Advertisement

அத்தியாயம் ஒன்று:

த்வமேவ மாதாச்ச பிதா த்வமேவ

த்வமேவ பந்துச்ச சகாத் த்வமேவ

த்வமேவ வித்யா த்ரவினம் த்வமேவ

த்வமேவ சர்வம் மம தேவ தேவ !!

சொல்லிய ஸ்லோகத்தின் பொருளினை முழுவதுமாக உணர்ந்து சொன்னாள் லலிதா நமது நாயகி. ,

நீயே எனது தாய் நீயே எனது தந்தை

நீயே எனது உறவு நீயே எனது நண்பன்

நீயே எனது கல்வி நீயே எனது செல்வம்

நீயே எல்லாம் எனது இறைவா எனது இறைவா !!

அதை சொல்லி முடித்தவுடன் நிறுத்தவில்லை. வரிசையாக ஸ்லோகங்கள் அணிவகுத்தன.  சிறு வயது படித்த பள்ளியின் தாக்கம்  நிறைய. ஸ்லோகங்கள் சுவாமி பாட்டுக்களும்  பள்ளியின் பஜனை உபயத்தால் வந்தது. அவளுக்கும் அதில் ஆர்வம் இருந்ததால், பாட்டென்று தனியாக எதுவும் கற்காமலேயே நன்றாக வரும்.

இன்று அவளுக்கு இருக்கும் மனநிலைக்கு பஜனை தேவையான ஒன்றாகவே நினைத்தாள். இன்று புதிதாக அவள் வேலைக்கு போகப் போகிறாள். பயமாக இருந்தது. இத்தனை நாட்கள் அவள் தந்தை பார்த்து வந்த வேலை. இவள் படிப்பை முடிப்பதற்காகவே காத்திருந்து இவள் முடித்ததும் இவள் அப்பாவை  விடுவித்து  இவளை இன்று வர சொல்கிறார்கள்.

இப்படி சொன்னால் சரியாக புரியாது என்பதை விட இப்படி சொன்னால் சரியாக புரியும். லலிதா தமது தாய் தேவிக்கும், தந்தை கந்தசாமிக்கும் பிறந்த  மூத்த பெண் மகவு. இவளுக்கு பிறகு இன்னும் இரண்டு பெண்கள் உள்ளனர். பவித்ரா, அனிதா. 

இவள் தந்தை நாமக்கலில் உள்ள ஒரு லாரி டிரான்ஸ்போர்ட்டில் கணக்கெழுதும் வேலை. ஏதோ தூரத்து சொந்தம். அவர்களுக்கு நம்பிக்கையாக ஒரு ஆள் தேவையாக இருந்த காரணத்தினால் வேலை வெட்டி எதுவுமில்லாமல் சும்மா சுற்றி கொண்டிருந்த கந்தசாமிக்கு, அங்கே கணக்கெழுதும் வேலை போட்டு கொடுத்தனர்.

அங்கே வேலையில் அமர்ந்த பிறகு தான் தேவியோடு திருமணம் ஆகியது. பிறகு முதல் பெண் குழந்தை லலிதா. இவள் பிறந்த பிறகு ஆண் குழந்தை வேண்டி அடுத்த குழந்தை. ஆனால் பிறந்ததோ பெண் பவித்ரா.

முறுபடியும் ஆண் குழந்தை வேண்டி ஒரு முயற்சி எடுக்க……. மறுமுறையும் பெண் அனிதா.  இந்த முறையோடு முட்டாள்தனதிலும் ஒரு புத்திசாலித்தனமாக , “போதும்”, என்று கந்தசாமியும் தேவியும் முடிவெடுத்து நிறுத்தியதால் தப்பித்தனர்.

இல்லையென்றால் அவர்கள் ஜாதகத்தில் இருந்தது என்று ஒரு ஜோசியர் சொன்னது போல ஏழு பெண் மகவிர்க்கு பிறகு ஒரு ஆண் மகவு என்று நடந்திருந்தால் நாடு தாங்குமோ என்னவோ வீடு நிச்சயம் தாங்கியிருக்காது. 

இந்த ஐந்து பேருக்கே கந்தசாமி வாங்கும் சம்பளம் சாப்பாட்டிற்கு மட்டுமே சரியாக இருக்கும். படிப்பிற்கு ?? படிப்பை கவர்மென்ட் பள்ளி பார்த்துக்கொள்ளும் தான். இருந்தாலும் தேவிக்கு தன் மக்கள் பெரிய பள்ளியில் ஆங்கில வழியில் கல்வி கற்க வேண்டும் என்று விருப்பம்.

பெரு முயற்சி எடுத்து கந்தசாமி வேலை செய்யும் இடத்தில் கேட்டு அவர்கள் மூலமாக ஏதோ டிரஸ்ட்டின் உதவியுடன் சற்று பெரிய பள்ளியில் சேர்த்து விட்டார். அதன் உபயம் கல்வி ஆங்கில வழியில் சற்று ஸ்ரத்தையோடு கற்க வைத்தது. ஆனால் என்ன படிக்க வேண்டும் என்பது அவர்களின் உரிமையாகி போக………. அதுவும் மற்ற பெண் மக்களை பாதிக்க வில்லை. பெரிய பெண் என்று எல்லாம் இவள் தலையில் விடிந்தது.

அவளின் தந்தையின் கணக்கெழுதும் வேலை பழையதாகி போக. எல்லாம் கம்ப்யூட்டர் மாயமானதால். அவளை பி காம் (சி ஏ) படிக்க செய்தது. முடித்தவுடன் இப்பொழுது இந்த வேலைக்கு வருமாறு, உத்தரவு…… கட்டளை…. மற்றும் வேறு ஆதிக்க வார்த்தைகள் ஏதும் இருந்தால் அதுவும் பொருந்தும்.

அவர்களுக்கு நாமக்கல் பக்கத்தில் கிராமத்தில் வீடு………. லாரி ஆபிஸ்  நாமக்கலில். கோழிப்பண்ணை வீட்டிலிருந்து ஒரு இரண்டு கிலோமீட்டர் தூரத்தில். இவளுடைய வேலை லாரி ஆபிஸ் கணக்கையும் பார்க்க வேண்டும். கோழிப்பண்ணை கணக்கையும் பார்க்க வேண்டும். பார்க்க வேண்டும் என்றால் மேற்பார்வை பார்க்க வேண்டும்.

அங்கே லாரி ஆபிசிலும் தனி ஆள் உண்டு,  கோழிப்பண்ணையிலும் தனி ஆள் உண்டு. இவள் இரண்டையும் மேற்பார்வை பார்க்க  வேண்டுமாம். அவர்கள் படிக்க வைத்திருக்கிறார்கள் இல்லையா? அதை வைத்து ஒரு வேளை அவள் முன்னேறி விட்டால். அதிகார வர்க்கம், அவர்களால் வந்தது, அவர்களுக்கே பயன்பட வேண்டும். கோபமாக வந்தது.

இந்த கோபம் ஏன்? அது அவளை கட்டாயப்படுதியதால் வந்தது. செய்கிறாயா? என்று கேட்டால் சந்தோஷமாக செய்வாள். ஆனால் யாராவது செய்தாக வேண்டும் என்பது போல சொன்னாள், ஏன் செய்ய வேண்டும்? முடியாது என்று தோன்ற ஆரம்பித்து விடும்.

 “நீ வேலைக்கு வருகிறாயா”, என்று அவளிடம் அந்த பெரிய வீட்டுகாரார்கள் சம்மதம் கேட்டிருந்தால். நிச்சயமாக, “சரி”, என்று தான் கூறி இருப்பாள். அப்படி ஒன்றும் நன்றி மறப்பவள் அல்ல லலிதா. ஆனால் அவளிடம் சம்மதமா என்று யாருமே கேட்கவில்லை. இந்த தினத்தில் இருந்து வா என்ற அறிவிப்பு மட்டுமே அவளுக்கு வந்தது.

அந்த  முறைமை அவளுக்கு பிடிக்கவில்லை. “முடியாது என்று சொன்னால் என்ன செய்வார்கள்?”, என்று தோன்றிய எண்ணம் அவர்கள் செய்திருக்கும் நிறைய உதவிகளால் உடனே மறைந்து, அவர்களை அண்டி வாழும் நிலையில் தன்னை வைத்திருந்த இறைவனை நோக்கி திரும்பிற்று.

ஆனால் அவரோடு சண்டையிட விடாமல் தந்தையின் குரல் கலைத்தது. “போகலாமா லலிதா நேரமாயிடுச்சு”,

“போகலாம்பா”, என்று தன் உடையை ஏழு முறை திரும்பி திரும்பி கண்ணாடியில் பார்த்து கொண்டு கிளம்பினாள். தலையில் எண்ணெய் வேறு அம்மா இன்று பார்த்து இத்தனை தடவி வாரி இருக்கிறார்கள். சொன்னால் அம்மாவிற்கு கோபம் வந்துவிடும்.

“இப்போல்லாம் இப்படி தான் கண்ணு போகணும். நம்ம தோற்றம் யாரையும் திரும்ப பார்க்க வைக்க கூடாது”, என்று எண்ணெய் தேய்த்து அழுந்தவாரிஇருந்தார். இருக்கும் அழகை குறைக்க தான் முடியும். போக வைக்க முடியுமா என்ன?  இரண்டு மூன்று உடைகள் தான் நன்றாக இருக்கும். அதனால் வெளியே போகும் போது அதையே போட்டு கொண்டு போவாள்.

மறுபடியும் மறுபடியும் இதையே அணிந்து எப்படி போவது என்ற யோசனையுடன் தன் சுடிதாரை குனிந்து குனிந்து பார்த்து. “அம்மா போயிட்டு வரேன்”, என்ற சத்தத்துடன் கிளம்ப. வேகமாக வந்த அவள் அம்மா.

“அங்க யார் கிட்டயும் வார்த்தையாடாத லலிதா. பணிஞ்சு போ! பணிஞ்சு போறதால குறைஞ்சு போய்ட மாட்டோம்”, என்று சொல்ல.

“நம்ம இங்க ரொம்ப நிறைஞ்சு கிடக்கறோம். இதுல பணிவு ஒண்ணு தான் குறைச்சல். போம்மா ஏதாவது அறிவுரை சொன்ன. ஆனது ஆகட்டும்னு வேலையாவது ஒண்ணாவதுன்னு போகமாட்டேன்”.

“அப்படி எல்லாம் சொல்ல கூடாது லலிதா, அவங்க நமக்கு நிறைய செஞ்சிருக்காங்க”.

“நன்றிக்கடன் பட்டிருக்கிறது நீங்க தான், நான் இல்லை. உலகம் ரொம்ப பெருசு இந்த வேலையில்லைனா இன்னொரு வேலை”, என்று வாக்கு வாதத்தில் இறங்க.

“விடு தேவி என்னவோ செய்யட்டும். நான் கூட இந்த வயசுல வேலைக்கு போகலை, என் பொண்ணு போறா”, என்று அவர் கூற .

“இப்படி பேசி பொறுப்பா இருக்குற பொண்ணுங்களையும் கெடுத்துடாதீங்க. உங்க பேர சொன்னா மளிகைக்கடைக்காரன் சாமானை சும்மா கொடுக்கறானா, பத்திரமா கூட்டிட்டு போங்க! இல்லை? அவளையே தனியா போகவிடுங்க. நான் கூட்டிட்டு போறேன்னு ஏதாவது சொதப்பி வைக்காதீங்க”, என்றார் தன் கணவரின் சாமர்த்தியம் தெரிந்தவராக.

“சரி, சரி”, என்று தலையாட்டி அவர் கிளம்ப. பின்னோடு சென்றாள்.

நடை தூரத்தில் தான் பெரிய வீடு, கிராமம் அல்லவா? தூரம் என்றாலும் நடந்து தானே ஆக வேண்டும்.

வீட்டிற்கு வெளியே அந்த வீட்டின் பிரமாண்டத்தை பார்த்து உதறல் எடுத்தது. இதுவரை அந்த வீட்டை வெளியே இருந்து பலமுறை பார்த்திருக்கிறாள். உள்ளேயும் சென்றிருக்கிறாள். வராந்தா வரை மட்டுமே. ஆனால் வீட்டு ஆட்கள் பார்த்ததில்லை.

தந்தையோடு வந்தாலும் தந்தை அங்கேயே நிறுத்தி தான் செல்வார். 

வீட்டிற்கு வெளியே கச கச வென ஆட்கள் இருந்தனர்.

உள்ளே அழைத்து போனார். அமைதியாக இருந்தது. அங்கும் இங்கும் ஆட்கள் போய்க்கொண்டும் வந்துகொண்டும் தான் இருந்தனர். ஆனாலும் ஓர் அமைதி இருந்தது.

அவளை நிறுத்தி யாரையோ தந்தை பார்க்க போனார். போய் வெகு நேரம் ஆகிற்று வரவில்லை.

“என்னடா இது”, என்று அவள் யோசித்து கொண்டிருக்கும்போதே தூய்மையானா வெள்ளை உடையில் ஒருவர் வர. அவர் பின்னே தந்தை பவ்யமாக வந்து கொண்டிருந்தார். அவர் சதாசிவம். அந்த வீட்டின் உரிமையாளர் மட்டுமல்ல, வேலு ட்ரான்ஸ்போர்ட்ஸ் மற்றும் வேலு கோழிப்பண்ணையின் உரிமையாளரும் அவரே. கந்தசாமியின் முதலாளியும் அவரே.   

“என்ன கந்தசாமி நம்ம பொண்ணா”, என்றார்.

“ஆமாங்கய்யா”, என்ற கந்தசாமி.

“வணக்கம் சொல்லு”, என்று சைகையாலயே தந்தை சொல்ல, “வணக்கம்”, என்றாள்.

“ரொம்ப வருஷம் ஆகிடுச்சு, சின்ன புள்ளைகள்ள பார்த்தது, பசங்க சீக்கிரம் வளர்ந்தறாங்க”, என்று பார்வையாலயே அவளை அளவிட்டார்.

அளவான உயரத்தில், அளவான நிறத்தில், நல்ல முக லட்சனத்தோடு, கண்களில் ஒரு நேர்மையோடு. நல்ல அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும். ஒரு மரியாதையாயுடன் கூடிய ஈர்போடு இருந்த அந்த சிறு பெண்னை பார்த்தார். தன்னை பார்த்து பலரும் பயப்பட. அந்த பயத்தோடு கூடிய வணக்கத்தை வைத்த அந்த பெண்ணை பார்த்தார்.

“சிறு பெண், இவள் என்ன செய்வாள்”, என்றே தோன்றியது. என்ன செய்வது? அம்மாவின் வார்த்தையை மீற முடியாது. இந்த வீட்டில் அவர் வைத்தது தான் சட்டம். மீருபவன் அவர் பேரன் மட்டுமே. ஆனால் அவன் மீறுவது உலக அதிசயம்.

ஏனென்றால் பாட்டியும் பேரனும் குணத்தில் ஒன்றே. யாருக்காவது  உபகாரம் செய்ததால் கூட தங்களுக்கு அதில் என்ன லாபம் என்றே பார்த்து பழக்கப்பட்டவர்கள. அந்த பெரிய வீட்டு பாட்டியம்மாவான ஜானகி அம்மாள் தன் மகனிடம்.  

“ஏண்டா சும்மாவா படிக்க வைக்கறோம், நம்ம வீட்டுக்கு தான் ஏதாவது செய்யட்டுமே.  நீயோ எல்லாத்தையும் கம்ப்யூட்டர் மாத்தணும்னு சொல்ற. கந்தசாமி நம்ம வீட்ல எத்தனை வருஷமா வேலை பார்க்கிறான். போன்னா எங்க போவான். பேசாம அவன் பொண்ணுக்கு, இந்த வேலையை போட்டு கொடுத்துடு”.

“வேற ஆளுங்க இருக்காங்க இல்லை. அவ மேற்பார்வை பார்க்கட்டும்”, என்று விட்டார்.

அவர் வார்த்தையை மீற முடியாது. இன்று வர சொல்லி விட்டார். அவர் பார்துகொண்டிருக்கும் போதே ஜானகியம்மாள் வர.

“அம்மா நீங்க சொன்ன மாதிரி கூட்டிட்டு வந்துட்டேன் மா”, என்றார் பவ்யமாக கந்தசாமி.

அங்கே இருந்த சோபாவில் அமர்ந்தவர். “இவ தான் உங்க பொண்ணா”, என்றார்.

“ஆமாம்”, என்ற கந்தசாமி.

“உன்னை பத்தி சொல்லு கண்ணு”, என.

“வணக்கம் அம்மா, என் பேரு லலிதா, பி.காம் (சீ.ஏ) படிச்சிருக்கேன் என்றாள்.

“என்ன படிப்போ? யாருக்கு புரியுது. இந்த கம்ப்யூட்டர் பொட்டியெல்லாம் நால்லா செய்வ இல்ல”,

“ஏன் கேக்கறேன்னா, உன்னை சிபாரிசு செஞ்சது நான். நான் சொன்ன பொண்ணு நல்ல பேரு எடுக்கணும்”, என்றார்.

“ஆகட்டும்ங்க” என்றாள்

“விவரன்ஜோல்லு கண்ணு”, என்றார் தன் மகனை பார்த்து.

“அம்மா எனக்கு இப்ப ஒரு மீட்டிங் இருக்கு. கதிர் சொல்லுவான் எல்லாத்தையும்”, என்று பொறுப்பை தன் மகன் மேல் சுமற்றி அவர் கிளம்பினார்.

“யாரது கதிர்”, என்று மனதிற்குள் நினைக்க. தந்தைக்கு புரிந்ததோ என்னமோ.

“நம்ம சின்ன முதலாளி”, என்றார் கந்தசாமி.

“நம்ம சின்ன முதலாளியா? இன்னும் அவனை வேற பார்க்கணுமா”, என்று மனதிற்குள் முகம் தெரியாதவனை கரித்து கொட்டினாள்.

இந்த அப்பாவிற்கு அறிவு வேண்டாமா, வருவதற்க்கு முன் யார் யார் இருப்பர், யாரை பார்க்க வேண்டும், என்று சொல்லி அழைத்து வருவது இல்லையா என்று அவரையும், உனக்கென்ன கேட்பதற்கு என்று தன்னையும் கரித்து கொட்டினாள்.

“இப்போ எங்கே இருப்பான்”, என்று கந்தசாமியிடமே அந்த ஜானகி பாட்டி கேட்க.

“தம்பி கோழி பண்ணைல இருப்பாருங்க”, என்று கந்தசாமி சொல்ல.

“அங்கயே கூட்டிட்டு போ”, என்று பணிக்கப்பட.  இன்னும் இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டுமா என்று சலிப்பாக இருந்தது. இப்போழுதானே அவ்வளவு தூரம் நடந்து வந்தார்கள்.

அவள் இல்லையென்றால் தந்தை சைக்கிளில் வந்திருப்பார். அவள் சைக்கிளில் அமர மாட்டாள். பின்னால் உட்கார்ந்தால் மேடு பள்ளத்தில் தூக்கி போடும்  என்பதால் தன் தந்தையுடன் செல்லும் போது இவளுடன் சேர்ந்து அவரும் நடப்பது மாதிரி வரும்.

இன்று மறுபடியும் நடை. இரண்டு பேரும் நடந்து அங்கே செல்ல. கதிர் எனப்படும் மகானுபாவன் இருக்கும் இடம் கூட தெரியவில்லை. ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தாலும் அங்கேயும் ஒரு அமைதி நிலவியது,

அவள் அப்பா அவளை தனியாக விட்டு கதிர் இருக்கும் இடம் தேடி போக அங்கே அவள் தனித்து நிற்க்கும் போது சுற்றுபுறத்தை ஆராய்ந்தாள்.

பெரிய பண்ணை பட்டி பட்டியாக கோழிகள் அடைத்து வைக்கபட்டிருந்தன. வரிசையாக நீளமான வீடுகள் போன்ற கம்பிகலான கூண்டுகள் மேல் பகுதியில் கோழிகள் இருக்க கீழ் பகுதியில் அதன் கழிவுகள் விழுவது போல அமைக்கப்படிருந்தன.

அந்த மாதிரி நிறைய கூண்டுகள். எத்தனை என்று என்ன ஆரம்பித்தாள். ஆனால் முடிக்க முடியவில்லை. எண்ணிக்கை தவறியது நேராக சிலது சைடு வாக்கில் சிலது அந்த புறம் சிலது என்று இருந்தது. அந்த வாசனை வேறு அவளுக்கு வாமிட் வரும் போல இருந்தது.

இங்கே வேலை என்றால் எப்படி செய்வது என்பது வேறு அவளுக்கு கவலையாகி போனது. போன தந்தையை காணாததால் மறுபடியும் எண்ணலாம் என்று நீள வாக்கில், சைடு வாக்கில், இருந்ததை எண்ணியவள் அந்தப்புறம் உள்ளதை எண்ணுவதர்க்காக எட்டி எட்டி பின்புறம் போனவள், பின்னால் ஒரு பள்ளம் வெட்டி வைத்திருப்பதை பார்க்க தவறினால்.

“ஜஸ்ட் மிஸ்”, என்று சொல்லும் அளவுக்கு அவளின் ஒரு கால் பள்ளத்தில் வைக்க அது அப்படியே பிடிப்பில்லாமல் உள்ளே போக. அவள் திரும்பி பார்க்க பள்ளம். அவள் நிலை தடுமாறி அப்படியே பின்னால் சரிய போகும் போது ஒரு கை அவளை வேகமாக பிடித்து இழுக்க. இழுத்த கையின் புறம் அப்படியே நிலை தடுமாறி மேலே விழ, இவள் விழுந்ததால் இழுத்த கையின் சொந்தக்காரனான கதிரும் விழுந்தான்.

விழுந்த லலிதா அதிர்ச்சியில் மூர்ச்சையாகி இருக்க. அவன் கீழே இருக்க அவள் மேலே இருந்தாள். அவள் முழு உடம்பின் பாரமும் அவனை அழுத்த எழுந்திருக்க முடியாமல் தடுமாறினான்.

லலிதாவோடு சேர்ந்து விழுந்தவன் கதிர்வேல். சதாசிவத்தின் மகன். அவன் பெயரிலேயே உள்ளது தான் வேலு ட்ரான்ஸ்போர்ட்ஸ் மற்றும் வேலு கோழிப்பண்ணை. எல்லாரும் கதிர் என்றே கூப்பிடுவர்.  சிறிது நேரம் முன்பே வந்துவிட்டான்.

இவளை பார்த்தவனுக்கு அந்த முகம் மிக பரிச்சயமானது போல தோன்ற. எங்கே பார்த்தோம் யோசித்து கொண்டே. இவள் யார் இங்கே நிற்கிறாள் என்று கேட்க வரும் போது. அவள் கோழி வைத்திருந்த பட்டிகளை எண்ண ஆரம்பித்ததால் என்ன செய்கிறாள் என்று பார்ப்போம் என்று  பார்த்துகொண்டிருக்க. எதிர்பாராமல் அவள் பின்னால் நகர வேகமாக வந்தவன் குரல் கொடுபதற்க்குள் பள்ளத்தில் கால் வைத்திருந்ததால் சட்டென்று இழுத்துவிட்டான்.

இழுத்தவன் அவளோடு சேர்ந்து விழுந்தான்.  

சுற்றும் முற்றும் பார்த்தால் யாரும் இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் அவளை கீழே உருட்டி விட்டு தட்டு தடுமாறி எழுந்து பார்க்க அவள் மயக்கமாகி இருப்பது தெரிந்தது.

அவள் முகத்தை கைகளால் பிடித்து தட்ட. கன்னத்தை தொட்ட கைகள் பஞ்சு போல உள்ளே போக. அவள் முகத்தை ஆராய்ந்தான். அவன் கண்களுக்கு அந்த முகம் மிக அழகாக தோற்றமளித்தது.

யாரும் இருக்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லை. யாரையும் கூப்பிடவும் மனமில்லை. அந்த முகம் கண்களை அந்த புறம் இந்த புறம் அகற்ற விடவில்லை. பரிச்சயமானது போல தோன்ற. எங்கே பார்த்தோம் என்று தேட . அடிக்கடி அவன் கனவில் வரும் முகம் போலவே தோற்றமளித்தது. அவனையறியாமல் முகம் புன்னகையை பூசியது.

அந்த முகம் தானா இது, என்று உறுதி படுத்திக்கொள்ள கண் எடுக்காமல் பார்த்திருந்தான். அப்படி தான் தோன்றியது. ஆனால் உடைகள் மிக சாதாரண உடைகள். இந்த உடையில் அவன் கனவு ராணி வர வாய்பேயில்லை. உடையை ஆராய்ந்த போது தான் பார்த்தான் சற்று சுரிதாரின் டாப்ஸ் மேலே ஏறி இருந்ததை. வெயிலை பார்த்திராத அந்த இடை பளீறேன்றது. அவளை தூக்கி உடையை சரிபடுத்தி நேராக படுக்க வைத்தான்.    

அவள் முகம், அதை தொடும் ஆர்வம், மறுபடியும் உந்த. சுற்றும் முற்றும் மறுபடியும் பார்த்தவன் அவளை விழிக்க வைக்க தட்டுவது போல கன்னத்தை தட்டினான். அதன் மென்மை அவன் வாழ்க்கையில் அவன் இதுவரை உணராத ஒரு புதிய மயக்கத்தை கொடுத்தது.

அதை மறுபடியும் தொடும் ஆர்வம் தூண்ட. கன்னத்தை தொட்டு மறுபடியும்   தட்டினான். அதற்குள் ஆள் வரும் அரவம் கேட்க சட்டென்று எழுந்து கொண்டான்.

வேலையாள் ஒருவன் வர. “யாரிது” என்றான்.

“தெரியலைங்க ஐயா”, என்று அவன் கூற. “யார் இந்த பெண்”, என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டவனுக்கு கந்தசாமி தன்னுடைய பெண்ணை இன்று வேலைக்கு கூட்டி வருவதாக சொன்னது. சற்றும் ஞாபகத்திற்கு வரவில்லை.

“யாராவது பொம்பளைங்களை கூப்பிட்டு தண்ணி தெளிக்க சொல்லுங்க”. என்று சொல்லி அவன் மேல் இருந்த புழுதியை தட்ட  அந்த புறம் நகர்ந்தான்.

“யே புள்ள”, என்று யாரையோ அந்த வேலையாள் கூப்பிட. அதற்குள் அங்கே வந்த கந்தசாமி. “என்ன? என்னாச்சு?”, என்று பதட்டப்பட. “தெரியலை அண்ணா, யாரிது”, என்றான்.

“என் பொண்ணு கூட வந்தா. இங்க விட்டுட்டு போனேன்”, என்று தண்ணி தெளித்து அவளை எழுப்ப.

எழுந்து அமர்ந்த லலிதாவிடம், “என்னம்மா ஆச்சு”, என்று கேட்க.

“அந்த பள்ளத்துல பின்னாடியே போய் விழ போனேன் பா. யாரோ என்னை சட்டுன்னு பிடிச்சு இழுத்துட்டாங்க. இல்லைன்னா அதுலயே விழுந்திருப்பேன்”, என்றாள் பயத்துடன்.

“புண்ணியவான் யார் அது”, என்று அவள் தந்தை கேட்க. “நான் பார்க்கலைப்பா”, என்றாள்.

அப்போது அங்கு வந்த கதிரை அந்த வேலையாள் கை காட்ட போக. “வேண்டாம்”, என்பது போல கதிர் அவனை பார்த்து தலையசைக்க அவன் வாயை மூடி கொண்டான்.   

Advertisement