத்தது சாட்சி கையெழுத்து போட ஒரு ஆள் தான் இருப்பது. இரு நண்பர்களை சென்னையில் இருந்து வரச்சொல்லி இருந்ததால் அலட்சியமாக இருந்து விட்டான். தவிர்க்க முடியாத காரணத்தால் ஒரு நண்பன் வரவில்லை. மற்றொருவன் மட்டுமே வந்தான். இப்போது இன்னொரு ஆளுக்கு எங்கே போவது.

சபரிக்கு இது புது ஊர். சித்ராவிற்கு சில பேரை தெரிந்திருந்தாலும் அந்த நேரத்தில் யாரையும் நம்பி கூப்பிட அவளுக்கு தோணவில்லை.

சபரிக்கு இந்த சமயத்தில் ஞாபகம் வந்தது அவர்கள் விஷயம் தெரிந்திருந்த லலிதா தான். இந்நேரம் ஆபிஸ் வந்திருப்பாள் என்று கணக்கிட்டவன் அவளை அழைப்பதா, வேண்டாமா? என்று தடுமாறினான். அவள் தொலைபேசி எண்ணும் தன்னிடம் இல்லை. அங்கே அவர்கள் வீட்டு ஆபிஸ்  எண்ணுக்கு அழைத்தாள் அவள் தான் எடுப்பாள் என்றறிந்து அழைத்தான்.

அங்கே லலிதாதான் சரியாக எடுத்தாள்.

“லலிதா நான் சபரி”

“சொல்லுங்க. எங்க போனீங்க, ரெண்டு நாளா கண்லயேபடலை”,

“லலிதா, எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் செய்வீங்களா”,    

“சொல்லுங்க முடிஞ்சா கட்டாயம் செய்யறேன்”.

“இங்க நாமக்கல் ரெஜிஸ்டர் ஆபிஸ் வரைக்கும் உடனே வரணும்”,

“ஏன் என்ன விஷயம்”,

“வாங்க சொல்றேன்”,

“ப்ளீஸ். சொல்லுங்க. சொன்னாதானே நான் இங்கே சொல்லிட்டு வரமுடியும்”,     

“காரியமே கெட்டது போங்க.  நீங்க வேற ஏதாவது காரணம் சொல்லிட்டு வாங்க. என்னை பார்க்க வர்றதோ இல்லை, ரெஜிஸ்டர் ஆபிஸ் வர்றதோ சொல்ல வேண்டாம்”.

“என்ன விஷயம் சொல்லுங்க”, என்றாள் மறுபடியும்.

“போன்ல சொல்ற மாதிரி இருந்தா. சொல்ல மாட்டேனா. ப்ளீஸ், எனக்காக இந்த ஒரு ஹெல்ப் பண்ணுங்க”, என்றான் கெஞ்சலாக.

“என்ன விஷயம்”, என்று தெரியாவிட்டாலும் சபரியை நம்பினாள். இருவருக்குள்ளும் அதிக பேச்சு வார்த்தை இல்லாவிட்டாலும் நல்ல நட்புணர்வு இருந்தது. நிச்சயமாக தனக்கு பாதகமாக எதுவும் இருக்காது என்று தெரியும். என்ன விஷயமாக இருக்கும் என்று குழம்பியவள், அவன் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து போட கூப்பிடுகிறான் என்று சிறிதும் அவளுக்கு தோன்றவில்லை.

பதட்டமாக பாட்டியிடம் அல்லது வித்யாவிடம் சொல்லிவிட்டு கிளம்பலாம் என்று வந்தால், அவள் எதிரில் வந்து நின்றது கதிர்.

இவள் முகத்தில் பதட்டத்தை பார்த்தவன். “என்ன”, என்றான்.

என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாரியவள். “எனக்கு உடம்பு சரியில்லை, லீவ் வேணும்”, என்றாள்.

அவளை சும்மாவே பார்ப்பவன். பார்வையால் மேலிருந்து கீழ்வரை அளந்தான். அவன் பார்வைக்கு அவள் பதட்டம் புதிதாக பட்டது.

அவளை சீண்டிப்பார்க்கும் ஆசை வர. “நல்லாதானே இருக்கே”, என்றான்.

அவளுக்கு புரியவில்லை. “இல்லை, நல்லா இல்லை”, என்று அவசரமாக மறுத்தாள்.

“காலையில வந்தப்போ நல்லா தானே இருந்தே.” என்றதற்கு அமைதியாக இருந்தாள். 

அதை பார்த்தவன், “சரி நீ நல்லா இல்லை. என்ன பண்ணலாம்”,

“எனக்கு வீட்டுக்கு போகணும்”,

“நான் அந்த பக்கம் தான் போறேன், வா. உன்னை வீட்டில் விட்டுட்டு போறேன்”, என்றான், நிஜமாகவே அவளுக்கு உடம்பு சரியில்லை என்று நினைத்து.

அவன் பேசுவது நிஜமாகவே அவளுக்கு உடம்பு சரியில்லாமல் போய் விடும் போல தோன்றியது.

“இல்லை. வேண்டாம். நானே போய்டுவேன்”, என்று தடுமாற்றமாக கூறினாள்.

“கிளம்பு நீ”, என்று அதட்டியவன். அவளை கையோடு கூட்டிக்கொண்டு வெளியே வந்தான்.

காரில் அவன் ஏறி அமர்ந்ததும், வேகமாக பின் கதவை திறந்து ஏறி அமர்ந்தாள். அவன் காரை ஸ்டார்ட் செய்து அவள் கண்களில் படுமாறு முன் கண்ணாடியை சரி செய்தான். 

பதட்டமாக நகம் கடித்தபடி வந்தாள். “எதுக்கு நகம் கடிக்கற கையை எடு”, என்று ஒரு அதட்டல் போட்டவன். கை, மியூசிக் சிஸ்டம் ஆன் செய்ய.

“இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ                                             முதன் முறை காதல் அழைத்தோ”

.

 “காதல் செய்யும் ரோபோ,                                                                                             நீ தேவையில்லை போ போ”

என்று பாட .      அந்த வரிகளோடு தன்னையும் லலிதாவையும் அவனையறியாமல் ஒப்பிட்டு பார்த்தான். அது தனக்காக ஒலிகிறதோ. வித்யாவிடம் லலிதாவை பற்றி பேசியிருக்கலாமோ என்று கதிருக்கு தீவிரமாக தோன்றியது.

கதிரிடம் இருந்து எப்படி தப்பித்து. சபரி சொன்ன இடத்திற்கு போவது என்ற யோசனை மட்டுமே லலிதாவிடம் இருந்தது. வேற எந்த யோசனையும் அவளிடத்தில் இல்லை. அவன் தன்னையே முன் கண்ணாடி வழியாக பார்த்துக்கொண்டிருப்பதோ. அவன் மனப்போராட்டங்களையோ லலிதா அறியவில்லை . 

பிறகு அவன் வீடு இருக்கும் இடம் வர. அவளை விட்டு சென்றான்.

அவன் அந்த புறம் போனதுமே. வீட்டிற்கு செல்லாமல் வேகமாக நாமக்கல் செல்லும் பஸ்சில் ஏறினாள்.   வழி கேட்டு கேட்டு இடத்தை தேடி கொண்டிருக்க. அவளை வீட்டில் விட்டு நாமக்கல் வந்த கதிர் பார்வையில் பட்டாள்.

“இப்போதுதானே இவளை வீட்டில் விட்டு வந்தோம். நம்மிடம் உடம்பு சரியில்லை என்று வேறு சொன்னாள்”, என்று எண்ணியவன் காரை அப்படியே ஓரம் கட்டி நிறுத்தி. “என்ன விஷயம்”, என்று தெரிந்தே ஆகவேண்டிய கட்டாயத்தில்அவளை பின் தொடர்ந்தான்.

அவள் ஒரு வழியாக ரெஜிஸ்டர் ஆபிஸை அடைய. இவள் எதற்கு இங்கே போகிறாள் என்று  கேள்வி எழும்ப பின்னே சென்றான். அங்கே அந்த திருமணம் பதிவு செய்யும் அறைக்கு வெளியேயே சபரி காத்திருக்க.

லலிதா. “இங்கே ஏன் நிற்கிறான் சித்ராவை திருமணம் செய்ய அழைத்து வந்திருக்கிறானோ”, என்று அப்போது தான் உறைத்தது.

சபரிக்காகவும் சித்ராவிற்காகவும் சந்தோஷம் தோன்றிய அதே சமயம், கதிர். அவன் திருமணம். அவன் நிலையை நினைத்து வருத்தப்பட்டது.   

அதிக வருத்தப்பட நேரமில்லாமல் சபரி அவளை உள்ளே அழைத்து சென்று சித்ராவிற்கு அறிமுகப்படுத்தினான்.

இங்கே வெளியே திருமண பதிவு செய்யும் இடத்தில் லலிதாவை சபரியுடன் பார்த்தவுடனே, கதிருக்கு என்ன வென்று ஆராய தோன்றாமல் கண்மண் தெரியாமல் கோபம் பெருக ஆரம்பித்தது. வேகமாக உள்ளே போகப்போனவன் உள்ளே பார்வையை வீச அப்போதுதான் சித்ராவை பார்த்தான்.

அங்கேயே இருந்த ஜன்னல் ஓரமாக நின்று ஆராய ஆரம்பித்தான். அங்கே இருந்த அனைவரையும் பார்த்தான். சித்ராவும் சபரியும் அருகருகில் நின்றிருந்தனர். இருவரும் பட்டுடுத்தி இருந்தனர்.  

அப்போதுதான் தான் உணர்ந்தான், சித்ராவும் சபரியும் மணமக்களாக இருக்க வேண்டும் என்று, அதை உணர்ந்தவுடன் அவன் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. மிக்க கோபம் இருந்தாலும் அவனையறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது. அது ஆற்றாமையா?, நிம்மதியா? என்ன தெரியவில்லை.

அவனுக்கு பார்த்திருந்த பெண் வேறு ஒருவனின் மனைவியாக நிற்கிறாள் என்ற கோபம் வரவில்லை. இந்த லலிதாவிற்கு தெரிந்திருக்கிறது. தன்னிடம் சொல்லாமல் இப்படி செய்தது விட்டாளே என்ற கோபம் தான் அதிகமாக ஓங்க ஆரம்பித்தது. தன்னை விட அவர்கள் முக்கியமா என்று எண்ண ஆரம்பித்தது?.

அதற்குள் சித்ராவிடம். லலிதாவை. “அங்க வீட்ல வேலை செய்யறாங்க. என் ஃபிரன்ட், நம்மை பற்றி தெரியும்”, என்று சொன்னான்.

“இங்க சாட்சி கையெழுத்து போட தான் கூப்பிட்டேன்”, என்றான் லலிதாவிடம் சபரி.

“நானா?”, என்றாள்.

“ஏன்? நீங்க தான், வாங்க.”, என்று அவளை கூட்டிக்கொண்டு, அங்கே இருந்த அலுவலரிடம் சொல்லி திருமணத்தை பதிவு செய்ய போக. அதை பார்த்துக்கொண்டிருந்த கதிர் உள்ளே வந்து நின்றான்.

நிறைய ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்ததில் கதிர் வது நின்றதை சபரியோ சித்ராவோ லலிதாவோ கவனிக்கவில்லை. அவனும் நிகழப்போவதை அறிந்தாலும் அதை தடுக்க முயலவில்லை.

அவன் நின்று நடப்பதை பார்க்க. சபரி கையெழுத்திட்டு. சித்ரா இட்டு. பின்பு அவன் நண்பன் இட்டு. பின்பு லலிதா கையெழுத்திட்டு. இருவரையும் பார்த்து. “வாழ்த்துக்கள்”, என்றாள்.

இதையெல்லாம் பார்த்த பிறகு அடக்கப்பட்ட கோபத்துடன் அவர்கள் முன் கதிர் வந்து நின்றான். கதிரை பார்த்தவுடன் மூவருக்கும் சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது.

சித்ரா சபரியின் பின் போய் நிற்க, லலிதா எங்கே போய் நிற்பாள்?. பயத்துடன் கதிரை பார்த்தாள். அழுகை வரும் போல இருந்தது. சபரியை பார்த்த கதிர். “இதை நீ சொல்லியிருக்கலாம். ஏன் சொல்லாம இப்படி செஞ்சிட்ட தெரியலை”, என்றவன்.

லலிதாவின் புறம் திரும்பினான். லலிதா சற்று தள்ளி நின்றிருந்தாள். அவள் அருகில் வந்தவன். “உனக்கு தெரியும் நீ சொல்லலை. என்னை விட நேத்து வந்த இவங்கல்லாம் முக்கியம்மா போய்ட்டாங்க. அவங்க காதலிச்சாங்க கல்யாணம் பண்ணிட்டாங்க சொல்லலாம். அதை நீ மறைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது. அந்த பொண்ணு எனக்கு நிச்சயம் பண்ணியிருக்கற பொண்ணுன்னு தெரிஞ்சும் நீ மறைச்சிருக்க”.

அவன் பேச பேச லலிதாவின் கண்களில் நீர் திரண்டது.

சபரியும் சித்ராவும் நம்மிடம் கோபப்படுவதை விட்டு லலிதாவை ஏன் திட்டி கொண்டிருக்கிறான் என்று பார்த்தனர். அவர்களுக்கு அவளிடம் ஏன் கோபத்தை காட்டுகிறான் என்று புரியவில்லை. 

“நீ இப்படி செய்வேன்னு நான் எதிர்பார்க்கலை. என்கிட்ட பொய் சொல்லிட்டு இங்க வந்திருக்க. உனக்கு அவங்க எவ்வளவோ பரவாயில்லை”.

“உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செஞ்சிருக்க நீ”, என்று சொல்லி சென்று விட்டான்.  சபரியின் புறமும் சித்ராவின் புறமும் திரும்பவில்லை.

வெளியே வந்த கதிர் கோவிலுக்கு  பத்திரிகை வைக்க சென்றிருந்த   தந்தைக்கு வேகமாக அழைத்தவன். “அப்பா இந்த கல்யாணம் நடக்காது”, என்றான்.

“ஏன்பா”, என்று அவர் பதறினார். “அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகிடுச்சு, நம்ம சபரியோட. வீட்டுக்கு வாங்க”, என்று சொல்லி அவன் நடக்க ஆரம்பிக்க. அவன் பின்னால் அவனிடம். “எனக்கு இது தெரியாது”, என்று சொல்ல லலிதா விரைந்தாள்.  

Advertisement