Advertisement

UD:7
வெகு நேரம் ஆகியும் நந்தனிடம் இருந்து பதில் வராததால் தன் இருக்கையை விட்டு எழுந்தவன் அவன் அருகில் சென்று தோளில் கை வைத்து,” என்ன நந்தா ஆச்சு? உனக்கு பொண்ணைப் பிடிக்கலையா? அப்பா க்காக தான் ஒத்துக்கிட்டியா?” என கேட்ட நண்பனை ஓர் வெற்றுப் பார்வை பார்த்தவன் மீண்டும் திரும்பி வானத்தை வெறித்த படி நின்றான்.
கிஷோர், “டேய்… நந்தா…. ” தோளை அழுத்தமாக பற்ற,
“எனக்கு தெரியலை மச்சான்…. அவ பக்கத்துல இருந்தா நான் நானாகவே இருக்க முடியலை. என்னையும் மீறி அவளை என் மனம் நாடுது ஆனா…. அவ பேசுனது நினைச்சா கல்யாணத்துக்கு அப்புறம் குடும்பத்தில் எதாச்சும் பிரச்சினை வருமோனு நினைக்கும் பொழுது ஒரே குழப்பமா இருக்கு டா…” என தன் இருக்கையில் தலையை கைகளால் தாங்கிய படி  அமர்ந்துவிட…..
நண்பனின் பேச்சில் லேசாக ஏதோ புரிவது போல் இருந்தும் பல குழப்பங்கள் இருக்க அதை தீர்த்துக் கொள்ள அவனிடமே வினவினான்…… 
கிஷோர், “நீ யாரை சொல்லுற? உனக்கு அந்த பொண்ணை முன்னாடியே தெரியுமா???” 
ஆம் என்பது போல் தலையை ஆட்டியவன், முன்தினம் கோவில் நடந்த அனைத்தையும் கூற கேட்ட கிஷோர்,  முகத்தில் அப்பட்டமாக அதிர்ச்சியை காட்டியவன்,  பின் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கண்ணில் நீர் வரும் அளவு சிரிக்க தொடங்கினான்….
அதில் நந்தனுக்கு கோபம் வர, “டேய்….. நானே என்ன பண்ணுறதுனு குழம்பிப்  போய் இருக்கேன்…. என்னை வெறுப்பேத்தாத….”
“சரி… சரி…. டென்ஷன் ஆகாத…. ” சிரிப்பை அடக்க முயன்ற படி “தங்கச்சியை பார்த்தா நல்ல விதமாக தான் தெரியுது…. அப்புறம் என்ன டா பிரச்சனை உனக்கு????”
“டேய் அந்த கொசுக்குட்டி பேசுனதை நீயும் தானே கேட்ட…. அப்புறம் ஏன் டா இப்படி கேட்குற…?.” என நந்தன் சலித்துக் கொண்டான் கிஷோரிடம்.
அதுவரை விளையாட்டாய் பேசிக் கொண்டு இருந்த கிஷோர் பெருமூச்சொன்றை விட்டு டேபிளில் கை வைத்து நிமிர்ந்து அமர்ந்தவன் நந்தனை பார்த்து, “நந்தா அன்னைக்கு காஃபி ஷாப்புல கேட்டதை வச்சு முடிவு பண்ணாத.நீ அப்ப பாதிலையே கோபமா கெளம்பிட்ட நானும் உன் பின்னாடியே வந்துட்டேன்…… ஏன் அப்படி பேசுனாங்க? எதுக்குன்னு? தெரியாம தங்கச்சியை பத்தி ஒரு முடிவுக்கு வராத….”
“அத அன்னைக்கு நைட் ஏர்போர்ட்டில் வைச்சே சொல்ல வந்தேன். உன் மனசு என்ன சொல்லுதோ அதையே முடிவு பண்ணுனு …..ஆனா நீ மீட்டீங்கிற்காக பாம்பேக்கும், மறுநாள் பொண்ணு பார்க்கவும் போக இருந்த உன்னை குழப்ப வேண்டாம்னு விட்டுட்டேன். ஆனா இப்ப அப்படி இல்ல….. தெளிவா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா…..”
கிஷோர் கூறியதை கேட்டு ஆழ்ந்த யோசனையில் இருந்த நண்பனைப் பார்த்து’ இவன் சரி பட்டு வர மாட்டான்….’ மனதில் நினைத்தவன்.
“இதுக்கு ஒரு வழி இருக்கு டா….” என்றவனை ஆர்வத்துடன் நந்தன் பார்க்க….
‘இப்ப இவன் கல்யாணம் பண்ணிக்கனும் என்று ஆர்வம் காட்டுறானா இல்ல கல்யாணம் பண்ணிக்க கூடாதுன்னு ஆர்வம் காட்டுறானா??? ம்ம்ம்…. ‘ என யோசித்த கிஷோர் நல்லது நடந்தால் சந்தோஷம் என்று நினைத்து, ” தங்கச்சி கிட்ட நீ அரைகுறையாக கேட்ட விஷயத்தை பற்றி பேசிப் பாரேன்…. மனசு விட்டு பேசுனா தெளிவு கிடைக்கும் இல்ல… ” 
கிஷோர் கூறுவதும் சரியாய் பட அவனது கொசுக்குட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தான் நந்தன்…..
……………
“இப்ப என்னடி பண்ணுறது….? அவன கல்யாணம் பண்ணினா நான் காலி…. போகும் போது டையலாக் எல்லாம் விட்டுட்டு போனானே….. நானாச்சும் வாயை அடக்கி இருக்கலாம் அதும் பண்ணல, கடவுளே முருகா….. என்ன பண்ணுறது…? என்ன பண்ணுறது…..???” என நகத்தை கடித்தப் படி தன் அறையில் அரைமணி நேரமாக நடை பயின்றுக் கொண்டு இருந்தாள் மஹஸ்ரீ… 
தான் கேட்ட கேள்விக்கு பதில் இல்லாது போகவும் திரும்பி பார்க்க, சந்தியாவும் ரம்யாவும் பெட்டில் சம்மணம் இட்டு வலது கையால் முகத்தை தாங்கியபடி இருவரும் மஹாவை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டு இருந்தனர்.
அவர்கள் முன் இடுப்பில் கைவைத்தபடி முறைத்துக் கொண்டே.,” இங்க ஒருத்தி பிரச்சினைனு புலம்பிட்டு இருக்காளே ஏதாச்சும் யோசனை சொல்லி உதவுவோம்னு இல்லாமல் இப்படி என்னை லுக்கு விட்டுட்டு இருக்கீங்க….”
“என்ன டி பிரச்சினை உனக்கு? பையன் அம்சமா இருந்தா கல்யாணம் பண்ணி செட்டில் ஆகுறத விட்டுட்டு சும்மா பொலம்பிட்டு இருக்க…”என்றவள் அருகில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டில் இருந்து ஒன்றை  வாயில் போட்டு அரைக்க ஆரம்பித்தாள் ரம்யா….
அவள் கூறியதில் கோபம் வர ரம்யாவின் அருகில் வேகமாக சென்று அவள் கையில் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை பிடிங்கி ஒரு பிஸ்கெட்டை வாயில் போட்டு மென்றவாறே பொத்தென்று படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்து தீவிரமாக அடுத்து அடுத்து பிஸ்கெட்டை வாயில் அடைத்தாள் மஹா.
தனதருகில் கோபமாக வந்தவளை பார்த்து மனதில், ‘ஐய்யோ …. ரம்யா…… இன்னைக்கு நமக்கு மண்டை ….பணியார மண்டை ஆகுறது உறுதி போல….’ என பயந்தவள், மஹாவின் செயலில் பேந்த பேந்த விழித்தாள்.
“நமக்கு அடி கன்பார்ம்னு நினைச்சா இப்படி பிஸ்கட்டை யாருக்கும் தராமல் தனியா அமுக்குறா…. பக்கி…..” என முனுமுனுத்தாள் ரம்யா.
இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்த சந்தியாவிற்கு ரம்யா பேசியது காதில் விழ பக்கென்று சிரிப்பு வந்துவிட, 
வாழ்க்கை போச்சே என்று மஹாவும், பிஸ்கட் போச்சே என்று ரம்யாவும் சோகத்தில் இருக்கும் போது,  சந்தியா சிரித்ததால் கடுப்பாகிய இருவரும் ஒரு சேர திரும்பி சந்தியாவை முறைக்க கப்பென்று வாயை மூடிக் கொண்டவள், மெல்லிய குரலில் “ஏதாச்சும் வழி இருக்கும் யோசிக்கலாம் டி….” மஹாவின் தோளில் ஆறுதலாக கை வைத்தாள் சந்தியா.
“பேசாம வீட்டை விட்டு ஓடி போயிருடி….. உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லைன்னு நினைச்சு நிறுத்திருவாங்க…. ” என யோசனை கூறிய ரம்யா மண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தாள் மஹா, 
“இப்ப எதுக்கு டி இப்படி கொட்டின….?” மண்டையை தேய்த்த படி கேட்க, 
“பின்ன, உன்னை கொட்டாம கொஞ்சுவாங்களா ? யோசனை சொல்லுடினா…. என் பேரையும், அம்மா அப்பா பெயரையும் டேமேஜ் பண்ண யோசனை சொல்லுறா…….” விட்டால் ரம்யாவை கடித்து குதறும்  அளவுக்கு வெறி ஆனாள் மஹா.
பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ரம்யா மீண்டும் யோசனையில் ஆழ்ந்தாள். சில மணித்துளிகள் கடந்த நிலையில் அவளது முகம் பிரகாசமாக மலர, தன் பற்களைக் காட்டிய படி தோழிகளைப் பார்த்தாள். 
மஹாவும், சந்தியாவும் அவளை ஓர் நம்பாதப் பார்வையை அவள் மீது வீச, ரம்யா “நம்புங்க டி…. ஒர்கௌட் (work out) ஆக வாய்ப்பு இருக்கு…..” 
“சரி சொல்லு…. பார்க்கலாம் ” என இருவரும் அவள் பக்கம் திரும்பி அமர்ந்து என்ன சொல்ல போகிறாள் என்று கேட்க தயார் ஆகினர்.
“அவங்க நிச்சயம் பண்ண வருவாங்க தானே…. அப்ப வீட்டுக்குள் நுழையும் போது ஒரு பூனையை குறுக்கே ஓட விட்டுறலாம் எல்லாரும் அபசகுனம்ன்னு நினைச்சு கல்யாணத்தை நிறுத்திருவாங்க…” ரம்யா கூறி முடித்ததும் ‘உண்மையாவே நிறுத்திடுவாங்களா?’ என்று மஹா யோசித்துக் கொண்டு இருக்கையில்,
“கண்டிப்பா இதுக்காக கல்யாணத்தை நிறுத்த மாட்டாங்க” என்ற சந்தியாவை இருவர் ஒரு சேர “ஏன்” என்று வினவ,

“என்ன ஏன்?, ஒரு குட்டியூண்டு பூனைக்காக கல்யாணத்தை நிறுத்திருவாங்களா? பையன்  வேற பெத்த குடும்பம் இது எல்லாம் பார்ப்பாங்களானு தெரியாது…… அப்படியே பார்த்தாலும் நிச்சயதார்த்ததை வேண்ணும்னா தள்ளி வைக்க வாய்ப்பு இருக்கு மத்த படி கல்யாணத்தை நிறுத்த மாட்டாங்க….” சந்தியா உரைத்ததில் மஹா சோர்ந்துப் போக,
இனி அந்த GM யிடம் இருந்து தப்பிக்க வழி இல்லையோ என்று எண்ணியவளுக்கு அயர்ச்சியிலும் சோகத்திலும் தலையணையில் முகம் புதைத்தவாறு கவிழ்ந்துப் படுத்தாள் மஹா,
பார்க்க பாவமாக இருந்த தன் தோழியின் இருபக்கமும் அமர்ந்தனர் சந்தியாவும், ரம்யாவும்….
சந்தியா, ” பேசாமல் சாட்சிகாரன் காலில் விழுவதற்க்கு பதிலாக சண்டைக்காரன் காலில் விழுவது பெட்டர் மஹா” 
“நீ என்ன சொல்ல வர?” கேள்வியாக மஹா, சந்தியாவை பார்க்க
தலையை இடமும் வலமுமாக ஆட்டிவிட்டு மஹா அருகில் நெருங்கி அமர்ந்தவள்” பேசாம மாப்பிள்ளையை நேரில் பார்த்து கல்யாணத்தை நிறுத்த சொல்லி கேட்டு பாரு….. அவரு சென்னை தானே திங்கட்கிழமை காலேஜ் போகும் போது அவரோட ஆபீஸில் பார்த்து பேசி பாரு….. “
சிறிது நேரம் யோசனைக்கு பின்பு தோழியின் யோசனையை செயல் படுத்த முடிவு செய்தாள் மஹா….. 

………..
கூரிய கண்களுடன், வலக்கையின் இரு விரல்களுக்கு நடுவில் பேனாவை சுழற்றியவாறு  தன் முன் இருந்த கோப்பையை ஆராய்ந்து கொண்டு இருந்தான் நந்தன்….
ஐந்து மாடி கட்டிடத்தின் பிரம்மாண்ட தோற்றத்தை  ‘ஆ’ வென வாய் பிளந்து பார்த்து கொண்டு இருந்த மஹாவின் பின்னந் தலையை தட்ட… அதில் சுய வுணர்வு பெற்று,
“நான் போய் தான் ஆகணுமா டி???” என பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு தன் ஸ்கூட்டியின் சீட்டை ஒரு விரலால் தேய்த்து கொண்டே சந்தியாவிடம் கேட்க,
“இப்ப எதுக்கு நீ வெட்க படுறனு நான் தெரிஞ்சுக்கலாமா?” என்று கடுப்பானாள் சந்தியா,
“சீ… நான் எப்ப எதுக்கு வெட்கப் படணும்?” என மஹா முகம் சுழிக்க,
“அதானே பார்த்தேன் நீ எல்லாம் வெட்கம்னா கிலோ  என்ன  விலைன்னு  கேட்குற ஆளாச்சே. சரி டைம் வேஸ்ட் பண்ணாமல் போய் பேசிட்டு வா ” என்று சந்தியா கூற,
தயங்கி தயங்கி அந்த பிரம்மாண்ட கட்டிடத்தினுள் நுழைந்தாள் மஹா. ரெசெப்சனில் இருந்த பெண்ணிடம், “எக்ஸ்க்யூஸ் மீ, என் பெயர் மஹஸ்ரீ, நான் Mr.Yathav Nandhan, உங்க M.D யை பார்க்க முடியுமா? ” எனக் கேட்க,
“அப்பாயின்மென்ட் இருக்கா?”
“இல்ல”
“ஓகே வெய்ட் பண்ணுங்க , கேட்டு சொல்றேன்” என பதில் உரைத்தவாறே இன்டர்காம் இல் அவரது  M.D க்கு அழைத்து,
“சார் உங்களை பார்க்க மிஸ். மஹஸ்ரீ னு ஒருத்தர் வந்து இருக்காங்க, ” என கூற மறுபுறம் சொன்ன பதிலில் , “ஒகே சார்” என போனை துண்டித்தவள் , மஹாவை நோக்கி,
“நீங்க போய் பார்க்கலாம் மேம், 4th floor ,ரைட் சைடு 3rd கேபின் மேம்” என கூறியவள் தனது இடப்பக்கம் சுட்டிக்காட்டி ” லிப்ட் இந்த பக்கம் மேம்” எனக் கூறி புன்னகைக்க,
“தேங்க்ஸ்” என பதிலுக்கு சிறு புன்னகை சிந்தி விட்டு லிப்டை நோக்கி நகர்ந்தாள் மஹா.
ரெசெப்சனிஸ்ட் அழைத்து மஹஸ்ரீ  வந்துள்ளதாக கூறியதும், ஒரு வித பரபரப்புடன் தன் கணினியில் CCTV கேமரா மூலம் மஹாவை பார்த்து அவளை தன்னை பார்க்க அனுப்பு மாறு கூறி அழைப்பை துண்டித்தவன்,” நாம இந்த கொசுக்குட்டியை சந்திக்கணும்னு நினைச்சா அவளே வந்து நிக்கிறா, ஏதாச்சும் பிளானோட வந்து இருப்பாளோ ? எதுக்கும் கொஞ்சம் அலெர்டா இருக்கணும்” என நினைத்து கொண்டு மீண்டும் தன் வேலையில் மூழ்கினான் நந்தன்…..
லிப்டை நோக்கி அமைதியாக நடந்த மஹா, உள்ளே நுழைந்து லிப்டின் கதவு சாத்தப்பட்டதும்,” இவனெல்லாம் ஒரு ஆளுனு இவனுக்கு ஒரு ஆஃபிஸ், ஒரு ரெசெப்சனிஸ்ட், எல்லாம் காலக் கொடுமை” என சலித்து கொண்டு கைகளைக் கட்டி கொண்டு உர்ரென இருந்தவள், 
“ம்ஹூம்….. மஹா கன்டொர்ல் நமக்கு காரியம் முக்கியம்….. சோ, கொஞ்சம் அடக்கி வாசிக்கணும்….” என புலம்பிக் கொண்டு இருக்கும் போதே 4th ப்ளோர் வந்துவிட்டது என லிப்ட் கதவு திறக்க, மெதுவாக லிப்டில் இருந்து தலையை மட்டும் வெளியே நீட்டி வலப்பக்கமும் இடப்பக்கமும் பார்த்து விட்டு மெதுவாக நந்தனின் அறையை நோக்கி நடந்தாள் மஹா…..
தன் முன் இருந்த இரும்பு மற்றும் கண்ணாடியால் ஆன கதவில் Mr. YATHAVNANDHAN, MBA, என்ற பெயரின் கீழ் M.D என இருந்த பெயர் பலகையை சில நொடிகள் வெறித்துப் பார்த்தவள், பின் கதவைத்​தட்ட தன் கையை ஓங்க, அதை தட்டாமல் யோசனையில் அவள் கை அந்தரத்தில் தொங்கிக்​கொண்டு இருந்தது, “நாம என்ன வீட்டு கதவையா தட்ட போறோம்????….. ம்ம்ம்… , Excuse me சார் னு கேட்கலாமா???? சீ…சீ… நல்லா இல்ல சார் மோர்னு நாம என்ன அவனுக்கு கீழ வேலை பார்க்குற எம்ப்ளாயா???? பேசாம அப்படியே கதவை தொறந்து உள்ள போயிடலாமா???  என் நினைத்து கதவின் கைப்பிடியில் கைவைக்க, சட்டென ஏதோ யோசித்தவள் வெடுக்கென்று கையை இழுத்துக் கொண்டாள், ” நம்ம பாட்டுக்கு உள்ள போய்ட்டு, பழமொழில வர பெட் அனிமல் னு நம்மை சொல்லிட்டா என்ன பண்ணுறது ???? ” என இடுப்பில் ஒரு கையும் தாடையில் ஒரு கையும் வைத்து யோசித்து கொண்டு இருந்தாள் மஹா….
மீட்டிங்கிற்கு செல்ல தயாராகி,  வேண்டிய பேப்பரை சரி பார்த்து கொண்டு இருந்தவன் கண்ணில் எதர்ச்சையாக கணிணியில் CCTV கேமேரா வழியே,  மஹா லிப்டில் இருந்து தன் தலையை வெளியே நீட்டி பார்த்ததும் தன் அறை வாசலில் நின்று ஆலோசனை நடத்தி கொண்டு இருந்ததை தன் சுழல் நாற்காலியில் வலமும் இடமும் ஆடிக் கொண்டே வலது கையால் தன் முகதை தாங்கிய வாறு மஹாவின் பாவனைகளை ரசித்துக் கொண்டு இருந்தான் நந்தன்……
அந்நேரம் அவனுக்கு அழைப்பு வர, அதில் கலைந்தவன் ஃபோனை ஆன் செய்து , ” சொல்லு டா மச்சான்” என தன் நண்பனை கேட்க,
நந்தனின் பேச்சில் ஆச்சர்யம் கொண்டான் கிஷோர். ஆம் ஆச்சர்யம் தான் நந்தன் அலுவகத்தில் என்றும் உறவுகளுக்கு இடம் அளித்தது இல்லை. இருவேறு முகம் கொண்டவன், வீட்டில் அவன் இருக்கும் இடம் கலகலப்பாவும் அமர்க்களமாகவும் இருக்கும், அதே சமயம் அலுவலகத்தில் சிங்கத்தின் தோரணையும், புலியின் வேட்கையும் கொண்டவன். என்றும் தன் பணியையும் குடும்பத்தையும் குழப்பிக் கொள்ளாதவன். அவ்வாறு இருக்க இன்று தன்னை ‘மச்சான்’ என்று தன்னிலை மறந்து நந்தன் அழைக்கவும் ஆச்சர்யம் கொண்டான் கிஷோர்.
“நந்தா ஆர் யூ ஓகே?” கிஷோரின் கேள்வியில் தான் மச்சான் என்று அழைத்தது நினைவில் வர ‘ இந்த கொசுக்குட்டி கிட்ட என்னமோ இருக்கு, அன்னைக்கும் இப்படி தான் கிஷோர் கிட்ட பேசினேன். என் நிலையை மறக்க வைக்குறாளே….. இவள பிடிக்கவில்லை ஆனா பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்கு, உள்ள வர என்ன எல்லாம் ரியாக்க்ஷன் தரா’ என தன் நெற்றியை இடகரம் இருவிரலால் தேய்த்த வாறு சிறு புன்னகையுடன் மீண்டும் கணிணியில் அவளை ரசித்துக்கொண்டே “சொல்லு கிஷோர் என்ன விஷயம்???” என மழுப்பினான்.
“என்னது என்ன விஷயமா????? நந்தா என்ன ஆச்சு உனக்கு மீட்டிங் இருக்கு 10.30 க்கு மறந்துட்டீயா?” கிஷோர் வினவவும்…
‘ஷீட்…. இவள பார்த்துட்டு இத மறந்துட்டேனே’ என மனதில் தன்னைத்தானே திட்டிக் கொண்டு,
கிஷோரிடம் “இல்லை கிஷோர் ரெடி ஆயிட்டேன் 5மிட்ஸ்ல கான்பிரன்ஸ் ஹாலில் இருப்பேன்” பேசி கொண்டே தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் ஃபோனை துண்டித்துவிட்டு கணினியை பார்க்க, 
மஹா இப்பொழுதும் தன் மண்டையைச் சொறிந்து கொண்டு இருந்தாள் உள்ளே எவ்வாறு செல்வது என்று ,இதை பார்த்து நந்தனுக்கு சிரிப்பு வந்துவிட ” கொசுக்குட்டி உன்னை விட்டா நாள் முழுக்க இப்படியே நிப்ப நானும் பார்ப்பேன்…. ஆனா எனக்கு இப்ப நேரம் இல்லையே” என கூறி கொண்டே தன் அறை கதவை நோக்கி சென்றான் நந்தன் மஹாவை வரவேற்க.

கன்டிசன்ஸ் தொடரும் …….

Advertisement